Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கோகுலத்தில் ராமன்! 03

Advertisement

பிரியா மோகன்

Tamil Novel Writer
The Writers Crew
அத்தியாயம் மூன்று:

மிஷ்னர் ஆபிஸ் வெளியே போட்டிருந்த மர பெஞ்சில் அமர்ந்திருந்தனர் ஷங்கரும் செல்லமும். காலையில் இருந்து ஒரே இடத்தில் அமர்ந்திருந்த அயர்வு அவர்கள் முகத்தில் தெரிய, அதையும் தாண்டிய பதட்டமும் தவிப்பும் அவர்களிடத்தில்.



உள்ளிருந்து ஆட்கள் வெளியே வரும் அரவம் தெரிய, இருவரும் ஆவலாய் எழுந்து நிற்க, தொய்ந்து போன நடையில் வந்தார் சிவகுரு. அவர் மனைவி லலிதாவை இந்த வழக்கில் நுழைக்க வேண்டாம் என கேட்டுக்கொள்ள முழு விசாரணைக்கும் சிவகுருவே ஆட்படுத்தப்பட்டார். விசாரணை மூன்றாம் நாளும் தொடர, அவருக்காகவே வெளியே காத்திருந்தனர் ஷங்கர் தம்பதி.



“என்னாச்சு சிவகுரு? மாப்பிளையை வெளியே எடுத்துடலாம் தானே?” ஆவலே உருவாய் ஷங்கர் கேட்க, சிவகுரு முகத்தில் எந்த பாவமும் இல்லை.



“அண்ணே, சொல்லுங்கண்ணே! என் பொண்ணு வாழ்க்கை தொடங்கினதுமே முடிஞ்சுச்சா?” என்று கண்ணீர் விட்டார் செல்லம்.



“நிஜமாவே அது உங்க பொண்ணு தானா?” திடுமென ஒலித்த புது குரலில் மூவரும் திரும்ப அங்கே நெரிந்த புருவங்களுடன் இவர்களையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தார் இன்ஸ்பெக்டர், அன்று கிஷோரை கைது செய்தவர்.



“அவன் மேல இருக்குற கேஸுக்கு எத்தனை பெரிய வக்கீல் வந்தாலும் ஜாமீன்ல எடுக்க முடியாது! குறைஞ்சது பத்து வருஷமாவது ஜெயில கம்மி எண்ணிதான் ஆகணும். ஆதாரத்தோட அவனை நாங்க பிடிச்சுருக்கோம், இன்னமும் அவனோட உங்க பொண்ணை வாழ வைக்கணும்ன்னு பேசிட்டு இருக்கீங்க? நிஜமாவே அது உங்க பொண்ணு தானா? இல்ல எங்கிருந்தாவது தூக்கிட்டு வந்து வளர்த்தீங்களா?” என்றார் நக்கலும் கோபமுமாய்.



“சார்...!!!!” என அதிர்ந்து விழித்த ஷங்கர், “எங்க பொண்ணு மேல அக்கறை இருக்குறனால தான் அவளை எங்க மாப்பிள்ளைக்கூட வாழ வைக்கணும்ன்னு துடிச்சுட்டு இருக்கோம் சார்!” என்றார்.



அவரை இளக்காரமாய் பார்த்த இன்ஸ்பெக்டர், “ஒரு அக்யூஸ்டுக்கு உங்க பொண்ணை குடுக்கணும்ன்னு முடிவெடுக்குறதுலையே உங்க அக்கறை தெரியுது!” என்றவர் சிவகுருவிடம், “உங்க பையன் பிசினஸ்க்கு உங்க அக்கவுன்ட்ல இருந்து தான் மணி ட்ரான்ஸ்பஃர் ஆகிருக்கு! அதனால இந்த கேஸுல நீங்களும் தான் இன்வால்வ் ஆகிருக்கீங்க!” என்றிட,



“அவன் பிசினஸ் பண்ணனும்ன்னு பணம் கேட்டான், ஏன் எதுக்குன்னு விசாரிக்காம கேட்டதை குடுத்துட்டேன்!” என்றார் சோர்வாய்.



