Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அனிதாவின் அப்பா 12 1

Advertisement

Admin

Admin
Member



பகுதி – 12

மறுநாள் காலை வைஷ்ணவி அவர் அறையில் இருந்து வெளியே வந்து போது வீடு அமைதியாக இருந்தது. இன்னும் யாரும் எழுந்துகொள்ள வில்லைப் போல் என நினைத்தவர், சமையல் அறைக்குச் சென்று சத்தம் வராமல் மெதுவாக வேலைப் பார்த்துக்கொண்டு இருந்தார்.

எதோ சத்தம் கேட்க கண்விழித்த ஹரி, தன் அருகில் படுத்திருந்த அனியை காணாது ஒருவேளை மீனாவிடம் இருக்கிறாளோ என நினைத்து மீனாவின் பக்கம் பார்க்க …அவள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். அவள் அருகிலும் அனி இல்லை....

வேகமாக எழுந்து அமர்ந்த ஹரி தன் பார்வையைச் சுழல விட.... குளியல் அறைக் கதவை திறக்க அனி போரட்டிக்கொண்டு இருந்தாள்.

“என்ன அனி பண்ற?”

“அர்ஜென்டா உச்சா வருதுப் பா.... கதவு திறக்க முடியலை....”

அவள் சொன்னதைக் கேட்டதும் ஹரியின் முகத்தில் முறுவல் அரும்ப “உனக்கு எப்பவுமே அர்ஜெண்டா தான் உச்சா வருமா....” என அவளைக் கேலி செய்தபடி கதவை திறந்து விட்டான்.

“நீங்க உள்ள வராதீங்க....” எனச் சொல்லிவிட்டு உள்ளே சென்ற அனி ரொம்ப நேரமாக வெளியே வரவில்லை....

ஹரி பாத்ரூம் வெளியேவே நடை பயின்று கொண்டு இருந்தவன், ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாமல் “அனி இன்னும் உள்ள என்ன பண்ற?” எனக் குரல் கொடுக்க... அந்தச் சத்தத்தில் மீனா பதறி அடித்து எழுந்தாள்.

“என்ன ஆச்சு?” மீனா எழுந்தபடியே அவனிடம் கேட்க....

“ரொம்ப நேரம் ஆச்சு அனி உள்ள போய்... இன்னும் வரலை...” என்றதும், மீனா சென்று கதவை திறந்து பார்க்க.... அனி அங்கே நீரில் விளையாடிக்கொண்டு இருந்தாள்.


“அனி... என்ன பண்ற?”

“பாத்ரூம் போக வந்தேனா.... போயிட்டு இந்தக் குழாயத் திறந்ததும் என் மேல எல்லாம் தண்ணி விழுந்து நனைஞ்சு போச்சு... அது தான் குளிக்கிறேன்.”

“பொய் சொல்லாத... உனக்குத் தண்ணியைப் பார்த்தா ஆடனும்.” என்றவள், மகளுக்குச் சோப்பு போட்டு குளிக்க வைத்து, அங்கிருந்த துண்டால் அவளைச் சுற்றி வெளியே விட்டுவிட்டு கதவை மூடிக்கொண்டாள்.

ஹரி படுக்கையில் இருந்த போர்வைகளை மடித்து வைத்துக்கொண்டிருந்தவன், அனியை அந்தக் கோலத்தில் பார்த்துவிட்டு “ஹே வாலு.... என்கிட்டே பாத்ரூம் போறேன்னு தான சொல்லிட்டு போன....” என்றான்.

“ஹி... ஹி.... சும்மா தண்ணியைப் பார்த்ததும் ஆசையா இருந்துச்சு....” என்றவள் “குளிருதுப்பா...” என்று ஹரியிடம் சென்று ஒண்ட....

அவளைத் தூக்கி கட்டிலில் விட்டவன், வேறு ஒரு துண்டை எடுத்து அவளுக்குத் தலை உடம்பு எல்லாம் துடைத்து விட.... குளியல் அறையில் இருந்து வெளியே வந்த மீனா, ப்ரஷில் பேஸ்ட் வைத்துக் கொண்டு வந்தவள் “பல்லு விலக்காம குளிச்சாச்சு.... இந்தா பல்லு விலக்கு....” என ப்ரஷை மகளிடம் கொடுத்து விட்டு தான் படுத்திருந்த போர்வையை எடுத்து மடித்து வைக்க ஆரம்பித்தாள்.

