Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கோகுலத்தில் ராமன்! 01 (A)

Advertisement

பிரியா மோகன்

Tamil Novel Writer
The Writers Crew
Hi guys!!
Let's begin the second part of "GOKULATTHIL RAMAN" with all of your support...
இத்தனை நாட்கள் காத்திருந்ததற்கு மிக்க நன்றி!
அடுத்த பதிவு இந்த வாரத்திற்குள் வரும்! ஆனா, என்னைக்கும் வரும்ன்னு சொல்ல முடியல! பூனை குறுக்க போனமாறி ஒரே தடை தடையா வருது:p
அடுத்த வாரத்தில் இருந்த முறையான பதிவுகள் வரும்படி பார்த்துக்கொள்கிறேன்!! இந்த அப்டேட் படிச்சுட்டு உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய மறக்காதீங்க!!!

01 (A)

எது உன்னிடம் நிலைக்கும் என நினைக்கிறாயோ அதுதான் முதலில் உன்னைவிட்டு விலகிப்போகும்...


எதுவும் யாருக்கும் இங்கே நிரந்தரம் இல்லை என்பதே நிதர்சன உண்மை..."

-பகவத்கீதா


கீதா உபசாரத்தை போதித்தபடி மாத காலண்டரில் மந்தகாசமாய் சிரித்துக்கொண்டிருந்தார் ஸ்ரீகிருஷ்ணர்.



ஆயிற்று இன்றோடு மூன்று நாட்கள்...!! கோகிலாவின் திருமணம் முடிந்து முழுதாய் கடந்து போனது மூன்று நாட்கள். திருமணம் நடந்து முடிந்த வீடு என தம்பட்டம் போட்டு சொன்னால் கூட ஒருவரும் நம்ப வாய்ப்பில்லை. உயிர்ப்பே இன்றி இருண்டு போயிருந்தது ஒண்டிவீரரின் இல்லம்.



மூன்று வேளை உணவு என்ற கணக்கெல்லாம் இன்றி மயங்கி விழுந்துவிடாமல் இருக்க மட்டுமே வயிற்றுக்கு சிறிது ஈயப்பட்டது. வீட்டின் பிரம்மாண்ட தூண்களில் ஆளுக்கு ஒருவராய் தங்கள் சரீரத்தை சாய்த்துக்கொண்டு கண்ணீர் விடக்கூட தெம்பற்று கிடக்க, அங்கே சகஜமான பேச்சு என்றில்லை, தேவைக்கான பேச்சுக்கு கூட பஞ்சமாய் போய் மயான அமைதியில் இருந்தது அவர்கள் வாழ்விடம்.



பத்து நாள் மருத்துவமனைவாசம் கூட ஒண்டிவீரரை இத்தனை உருக்குலைக்கவில்லை. இந்த மூன்று நாட்களில் அந்த அளவுக்கு தளர்ந்துப்போயிருந்தார். அவரே அப்படி ஆன பின்பு சிவகாமியை கேட்கவும் தேவையில்லை. அழுது அழுது கண்கள் வெழுப்பை பூசிவிட்டது.



இயல்பிலேயே பூஞ்சை மனம் கொண்ட தங்கத்தால் நடந்து முடிந்த காரியத்தை ஜீரணிக்கவே இயலவில்லை. அவர் அகக்கண்ணில் அவரது கடந்த காலம் வந்து வந்து போக, லட்சத்தில் ஒரு வாய்ப்பாய் தன் மனம் ஷங்கரின் பேச்சால் நொந்துப்போனதால் தான் செல்லத்தின் மகளுக்கு இந்நிலையோ என எண்ணி மருகிக்கொண்டிருக்கிறார்.

அதற்கு வலு சேர்ப்பதை போல, 'ஆக்கிட்டல்ல...!! என் பொண்ணையும் உன்னைமாறியே ஆக்கிட்டல்ல!? இப்போ நிம்மதியா இருக்குமே உனக்கு!?' என செல்லம் தலையில் அடித்துக்கொண்டு அழுதது அவர் செவிகளை விட்டு அகலவில்லை.



