Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கோகுலத்தில் ராமன்! -06

Advertisement

பிரியா மோகன்

Tamil Novel Writer
The Writers Crew
அத்தியாயம் ஆறு

‘உங்க மருமகன் நான் தான்’ என காண்டீபன் உறுதியாய் சொன்னதில் அதிர்ந்து போய் மயங்கி விழுந்த சுசீலாவின் மயக்கம் தெளிவதற்குள் மாணிக்கம் பல நூறு நன்றிகளை காணிக்கையாய் செலுத்தி கல்யாணத்தை உறுதிப்படுத்திவிட்டு, அடுத்து வரும் முகூர்த்தத்திலேயே பச்சைமலை கோவிலில் திருமணத்தை வைத்துக்கொள்ளலாம் என்பது வரை பேசி முடித்துவிட்டிருந்தார்.



அவளது சம்மதமோ, விருப்பமின்மையோ அவ்விடம் எடுபடவில்லை. ஒண்டிவீரரிடம் நன்றிப்பெருக்குடன் விடைபெற்று மாணிக்கம் தன் குடும்பத்துடன் வெளியேற, தன் வழியில் இருந்த தடங்கல் தகர்ந்து விட்டதில் ஆசுவாசப்பட்ட காண்டீபன், ஒண்டிவீரரை கவனிக்கத்தவறினான்.



“சிவகாமி! கல்யாணத்துக்கு என்ன என்ன செய்யணும்? நேரம், தேதி இது சம்பந்தமா என்ன முடிவெடுக்கனும்ன்னாலும் காண்டீபன் கிட்டயே பேசிக்க சொல்லிடு! தலை நரைச்சு வீட்ல இருந்தா மரியாதையெல்லாம் எதிர்ப்பார்க்கக் கூடாது” என்றவர் துண்டை உதறி தோளில் போட்டுக்கொண்டு ஊஞ்சலை விட்டு எழுந்துக்கொள்ள, “என்ன தாத்தா இது?” என பதறினான் இன்பன்.



“உண்மையை தானே டா சொல்றேன்?” என்றவர் தன் அறைக்குள் செல்ல போக, காண்டீபன், “தாத்தா, சாரி... கோச்சுக்காதீங்க!! அவர் மனசு வருந்தி பேசுனப்போ எனக்கு என்ன செய்யுறதுன்னு தெரியல, அதான் அப்படி சொன்னேன்! என் முடிவுல உங்களுக்கும் சம்மதம் இருக்கும்ன்னு நினைச்சேன்!” என்றான் தவிப்பாய். அந்த வீட்டில் எந்த ஒரு முடிவும் குடும்பமாய் கலந்தாலோசித்து இறுதியாய் ஒண்டிவீரர் மூலமாகவே வெளிவரும். இரு மாதங்கள் முன்பு வரை அப்படிதான்!!



“இல்லப்பா விடு! தலைக்கு உசந்து பசங்க வளர்ந்துட்டீங்க! இதுக்குமேலையும் கிழவன் நாட்டாமை செய்யணும்ன்னு நினைச்சா முடியுமா?” என்றிட,



“ஏன் தாத்தா இப்படியெல்லாம் பேசுறீங்க? உங்களுக்கு தெரியாம நாங்க இதுவரை என்ன செஞ்சுருக்கோம்?” என்றான் பேரின்பன்.



அவன் கேட்டதற்கு ஒண்டிவீரர் அவனை பார்த்த ஒரு பார்வை சொல்லியது, ‘எனக்கு தெரிந்து தான் எல்லாம் நடக்கிறதா என்று?’ அந்த பார்வைக்கு பதில் சொல்ல முடியாமல் தலை குனிந்துக்கொண்டான் அவன்.



சிவகாமியோ தங்கமோ இந்த பேச்சின் குறுக்கே வரவில்லை. காண்டீபன் சுயேட்சையாய் எடுத்துள்ள முடிவில் அவர்கள் விருப்பத்தையும் தாண்டி, ‘தங்களிடம் கலந்து பேசாமல் பேசிவிட்டானே?’ என்ற ஆதங்கம் இருந்தது.



