குரு கருணாகரனிடம் பேசிவிட்டு வீட்டுக்குள் நுழைந்தான். இவனும் தம்பியும் ஒரே அறையைப் பயன்படுத்துவார்கள். சிவா அண்ணன் வரும்போது கீழே பாயில் உட்கார்ந்திருந்தான்.
“தூங்காம ஏன் உட்கார்ந்திருக்க?” குரு ஷார்ட்ஸ், பனியனுடன் பாயில் படுத்தவன் விட்டத்தைப் பார்த்தபடி சிவாவிடம் கேட்க, சிவா அந்த வாரம் சினிமாவுக்குப் போவதைப் பற்றி சொல்ல, குரு யோசித்தான்.
இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு, “சரி அம்மா கிட்ட பணம் தந்துட்டுப் போறேன், எப்போ போறியோ பத்திரமா போய்ட்டு வா.” என்றதும்
“குரு நிஜமாவா சொல்ற?” என்று உற்சாகத்தில் கத்தினான் சிவா.
“ஷ்! என்ன இது சத்தம்?” என்று குரு அதட்ட, உடனே குரலை தழைத்த சிவா “என்னடா நீ ஓகே சொல்ல மாட்ட நினைச்ச, இப்படி ஷாக் கொடுக்கிற?” என்றதும் குருப்ரசாத் முறைக்க,
“இல்ல, இல்ல! உன் பொற்கரங்களைக் கொடு” என்று குருவின் கையை சட்டென்று பிடித்தவன்
“ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்ணா” என்று சொல்லி சந்தோஷத்தில் கண்மூடினான். குருவும் கண்களை மூடி உறங்க, பத்து நிமிடம் இருக்கும்.
“டேய்! தூங்கி எந்திரிச்ச அப்பறம் இது கனவுன்னு சொல்லிட மாட்டியே, நிஜமா ஒகே சொல்லிட்டியா?” என்று சிவா நம்பாமல் கேட்க
“என்னடா வேணும் உனக்கு?” என்று எரிந்து விழுந்தான் குரு.
குருவின் எண்ணம் இதுதான். கல்லூரியில் வேலை பார்க்கிறவன் அவன், அவனுக்குத் தெரியும் மாணவர்கள், மாணவிகள் எல்லாம் இந்த காலத்தில் என்ன என்ன செய்கிறார்கள் என்று. அவன் காலத்திலும் கேலி, கலாட்டா எல்லாம் உண்டு. ஆனால் ஆசிரியர்களுக்கான மரியாதை, பயம் எல்லாம் எப்பவும் உண்டு. அவன் படித்து முடித்த இந்த சில வருடங்களில் மாணவர்கள்-ஆசிரியர் உறவில் அனேக மாற்றம். அப்படியிருக்க, குருவுக்கு தன் தம்பி தன்னிடத்தில் நேர்மையாக வந்து கேட்கும் ஒன்றை, அவனிடம் மறுக்க முடியவில்லை.
இதுதான் காரணம் என்று குரு சிவாவிடம் சொல்லவில்லை. சொல்லி பழக்கமில்லை, Introvert எனப்படும் உள்முக சிந்தனையாளன். பேச்சு என்பது குருவிடம் குறைவு என்பதை விட அவனுக்கு பேசுவது வராது, கடினமும் கூட!
தம்பியிடம் முடியாது என்று சொல்லி இயல்பாக வாலிபத்தில் வரக்கூடிய ஒரு ஆசையினை மறுத்து நேர்மையை பறிக்கவில்லை அவன். கஷ்டம்தான், இருந்தும் சிலதை சில வயதில் அனுபவித்து விட வேண்டும்! ஒரு நாள், ஒரு படம் என்று நினைக்கலாம். ஆனால் அது ஒரு ஐம்பது வயதில் ஆவலாய் அசைப்போடும் ஒரு நிகழ்வாய் மாறிடும்.
நினைவுகள் மட்டுமே வாழ்வினை நகர்த்தி செல்கின்றன. இப்போது குருவுக்கு அப்படி சந்தோஷமாக நினைத்துப் பார்க்க ஒன்றுமே இல்லை. இருந்தவை எல்லாம் இப்போது மறந்தவையே!!! அப்படியே அவனின் காயங்களை நினைத்து அந்த இரவெல்லாம் அவன் ஓட்டியிருக்கலாம், ஆனால் உழைத்தவனை உறக்கம் வந்து காப்பாற்றியது.
