Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 2

TNWContestWriter009

New member
Member
நிலா 2:

தோப்பில் ஏதோ அதிசயம் நடப்பது போல், ஊரே அவ்விடம் கூடி இருக்க, அதனின் விவரம் கேட்ட ராகவிற்கோ, "இது பித்தலாட்டம், யாரோ அனைவரையும் ஏமாற்றி கொண்டு இருக்கிறான்" என்ற எண்ணம் தோன்றவே, அது யார் என்பதை காண அவன் தோப்புற்குள் நுழையவும், தென்னை மரத்தில் இருந்து ஏதோ ஒன்று பலத்த சத்தத்தோடு தரையில் விழுந்தது.

அதனின் ஓசையில், அனைவரும் பதறி போய் இருக்க, அந்த இடத்தை நெருங்கினான் ராகவ்.. அவன் நெருங்கும் போதே.,

"ஹைய்யோ ஆத்தா கீழ விழுந்துட்டா... அவ்ளோ உயரத்துல இருந்து விழுந்து இருக்காளே.. அவளுக்கு என்ன ஆச்சுன்னு பாருங்க" என்றான் கூட்டத்தில் ஒருவன்.

"அவ ஆத்தாடா.. அவளுக்கு என்ன ஆக போகுது.. நீ எதுக்கு பதறி மத்தவங்களையும் பதற வெக்குற?" கேட்டான் கூட்டத்தில் மற்றொருவன்.

"ஊர காக்குற ஆத்தாளுக்கு இப்டி ஆகிடுச்சே.. யாராவது ஏதாவது பண்ணுங்கயா.. இல்லனா ஊருக்கே தீட்டாகி போய்டும்" என்றான் மற்றொருவன்.

"ஊர காக்குற ஆத்தாளுக்கு அவளை பாதுகாத்துக்க தெரியாதா.. அதெல்லாம் ஒன்னும் ஆகாது" என்றான் இன்னொருவன்.

இவர்களின் பேச்சுக்களை கேட்டுக் கொண்டே அந்த இடம் நெருங்கிய ராகவிற்கு எரிச்சல் தான் அதிகம் வந்தது.

"என்ன ஆச்சுன்னு கிட்ட போய் பாக்காம, தூரமா நின்னே கதை பேசிட்டு இருக்காங்களே.. ஆமாம் விழுந்தது யாரு.. என்ன ஆச்சு?" நினைத்தவன் உடனே அந்த இடம் நெருங்கியவன் கண்ட காட்சியில் சப்தமும் ஒடுங்கி சிலையாய் நின்றான் ராகவ்.

தலையில் கவிழ்ந்த நிலையில் தலை முடி மொத்தமும் விரிந்து முகத்தை மறைத்த வண்ணம், பச்சை நிற பட்டு தாவணியில் அவள் கிடந்தாள், ஊரே அம்மனாக நம்பும் அந்த பேதை.

இவ்வளவு நேரம் அம்மன் பேரை சொல்லி யாரோ ஒரு ஆசாமி ஊரை ஏமாற்றி கொண்டு இருக்கிறான் என்றே நினைத்து கொண்டு இருந்த ராகவிற்கு, அது ஒரு பெண் என்பதே அதிர்ச்சியை தான் தந்து இருந்தது.. அதுவும் அவள் பேச்சு மூச்சற்று தரையில் கிடப்பதை கண்டவனுக்கு, சந்தேகத்தை தாண்டி, பதற்ற உணர்வே முதலில் வர, உடனே ஓடி போய் அவளை தன் மடியில் கிடத்தி, திருப்பி முகம் பார்த்தான் ராகவ்.

இளம் வயது அடைந்தது போல இருக்கும் அவளுக்கு, நெற்றியை விட பெரிய குங்கும பொட்டும், முகத்தின் நிறத்தை மறைக்கும் விதம் பூசி இருக்கும் மஞ்சளும், இயற்கையாய் அவள் இதழ் கொண்ட ரோஜா நிறத்தையும் கடந்து, அவளின் தோற்றம் மட்டும் வாட்டத்தையே பிரதிபலித்து இருந்தது.

ஆம் இவள் தான் இந்த ஊர் மக்கள் நம்பி வணங்கும் அவர்களின் எல்லை காக்கும் அம்மன். அவளுள் இந்த ஊரின் அம்மன் உறைவதாய் நம்ப படும் பெண் அவள்.. ஊரின் எந்த நல்ல கெட்ட காரியம் நடப்பினும் அவள் இன்றி எங்கும் எதுவும் அசையாது.

