Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கோகுலத்தில் ராமன் - 11

Advertisement

பிரியா மோகன்

Tamil Novel Writer
The Writers Crew
அத்தியாயம் 11

மில்லின் அலுவலக அறையில் சுழல்நாற்காலியில் அமர்ந்துக்கொண்டு கணக்குவழக்கை மேற்ப்பார்வையிட்டுக்கொண்டிருந்தான் காண்டீபன். அவன் கண்கள் சில நேர அலைப்புருதலில் புருவம் சுருங்கிட, “ஜோதிலிங்கம் அண்ணே” என சத்தமாய் அழைத்திருந்தான்.



அவன் விளிப்பிற்கு விரைந்து வந்த கணக்கர், “சொல்லுங்க தம்பி” என கேட்க, “நான் என்ன சொல்றது? நீங்க தான் சொல்லணும்! பத்து நாள் முன்னாடி குடுத்தனுப்புன அரிசி லோடுக்கு இன்னமும் காசு வாங்காம விட்டுருக்கீங்க?” என அவன் கேட்டதும் தான் அவருக்கு இதன் நினைவே வந்தது.



தலையை சொரிந்தவர், “அது தம்பி... எப்பவும் குடுக்கல் வாங்கல் எல்லாம் இன்பா தம்பி தான் பொருப்பெடுத்துக்கும்! நான் வெறும் கணக்கு வழக்கை எழுதுறது மட்டும் தான்!” என்றார் தயக்கமாக.



காண்டீபன் கோவம் கொண்டு கத்துவான் என அவர் எதிர்ப்பார்க்க, அவனோ மிக சாதாரணமாய், “ஹோ! இனிமே நீங்களே எல்லாம் பார்த்துடுங்க! முடிலன்னா வசூலுக்கு ஒரு ஆள் கூட போட்டுக்கோங்க! இப்போ இவங்க குடுக்க வேண்டியதை வாங்கிட்டு கணக்குல ஏத்திடுங்க” என்றான்.



அவனது பொறுமையான பதிலை கண்டு பேராச்சர்யம் கொண்டவர் ‘சரி’ எனும்படி தலையாட்டியபடியே சென்றுவிட்டார். அவர் சென்றதும் முன் மேசையில் தலை கவிழ்ந்து படுத்துவிட்ட காண்டீபனுக்கு, இன்பன் வீட்டை விட்டு சென்று வெறும் பத்து நாட்கள் தான் ஆகிறது என்பதை நம்ப இயலவில்லை. அவனை பார்க்காத இந்த பத்து நாட்களும் ஒரு நீண்ட வருடம் போல நகர்ந்துக்கொண்டிருந்தது அவனுக்கு.



‘அவனை வீட்டை விட்டு போக சொல்லிருக்கக்கூடாதோ?’ என காண்டீபன் எண்ணாத நிமிடமில்லை.



எந்த ஒரு வாக்குவாதத்தின் முடிவிலும் இயல்பாய் காண்டீபன் வாயில் இருந்து வருவது தான், ‘வீட்டை விட்டு போடா’ என்பது! ஆனால் அன்று ஸ்திரமாய் இன்பன் வெளியேறியே ஆக வேண்டும் என அவன் நின்றதற்கு என்ன காரணம் என்று இன்றும் அவனுக்கு விளங்கவில்லை. ஒருவேளை இன்பன் தளைந்து பேசியிருந்தால் தன் பிடியில் இருந்து இறங்கியிருப்பானோ என்னவோ!?



அவன் சென்றது தொட்டு வீட்டில் எந்நேரமும் மயான அமைதி தான். ஒண்டிவீரர் எப்போதும் போல தங்கள் நகைக்கடைக்கு போக வர இருந்தாலும் வியாபாரம் தொடர்பாகக்கூட இந்த பத்து நாட்களில் காண்டீபனிடமும் சத்தியராஜனிடமும் ஒரு வார்த்தை பேசிடவில்லை.



சிவகாமியை அவன் கண்ணால் காண்பதே அரிதாய் போனது. கோவிலுக்கும் கடைக்கும் என அடிக்கடி அவர் வெளியே வந்துக்கொண்டிருந்தாலும் இவன் வரும் நேரம் அவர் எங்கு தான் இருப்பாரோ? அவன் எதிரில் வருவதே இல்லை. தங்கம் சமையலை கவனித்தாலும் இவர்களுக்கு பரிமாற என அருகில் வராததால், சுசீலா தன்னால் அந்த பொறுப்பை எடுத்துக்கொண்டாள்.