அடுத்த நாள் சிவாவுக்கு கீதா குரு கொடுக்க சொன்னதாக பணத்தைக் கொடுத்துவிட, அவன் முகத்தில் அவ்வளவு சந்தோஷம். தென்றல் கருணாகரனிடம் கேட்பதற்கு முன்னே, அவனே காலையில் வேலைக்குச் சென்றவளிடம்,
“அவன் கிட்ட பேசினேன்மா, அவன் ஓவரா பண்றான். சரியான ராங்குப் பிடிச்சவன், யார்கிட்டயும் உதவினு நிக்கமாட்டான்” என்று அக்கறையும் ஆற்றாமையும் கலந்து குருவைத் திட்டினான்.
தென்றலும் சமாதானமாக பேசிவிட்டு சென்றாலும், மனதோரம் அது ஓடிக்கொண்டே இருந்தது. அந்த வேலை கிடைத்தால் அவனுக்கு எவ்வளவு நல்லது? என்று யோசிக்க யோசிக்க வருத்தமாக இருந்தது. இப்படி வாய்ப்பினை மறுக்கிறானே என்று, கருணாகரனே சமாளிக்க முடியவில்லை தன்னால் பேச முடியுமா என்று நினைத்தாள்.
கல்லூரியில் இருந்து மாலை இரயிலில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்த குருவுக்கு அத்தனை உடல்வலி. நாள் முழுக்க நின்று பாடம் எடுக்க வேண்டும். அடுத்து இரயில் பிடித்து வீட்டுக்கு வருவதற்குள் போதும் போதுமென்றானது. காலையிலிருந்து கருணாகரன் சொன்னது வேறு மனதில் ஓடியது.
ஒரு முறை முயன்று பார்த்தால் என்ன? ஏனோ மனதில் அப்படி ஒரு எண்ணம். எப்படியும் என்னை மதிப்பீடு செய்துதானே வேலைக்கு எடுப்பார்கள். இப்படியெல்லாம் தோன்றவும் இரவு கருணாகரன் வரும்வரை தாழ்வாரத்தில் நின்றபடி பார்த்துக்கொண்டிருந்தான் குருப்ரசாத். மகன் நிற்பதை பார்த்தாலும் கீதாஞ்சலி எதுவும் கேட்கவில்லை.
குரு இப்படி ஓய்வாக நிற்பது எல்லாம் மிகவும் அரிது. ஏதோ காற்றோட்டமாக நிற்கிறான் என்று நினைத்தவர் வீட்டுக்குள் போய்விட, தென்றல் இரவு பாத்ரூம் சென்று வந்தவள் இவன் நிற்பதை இரு நொடிகள் நின்று பார்த்தாள். சத்தம் கேட்டாலும் குரு திரும்பவில்லை. அவன் பார்வை வாசலில் கருணாவின் ஆட்டோ வருகிறதா என்றே பார்த்தது.
தென்றல் அவன் வாசலைப் பார்ப்பதை பார்த்தாலும் குருவிடம் பேசவில்லை. பேச பயம்!! வீட்டுக்குள் நுழைந்து கதவைத் தாழ்ப்பாள் போட்டுக்கொண்டாள். படுத்தாலும் உறங்க மனமில்லை, குரு ஏன் நிற்கிறான் என்பதே மனதில் ஓடியது.
கருணாகரன் வந்து ஆட்டோவை அந்த தெருவோரம் நிறுத்தினான். அது முட்டுச்சந்து என்பதால் அவனுக்கு ஆட்டோ நிறுத்த பிரச்சனையில்லை. இயல்பாக கருணா மேலே பார்க்க, குருப்ரசாத் நிற்பதை பார்த்துவிட்டான்.
“என்ன வாத்தீ? தூக்கம் வரலையா?” என்று கேட்க
“உங்கிட்ட பேசணும்” என்றான் குரு.
குருவின் குரல் கேட்டதும் தென்றல் மெல்ல நகர்ந்து கதவருகே காதை வைத்துக்கொண்டாள். அவளுக்கே கொஞ்சம் வெட்கமாக இருந்தாலும், குரு பேசுவதைக் கேட்டிடும் ஆவல்.
“இருடா வரேன்” என்ற கருணாகரன் நேற்று நடந்ததை எல்லாம் நினைக்காமல் மாடியில் வேகமாக ஏறினான்.
