Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஆதிரையின் கண்மணி நீ வரக் காத்திருந்தேன் - Episode 1

Advertisement

அஞ்சலி யாரு?
அர்ஜுனின் லவ்வரா?
எல்லாத்துக்கும் தேங்க்ஸ் சொல்லும் பழக்கம் அஞ்சலி சொல்லிக் கொடுத்ததா?
 
View attachment 1941

(Episode-1)


“கணபதி என்றிட கலங்கும் வல்வினை,
கணபதி என்றிட காலனும் கை தொழும்,
கணபதி என்றிட கர்மம் ஆதலால்,
கணபதி என்றிட கவலைகள் தீருமே...”

என்ற பாடல் வரிகள் காதில் ஒலிக்க, மணி 6 ஆகிவிட்டதைத் தெரிந்து கொண்டு மெல்ல கண்களைத் திறந்தான் படுக்கையறையில் இருந்த அர்ஜுன்... அவன் அம்மா ஜானகிதான் பூஜையறையில் கணபதியைப் போற்றி பாடிக் கொண்டிருந்தார்... ஜானகி தீவிர விநாயகர் பக்தை... அனுதினமும் இந்தப் பாடலைப் பாடித்தான், தன் நாளைத் தொடங்குவார்...

மெல்ல எழுந்து உட்கார்ந்து தன் உள்ளங்கையை கண்ணோடு ஒற்றிக் கொண்டு, பின் சோம்பலை முறித்தான் அர்ஜுன்... பிறகு, எப்பொழுதும் போல சுறுசுறுப்பாக அவன் வேலைகளை ஆரம்பித்தான்...

சிறிது நேரம் மொட்டை மாடியில் சென்று யோகா செய்தான்... அடுத்து மூச்சுப் பயிற்சி... இது அவனுடைய அன்றாட வழக்கம்... அவன் கீழே வரும் போது, அம்மா ஜானகி ரெடியாக காபி போட்டுக் கொண்டு வந்தாள்...

“இந்தாடா கண்ணா காபி.. அப்பறம், பாத்ரூம்ல சுடு தண்ணி வைச்சுருக்கேன், குடிச்சுட்டு போய் குளி.. நான் உனக்கு டிபனும், லஞ்சும் ரெடி பண்றேன்... சரியா..” என்று ஜானகி தன் மகனின் கன்னத்தைச் செல்லமாய் வருடிவிட்டுச் சென்றார்... உள்ளே போனவரின் பின்னாலேயே சென்ற அர்ஜுன்,“தேங்க்ஸ் மா.. காபி வழக்கம் போல சூப்பர்... சான்சே இல்ல...” என்றான்...

“டேய் கண்ணா, உனக்கு எத்தன தடவ சொல்றது..?? இப்படி எதுக்கெடுத்தாலும் எனக்கு தேங்க்ஸ் சொல்லாதன்னு..” செல்லமாய் கோபித்துக் கொண்டார் ஜானகி...

“அது என்னோட பழக்கம் மா.. விட முடியல.. எல்லார்கிட்டயும் சொல்ற மாதிரி, உன் கிட்டயும் சொல்ல வருது.. என்ன பண்ண..!!” என்றான் அர்ஜுன்...

“ஹும்ம்.. முதல்ல எல்லாம் நீ இந்த மாதிரி சொன்னது கிடையாதே டா... இந்த சென்னைக்கு வந்ததுக்கு அப்பறம் தான் நீ இப்படி சொல்றதக் கேட்கறேன்.. யார் உனக்கு இந்த பழக்கத்த சொல்லிக் கொடுத்தா...??” என்று சந்தேகமாகக் கேட்டார் ஜானகி...
அவர் அப்படிக் கேட்டதும், சட்டென்று யோசித்தவன், “யார் சொல்லிக்
கொடுத்தா என்ன மா... எப்படியோ அது நல்ல பழக்கம் தானே... அத நான் ஃபாலோ பண்றேன்.. அவ்ளோதான்...” என்று எதையோ சொல்லி மழுப்பினான்...

