Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலாகி காதல் செய்வோமே 11

Advertisement

lekha_1

Active member
Member
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்...

இதோ அடுத்த பகுதி. சென்ற எபிக்கு லைக்ஸ் அண்ட் கமெண்ட்ஸ் செய்த அனைவருக்கும் நன்றி...


காதல் 11

1235


“சே! இப்படியாடா அவகிட்ட ஒளரி வைப்ப? இப்போ என்ன நெனச்சுட்டு இருக்காளோ? பேசாம விடிஞ்சதும் அவகிட்ட போய் பேசிப்பார்க்கலாமா?” என்று தனக்குள்ளே பேசியவாறு அந்த ஹோட்டல் அறையை அளந்துகொண்டிருந்தான் முகில்.

அவன் அவ்வாறு கூறியதும் காலை கட் செய்தவள் தான். அதன்பின் அவன் எத்தனை முறை முயற்சித்து பார்த்தும் எடுக்கவேயில்லை. அதனால் அவள் தானே இந்த செய்தியை கசிய விட்டிருப்போம் என்று முடிவெடுத்துவிட்டாளோ என்றே நினைத்துவிட்டான். ஆனால், அதனை அவளிடம் கேட்பதற்கும் அவள் பேசினால் தானே முடியும்?

இங்கே இவனை இப்படி பதட்டப்பட வைத்தவள் என்ன செய்கிறான் என்று கொஞ்சம் அங்கே ஜம்ப் செய்து பார்ப்போமா?

முகில் அவ்வாறு கூறியதும் என்ன செய்வதென்று புரியாமல் அழைப்பை துண்டித்துவிட்டவளுக்கு அதன்பின்பு மெல்ல ஒரு சிறுபுன்னகை உதித்தது. அதுவரை அவர்கள் இடையே இருப்பது வெறும் நட்பு மட்டுமே என்று நினைத்திருந்தவளுக்கு அவன் சொன்ன செய்தியின் மகிழ்ச்சியில் கூத்தாடும் மனதை உணர்ந்ததுமே புரிந்துவிட்டது, அதில் அவன் எப்போதோ சிம்மாசனமிட்டுவிட்டான் என.

அந்த உணர்வினை அனுபவித்தவாறு கட்டிலில் வீழ்ந்தவள், கண்களை திறந்துவைத்தே கனவுலகில் மூழ்கிப்போனாள். இது அறியாதவனோ, அவள் நிலை அறிய எண்ணி விடாமல் அழைத்துக்கொண்டிருந்தான்.

இவர்களுக்காக பகலவனின் இயக்கத்தை நிறுத்தி வைக்க முடியுமா? அவன் செவ்வனே தன் வேலையை செய்தான்.

வெளியே இருந்து தாயின் குரல் கேட்க, அதுவரை தன் உலகில் இருந்து வெளிவராதவள், சிறிது அவரை திட்டிக்கொண்டே தன்னை சுத்தப்படுத்தி வந்தாள்.

சோஃபாவில் அமர்ந்து அவர் அளித்த பானத்தை கைகளில் வைத்து க்ளோஸ்அப் விளம்பரத்திற்கும் க்ரீன்டீ விளம்பரத்திற்கும் அட் அ டைமில் மாடலாக இயங்கியவள் நல்லவேளையாக யார் கருத்தையும் கவரவில்லை.

‘இனி இது தேறாத கேஸ்’ என்று யோசித்தோ என்னமோ, விதி அவள் தந்தையை அனுப்பி வைத்தது. அவர், அவள் தோளை தட்டி, “அனி, குடிச்சுட்டு ஆபிஸ் ரூமுக்கு வா. ஒரு முக்கியமான விஷயம் பேசனும்” என்று கூற, அதில் சுயநினைவடைந்தவளுக்கு தானாகவே சிறிது நடுக்கம் ஏற்பட்டது. ‘ஒருவேளை, முகில் என்னிடம் சொன்னது அவருக்கு தெரிந்துவிட்டதோ?’ என யோசித்தவாறே அவர் அறையை நோக்கி சிறிது நேரத்தில் வந்து சேர்ந்தாள்.

அலுவலக அறைக்குள் அவள் நுழைந்ததும் அதனை தாளிட்டவர், அவளை அழைத்து வந்து அங்கிருந்த சோஃபாவில் அமரவைத்து தானும் எதிரே அமர்ந்தார்.