“சொல்லு குரு” என்று அவனருகில் போய் கருணா நிற்க
“நீ சொன்ன வேலைக்கு அப்ளை பண்ணலாம் பார்க்கிறேன், என்ன செய்யணும் சொல்லு” என்று கேட்டான்.
குருவுக்கு ஒரு நல்லது நடக்குமென்றால் கருணாவுக்கு சந்தோஷம்தானே? உடனே போனை எடுத்தவன் அதில் எதையோ பார்த்து,
“இந்த மெயிலுக்கு உன் ரெஸ்யும் அனுப்புடா, அவங்களே கூப்பிடுவாங்க” என்றான்.
“தேங்க்ஸ்” என்று குரு சொல்லி உறங்க போக,
“ஏண்டா இதை கேட்கத்தான் இவ்வளவு நேரம் வெயிட் பண்ணியா? காலையில சீக்கிரம் எந்திரிக்கறவன் ஒரு போன் பண்ணி கேட்டிருக்கலாம், இல்லையா உன் பக்கத்து வீடுதானே தென்றல்? அந்த பொண்ணை கேட்க வேண்டியதுதானே?” என்று கருணா கேட்க
“தெரியாதவங்களை என்ன கேட்கிறது? நீ சவாரில பிஸியா இருப்ப, அதான் கூப்பிடல” என்ற குரு
“இப்ப என்னை தூங்கவிடு” என்று சொல்லி போய்விட்டான்.
“இவனோட!” என்று குருவை நினைத்து பல்லைக் கடித்தான் கருணாகரன். அவனுக்கும் பசியெடுக்க வேகமாக படிகளில் இறங்கி சென்றான்.
தென்றல் இதையெல்லாம் கதவில் சாய்ந்து கேட்டவளுக்கு அப்போதுதான் நிம்மதியாக இருந்தது.
இரண்டு நாட்களில் குருவுக்கு நேர்காணல் இருப்பதாக மெயில் வர, பல வருடங்கள் கழித்து குருவுக்கு சந்தோஷத்தின் சாரல் மனதில். வீட்டில் இன்னும் சொல்லவில்லை, கிடைத்தால் சொல்லலாம் என்று நினைத்தான்.
அடுத்த நாள் கல்லூரிக்கு விடுப்பு எடுத்தவன், விரைவாகவே கிளம்பி பேருந்தில் அந்த பல்கலைக்கழகம் சென்றான். யுனிவர்சிட்டியைப் பார்ப்பதற்கே இரண்டு நாள் ஆகும் போல, அத்தனை பெரிது! கிட்டதட்ட இரு நூறு ஏக்கருக்கு மேல் பரப்பளவு. ஒரு பொறியியல் கல்லூரி, கலை கல்லூரி, பிஸ்னஸ் ஸ்கூல், ஆர்கிடெட் கல்லூரி என்று இருந்தது.
இவன் மெயின் பில்டிங்’ இல் இருக்கும் அலுவலகத்தில் சென்று விசாரிக்க, அலுவல் அறைக்கு செல்ல சொன்னார்கள். அதுவே பதினைந்து நிமிடம் ஆனது, யுனிவர்சிட்டி ஜீப் அழைத்து போனது. அங்கு சென்றதும் வெயிட்டிங் ரூம் அனுப்பினார்கள். பிறகு, சேர்மன் அறைக்கு அனுப்பி வைத்தார்கள்.
அறைக்குள் செல்லும் முன் ஒரு நொடி மூச்சை இழுத்துவிட்டான். உள்ளே சென்றதும் இவனை புன்னகை முகத்துடன் வரவேற்றார் மகாதேவன். குருப்ரசாத்’தை அமர சொன்னவர் அவனை அளவிட்டார்.
பொதுவான கேள்விக்குப் பின், “இங்க இருக்க மத்த ஸ்டாஃப் எல்லாரையும் விட உங்க குவாலிஃபிகேஷன் கம்மிதான் மிஸ்டர். குருப்ர்சாத். ஆனா நல்லா படிக்கிறது வேற, நல்லா சொல்லித்தரது வேற. ஸோ ஒரு க்ளாஸ் எடுத்து காட்டுங்க” என்றவர் குருவை தன்னுடன் கல்லூரியில் ஆசிரியர் வராத வகுப்பு ஒன்றுக்கு அழைத்துச் சென்றார்.
