Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உன் கோபங்கள் சுகமா? - 1

Advertisement

SatyaSriram

Well-known member
Member
இன்னும் முடிக்காத கதை(தாயே யசோதா(ரா)) இருக்க புதுசா ஒரு கதையா!! இதையாவது சீக்கிரம் முடிப்பாங்களா? என்ற உங்களின் மனக்குரல் கேட்கத்தான் செய்கிறது. இருந்தாலும் என்ன செய்ய, இரண்டு அத்தியாயங்கள் எழுதி முடித்ததுமே தளத்தில் பதிவிட சொல்லும் மனத்தை அடக்க வழி தெரியாமல், மல்லிகாவிடம் திரி தொடங்க சொல்லிவிட்டேன். அதிலேயும் பாருங்கள் வெள்ளி அன்று தொடங்கிய திரிக்கு இன்று தான் என்னால் முதல் அத்தியாயம் பதிவிட முடிந்த்திருக்கிறது. (இப்பொழுதே சத்யாவின் தாமத பதிவுகள் தொடங்கிவிட்டன?)

என்னுடைய எல்லா கதைகளையும் பொறுமையாக படித்து கருத்திட்டதைப் போலவே இந்த கதைக்கும் உங்கள் அனைவரின் ஆதரவை தருவீர்கள் என்று நம்புகிறேன்.
 
உன் கோபங்கள் சுகமா?

அத்தியாயம் : 1

திகாலை சூரிய உதயத்தை பார்த்தபடி நின்றிருந்தாள் செல்வி. சுட்டெரிக்கும் சூரியனாக இல்லாமல் நிலவு மகளின் குளிர்ச்சியுடன் ஆரஞ்சு வண்ண கிரணங்களை விரித்து ஒளிர்ந்த சூரியனை காணும் போது அவளுக்கு அவனின் நியாபகமே!!

மறந்தால் தானே நினைப்பதற்கு!!

எங்கும் எதிலும் அவன் நினைவுகளே!!

அதிகாலை சூரியன் அவனின் குளிர்ச்சியான மனநிலையை நியாபகப்படுத்தியது என்றால் சுட்டெரிக்கும் சூரியனோ அவனின் கோபங்களை நியாபகப்படுத்தியது.

சூரியனையே பெயராகப் பெற்றவனிடம், 'உன் கோபங்கள் சுகமா?' என்று மனதினுள் தினம் தினம் கேட்பவள் தான் இந்த செல்வி.
என்றேனும் தன் மனதின் கேள்வி புரிந்து அவனின் கோபங்களை விட்டு தன்னிடம் சேர்வான் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறாள்.

அவள் திருநிறைச்செல்வி!!

ஆகாயத்தைப் பார்த்தபடி இருந்த அவளின் கண்களுக்கு அந்த சூரிய உதயத்தில் அவனின் சிரித்த முகம் தெரிந்ததோ? அவளின் முகத்திலும் சிறு புன்னகை! அவளின் கை உயர்ந்து சூரியனை தடவிக் கொடுக்க முயற்சித்தது.

சூரியனை தொடுவது சாத்தியமா?

அவன் முகத்தை நேரில் வருடிக்கொடுப்பதும் இப்போதைக்கு சாத்தியமில்லை என்று அவளுக்கு தெரிந்ததால் தான் இந்த கற்பனையான வருடலோ?

'என்னை எப்பொழுது தான் புரிந்துக்கொள்வீர்களோ?' என்ற கேள்வியுடன் முகம் வாட இருந்தவளை,

"செல்லா காபி குடிக்க போலாமா?" என்று கேட்ட படியே வந்த அவளின் தோழி திலகாவின் குரல் செல்வியை கலைத்தது.

அவர்கள் இருப்பது வேலை செய்பவர்களுக்கான பெண்கள் விடுதி. (Working women hostel). நவீன வசதிகள் நிறைந்த விடுதி. பெண்களால் பெண்களுக்காக நடத்தப்படும் விடுதி. மிகுந்த பாதுகாப்பு நிறைந்தது. விடுதி காப்பாளர் தேவகி காவல் துறையில் உயர்பதவியில் இருந்து ஓய்வு பெற்றவர். மொத்தம் பதினைந்து அறைகள் மட்டுமே கொண்ட விடுதி அது. நவீன வசதிகளுடன் அறைகளும் மிகப் பெரிதாக இருந்ததால் அதனின் வாடகை மிக மிக அதிகமாகவே இருந்தது. அதன் பாதுகாப்பிற்காக மட்டும் தான் செல்வி விலையுயர்ந்த அந்த அறைகளில் தங்கியிருப்பது.

