Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஆதிரையின் கண்மணி நீ வரக் காத்திருந்தேன் - Episode 32

Advertisement

Aathirai

Well-known member
Member
Episode 32

விடுமுறை முடிந்து கல்லூரி திரும்பியவர்கள், இந்த முறை சீனியர்களாக மாறி விட்டிருந்தனர். தங்களுடன் படிப்பவர்களே சில புதிதாக வரும் மாணவர்களை கேலி செய்தபடியும், பெயர் விவரங்கள் கேட்டபடியும் இருந்தனர்.

அஞ்சலி கல்லூரிக்கு வந்தவுடனேயே அர்ஜூனைத் தேட ஆரம்பித்தாள். அர்ஜூன் வந்து சென்ற பிறகு மதுவுக்கு ஒரு நாள் போன் செய்து அனைத்து விவரங்களையும் சொல்லியிருந்ததால், மதுவுக்கு அவளின் எதிர்பார்ப்பு புரிந்தது.

“அஞ்சலி, என்ன யாரையோ தேடிட்டு இருக்கற மாதிரி தெரியுது.?” என்றாள் மது சிரித்துக்கொண்டே.

“இல்லையே. நான் அப்படி யாரையும் தேடலையே. நீயா ஏன் எல்லாத்தையும் கற்பனை பண்ணிக்கற.?” என்று அவள் கையைத் தட்டினாள்.

“ம்ஹூம். அப்படியா.? ஆனா, உன் முகமே அதை சொல்லுதே. அதுக்கு என்ன பண்றது.?” என்றாள் மது.

“அதெல்லாம் ஒண்ணும் இல்ல. நீ சும்மா இரு.” என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே அர்ஜூன் வகுப்பறையில் நுழைந்தான். ஆனா, எப்பொழுதும் போலல்லாமல் கொஞ்சம் வித்தியாசமாக அஞ்சலியைப் பார்க்காமல் இருந்தான்.

அது அஞ்சலிக்கும், மதுவுக்கும் பெரும் ஆச்சர்யத்தைத் தந்தது. ரூபா, ஷாலினியிடம், “என்ன ரோமியோ வந்த உடனே ஜூலியட்ட பார்க்காம இருக்காரு. ரொம்ப ஆச்சர்யமா இருக்குல்ல ஷாலினி.” என்று சொல்ல, அவளோ இவளை முறைத்தவாறே,

“அவன் நோக்காலங்கில் உனக்கு எந்தப் ப்ரச்சன.? நீ உன்னோட ஜோலி என்னவோ அது செய்தா மதி.” என்று தன் பாஷையில் திட்டிக்கொண்டிருந்தாள்.

அதற்க்குள் வகுப்புக்கு புதிய இன்சார்ஜ் வந்துவிட்டார். அனைவரிடமும் விவரங்களைக் கேட்டறிந்தவர், “லாஸ்ட் இயர் டாப் ரேங்க் எடுத்தவங்க யாரு.?” என்று சொன்னதும் அர்ஜூனும், அஞ்சலியும் எழுந்து நின்றனர்.

“ஓ. குட். பட் இந்த டைம் அர்ஜூன் தான் டாப்பர். கீப் இட் அப் அர்ஜூன். அண்ட் அஞ்சலி நெக்ஸ்ட் டைம் நல்லா ஸ்கோர் பண்ணனும். டொண்ட் கிவ் அப். ஓகே.” என்று அவர் சொல்ல, அவள் தலையாட்டினாள்.

கடந்த முறை அவளாகவே வேண்டாமென்று தன் ரெப்ரெசண்ட்டேட்டிவ் பொறுப்பை விட்டாள். ஆனால், இந்த முறை அர்ஜூனுடன் சேர்ந்து அந்தப் பொறுப்பை திரும்பவும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கும் போது இப்படியொரு சோதனையா என்று நினைத்து மனதுக்குள் வருந்தினாள்.

அவளின் முகவாட்ட்த்தை அறிந்தவளாய் மது, “பாரு. இதுக்குத்தான் சான்ஸ் கிடைக்கும் போதே யூஸ் பண்ணிக்கணும். லாஸ்ட் டைம் நீயே வேணாம்னு சொன்ன. இப்போ, நீயே ஆசைப்பட்டாலும் உனக்கு அந்தப் பொறுப்பு கிடைக்கல.” என்று அவளைத் திட்டினாள்.

அஞ்சலி எதுவும் பேசாமல் அமைதியாய் இருந்தாள். லன்ச் டைமில் வெளியே வந்தவளுக்கு ஒரு அதிர்ச்சி. அர்ஜூன் ஒரு பெண்ணிடம் பேசிக்கொண்டிருந்தான்.