“சரி.. சரி... என்னவோ, நீ போய் ரெடியாகு டா... ஆபிஸ்க்கு டைம் ஆயிடப் போகுது.. நான் சீக்கிரம் எல்லாத்தையும் ரெடி பண்றேன்...” என்று ஜானகி அவனை அவசரப்படுத்தினார்...

காபி குடித்துதும் குளிக்கச் சென்றான் அர்ஜுன்... அவன் குளித்து முடித்து வருகையில் ஜானகி டிபன் வேலையை முடித்து, டேபிளில் அனைத்தையும் தயாராய் வைத்திருந்தார்... அர்ஜுனை சாப்பிட அழைத்தார்... ரெடியாகி தனது ரூமை விட்டு வெளியே வந்து சாப்பிட உட்கார்ந்தான் அர்ஜுன்... இட்லி, சாம்பார், சட்னி என அவனுக்கு பிடித்ததாக செய்திருந்தார் ஜானகி...

“நல்லா சாப்டுடா கண்ணா... வர வர நீ சரியா சாப்பிடறதே இல்ல...” என்று அதட்டினார்... “அப்பறம், இன்னிக்கு தேதி அஞ்சு ஆகுது டா கண்ணா.. வாடகைப் பணம் கொடுக்கணும்.. ஞாபகம் இருக்குல்ல..” பரிமாறிக்கொண்டே சொன்னார்..

அவர் சொன்னதும், காலண்டரைப் பார்த்தான் அர்ஜுன்... காலண்டர் செப்டம்பர் 5 என்று காட்டியது... அவன் முகம் மெல்ல மாறியது... ஏதோ யோசித்தவனாய் இட்லியை நோன்டிக்கொண்டிருந்தான்... ஜானகி அவனைப் பார்த்தார்...

“டேய் கண்ணா.. என்னாச்சு டா..? ஏன் திடீர்ன்னு ஒரு மாதிரி ஆயிட்ட..? வாடகை கொடுக்க லேட் ஆகுமா என்ன.? அதான் யோசிச்சுட்டு இருக்கியா..? இன்னும் ஒரு நாள் கூட வேணும்னா எடுத்துக்கோ.. ஆனா, நாம கரெக்ட்டா கொடுத்துடணும்... அதுக்காகத்தான் சொல்றேன்...” என்றார்...

“அதெல்லாம் ஒண்ணும் இல்லமா... நான் ஈவ்னிங் வந்து ஹவுஸ் ஓனர் கிட்ட கொடுத்திடறேன்... அவர் எதுவும் நெனச்சுக்க மாட்டார்... நீங்க எதுவும் கவலைப்படாதிங்க...”

“அவர் ரெண்டு நாள்னாலும் பரவாயில்லன்னு தான் சொல்லுவாரு... இருந்தாலும் நாம ரொம்ப தாமதிக்கக் கூடாது... ஏதோ அவர் நல்லவரா இருந்ததால இரண்டரை வருஷமா இந்த வீட்ல இருக்கோம், எந்தப் பிரச்சினையும் இல்ல... இது வரைக்கும் ஒருவாட்டி தான் வாடகையே ஏத்தி இருக்கார்...”

“தெரியும் மா, இல்லன்னா ஆபீஸ் பக்கமா கூட வீடு எங்காவது இருக்கான்னு பார்த்தேன்... நாம இங்க வந்ததுல இருந்து அவர் எவ்ளோ தூரம் நமக்கு ஹெல்ப்பா இருந்திருக்கார்... அதுவும் இல்லாம இந்த ஏரியா உனக்கும் நல்லா பழகிடுச்சு... அதனால தான் வேணாம்னு விட்டுட்டேன்...”

“ஹும்ம்.. என்ன இருந்தாலும், உங்க அப்பா உயிரோட இருந்தப்ப, நம்ம ஊருல, சொந்த வீட்ல இருந்தோமே, அது மாதிரி எங்கயுமே வராது... உங்க அப்பா இருந்தவரைக்கும் எந்தக் குறையும் இல்லாம இருந்தது... ஆனா, அந்தப் படுபாவிங்க நமக்கு இப்படி ஒரு துரோகத்தப் பண்ணுவானுங்கன்னு நான் கொஞ்சம் கூட நெனைக்கல... எல்லாம் நம்ம கெட்ட நேரம்... எல்லாத்தையும் விட்டுட்டு இங்க வந்துட்டோம்...” சொல்லிக்கொண்டே ஜானகி விம்மினார்...