குருப்ரசாத் உண்மையில் வகுப்பை சில நிமிடங்களில் தன் கட்டுக்குள் கொண்டு வந்திவிட்டான். எல்லாரையும் ஈர்க்கும் அவன் குரலும், பாங்கும் கொஞ்சம் கவனம் பிசகினாலும் கணக்கெடுக்கும் அவன் பார்வையின் கண்டிப்பும் மாணவர்களை மிரட்டியது. ஆனால் அவன் சொல்லிக்கொடுத்தது புரிந்தது.
“கண்டினியு பண்ணுங்க” என்று சொல்லிவிட்டு மகாதேவன் சென்றுவிட்டார். வகுப்பு முடியவும் அட்டெண்டர் வந்து அவனை அழைத்து சென்றார். மீண்டும் காத்திருக்க சொன்னார்கள், எதையும் எதிர்ப்பார்க்கவில்லை அவன், கிடைத்த வாய்ப்பினை விடக்கூடாது என்று வந்திருந்தான்.
வந்தது வீண்போகவில்லை. அரை மணி நேர காத்திருப்பில் அவனுக்கு ஆஃபர் லெட்டர் அச்சடித்து கைக்கு வந்தது. குருவின் கைகளில் நடுக்கம், நெஞ்சடைத்த உணர்வு. நிஜமாகவே இத்தனை பெரிய யுனிவெர்சிட்டியில் அவனுக்கு வேலையா? என்று பிரமித்து இருந்தான்.
மகாதேவன் மீண்டும் அழைத்து வாழ்த்து சொல்லி அனுப்பினார். எச்.ஓ.டியை பார்த்துவிட்டு செல்ல சொல்ல, அதை செய்தவனை அடுத்த மாதம் வேலையில் சேர சொன்னார்கள். குருப்ரசாத்திற்கும் அதுவே வசதியாக இருந்தது. அவன் வேலை பார்க்கும் கல்லூரியில் அதற்குள் பாடங்களை முடித்து விடலாம்.
மீண்டும் பேருந்து பிடித்து சீக்கிரமே வீடு சென்றவனை பார்த்த கீதா,
“என்னடா சீக்கிரம் வந்துட்ட?” என்று விசாரிக்க,
“ஹால்ஃப் டே லீவ்மா” என்றதும்
“அப்போ ரெஸ்ட் எடு குரு” என்றார் சந்தோஷமாக.
குருவுக்கு இப்படியான ஓய்வு நேரங்கள் மிகவும் குறைவு. மதியம் பார்க்கும் சீரியல் கூட மகனின் தூக்கம் கெடும் என்று கீதா பார்க்கவில்லை. மாலையில் வேலை விட்டு வந்த தென்றல், வாசலில் குருவின் ஷூ இருப்பதைப் பார்த்துவிட்டாள். உடனே சைலெண்ட்டில் இருந்த போனை எடுத்து பார்த்தாள். குருவிற்கு வேலை கிடைத்த செய்தி வாட்ஸப்பில் மெசெஜ் மூலம் தெரிய வந்தது.
தென்றலுக்கு மிகையான மகிழ்ச்சி!
துள்ளலுடன் வீட்டினுள் போனாள். எதையோ சாதித்த உணர்வு அவளிடம். இனி நன்றாக இருப்பார்கள் என்று நம்பிய மனதில் இன்னும் நன்றாக இருக்க வேண்டும் என்ற வேண்டுதல். சிவாவும் லாவண்யாவும் நிச்சயம் உற்சாகம் கொள்வார்கள் என்று நினைக்கும்போதே முகத்தில் புன்னகை பூத்தது.
********
அன்று மாலை கடைக்குப் போகலாம் என்று நினைத்தாள் தென்றல். கீதாஞ்சலி அந்த காரிடரைப் பெருக்கிக் கொண்டிருந்தார். அவரிடம்
“கடைக்குப் போறேன்மா, லாவண்யா ஃபீரியா இருந்தா என்னோட அனுப்பி வைக்கிறீங்களா? தனியா போக ஒரு மாதிரி இருக்கு” என்று கேட்க, வாசலில் நின்று இதை கேட்ட லாவண்யாவும்
“அம்மா, நானும் அக்கா கூட போய்ட்டு வரேன்மா.” என்றாள் ஆசையாக. எங்கும் அழைத்து செல்வதில்லை, எப்போதாவது கோவில், கடை என்று அழைத்துப் போவார். இன்று சிவாவும் படத்திற்கு போய்விட்டான்.
