Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அனிதாவின் அப்பா 11 1

Advertisement

Admin

Admin
Member


பகுதி – 11

மலையில் இருந்து இறங்கியவர்கள் எதிரே இருந்த கருமாரியம்மன் ஆலயத்திற்கும் சென்று வழி பட்டனர். இவர்கள் சென்ற போது அலங்காரம் முடிந்து சாமிக்கு கற்பூர ஆராதனை தொடங்கியது. நின்று கண்குளிர அம்மனை தரிசித்துவிட்டு வந்தனர்.

நான்கு குடும்பமும் நான்கு கார்களில் வந்திருந்தனர். வரும் போது ஹரி தான் அவனின் காரை ஒட்டிக்கொண்டு வந்திருந்தான். இப்போதும் காரின் கதவு வரை சென்றவன், என்ன நினைத்தானோ? “அப்பா, நீங்க ஒட்டுங்கப்பா...” என்றவன், சாவியை அவரிடம் கொடுத்துவிட்டு, அனியோடு சென்று மறுபக்கம் அமர்ந்து கொண்டான்.

திருமணமாகி முதல் முறை தம்பதிகளாகச் செல்லாமல்... இது என்ன என்பது போல்... மற்றவர்கள் பார்க்க.... வைஷ்ணவி எதோ சொல்ல வர… அவரைத் தடுத்த மீனா “இருக்கட்டும் அத்தை நாம பின்னாடி உட்கார்ந்துப்போம்.” என்றவள், பின்புறம் அமர… வைஷ்ணவியும் அவளோடு ஏறிக்கொண்டார்.

முதலில் வழியில் இருந்த ஹோட்டலுக்குச் சென்று காலை உணவை முடித்தனர். பின்பு அனைவரையும் வைஷ்ணவி அவர்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். நகரில் முக்கியப் பகுதியில் அமைந்த அழகான தனி வீடு....

வீட்டை பார்த்ததும் மீனா திகைத்து விட்டாள். பெரும் பணக்காரர்களுக்குத் தான் இந்தப் பக்கம் வீடு இருக்க முடியும். பார்க்கும் போதே வசதியானவர்கள் என்று தெரியும் தான். ஆனால் இந்த அளவு எதிர்ப்பார்க்கவில்லை......

ஹரி மீனாவோடு அனியையும் நிற்கவைத்து ஆரத்தி எடுத்த பிறகே வைஷ்ணவி அவர்களை உள்ளே செல்ல விட்டார். உள்ளே சென்றதும் அனியை கீழே இறக்கி விட்ட ஹரி.... இதோ வந்திடுறேன் என்று எங்கோ கிளம்பி சென்றுவிட்டான்.

கீழே மட்டும் தான் வாடகைக்கு விட்டிருந்தனர். மேலே ஹாலும் ஒரு அறையும் உண்டு. அங்கே இவர்களின் சாமான்களைப் போட்டு வைத்து இருந்ததால்... அதை விக்ரமும் தேவ்வும் சேர்ந்து ஆட்களை வைத்து அந்தந்த இடத்தில் அடுக்கினார்கள்.

சோபா கட்டில் டைனிங் டேபிள் எல்லாம் ஏற்கனவே துடைத்துச் சுத்தம் செய்யப்பட்டு இருந்ததால்.. வேலை எளிதாக முடிந்தது.

மீனா அவள் வீட்டினரோடு ஒரு அறையில் இருக்க... அனி அவள் மடியில் அமர்ந்து இருந்தாள். புது இடம் என்பதால்... சற்று மிரண்டு போய் இருந்தாள். ஹரி வேறு இல்லை.... அத்வியும் தேவ்வின் பிள்ளைகளும் சேர்ந்து வெளியே தோட்டத்தில் விளையாட அவர்களோடு கூடச் செல்லவில்லை....

மதிய உணவை தேவ் அவன் ஹோட்டலில் இருந்து கொண்டு வர ஏற்பாடு செய்திருந்தான். வைஷ்ணவியோடு ஹரிணியும் தீப்தியும் சேர்ந்து வீட்டை ஒழுங்கு படுத்தும் வேலைப் பார்த்துக்கொண்டு இருந்தனர்.

டிவி பிரிட்ஜ் வாஷிங் மெஷின் எல்லாம் புதிதாக வந்து இறங்கியது. அதோடு கொஞ்சம் பாத்திரங்களும். நேரில் சென்று வாங்க நேரம் இல்லாததால் எல்லாவற்றையும் ஆன்லைனில் ஆர்டர் செய்திருந்தனர். ஒவ்வொன்றாக வர வர.... அப்போதே அந்ததந்த இடத்தில் அடுக்கி விட்டனர்.