“யார் இவள்.? அர்ஜூனிடம் எதற்க்கு இப்படி சிரித்து, சிரித்து பேசிக்கொண்டிருக்கிறாள்.? இவனும் ஏதோ மொத்த சிரிப்பையும் அவளுக்கு குத்தகைக்கு கொடுத்ததைப் போலல்லவா பேசிக்கொண்டிருக்கிறான்.” என்று நினைத்து எரிச்சலானாள்.

கோபமாகி திரும்பவும் வகுப்பறையில் நுழைந்தவளைக் கண்ட மது, “ஏய். என்னாச்சு.? ஏன் திடீர்னு இப்படி உம்முன்னு வந்து உட்கார்ந்திருக்க.? ஃபேஸெல்லாம் சிவந்த மாதிரி இருக்கு. என்னாச்சு அஞ்சலி.?” என்று கேட்க,

அவள் பின்னாலேயே வந்த ரூபா, “அவ ஏன் இப்படி இருக்கான்னு எனக்குத் தெரியும் மது.? நம்ம ரோமியோ வேற பொண்ணோட சிரிச்சு, சிரிச்சு பேசிட்டிருக்காரு. அதான், மேடம் ரொம்ப கோபமா இருக்காங்க.” என்று வேண்டுமென்றே சொல்ல,

அஞ்சலி கோபத்தில், “ஏய். நான் கோபமா இருந்தா உனக்கென்ன.? மத்தவங்க விஷயத்துல நுழைஞ்சு இப்படியெல்லாம் பேச உனக்கு வெட்கமா இல்ல. தயவு செய்து இனிமேல் என்கிட்ட பேசாத. உன் வாய மூடிட்டு போ.” என்று சொன்னவள் விருட்டென்று வெளியே செல்லப் போனாள்.

அப்போது தான் அர்ஜூனும் வகுப்பறைக்கு உள்ளே நுழைய முயல, இருவரும் ஒருவரோடு ஒருவர் இடித்துக்கொண்டனர். அர்ஜூன், “ஏய். அஞ்சலி, ஸாரி நான் உன்னைப் பார்க்கல.” என்றான்.

ஆனால், அஞ்சலியோ எதுவும் பேசாமல் அவனை முறைத்தபடி சென்று விட்டாள். அர்ஜூனுக்கோ ஒன்றும் புரியவில்லை. “ஏன் இவள், இப்படி முறைத்துக்கொண்டு செல்கிறாள். அன்று போனில் நன்றாகத்தானே பேசினாள். இப்போது என்னவாயிற்று இவளுக்கு.?” என்று யோசித்தவாறே வந்தவனை மது பார்த்துக் கேட்டாள்.

“அர்ஜூன், என்ன கிளாஸ்லயே ரெண்டு பேரும் ரொமான்ஸா.?” என்று கிண்டலடிக்க,

“மது, கொஞ்சமாவது மனசாட்சியோட பேச வேண்டாமா.? அவளே என்னை முறைச்சிட்டுப் போறா.? தெரியாம இடிச்சதுக்கெல்லாம் நீங்களா ஒரு பேர் வைச்சுக்கறதா.?” என்று சொன்னான் அர்ஜூன்.

“அப்படியில்ல அர்ஜூன். அவ உன் மேல கொலவெறில இருக்கா. ஏதோ எதுவும் பண்ணாம, முறைச்சிட்டுப் போறாளேன்னு சந்தோஷப்படு.” என்றாள் மது.

“கொலவெறி வர அளவுக்கு நான் என்ன பண்ணேன்.?” என்று அவன் வெள்ளந்தியாகக் கேட்க,

“மேடம்க்கு இப்போ தான் உன் மேல பொசசிவ்னெஸ் வந்திருக்கு. அத எப்படிக் காட்டறதுன்னு தெரியல. இந்த ரூபா வேற இடைல சும்மா இருக்காம, வாயக் குடுத்து வாங்கிக் கட்டிக்கிட்டா. அதே கோபத்துல வரும் போது தான் உன்னை இடிச்சிட்டு போறா.” என்றாள் மது.

“என்னது பொசசிவ்னெஸ்ஸா.? அது என் மேல அஞ்சலிக்கு நிஜமாலுமே இருக்கா.? அதுக்கு என்ன பேருன்னு நீ அவ கிட்ட கேட்டு சொல்றியா.?” என்றான் அவன்.