அனி பல் விலக்குவதாகப் பெயர்ப் பண்ணிக்கொண்டு இருப்பதைப் பார்த்து சிரித்த ஹரி, அவளைத் தூக்கி சென்று வாஷ் பேசின் எதிரே சேரில் நிற்க வைத்தவன், அவளிடம் இருந்த ப்ரஷை வாங்கி அவனே தேய்த்து விட்டு, வாயை கழுவி அழைத்து வந்தான்.

மீனா அவளின் உடைகளை எடுத்துக் கட்டிலில் போட.... உள்ளாடையைக் கையில் எடுத்த அனி “அப்பா, கொஞ்சம் அந்தப் பக்கம் திரும்பிக்கோங்க....” என்றதும், ஹரி வேண்டுமென்றே திரும்பாமல் இருக்க....

“ப்ளீஸ் ப்பா....” அனி கொஞ்சி கேட்க.... முகத்தில் அரும்பிய முறுவலுடன் அவன் திரும்பிக்கொள்ள.... அனி வேகமாக உடையை அணிந்துவிட்டு “இப்ப பாருங்க...” என்றாள்.

அவள் அவசரத்தில் அந்த உள்ளாடையைக் கூடச் சரியாக அணியவில்லை.... மீனா அதைப் பார்த்துத் தலையில் அடித்துக்கொள்ள.... ஹரி அதைச் சரி செய்தவன் மற்ற ஆடைகளை அவனே எடுத்து போட்டு விட்டான்.

ஒரு காலை வேளை இவ்வளவு அழகாக இருக்கக் கூடும் என்று இருவருமே அன்று தான் உணர்ந்தனர். அதை இழக்க மனமில்லாமல் தான் அங்கேயே இருந்தனர்.

இரவு ஹரி எங்கே தூங்கினான் என்று கூட வைஷ்ணவிக்குத் தெரியாது. ஒருவேளை மாடியில் இருக்கிறானோ என்று நினைத்துக்கொண்டு இருந்தார். ஆனால் கீழே அறையில் இருந்து அனி, ஹரி மற்றும் மீனாவின் பேச்சுக் குரல்கள் கேட்க.... அவருக்குத் தன் மகனும் அவர்களுடன் ஒரே அறையில் இருப்பது ஆச்சரியாமாகவும் அதே சமயத்தில் சந்தோஷமாகவும் இருந்தது.
அதைக் காணும் ஆவலில் அவரும் அவர்கள் இருந்த அறைக்குச் சென்றார். கதவு பூட்டாமல் வெறுமனேதான் இருந்தது. கதவை தட்டியவர் “நான் உள்ளே வரலாமா...” என்றதும்,

“வாங்க மா..... எதுக்குக் கேட்டுட்டு இருக்கீங்க?” ஹரி சொன்னதும், புன்னகையுடன் உள்ளே நுழைந்த வைஷ்ணவி அனியை பார்த்து விட்டு “அதுக்குள்ள குளிச்சாச்சா...” என ஆச்சர்யப்பட....

“அதை ஏன் மா கேட்குறீங்க? காலையில இருந்து அவ பண்ற அட்டகாசம் இருக்கே.....” மீனா சொல்ல....

ஹீ... ஹீ.... என அனி வைஷ்ணவியைப் பார்த்து அசடு வழிய....

“அவ தான் குட் கேர்ள்.... காலையிலேயே சமத்தா எழுந்து குளிச்சு ரெடி ஆகி இருக்கா.... நீங்க ரெண்டு பேரும் தான் லேட்.” என்றதும் மீனா சென்று தன் செல்லை எடுத்து நேரத்தை பார்த்தவள் “ஐயோ ! மணி எட்டா....” என அதிர்ச்சி ஆக....

ஹரியும் சென்று ஜன்னல் திரைச்சீலையை விலக்கியவன்
“ரூம்ல வெளிச்சம் இல்லாததுனால பொழுது விடிஞ்சதே தெரியலை.....” என்றான்.

