Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஆதிரையின் கண்மணி நீ வரக் காத்திருந்தேன் - Episode 17

Advertisement

Aathirai

Well-known member
Member
Episode 17

ஏதோ ஒரு தைரியத்தில் ஷாலினி கிளம்பினாளே தவிர, சற்று பயமாகத்தான் இருந்தது அவளுக்கு. அவள் பெற்றோர்கள் மேல் கொண்ட பயத்தால் மட்டுமே, வேறு வழியில்லாமல் கட்டாயத்தினால் கிளம்பியிருந்தாள். அப்படியே யோசித்துக்கொண்டே வந்தவளுக்கு தான் சென்ட்ரல் வந்து விட்டோம் என்று கூடத் தெரியவில்லை.

“ஷாலினி.. ஷாலினி.. சென்ட்ரல் வந்துட்டோம் மா..” என்ற வெங்கடேசனின் குரல் கேட்டு யோசனையில் இருந்து மீண்டாள் ஷாலினி.

“நீ இங்க இறங்கிக்க.. நான் அந்தப் பக்கம் போய் கார் பார்க் பண்ணிட்டு வரேன்.” என்று அவளை சென்ட்ரல் முன்பாக இறக்கி விட்டுச் சென்றார் வெங்கடேசன்.

அங்கே நின்று கொண்டிருந்தவள் தன் கையில் மணியைப் பார்த்தாள். மணி 2.45 என்று காட்டியது. நல்ல வேளை ட்ரெயின் புறப்படும் நேரம் 3.25 என்பதால் இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தது. சற்று முன்பாகவே வந்து விட்டதால் நிம்மதி அடைந்தாள் ஷாலினி.

காரை நிறுத்திவிட்டு வந்தவரிடம், “அங்கிள், இனி ஞான் போய்க்கும். ஒண்ணும் பிரச்சனை அல்ல. நிங்கள் ட்ராப் செய்ததுக்கு தேங்க்ஸ் ஆனு.. போய் ஆண்டிய பார்க்கணுமல்லே.” என்று தன் மலையாளத்தில் சொன்னாள்.

கொஞ்சம் புரிந்தவராக, “இதுல என்ன இருக்குமா.? இவ்வளவு தூரம் வந்துட்டேன். உன்ன ட்ரெயின் ஏத்தி விட்டுட்டே கிளம்பிக்கறேன். மது ஹாஸ்பிடல்ல இருக்கா தானே. அவ ஆண்டிய பாத்துக்குவா. சரியா.” என்றவர் அவளது அருகில் இருந்த மற்றொரு பேக்கை எடுத்துக்கொண்டு அவளுடன் நடந்தார்.

இருவரும் அவள் ஏற வேண்டிய கம்பார்ட்மெண்டுக்கு வந்தனர். உள்ளே அவரும் ஏறி அவளது சீட் எதுவென பார்த்து அவளை அமர வைத்துவிட்டு, கீழே இறங்கினார். ஏதோ ஞாபகம் வந்தவராய், “ஒரு நிமிஷம்.. இரு மா. வந்திடறேன்.” என்று சொல்லிவிட்டு அந்தப் பக்கமாகச் சென்றார்.

சிறிது நேரத்தில் திரும்பி வந்தவர் கையில் ஒரு பார்சல் இருந்தது. வந்தவர், “இந்தா மா. பிரியாணி பார்சல் வாங்கிருக்கேன். சாப்பிடு. சரியா.” என்றார் அக்கறையுடன்.

அவர் அதைக் கொடுத்த பிறகு தான், அவள் மதியம் சாப்பிடாமல் இருந்ததை உணர்ந்தாள். “எந்தா அங்கிள், நிங்களுக்கு ஸ்ரமம்.” என்றாள்.

“இதுல என்னமா, சிரமம். இவ்ளோ நேரம் நீயும், மதுவும் என் மனைவிக்காக சாப்பிடக் கூட நேரமில்லாம, அவளப் பாத்துக்கிட்டிங்க. இது கூட நான் செய்யலன்னா எப்படி.?” என்றார்.