“நீங்க சொல்றதை நான் நம்பலாம்! ஆனா சட்டத்தோட பார்வையில நீங்களும் அவனோட போதை பொருள் பிசினஸ்ல ஒன் ஆப் தி பார்ட்னர் தான்! ஒரு நல்ல லாயரா பிடிச்சு உங்களுக்கு முன்ஜாமீன் வாங்குற வழியை பாருங்க, நாளைக்கும் விசாரணை இருக்கு, வந்துடுங்க!” என்ற இன்ஸ்பெக்டர் ஷங்கரையும் செல்லத்தையும் உதடு வளைய, நக்கலாய் பார்த்துவிட்டு நகர்ந்தார்.



அவர் சென்றதும், “எவ்வளோ பெரிய லாயரை வேணாலும் புடிக்கலாம் சிவகுரு, நீ மனசை தளரவிடாத! கிஷோரை வெளில கொண்டு வர வேண்டியது என் பொறுப்பு” என்றார் ஷங்கர்.



கசப்பாய் முறுவலித்த சிவகுரு, “இன்ஸ்பெக்டர் அத்தனை சொல்லியும் உனக்கு புரியலையா ஷங்கர்?” என்றார்.



“அவருக்கு என்ன தெரியும் நம்ம புள்ளைய பத்தி? நீ இதுக்கெல்லாம் வருந்தாதடா” நண்பனை தோளோடு அணைத்து அவர் தேற்ற, அவர் கரத்தை தன் மீதிருந்து எடுத்த சிவகுரு, “என் புள்ளையை பத்தி நானே சொன்னாலாவது நம்புவியா ஷங்கர்?” என்றார் வேதனையாய்.



“என்னடா சொல்ற?”



“அவன் ஜெயில்ல இருக்கானேன்னு நான் வருத்தப்படுறேன்னு நினைக்குறியா? ம்ஹும்ம்! அவனை ஏன்டா பெத்தோம்ன்னு ஒவ்வொரு நிமிஷமும் வருத்தப்பட்டுட்டு இருக்கேன்!” என்றார் சிவகுரு.



“என்ன பேசுற நீ?” திக்கி திக்கி ஷங்கர் கேட்க, “அவன் இங்க உருப்படாம சுத்துறான்னு தான் வெளிநாடு அனுப்புனேன்! ஆனா அங்க போயும் அவன் சரிப்படல! போலிஸ் கேஸ் ஆகி இனிமே அவனுக்கு வெளிநாட்டுக்கே போக முடியாதமாறி ப்ளாக் மாறி ஆகி தான் இங்க திரும்ப அவனை கூட்டிட்டு வந்தேன்!” என்றார்.



“ஒரு கல்யாணம் செஞ்சு வச்சா சரிப்படுவான்னு நாங்க முடிவு பண்ணப்போதான் அவன் கோகிலாவை பிடிச்சுருக்குன்னு வந்து நின்னான்! பலவருஷ பழக்கம் சொந்தமா மாறுனா நல்லா இருக்குமேன்னு தான் உன்கிட்ட கோகிலாவை பொண்ணு கேட்டேன்! எப்படியும் அவன் திருந்திடுவான்னு நான் எதிர்ப்பார்க்க, அவன் நாளுக்கு நாள் மோசமா தான் போய்க்கிட்டு இருந்தான்” என்று சொல்லிக்கொண்டிருந்த சிவகுருவை திகிலுடன் பார்த்தனர் இருவரும்.



“கோகிலா உன் பொண்ணா இருந்தாலும், அவ எனக்கும் பொண்ணு மாறி தானே? அவ வாழ்க்கை கெட்டுப்போக வேண்டாம்ன்னு நான் இந்த கல்யாணத்தை நிறுத்தலாம்ன்னு முடிவெடுத்தப்போ ‘இந்த கல்யாணம் நடக்கலன்னா கோகிலாவை நான் கொன்னுடுவேன்’ன்னு அந்த பாவி மிரட்டுனான்” என்றிட, ‘ஐயோ?’ என நெஞ்சை பிடித்துக்கொண்டார் செல்லம்.



