Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அனிதாவின் அப்பா 21 2

Advertisement

Admin

Admin
Member

வரப்போகும் புது உறவுக்காகத் தன்னுடைய அம்மாவை விட்டு தர மனம் வந்த அளவுக்கு இன்னும் அப்பாவை விட்டு தர மனம் வரவில்லை....

சின்னப் பெண் தானே... போகப்போகப் புரிந்து கொள்வாள் என்று நினைத்து வைஷ்ணவியும் அதற்கு மேல் அவளிடம் வம்பு வளர்க்கவில்லை. மேலும் அதைப்பற்றிப் பேசினால் இன்னும் அவள் பிடிவாதம் அதிகமாகும்.

“நீயே வச்சுக்கோ உங்க அப்பாவை.” என்றவர், ஹரிணிக்கு போன் செய்யச் சென்றார்.

காரில் வரும் போதே அவளுக்கு அழைத்துச் சொல்லிவிட்டார். ஹரிணி கேட்டதும் முதலில் சந்தோஷத்தில் அழுது விட்டாள். அப்போது அவளிடம் விரிவாகப் பேச முடியவில்லை.... அதனால் இப்போது திரும்பப் பேச சென்றார்.

“அம்மா... எனக்கு இப்பவே அங்க வரணும் போல இருக்கு மா...”


“இப்ப தான வந்திட்டு போன... அஞ்சு மாசம் ஆனதும் மீனாவுக்கு வளையல் போட வா.... உன் மாமியார் கிட்ட எல்லாம் மூன்னு மாசம் முடிஞ்ச பிறகு சொன்னா போதும். இப்பவே சொல்ல வேண்டாம்.”

“நான் நம்ம சொந்தகாரங்க கிட்ட எல்லாம் குழந்தை பிறந்த பிறகு தான் சொல்லப்போறேன். அப்ப சின்னதா ஒரு விழா வச்சிடலாம்.”

“சரி மா குழந்தை நல்லபடியா பொறக்கட்டும் போதும்.” ஹரிணியும் தன் தாய் சொல்வதே சரி என்று நினைத்தாள்.

சாப்பிட்டதும் மாடியில் தங்கள் அறைக்கு வந்த மீனா... படுக்கத் தயாராக.... அப்போது ஹரியும் அங்கு வந்தான். மீனா அவனைக் கண்டுகொள்ளாமல் இருந்தாள்.

அவளைத் தன்புறம் திருப்பிய ஹரி “கோபமா....” என்றதும்,

“பேசாதீங்க என்னோட.... நமக்கு இன்னொரு குழந்தை வரப்போகுதுன்னு உங்களுக்குச் சந்தோஷமே இல்லை... என்கிட்டே ஒரு வார்த்தையாவது சந்தோஷமா பேசினீங்களா....”

“நான் இவ்வளவு சீக்கிரம் குழந்தை எதிர்ப்பார்க்கவே இல்லை மீனா.... குழந்தைனதும் எனக்குப் பிருந்தா நியாபகம் தான் வந்தது. உனக்கும் எதுவும் ஆகிடக்ககூடாதுன்னு பயம்.”

“எல்லாம் நல்லபடியா இருக்கனும்னு நான் எவ்வளவு வேண்டினேன்னு எனக்குத் தான் தெரியும். உன் மேல அக்கறை இல்லாமலோ... இல்லை, குழந்தை மேல ஆசை இல்லாமலோ இல்லை...”

ஹரியின் நிலையில் இருந்து யோசிக்கும் போது அவன் பக்க நியாயம் மீனாவுக்குப் புரிந்தது.

“சரி விடுங்க. இப்ப சொல்லுங்க எனக்குப் பையன் வேணும், உங்களுக்கு?”


“எனக்கும் பையன் தான். பொண்ணு தான் இருக்காளே.... நம்ம வீட்டுக்கு இளவரிசியா அனி தான் எப்பவும் இருக்கணும்.” என்றான் ஹரி.

“அப்பாவுக்கும் பொண்ணுக்கும் ஒரே புத்தி. அவ உங்களைக் குழந்தைய தூக்கவே விட மாட்டா போலிருக்கு....அவகிட்ட இப்பவே சொல்லி வைக்கணும்.”

“நீ அவளை எதுவும்சொல்லாத மீனா... ரெண்டாவது குழந்தை வரும் போது எல்லா முதல் குழந்தையுமே.... கொஞ்சம் பொசசிவ்வா தான் இருப்பாங்க. அவளே சரி ஆகிடுவா... நான் பார்த்துகிறேன்.”