அவள் பணத்தால் ஏழை இல்லை.

மனத்தாலோ?

கோடீஸ்வர குடும்பம் தான் அவளுடையது.

இந்தியாவின் முக்கிய பணக்காரர்களுள் முதல் ஐம்பது பேர்களில் இவளின் தந்தை பெயர் இருக்கும். அதனால் இவளின் முகமும் சிலருக்கு சற்று பரிச்சயமே!

செயின் ஆப் ஸ்கூல்ஸ் நடத்தும் குடும்பம் இவளுடையது. இந்தியாவின் அநேக மாநிலங்களில் இவர்களின் பள்ளிகள் இருக்கிறது. செல்லா குழுமத்தின் பள்ளிகள் அனைத்தும் சி.பி.எஸ்.சி அங்கீகாரம் பெற்றவை. அந்த பள்ளிகளை அனைத்தையும் நிர்வகிப்பது அவளின் தந்தை ஞானவேல்.

பேருக்கு ஏற்றார் போல் ஞானம் நிரம்ப பெற்றவர். அவரின் ஞானம் குறுக்குவழியில் மட்டுமே பயணிக்கும். அந்த ஞானம் மட்டும் தான் செல்வியின் இன்றைய நிலைக்கு காரணம்.

"செல்லா, உனக்கு காபி வேண்டாம்ன்னு எனக்கு தெரியும்டி. நீதான் இந்த ஒரு வருஷமாவே காபி, டீ, பால் எதுவுமே குடிக்கறதேயில்லையே? எனக்கு கம்பெனி கொடுடி. சன்டேன்னு எல்லாரும் இழுத்துப் போத்தி படுத்துட்டு இருக்காங்க. யாருமே எழுந்துக்கல. சோக கீதம் அப்புறமா வாசிக்கலாம். நீ வந்து உன்னோட வெந்நீரை குடி." என்றவாறே செல்வியை இழுத்துக்கொண்டு சென்றாள் திலகா.

திலகா நடுத்தரகுடும்ப வகுப்பை சேர்ந்தவள் தான். செல்வி வீட்டில் திலகாவின் பெற்றவர்கள் வேலையில் இருந்ததால் குழந்தையிலிருந்தே இருவருக்கும் நல்ல பழக்கம்.

செல்வியின் தந்தை ஞானவேல் தன் பெண் படிக்கும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் திலகாவை சேர்த்து படிக்கவைத்தார். செல்வியின் வற்புறுத்தலே அதற்கு காரணம்.

ஞானவேல் தன் பெண்ணை படிக்க வைத்ததற்கான நன்றி கடனாக இன்றுவரை அவர்கள் வீட்டின் அடிமையாக தான் திலகாவின் குடும்பம் இருக்கிறது.

செல்வி மற்றும் திலகாவை பொறுத்தவரை அது அடிமைத்தனம். திலகாவின் பெற்றவர்களுக்கு அது நன்றிக்கடன்!!

ஞானவேலின் விசுவாசிகள் திலகாவை பெற்றவர்கள். ஞானவேலிடம் பட்ட நன்றி கடனுக்காக தங்கள் உடம்பையே செருப்பாக தைத்து சேவை செய்ய விரும்பும் மனம் உடையவர்கள் தான் கல்பனாவும் முருகனும்.(திலகாவை பெற்றவர்கள்)

ஞானவேல் தரும் சம்பளம் அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தியது. அவர்களின் வாழ்க்கை தரத்தை போலவே அவர்களின் அடிமைத்தனமும் உயர்ந்திருந்ததை தான் அவர்கள் உணரவில்லை.

அவர்களை வீட்டின் பின்புறம் இருக்கும் அவுட் ஹவுஸிலேயே குடி வைத்து இருந்தார் செல்வியின் அப்பா. அதற்கான வாடகையாக அவர்களின் தன்மானத்தை மட்டுமே பெற்றுக்கொண்டிருந்தார்.

"செல்லா, கல்பு போன் பண்ணிட்டே இருக்கா. இன்னிக்கு வரியா நாம பார்த்துட்டு வந்துடுவோம்." என்று அவள் அம்மா கல்பனா தங்களை பார்க்க விரும்பியதை செல்வியிடம் சொன்னாள் திலகா.

"இல்ல திலகா. நான் வரல. வேலை இருக்கு.!"

