Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஆதிரையின் கண்மணி நீ வரக் காத்திருந்தேன் - Episode 34

Advertisement

Aathirai

Well-known member
Member
Episode 34

அர்ஜூனின் உடல் மட்டுமே வேலை செய்து கொண்டிருந்தது. மனம் அஞ்சலியின் நினைவில் சுற்றிக்கொண்டிருந்தது. மூன்றாம் செமஸ்டர் தேர்வுகள் நெருங்கிக்கொண்டிருந்த சமயம். அவர்களுக்கு படிப்பதற்க்கான விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

வீட்டின் மொட்டை மாடியில் சென்று அமர்ந்து படிக்கலாம் என்று புத்தகத்தைத் திறந்தவன் மனம், படிப்பதற்க்கு ஒப்பவில்லை. அன்று மதுவின் நிச்சயதார்த்தத்தை நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

அன்று மட்டும் அந்த ரூபா வரவில்லை என்றால், எப்படியாவது தன் மனதில் இருக்கும் காதலை அஞ்சலியிடம் எப்படியாவது வெளிப்படுத்தியிருக்கலாம் என்று நினைத்தான். அவளும், அதை எதிர்பார்த்துக் காத்திருந்ததைப் போலவே தெரிந்தது.

ஹூம்ம்.. நினைத்து மட்டும் என்ன பிரயோஜனம்.? அதன் பிறகு எத்தனையோ முறை முயன்றும் கூட அவனால், அவளிடம் பேச முடியவில்லை. போனிலாவது சொல்லிவிடலாம் என்று போனை எடுத்து அவளுக்கு போன் செய்து பேசுவான்.

ஒவ்வொரு வார்த்தைகளுக்குப் பிறகும், இப்போது சொல்லலாம், அப்போது சொல்லலாம் என்று நினைத்தவாறே பேசிக்கொண்டு இருப்பார்கள். ஆனால், எதுவுமே சொல்லாமல் வைத்து விடுவார்கள். இருவருக்குமான அவஸ்தை, பேரவஸ்தையாக இருந்தது.


இன்று வரை சொல்லமுடியாமல் ஏதோ ஒரு தயக்கம் வந்து இடையில் அமர்ந்து கொள்வதைப் போன்று இருக்கும். பத்தாத குறைக்கு ரூபாவைப் போன்ற இடையூறுகள் வேறு. என்னதான் செய்வார்கள் பாவம்.?

நினைத்தபடியே அமர்ந்திருந்தவன் செல்போன் மணி ஒலிக்க, பார்த்தவன் புன்னகைத்தான். போனில் ரமேஷின் அழைப்பு.

“சொல்லுடா மாப்ள. நல்லா இருக்கியா.? அம்மா, அப்பா, அப்பறம் தங்கச்சி எல்லாம் நல்லா இருக்காங்களா.?” என்று அவனைப் பேச விடாமல் இவன் முந்திக் கொண்டான்.

“ஏண்டா போன் பண்ணது நானு. நீ என்னமோ முந்திக்கிட்டு பேசற. இங்க எல்லாரும் நல்லா இருக்காங்க. நீ எப்படி இருக்க.? அம்மா எப்படி இருக்காங்க.?” என்றான் ரமேஷ்.

“நாங்க ரெண்டு பெரும் நல்லா இருக்கோம். அப்பறம் என்ன விசேஷம் மாப்ள.? திடீர்னு போன் பண்ணிருக்க.” என்றதும்,

“ஆமாண்டா மாப்ள, ஒரு விசேஷம் தான்.” என்று அவன் சொல்ல வரும் முன்னரே, “டேய். உனக்கு கல்யாணம். அதனால தான எனக்கு சொல்லணும்னு போன் பண்ணிருக்க.?” என்றான் அர்ஜூன் அவசரமாக.

“டேய் முந்திரிக்கொட்டை நண்பா, அதெல்லாம் ஒண்ணும் இல்ல. வீட்ல தங்கச்சிய வைச்சுக்கிட்டு அதுக்குள்ள எனக்கு என்னடா அவசரம்.? அதெல்லாம் அப்பறமா தான். எனக்கு வேலை கிடச்சுருக்கு டா. அத உன்கிட்ட சொல்லத்தான் போன் பண்ணேன்.”