“தாத்தா! தப்பா நினைக்காதீங்க தாத்தா!” காண்டீபன் இறைஞ்சலாய் சொல்ல, “இந்த வீட்ல கடைசியா நடந்தது தங்கத்தோட கல்யாணம் தான்!! அதுல விழுந்த அடி இன்னும் யார் மனசை விட்டும் போகல! அந்த அடி நிரந்தரமா மறந்து போற அளவுக்கு என் பேரனுங்க கல்யாணத்தை ஜாம் ஜாம்ன்னு நடத்தனும்ன்னு கனவு கண்டேன்...

ஒருத்தன் கல்யாணம் இன்னும் ஊருக்கே சொல்லாம இருக்கு, இதோ என் கடைசி பேரனுக்கும் அவசர அவசரமா கோவில்ல வச்சு நடக்க போகுது!!” என்றவர், விரக்தியாய், “இந்த வீட்டுக்கும் கல்யாணத்துக்கும் ராசியே இல்ல போல!!!” என்றார்.



என்ன சொல்லி சமாதானம் செய்வது என்றே விளங்கவில்லை அண்ணன் தம்பி இருவருக்கும். அவர் மனதை புண்ப்படுத்தும்படி நடந்துகொண்டோம் என்பது மட்டும் நன்றாய் விளங்கியது.



வீடே மௌனித்து நிற்க, “உனக்கு கல்யாணம் நடக்கிறது எங்களுக்கு சந்தோஷம் தான்ப்பா!! ஆனா முக்கியமான சில முடிவு எடுக்கும்போது பெரியவங்ககிட்ட முன்கூட்டியே ஒரு வார்த்தை சொல்லணும்! இது நான் சொல்லிதான் உனக்கு தெரியணும்ன்னு இல்லை!!” என்றார் ஒண்டிவீரர்.



அதன்பின் அவர் தன் அறைக்கு சென்றுவிட, மற்றவரும் தங்கள் அலுவல்களை பார்க்க நகர்ந்துவிட்டனர்.

‘அண்ணனுக்கு பேசிய பெண்ணை தம்பிக்கு எப்படி?’ என நெஞ்சில் உறுத்தினாலும் காண்டீபனே அதை பற்றி பேசாதபோது தாமாய் பேசி குழப்பிக்கொள்ள வேண்டாம் என விட்டுவிட்டனர்.



காண்டீபனிடம், “சுசீலாவை நான் காதலிக்குறேன்னு சொல்லி கல்யாணம் பேச கடைசி வரைக்கும் வாய் வரலைல உனக்கு?” என்ற கோகிலா, இன்பனின் காதுப்பட, “அண்ணனுக்கும் தம்பிக்கும் தான் உண்மையை சொல்ற வழக்கமே கிடையாதே!!” என்றாள் குத்தலாய்.



ரவு வேலை முடிந்து வீடு வந்த சத்தியராஜன் இந்த திடீர் திருமண பேச்சை அறிந்து ‘தாம் தூம்’ என குதித்தார்.



‘என் பையனுக்கு நான் எப்பேர்ப்பட்ட பொண்ணு பார்க்கனும்ன்னு இருந்தேன் தெரியுமா? ஒருத்தனுக்கு பேசி வச்சதை தான் என் புள்ளைக்கு கைமாத்தி விடணுமா?’ என்று குதிக்க, “அவளை தவிர வேற யாரையும் நான் கட்டிக்க மாட்டேன்ப்பா. அதுக்கு மேல உங்க இஷ்டம்” என்று ஒரே போடாய் போட்டு விட்டான் காண்டீபன்.