"செல்லா அங்க போகாம எல்லாம் இருக்க முடியாது. என்ன தான் இருந்தாலும் அவங்க உன்னை பெத்தவங்க. பாக்காம பேசாம எல்லாம் இருக்க முடியாது. இன்னுமா உன் கோபம் போகல?"

"கோபமா, எனக்கா?" என்றவளின் குரலில் விரக்தி மட்டுமே.

"ஏன் தான் இந்த சன்டே வருதோ? உன்னோட இந்த மூஞ்சியப் பார்க்க சகிக்கல!! எனக்கு இப்போ ரொம்ப கோபமா வருது. உன் மேல இல்ல உன் அவர் மேல!! ஒரு நாள் இல்லை ஒரு நாள் அவர் கிட்ட நான் சண்டை தான் போட போறேன் பாரு!!" என்றாள் திலகா.

திலகாவின் 'உன் அவர்' என்ற வார்த்தையில் அவனின் எண்ணங்களுக்கு மீண்டும் சென்றாள் திருநிறைச்செல்வி.

"காலைல எழுந்து சன்ரைஸ் பார்த்துட்டே பில்டர் காபி குடிக்கறது தனி சுகம் திரு. நீயும் ட்ரை பண்ணி பாரேன் திரு!!" என்றவனின் குரல் இப்பொழுதும் அவள் காதுகளில் ஒலிக்கிறது.

அவனுக்கு பிடித்த பில்டர் காபியின் சுவை அவளுக்கும் பிடிக்க ஆரம்பித்தது. காலை நேர சூரிய உதயத்துடன் பில்டர் காபியை ருசித்தவாறே அவனின் நினைவுகளை அசைப்போடுவது அவளுக்கு பழக்கம் ஆனது.

அவன் அவளோடு இருந்த காலத்தில் இருந்து தொடங்கிய பழக்கம். இப்பொழுது அவனுக்கு பிடித்த பில்டர் காபியை குடிப்பதில்லை. ஆனால் தினமும் சூரிய உதயத்தில் தன்னவனை தேடுவதை வழக்கமாக கொண்டிருந்தாள்.

எல்லோருக்கும் செல்வி அல்லது செல்லா. அவனுக்கு மட்டும் 'திரு'. அவனுடைய ‘திரு’ தானே அவள். அதையெல்லாம் மறந்துவிட்டானா? என்று நினைத்தவளின் விழிகளில் நீர் நிரம்பியது.

திலகாவிற்கு முகம் காட்டாது திரும்பி அமர்ந்து விழிகளை துடைத்துக்கொண்டாள் செல்வி.
செல்வியையே ஒர விழியால் கவனித்துக்கொண்டிருந்த திலகா 'எல்லாம் காதல் படுத்தும் பாடு. எனக்கு இந்த காதலே வேண்டாம் சாமி!!' என்று மனதினுள் பேசிக்கொண்டாள்.

காதலே வேண்டாம் சாமி என்று வேண்டிக் கொள்பவளும் அந்த காதலில் தான் விழப்போகிறாள் என்று அவளுக்கு தெரியாதே.

"செல்லா!! உன் வாட்டர் டாமை க்ளோஸ் பண்ணிட்டு கிளம்பு. வெளிய போகலாம்." என்றாள் திலகா.

"நான் வரல!"

"நீ வரியான்னு நான் கேட்கவேயில்லையே!! உன்னை கிளம்ப தானே சொன்னேன். இன்னும் பத்து நிமிஷத்துல நீ கிளம்பலைன்னா உன் அப்பாவை இங்க வரச்சொல்லி உன்னை கூட்டிக்கிட்டு போக சொல்லிடுவேன்." என்றவளின் குரலில் நிறைய அதட்டல் இருந்தது.

செல்விக்கு அவள் ஒரு அக்கா போல தான் எப்பொழுதும் இருப்பாள். செல்வி தனியே ஹாஸ்டல் செல்லும் முடிவை எடுத்ததுமே அவளுடன் தன்னையும் இணைத்துக்கொண்டாள் திலகா.

ஞானவேலின் அதிகாரம் அவளுக்கு பிடிக்காமல் போனாலும் அவரின் வயதுக்கு என்றுமே மதிப்பளிப்பவள் தான் இந்த திலகா.
செல்வியின் தந்தை அவளைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பை திலகாவிற்கு கொடுத்து, அதற்கென சம்பளமும் மாதம் தோறும் வழங்கி வருகிறார். இதன் மூலம் 'என் பெண்ணின் வேலைக்காரி தான் நீ!' என்ற இறுமாப்பே அவருக்கு இருந்தது. அவரின் எண்ணம் திலகாவிற்கு புரிந்தாலும் தன் தோழிக்காக பொறுத்துக்கொண்டாள்.