மாடியில் மட்டும் தான் பெயிண்ட் அடிக்க வேண்டும் அதை நிதானமாகப் பார்த்துக்கொள்ளலாம் என்று அப்போதைக்கு விட்டுவிட்டு மற்ற வேலைகளைப் பார்த்தனர்.

மதிய உணவு வந்ததும் முதலில் மீனா வீட்டினரை உட்கார வைத்து வைஷ்ணவி பரிமாறினார். அவர்கள் சாப்பிட்டு முடிக்கும் வரை கூட ஹரி வரவில்லை... ஹரி வந்ததும் அவனிடம் சொல்லிக்கொண்டு கிளம்ப வேண்டும் என்று அவர்கள் காத்திருக்க... வைஷ்ணவி அவனைச் செல்லில் அழைத்தார்.

“என்னம்மா?...”

“எங்க இருக்க நீ?”

“எதுக்கு?”

“மீனா வீட்ல கிளம்புறாங்க. உனக்காகத் தான் காத்திருக்காங்க.” என்றதும், சிறிது நேரத்தில் வந்துவிடுவதாகச் சொல்லி ஹரி போன்னை வைத்தான்.

சொன்னது போல் சிறிது நேரத்தில் வந்தும் விட்டான். உடுத்தியிருந்த வேஷ்டி சட்டையை மாற்றிவிட்டு வந்திருப்பதில் இருந்தே... அவன் அவனுடைய அப்பார்ட்மெண்ட் சென்று வந்திருக்கிறான் என்று வைஷ்ணவி புரிந்து கொண்டார்.

மீனா வீட்டினர் கிளம்பியதும், மற்றவர்களை வைஷ்ணவி சாப்பிட அழைத்தவர் ஹரியையும் அழைக்க... அவன் அனியை தேடி சென்றான்.

உள்ளே அறையில் தரையில் போர்வை விரித்து மீனா அமர்ந்திருக்க... அவள் மடியில் அனி படுத்திருந்தாள். இன்னும் முழுதாக உறங்கவில்லை.... அரை உறக்கத்தில் இருந்தாள்.

“சாப்பிட்டாளா...” ஹரி மீனாவிடம் கேட்க.... அவன் குரல் கேட்டதும், கண் திறந்து அனி அவனைப் பார்த்தாள்.
“இல்லை.... நீங்க வந்ததும் சாப்பிடுறேன்னு சொல்லிட்டா...” என்று மீனா சொன்னதும், ஹரி அனியை தூக்கிக்கொண்டு வெளியே வர மீனாவும் அவர்கள் பின்னே வந்தாள்.

விக்ரமின் குடும்பமும் தேவ்வின் குடும்பமும் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டு இருந்தனர். இவர்களைப் பார்த்ததும் “அனி குட்டி அப்பா வந்தாச்சு... இப்பவாவது சாப்பிட வர்றியா....” வைஷ்ணவி கேட்க.... தூக்க கலக்கத்தில் இருந்த அனி பதில் சொல்லாமல் ஹரியின் தோளில் முகத்தைப் புதைத்துக் கொள்ள....

“அவளுக்கு இன்னும் தூக்கம் தெளியலை மா....” ஹரி சொன்னதும்,

“சரி சீக்கிரம் சாப்பிட வைங்க. சாப்பிடாமலே தூங்கிட போறா...” என்றார் வைஷ்ணவி.

மீனா மகளுக்குத் தேவையான உணவை தட்டில் எடுத்துக்கொண்டு வந்து அவளை அழைக்க... அவள் ஹரியிடம் இருந்து வர மறுத்தாள். ஹரி அவளிடம் இருந்த தட்டை வாங்கி அவனே அவளுக்கு ஊட்ட ஆரம்பித்தான்.

“நீ உட்கார்ந்து சாப்பிடு மீனா...” வைஷ்ணவி சொல்ல.... மகள் இன்னும் சாப்பிட்டு முடிக்கவில்லையே.... அவளுக்கு வேறு எதுவும் தேவைப்படுமோ என்ற எண்ணத்தில் மீனா தயங்க...


“அவங்க அண்ணனோட சாப்பிடுவாங்க.... இல்ல அண்ணி...” ஹரிணி கேலி செய்ய... அதைக் கேட்ட மற்றவர்கள் சரிக்க... ஹரியின் முகம் கடுத்தது.