அதற்குள், மைக்கில் அறிவிப்பு சத்தம் கேட்டது. கிட்ட்த்தட்ட அனைத்து கம்பார்ட்மெண்ட்டும் நிறைந்து விட்டது. மணி 3.15 என்ற அறிவிப்பு வந்ததும், வெங்கடேசன் கீழே இறங்கிக் கொண்டார்.

“சரி மா.. பார்த்து. மது இல்லாம இன்னைக்கு நீ தனியா போக வேண்டியது ஆயிடுச்சு. பத்திரமா போயிடுவல்ல.?” என்றார் ஒரு தந்தையின் அக்கறையுடன்.

அவளுக்கு அவரின் அக்கறையைப் பார்த்து பிரமிப்பாக இருந்தது.“அங்கிள், ஞான் போய்க்கும்.. நிங்கள் வொர்ரி செய்துக்க வேண்டாம்.” என்றாள் ஷாலினி புன்னகையுடன்.

“சரி மா. நான் வரேன்.” என்று அவர் கிளம்பவும், ட்ரெயின் கிளம்பவும் சரியாக இருந்தது. அவர் செல்வதை ஜன்னல் வழியே பார்த்துக் கொண்டே திரும்பியவளுக்கு தூக்கிவாரிப் போட்டது.

அங்கே அவளுக்கு பரிட்சையமான அந்த முகம் அவளையே பார்த்துக் கொண்டிருந்தது. அவளோ என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தாள்.


(இனி.. இதற்கு மேல் வரும் உரையாடல் மற்றும் மனதில் நினைப்பவை அனைத்தும் தங்கள் வசதிக்காக தமிழில் இருக்கும்.. மலையாளம் அனைவருக்கும் புரிதல் குறைவு என்பதால்..)

“அய்யோ.. என் குருவாயூரப்பா.. என்ன ஒரு கஷ்டம். இவன் எப்போ வந்தான்.? இப்பவும் அதே பார்வை.. வைத்த கண் வாங்காமல் பார்க்கறானே. இன்னைக்கு பார்த்து மது இல்லையே.. மது இருந்திருந்தா இந்நேரம் பார்வையாலேயே அவன ஒரு முறை முறைச்சு விரட்டியிருப்பா. இப்போ நான் என்ன பண்றது..? எதுக்காக பயப்பட்டேனோ, அது இப்போ நிஜமாயிடுச்சே.” என்று கவலைப்பட்டாள் ஷாலினி.

இது இப்போது மட்டுமில்லை, அவள் பி.எஸ்.ஸி படிக்கும் போதிருந்தே நடந்து கொண்டிருக்கிறது. முதலில் அதை சரியாக கவனிக்கவில்லை. அதன் பிறகு தான் கவனித்தாள்.

அவள் ஒவ்வொரு முறை ட்ரெயினில் வரும் போதெல்லாம் அவனும் வருவான். இதே போல் தான் அவளை போகும் போது, வரும் போதும் பார்த்துக் கொண்டிருப்பான். அவனும் பார்ப்பதற்கு நன்றாகத்தான் இருப்பான். ஆனால், இவளை மட்டுமே தான் பார்த்துக்கொண்டிருப்பான்.

அப்போது மது இருந்ததால், அவளுக்கு அவ்வளவு பெரிதாகத் தெரியவில்லை. ஒவ்வொரு முறையும் மது “அதென்ன அவன் உன்ன அப்படிப் பார்க்கிறான்.? நான் போய் என்னன்னு கேட்கவா.?” என்பாள். அவன் பார்ப்பதோடு சரி, எதுவும் இதுவரை பேசியதில்லை. அதனால், ஷாலினி வேண்டாம் என்பாள். சரி என்று மதுவும் விட்டுவிடுவாள்.

இன்றோ அவன் ஷாலினிக்கு எதிரிலேயே அமர்ந்திருந்தான். மது இல்லாததை முன்கூட்டியே தெரிந்து தான் அவன் வந்திருக்க வேண்டும் என்றே தோன்றியது அவளுக்கு. பசி வேறு வயிற்றைக் கிள்ளியது. கையில் இருந்த கவரில் இருக்கும் சாப்பாட்டை எடுக்கலாமா.? வேண்டாமா.? இவன் வேறு இப்படிப் பார்க்கிறானே. என்ன செய்வது.? என்று நினைத்தவாறே அமர்ந்திருந்தாள்.