லாவண்யா ஆசையாக கேட்க, தென்றலுடன் தானே? அதனால் அனுப்பி வைத்தார். இரண்டு மணி நேரம் யானைக்கவுனியின் தெருக்களில் சுற்றிவிட்டு, அங்கிருக்கும் பானி பூரி கடையில் நன்றாக உண்டுவிட்டு இருவரும் சந்தோஷமாக வீடு திரும்பினர். மாடியில் போகும்போது கூட உற்சாகமாக பேசியபடி நடந்தனர். தென்றல் வீட்டைத் திறக்க, லாவண்யா ‘பை’ சொல்லிவிட்டு வீட்டுக்குள் போனாள். இரண்டே நிமிடத்தில் குருவின் சத்தம்.
“ஈ பவர் எக்ஸ் படம் காட்ட ஆரம்பிச்சாச்சு!” என்று முணுமுணுத்த தென்றல் அவர்கள் வீட்டுப்பக்கம் காதை சுவரில் சாய்த்து அவன் பேசுவதை கேட்டாள்.
பேசவில்லை அவன்! கத்தினான்!
“யாரை கேட்டு போன நீ? இப்படித்தான் படிக்கிறதை விட்டு ஊர் சுத்துவியா?” என்று லாவண்யாவை அதட்டினான். லாவண்யாவுக்குக் கண் கலங்கியது. சிவாவோடு எத்தனை சண்டை போட்டாலும் பதிலுக்குப் பேசிவிடுவாள், ஆனா குருவிடம் பயம் இருக்கும், மரியாதை இருக்கும்.
அதனால் அமைதியாக அம்மாவை பார்த்தாள்.
“குரு! நாந்தான் அனுப்பி வைச்சேன், அந்த தென்றல் பொண்ணு தனியா போக ஒரு மாதிரி இருக்குனு சொல்லிச்சுடா” என்று சொல்ல, இன்னும் எகிறினான்.
“யாரோ எப்படியோ போகட்டுமே, இவளை ஏன் அனுப்பினீங்க? அதுவும் அந்த பொண்ணு யாரு என்ன தெரியாம இவளை அனுப்பி வைச்சிருக்கீங்க? நாட்டுல என்ன எல்லாம் நடக்குது தெரியும்தானே?” என்று பல்லைக் கடித்தான்.
“ஏண்டா? எனக்குத் தெரியாதா? அந்த பொண்ணு நல்ல பொண்ணு அதான் துணைக்கு அனுப்பினேன்” கீதா பேச
“ஆமா, இவ அப்படியே நாலு பேரை அடிப்பா? என்ன தெரியும் உங்களுக்கு ஒரு மண்ணும் தெரியாது!” என்று எங்கோ காட்ட வேண்டிய எரிச்சலை அவரிடம் காட்டினான்.
முதலில் ஆவலில் கேட்ட தென்றலுக்கு அவன் பேச பேச வருத்தம் அதிகமானது. ஒரு சாதாரண செயலுக்கு எத்தனை பேச்சு? என்ன செய்துவிடுவேன் என்ற கோபம் இவளிடம். குரு அந்த வீட்டில் தனித்திருந்தான், அதனால் தென்றலை அவன் சொல் நிறைய பாதித்தது. மற்றவர் யாரும் இப்படி காயப்படுத்தியதில்லை.
கீதாஞ்சலி விடாது, “ஏண்டா கத்துற? அந்த பொண்ணுக்கு கேட்க போகுது. அந்த பொண்ணுக்கு யாருமில்லடா. இப்படி எல்லாரையும் எடுத்தெறிஞ்சு பேசுறதை நிறுத்து குரு!” என்று மகனை அதட்டினார்.
அவரின் அதட்டல் விட, தென்றலுக்கு யாருமில்லை என்பது குருவின் பேச்சை நிறுத்தியது.
ஏன் இத்தனை கோபம் என்று இன்னும் கோபம் வந்தது அவனுக்கு.
குருவுக்கு வேலை கிடைத்த சந்தோஷம், சுற்றிவிட்டு வந்ததால் தென்றலுக்கும் லாவண்யாவிற்கும் இருந்த உற்சாகம் எல்லாம் வடிந்தே போனது.