“ம்ம்.. ஆமா, உங்க ரெண்டு பேருக்கும் நான் தான் கிடைச்சேன். என்ன ஆள விடுங்கடா சாமி. ரெண்டு பேரும் எதுவுமே சொல்லிக்காதிங்க. ஆனா, எல்லா வேலையும் பண்ணுங்க.” என்று சொன்னபடியே அவள் இடத்தில் சென்று அமர்ந்தாள் மது.

புரியாமல் குழம்பியபடியே அமர்ந்திருந்தான் அர்ஜூன். அதற்க்குள் கோபத்தில் ஆவேசமாய் வெளியே வந்த அஞ்சலி, அர்ஜூனிடம் சிரித்து, சிரித்து பேசிக்கொண்டிருந்த பெண்ணைப் பார்த்தாள். அவளது கோபம் அதிகமாக,

“ஏய்.. இங்க வா.” என்று அந்தப் பெண்ணை அழைத்தாள்.

அவளுக்கு கூப்பிடுவது சீனியர் என்று தெரிந்ததும், சற்று பயந்து கொண்டே வந்தாள். “அக்கா, என்னையா கூப்பிட்டீங்க.” என்றாள்.

“என்னது அக்காவா.?” என்றாள்.

“ஆமா, நீங்க எனக்கு சீனியர் தானே.? அதனால தான் அக்கான்னு கூப்பிட்டேன்.” என்றாள் இன்னும் பயம் குறையாமல்.

“உன் பேரென்ன.?” என்றாள் அஞ்சலி.

“அக்கா லாவண்யா.” என்றாள் அவள்.

“இந்த அக்காவெல்லாம் வேண்டாம். சீனியர்னு கூப்பிடு. என்ன.?” என்றாள்.

“சரிங்க சீனியர்.” என்றாள்.

“அதெல்லாம் இருக்கட்டும். அர்ஜூன உனக்கு எப்படித் தெரியும்.? நான் முன்னாடி பார்க்கும் போது அப்படி சிரிச்சு, சிரிச்சு பேசிட்டிருந்த.” என்றாள் மிரட்டலாக.

“அது வந்து, அர்ஜூன் அண்ணா என்னோட சீனியர். நாங்க ஒரே ஊரு. சேலம்ல ஒரே காலேஜ்தான். அர்ஜூன் அண்ணாதான் என்னை இந்த காலேஜல அப்ளை பண்ண சொல்லி சொன்னாரு. இங்க வந்ததும் என்னைப் பாருன்னு சொன்னாரு. அதனால தான் சீனியர் அந்த அண்ணாவ லன்ச் டைம் தானேன்னு பார்த்து பேசிட்டிருந்தேன். அவர் உங்களக் கூட சொன்னாரு.” என்றாள்.

“என்ன.? எதுக்கு என்னை சொன்னான்.?” என்று புரியாமல் கேட்டாள் அஞ்சலி.

“இங்க என்ன ஹெல்ப்னாலும் என்னைக் கேளு. இல்லன்னா அந்த அக்காவக் கேளுன்னு உங்களைக் காட்டி பேசிட்டிருந்தார். நான் கூட நீங்க ரொம்ப அழகா இருக்கீங்கன்னு அந்த அண்ணாகிட்ட சொல்லிட்டிருந்தேன். அதுக்கு தான் சிரிச்சார். உங்களப் பத்தி தான் சொல்லிட்டிருந்தார். ஆனா, நீங்க என்னடான்னா என்னை ரொம்ப மிரட்டர மாதிரி பேசறீங்க. நீங்க அந்த அண்ணா சொன்ன மாதிரி இல்ல.” என்று கொஞ்சம் பயந்து போன முகத்துடனேயே பேசினாள்.

இவள் என்ன சொல்கிறாள். அர்ஜூன் தன்னை ஒரு படி மேலே ஏற்றிக் காட்டி விட்டான். ஆனால், தானோ அவளைத் தேவையில்லாமல் மிரட்டி விட்டோமே என்று குற்ற உணர்வாக இருந்தது.

“ஹே.. ஹே.. அதெல்லாம் ஒண்ணும் இல்ல மா. நான் சும்மா உன்னை விளையாட்டுக்கு அப்படி மிரட்டிப் பார்த்தேன். மத்தபடி, சீரியஸா ஒண்ணும் இல்ல. நீ தப்பா நினைக்காத. அர்ஜூன் சொன்ன மாதிரி உனக்கு என்ன ஹெல்ப்ன்னாலும் என்னைக் கேளு.” என்றாள் அஞ்சலி அவளின் தோள்களைத் தட்டியவாறே.