சத்தியராஜின் மனது ஆறவே இல்லை. ஒன்றும் இல்லாத பேரின்பனுக்கு கண்ணில் ஒத்திக்கொள்ளும் அழகில், மெத்த படித்த பெண் கிடைக்க, ராஜா வீட்டு கண்ணுக்குட்டியான தன் மகனுக்கு அவன் அழகில் பாதி கூட வராத, அதிலும் காலேஜ் படிப்பின் தொடக்கத்தில் இருக்கும் ஒருத்தி மனைவியாய் வர அமைவது அவருக்கு கிஞ்சித்தும் உவப்பாய் இல்லை. காண்டீபனின் பிடிவாதம் வேறு வழியின்றி அவரை தலையசைக்க வைத்தது.



இதில் அவர் முழுவதுமாய் மறந்து போனது, பேரின்பனும் தன்னுடைய மகன் தான் என்பதை..!!



ட்டியிருந்த புடவையை களைந்து இரவு உடைக்கு மாற நைட்டியை கையில் எடுத்த கோகிலாவுக்கு, அவளை மீறி உதடுகள் சிரிப்பில் துடித்தன. இந்த நைட்டியை இன்பனுக்கு போட்டு பார்த்தால் எப்படி இருக்கும் என தோன்ற, அவளால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை. முயன்றவரை சத்தமின்றி வாய்பொத்தி சிரித்தவளை,



“ரொம்ப சிரிக்காதடி! சட்டு புட்டுன்னு வேலையை பாரு, நானும் எவ்வளோ நேரம் தான் கண்ணாடிலையே கண்ணை வச்சுட்டு இருப்பேன்?” என இன்பன் சொன்னதும் ‘இவன் ஏன் கண்ணாடிய பார்க்குறான்?’ என எண்ணியபடி எட்டிப்பார்த்தவள் அதிர்ந்து போனாள்.



அறையின் ஓரத்தில் மரத்தடுப்பின் பின்னே நின்றிருப்பவளை பக்கவாட்டில் இருக்கும் ஆளுயர கண்ணாடி காட்டிகொடுக்க, ஜம்பமாய் பாயில் படுத்து காலாட்டிக்கொண்டே கண்ணாடியில் கண் பதித்திருக்கிறான் இன்பன்.



தடுப்பை விட்டு வெளியே வந்தவள் கடுப்புடன் நைட்டியை தூர வீசிவிட்டு கட்டிலில் படுத்துக்கொண்டாள்.



“நைட்டி போடலையா மூக்கிமா?” நல்லபிள்ளையாய் அவன் கேட்க, தலையணை பறந்து வந்து விழுந்தது அவன் முகத்தில்.

அதை அப்படியே இறுக்கி கட்டிகொண்டவன், “ஓகே மா, குட் நைட்” என கண்ணை மூடிக்கொண்டு ஐந்தே நிமிடத்தில் உறங்கியும் போனான்.



கோகிலாவுக்கு அவன் செய்கைகள் அத்தனையும் விசித்திரமாய் இருந்தது.



றுநாள் பொழுது புலர, எப்போதும் போல வயலை பார்வையிட சென்றுவிட்டார் சத்தியராஜன். ஒண்டிவீரர் முதல் நாள் கடை கணக்குகளை சரிப்பார்க்க, அதில் சில பக்கங்கள் சரிப்பார்க்கப்படாமல் அப்படியே இருந்தது.



‘எப்போதும் சத்தியா சரிப்பார்த்து கையெழுத்து போட்டு வைப்பானே? எப்படி இத்தனை பக்கத்தை பார்க்காம விட்டான்?’ என யோசித்தவர் காண்டீபன் சாப்பிட வந்தபோது அதை அவனிடம் கேட்க, அவனுக்குமே புரியவில்லை.



கடையில் கணக்குவழக்கு பார்க்கும் ஒருவருக்கும் போனில் தொடர்புக்கொண்டு கேட்டார் ஒண்டிவீரர்.



“அதெப்படி சத்தியாக்கிட்ட கையெழுத்து வாங்காம எனக்கு அனுப்பிருப்பீங்க? எப்பவும் செய்யுற பழக்கம் எதுக்கு மாறுது?” என அதட்ட,



“இல்லீங்கைய்யா! சின்னையா ரெண்டு மூணு நாளா மதியத்துக்கு மேல கடைல தங்குறது இல்லை! கடையடைக்குற நேரத்துக்கு தான் வராரு, அதான் கணக்கை சொல்லி ஒப்படைக்க முடியாம கொருசு நிக்குது!” என அவர் சொல்ல, இது அவர்களுக்கு புதிய தகவலாய் இருந்தது.