“கோகிலா மேல இருக்க ஆசைல இப்படி பேசுறான்னு அப்பவும் நான் பொறுமையா இருந்துட்டேன்! ஆனா கல்யாணத்துக்கு முன்னாடி நாள், அவனே அவன் வாயால எல்லா உண்மையும் சொல்லி, கல்யாணம் முடிச்சதும் நம்ம எங்கயாது வேற ஊருக்கு கொஞ்ச நாள் போய்டணும்ன்னு சொல்ல, நான் முடியாதுன்னு மறுத்தேன்! ஷங்கர்கிட்ட உண்மையை சொல்லி கல்யாணத்தை நிறுத்துறேன்னு கிளம்புன என்ன, அப்பன்னு கூட பாக்காம கையை நீட்டிட்டான்! அதுக்கு பிறகு அவன் மிரட்டலுக்கு பயந்து ஒரு ஜடமா தான் அங்க நின்னுட்டு இருந்தேன் ஷங்கர்!” என்று கண்ணீரோடு அவர் சொல்லி முடிக்கையில் ஷங்கர் என்ன மனநிலையில் இருந்தார் என விவரிக்க வார்த்தையில்லை.



கடந்த மூன்று நாட்களாய் காவல் துறையினரால் சொல்லப்பட்டதை புனைவு கதை என திடமாய் நம்பிக்கொண்டு எப்படியும் தன் மகளை கிஷோருடன் வாழ வைத்துவிடலாம் என உறுதியாய் இருந்தவர் மனதை உலுக்கிதான் போட்டது சிவகுருவின் பேச்சு!



“உ..உண்மையை தான் சொல்றியா?” கடைசி முயற்சியாய் அவர் கேட்க, “என் பையனை பத்தி நானே எதுக்காக ஷங்கர் பொய் சொல்ல போறேன்?” என்று சிவகுரு சொன்னதும், அங்கிருந்த பெஞ்சில் ‘பொத்’தென விழுந்தார் ஷங்கர்.



“என்னங்க?” பதறி வந்து செல்லம் தாங்க, “நீ டென்ஷன் ஆகாத ஷங்கர்! கோகிலா செஞ்சது தான் சரி! சேத்துல தெரியாம விழுந்துட்டா, சுத்தமா குளிச்சுட்டு வீட்டுக்குள்ள போவோமா? இல்ல சேறு பட்டுடுசேன்னு வாழ்கை முழுக்க அதுலயே உருண்டு புரளுவோமா? என் பையன் ஒரு புதைக்குழி, கோகிலா அதுல விழாம தப்பிச்சுட்டா! இதுக்கு பிறகாவது அவளுக்கு பிடிச்ச வாழ்க்கையை அமைச்சு குடு” என்றார் சிவகுரு.



“ஊரை கூட்டி கல்யாணம் செஞ்சு, எல்லார் முன்னாடியும் தாலியை கலட்டி வீசிட்டு போயிட்டா! இனி எந்த மாப்பிளையை தேடி அவளுக்கு நாங்க பாக்க?” என்று செல்லம் வாயை மூடி அழ, “அவளுக்கு பிடிச்ச வாழ்க்கைன்னு சொல்றேன்! இன்னும் உங்க மனசுல அந்த பையன் நினைப்பு வரலையா?” என்று கேட்டு சிவகுருவை கேள்வியாய் பார்த்தனர் இருவரும்.



“எல்லார் முன்னாடியும் இன்பன் தான் எனக்கு வேணும்ன்னு கோகிலா அழுத்தமா சொல்லும்போதே தெரியலையா? அவளுக்கு யாரை கட்டி வைக்கணும்ன்னு!!” என்று சிவகுரு கேட்க,



“அவனையா?” என்றார் செல்லம்.



“எனக்கு இன்பன் யாருன்னு தெரியாது! ஆனா அவனை தவிர வேற யாரோடவும் கோகிலா நல்லா வாழ மாட்டா! அவனோட இருக்கிறது மட்டும் தான் கோகிலாவுக்கு சந்தோசத்தை கொடுக்கும்!! இதுவே அவ என் பொண்ணா இருந்தா அந்த பையன் கால்ல விழுந்தாவது அவளை அவனோடு சேர்த்து வச்சுருப்பேன்” என்றவர், “யோசிச்சு நல்ல முடிவா எடுங்க” என்றுவிட்டு மேற்கொண்டு பேசாமல், அங்கிருந்து நகர்ந்துவிட்டார் சிவகுரு.



ஷங்கர் செல்லத்திற்கு யோசனை படர்ந்தது. சிவகுரு சொன்னதை அசைப்போடத் தொடங்கினர்.