“ஒழுங்கா சாப்பிடுற வேலையைப் பாரு...” அவன் ஹரிணியிடம் எரிந்து விழ.... ஹரிணி மேலும் எதோ சொல்ல வர... வைஷ்ணவி அவளைப் பார்த்து “சும்மா இரு...” என்றார். இதையெல்லாம் கவனித்த மீனா எதற்கு வம்பு என்று நினைத்து தானும் சாப்பிட அமர்ந்தாள்.

இன்றைக்கு அவனுக்குப் பிருந்தாவின் நினைவு அதிகம் இருக்கும் என்று வைஷ்ணவிக்குப் புரிந்து தான் இருந்தது. பழைய வாழ்க்கையை மறக்கவும் முடியாமல்... புதிய வாழ்க்கையை மனதார ஏற்றுக்கொள்ளவும் முடியாமல்... அவன் அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் ஊசலாடுவது கண்டு அவருக்கு வருத்தமாக இருந்த போதிலும்... நாளடைவில் எதார்தத்தைப் புரிந்து நடந்து கொள்வான் என்ற நம்பிக்கையும் இருந்ததால்... இப்போதைக்கு அவனை அவன் போக்கிலேயே விடத் தீர்மானித்தார்.

விக்ரமும் தேவ்வும் ஏனோ ஹரியை வம்பிழுக்காமல் இருந்தனர். அவர்களுக்கும் அவனின் மனநிலை புரிந்திருக்கலாம். இருவரும் தங்களுக்குள் பேசியபடி உணவருந்தினர்.

தூக்க கலக்கத்தில் இருந்ததால்... அனி மெதுவாகத்தான் சாப்பிட்டாள். ஹரியிடம் இருந்த தட்டில் உணவு காலியானதும், கை கழுவிக்கொண்டு வந்த மீனா... இன்னும் கொஞ்சம் சாதம் வைத்து தயிர் போட்டு பிசைந்து கொண்டு வந்தாள்.

ஹரி அதை வாங்கி அனிக்கு கொடுக்க.... அவள் வாங்க மறுத்தாள்.

“அனி, உனக்குப் பிடிச்ச தயிர் சாதம் தான் சாப்டிட்டு தூங்கு.” மீனா சொல்ல... அனி தன் முகத்தை ஹரியின் மார்பில் புதைத்துக் கொண்டாள்.

“அச்சோ... பாரு அவங்க சட்டை எல்லாம் தேய்க்கிற....” மீனா சொன்னதும் அனி திரும்பி உட்கார...

“வேண்டாம்னா விட்டுடுங்களேன் அண்ணி.”

ஹரிணி சொன்னதற்கு மீனா பதிலேதும் சொல்லவில்லை.... ஆனால் மகளையும் ஹரியின் கையில் இருந்த உணவையும் அவள் மாறி மாறி பார்க்க.... அதை மகளுக்குக் கொடுக்கவில்லை என்றால்.... அவள் நிம்மதியாக இருக்க மாட்டாள் என்பதை உணர்ந்த ஹரி “நீங்க கொடுங்க...” என்றான்.

ஹரியின் மடியில் இருந்த அனிக்கு மீனா உணவை அள்ளி கொடுக்க.... அனியும் சாப்பிட்டாள்.


“சீக்கிரம் சாப்பிடு அப்பாவுக்குப் பசிக்கும்.” என்றதும், திரும்பி ஹரியை ஒரு பார்வை பார்த்தவள், அதன்பிறகு உணவையும் வேகமாக உண்டு முடித்தாள்.



மீனா மகளைத் தூக்கி சென்று வாய் கழுவி குடிக்க நீர் கொடுத்து. உள்ளே அறையில் சென்று படுக்க வைத்து விட்டு வந்த போது.... தேவ் அவன் குடும்பத்துடன் கிளம்பிக்கொண்டு இருந்தான்.

“மீனா வீட்டுக்கு வரணும். ஹரி அழைச்சிட்டு வா....” என்றபடி விடைபெற்று சென்றனர்.

அவர்கள் சென்றதும் மீனா தன் மீதி உணவை தொடர்ந்தாள். ஹரியும் வைஷ்ணவியும் அவளோடு உட்கார்ந்து சாப்பிட்டனர்.

“ஏன் அண்ணி, அனி சாப்பிடாம விட மாட்டீங்க போலிருக்கே?” ஹரிணி கேட்க....