இன்பன் வெளியேறியதில் நடந்த ஒரே நல்லது சுசீலா அவனிடம் சற்று நெருக்கம் காட்டியது மட்டுமே!! அது மட்டுமே அவனுக்கு சிறு ஆறுதலாய் அமைந்தது.

காண்டீபன் அவளிடம் பேசுவதே ஒன்றிரண்டு வார்த்தைகள் தான். அதுவும் அவளாக ஏதேனும் கேட்டால் மட்டுமே!



வீட்டில் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கப்பட்டிருக்க, இது எதிலும் சம்பந்தப்படாது, முன்பை விட வெகு இயல்பாய் இருந்தது வேறு யாராய் இருக்கும்...? சத்தியராஜன் மட்டுமே!!!



டமையென வேலையை முடித்தவன், மதியநேரம் நெருங்கவே வீட்டிற்க்கு சென்றான். முன்பிருந்த துடிப்போ நிமிர்வோ கோவமோ ஏதோ ஒன்று அவனிடம் குறைய அது அவனை சோர்ந்த உருவமாகவே காட்டியது.



வீட்டிற்குள் வந்தவனை வரவேற்க வெறிச்சோடிய முற்றமே காத்திருக்க, அது அவனுக்கு இன்னமும் சோர்வை கொடுத்தது. அடுக்களை தாண்டி சென்றுக்கொண்டிருந்த வேலையாளை அழைத்தவன், “எல்லாரும் எங்க?” என்றான்.



“அம்மா கொளப்பலூர்ல ஒரு வளைகாப்புக்கு போயிருக்காங்க! ஐயாவுக்கு கடைக்கே சாப்பாடு அனுப்ப சொல்லிட்டாவ! தங்கமக்கா இப்போதான் சித்த படுக்குறேன்னு போனாவ” என்றார் அவர். சிறு தலையசைப்பில் அவரை அனுப்பியவன், மெல்ல மாடியேறினான்.



அறைக்கதவு திறந்தே இருக்க, லேசாக கதவில் இருமுறை தட்டிவிட்டு அவன் உள்ளே சென்றான். அறையும் வெறுமையாய் காட்சியளிக்க மௌனமாய் கட்டிலில் சரிந்தவனை “எப்போ வந்தீங்க?” என எதிர்க்கொண்டாள் சுசீலா.



“எங்க போன?”



“அது... பாத்ரூம்”



“ம்ம்ம்...” பேசாமல் அவன் படுத்துக்கொள்ள, “சாப்பிட்டுட்டு தூங்கலாமே?” என்றாள் சுசீலா.



‘வேண்டாம்’ என தலை மட்டும் அவன் அசைக்க, அடுத்து அவள் அங்கே இல்லை. சில நிமிடங்களில் மீண்டும் அவன் முன்னே வந்த சுசீலா, “சாப்பாடு கொண்டு வந்துருக்கேன், சாப்புடுங்க” என்றாள்.



கையில் தட்டுடன் நிற்ப்பவளை மறுத்து பேச முடியாது மெதுவாய் எழுந்து அமர்ந்தான் காண்டீபன். அங்கிருந்த டேபிளில் தட்டை வைத்து அவன் அமர ஏதுவாக நாற்காலியை எடுத்து போடுபவளை யோசனையாகவே பார்த்தான் காண்டீபன்.



இந்த பத்து நாட்களில் அவளிடம் தெரியும் மாறுதல்கள் அவனை யோசிக்க தான் வைக்கிறது. மரியாதை குறைவாய் ‘போ வா’ என ஏசிக்கொண்டிருந்தவள் ‘ஏங்க, என்னங்க’ என்றால் அவனும் யோசிக்கத்தானே செய்வான்?



பொறுமையாய் உண்டு முடித்தவன், எழுந்து சென்று கட்டிலில் அமர்ந்துவிட, ‘மில்லுக்கு கிளம்பாம இருக்காங்க?’ என சிந்தித்தாள் சுசீலா. நிமிடங்கள் கடந்தாலும் அவன் கிளம்புவது போலவே தெரியாததால், அவள் தன் வேலைகளை பார்க்க தொடங்கினாள்.