அர்ஜுன் எழுந்தான் “அம்மா, இப்போ ஏன் மா அத நெனச்சு அழறிங்க..? அதான், கேஸ் நடந்துட்டு தானே இருக்கு... என்ன நடக்குதுன்னு பாக்கலாம்... அப்பறம் இன்னொரு விஷயம், நான் கூடிய சீக்கிரமே சொந்த வீடு வாங்கனும்னு முயற்சி செஞ்சுட்டு இருக்கேன்... அதுக்கப்பறம் எல்லாமே சரியாகிடும் மா... நீங்க வீணா மனசப் போட்டு குழப்பிக்காதிங்க..” என்று சொல்லித் தேற்றினான்...

“சரி டா கண்ணா...” என்று ஜானகி தன்னை சமாதனம் செய்து கொண்டார்... அர்ஜுன் ஆபீஸுக்கு கிளம்பிவிட்டான்... வெளியே வந்து தன் புது பஜாஜ் டிஸ்கவர் வண்டியை மேலாகத் துடைத்து விட்டு ஸ்டார்ட் செய்தான்...

“சரி மா நான் கிளம்பறேன்... சாப்ட்டுட்டு மறக்காம ப்ரஷ்ஷர் மாத்திரை போட்டுட்டு நல்லா ரெஸ்ட் எடுங்க... சும்மா ஏதாவது வேலை இருக்குன்னு செஞ்சுட்டே இருக்காதிங்க... நான் மதியம் கால் பண்றேன்.. சரியா..?” என்றான்..

“சரி பா... நீ பாத்து போயிட்டு வா... மதியம் உனக்கு புடிச்ச தக்காளி சாதமும், உருளைக்கிழங்கு மசாலாவும் வைச்சிருக்கேன்... சீக்கிரமே சாப்பிடு... வேலை இருக்குனு லேட் பண்ணிடாதே... சரியா...?” என்றார் பாசத்துடன்...

“ம்ம்.. சரி மா... பை..” என்று சொல்லிவிட்டு வண்டியைக் கிளப்பினான்... ஜானகி அவனுக்கு கையசைத்து விட்டு உள்ளே சென்றார்... அர்ஜுன் வண்டியை ஓட்டிக்கொண்டிருந்தானே தவிர, அவன் கவனம் எல்லாம் வேறெங்கோ இருந்தது... அவன் எதையோ தொலைத்ததைப் போல் உணர்ந்தான்... ஆபீஸ் கேட்டினுள் நுழைந்தான்... பைக்கை பார்க் செய்யும் இடத்தில் வந்த குரல் கேட்டு திரும்பினான்... அவன் ஆருயிர் நண்பன் ரவி தான் அவனை அழைத்தான்...

“குட் மார்னிங் டா மாப்ள... இப்போ தான் வரியா...?? நான் இவ்ளோ நேரமா நீ வருவேன்னு வெயிட் பண்ணிட்டு இருந்தேன்டா...” என்று மூச்சு விடாமல் சொல்லிக்கொண்டே அவன் அருகில் வந்தான் ரவி...

“ம்ம்... குட் மார்னிங் டா... இன்னிக்கு சார் ரொம்ப சீக்கிரமே வந்துட்ட மாதிரி தெரியுது...” எப்போதும் லேட் என்ட்ரி கொடுப்பது ரவியின் வழக்கம்... இப்போது மட்டுமல்ல, அவனுக்குத் தெரிந்து இருவரும் இணைந்து படித்த பள்ளி, கல்லூரிக் காலத்திலிருந்தே ரவி இப்படித்தான்... எப்போதும் லேட்டாக வருவது அவனது ஸ்டைல் என்று தனக்கு தானே தம்பட்டம் வேறு வாசித்துக் கொள்வான்... அதனால் தான் அர்ஜுன் அப்படிக் கேட்டான்...