நிலத்தில் செய்யும் முதல் பயிரும், ஊரில் பிறக்கும் முதல் குழந்தையும் கூட இவள் கை பட்ட பின், பொன்னாய் மலரும் என்றே நம்பினார் ஊரார்.. அதிலும் தோப்பு மரங்களுக்கு, செடி கோடிகளுக்கு நோயோ, பூச்சி தாக்குதலோ வந்தாலும் கூட, இவளை ஒருமுறை அழைத்து, பாதிக்கப்பட்ட இடத்தை அவள் வருடினால் போதும், அது கொண்ட துன்பம் நீங்கி நல்ல மகசூல் கிடக்கும் என்ற நம்பிக்கையும் உண்டு.

இதோ இன்று கூட, அந்த தென்னை தோப்பில் புதிதாய் முளைத்த குருத்தில் பூச்சி வைத்து, அதனால் தென்னை குலை பெறாமல் போனதால் தான், மரத்தின் மீது ஏறி அந்த குறுத்தை வருடி, அதன் பாவம் போக்க மரம் ஏறி இருந்தாள் இந்த பாவப்பட்ட பேதை.

ஆனால் நம்பிக்கைகளை கடந்து பார்த்தால், அவளும் பெண் தானே. ஊரையே காக்கும் அம்மன் உறைந்தாலும், பெண்ணின் இயல்பான மாத போக்கு அவளையும் இம்சித்து கொண்டு தான் இருந்தது.

அந்த நாட்களில் மட்டும் அதிகம் வெளியே வராமல், தன் கூட்டிற்குள்ளேயே சுணங்கி போய் கிடக்கும் அவளை, இன்று வம்படியாய் அழைத்து வந்து மரம் ஏற சொன்னால் அவள் மட்டும் என்ன செய்வாள்.. நில்லாது போகும் உதிரம், உணவின்றி காலியாய் கிடக்கும் வயிறு, அதில் உடலுக்கு இத்துணை சுமை கொடுக்கும் மரம் ஏறும் வேலை.

மரம் எற ஆரம்பித்த போது அதிகம் அசதி தெரியாததால் விறுவிறுவென ஏறி உட்சியை அடைந்தவளுக்கு, அங்கிருந்து தரையை பார்க்கும் போது தான் தலையே சுற்றியது.. உடலின் சோர்வு அவளுக்கு உடன் நில்லாமல் கை விரிக்கவே, தடுமாறியவள், ஆறடியில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்து விட்டாள் அவள்.

இது எதையுமே அப்போது அறியாதவன், தன் மடியில் கிடக்கும் அவளை இமைக்கவும் மறந்து பார்த்து கொண்டு இருந்தான் ராகவ்.

என்றோ பாதியில் மீட்டப்பட்டு விடப்பட்ட இசையின் மீதியை தன் மடியில் கண்ட உணர்வு அவனுக்கு.. கை உதறி விட்டு சென்ற உறவு ஒன்று, மடி சேர்ந்ததை போல ஒரு உணர்வு.. இத்தனை நேரம் இல்லாத ஒரு உணர்வு அவனை தாக்க, அதன் விளைவாய் புத்துணர்ச்சியோ, பரவசமோ கொண்ட அவனின் அணுக்கள், தானாய் முன்வந்து அவளின் குச்சி விரல்களை வருட, பஞ்சு விரிப்பானில் ஆங்காங்கே வடுவும், தழும்பும் கொண்டு மேடும் பள்ளமுமாய் கிடந்த அவளின் கைகளை உணர்ந்தவனுக்கு, முன்பு இருந்த ஏமாற்றுக்காரி என்ற எண்ணம் போய், "பாவம்" என்ற பரிதாபமே ஒட்டிக் கொள்ள, மீண்டும் அவளின் முகத்தில் தீர்க்கமாய் விழி பதித்தவன், அவனையும் அறியாமல் பெருமூச்சொன்றை வெளியேற்றி இருந்தான் ராகவ்.

இதுவரை மனம் சந்தித்திராத ஒரு புது உணர்வு ஒன்று அவனை தென்றலாய் தழுவி, அனைத்தும் மறந்தவன் அந்த மஞ்சள் முகத்தினுள் மறைந்து இருக்கும் அவளின் இயல்பை தேடி கிடந்த நேரம்,

"தம்பி என்ன பண்றீங்க? ஆத்தாவ தொட கூடாது... தீட்டாகிடும்.. மொதல்ல அவளை விட்டு எழுந்து தள்ளி வா.. அவளே மயக்கம் தெளிஞ்சி எழுந்துப்பா?" என்றான் கூட்டத்தில் ஒருவன்.