சிறிது நேரம் சுவரை வெறித்தபடி இருந்த காண்டீபன் கண்களை திருப்ப, அங்கே காதோடு சேர்ந்த தாடை எலும்பை அழுத்திக்கொண்டு சுசீலா அமர்ந்திருப்பதை கண்டு, “என்னாச்சு?” என்றான்.



திடீரென்ற அவன் குரலில் பதறி திரும்பியவள், வார்த்தைகள் வராது தந்தியடிக்க, அவனாகவே, “இன்னுமா வலிக்குது?” என்றான்.



“ம்ம்ம்...”



“பின்ன, அடிச்ச அடி அப்படி!”

அவன் கோவமாய் சொல்கிறானா நக்கலாய் சொல்கிறானா என்றே அவளுக்கு விளங்கவில்லை.



ஏதோ ஒரு களிம்பை எடுத்து வந்து “காட்டு” என அவள் முகத்தை திருப்பி வலித்த இடத்தில் அவனே தடவி விட, அவனையே விழி அசைக்காது பார்த்துக்கொண்டிருந்தாள் சுசீலா.



அவள் பார்வையை கண்டு, ‘என்ன?’ என அவன் புருவம் உயர்த்த, படக்கென மூடிக்கொண்டன அவள் நயனங்கள்.



“மருந்து போட்டுருக்கேன்! சரியாகிடும்” என்ற காண்டீபன் அவளை விட்டு நகர்ந்தபின்னரே கண் திறந்தாள் சுசீலா.



“நீங்க ஏன் இப்போலாம் குடிக்குறதே இல்ல?”



நகர்ந்தவன், நின்று அவளை நோக்கி திரும்பி, “ஏன் குடிச்சுட்டு வர சொல்றியா?” என்றான்.



வேகமாய், “இல்ல, இல்ல, குடிக்காம இருந்தா தான் நல்லா இருக்கு” என்றாள் மெதுவாய்.



“ம்ம்ம்”



வெகுவாய் தயங்கியவள் சில நாட்களாய் அவனிடம் சொல்லத்துடித்ததை உள்ளே சென்றுவிட்ட குரலில் வெளியிட்டாள்.

“நான் அன்னைக்கு பேசுனது தப்பு தான்”



சுசீலா சொன்ன மறுநொடி, “தெரியும்” என்றான் காண்டீபன்.



அவளுக்கோ அதிர்ச்சி! ‘இவருக்கு எப்படி நான் பேசுனது தெரியும்?’



“உங்ககிட்ட யாரு சொன்னது?”



“நானே கேட்டேன்! அன்னைக்கு இன்பன் அடிக்கலன்னாலும் உனக்கு அடி கிடைச்சுருக்கும்! என் கையால!!” காண்டீபன் நிதானமாய் சொல்ல, சுசீலாவுக்கு அன்றைய நாளின் தாக்கம் இன்னமும் குறையாது மேனியில் சிறு நடுக்கமாய் வெளிப்பட்டது.



“அவன் அடிச்சது சரி, ஆனா அடிச்சது தான் தப்பு”



சுசீலா, “புரியல”



“ம்ம்ம்... அவன் அடிச்சதுக்கான காரணம் சரிதான்! ஆனா அவனே உன்மேல கை வச்சது தான் தப்பு! என்ன இருந்தாலும் தம்பி பொண்டாட்டி தானே நீ! அவன் எப்படி அடிக்கலாம்? அந்த கோவம் தான் எனக்கு!” முடிந்தவரை பொறுமையாய் அவளுக்கு விளக்கினான்.



அவன் சொன்னதை கிரகித்தவள் போல, “ம்ம்ம்” என சுசீலா முனக, அவனுக்கு இன்றே சிலவற்றை சொல்லிவிட வேண்டும் என்ற உந்துதல். இத்தனைநாளும் வார்த்தைகளில் இருந்த பேச்சு, வரிகளுக்கு முன்னேற்றமடைய, அவனுக்கு பேச்சை நீட்டிக்க தோன்றியதோ என்னவோ!!!!