“அது ஒண்ணும் இல்லடா மாப்ள... என்னோட டீம் பொண்ணு இன்னைக்கு சீக்கிரமா வரச் சொன்னா... ஏதோ டபுட்டாம்... நான் தான் க்ளியர் பண்ணனும்னு ஒரே அடம்... நம்மளால ஒரு பொண்ணோட மனசு பாதிக்கக்கூடாது இல்லையா... அதான் அவளுக்காக வந்தேன்...” என்றான் பந்தாவாக...

“இந்த பந்தாவுக்கெல்லாம் ஒண்ணும் குறைச்சலே இல்லடா... அப்பறம், இந்த விஷயம் அந்த மேடம்க்கு தெரியுமா, தெரியாதா...??” கண்ணடித்துச் சொன்னான் அர்ஜுன்...

“ஹய்யோ.. டேய், அவளுக்குத் தெரிஞ்சா என்னாகும்ன்னு உனக்கு நான் சொல்லித்தான் தெரியணுமாடா... அவ இருக்கும் போது தான் ஒண்ணுமே பண்ண முடியாது... அவ இப்போ மெடிக்கல் லீவ்ல இருக்கா... அதான், இப்போதைக்கு இத மிஸ் பண்ண வேணாம்னு பாத்தேன்... சரி என்ன விடுடா... உன் மேட்டர்க்கு வா... இன்னைக்கு என்ன நாள்னு ஞாபகம் இருக்கா...??”

அவன் எதை சொல்கிறான் என்று தெரிந்ததும் அமைதியானான் அர்ஜுன்... “ஏன்டா அமைதியாயிட்ட..? நீ இன்னைக்குக் கண்டிப்பா அவளுக்குக் கால் பண்ணி பேசற... உன்ன ரொம்ப எதிர்பார்த்துட்டு இருப்பாடா மாப்ள... நீ பேசினா அவ கண்டிப்பா ரொம்ப சந்தோஷப்படுவா... என்ன சரியா..” என்று அவனைப் பார்த்தான் ரவி... “ம்ம்... பாக்கலாம் டா... ட்ரை பண்றேன்...” என்றான் அர்ஜுன் அரைமனதுடன்....

“டேய்... எனக்குத் தெரியாது, நான் அவளுக்கு போன் பண்ணிக் கேட்பேன்... நீ கண்டிப்பா பேசணும்... இது என்னோட ஆர்டர்ன்னு கூட நெனச்சுக்கோ... நான் கிளம்பறேன்... லஞ்ச் டைம்ல பாக்கலாம்... பை...” என்று விடைபெற்றான் ரவி...

ரவியும், அர்ஜுனும் வேறு வேறு கம்பெனியில் வேலை செய்தாலும், அவை இரண்டுமே ஒரே வளாகத்தில் இருந்தது... அதனால், நண்பர்கள் இருவரும் தினமும் சந்தித்துக் கொள்வர்... மதியம் ஒன்றாகச் சேர்ந்தே உணவு உட்கொள்வர்... பள்ளிக் காலத்திலிருந்தே அர்ஜுனைப் பற்றி ரவிக்கு அனைத்துமே தெரியும்... அவன் சொன்னதும் அர்ஜுன் தலையை மட்டும் ஆட்டினானே தவிர அவனால் எதுவும் பேசமுடியவில்லை...

அர்ஜுன் அவனுடைய கம்பெனி பில்டிங்கில் நுழைந்தான்... எப்பொழுதும் கலகலப்பாய் பேசுகிறவன், அன்று யாரிடமும் எதுவும் பேசாமல் அவனுடைய காபின்க்கு சென்று அமர்ந்தான்... உடனே தன் கம்ப்யூட்டரை ஆன் செய்து, இன்டெர்நெட்டை கனெக்ட் செய்தான்... அதில் பேஸ்புக்கை ஓபன் செய்தான்... அவளின் ப்ரொபைலுக்கு சென்றான்... அதில் பல பேருடைய வாழ்த்துக்கள் இருந்தன... அவனும் டைப் செய்தான்... “விஷ் யூ ஹாப்பி பர்த்டே அஞ்சலி”...
Nice sis
 
Top