கூர்விழிகளால் அவளை துளைத்துக்கொண்டே, “அனி, அப்பா ஒன்னு கேட்பேன். நீ உண்மைய சொல்லுவியா?” என கேட்டார்.

‘என்னத்த கேட்கப்போறாரோ?’ என்னும் பயம் இருந்தாலும், அதனை வெளிக்காட்டாமல் மறைக்கிறேன் பேர்வழி என்ற பெயரில் போஸ்டர் அடித்து ஒட்டியவாறே, “கேளுங்கப்பா” என்றாள்.

“நீ யாரையாவது லவ் பண்றியா?” என்று அவர் கேட்க, சரேலென்று அவரை பார்க்க நினைத்த தலையை தட்டி அமரவைத்தவள், “இல்லப்பா” என்றாள். அவள் முன் அவர் தனது கைப்பேசியை நீட்ட, அதனை பார்க்காமலேயே தெரிந்தது அது என்னவென்று.

“இதற்கு என்னம்மா அர்த்தம்?”

“அப்பா…” என்று அவள் தழுதழுக்க, அவளை கைநீட்டி தடுத்தவர், “நான் உன்ன நம்பாம இத கேட்கல. உனக்கு உன் வாழ்க்கையை தேர்ந்தெடுக்கற உரிமைய நான் குடுத்திருக்கேன். அது நீ எப்போதும் நான் கொடுத்த சுதந்திரத்த சரியான வழியில பயன்படுத்திப்பன்னு எண்ணித்தான். ஆனால், இப்போ இத பார்க்கும்போது நான் செஞ்சது தப்போன்னு தோணுது. நீ உன் தொழில் இதுதான்னு வந்து நின்னப்போவே எல்லாரும் என்னென்ன சொன்னாங்கன்னு. இப்போ இதை எல்லாம் பார்த்தால் அவங்க என்னென்ன சொல்வாங்க?” என்க,

எழுந்து அவர் அருகில் சென்று அமர்ந்தவள், “நான் உங்க பொண்ணுப்பா. தப்பா ஏதாவது செய்வேன்னு நீங்க நினைக்கிறீங்களா? பப்ளிக் ஃபிகர்ன்னா இப்படிதான் யாரோட பேசறாங்க, எதுக்காகன்னு எதுவுமே தெரியாம ஒரு செய்தி கெடச்சதுடான்னு எடுத்து போட்ருவாங்க” என்று அவள் கூற,

“அந்த பப்ளிக் ஃபிகர் கூட நீ எப்படி வந்த?” என கேட்டார்.

“அவன் எனக்கு நேத்து சர்ப்ரைஸா கண்சர்ட் டிக்கெட் வாங்கி கூட்டிட்டு போனான்ப்பா. எனக்காக இவ்வளவு மெனக்கெட்டு வந்தவன எப்படிப்பா நோகடிக்கமுடியும்? உங்ககிட்ட ஆல்ரெடி சொல்லிருக்கேன் தான அவன் என் ஃப்ரெண்டுன்னு?”

“அவன் உன் ஃப்ரெண்டுன்னு நீ சொன்னப்போ ஏதோ ஹாய், பை பழக்கமாகவோ இல்ல, அப்பப்போ அஃபிஷியலா பேசுவியே அப்படி இருக்கும்னு மட்டும் தான் நெனச்சேன். ஆனால், இப்படி நைட் தனியா வெளிய சுத்துற அளவுக்கு இருக்கும்னு நான் நெனைக்கலம்மா. என் பொண்ணு லைஃப்ல என்ன நடக்குதுன்னு இப்படி எஃப்.பி. பார்த்து தெரிஞ்சுச்ச வேண்டிய நிலைமைல இருக்கேனே” என்று அவர் கழிவிரக்கத்தில் கூறும்போது அவள் தலை தன்னால் தாழ்ந்தது.

அவர் கூறுவதும் உண்மைதானே! அவளைச் சுற்றி இருக்கும் சிலர் அனைவருக்கும் நன்கு பரிச்சயமானவர்கள் தான். அதுவும் அவள் யூட்யூப் சேனல் ஆரம்பித்தபிறகு சில இசைப் பிரபலங்களின் பரிச்சயம் அவளுக்கு நடந்திருக்கிறது. யாராக இருந்தாலும், அதுவும் ஆடவர்கள் என்றால் அவர்களுடன் மாலை நேரத்திற்குப் பின் தனியாக செல்லாதவள், அவனுடன் மட்டும் எவ்வாறு சென்றாள்?