“சரிப்பா...நான் உங்க பொண்ணை ஒன்னும் சொல்லலை....போதுமா...”

“இப்ப உனக்கு எப்படி இருக்கு.... வாமிட் வரலையே....”

“இப்ப எதுக்கு அதை நியாபகப்படுத்துறீங்க? நானே பயந்து பயந்து சாப்பிட்டேன். ரொம்பத் தூக்கமா வருது தூங்கட்டுமா....”


அவள் படுக்க வழி விட்ட ஹரி.... தானும் அவளை அணைத்தபடி படுத்துக்கொண்டான்.

சரியாக ஒன்பது மாதங்கள் சென்று மீனாவுக்கு அவர்கள் ஆசைப்பட்டபடியே ஆண் குழந்தை பிறந்தது. முதலில் குழந்தையைக் கையில் வாங்கிய வைஷ்ணவி சென்று ஹரியிடம் கொடுக்க.... அவன் திரும்பி தன் மகளைப் பார்த்தான்.

“அப்பா தூக்கட்டுமா....” அவன் அனியிடம் அனுமதி கேட்க....

“தூக்குங்கப்பா...” அவள் சொன்னதும் குழந்தையைக் கையில் வாங்கியவன், அங்கிருந்த சோபாவில் அமர்ந்துகொண்டு மகளையும் தன் அருகில் இழுத்துக்கொண்டான்.

மகனை பார்வையால் வருடியவன் “உன்னை மாதிரியே இவன் இருக்கான் அனி.” என்றதும்,

“என்னோட தம்பி என்னை மாதிரி தான் இருப்பான்.” அவள் பெருமையாகச் சொல்ல.... அதை வைஷ்ணவி மகிழ்ச்சியுடன் பார்த்துக்கொண்டு இருந்தார்.

சிறிது நேரம் தன் தம்பியை பற்றி ஆராய்ச்சி செய்தவள் “என் மடியில வைங்க....” என்றதும், ஹரி அவளின் மடியில் வைத்தான்.

மீனாவுக்கு அறுவை சிகிச்சை செய்து தான் குழந்தையை எடுத்தனர். அதோடு அவளுக்குக் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சையும் செய்வதால்... அவளை அறைக்குக் கொண்டு வர தாமதமாகியது.

நள்ளிரவு நேரம் என்பதால் சிறிது நேரத்தில் அனி உறங்கிவிட.... கையில் மகனை வைத்துக் கொண்டிருந்த ஹரிக்கு அந்த நேரத்தில் பிருந்தாவை நினைக்காமல் இருக்க முடியவில்லை....

மகன் கண் கலங்குவதைப் பார்த்த வைஷ்ணவி அவனின் முதுகை தட்டிக்கொடுக்க.... மனதில் இருந்த துக்கத்தை விழுங்கிவிட்டு மீனாவுக்காகக் காத்திருந்தான்.

மீனா அறைக்குத் திரும்பியதும் மகனை வைஷ்ணவியிடம் கொடுத்தவன், உறங்கி இருந்த மகளைத் தூக்கிக்கொண்டு, அவள் இருந்த அறைக்குள் செல்ல... மீனா அவர்களைப் பார்த்ததும் புன்னகைத்தாள்.

“வலி இருக்கா மீனா...” வைஷ்ணவி கேட்டதற்கு இல்லை என்றவளின் பார்வை எல்லாம் அவர் கையில் வைத்திருந்த தன் மகனின் மீதே இருந்தது.

அதைக் கவனித்த வைஷ்ணவி குழந்தையை அவள் அருகில் கட்டிலில் விட்டுவிட்டு வெளியே செல்ல... மீனா மகனை ஆசையாக வருடியவள், தன் கணவனைப் பார்க்க.... ஹரி அனியோடு அவள் எதிரில் இருந்த இன்னொரு கட்டிலில் உட்கார்ந்தான்.

மகளை வசதியாக மடியில் படுக்க வைத்துக் கொண்டவன், அதன் பிறகே மீனாவை பார்த்து நலம் விசாரிக்க....

“உங்க பொண்ணைக் கொஞ்ச நேரம் இறக்கி விட்டா என்ன?” என்றாள் மீனா.

“மாட்டேன். உங்க ரெண்டு பேருக்கு முன்னாடி எனக்குக் கிடைச்ச தேவதை இவ தான்.”

“வரம் தந்த தேவதை. இவ வந்ததுனால தான் நீங்க வந்தீங்க.” ஹரி மீனாவையும் தங்கள் மகனையும் காட்டி சொல்ல....