தன் தோழிக்காக தன்னைப் பெற்றவர்களையும் கூடப்பிறந்த தம்பியையும் பிரிந்து, செல்வி வேலை செய்யும் பள்ளியிலேயே தனக்கும் ஒரு வேலை தேடிக்கொண்டு, கடந்த ஒரு வருடமாக செல்வியுடனேயே பொழுதை கழித்துக்கொண்டிருக்கிறாள் திலகா. அந்த பள்ளியில் இருந்து கிடைக்கும் சம்பளத்தை மட்டும் தான் அவளின் தேவைகளுக்கு உபயோகித்து வருகிறாள்.

செல்வியைப் பார்த்துக்கொள்ள என்று தரும் பணம் அவளின் வங்கி கணக்கின் இருப்பை தான் அதிகரித்ததே தவிர வேறொன்றும் நிகழவில்லை. திலகா அந்தப் பணத்தை எவ்வளவு இருக்கிறது என்று கூட பார்த்ததில்லை.

“போ செல்லா! சீக்கிரம் ரெடியாகி வா! உனக்கு முப்பது நிமிஷம் தான் டைம். அதுக்குள்ள நீ வரலைன்னா உன் அப்பாக்கு கால் போயிடும்.” என்று கூறிய திலகா செல்வியை பிடித்து பாத்ருமிற்குள் தள்ளினாள்.

குளியலறையில் செல்வி அங்கிருந்த கண்ணாடியில் தன் முகத்தையே பார்த்திருந்தாள். அவள் முகத்திலேயே அவனின் முகத்தை தேடினாள்.

மனதிலோ அவனுடன் இருந்த நாட்களே படமாக விரிந்தது.

செல்லா குழுமத்தின் பள்ளிகள் தமிழகத்தில் மூன்று முக்கிய மாவட்டத்தில் அமைந்திருந்தது. நான்காவதாக பழைய மகாபலிப்புர சாலையில் புதிதாக 'ஞான் e-techno' என்ற பள்ளியை ஞானவேல் திறந்திருந்தார். சென்னையில் இவர்கள் தொடங்கும் இரண்டாவது பள்ளி.

அந்த சாலையில் பெருகியிருந்த அடுக்குமாடி குடியிருப்பு அந்த பள்ளிக்கு நிறைய மாணாக்கர்களை பெற்று தந்தது. அதுமட்டுமில்லாமல், அரசு பள்ளியில் சேர்க்க விரும்பாத பெற்றவர்களின் மனநிலை இப்பொழுது மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் கூட தங்கள் குழந்தைகளை சேர்ப்பதை விரும்பவில்லை.

மத்திய அரசின் அங்கிகாரம் பெற்ற பள்ளிகளில் படித்தால் தான் கெளரவம் என்று நினைக்கும் பெற்றவர்களின் மனம் தான் பெருகிவரும் தனியார் பள்ளிகளுக்கான மூல தனம். கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பழைய மகாபலிபுர சாலையில் பெருகியிருக்கும் பள்ளிகளே அதற்கு சான்று.

கல்லூரியில் தகவல் தொழில்நுட்பத்தை முதற்பாடமாக கொண்டு இளங்கலையை முடித்து பின் நிர்வாக மேலாண்மையில் முதுகலை பட்டம் பெற்றிருந்த செல்விக்கு அந்த பள்ளியை நிர்வகிக்கும் உரிமையை தந்தார் ஞானவேல்.

தன் ஒரே வாரிசான செல்வி தன்னுடைய செல்லா குழுமத்தை நிர்வகிக்க பழகிக்கொள்ளவேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த ஞானவேலுக்கு புதிதாக தொடங்கிய இந்த பள்ளியை தன் பெண்ணே நிர்வகித்து பழகவேண்டும் என்று நினைத்தார். ஆனால் செல்விக்கு ஆசிரியராக பணி செய்யவே விருப்பம் இருந்தும் தந்தையின் கட்டளைக்கு ஏற்ப 'ஞான் e-techno' பள்ளியை நிர்வகித்தாள்.

அந்தப் பள்ளியில் தான் அவனை முதன் முதலில் சந்தித்தாள் செல்வி.