இவள் யோசனையை கலைக்கும் விதமாக மேலும் பேசிக்கொண்டே சென்றார் அவர்.

“அவன் பெரிய ஸ்டார்ம்மா. இன்னும் பேரும் புகழோட வருவான். விளையாட ஆரம்பித்த கொஞ்ச நாள்லயே அவன் ட்ரைலரை காமிச்சிட்டான். இப்படி இருக்கவனுக்கு இந்த மாதிரி நியூஸ் எல்லாம் ஒன்னுமே இல்ல. அது அவங்க இமேஜ் ஏறுவதற்கு உதவும்னு அப்படியே விட்டுட்டு போய்டுவாங்க. இன்னைக்கு நீ, நாளைக்கு யாரோ? ஆனால், நமக்கு அப்படியா? அதுவும், நம்ம சொந்தக்காரங்கள பத்தி உனக்கு நல்லாவே தெரியும். உன் பாட்டி போதும். நாம எல்லாம் மிடில் க்ளாஸ். எங்கெங்க இருந்து எப்படியெல்லாமோ கேள்வி கேட்பாங்க. அத்தனைக்கும் நாம பதில் சொல்லித்தான் ஆகனும். என்னதான் தொழிலுக்காக வேற நாட்டுக்கு வந்திருந்தாலும், நம்ம வேர் இருக்கற இடத்தை மறக்கக்கூடாது, அதோட கலாச்சாரத்தையும். அவன் உனக்கு சரிபட்டு வருவான்னு எனக்கு தோணலம்மா” என்றார்.

அவர் சொல்வதற்கான பதில் அவளிடம் இருக்கிறதுதான். ஆனால், அதனை அவள் மட்டும் கூறினால் போதுமா? முதலில் அவள் நினைப்பது சரிதானா? அவன் நேற்று கூறிய ‘சேர்ந்து’ என்ற சொல்லின் அர்த்தம் உயிர் உள்ள வரையா? அல்லது காதல் உள்ள வரையா? அவள் பார்த்து வளர்ந்த கலாச்சாரத்தில் அவன் கூறியதை எவ்விதம் எடுத்துக்கொள்ள என்பதே புரியவில்லை. மண்டையை தட்டி யோசித்துப்பார்த்ததில் அவன் காதலிக்கிறேன் என கூறவே இல்லை என்பது மட்டும் புரிந்தது.

அவன் எண்ணம் பற்றியே இன்னும் முழுதாக தெளியாத பேதையவள் என்னவென்று சொல்வாள் தகப்பனிடம்? இப்போது அவரை தனது அரிய! கண்டுபிடிப்பை கூறி குழப்புவதைவிட, அவர் வருத்தத்தைக் களைவதே முதலாகப்பட, அவர் கைகளை தனக்குள் வைத்து,

“இல்லப்பா… அவன் அப்படியெல்லாம் இல்ல. நல்ல பையன்ப்பா அவன். ஒரு பையன் ஒரு பொண்ணுகிட்ட பழகுற விதத்த வெச்சே சொல்லிடலாம்ப்பா அவன் எப்படின்னு. ஆனால், அதற்கும் முதலில் உங்களுக்கு ஒன்னு தெளிவா சொல்லிடறேன்ப்பா. அவனுக்கும் எனக்கும் நடுவுல எதுவுமே இல்லப்பா. ஒருவேளை, அப்படி ஏதாவது இருந்தாலும், கண்டிப்பா மத்தவங்க வந்து உங்ககிட்ட சொல்றமாதிரி வைக்க மாட்டேன்ப்பா. நானே உங்க முன்னால் வந்து நிப்பேன், அவனோட. மூனாவது மனுஷங்க என்ன சொல்றாங்கன்னு கேட்டுட்டு இருக்க மாட்டேன்ப்பா. ஏன்னா, எனக்கு தெரியும், அவன் ரொம்ப நல்ல பையன்னு” என்றவள், அவர் கண்களை நோக்கினாள்.