தூணின் மறைவில் கால் நீட்டி தளர்வாய் அமர்ந்திருந்தான் பேரின்பன். அறைவயிருக்கு மட்டும் உணவை உள்தள்ளியவன் யாரும் கவனிக்காவண்ணம் அந்த வேளைக்கு போடவேண்டிய மாத்திரைகளை முழுங்கிக்கொண்டான். மடித்து கட்டியிருந்த வேட்டியை இறங்கிக்கூட விடவில்லை. எப்படி வந்தானோ அப்படியே அமர்ந்திருந்தான்.



“யய்யா...” வாஞ்சையாய் ஒரு கரம் அவன் சிகை வருட, அது சிவகாமி தான் என்பது புரிந்து “சொல்லுங்க அம்மாயி” என்றான் இன்பன்.



“நீ இல்லாதப்போ என்ன நடந்துச்சுன்னு தெரியுமா கண்ணு?” அவனுக்கு தெரியாதோ என அவர் கேட்க, ‘எல்லாம் தெரிந்ததால் தான் இங்க வந்தேன் அம்மாயி’ என மனதோடு சொல்லிக்கொண்டான் இன்பன். அவன் பதிலை எதிர்ப்பார்க்காதவர் போல நடந்த அத்தனையும் ஒரு மூச்சு சொல்லி முடித்தார்.



கலங்கிய கண்களை தன் புடவையில் துடைத்துக்கொண்டு, “நீ மட்டும் இருந்துருந்தா அந்த புள்ளைக்கு இந்த நிலைமை வந்துருக்குமா? தாலி ஏறி பத்து நிமிஷம் கூட ஆகல, அதுக்குள்ள அறுத்து வீசிட்டா!” என்றார் அவர்.



“அவ அப்பா அம்மா எங்க?” இன்பனின் கேள்வியில், “அவங்களுக்கு பெத்த புள்ள மேல எங்க அக்கறை? அந்த உலகமகா உத்தம மாப்பிளைக்கு ஜாமீன் வாங்க அலைஞ்சுட்டு இருக்காங்க சென்னைல” என்றிட, “இன்னுமா அவனை நம்புறாங்க?” என்றான் ஆச்சர்யமாய்.



“அதுங்கள்லாம் புத்தியை போக்கியத்துக்கு விட்டுட்டு நடமாடிட்டு இருக்குதுங்க! பொண்ணுக்கு ஆறுதலா கூட இருப்போம்ன்னு அறிவில்லை! எங்கிருந்து அவளை மட்டும் இப்படி பெத்தேனோ?” என நொந்த சிவகாமி, “அவ மட்டும் என்ன? நான் பெத்த மூணுமே முச்சந்தில தான் நிக்குது!” என நொடித்துக்கொண்டார்.



மேலும், “உன் அப்பன் இருக்கானே? ஐயோ! என்னமாறி மனுஷன் அவன்ல்லாம்? பெத்த புள்ள நீ மூணு நாளா காணோம்! வீடு கடந்த நிலைமைல எப்படி அவனால கடை திறக்கனும்ன்னு போக முடிஞ்சுதோ?! ச்சை!” என்றார் சலிப்பாய்.



“அவர் அப்படி போகலைனா தான் அதிசயப்படனும்” என்ற இன்பனின் உதடுகள் மெலிதாய் சிரிப்பில் வளைய, “ஆனா உன் தம்பி, வெளில உன்கிட்ட எரிஞ்சு எரிஞ்சு விழுந்தாலும், உன்னை காணோம்னதும் எப்படி துவண்டுட்டான் தெரியுமா? நாயா பேயா அலைஞ்சுட்டு இருக்கான் உன்னை தேடி!!” என்றிட, இன்பன் ஒன்றும் சொல்லவில்லை.



கோகிலா தலையோடு குளித்து சிகையில் இருந்து வடியும் நீரோடு, மெல்லிய காட்டன் புடவையில் மாடியில் இருந்து இறங்கி வந்துக்கொண்டிருந்தாள்.



“ஹப்பா!! எங்க இவ நாலு சுவத்துக்குள்ளையே அடைஞ்சு கிடந்துடுவாலோன்னு பயந்து போயிருந்தேன்! உன்னை கண்டதும் தான் வெளிலையே வந்துருக்கா!” என்றார் சிவகாமி.