அந்தப் பள்ளியில் தேர்வு முடிவுகளை மாணாக்கர்களிடம் நேரிடையாக தராமல், பெற்றோர்களை பள்ளிக்கு அழைத்து அவர்களுடன் பிள்ளைகளை பற்றிய சிறிய கலந்துரையாடலுடன் தான் தேர்வு முடிவுகளை தருவார்கள். அதாவது parents teachers meeting வைத்து தான் மாணாக்கர்களின் report card கொடுக்கும் முறை. செல்லா குழுமத்தின் அனைத்து பள்ளிகளிலும் இந்த நடைமுறையே மேற்கொள்ளப்படும்.

அரையாண்டு விடுமுறை முடிந்து தேர்வு முடிவுகள் அன்று வழங்கப்பட இருந்தன.

பெற்றோர்கள் பள்ளிக்கு வரும் நாட்களில் செல்வி தன் அறையில் இருந்து கவனிக்க வேண்டும் என்பது தான் அவளுக்கு ஞானவேல் இட்டிருந்த முதல் கட்டளை. பெற்றோர்களின் மனநிலையை தெரிந்துக்கொண்டு அதற்கேற்றாற் போல் புதிய நடைமுறைகள் மேற்கொள்ளப்படும். செல்விக்கு இதில் மன நிறைவே.

அவள் அறையில் இருந்தவாறே தான் கவனிக்கவேண்டும் என்று ஞானவேல் கூறியிருந்தார். அதை தவிர்த்த செல்வி அங்குமிங்கும் நடந்தபடி அவளால் முடிந்தவரை அனைத்து வகுப்பிற்கும் சென்று பார்வையிடுவாள். வெளியில் நின்றவாறு தான் பார்வையிடுவாள்.

ஆறாம் வகுப்பு 'அ ' பிரிவு என்று இருந்த வகுப்பறையை தாண்டும் போது, "உங்க வீட்டு பையன், ஒரு சப்ஜெக்ட் ல பெயில், மத்த எல்லா சப்ஜெக்ட்ஸ்லேயும் ஜஸ்ட் பாஸ் தான் பண்ணியிருக்கான். இப்படியே போனா பெரிய கிளாஸ் வரும்போது கண்டிப்பா மொத்தமா பெயில் ஆயிடுவான். ஸ்கூல்க்கு அனுப்பிவிட்டா மட்டும் போதும்ன்னு இருக்காதீங்க!! கொஞ்சம் வீட்டுலயும் படிக்க வைங்க சார்!! என்று கோபமாக பொரிய ஆரம்பித்திருந்த ஆசிரியையை தடுத்து நிறுத்தும் பொருட்டு உள்ளே நுழைந்தாள் செல்வி.

அதற்குள்ளாக அங்கு மாணவனுடன் கம்பீரமாக நின்று கொண்டிருந்த ஒருவன் கோபமாக, "மேடம்! நான் இவன் பெயில் ஆனா கூட கவலைப்படமாட்டேன். இவனுக்கு கல்வி அவசியம் தான். அவன் அறிவுக்கு எட்டியவரை அவன் படித்தால் போதும்.” என்றவன் தொடர்ந்து,

ஒரே ஒரு வேண்டுகோள் மேடம். பசங்க முன்னாடி அவங்க தன்னம்பிக்கை வளர்கிற மாதிரி பேசுங்க. இப்படி தன்னம்பிக்கை குறையிற மாதிரி பேசினா எப்படி மேடம் குழந்தைங்க முன்னேறுவாங்க? சொல்லுங்க மேடம் உங்க ஆறாம் வகுப்புல நீங்க எல்லா சப்ஜெக்ட்ஸ் லேயும் நூத்துக்கு நூறு தான் வாங்கினீங்களா? நான் எல்லாம் அப்படி வாங்கல. 3 சப்ஜெக்ட்ஸ் ல பெயில். பட் காலேஜ்ல படிக்கும் போது யூனிவர்சிட்டி கோல்டுமேடலிஸ்ட். குழந்தைகளை படிக்க அனுப்பறதே” என்று சொல்லிக்கொண்டிருந்தவனை “சாரி சார்!!” என்று இடையிட்டாள் திருநிறைச்செல்வி.
 
உங்களுடைய "உன் கோபங்கள்
சுகமா"-ங்கிற அழகான அருமையான
புதிய லவ்லி நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
சத்யாஸ்ரீராம் டியர்
 
Last edited:
மிகவும் அருமையான பதிவு,
சத்யாஸ்ரீராம் டியர்
 
Last edited:
Top