காதலைக் கொடுத்ததும் நீ, எடுத்ததும் நீ என்ற வார்த்தைகள் தென்றலை தாக்கின, நான் என்ன கொடுத்தேன்? என்ற சிந்தனையே! வேகமாக வெளியே வந்தவள் அறையை விட்டு போன குருவை அழைத்தாள்.
அவள் அழைப்பில் நின்றவன் முறைக்க, “குரு!” என்று மீண்டும் குரல் கொடுத்தாள். யாருமில்லாத காரிடார் என்றாலும் பேச பிடிக்கவில்லை, அடெண்டர் இவர்களை பார்க்க,
“எல்லாம் பணத்திமிர்! இவ அக்கா வீட்டு காலேஜ்ன்றதால இப்படி செய்றா” என்று கடுப்போடு முறைத்தான். தென்றல் அருகே வந்தவன்
“இங்க பேசணும்னாலும் நான் பேசுவேன்” தென்றல் சொல்ல, குரு மீண்டும் அந்த அறைக்குள் சென்றவன், அங்கிருக்கும் சோஃபாவில் உட்கார்ந்து,
“இன்னும் பத்து நிமிஷம் டைம், நீ பேசிட்டன்னா நான் என் வொர்க் முடிஞ்சு க்ளாஸ் போயிடுவேன்” என்று கையில் இருந்த கடிகாரம் பார்த்து சொல்ல, தென்றலும் அவன் முன்னே நின்றாள்.
“காதல் நான் நிஜமா என்ன கொடுத்தேன் தெரியல குரு. உங்களுக்கு செஞ்ச எல்லாமே உங்க மேல விருப்பம் வர முன்னாடிதான். லாவண்யா, சிவாவுக்கு செஞ்சது கூட அப்படி, கீதாம்மாவை நான் பார்த்தது கூட அவங்க மேல உள்ள தனிப்பட்டு அன்புனால! உங்களை எனக்குப் பிடிக்குதுனு தெரிஞ்ச அடுத்த நாளே நான் வீட்டுக்குப் போய்ட்டேன். மறுபடியும் வந்தது அது நான் செஞ்ச தப்பு! நீங்களா வந்து கல்யாணத்துக்குப் பேசினீங்க, எனக்குப் பிடிச்சது, அதனால மறுக்கல!”
குரு அவள் பேச்சை என்னமோ பேசு என்ற ரீதியிலே கேட்டான்.
“காதல் கொடுத்தது கண்டிப்பா நான் இல்லை! நீங்க! உங்களுக்கு என்னை பிடிக்கும்னு உங்க பேச்சுல, உங்க செயல்’ல காட்டினது நீங்க!” என்று தென்றல் சொல்ல, அவன் செய்தது எல்லாம் நினைவில் வர முகம் கோபத்தில் சிவந்தது.
“அம்மா இல்லைனு நான் சொன்னது உண்மைதானே? அதுக்கு நீங்க சொன்ன ஆறுதல் உண்மைதானே? எப்பவும் என்னை தனியா விடல நீங்க, என்னை ஸ்பெஷலா ஃபீல் பண்ண வைச்சீங்க, காதலை உணர வைச்சீங்க!” என்றபோது தென்றல் குரல் இடறியது.
தன்னை சரிசெய்தவள், “இப்போ நான் தேவராஜன் பொண்ணுன்றதால எல்லாமே பொய்யாகிடுமா? அப்பவும் உண்மை சொல்ல முடியாம தவிச்சப்ப எல்லாம் என்னை சமாதானம் பண்ணீங்க. யாரா இருந்தாலும், என் குடும்பம் எவ்வளவு மோசமா இருந்தாலும் என்னை விட மாட்டேன் சொன்னீங்க. உண்மை சொல்லாம நிச்சயம் செய்ய கூட நான் யோசிச்சேன், நீங்கதான் அவசரமா செய்யணும்னு என்னை கன்வீன்ஸ் பண்ணீங்க. ஏன்னா உங்களுக்கு என்னை பிடிச்சது! நான் இதெல்லாம் நடக்காதுனு கலங்கினப்போ இது மாறாத நிஜம், கலையாத கனவுன்னு! எனக்கு வாக்குக் கொடுத்தீங்க.”
குருவுக்கு தென்றல் கேட்ட கேள்வியெல்லாம் சரியென்றே பட்டது. இருந்தும் அதெல்லாம் அவள் யாரென்று தெரியும் முன். யாராக இருந்தாலும் பரவாயில்லை என்றவன் தான், ஆனாலும்?
“உண்மைதான்! ஆனா நான் நேசிச்ச தென்றல் இல்லையே நீ?!” ஆதங்கமாக சொன்னான் குரு.
“அதே தென்றல்தான் நான்! அப்பா அம்மா இல்லாத அதே பொண்ணுதான், என்ன நான் படிச்சதுல பொய் சொன்னேன். அப்படியே இருந்தாலும் நான் உங்களை விட பெட்டரா இருந்தா அக்செப்ட் பண்ண முடியலயா? முன்னாடி பக்கத்து வீட்டு ஸ்கூல் டீச்சர், உங்களை விட எல்லா விதத்திலயும் நான் கம்மினு நீங்க நினைச்சீங்க, எனக்கு யாருமில்லை, மாமா பத்தி பேச்சு வராது, இதெல்லாம் நீங்க சொன்னதுதானே?” என்று கேட்க, குரு முறைத்தான். அவன் மனதை சொல்ல விருப்பமில்லை!