முகம் மொத்தம் வாடி, பேச்சு மூச்சற்று கிடக்கும் அவளை ஒரு சாதாரண பெண்ணாக மட்டுமே பார்க்க முடிந்த ராகவ்வால், இவர்கள் கூறும் ஆத்தாவின் சாயல் எங்கும் தென்படாது,மேலும் இவர்கள் பேசும் அர்த்தமற்ற பேச்சுக்கள் மேலும் கோவத்தை தரவே,

"அறிவில்லையா உங்களுக்கு? இவ இருக்க நிலைமை என்ன! நீங்க பேசுற பேச்சு என்ன? சுத்த புத்தி கேட்டக் கூட்டம்" திட்டியவன், மடியில் துவண்டு கிடந்தவளை தன் மார்போடு அள்ளி கொண்டு, தன் இரு கைகளாலும் ஏந்தி கொண்டவன்,

"இவளோட வீடு எங்க? இந்த ஊர்ல ஹாஸ்பிடல் எங்க இருக்கு?" கேட்டான் உயர்த்திய குரலில்.

அவனின் குரல் வெளிப்படுத்திய கோவத்தில் அவ்விடத்தில் இருந்த அனைவரும் அமைதியாகி விட,

"தம்பி வாங்க நான் கூட்டிட்டு போறேன்.. இதோ இங்க பக்கத்துல தான் வீடு" என்ற படி முன்னே வந்தார் பெருமாள்.

அவரின் பேச்சில் சற்று தளர்ந்தவன், அவரை பின் தொடர,

"எது, எப்படி நடக்க கூடாதுனு நெனச்சோமோ, அப்டியே நடக்குதே.. இது எல்லாம் ரகு தம்பி குடும்பத்துக்கு தெரிஞ்சா என்ன ஆகுறது.. இனி என்ன எல்லாம் நடக்க காத்திருக்கோ" அவன் கையில் துவண்ட பூ குவியலாய் கிடக்கும் அவளையும், அவளை பற்றி மட்டுமே கவலை கொண்டு, வாடிய முகம் கொண்ட ராகவையும் கண்ட பெருமாளுக்கு வேர்க்கவே செய்தது.

பெருமாள் கூறிய வழிகாட்டுதல் பேரில், சற்று தொலைவில் இருந்த ஓட்டு வீட்டு ஒன்றின் முன் நின்றவன், எதையும் யோசிக்காமல் அவளை கையில் ஏந்திய படி அந்த வீட்டிற்குள் நுழைய முற்பட்டான் ராகவ்.

"தம்பி தம்பி.. அந்த பொண்ண உள்ள எல்லாம் கொண்டு போக கூடாது.. பூசாரி அனுமதிக்க மாட்டாரு.. இதோ இப்டி திண்ணையில படுக்க வைங்க... படுக்க வெச்சிட்டு நீங்க தள்ளி வந்து கை கால் கழுவிக்கோங்க" என்றான் ஊரார் ஒருவன்.

"என்ன!!!" புரியாமல் அவனை வியப்பாய் பார்த்த ராகவ், அதற்கு மேல் எதையும் பேசாமல் யோசிக்காமல் இருந்தது பெருமாளின் பதில் கேட்டதால் தான்.

"தம்பி பூசாரி வீடு ரொம்ப சின்னது.. உள்ள கூட்டிட்டு போனா, காத்து கூட சரியா கிடைக்காது.. இப்டி திண்ணை மேல படுக்க வை பா.. காதோட்டமா இருக்கும்" என்றவர், கூட்டத்தில் ஒருவனுக்கு ஜாடையில் எதையோ சொல்ல, உடனே அவ்விடம் விட்டு ஓடினான் அவன்.

பெருமாள் கூறியதால், அவளை திண்ணையில் கிடத்தியவன், அவன் தலை அருகே அமர்ந்து கொண்டான்.. அதையும் தடுக்க சிலர் விழைந்தார்கள் தான், ஆனால் எதையும் காதில் வாங்கவில்லை ராகவிற்கு,

அவன் ஊருக்குள் வரும் போது இவளுக்கு ஆத்தா என்ற பெயரில் கொடுக்கப்பட்ட மரியாதையும், இப்போது மயங்கிய நிலையில் இவள் கிடக்கும் போது அவளை இவர்கள் நடத்தும் விதமும் ஏனோ எதிர் மறையாகவே பட்டது.. இருந்து அவள் கண் விழிப்பதே முக்கியம் என்று எண்ணியவன், பொறுமை காக்க, வீட்டின் கதவை திறந்து கொண்டு வெளியே வந்தார் பூசாரி.