“இங்கப்பாரு! நீ வெளில இருந்து வந்தவ! ஆனா கோகிலா இந்த வீட்டு பொண்ணு! அவ என் அத்தை மவங்கற உரிமையையும் தாண்டி, அவ என்னோட அண்ணி ஆகுறதுக்கு முன்னாடியே எனக்கு கிடைச்ச ஒரு ஃபிரண்டு! உன்னை காதலிக்குறதை முதன்முதல நான் அவக்கிட்ட தான் சொன்னேன்! நீ எனக்கு கிடைப்பியா மாட்டியான்னு தெரியாம இருந்தப்போ அவ குடுத்த தைரியம் தான் உங்கப்பன்க்கிட்ட உன்னை பொண்ணை கேட்கவே வச்சுது!” என நீளமாய் சொல்ல,



‘என்னை லவ் பண்றதை என்கிட்டே சொல்லாம ஊருக்கே சொல்லிட்டு இந்த வீராப்பு பேச்சுக்கொன்னும் குறைச்ச இருக்காது’ என சுசீலா முனகினாள் கழுத்தை நொடித்துக்கொண்டு.



“என்ன?” காண்டீபன் சிறு அதட்டல் இட, “ஒன்னுமில்லை அத்தான்!!” என்றாள் அவசரமாய்.



வெகு நாட்களுக்கு பின்னான அவளின் ‘அத்தான்’ என்ற அழைப்பு அவனை மீண்டும் இதமாக்கி பொறுமையாய் பேசத்தூண்ட, “கோகிலாவை எந்த பேச்சும் இனி பேசக்கூடாது! புரிஞ்சுதா? உன்னை விட வயசுல பெரியவ, அதுக்காகவேனும் மரியாதை குடுக்கணும்! சரியா?” என கேட்க,



“ம்ம்ம்...ம்ம்ம்...” என தலையாட்டினாள் சுசீலா.



“என்ன ம்ம்ம்?”



“ம்ச்! நான் என்ன வில்லியா? ஏதோ கோவத்துல அன்னைக்கு பேசிட்டேன்! அதுக்காக எப்பவும் அப்படி இருப்பேனா? என்னால வீட்ல அன்னைக்கு சண்டை வந்து மாமா கோச்சுட்டு போயிட்டதுமே மனசுக்கு ரொம்ப கஷ்டமா போச்சு! எல்லாம் என் வாயால தானேன்னு... இங்க யாருமே என்கிட்டே பேசக்கூட மாட்டேங்குறாங்க!!”



சுசீலா சோகமாய் சொல்ல, ‘இன்னும் அவளின் ‘மாமா’ புராணம் முடிவுக்கு வர வில்லையா?’ என நொந்தே போனான் காண்டீபன்.



“அப்போ இன்பன் போயிட்டானேன்னு தான் உனக்கு கவலையா?” கோவத்தை அடக்கிக்கொண்டு கேட்க,



அவன் சினத்தை சீறிவிடும்படி, “ஆமா” என்றாள் சுசீலா. அடுத்து காண்டீபன் கத்துவதற்குள், “இத்தனை வருஷமும் உங்களுக்கு அவர்கூட ஆகாது தான், அப்போ எல்லாம் கோச்சுட்டு வீட்டை விட்டு போகாதவரு, அன்னைக்கு ஒரு நா சண்டைல போயிட்டாருன்னா அதுக்கு நான் தானே காரணம்? எனக்காக தானே நீங்களும் அவர்க்கிட்ட சண்டை பிடிச்சீங்க?” என்றாள் மெய்யான வருத்தத்தோடு!



“மாமா திரும்ப வீட்டுக்கு வரணும்ன்னு தினம் ஆயிரத்தி எட்டு ஸ்ரீராமஜெயம் எழுதி மாலையா கட்டுறாங்க தங்கம் சித்தி! பாட்டியும் சலிக்காம தினம் போய் சாமிக்கு அதை போட்டுட்டு வராங்க!” என அவள் சொல்ல அது புது தகவலாய் இருந்தது அவனுக்கு.