“அண்ட் கடைசியா ஒன்னு! நான் தேவராஜன் பொண்ணு ஓகே, நீங்க நேர்மை தவறாத மகேந்திரன் பையன் இல்லையா? ஒரு பொண்ணுக்குக் கொடுத்த வாக்கை ஏன் காப்பாத்தல நீங்க? இப்படியெல்லாம் நான் கேட்க கூடாதுனு நினைச்சேன் குரு. நீங்க என்னை கேட்க வைக்கிறீங்க. நீங்க சொன்னது மாதிரி உங்க காதல் அதிகம், அதை நான் உணர்ந்துருக்கேன், அதுவே இன்னிக்கு என்னை ஹர்ட் பண்ணுது. அத்தனை காதல், அக்கறை காட்டிட்டு மொத்தமா என்னை போ’ன்னு சொல்லிட்டீங்க!” என்றபோது தென்றலின் கண்கள் நீரால் நிறைந்தன.
“இப்படி காரணங்கள் சொல்லி நீங்க எனக்கு வேண்டாம். என்னைக்கு உங்களுக்கு நான் வேணும்னு தோணுதோ, அப்போ பேசலாம். ஒரு வேளை அப்படி தோணவே இல்லை, என் அம்மா பார்த்த பொண்ணுனு உன் மேல பாசம், உன்னை மறந்துட்டேனு நீங்க சொன்னாலும் ஓகே. இனிமே உங்க முன்னாடி தெரியாம கூட வந்து இரிட்டேட் பண்ண மாட்டேன்.” என்றவள் அவன் பதிலை எதிர்ப்பார்க்காமல் ஷ்ரவன் அறைக்குள் புகுந்தாள். குருப்ர்சாத் தென்றலின் பேச்சில், சில நிமிடங்கள் அப்படியே உட்கார்ந்தான்.
“இவ எப்படி, யாரா இருந்தாலும் பரவாயில்லனு நினைச்சேன்தான், ஆனா ஏன் என்கிட்ட உண்மையா இல்ல இவ? இவளுக்கு என் ஃபீலிங்க்ஸ் புரியாது, வேண்டாம்” என்று மீண்டும் கோபம் துளிர் விட, அவன் வேலையைப் பார்க்க சென்றான்.
தென்றல் வர ஷ்ரவன் இல்லை. “அப்பா எங்க ஷ்ரா?” என்று ஷ்ரவந்தியிடம் கேட்க
“அப்பா ப்ரின்சிபால் சர் பார்க்க போயிருக்காங்க சித்தி” என்றாள்.
“சரி, நீ அப்பாவோட இரு! நான் கிளம்புறேன். ரூம் விட்டு போக கூடாது” என்றவள் வெளியே வர ஷ்ரவன் நின்றான்.
“என்ன சகளை கூட சண்டையா?” அவன் கேலியாக கேட்க தென்றல் பேசவில்லை.
“குரு டென்ஷனா இருந்தார். பேசி ஒரு முடிவுக்கு வாங்க. இல்லை நாங்க எல்லாம் பேசுறோம்” ஷ்ரவன் அக்கறையாக பேச
“love is two people business மாமா, எதுனாலும் அவங்கதான் பேசணும்”
“ஓகே! மூணாவது மனுஷங்க வேண்டாம் சொல்ற” என்று ஷ்ரவன் புரிந்து கொண்டான்.
“அந்த பொண்ணை மறக்க முடியாம கஷ்டப்படுறான். அந்த பொண்ணு ஏன் இந்த வேலை பார்க்கணும். உண்மையை சொல்லியிருந்தா என் பையன் வருத்தப்படமாட்டான் இல்ல” என்று மகேந்திரனுக்கும் காலையில் குரு கத்தி சென்றதிலிருந்தே மனதில் வருத்தம்.
“அவ யாருமில்லனு சொன்னா… அதுக்கு மேல என்ன விசாரிக்கிறது நினைச்சேன்.” கீதா கணவருக்கு காரணங்கள் சொல்ல மகேந்திரன்,
“விடு அஞ்சலி! குருவுக்கு என்ன பிடிக்குதோ செய்யட்டும். அவன் சந்தோஷம்தான் நமக்கு முக்கியம்” என்றார்.
“அவனா ஒன்னும் சொல்லல, நானாதான் அந்த பொண்ணை பார்ப்போம்னு சொன்னேன். வேற பொண்ணு பார்ப்போமா?” மகன் மனம் மாற நினைத்து அவர் கேட்க, மகன் அவரிடமல்லவா மனம் விட்டு பேசியிருந்தான். அதனால்,
“கொஞ்ச நாள் ஆகட்டும்” என்றார் மகேந்திரன்.
மகாதேவனும் கிருஷ்ணகுமாரும் தென்றலிடம் குரு வீட்டில் பேசவா என்று தினமும் கேட்டாலும் தென்றல் மறுத்துவிட்டாள். தன்னை பேசுவது போல், சித்தப்பாக்களிடம் குரு பேசிவிட்டால்? அதற்குப் பயந்தே வேண்டாம் என்றாள். அதை தவிர, இது இருவர் வாழ்க்கை என்ற தெளிவும்.