அவள் அப்படிச் சொன்ன பிறகு தான் அந்தப் பெண்ணிற்க்கு வரவிருந்த அழுகையும் நின்றது. அப்போது தான் அவளுக்கு நிம்மதியாக இருந்தது. ஆனால், இதெல்லாம் ஏன் தான் செய்ய வேண்டும் என்ற கேள்வியும் அவளுக்குள் எழுந்தது. அர்ஜூன் யாரிடம் பேசினால் தனக்கென்ன.? நாம் எதற்க்கு தேவையில்லாமல், அந்தப் பெண்ணிடமும், ரூபாவிடமும் நாம் ஏன் கோபத்தைக் காட்ட வேண்டும்.? எதற்க்கும் விடை கிடைக்காமல் வகுப்பிற்கு வந்து சேர்ந்தாள்.

அங்கே அவள் உள்ளே நுழையும் போது, அர்ஜூன் ரவியிடம் பேசிக்கொண்டிருந்தான். அவள் வருவதைப் பார்த்தாலும், அவன் கண்டுகொள்ளாமல் இருந்தது, அவளுக்கு அவன் மேல் அப்போது விலகியிருந்த கோபத்தை அதிகப்படுத்தியது.

“இவன் ஏன் இப்படி செய்ய வேண்டும்.?” என்ற எண்ணத்திலேயே போய் ஆவேசமாய்ப் அமர்ந்தாள்.

இதை கவனித்த தோழிகள் அவள் கோபப்படுவதை அறிந்து அமைதியாக இருந்தனர். மாலை கல்லூரி விட்டு செல்லும் போது அங்கே இருந்த ஒருவன் தயங்கித் தயங்கி இவர்களிடம் வந்தான்.

“ஹலோ. உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்.” என்று அஞ்சலியைப் பார்த்து சொல்ல, அவளோ, “என்கிட்ட என்ன பேசணும்.?” என்று சந்தேகத்துடன் கேட்டாள்.

“ப்ளீஸ். கொஞ்சம் பெர்சனல். புரிஞ்சுக்கோங்க.” என்று கிட்டத்தட்ட கெஞ்சினான்.

“ஏங்க, பெர்சனல்னு சொல்றீங்க. ஆனா, நாங்க யாருமே உங்கள இதுக்கு முன்னாடி பார்த்ததில்லையே. உங்கள நம்பி எங்க ஃப்ரெண்ட எப்படி அனுப்பறது. எதுவா இருந்தாலும், பரவால்ல இங்கயே பேசுங்க.” என்றாள் மது.

“இல்லைங்க. எனக்கு ஒரு மாதிரி இருக்கு. அவங்ககிட்ட மட்டும் ரொம்ப இல்ல, இதோ உங்க கண்ணுக்கு தெரியற மாதிரி இடத்துல நின்னு பேசிடறேன்.” என்றான் அவன்.

“ஏய்.. இவனோட சைகை, பேசறதெல்லாம் பார்த்தா, இவன் ஏதோ அஞ்சலிகிட்ட ப்ரப்போஸ் பண்ண வந்த மாதிரி தெரியுது.” என்றாள் ரூபா.

“ஏய். நீ வேற சும்மா இரு. என்ன அஞ்சலி பண்ற.?” என்று மது கேட்க, குழப்பத்துடன் அவனிடம் பேசலாமா.? வேண்டாமா.? என்று எண்ணிக்கொண்டிருந்தவள், பின்னாலேயே அர்ஜூன் வருவதைக் கண்டாள். அப்போது எங்கிருந்து தான் அந்தத் துணிவு வந்ததோ தெரியவில்லை.

அவனிடம் திரும்பி, “சரி வாங்க.” என்று அவனோடு சென்றாள். தோழிகளோ அவளுக்காக ஒரு மர நிழலில் அவர்கள் பேசுவதைப் பார்க்கலாம் என்று காத்திருந்தனர். அஞ்சலி அவனோடு சென்று பேசுவதை அர்ஜூன் பார்த்து விட்டான்.

ஒரு நிமிடம் நின்றவன், அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதைப் பார்த்துக்கொண்டிருந்தான்.

“சொல்லுங்க. எதுக்கு என்கிட்ட தனியா பேசணும்னு சொன்னிங்க.?” என்றாள் அஞ்சலி.

“அது வந்து, என்னோட பேர் தன்ராஜ். இந்த காலேஜ்ல மேத்ஸ் மேஜர்ல படிக்கிறேன். நானும் சேம் இயர் தான். தென், போன வருஷமே நான் உங்களப் பார்த்தேன். எனக்கு அப்போவே உங்கள ரொம்பப் பிடிச்சிருந்தது. உடனே எப்படி ப்ரபோஸ் பண்றதுன்னு யோசிச்சேன். அதனால தான், ஒன் இயர் வெயிட் பண்ணி இப்போ சொல்றேன். நீங்க தான் ஒரு நல்ல பதிலா சொல்லணும்.” என்று அவளின் பதிலுக்காக எதிர்பார்த்தான் அவன்.