கோகிலாவை கண்டதும், “சாப்புடுறியா கண்ணு” என்று தங்கம் ஆர்வமாய் கேட்க, “ம்ம்” என்றவள், அவர் கொடுத்ததில் கொஞ்சமும் மிச்சம் வைக்காது உண்டு முடித்தே எழுந்தாள். அவளை எண்ணி மனதில் வெம்பிக்கொண்டிருந்தவர்களுக்கு இதுவரை அவள் வெளிவந்ததே போதும் என்றிருந்தது.



“நீயும் குளிச்சுட்டு வந்து உட்காரேன் இன்பா? ஏதும் கோவிலுக்கு போறதுனா போயிட்டு வா!!” ஒண்டிவீரர் சொல்ல, தலையசைப்போடு எழுந்தவன், சிரமத்தோடு மாடியேறி சென்றான். குளித்துவிட்டு முன்பு அணிந்திருந்த வேட்டி சட்டையை பத்திரமாய் மடித்து ஒரு நெகிலிப்பையில் போட்டு பீரோவின் அடியில் திணித்து வைத்தான்.



பின்பு, இயல்பு உடைக்கு மாறியவன் கீழே செல்ல, வாசலில் கார் நிற்கும் சத்தம் கேட்டது. காண்டீபன் தான் வந்திருந்தான். வேக வேகமாய் உள்ளே நுழைந்த காண்டீபன் படிகளில் இறங்கி வரும் இன்பனை கண்டு ஆத்திரமாய், “எங்கடா போன இவ்வளோ நாளா?” என்றான்.



“டேய், வந்ததும் வராததுமா ஏண்டா கத்துற?” சிவகாமி தடுக்க, “இவனை தேடி தேடி, ரோட்ல நாயா சுத்துன எனக்கு தானே தெரியும்!” கடுப்படித்தான்.



“பொறுமையா கேட்டுக்கலாம் காண்டீபா! கொஞ்சம் அமைதியாகு!!” என்ற ஒண்டிவீரர், அப்போதே அவனை கூர்ந்து நோக்க, “என்ன கைல அடிப்பட்டுருக்கு?” என்றார் வினாவாய்.



கேள்வி தன்னிடம் திரும்பியதும் தடுமாறியவன், “அது.... சின்னதா அடி!! கம்பில கை சிக்கி... கொஞ்சம்....” என்று சொல்ல தெரியாமல் அவன் சொல்லிக்கொண்டிருக்கும்போதே சிவகாமி அவன் கையை ஆராய தொடங்கியிருந்தார்.



“கம்பில கிழிச்சியா? பார்த்தா அப்படி தெரியலையேடா? வேற எதுவும் பிரச்சனையா?” என்றார் சரியாய்.



“ப்ச்!! ஒன்னும் இல்ல!” என்று வெடுக்கென அவரிடம் இருந்து தன் கையை உருவிக்கொண்டவன், “எங்க போயிருந்தன்னு ஒழுங்கா சொல்லு! அந்த கிஷோரை கவனிக்க வேண்டிய விதத்துல கவனிசாச்சு! அவன் எதுமே செய்யலன்னு சொன்னதால தான் கம்ப்ளைன்ட் குடுத்து உன்னை தேடிட்டு இருந்தேன்! இப்போ திடீர்னு வந்து நிக்குற? எங்க போயிருந்தன்னு மரியாதையா உண்மைய சொல்லு!!” மீண்டும் இன்பனிடமே வந்தான் காண்டீபன்.



“மண்டபத்துல உன்னை காணோம், உனக்கு அடிப்பட்டுருக்குன்னு ஒருத்தன் சொன்னான், அதான் உடனே கிளம்பிட்டேன்!” மெல்லிய குரலில் ஒப்புவிப்பவன் போல இன்பன் சொல்ல,



“காணா போறதுக்கு நான் என்ன கைக்குழந்தையாடா? இல்ல, யாராது அடிச்சா திருப்பி அடிக்குற அளவுக்கு எனக்கு திராணி இல்லன்னு நினைச்சியா? நீ வந்து தான் என்னை காப்பாத்தணும்ன்னு எந்...த அவசியமும் இல்ல எனக்கு!” மிக காரமாய் அவன் கத்த,



“சரிதான்! நான்தான் அவசரப்பட்டுட்டேன்!” எங்கோ பார்த்தபடி நிதானமாய் சொன்ன இன்பனை அதற்குமேல் என்ன சொல்லவென காண்டீபனுக்கு தெரியவில்லை. அவனிடம் காணப்பட்ட சோர்வு காண்டீபனை நிதானிக்க வைத்தது.