இந்த மூன்று தினங்களாய் அந்த வீட்டை விட்டு சகஜமாய் வெளியே சென்று வருவது இருவர் மட்டுமே...

இடியே விழுந்தாலும் தன் தலைக்கு எந்த ஆபத்தில்லை என நழுவிக்கொள்ளும் சத்தியராஜின் குணம், இந்த சம்பவத்தின் பின்னும் அப்படியே தான் இருந்தது.

திருமண கலவரம் முடிந்த மறுநாளே கடை திறக்க சென்ற சத்தியராஜனை 'என்ன மனுஷன் நீ?' என வீட்டாட்கள் பார்க்க, 'எல்லோரும் உட்காந்து அழுதுட்டு இருந்தா, தொழிலை யாரு கவனிப்பா!? இன்னும் நூறு நாள் அழுதாலும் நடந்தது மாறாது...' என உபதேசித்து பொறுப்பாய் நகர்ந்துவிட்டார் அவர்.



அடுத்ததாய் வீட்டில் இருந்து வெளியே சென்று வருபவன் 'காண்டீபன்'. தந்தை அளவுக்கு பொறுப்பில்லை அவனுக்கு. தொழிலை கவனியாது, தொலைந்து போன தன் தமையனை தினந்தோறும் தேடிக்கொண்டிருக்கிறான்.

ஆம்! பேரின்பனை மூன்று நாட்களாக காணவில்லை. திருமணத்தன்று முகூர்த்த நேரத்தில் தொலைந்தவன், இன்னமும் சிக்கினானில்லை.



பேரின்பன் அடிக்கடி செல்லும் இடங்கள், நண்பர்கள் வீடு என ஓரிடம் விடாமல் அலசிக்கொண்டிருக்கிறான். இன்பனுக்கு தெரிந்தவர்களை விசாரிக்க வேண்டுமானால் மொத்த ஊரையுமே கூட்ட வேண்டுமே!! அது சரிப்படாது என எண்ணிய காண்டீபன் போலீஸில் புகார் பதிவு செய்துவிட்டான். அது போக இன்பனின் கூடவே சுற்றும் கிளிகளை அடித்து உதைத்து கேட்டும், தேவையான தகவல் கிட்டவில்லை.



நாள் கூடக்கூட காண்டீபனுக்கு சொல்லொண்ணா பயம் அப்பிக்கொண்டது மனதில். போலீஸோ விபத்துகள் நடந்த இடத்தில், அடையாளம் தெரியாமல் இறந்து போனவர்களை வந்து பார்க்க சொல்லி காண்டீபனுக்கு அழைப்பு விடுக்க, அவன் நெஞ்சுக்கூடு துடித்த துடிப்பில் இதயமே வெளியே வந்துடும் என அஞ்சுமளவு இருந்தது.



புகார் கொடுத்த இரண்டு நாட்களில் மூன்று முறை அவனை அழைத்துவிட்டனர். ஒவ்வொரு முறையும் அவர்கள் சொல்லும் இடத்திற்கு சென்று இறந்தவர்களில் அவனது அண்ணன் இருக்கிறானா என பார்த்து ‘இல்லை’ என சொல்வதற்குள் உயிர் போய் உயிர் வந்தது அவனுக்கு.



'எங்கடா போய் தொலைஞ்ச?' அலுத்துப்போவான் மனதுள்.



இன்பனிடம் இதுநாள் வரை அவன் முகம் கொடுத்து பேசியதில்லை. அப்படியே பேசினாலும், பேச்சு குத்தலாகவோ அல்லது கடுப்பாகவோ தான் காண்டீபனிடம் இருந்து வரும். இன்பனை தனக்கு பிடிக்காது பிடிக்காது என அலுக்காமல் சொல்லும் காண்டீபன், அவனை காணாததும் ஊண் உறக்கமின்றி அவனை தேடிக்கொண்டிருப்பது ஏன் என அவனுக்கே தெரியாது.