அவன், என்ன நினைத்தானோ, அவள் மனதை அறிந்தவன் போல் எழுந்து சென்றான். அப்போது தான் அவளுக்கு அப்பாடா என்றிருந்தது. இருந்தாலும் திரும்ப வந்து விடுவானோ என்று சற்று பொறுத்திருந்து பார்த்தாள். அவன் வரவில்லை. அதன் பிறகே சாப்பிட ஆரம்பித்தாள்.

சாப்பிடும் போதே டி.டி.ஆர் வந்து டிக்கெட் செக் செய்து விட்டு போனார். எதிரில் இருப்பது யார் என்று கேட்டார். அவள் தெரியவில்லை என்றாள். அவர் சென்றதும், அப்போது இது அவன் சீட் இல்லையோ என்று நினைத்தவாறே சாப்பிட்டாள்.

ஒரு வழியாக சாப்பிட்டு முடித்தவள், தன் ஹேண்ட்பேக்கை மட்டும் எடுத்துக் கொண்டு கை கழுவச் சென்றாள். கை கழுவும் போது, “ஹலோ.. ஷாலினி..” என்ற குரல் கேட்டு திரும்பியவள் சற்று அதிர்ந்தாள். திரும்பவும் அவன் தான்.

என்ன என்பதைப் போல் பார்த்தவளைத் தன் கண்களாலேயே ரசித்தவன், “ஷாலினி.. நான் நித்தின். நான் திருச்சூர்ல இருந்து வரேன். இங்க சென்னைல கேப் ஜெமினில வொர்க் பண்றேன்.” என்றான்.

இவன் எதற்கு என்னிடம் இதெல்லாம் சொல்கிறான் என்று புரியாமல் அவனிடம், “சரி, எதுக்கு இதெல்லாம் என் கிட்ட சொல்றீங்க.? நான் நீங்க யாரு.? என்னனு கேக்கலையே.” என்றாள்.

“அது, உங்க கிட்ட ரொம்ப நாளா பேசணும்னு நினைச்சிட்டு இருந்தேன். ஆனா, நீங்க எப்பவும் உங்க ஃப்ரெண்ட் கூட தான் வரீங்க. உங்க ஃப்ரெண்டா, என்ன முறைச்சே விரட்டிடுவாங்க. அவங்க இருக்கும் போது உங்ககிட்ட பேசவே தயக்கமா இருக்கும். எப்போவாவது தனியா வருவீங்கன்னு எதிர்பார்த்தேன். ஆனா, அதுக்கு 4 வருஷம் ஆகும்னு நினைக்கவே இல்லை.” என்றான் பாவமாக..

“என்னது 4 வருஷமா என்கிட்ட பேசணும்னு இருந்தீங்களா.? அப்படி என்னங்க பேசணும்னு இருந்தீங்க.?” என்றாள் ஷாலினி சிரித்துக்கொண்டே..

“உங்கள ஃபர்ஸ்ட் டைம் இதே ட்ரெயின்ல தான் பாத்தேன். பார்த்த நிமிடமே உங்கள ரொம்பப் பிடிச்சிருச்சு.. சென்னைல இருக்கும் போது உங்க காலேஜ் பக்கம் அடிக்கடி வருவேன். நீங்க ஹாஸ்டல்னால உங்கள மீட் பண்ண முடியல. ஒவ்வொரு முறையும் ட்ரெயின்ல வரும் போது தான் பார்க்க முடியும்.. பேசணும்னாலும் தயக்கம். அப்படியே இந்த 4 வருஷம் போயிடுச்சு.. ஆனா, ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கேன் கல்யாணம் பண்ணா உங்கள தான் பண்ணனும்னு. எங்க வீட்ல கூட சொல்லிட்டேன். உங்களப் பார்க்கணும்னு சொன்னாங்க. நீங்க தான் என்னன்னு சொல்லணும்.” என்று தான் இத்தனை வருடங்கள் மனதில் தேக்கி வைத்த ஏக்கத்தைச் சொன்னான்.