“கடைக்கு வராம எங்க போறான்?”



“பள்ளிப்பாளையம் பக்கம் ஏதோ வேலை இருக்குன்னு மூணு நா முன்னாடி சொல்லிட்டு போனாக, தினம் போறப்போ நான் கேட்குறது இல்லைங்கையா!” என்றார் அந்த சிப்பந்தி.



ஒண்டிவீரர் தகவலை காண்டீபனிடம் சொல்ல, “நான் மில்லு மில்லுன்னே இருக்கேன், நீங்க கொஞ்சநாளா கடை பக்கமே போறது இல்லை... அங்க என்ன என்ன நடக்குதோ? அப்பா புது ஆர்டர் எதுவும் எடுக்க பேசிட்டு இருக்காரோ என்னவோ?” என்றவனிடம், “சரிதான்” என தலையசைத்தார் ஒண்டிவீரர்.



இன்பனுக்கு அவர்கள் சம்பாஷனை கேட்டு கசப்பான முறுவலில் உதடு வளைந்தது.



அன்று ஒண்டிவீரரும் நகைக்கடைக்கு செல்வதாய் கிளம்ப, சிவகாமி வெகு உற்சாகமாய் அவருக்கு வேண்டியதை செய்தார்.



தங்கம் தயங்கி தயங்கி, “இன்பா, தோசை” என அவன் தட்டை நோக்கி கை நீட்ட, “வேண்டாம்” என்றான் தட்டையே பார்த்தபடி.



அதற்குமேல் அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. கண்கள் கலங்க, அவர் விசும்பல் ஒலியில் நிமிர்ந்து பார்த்த இன்பன், “அய்ய, அத்தே! எதுக்கு அழுகுறீங்க?” என்றான், இடக்கையால் அவர் கண்ணீரை துடைத்தபடி.



“பேசவே மாட்டேங்குறியேடா!!” விசும்பலோடு அவர் சொல்ல, மெலிதாய் சிரித்தவன், “இதுக்கா அழுகை?” என தோளோடு அணைத்துக்கொண்டான் தங்கத்தை.



“அது... உங்கமேல எனக்கு கோவம்!! அதான் பேசல” ‘ஒன்றும் இல்லை’ என பொய் சொல்லாது உள்ளதை உள்ளபடி சொன்னான் பேரின்பன்.



“ஏன்டா?”

“நான் வந்தப்போ எல்லாரும் என்னை திட்டுனீங்க, எங்க போனேனு கேட்டீங்க!! ஆனா யாருமே எனக்கு என்ன ஆச்சு? எப்படி இருக்கேன்னு கேக்கல! எல்லாரும் சரி! ஆனா நீங்க கூட கேட்கலையே? இதே என் அம்மாவா இருந்தா முதல்ல என் நலத்தை தானே கேட்டுருப்பா? அந்த கோவம் தான் எனக்கு உங்கமேல!! நீங்க என் அம்மாவா இருந்தும், கோகிலாவை மட்டும் தான் பார்த்தீங்க!!” என்று குறை சொல்ல, தங்கத்தின் அழுகை இன்னும் அதிகமானது.



பேச வந்த தங்கத்தை, பேச விடாமல், “நீங்க ஒன்னும் சொல்ல வேணாம்! கோகிலாவை பார்த்ததும் உங்களுக்கு பலவருஷம் முன்ன கல்யாணம் நின்னு, நிர்கதியா நின்ன உங்க நியாகபம் வந்துருக்கும்! அதுலயும் அவ தாலியை கலட்டி வீசுனதுல நீங்க ரொம்ப அபெக்ட் ஆகிட்டீங்க!! எல்லாம் புரியுது!! இதுக்கெல்லாம் நான்தான் காரணம்ன்னு உங்களுக்கு என்மேல வருத்தம்” என்றவன், மேற்கொண்டு பேசாது,

“உங்ககிட்ட கோவப்பட எனக்கு உரிமை இல்லையா என்ன? அதான் இப்போ சமாதானம் ஆகியாச்சே!!” என்று சிரித்தான்.