“என்னோட கோபமெல்லாம் ஏன் என்கிட்டே யாருமே நேரிடையா பேசலங்குறது தான்! நீங்க என்னை ரெண்டு வருஷமா காதலிக்குறதா சொன்னீங்க! ஆனா அதை என்கிட்டே ஏன் முன்னமே தெரிவிக்கல? என்னோட பேச உங்களுக்கு என்ன தயக்கம்?” என கேள்வி எழுப்ப,



அவளிடம் என்னவென்று சொல்வான்? உன்னை பார்த்தாலே நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக்கொண்டு உடல் வியர்வையில் முக்குளித்தது என்றா!? அவன் திமிரையும் நிமிர்வையுமே பார்த்து பழகியவளுக்கு இதை அவன் சொன்னாலும் நம்பத்தான் முடியுமா?



“இன்பா மாமா எப்பவுமே என்கிட்டே சிரிச்சு பேசுனது கிடையாது! ஒரு ஒதுக்கத்தோடவே தான் நடந்துப்பாரு... அதுக்கான காரணம் எனக்கு தெரியாதப்போ எங்கிருந்தோ ஒருத்தி வெள்ள வெள்ளேருன்னு வந்து குதிக்க, அவக்கிட்ட மட்டும் மாமா சிரிச்சு சிரிச்சு பேசுறதை பார்த்தா ‘கட்டிக்கப்போறவன்னு’ முடிவான ஒரு பொண்ணுக்கு எப்படி இருக்கும்?”



“நானே என் பிரண்ட்ஸ் கிட்ட எல்லாம் பந்தயம் கட்டி வச்சுருந்தேன், உங்க வீட்டுக்கு தான் மருமகளா போவேன்னு! எங்க நான் தோத்துப்போயிடுவேனோன்னு பயம்! அப்பாக்கிட்ட பேசி அவசரமா நிச்சயம் செஞ்சோம்!

என் மேல எந்தவித விருப்பமும் இல்லன்னு மாமா சொல்லிருக்க வேணாம்! ஆனா, கோகிலா மேல தான் விருப்பம் இருக்குன்னாது சொல்லிருக்கலாம்ல? இன்னொருத்தி மேல ஆசைப்படுறவனை நான் கட்டிக்க நினைப்பேனா? அவ்வளோ மோசமான பொண்ணா நானு?”



சுசீலா இப்படி கேட்க, காண்டீபனுக்கு தொண்டையில் முள் சிக்கிய நிலைதான்!



“எல்லாத்துக்கும் மேல நாங்க குடும்பத்தோட ஊருல இல்லாத நேரமா பார்த்து எல்லாமே நடந்து முடிஞ்சுடுச்சு! என் நேரமோ என்னவோ, அப்பாரு ஃபோனு தண்ணில விழுந்து கெட்டுப்போக, தகவல் சொல்லி உடனே எங்களை வர வைக்கக்கூட வழி இல்லாம போச்சு!” அவள் கண்களை துடைத்துக்கொள்கிறாள் என்பது பாராமலே அவனுக்கு புரிந்தது.



“இதுல வந்ததும் வராததுமா ஊர் கேலிக்கு நடுவுல சின்னவர் கூட கல்யாணம்ன்னு சொன்னா, நானும் மனுஷி தானே? எனக்கும் அதிர்ச்சி, கோவம், தாபம், ஆதங்கம் எல்லாம் வரும் தானே? கொட்ட இடம் தெரியாம, முறையும் தெரியாம நிறைய பேசிபுட்டேன்! ஆனா சத்தியமா சொல்றேன், எதையுமே மனசுல வஞ்சம் வச்சு பேசல” என்றாள் கண்ணீரோடு!



அவளை ஆரத்தழுவி நெஞ்சோடு அணைத்து சமாதானம் செய்ய மனம் துடித்தாலும், ஏனோ தயக்கம் வந்து கட்டிப்போட்டது.



“நான் பேசுனதெல்லாம் நியாப்படுத்துறேன்னு நினைக்காதீங்க! மனசார மன்னிப்பு கேட்குறேன்! இந்த குடும்பத்தை பிரிக்கனும்னோ, உங்களை பிடிக்காம தான் இப்படி செய்யுறேன்னோ என்னை தப்பா மட்டும் நினைக்காதீங்க!” என்றாள் வேண்டுதலாய்.