அவன் மனம் இதே கேள்வியை அவனிடம் கேட்டபோது கிடைத்த பதிலோ 'கோகிலா'.

ஆம், கோகிலாவிற்காக தான் இன்பனை தேடுகிறான் என சொன்னாலும் மிகையல்ல. கண்ணில் இருந்து ஒரு துளி கண்ணீரில்லை. வேதனையில் அவள் உதடுகள் புலம்பவில்லை. இனி தான் வாழ்வதே வீண் என தற்கொலைக்கு முயலவில்லை. ஆனாலும் அவள் நிலை அவளை காணும் அனைவரையும் உருக்கியது.



எது நிலைக்கும் என திண்ணமாய் நம்புகிறோமோ அது சொல்லிக்கொள்ளாமல் நம்மிடம் இருந்து தொலைந்து போகையில், தொலைந்தவனை விட தொலைத்தவனே அதிகம் நொறுங்குகிறான். இந்நிலை தான் கோகிலாவினுடையது.



இருக்கும் நிலையில் ஒரே ஆறுதல், வெளியூருக்கு பயணம் சென்றிருந்த சுசீலா குடும்பம் இன்னமும் ஊர் திரும்பவில்லை, அவர்கள் எண்ணும் உபயோகத்தில் இல்லை. அவர்களும் வந்துவிட்டால் உண்மையை விளக்கி, அவர்களை வேறு சமாளித்து என பெரும் வேலை மிச்சமிருக்கிறது.



கோபிசெட்டிப்பாளையம் முழுக்க தேடி தோற்றுவிட்டான் காண்டீபன். இதற்குமேலும் அவன் எங்கே சென்றிருப்பான் என யோசிக்க கூட அவனிடம் வலு இல்லை. காண்டீபனை விட்டு ஒரு நாள் கூட நகராதவன் இத்தனை நாட்கள் தள்ளி இருக்கிறான் என்றால் என்ன காரணம்? அதற்குமேல் அவனால் எப்படி முடிந்தது? யோசிக்க யோசிக்க காண்டீபனுக்கு தலை வலி மிக, ஒற்றைக்கல் மீது கண்மூடி அமர்ந்துவிட்டான் சாலையோரம் என்றும் பாராது.



மனம் அவன் அனுமதியின்றி நடந்தவைகளை அசைபோடத்தொடங்கிய்து.

அன்று...

முகூர்த்த நேரம் நெருங்கிக்கொண்டிருக்க, 'காண்டீபனை யாரோ அடித்துவிட்டார்கள்' என காதில் விழுந்ததும் எழுந்து சென்றுவிட்டான் இன்பன்.



காண்டீபனை தேடிக்கொண்டு சென்ற கிளிகள் அவனை இன்பன் அழைத்ததாய் சொல்லி கூப்பிட, வேண்டுமென்றே வராது தாமதித்தான் அவன்.

'அவன் அழைத்து, தான் செல்வதா?' என்ற எண்ணம். உடனே சென்றிருக்க வேண்டுமோ? என அவன் இப்போது வருந்தாத நொடியில்லை.



முழுதாய் பத்து நிமிடங்கள் கடக்க, "அண்ணே, முகூர்த்த நேரம் நெருங்குது, சீக்கிரமா வாங்களேன்" என்று வெட்டுக்கிளி கெஞ்சியதும் நேரத்தை பார்த்தவன் மேடை அருகே சென்றான்.



கிளிகள் இன்பனை தேட, அவன் அங்கே இருந்தால் தானே!?