“எப்படியோ போ!!” என்ற காண்டீபன் அவனறைக்கு செல்லப்போக வழியில் புது மலராய் நின்ற கோகிலாவை கண்டு, அவன் கண்கள் நிம்மதியடைந்தது.



இன்பன் ஏதோ சிந்தனையிலேயே உழன்றுக்கொண்டிருந்தான். அவனுக்கு கோகிலாவிடம் சென்று பேச வேண்டும் என்றுக்கூட தோன்றவில்லை. கோகிலாவும் அவன் இருந்த திசைக்கு கூட செல்லவில்லை.



இரவு உணவுக்கு பின்னே படுக்க வேண்டி அறைக்கு செல்ல, அவனுக்கு முன்னே அவனறையில் சுருண்டிருந்தாள் கோகிலா. மெல்லிய புன்னகை அவனிடம்!



கீழே வந்தவன் கூடத்தின் ஓரத்தில் சுருண்டுப்படுத்துக்கொண்டான். கடையடித்து விட்டு வீட்டிற்கு வந்த சத்தியராஜன் ஹாலிலேயே இருந்த இன்பனை கண்டு, “டேய் எங்கடா போன மூணு நாளா?” என்று குரல் உயர்த்த, ‘இதைத்தாண்டி வேறு கேள்வியே தன்னிடம் வராதா?’ என அலுத்துப்போனது இன்பனுக்கு.



தன் நலம் வேண்டிய ஒரு கேள்வி கூட யாரிடம் இருந்தும் வரவில்லையே! என்ற எண்ணமே அவனுக்கு உடலை தளர செய்தது.



“ஷ்... சத்தியா? சாப்பிட்டுட்டு தூங்கு! காலைல பேசிக்கலாம்!” ஆபத்தாண்டவராய் வந்து நின்றார் ஒண்டிவீரர். மறுபேச்சின்றி அவனை முறைத்தபடியே சென்றுவிட்டார் சத்தியராஜன்.



“பால் எடுத்து வைக்கவா?” இன்பனின் அருகே கடமைக்காய் ஒலித்த தங்கத்தின் குரலில் நிமிர்ந்தும் பாராமல், “வேண்டாம்” என சொல்லியிருந்தான் பேரின்பன்.



பொழுது பொறுமையாய் புலர, குறுக்கி படுத்திருந்த இன்பன் காலை நீட்ட முயன்றான். எழும் வலியை உதடு கடித்து விழுங்கியவன், தம்க்கட்டி எழுந்து அமர, எப்போதும் கண் விழிக்கையில் கண் முன்னே சிரித்த முகமாய் தெரியும் தன் அன்னை வைதேகியின் சிரிப்பை நான்கு நாட்களாய் இழந்துக்கொண்டிருக்கிறான். இன்றும் கண்முன்னே அவர் இருக்க மாட்டார் என அறிந்து மனதோடு அவரை கொண்டு வந்தவன், மானசீகமாய் பேசிவிட்டு கண் திறக்கையில்...



“மாப்பிள்ளை! என் பொண்ணை நீங்க தான் கல்யாணம் செஞ்சுக்கணும்! மாட்டேன்னு மட்டும் சொல்லிடாதீங்க!! நான் பேசுனதெல்லாம் மன்னிச்சு, என் பொண்ணை ஏத்துக்கோங்க!!” என கரம் குவித்து தலை குனிந்து பேரின்பன் முன்னே நின்றிருந்தனர் ஷங்கரும் செல்லமும்!



-வருவான்...
 
Enna ஆச்சு avanuku.... Aiyayao ethuyum பெருசா sollidathinga.... காலு nitta mudiyaatha வலி enna aachi... மாத்திரை vera poraan.... Yaarum avanuku enna aachi nu kekala avanodaya நலனை visarikala... Kishore onnum pannala kaandipan visarichi taan ah appo யாரு என்ன panninathu... இங்க நடந்த விஷயத்தை கேள்வி பட்டு தான் vanthuthe இருக்கான் இல்ல naa வந்து இருக்க maataa naa.... Kishore ah pathi எல்லா உண்மை யும் kokila oda அப்பா அம்மா kita sollitaanga... இப்போ inban ah கல்யாணம் பண்ணிக்க கேக்குறாங்க... Enna solla porano.. Very very emotional episode
 

Advertisement

Top