“எல்லோரும் உன்னை மாதிரி இருப்பாங்களா...” வைஷ்ணவி மகளை வார....

“அப்படி இல்லை.... அவளுக்கு ரெண்டு வயசு ஆனதுல இருந்து நான் வேலைக்குப் போறேன். அதனால மதிய சாப்பாடு சரியாவே கொடுக்க முடியாது. வீட்ல இருக்கும் போதாவது நல்லா சாப்பிட வச்சிடனும்னு நினைப்பேன்.”

மீனா சொன்னதும் அங்கே கனத்த மௌனம் நிலவியது. பெற்ற குழந்தைக்கு வயிற்றுக்கு உணவு கொடுக்க முடியாமல்... வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருப்பது அவளுக்கு எவ்வளவு வேதனையாக இருந்திருக்கும் என்று எல்லோருக்குமே நன்றாகப் புரிந்தது.

மீனா சாப்பிட்டு முடித்துப் பாத்திரம் எல்லாம் கழுவி வைத்து சமையல் அறையை ஒதுங்க வைக்க.... வைஷ்ணவி அவளைத் தடுத்தார்.

“நீ வா மீனா.... அப்புறம் செஞ்சிக்கலாம்.”

“இருக்கட்டும் அத்தை, காலையில இருந்து நீங்க தான் வேலை பார்கறீங்க.” என்ற மீனா வேலையை முடித்து விட்டே வெளியே வந்தாள்.

மதிய உணவு முடித்த சிறிது நேரத்திற்கெல்லாம் விக்ரமும் ஹரிணியும் கிளம்ப....

“அதுக்குள்ள போகணுமா...” மீனா கேட்க....

“திடிர்னு கிளம்பி வந்துட்டோம். அடுத்தத் தடவை வரும் போது நிறைய நாள் இருக்கேன். இதுக்கே வீட்டுக்குப் போனா பேச்சு வாங்கணும்.” ஹரிணி சொல்ல...

“அவங்களோடது கூட்டுக் குடும்பம். அதோட பெரிய பிசினஸ் வேற.... எல்லோருக்குமே வேலை சரியா இருக்கும். இதுல திடிர்னு இவங்க வந்துட்டா.. அங்க இருக்கிறவங்களுக்கு வேலை அதிகம் இருக்கும் இல்லையா.....” வைஷ்ணவி தன் சம்பந்தி வீட்டை விட்டுக்கொடுக்காமல் பேச.... ஹரிணி தன் தாயை பார்த்து ஒழுங்கு காட்டி விட்டு சென்றாள்.

“எப்ப எங்க வீட்டுக்கு வரீங்க?” விக்ரம் மீனாவை பார்த்து கேட்க.... மீனாவின் பார்வை சட்டென்று ஹரியிடம் திரும்ப....

“கொஞ்ச நாள் கழிச்சு வரோம்.” என்றான் அவன்.

“கண்டிப்பா வரணும். அம்மா அப்பா மீனாவையும் அனியையும் பார்க்கனும்னு நினைப்பாங்க.” என்ற விக்ரம் அனைவரிடமும் விடைபெற்றுக் காரில் ஏறினான்.

ஹரி அவர்களுக்காக டிரைவர் ஏற்பாடு செய்திருந்தான். போனதும் விக்ரமிற்கு வேலை இருக்கும், அதோடு விடியற்காலையில் எழுந்தது வேறு களைப்பாக இருக்கும் என்று நினைத்தான்.

அவர்கள் சென்றதும் உள்ளே வந்த மீனாவிடம் “நீயும் போய் அனியோட படு....” வைஷ்ணவி சொல்ல... மீனாவும் சரி என்று உள்ளே சென்றாள்.

“எப்ப டா அந்த ரூமுக்குக் கட்டில் வரும்?” வைஷ்ணவி ஹரியிடம் கேட்க....

“அது இனிமே தான் வாங்கணும். நாளைக்குப் போய் வாங்கிறேன்.” என்ற ஹரி மாடிக்கு செல்ல.... தன் கணவர் படுத்திருந்த அறைக்குள் வைஷ்ணவி சென்றார்.
 
:love: :love: :love:

வைஷ்ணவி சூப்பர்

கல்யாணம் முடிந்து எல்லாரும் போயாச்சு...
வைஷ்ணவியும் போய் விட்டால்...
ஹரி, மீனா & அனிதா மட்டுமெ...
இனி....
Waiting for next episode....
 
Last edited:
Top