ஷாலினிக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. ஒரு நிமிடம் அவனைப் பார்த்தாள். பிறகு, “எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல. பட், எங்க வீட்ல அப்படி இல்ல. எந்த டெஸிஷன்னாலும் அப்பா, அம்மா ரெண்டு பேரும் சேர்ந்து தான் எடுப்பாங்க. அதனால, எனக்கு இந்த லவ்வெல்லாம் செட்டாகாதுன்னு கொஞ்சம் ஒதுங்கியே நிப்பேன். இதுவரைக்கும் இது மாதிரி எந்த ப்ரபோசலும் வந்ததில்ல. நீங்க தான் ஃபர்ஸ்ட். அதான் யோசிக்கறேன்.” என்றாள்..

“அப்பா, அம்மா என்ன யோசிப்பாங்க.? வர பையன் நல்லா படிச்சிருக்கணும், நல்ல வேலைக்குப் போகணும், உங்கள கடைசி வரைக்கும் நல்லபடியா பார்த்துக்கணும்னு தான. நான் அதுக்கு எல்லாமே பொருத்தமானவன் தான்.. அதனால, உங்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது..” என்றான் கூலாக.

“அப்படி இல்ல.. ஒரு பிரச்சனை இருக்கு.. அப்பா, அம்மாக்கு வர பையன் கொஞ்சம் அவங்க அளவுக்கு வசதியா இருக்கணும், அப்பறம், ஸ்மார்ட்டா இருக்கணும். எல்லாத்தையும் விட ரொம்ப முக்கியமான விஷயம், பையன் கல்ஃப்ல(வளைகுடா நாடுகளில்) வொர்க் பண்ணனும். இந்த கண்டிஷனெல்லாம் ஓகேன்னா மட்டும் தான், என்னை கல்யாணம் பண்ணிக் கொடுப்பாங்க..” என்று பெரிய குண்டுக்கட்டையையே தூக்கிப் போட்டாள்.

வாயடைத்துப் போய் நின்றான் நித்தின். இருந்தாலும், பேசினான். “உங்க கண்டிஷன்ல ஒண்ணு மட்டும் தான் இல்ல. மத்தபடி, நான் வசதியான குடும்பத்துப் பையன் தான். அப்பறம் நான் ஸ்மார்ட்டா இருக்கேன்னு தான் எல்லாருமே சொல்வாங்க. ஸோ, கல்ஃப்ல வொர்க் பண்ணாதான் பொண்ணு தருவாங்கன்னா, இது எந்த விதத்துல நியாயம்?.” என்றான்.

“நீங்க சொல்றது சரிதான். ஆனா, நான் என்ன பண்றது.? அவங்க அப்படி தான் சொல்லிட்டு இருக்காங்க.. வேணும்னா நீங்க அவங்ககிட்ட வந்து பேசுங்க.” என்றாள் விளையாட்டாக.

அவன் எதுவும் பேசவில்லை. எதையோ நினைத்தவன், “சரி பாக்கலாம்..” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தான். சென்றவன் அதன் பிறகு வரவேயில்லை. அவளுக்குத் தான் பாவம் என்னவோ போல் இருந்தது.

அவன், அவளுக்குப் பரிட்சயமானவன் இல்லை தான் ஆனால், பேசிய சிறிது நேரத்திலேயே அவள் மனதில் இடம் பிடித்திருந்தான். அவனிடம் எந்தக் குறையும் இல்லை என்றே தோன்றியது. அவள் வாழ்க்கை அவள் பெற்றோர் கையில் என்பதை அவள் சிறு வயது முதலே உணர்ந்திருந்ததால், அவளால் எதுவும் செய்ய முடியாதென்றே தோன்றியது.

இடையில் மது அவளிடம் போன் செய்து பேசினாள். நடந்தவற்றை அப்போது ஏனோ மதுவிடம் கூற அவளுக்கு மனமில்லை. பலவிதமான சிந்தனையில் இருந்தாள். நடப்பது, நடந்தே தீரும். தன் தலையில் என்ன எழுதியிருக்கிறதோ என்று நினைத்தவாறே பாலக்காடு சென்று சேர்ந்தாள் ஷாலினி.

(தொடரும்...)


 
Top