“சரி சீக்கிரம் கிளம்பி வாங்க... நீ வாடா அனி... நான் உனக்குப் பால் தரேன்.” என்றபடி அனியை அழைத்துக்கொண்டு வைஷ்ணவி செல்ல.... அதுவரையில் ஒரே அறையில் சகஜமாக இருந்த ஹரிக்கும் மீனாவுக்கும் இப்போது தனியே இருப்பது சங்கடமாக இருந்தது.

உடைகள் இருந்த தன் பையை எடுத்துக்கொண்டு ஹரி பக்கத்து அறைக்குச் செல்ல.... அவன் சென்றதும் மீனா அறையின் கதவை மூடி விட்டுக் குளிக்கச் சென்றாள்.


காலை வேளைக்கு வைஷ்ணவி பூரிக்கு மாவு பிசைந்து உருளைக்கிழங்கு மசாலா செய்து வைத்திருந்தார். மீனா வந்ததும் அவள் பூரி போட்டு எடுக்க.... ஹரி வந்ததும் எல்லோரும் சேர்ந்து உட்கார்ந்து சாப்பிட்டனர்.

மாடியை பெயிண்ட் அடிக்க ஆட்கள் வந்தனர். ஹரி அவர்களை அழைத்துச் சென்று சொல்ல வேண்டியவற்றைச் சொல்லிவிட்டு வந்தான்.

ஹரி அனியோடு வெளியே சென்றவன், திரும்பி வரும் போது மகளின் அறைக்குப் பெரிய கட்டிலோடு வந்தான். இரண்டு பேர் படுக்கும் அளவிற்குப் பெரிய கட்டில். அதிலேயே பொம்மைகள் வைத்துக்கொள்ளலாம்.

மீனா தன்னுடைய உடைகளையும் அனிதாவின் உடைகளையும் அந்த அறையில் இருந்த அலமாரியில் அடுக்கி வைத்தாள். மீனாவிடமோ அனியிடமோ போதிய உடைகள் இல்லை என்பதைக் கவனித்த வைஷ்ணவி, இன்றே ஷாப்பிங் செல்ல வேண்டும் என்று மனதில் குறித்துக் கொண்டார்.

மாலை நான்கு மணிக்கே பெயிண்ட் அடிக்கும் வேலை முடிந்து விட்டது. ஐந்து மணி போல் காரில் கடைக்குக் கிளம்பினார்கள். மீனாவும் வைஷ்ணவியும் வருவதற்குள் ஹரியும் அணியும் சென்று காரில் ஏறி விட்டனர். மகளை முன்புறம் தன் பக்கத்து இருக்கையில் உட்கார வைத்து ஹரி சீட் பெல்ட் போட்டு விட்டிருந்தான்.

வைஷ்ணவி எங்கே மீனாவை அவன் பக்கத்தில் உட்கார சொல்லிவிடுவாரோ என்ற பயத்தில் தான் அவ்வாறு செய்திருந்தான். அது அவனின் அம்மாவுக்கும் புரிந்து தான் இருந்தது.

கடைக்குச் சென்று முதலில் அனிக்கு தேவையான உடைகளை எடுத்தனர். மீனா வீட்டில் போடும் வகையான உடைகளைத் தேர்வு செய்ய.... ஹரி பார்ட்டி வியர் உடைகள் பார்த்துக்கொண்டு இருந்தான்.

மீனா தேர்வு செய்து விட்டு ஹரியை பார்க்க... அவன் ஏராளமான உடைகள் வாங்கி வைத்திருந்தான். ஒவ்வொன்றும் இரண்டாயிரம் மூவாயிரம் விலை.



மீனா அதிலிருந்து நான்கு உடைகளை மட்டும் எடுத்துக்கொண்டவள், மற்றவற்றைத் திரும்பக் கொண்டு போய் வைத்து விட்டாள்.

ஹரி ஏன் என்பது போல் பார்க்க... “இப்போதைக்கு இது போதும். எதாவது நல்ல நாள் வந்தா வாங்கிக்கலாம். சின்னக் குழந்தைங்க சட்டுன்னு வளர்ந்திடும்.” என்றாள். அவள் வேறு எதோ சொல்ல வந்து சொல்லாமல் விட்டது போல் ஹரி.... வைஷ்ணவி இருவருக்கும் தோன்றியது.