அவன் சொன்னது மீனாவுக்கு உள்ளுக்குள் பெருமையாக இருந்தாலும், வெளியே “சரி நீங்களும் உங்க பொண்ணும் ஒரு கட்சி, நானும் என் பையனும் ஒரு கட்சி.” என்றாள் மிடுக்காக.

“ஹே.... ஏன் டி குடும்பத்தைப் பிரிக்கிற? நாம இன்னைக்கு ஒரு முழுக் குடும்பமா ஆனதுக்குக் காரணம் அனி தான....அதை தான் சொன்னேன்.” என்றவன், மகளின் நெற்றியில் ஆசையாக முத்தமிட்டான்.

மூன்று மாதங்களுக்குப் பிறகு ஹரி மீனாவின் செல்வ புதல்வனுக்குப் பெயர் சூட்டும் விழாவை.... ஒரு பெரிய நட்சத்திர ஹோட்டலில் அனைவரையும் அழைத்துச் சிறப்பாகச் செய்தனர்.

மீனா, வைஷ்ணவி, ஹரிணி, அனி, அத்வி எல்லாம் ஒரே நிறத்தில் பட்டாடைகள் அணிந்திருக்க... அதே போல் ஹரி, விக்ரம், வெங்கட், சின்ன ஹரி, இப்போது பிறந்த வாண்டு எல்லாம் ஒரே நிறத்தில் உடைகள் அணிந்து விழாவுக்கு வந்தவர்களின் கண்ணைப் பறித்தனர்.

அன்று விக்ரமின் அம்மா பேசியது போல்... உறவினர்கள் யாரும் தன் மகளை எதவும் மனம் நோக பேசிவிடுவார்களோ என்ற அச்சத்தில், ஹரி அனியை தன்னுடனே வைத்துக்கொண்டு இருந்தான். அவளைத் தனியாக விடவே இல்லை.

இப்போது ஹரிக்கு மீனாவுடன் திருமணமாகி குழந்தையே பிறந்து விட்டதால்... உறவினர்கள் அடக்கியே வாசித்தனர். அதோடு மீனாவின் நிமிர்வு, ஹரி அனியின் ஒட்டுதல் எல்லாவற்றையும் கவனிக்கத் தானே செய்திருப்பார்கள்.

பிருந்தாவின் பெற்றோர் மற்றும் சகோதரனும் குடும்பத்துடன் வந்து விழாவில் கலந்து கொண்டனர். மீனா ஏற்கனவே ஹரியிடம் சொல்லி வைத்திருந்தாள்.

“இங்க பாருங்க ஹரி... அந்த நேரத்தில டாக்டர் சொல்றது தான் வேதவாக்கு. அவங்களும் அவங்க பொண்ணு பொழச்சா போதும்ன்னு தானே நினைச்சிருப்பாங்க. நீங்க அவங்க மேல கோபப் படுறது நியாயமே இல்லை... அவங்க கிட்ட ஒழுங்கா பேசுங்க.”

மீனா சொல்லியபடி ஹரியும் வந்தவர்களிடம் ஒழுங்காக வரவேற்றுப் பேசினான். அவன் இன்னொரு திருமணம் செய்து மகிழ்ச்சியோடு வாழ்வது அவர்களுக்கும் சந்தோஷமே....

வந்தவர்கள் எல்லாம் குழந்தையைப் பார்த்து விட்டு, ஹரி மாதிரியே இருக்கான் எனச் சொல்லிவிட.... தனது தந்தையைத் தனியே அழைத்துச் சென்ற அனி “நான் ஏன்பா உங்களை மாதிரி இல்லை....” எனக் கேட்க...

“ஹே... நீ உங்க அம்மா மாதிரி அழகா இருக்க டா.... கேர்ள் பேபி அம்மா மாதிரி, பாய் பேபி அப்பா மாதிரி இருப்பாங்க.” அவன் சமாதானம் செய்ய.... மகள் சரி என்பதாகத் தலையசைத்தாள்.

இன்னும் வளர வளர அனி எவ்வளவு கேள்வி கேட்பாளோ... ஆனால் அவள் என்ன கேட்டாலும், ஹரி அவள் மனம் நோகாமல் பார்த்துக் கொள்வான்.

விழா சிறப்பாக நடந்தது. அனியின் விருப்பபடி அவள் தம்பிக்கு ஆரவ் எனப் பெயரிட்டனர். விழா முடிந்ததும் மற்ற உறவினர்கள் ஹோட்டலில் இருந்தே தங்கள் ஊர்களுக்குக் கிளம்பி விட.... அதன்பிறகு இவர்கள் எல்லோரும் சேர்ந்து குடும்பப் படம் எடுத்தனர்.