வந்தவர், அவ்விடம் மயங்கி கிடக்கும் அவளை விடுத்து, ராகவை பார்த்து.,

"தம்பி நீங்க எப்போ வந்தீங்க? இன்னைக்கு நீங்க வரதா ஆச்சி சொன்னாங்க.. நல்ல இருக்கீங்களா?" நலம் விசாரித்தவரை முதலில் விந்தையாய் பார்த்தவன், இறுதி வரை அவளை கவனிக்கவே இல்லையே என்ற கோவத்தில் கண் சிவக்க பூசாரியை முறைக்க,

அப்போது தான் அவளை உணர்த்தவர் போல, நெற்றி சுருங்கி, அவள் அருகே சென்றவர்,

"ஏம்மா நிலா.. கொஞ்சம் தண்ணி கொண்டு வா" வீட்டிற்குள் குரல் கொடுத்தார் அவர்.

காலில் சலங்கை கட்டியதை போல, முத்து மணிகளின் சத்தம் கொலுசின் இசையாய் மாறி இருக்க, வீட்டிற்குள் இருந்து ஓடி வந்தாள் பெண் ஒருத்தி.. பார்க்க தன் வயதோ, இல்லை தன்னை விட சில வயது குறைந்தவள் போல இருந்தவளை பார்த்த போதே லேசாய் பொறி தட்டியது ராகவிற்கு.

பாவாடை தாவணி தான் என்றாலும், இந்த காலத்தை சேர்ந்தது போல ஒப்பனையும், அதற்கேற்றார் போல் சிகை அலங்காரமும் செய்தவளை கண்டவனுக்கு, ஏதோ இரு வேறு காலத்தை சேர்ந்த பெண்மணிகளை சந்தித்தது போல ஒரு உணர்வு.

ராகவ் ஊருக்குள் வந்து சந்தித்ததே இரு பெண்களை தான்.. அதில் ஒருத்தி பழைய காலத்து பெண் போல நெற்றி மறைக்கும் பொட்டும், கை மொத்தம் வளையலும், மஞ்சள் மறைத்த முகமும், உடல் மொத்தம் வீசும் சந்தன வாடையும் கொண்டு இருக்க, மற்றொருத்தியோ நவீன உடையும், அதற்கேற்ப நயனமும் கொண்டு இருப்பதை கண்டு ஆச்சர்யம் கொண்டவனுள், எதையோ அறிந்து கொள்ளும் ஆர்வம் கடலென பெறுகிக்கொண்டு இருந்தது.

தண்ணீர் குவளையுடன் வந்த நிலா, மயங்கிய நிலையில் அவ்விடம் கிடைக்கும் அவளை கண்டு பதறி, அவள் அருகே சென்று அமர்ந்தவள்,

"ஹைய்யோ.. என்னடி ஆச்சு உனக்கு? நான் போக வேணாம்னு சொன்னேனே கேட்டியா.. இப்போ பாரு" பதறி பிதற்றியவளை கண்டதும், சொல்ல முடியா ஒரு நிம்மதி பிறந்தது ராகவிற்கு.

இத்துணை நேரம் மயங்கிவளை பதறி போய் யாரேனும் அக்கறை கொள்வார்கள் என்று காத்திருந்தவனின் மனதிற்கு மருந்திட்டதை போல இருந்தது நிலாவின் செயல்.

ராகவ் அவ்விடம் இருப்பதையே சற்று நேரம் பொறுத்தே நிலா உணர்ந்து இருக்க, கண்ணில் ஒரு மின்னல் தோன்றி மறைந்ததை ராகவும் கவனிக்க தவறவில்லை.

நிலாவின் முயற்சியால் மயக்கத்தில் இருந்தவள், இறுதியாய் கண் விழித்து, தன் முட்டை விழியால் முதலில் பார்த்தது என்னமோ ராகவை தான்.

பின் தான் அவன் மடியில் கிடப்பதை உணர்ந்தவள், உடனே எழுந்து ஏதோ மிருகத்தை பார்த்ததை போல மருண்டவள், தன்னை சரி செய்து கொண்டு, தடுமாறும் நடையுடன், அருகே இருக்கும் குடிசைக்குள் சென்று மறைந்து விட்டாள் பெண்.

அவளின் செய்கையின் அர்த்தம் உணர்ந்த நிலா, குடிக்க மோர் செய்து அவளை பார்க்க குடிசை நோக்கி செல்ல, அமர்ந்து இருந்த இடத்தில் ஆணி அடித்தார் போல அமர்ந்து இருந்தான் ராகவ்.

நிலாவை கண்டவன் உடனே எழுந்து, அவளை பின்னால் இருந்து, 'நிலா' என்று அழைக்க.,

அவனின் அழைப்பில் அதிர்ந்தவள், "போச்சு நல்லா மாட்டிக்கிட்டேன் போல" நொந்து கொண்டவள் அப்போதும் அவனுக்கு முதுகு காட்டி தான் நின்று கொண்டு இருந்தாள் நிலா.
 
Top