“என் தங்கம் அழுதா என் மனசே உடைஞ்சுடும்” அவர் தாடை பிடித்து கொஞ்சலாய் அவன் பேச, “ச்சீ, போடா! தடியா” என கண்ணை துடைத்துக்கொண்டு சிரித்தார் தங்கம்.



எட்டி நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த கோகிலா, “பேசியே கவுத்துடுவான்!! பிராடு!!” என செல்ல கோவத்துடன் தன்னவனை திட்டினாள்.



காண்டீபன் காரை கிளப்பிக்கொண்டு புதுப்பாடல் ஒன்றை ஹம்மிங் செய்தபடி உல்லாசமாய் சென்றுகொண்டிருந்தான். அவன் ‘காதல் தேவதை’யை தரிசிக்க போகும் உற்சாகம் அவனிடம்.



அவன் எதிர்ப்பார்த்து வந்தபடியே பேருந்து நிறுத்தத்தில் சக தோழிகளுடன் நின்றிருந்தாள் சுசீலா. சுற்றி நிற்கும் பெண்கள் சிரித்து சிரித்து ஏதோ பேச, அது எதுவும் இவான் காதுக்கு எட்டவில்லை.



சுசீலா மருந்துக்கும் சிரிப்பின்றி கோபமாய் நிற்பதை கண்டவன் காரிலேயே தேங்கிவிட்டான்.



"தயிர்சாதம், ரசகுல்லான்னு ஏதேதோ சொல்லிட்டு கடைசில எங்க ஹீரோவையே வளைச்சு போட்டுட்டியேடி" ஒருத்தி அங்கலாய்க்க சுசீலா முகம் அஷ்டகோணலாய் சுளித்தது.



"அவ ஆரம்பத்துல இருந்தே காண்டுக்கு தாண்டி ரூட்ட போட்டுருக்கா!! அதனால தான் சும்மா கிடந்த நம்மளை சுரண்டிவிட்டு பந்தயம்ங்குற பேருல நினைச்சதை சாதிச்சுப்புட்டாடி" இன்னொருத்தி சொல்ல சுசீக்கு அங்கே நிற்கக்கூட பிடிக்கவில்லை.



மாணிக்கத்தின் தயவில் ஊரின் முக்கால்வாசி சொந்தங்களுக்கு இன்பன் கோகிலா திடீர் திருமணத்தோடு காண்டீபன் சுசீலாவின் நிச்சயமும் தண்டோரா அடிக்கப்பட்டிருந்தது.



"அதெப்படிதானோ அண்ணன் பின்னாடி சுத்திட்டு தம்பியை கல்யாணம் கட்டிக்கிட்டு ஒரே வீட்ல மூஞ்சி பார்த்துக்க இருக்க முடியுமோ?!"



சுசீலாவின் மனதை மத்தாய் குடைந்துக்கொண்டிருக்கும் விசயத்தையே கேலி கலந்த புரளியாய் அவள் காதுப்படவே தோழி ஒருத்தி பேச, அதற்குமேல் அவளால் அங்கே நிற்க முடியவில்லை.



அவர்கள் அழைக்க அழைக்க நிற்காமல் விறுவிறுவென நடக்கதொடங்கிவிட்டாள் சாலையில். எதிர்ப்புறமாய் சாலையோரம் காரில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த காண்டீபன் சுசீலா கோவமாய் செல்வதை கண்டு வண்டியை மெதுவாய் செலுத்தி அவளை வழி மறித்தார்போல நிறுத்தினான்.



காரை கண்டதுமே அதில் இருப்பது யாரென கண்டுக்கொண்ட சுசீலாவுக்கு மூச்சு வாங்கியது.