“உங்களை பிடிக்கலன்னா நான் ஏன் இங்க இருக்கணும்! தினம் குடிச்சுட்டு வர புருஷனை சகிச்சுக்கிட்டு இருக்கனும்ன்னு எனக்கென்ன தலையெழுத்தா? கட்டிக்கிட்ட நாளுல இருந்து இந்த ரூமே கதின்னு இருக்கேன்! அடுத்த தெருவுல இருக்க அப்பா வீட்டுக்கு கூட போகல!!” சிறு குழந்தை என அவள் தேம்பி அழ, அதற்க்கு மேல் அவனால் கையை கட்டிக்கொண்டு இருக்க முடியவில்லை.



“ஹே... இங்க வா” என்றான் தன் முழுக்கரத்தையும் நீட்டி. அழுதுக்கொண்டே அவன் அருகே சென்று அமர்ந்தாள் சுசீலா.



இரு கரங்களிலும் அவள் முகத்தை மலரென தாங்கிக்கொண்டவன், “என்னைப்பாரு” என்றான் அதட்டலாய்.



பட்டென அவள் விழி விரித்ததில் இரு நீர் மணிகள் உருண்டு அவள் கன்னம் தொட, பெரு விரலால் அதை துடைத்தெடுத்தவன், “உன்னை எப்பவுமே எனக்கு பிடிக்கும்...! புரியுதா?” என்றான் சுற்றிவளைக்காமல்.



“நா...நா... கருப்பா இருக்கேனே?” அவள் மனத்தை அரிக்கும் அந்த ஒற்றைக்கேள்வியை முன்வைக்க, துடித்து எழுந்த சிரிப்பை உதட்டை கடித்து அடக்கிகொண்டான் காண்டீபன்.



“நீ கருப்புன்னு யாரு சொன்னது? மாநிறம்!! அதுலயும் சிரிச்சா அத்தனை அழகு!! உன்னை முதன் முதல உன்னோட சடங்குல தான் நிதானமா பார்த்தேன்! புது புடவை கட்டி பெரிய பொண்ணாட்டம் உன்னை ஜோடிச்சு வச்சுருந்தாங்க! முகம் முழுக்க மஞ்சள் பூசி, கன்னத்துல கைல எல்லாம் சந்தனம் வச்சு, சிரிச்சு சிரிச்சு பேசிக்கிட்டு இருந்த உன்னைவிட்டு என்னால கொஞ்சமும் கண்ணெடுக்கவே முடியல தெரியுமா? அப்போ ஒருத்தர் வந்து ‘தம்பி, பங்காளி சண்டை இப்போதிக்கு ஓயாது! அதனால புள்ளைக்கு நீங்களே மாலை போட்டு குடிசை கட்டுங்க’ங்ன்னு சொல்லி என் கைல சம்மங்கி மாலையை குடுத்தப்போ,

உப்ப்ப்ப்.... அதை உன் கழுத்துல போடுறதுக்குல்ல என் கை நடுங்குன நடுக்கம் இருக்கே!! யப்பாஆஆ!!! அப்போவே முடிவு பண்ணிட்டேன், கட்டுனா உன்னைதான் கட்டணும்ன்னு!!” என்றான் கண்கள் மின்ன.



அவன் வதனத்தில் வந்து போன உணர்ச்சிகளை விரிந்த உதடுகள் மூடாது பார்த்துக்கொண்டிருந்தாள் சுசீலா. ‘இவனுக்கு இப்படி கூட பேசத்தெரியுமா?’ என்ற ஆச்சர்யம்.



“என்னவோ, நீ சின்ன பொண்ணு, சின்ன பொண்ணுன்னு நினச்சு என் மனசுல இருக்குறத சொல்லாமையே விட்டுட்டேன்” என்றான் அவன் பயந்து நடுங்கியதை வெளியே சொல்லாது!!



“நடந்த எதையும் மாத்த முடியாது! இனிமே நடக்குறதை நல்லதா நடத்த நம்மலால முடியும்! இல்லையா? அதனால கண்டதையும் யோசிக்காம, போய் முகத்தை கழுவிட்டு ரெடியாகு, உன் அப்பா வீட்டுக்கு போலாம்!!” என்றான்.



‘அப்பா வீடு’ என்றதுமே, சுருங்கியிருந்த முகத்தில் நொடிப்பொழுதில் குவிந்து எழுந்தது உவகை.