"பொண்ணை அழைச்சிட்டு வாங்கோ" என ஐயர் சொல்ல, எதேட்சையாய் திரும்பிய காண்டீபன், முதல் வரிசையில் இன்பனை காணாது புருவம் சுருக்கினான். மெதுவாய் அந்த மண்டபம் முழுக்க அவன் கண்கள் அலைப்பாய, கிளிகள் தங்களுக்குள் பதட்டமாய் பேசிக்கொள்வது பட்டு, 'ஏதோ சரியில்லை' என்று தோன்ற வைத்தது.



கிளிகளை நெருங்கியவன், "என்னடா ஆச்சு!? எங்க உங்க அண்ணன்?!" என்றான் காண்டீபன் இயல்பு போல.



"அண்ணே, அண்ணே இன்பண்ணே எங்க போச்சுன்னு தெரியலண்ணே, பின் வாசல் வழியா யாரோ ஒரு பையன் கூட போனதா ஒருத்தன் சொல்றான்" என பதட்டமாய் அவர்கள் சொல்ல, சரியாய் அப்போது மேடையேறிக்கொண்டிருந்தாள் கோகிலா.



அதை கண்ட காண்டீபனுக்கும் பதட்டம் எழ, "அறிவுகெட்டவன்" என பல்லிடுக்கில் இன்பனை திட்டிக்கொண்டே அங்கிருந்து ஓடினான், கூடவே கிளிகளும்.



அவனை பார்த்ததாய் சொன்னவனையும் அழைத்துக்கொண்டு காண்டீபன் மண்டபம் முழுக்க அரக்க பறக்க தேட, தோப்பிற்கும் சோளக்காட்டிற்கும் கூட ஆள் அனுப்பப்பட்டது. முகூர்த்தம் முடிய ஐந்தே நிமிடங்கள் மீதமிருக்க, இனி இன்பனை எதிர்ப்பார்த்தால் ஆகாது என்றெண்ணி அவனே திருமணத்தை நிறுத்தலாம் என நகர, அந்நேரம் அவனை நோக்கி வேக எட்டுகளுடன் வந்துக்கொண்டிருந்தனர் ஒண்டிவீரரும், சிவகாமியும்.



அவர்களை கண்டவனுக்கு 'இந்த நிலையில இவங்களும் இங்க வந்தா எப்படி?! யார் இவங்களை இங்க அனுப்புனது?' என பதறி, "என்னாச்சு தாத்தா இங்க வந்துட்டீங்க?" என கேட்க, "இன்பனை காணோம்ன்னு சொல்றாங்களேப்பா, எங்க இருக்கான் அவன்?" என மூச்சு வாங்க கேட்டார் சிவகாமி. இன்பனை காணவில்லை என்ற தகவல் யார் மூலம் அவர்களுக்கு தெரிந்து, தன்னை தேடி வந்தனர் என அவன் சிந்திக்கவில்லை.



"ஏதாவது பிரச்சனையா கண்ணு?" ஒண்டிவீரர் முகமும் பதட்டத்தில் இருக்க, "இப்போ அவனை தேட நேரமில்லை தாத்தா. இந்த கல்யாணத்தை நம்மதான் நிறுத்தியாகனும்!!" என சொன்ன காண்டீபன் கால் தரையில் படாமல் மண்டபத்திற்குள் ஓட, இன்பனின் வீட்டாட்கள் அந்த பக்கம் நகர்ந்ததுமே, கோகிலாவின் சங்கு கழுத்தில் தங்கத்தாலி சரடை ஒருவித அவசரத்துடன் அணிவித்திருந்தான் கிஷோர்.



கடைசி நொடி வரை இன்பனை எதிர்ப்பார்த்து காத்திருந்த கோகிலா, 'ஏமாத்திட்ட மாமா' என ஊமையாய் அலற்ற, "உன் மாமன் செத்துட்டான்" என்ற கிஷோரின் வார்த்தைகள் அவளை சிலையாக்கிவிட, கிடைத்த நொடியில் அவளை தன் உடைமையாய் மாற்றியிருந்தான் கிஷோர்.