ஹரி எதுவும் வாதம் செய்யாமல் விட்டுவிட்டான். மீனா சொன்னால் எதாவது காரணம் இருக்கும் என்று அவனுக்குத் தெரியும்.

அடுத்து மீனாவுக்குப் பார்த்தனர். அப்போது ஹரியும் அனியும் அங்கிருந்த சேரில் சென்று உட்கார்ந்து விட்டனர். மீனா நல்லதாக நான்கு சுடிதார் துணிகளும், நான்கு புடவையும் எடுத்தாள். அதை வைஷ்ணவியிடம் காட்டி அபிப்ராயமும் கேட்டுக்கொண்டாள்.

மீனா வாங்கியதற்குப் பணம் செலுத்த ஹரி சென்ற போது.... அதை ஏற்றுக்கொள்ள மீனாவுக்கு மனம் வரவில்லை.... அனிக்கு வாங்கித் தருவது வேறு... தனக்கு அவனிடம் வாங்கிக்கொள்ள எதோ போல் இருந்ததால்.... “இதுக்கு நான் கொடுத்திடுறேன்.” என அவள் சொல்ல... ஹரியும் சரி என்று விட்டுவிட்டான்.

மீனா பணம் செலுத்துவதைப் பார்த்த வைஷ்ணவி ஹரியை பார்த்து முறைத்தார். எதற்கு அம்மா தன்னை முறைக்கிறார் என்று அவனுக்கு ஒன்றும் புரியவில்லை....

வைஷ்ணவி அவருக்கு ஹரிணிக்கு மீனாவுக்கு என்று பட்டுப் புடவைகள் சிலது வாங்கினார். பிறகு மீனாவுக்குச் சில பான்சி சாரீஸ் வாங்கினார். உண்மையில் அவர் மீனாவுக்கு வாங்கத்தான் வந்தது. ஆனால் அவளுக்கு மட்டும் எடுத்தால் அவள் வாங்கிக்கொள்ள யோசிப்பாள் என்று தான் எல்லோருக்கும் எடுத்தார்.

வைஷ்ணவி பணம் கட்டும் போது... அங்கே சென்ற ஹரி “அம்மா நான் கொடுக்கிறேன்.” எனத் தன் பர்சை எடுக்க....

“என்கிட்டே தேவையான பணம் இருக்கு.... நீ ஒன்னும் கொடுக்க வேண்டாம்.” என்றவர், தானே பணம் கொடுக்க.... அதைக் கொடுக்க விடாமல் தடுத்த ஹரி அவனே பணம் செலுத்தினான்.

“இப்ப என்ன திடீர் கோபம் என் மேல?”

“உன் மகள், உன் அம்மா, உன் தங்கை இவங்க எல்லோரையும் விட உன் மேல அதிக உரிமை உள்ளவள் உன் மனைவி தான். உனக்கு ஒண்ணுன்னா முதல்ல துடிப்பவளும் அவள் தான். இதை நான் உனக்குச் சொல்லனும்னு அவசியம் இல்லை.... உனக்கே தெரியும்.”

“மீனாவுக்குப் பிறகு தான் மற்ற எல்லோரும். இதை நல்ல நியாபகம் வச்சுக்கோ..... அவளைப் பணம் கொடுக்க வச்சிட்டு பார்த்திட்டு இருக்க....”

தன் அம்மாவின் கோபத்திற்கான காரணம் தெரிந்ததும் ஹரி அவரை முறைத்தான்.

 
???

உனக்கு ஒன்னுனா முதலில் துடிப்பவளும் அவள் தான் ???

அப்பா பொண்ணு உலகம் செம ஜாலியா போகுது......
அம்மாவை ஆட்டையில் எப்போ சேர்ப்பீங்க ரெண்டு பேரும்......

வைஷ்ணவி பையனை ஓட ஓட விரட்டினாலும் என்ன நடக்குது.....
பொண்டாட்டியை face பண்ண முடியாமல் ஓடுறான் ஹரி........
 
Last edited:
Top