“நிஜமாவா?” சந்தோசத்தில் அவள் குரல் கூட ஓங்கி வர, “ம்ம்ம்... ராத்திரி சாப்பாட்டை அங்கேயே முடிச்சுட்டு, அப்படியே உன் காலேஜ் பேகு, புக்கு எல்லாம் எடுத்துட்டு வந்துடுவோம்” என்றான்.



பொங்கிய பாலில் தண்ணீர் தெளித்ததை போல அவள் உவகை இருந்த இடம் தெரியாது ஓடி ஒளிய, “அது எதுக்கு?” என்றாள் பாவமாய்.



“எதுக்கா? செமெஸ்டர் லீவு முடிஞ்சு அடுத்த வாரம் காலேஞ் திறக்குறாங்க தானே? இன்னும் ரெண்டு வருஷ படிப்பு பாக்கி இருக்குல்ல...”



“அதான்...கல்..யானம்.. ஆகிடுச்சே” விட்டால் அழுதுவிடுபவள் போல சொன்னவளை கண்டு, “அப்போ காலேஜ் போகாம வீட்ல உட்கார தான் கல்யாணம் செஞ்சுக்கிட்டியா?” என்றான் அதட்டலாய்.



“ம்ஹும்...ம்ஹும்” அவள் சினுங்களை கொஞ்சமும் பொருட்படுத்தாது மாமியார் வீட்டுக்கு அழைத்து சென்றவன், நிதானமாய் விருந்தை முடித்துக்கொண்டு மறக்காமல் அவள் கல்லூரி செல்ல தேவையானவற்றை எடுத்து வந்து விட்டே ஓய்ந்தான்.



இரவு தங்கள் அறைக்குள் வந்ததுமே முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு கட்டிலில் விழுந்த மனையாளை காண்கையில் அவனுக்கு சிரிப்பு சிரிப்பாக வந்தது.

ஏனோ, சுசீயிடம் பேசிய பிறகு மனதின் அழுத்தம் குறைந்ததை போல அவன் உணர, காரணமேயின்றி தமையனின் நினைவும் மின்னலென மனதில் வந்து போனது.



சோளக்காட்டில் குடியேறிய பின்பு எந்த காரணம் கொண்டும் இவர்களை காண இன்பன் வந்தபாடியில்லை. இரவு சூழ்ந்த அந்நேரம், காற்றில் ஆடும் பயிர்களும், கீச்சிடும் பூச்சிகளும், தூரத்தில் அகவும் மயில்களுக்கும் நடுவே, அந்த ஓட்டு வீட்டில் இருந்து மெல்லிய சங்கீதமாய் ஒலித்துக்கொண்டிருந்தது கோகிலாவின் கெஞ்சல் மொழி.



“ம்ச்.... மாமா.... போதும் மாமா!!!”

“சொன்னா கேளுங்க மாமா....”

“வேண்டாஆஆஆம்ம்ம்....”

“ம்ஹும்...ம்ஹும்...”

“முடில மாமா... ப்ளீஸ்....”

“மாமா.....!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!”



-வருவான்....
 
:love: :love: :love:

ஒருவழியா காண்டீபனும் சுசீலாவும் மனசு விட்டு பேசிட்டாங்க...

என்னாது கடைசியில வர்றது கோகிலாவோட கெஞ்சல் மொழியா?? கொஞ்சல் மொழியா???
இதெல்லாம் கேட்டு நாங்க ஏமாந்துற மாட்டோம்... நீங்க நல்லாவே பல்பு கொடுப்பீங்க...
 
Last edited:
????? உடல் நலம் ஒத்துழைக்க மாட்டேங்குது... நான் என்ன செய்ய??? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
அப்படீன்னா போட்டி கதை எப்படி எழுத போறீங்க??? பேரு வேற ரெஜிஸ்டர் பண்ணிருக்கீங்க...
 
அப்படீன்னா போட்டி கதை எப்படி எழுத போறீங்க??? பேரு வேற ரெஜிஸ்டர் பண்ணிருக்கீங்க...
அதுக்குள்ள உடம்பு நார்மல் ஆகிடும்ன்னு ஒரு நம்பிக்கை தான்... இப்போவே இதை கேட்டு பயமுறுத்தாதீங்க சிஸ்?
 
Top