மண்டபத்திற்கு கூட வரமாட்டேன் என பிடிவாதம் செய்த தங்கத்தை பெரும்பாடு பட்டு அழைத்து வந்திருந்தான் இன்பன். திருமண நேரம் அனைவர் முன்னும் தென்பட வேண்டாமென அறைக்குள் முடங்கியிருந்த தங்கம், கெட்டிமேளம் கேட்டபின்னும் ஒளிந்திருக்க முடியாது, இன்பன் கோகிலாவின் திருமணத்தை காண அறையை விட்டு வெளியே வர, அவர் கண்டதோ கிஷோரின் கையால் தாலி அணிவிக்கப்பட்டு முகம் வெளுத்து பாதி உயிர் பறிப்போன நிலையில் அமர்ந்திருந்த கோகிலாவை தான்...!!!



காண்டீபன் வருவதற்குள் முடிந்துவிட்டது அவள் திருமணம்!! எங்கிருந்தோ வந்த சத்தியராஜன், "விடுடா, கல்யாணமும் முடிஞ்சு போச்சு, இனி எந்த பிரச்சனையும் வேண்டாம்" என்றார் தன் இளைய மகனிடம்.

"அதெப்படிப்பா!?" காண்டீபன் எகிற, "உஸ்" என அவன் கரம் பிடித்து தன்னோடு வைத்துக்கொண்டார் அவர். தன் மகன் மட்டும் எந்த சிக்கலிலும் மாட்டக்கூடாது என்ற எண்ணம் போலும்.



ஒண்டிவீரருக்கும் சிவகாமிக்கும் நடந்ததை நம்பமுடியாது தலையே சுற்றியது.



வந்திருந்த பலரும், "இன்பனுக்குல கல்யாணமுன்னு சொன்னாக!" என பேசிக்கொள்ள அவ்விடம் சலசலப்புக்கு குறைவின்றிப்போனது.



ஷங்கருக்கும் செல்லத்துக்கும் அந்த வானத்தையே வசப்படுத்திய உணர்வு. வெற்றிமிதப்புடன் ஒண்டிவீரரை கண்டுக்கொண்டு வெறித்தனர். ‘பார்த்தாயா? நான் சாதித்துவிட்டேன்!?’ என சொல்லாமல் சொன்னது அவர் பார்வை.



ஒண்டிவீரர் மீது கொண்டிருந்த மரியாதை, மதிப்பு எல்லாம் அந்த ஷணம் ஷங்கரிடம் இருந்து விடைப்பெற்றுக்கொண்டதோ என்னவோ!



“நெத்தில குங்குமத்தை வச்சு விடுங்கோ!” ஐயர் குங்குமத்தை நீட்ட, அள்ளி எடுத்த கிஷோர், கோகிலாவின் கழுத்தை சுற்றி தன் கரத்தைக்கொண்டு வந்து அவள் நெற்றியில் திலகமிட முனைந்த நொடி, சிலையென இருந்த கோகிலாவுக்கு ஆதங்கமும், ஏமாற்றமும், தோல்வியும் சேர்ந்து ஆக்ரோஷத்தை அள்ளிக்கொடுக்க, முகத்தின் முன்னே வந்த அவன் கரத்தை முழு பலம் கொண்டு தட்டிவிட்டாள்.



கிஷோரின் இரு விரல்களுக்கிடையே சிக்கியிருந்த குங்குமம் தெறித்து விழுந்தது அக்கினியில்!