அவள் கைகளை மெதுவாக விலக்கியவர், “காதல் எல்லோர் சம்மதத்தோடு நிறைவேறுனா மட்டுமே நமக்கு மனநிறைவு கிடைக்கும்மா. இல்லைன்னா, அந்த நிமிஷம் சந்தோஷம் இருந்தாலும், நாளாக ஆக நம்மை விலக்கிவைத்தவங்க நினைவு தான் அதிகமா வரும். அப்போ நாம வேணும்னு தேடின காதல் பக்கதிலேயே இருந்தாலும் நம்மாள முழுமையான மகிழ்ச்சியை அனுபவிக்க முடியாது. நான் காதலுக்கு எதிரி இல்லை. நீ யாரை அழைத்துவந்து இவன்தான் எனக்கு வேணும்னு சொன்னா, அவன் நல்லவனா இருக்கும் பட்சத்தில் கண்டிப்பா உனக்கு நான் சப்போர்ட்டா இருப்பேன். ஆனால், வீட்டில் பெரியவங்க வேண்டாம்னு சொல்லும்போது கண்டிப்பா அதை மீறி என்னால் எதுவும் செய்ய முடியாது” என்று அவர் கூறவும், அது புரிந்தவள், சிரித்தவாறே,

“ஏன்ப்பா, இன்னும் மழையே பெய்யல, அதற்குள்ள அணை உடைவதைப் பற்றி பேசறீங்களே?” என்று கேட்க,

“மழை பெய்வதற்கு முன்னாலே அணையை சரி செஞ்சா தான்ம்மா உடையாம காப்பாத்தமுடியும்” என்று அவள் தலையில் கைவைத்து அழுத்திவிட்டு அந்த அறையை விட்டு வெளியேறினார்.

தந்தை வெளியேறியதும் அவர் அவளுக்கு கோடிட்டு காட்டிய விடயம் புரிய, அப்போதுதான் அவளுக்கு இரண்டு தெளிவாகப் புரிந்தது. ஒன்று, முகிலின் நடத்தை பற்றி சிறிது நேரத்திற்கு முன் தனக்குள் கேள்வியெழுப்பியவள், தந்தை அவனைப் பற்றி அதையே கேட்டபோது அவனுக்கு ஆதரவளித்திருக்கிறாள். இதிலிருந்து தெரியவருவது, தந்தையே ஆனாலும் அவரிடம், அவளால் முகிலை விட்டுக்கொடுக்க இயலவில்லை. இரண்டாவது முகிலுக்கு அவள் மேல் உள்ளது காதலென்றால், அவளும் அவனை காதலிக்கும் பட்சத்தில், அவர்கள் இருவரும் இருவீட்டாரின் சம்மதம் பெற மிகவும் மெனக்கெடவேண்டும். இதனை நினைக்கும்போதே அவளுக்கு சிரிப்பு வந்தது. ‘இன்னும் கொழந்தையே பொறக்கல. அதுக்குள்ள பேரு வைக்கறியேடி’ என்று தன்னைத் தானே திட்டிக்கொண்டவள், அன்றைய அலுவலை பார்க்க சென்றாள்.


******

மறுநாள் மும்பை விமான நிலையத்தை விட்டு வெளியேறிய முகிலை பத்திரிக்கையாளர்கள் கூட்டம் சூழ்ந்துகொண்டது. ‘அடேய் சந்தோஷ், ஜாலியா ரெண்டு நாள் தங்கிட்டு வரேன்னு என்னை மாட்டி விட்டுட்டியே! சரி, முடிந்தவரை சமாளிப்போம்’ என நினைத்தவன், அவர்களை எதிர்கொண்டான்.

“சார்… நீங்க திடீரென்று ஆஸ்திரேலியா சென்ற காரணம் என்ன?” என்று ஒரு நிருபர் கேள்வி கேட்க, அதனை எதிர்கொண்டவன்,

“என் ஃப்ரெண்டுக்கு அங்க ஒரு வேலை இருந்தது. சோ, ஒரு சேஞ்சுக்கு அவனோட நானும் போனேன்” என்றான்.

“அது கேர்ள்ஃப்ரெண்ட் சார்?” என்று மற்றொரு நிருபர் கேட்க,

சிரித்தவன், “இல்லை” என்று மட்டும் சொன்னான்.

“உங்கள அங்க ஒரு பொண்ணோட பார்த்ததா ஒரு தகவல் வந்ததே சார்?” என்று மற்றவர் கேட்க,

“ஓ… அந்த ஃபோட்டோவா? யாரு பாஸ் அந்த பொண்ணு? ரெண்டு நாளா அது தான ஷேரிங்ல டாப்-ல இருக்கு. யார் எடுத்தாங்களோ, கேப்பை கழட்டிட்டு எடுக்க சொல்லியிருக்கலாம்” என்றான்.