‘இவன் எதுக்கு என்னை பார்க்க வரான்?’ பல்லிடுக்கில் அவள் திட்ட, தன் அத்தனை பற்களையும் அழகுக்காட்டி சிரித்தபடி வண்டியை விட்டு இறங்கி அவளை நோக்கி வந்தான் காண்டீபன்.



மற்ற நாளாய் இருந்திருந்தால், காண்டீபன் அகல சிரித்ததை கண்டு, ‘அதிசயமே அசந்து போகும், நீ எந்தன் அதிசயம்’ என்று ராகம் போட்டு மனதுக்குள் கிண்டலடித்திருப்பாள். இன்றோ அவன் சிரிப்பது ‘கட்டிவைக்காத எருமைமாடு பசும்புல்லை கண்டதும் பல்லிளித்துக்கொண்டு பாய்ந்து வருவதை’ போல தோன்ற, பின்னோக்கி வேகமாய் நடக்க திரும்பினாள்.



“ஹே சுசீ, நில்லு...!! நான் உன்னை பார்க்க தான் வந்தேன்!!” அவள் முன்னே தன் மரக்கிளை போன்ற கையை தடுப்பாய் நீட்டி நிறுத்தினான் காண்டீபன்.



அவனை நிமிர்ந்தும் பாராது, “சொல்லுங்க” என அவள் சொல்ல, ‘எப்படி பேசுவது? என்ன பேசுவது?’ என தெரியாதவன், ரொமேன்டிக்காய் ஆரம்பிப்போம் என யோசித்து, “அப்பறம், நேத்து நான் குடுத்ததுக்கு இன்னும் பதில் வரலையே?” என்றான் குழைவாய்.



“என்ன குடுத்தீங்க?” எரிச்சலாய் அவள் கேட்டதில், “அதுக்குள்ள மறந்து போற அளவுக்கா இருந்துச்சு, நான் குடுத்தது?” என்றான் பதில் கேள்வியாய். அவள் கடுப்பில் நிற்ப்பது இவனுக்கு எங்கே புரிகிறது?



“ப்ச்! தெரியலைங்க!!”

“என்னை பாரு, என்ன குடுத்தேன்னு தெரியும்!!” கள்ளசிரிப்போடு சொன்னவனை பார்க்க அவள் முயல கூட இல்லை.



“பாருன்னு சொல்றேன்ல!!” அவன் என்னவோ ஹஸ்க்கி வாய்சில் தான் பேசினான், ஆனால் அவளுக்கு தான் அது பித்தளை குண்டானுக்குள் தலையில் விட்டுக்கொண்டு பேசியதை போல பயங்கரமாய் ஒலிக்க, வெடுக்கென நிமிர்ந்தாள்.



அவள் பார்ப்பதற்க்கே காத்திருந்ததை போல முந்தினம் செய்த அதே வித்தையை(!?), அதுதான் அந்த பறக்கும் முத்தத்தை அவன் மந்தகாசமாய் பறக்கவிட, முந்தினம் போலவே மயங்கி விழுவாள் என எதிர்ப்பார்க்காவிட்டாலும், அவளிடம் இருந்து வெட்கத்தலைகுனிவை எதிர்ப்பார்த்தவனுக்கு,

“ச்சீ!! ஏன் இப்படி பொறுக்கி மாதிரி நடந்துக்குறீங்க? நான் பின்னாடியே சுத்தி சுத்தி வந்தபோக்கூட உங்க அண்ணன் என்கிட்டே ஒரு வார்த்தை தப்பா பேசுனதில்லை! நீங்க மட்டும் ஏன் இப்படி நடந்துக்குறீங்க? நேத்துக்கூட இப்படிதான் செஞ்சீங்க?” என அவள் மூக்கை உரிய, ரெமோ போய் அந்நியன் வந்தது டும் டும் டும்!!!



“ஏய்... நிறுத்துடி!! நான் பொறுக்கி, அவன் யோக்கியனா? இனி ஒருமுறை அவனை பத்தி என்கிட்டே பேசுன இருக்குற பல்லு இல்லாம போய்டும் பார்த்துக்க!!” என்று சீறினான் காண்டீபன்.