கழுத்தில் கிடைந்த மலர் மாலையை கிஷோரென நினைத்தாலோ இல்லை இன்பனென எண்ணினாலோ, ஒட்டுமொத்த ஆத்திரத்தையும் அந்த மலர்மாலையில் காட்டி பிய்த்து எறிந்தாள். மலர்கள் எல்லாம் சிதறி அவள் கரத்தில் வெறும் நார் மட்டும் சிக்கியபோதும் அவள் ஆத்திரம் அடங்கவில்லை. அங்கிருந்த வரிசை தட்டுகள் அத்தனையும் ஒன்றுவிடாமல் தூக்கி வீசினாள். கீழே அமர்ந்திருந்த ஆட்கள் எல்லாம் பதறி விலக, ஐயர் கூட அங்கில்லை.



ஷங்கருக்கும் செல்லத்திற்க்கும் ஐந்து நிமிடங்கள் முன்பு வரை இருந்த ஆர்ப்பரிப்பு நிலை இப்போது தலைகீழாய் மாறிப்போனது. மகள் அருகே கூட செல்ல முடியாது அதிர்ந்து போய் நின்றிருந்தார் செல்லம்.



கழுத்தில் தாலி ஏறிவிட்டால் யாரால் என்ன செய்துவிட முடியும்? என்று தானே நினைத்திருந்தார். அழுவாள், புலம்புவாள் சமாளித்துவிடலாம் என்று அசட்டையாய் தன் மகளை நினைத்திருக்க, ஊரார் முன் ருத்ரதேவியாய் அவள் ஆடிக்கொண்டிருக்கும் கோலம் அவர் மனதை திகிலடைய செய்தது.



அருகே சென்று அவளை தொடக்கூட அத்தனை பயம் அவருக்கு. கோகிலாவுக்கு கோவம் வந்தால் எளிதில் சமாளிக்க முடியாது என்பது அவருக்கு தெரியும். ஆனால் இப்போது அவள் நடந்துக்கொள்வது கோவத்தையும் தாண்டிய ஒரு நிலை. சரியாய் சொல்ல வேண்டுமானால் வெறிப்பிடித்தவள் போல ஆடிக்கொண்டிருந்தாள்.



யார் அவளை சமன் செய்வது என தெரியாத நேரத்தில், “பேபி, ஏன் டென்ஷன்?” என கிஷோர் அவள் கரம் பற்றிய நொடி, தன் வெறியாட்டத்தை நிறுத்திய கோகிலா அலங்கோலமாய் சிதறிக்கிடக்கும் மேடையை கண்களால் அலசினாள். அவள் தேடலின் அர்த்தம் புரியாத கிஷோர், “நான் உன் ஹஸ்பென்ட் பேபி! இனி என்கிட்ட இப்படியெல்லாம் நீ பீகேவ் பண்ணக்கூடாது! புரிஞ்சுதா?” என்று சத்தமாய் சொன்னவன், அவள் காதருகே சென்று, “உன் மாமன் இனி வரவே மாட்டான்!! காதலுக்காக உயிரை விட்டுட்டான், பாவம்ல! உச் உச் உச்” என்று பரிதாபப்படுபவன் போல உச்சுக்கொட்ட எங்கிருந்து தான் வந்ததோ அவளுக்கு அத்தனை ஆங்காரம்!



மஞ்சள் குங்குமமிட்டு மெட்டியிடும் சாங்கியத்திற்க்காக வைத்திருந்த அம்மிக்கல் அவள் கண்ணில் விழ, சட்டென குழவியை கையோடு தூக்கியவள், வெறிக்கொண்டு வீசினாள் கிஷோரின் மீது...! அவள் செய்யப்போவதை கொஞ்சமும் எதிர்ப்பாராதவன் அலட்சியமாய் தான் நின்றிருந்தான். இறுதிநொடியில் கல் தன்னை நோக்கி வரப்போவதை யூகித்து, அவன் விலகுவதற்க்குள் குழவி அவனை எட்டிவிட, பலமாய் அடிவிழுந்தது அவன் இடதுகால் முட்டியில். துடித்துப்போய் விழுந்தான் கீழே!

CHECK 01 (B)- CONTINUATION OF THIS UPDATE
 
Top