“வழக்கமா எல்லாரும் சொல்றாப்போல அது நீங்க இல்லைன்னு சொல்லப்போறீங்களா சார்?” என்று ஒருவர் நக்கலாக கேட்க,

“நீங்களே சொல்லிட்டீங்க, வழக்கமா சொல்றதுன்னு. இருந்தாலும் உண்மைய தான சொல்ல முடியும்? அது நான் இல்ல” என்றவன், அங்கிருந்து நகரப்போக,

“அப்போ அன்றைய நைட் எங்க இருந்தீங்க சார்?” என்று விடாது கேள்வி கேட்டான் மற்றையவன்.

அவனை திரும்பிப் பார்த்தவன், “அது என்னோட இண்ஸ்டாவை பார்த்தாலே தெரியுமே பாஸ்… நீங்க இன்னுமா பார்க்கல? அஸ் அ ஜார்னலிஸ்ட், நீங்க அப்டேட்டடா இருக்கனும் இல்ல?” என்றுவிட்டு அங்கிருந்து வெளியேறினான்.

உடனே அனைவரும் அவன் இண்ஸ்டாகிராம் பக்கத்தை திறக்க, அதில் ஒரு பிரபல ஆஸ்திரேலிய வீரரின் குழந்தையை கொஞ்சுவதைப் போல ஒரு போஸ்டைப் போட்டு, ‘இந்த தேவதையுடன் இருந்தால் நாட்களும் மணித்துளிகள் தான்!’ என்று போட்டிருந்தான். அதில் மொத்த குடும்பமும் இருக்க, சந்தோஷும் உடனிருந்தான். அந்த நண்பன் சந்தோஷ் என்பதை அறிந்தவர்களுக்கு அவன் அந்த ஊரில் தொழில் செய்வதும் தெரியும் என்பதால், வெறும் வாயை மெல்ல வேண்டிய தங்கள் நிலையை எண்ணி நொந்தபடி கலைந்து சென்றனர்.

காரில் ஏறிய முகில், ‘எப்படியோ அவங்கள சமாளிச்சாச்சு!’ என்று நினைத்தவன், சந்தோஷிற்கும் அந்த வீரருக்கும் நன்றி கூறிவிட்டு தன் வீட்டிற்கு சென்றான்.


*****

முகிலின் பேட்டியால் மொத்தமாக அனைத்தும் அடங்கவில்லை எனினும், பெரும்பகுதி அணைந்துவிட்டது. அதனால் நிம்மதிப்பெருமூச்சு விட்டது இருவரும்தான்.

அனிலா அவன் தன்னை யாரென்று தெரியாது என்று சொன்னதற்கு அவனை வறுத்தெடுத்துவிட்டாலும், தன் பெயர் கெடக்கூடாது என்று அவன் இவ்வாறு கூறியதாக சொன்னதும் மன்னித்துவிட்டாள். இவ்விடயம் அவள் பாட்டிக்கு தெரியாததால் அவர் எப்போதும்போலவே இருந்தார். இல்லையெனில் இந்நேரம் அவர்கள் இருவரையும் திட்டி திட்டியே இரத்த அழுத்தம் வந்து மருத்துவமனையில் படுத்திருப்பார்.

புகழின் வீட்டில் அவன் ஊரில் அடைக்காமல் விட்ட ஓட்டைவாய் ஒளரிவைக்க, அதனை வதந்தி என்று முடித்துவிட்டான். அனிலாவின் விடை தெரியாமல் பெற்றோரின் மனதில் எந்தவொரு எதிர்பார்ப்பையும் விளைவிக்க அவன் விரும்பவில்லை. அவர்கள் அவன் தேர்வை ஏற்றுக்கொள்வார்கள் என்பதில் அத்தனை நம்பிக்கை அவனுக்கு. அவ்வாறே அவர்கள் மறுத்தாலும், அனிலாவின் குணம் கண்டு மாறிவிடுவார்கள் என்று எண்ணினான் அவன்.

நினைத்ததெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை! அவன் தங்கள் காதலில் எத்தகைய பிரச்சனைகள் வரும், அதனை எவ்வாறு தீர்க்க வேண்டும் என்று இங்கே படித்துக்கொண்டிருக்க, கடவுள் அவனுக்கு அவுட் ஆஃப் சிலபஸில் வினாத்தாள் எடுத்துக்கொண்டிருந்தார்.



நாளைய எபி அல்லது அதற்கு அடுத்த எபியில் அந்த அவுட் ஆஃப் சிலபஸ் வினா என்னன்னு சொல்லிடுவேன். பட், அதற்கு முன், என்னவாக இருக்கும்? எனி கெஸ்ஸஸ்?
 
Top