ஹரி கீழே நின்று விழா அமைப்பாளர்களிடம் எதோ பேசிக்கொண்டு இருந்தான். அப்போதும் அவனுடன் அனியை வைத்திருந்தான். தாய்ப்பறவை தன் குஞ்சை அடைகாப்பது போல்.... இருந்தது அவனது செயல்.

அவனுக்காகத் தான் புகைப்படம் எடுக்கக் காத்திருந்தனர்.

“ஹரி, அண்ணா.... டேய் அண்ணா....” இப்படி வித விதமாக ஹரிணி கத்தி அழைத்தும், ஹரியின் காதில் அவள் அழைத்தது கேட்கவே இல்லை....

கடைசியாகப் பொறுமை இழந்த ஹரிணி “அனிதா அப்பா... கொஞ்சம் இங்க பாருங்க.” என்றதும், ஹரி சட்டென்று திரும்பி பார்க்க.... அதைப் பார்த்த மேடையில் இருந்த அனைவரும் வாய்விட்டு சிரித்தனர்.

அவன் எப்போதும் அனிதாவின் அப்பா தான்.


















 
:love: :love: :love:

usual dialogue டக்குனு முடிச்சுட்டீங்க...... இன்னும் 2 போட்டு கொடுத்திருக்கலாம்...........

அனிதா அப்பா :D ஆரவ்க்கும் அப்பா தான்....... பையன் சண்டைக்கு வரப்போறான்........

ரெண்டாம் கல்யாணம் என்கிற commitmentக்குள் போறது அவ்ளோ ஈஸி கிடையாது.......
இறப்போ பிரிவோ முதல் கல்யாணத்தின் வடு நெருடல் இல்லாமல் போகாது.......
அதுவும் பிள்ளைகள் இருந்தால் இன்னும் கஷ்டம்........
ஆண்களை குழந்தையோடு வரவேற்கும் society பெண்களை அந்த அளவுக்கு ஏற்றுக்கொள்வதில்லை........
அனிதாவால் அறிமுகமாகி அவளால் ஒரு கல்யாணம் என்கிறப்போ அது ரொம்ப பெரிய விஷயம் தான்.......

ஹரி மீனா பெண்ணுக்காக கல்யாணம் பண்ணி குடும்பமா புது வாழ்க்கைக்குள்........
அனிதாக்கு அடுத்து வைஷ்ணவி தான் இதுக்கு முழு காரணம்.......
As a mom, பையனோட சந்தோஷத்துக்கு குறுக்கே நிற்கவுமில்லை......... அவனோட விருப்பத்தை நிறைவேற்றயும் விட்டார்கள்......

என்னோட favorite நாவல் இது :love::love::love:
இன்னொன்னு இதைவிட சூப்பரா குடுங்க ரம்யா......
 
Last edited:
:love: :love: :love:

Nice & Lovely story...

அனிதா & ஹரி பாண்டிங் சூப்பர்..

அனிதாவுக்காக...

ஆஹாயம் பூமி எல்லாம், இறைவன் உண்டாக்கி வைத்து,
ஆசை தான் தீராமலே உன்னை தந்தானம்மா
கண்ணே உன்மேல் மேகம் தான் பன்னீர் தூவி நீராட்டும்
துள்ளித் தாவும் மான் குட்டி சொல்லி சொல்லி தாலாட்டும்

நடக்கும் நடயும் ஒரு பல்லாக்கு, பல்லாக்கு
சிரிக்கும் சிரிப்பும் ஒரு மத்தாப்பூ, மத்தாப்பூ
உனது அழகுகென்ன ராஜாத்தி ராஜாத்தி
உலகம் நடந்து வரும் கை தட்டி
வராமல் வந்த தேவதை
உலாவும் இந்த வெள்ளி தாரகை...

அனிதா அனிதா அனிதா
சின்ன கண்மணி கண்மணி கண்மணி
அனிதா அனிதா அனிதா
மின்னும் மின்மினி மின்மினி மின்மினி

ஹரிக்காக...

தேவதை போல் ஒரு பெண்ணிங்கு வந்தது நம்பி.. என்னை நம்பி..
இந்த அப்பாவின் கைத்தலம் பற்றிட வந்தது குட்டி .. தங்க கட்டி ...
 
Last edited:
சூப்பர் சூப்பர் ஸ்டோரி, ரம்யா டியர்
குழந்தையோடு ஒரு பெண்ணை மறுமணம் செய்து அவளோடு இன்பமாக வாழ்தல் ரொம்ப அபூர்வம்
ஹரிஹரன் is ரியல்லி கிரேட் மேன்
 
Last edited:
Top