“நீங்க இந்த காலேஜ்ன்னு எனக்கு நீங்க இப்போ சொல்லித்தான் தெரியும். ஆனா, உங்கள இதுக்கு முன்னாடி நான் எங்கயுமே பார்த்ததில்ல. இப்படி, எதுவுமே தெரியாத உங்களப் பத்தி நான் என்ன சொல்லணும்னு எதிர்பார்க்கறீங்க.?” என்றாள்.

“இல்லங்க. நான் ரொம்ப சின்சியர். நீங்க என்னை நம்பலாம். ப்ளீஸ். முடியாதுன்னு மட்டும் சொல்லிடாதீங்க.” என்று கெஞ்ச ஆரம்பித்தான்.

எதையோ யோசித்தவள், திடீரென்று அர்ஜூன் நின்றிருந்ததைப் பார்த்தாள். அவனைப் பார்த்து கையைக் காட்டி எதையோ அவனிடம் சொல்லிக்கொண்டிருந்தாள். சொல்லி முடித்தபடி, அவள் அவளது தோழிகளுடன் சென்றாள்.

அர்ஜூனுக்கு ஒரே குழப்பம். தன்னை எதற்க்கு இவள் கைகாட்டிப் பேச வேண்டும்.? என்று யோசித்துக்கொண்டிருக்கும் போதே, அவன் அர்ஜூனிடம் வந்தான்.

“ஹலோ, ப்ரோ. நீங்க தன் அர்ஜூனா, எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணுங்க ப்ரோ. நான் அஞ்சலிய ரொம்ப சின்சியரா லவ் பண்றேன். இன்னைக்குத்தான் நான் அவங்க கிட்ட என் லவ்வ சொன்னேன். ஆனா, அவங்க.” என்று இழுத்தான்.

“என்ன சொன்னாங்க ப்ரோ. ஏதோ என்னை கை காட்டி பேசிட்டு இருந்தாளே.” என்று ஆவலுடன் அவன் பதிலை எதிர்பார்த்தான்.

“அவங்க, நீங்க ஓகே சொன்னா, லவ் பண்றேன்னு சொன்னாங்க. அதனால ப்ளீஸ் என் லவ்வுக்கு ஹெல்ப் பண்ணுங்க ப்ரோ.” என்று சொல்ல, அர்ஜூனுக்கு உள்ளூர சந்தோஷம் தாங்க முடியவில்லை.

தன்னை காதலிப்பதால் தான் வேறெந்த ஆணையும் அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனாலேயே, அவனை தன்னிடம் அனுப்பி வைத்துள்ளாள் என்பதை அறிந்தவன், அஞ்சலி செல்வதைப் பார்த்த போது அவள் திரும்பி சிரித்துக்கொண்டே சென்றாள்.

அதுவே, அவனுக்கு ஒரு பெரிய உற்சாகத்தைத் தந்தது. “ப்ரோ, நீங்க ரொம்ப லேட். அவங்க ஏன் என்கிட்ட உங்கள அனுப்பி வைச்சாங்கன்னு தெரியுமா.?” என்றான் அர்ஜூன்.

“நீங்க அவங்களோட ஃப்ரெண்டா இருக்கலாம்.” என்றான்.

உன் யோசனையில் மண்ணைப் போட என்று நினைத்தவாறே, “ஸாரி ப்ரோ. நாங்க ரெண்டு பேரும் லவ் பண்றோம். அப்பறம் எப்படி அவங்க உங்கள லவ் பண்ணுவாங்க. அதனால தான், அவங்க என்கிட்ட அனுப்பி வைச்சிருக்காங்க. இனிமேல் அவங்க பின்னாடி சுத்தாதீங்க. வேஸ்ட் ஆஃப் டைம். ஓகே.” என்றபடி சந்தோஷத்தில் மிதந்துகொண்டே கிளம்பினான் அர்ஜூன். அவனோ, தலையில் கையை வைத்துக்கொண்டே அங்கிருந்து சென்றான்.


இருவருக்குள்ளும், ஆசையும், காதலும் பொங்கி வழிய அதை வெளிப்படுத்தாமல் தொடரும் இந்தக் கண்ணாமூச்சி ஆட்டம் நல்லதா, கெட்டதா.?

(தொடரும்...)
 
Top