அவன் கோவம் கிலியை உண்டாக்கினாலும், “உங்களுக்கு கை ஓங்குறதை தவிர வேற என்ன தெரியும்?” என முகத்தை திருப்பினாள் சுசீலா.



“ஆமாண்டி! எனக்கு அடிக்க மட்டும் தான் தெரியும்!! நான் காட்டான் தான்!! இப்போ என்ன அதுக்கு?” அவன் கோவம் இன்னும் ஏறியது. மனதுக்குள்ளேயே ரசித்து ரசித்து வருடக்கணக்கில் காதலித்த பெண், தன்னைத்தாண்டி வேறொருவனை பெருமிதமாய் பேசுகையில் அதை இயல்பாய் கையாள அவனுக்கு வரவில்லை.



அவள் உதடுகள், ‘பெருசா ஒத்துக்கிட்டான் விருமாண்டி’ என முணுமுணுத்தது.



“என்னடி? என்ன முணுமுணுக்குற?” அதற்க்கும் அவன் கத்த, “சும்மா ‘டி’ ‘டி’-ன்னு பேசாதீங்க! எனக்கு பிடிக்காது!!” தைரியமாய் அவள் சொல்லிவிட, “ஹோ!! அப்போ கண்டிப்பா.... அப்படிதாண்டி, கூப்புடுவேண்டி! என்னடி செய்வ?” வார்த்தைக்கு ஒரு ‘டி’ போட்டு சிறுகுழந்தையென முறுக்கிக்கொண்டு நின்றான் காண்டீபன்.



“ச்சை! வெள்ளைக்காரன் நிறத்துல காட்டுமிராண்டி! காட்டான் காட்டான்...!!” சுசீலா முணுமுணுத்தது அரைகுறையாய் அவன் காதை அடைய, “நான் எந்த அளவுக்கு காட்டுமிராண்டின்னு கல்யாணம் முடியட்டும், ஒரு காட்டு காட்டுறேன்!!” என்றான் விஷமமாய்.



அவள் பார்வையில் முகம் சுருக்கியவள், “ச்சீ!!” என்றதோடு நகர்ந்து போக, “அரைகாப்படி சைஸ்ல இருந்துக்கிட்டு பேச்சை பாரு பேச்சை!!” என இவன் பல்லைக்கடித்தால், “காண்டாமிருகம் கணக்கா இருந்துக்கிட்டு இவனுக்கு நான் கேக்குது, ச்சை!!” என புலம்பிக்கொண்டே சென்றாள் சுசீலா.



“அரைக்காப்படி...”

“காண்டாமிருகம்”

வந்தபோது இருந்த உல்லாச மனநிலை உல்ட்டாவாகி போக, உர்ராங்கொட்டானின் உறவினனாய் பழைய நிலைக்கு மாறி, மில்லை நோக்கி காரை செலுத்தினான் காண்டீபன்.



-வருவான்...
 
ண்ணா சத்தியராஜ் ண்ணா
பள்ளிபாளையம் பக்கம் உங்களுக்கு என்னங்கண்ணா வேலை?
அண்ணன் சத்தியராஜின் அனைத்து விவரங்களும் மூத்த மவன் பிலாசப்பி புரொபஸர் கையில் இருக்கும் போலவே
எதுக்கு அந்த கசந்த முறுவல், இன்பன்?
வாட்டு மேட்டரு, மிஸ்டர் எம் ஏ?
 
Last edited:
Hi
சத்யராஜ் ஏதோ திருட்டு வேலை செய்றாரா????
இன்பனுக்கு தெரிஞ்சிருக்கு.
காண்டு ரொம்ப பேசுறானே..
வாய திறந்தா காத்து தான் வருதுன்னு இருந்துட்டு
இப்ப டி போட்டு பேசுறான்..
 
Last edited:
Satya kitta etho thappu irukku .. inoru family iruko.. superb epi sis . Kandeepan &suseeku elamporutham a irukku.
Athukaga urankutaanga lam solla kootathu
 
Top