“டேய்.. சூப்பர் மாப்ள. ரொம்ப சந்தோஷம். எந்த கம்பெனில வேலை கிடைச்சிருக்கு.?” என்றான் அர்ஜூன்.

“அதுதான்டா ,மெயின் விஷயமா உன்கிட்ட சொல்லணும்னு வந்தேன். எனக்கு வேலை கிடைக்கக் காரணமே நீதாண்டா.” என்று ரமேஷ் சொல்ல, “என்னது நானா.? என்னடா ஒளர்ற.?” என்று ஆச்சர்யமாகக் கேட்டான் அர்ஜூன்.

“நான் ஒண்ணும் ஒளறல. நிஜமாலுமே நீ அன்னைக்கு பண்ண ஒரு நல்ல விஷயம் தான் என்க்கு இன்னைக்கு நல்லது பண்ணிருக்கு.” என்றான் ரமேஷ்.

“அப்டியா.? நான் என்னடா பண்ணேன்.? முழுசா தான் எல்லாத்தையும் சொல்லேன்.” என்றான் அர்ஜூன்.

“அன்னைக்கு உன் ஆளோட அம்மாவ நாம காப்பத்தலன்னா, அவங்களோட மாமா மகேஷ மீட் பண்ணிருக்க முடியாது. அவர மீட் பண்ணலன்னா எனக்கு இன்னைக்கு வேலையும் கிடைச்சிருக்காது.” என்றான்.

“அவர் ஏதாவது ஹெல்ப் பண்ணாரா.?” என்றான் அர்ஜூன்.

“அன்னைக்கு நம்மள வீட்ல ட்ராப் பண்ண வரும் போது, எல்லாத்தையும் விசாரிச்சுட்டே வந்தார். பேச்சு வாக்கில நான் வேலை தேடிட்டு இருக்கேன்னு சொன்னேன். அப்போதைக்கு எதுவும் சொல்லல. நேத்து போன் பண்ணி ஒரு சின்ன இண்டர்வியூ இருக்கு வந்து அட்டண்ட் பண்றீங்களான்னு கேட்டார். தாராளமா பண்றேன்னு சொன்னேன். அட்டண்ட் பண்ணேன், ரொம்ப சிம்பிளாதான் இருந்தது. கொஞ்சம் டவுட்லயே இருந்தேன். ஆனா, அவர் நாளைல இருந்து வேலைக்கு வந்துடுன்னு சொல்லிட்டார். எனக்கு அவ்ளோ சந்தோஷம். அவரோட கையைப் புடிச்சு குலுக்கு, குலுக்குன்னு குலுக்கினேன். பாவம் அவர் கையே ஒரு வழி ஆகியிருக்கும்.” என்று ரமேஷ் சிரித்தபடி சொல்லிக் கொண்டிருக்க, அர்ஜூனும் அவன் பேச்சை ரசித்தவாறு சிரித்தான்.

“எங்க எனக்கு வேலை கிடைக்காம போயிருமோன்னு அம்மாவும், அப்பாவும் ரொம்ப ஃபீல் பண்ணிட்டு இருந்தாங்க. தங்கச்சி நர்ஸ் வேலைக்குப் போகும் போது, நான் இன்னும் எதுவுமே பண்ணாம இருந்தா எப்படி இருக்கும். ஃபேமிலி சைட்ல எப்பவும் கேட்டுட்டே இருந்தாங்க. இப்போதான் நிம்மதியா இருக்கு. இனி யாருக்கும் பதில் சொல்ல வேண்டியது இல்ல. அன்னைக்கு நாம் செஞ்ச அந்த உதவி தான், இன்னைக்கு எனக்கு வேலை கிடைக்கக் காரணமா இருந்திருக்கு. அது நீயில்லாம எனக்கு நடந்திருக்காது. ரொம்ப தேங்க்ஸ் மாப்ள.” என்றான் ரமேஷ் நன்றியோடு.

“டேய். அன்னைக்கு நாம ரெண்டு பேரும் சேர்ந்து தான அவங்களக் காப்பாத்தினோம். நீ என்னமோ, நான் மட்டும் தான் காரணம்னு பேசிட்டிருக்க.? சரி, விடு. ரொம்ப சந்தோஷம். அவருக்கு கண்டிப்பா நன்றி சொல்லணும்.” என்றான் அர்ஜூன்.

“சரி, நான் கண்டிப்பா அவர்கிட்ட உன்னோட தேங்க்ஸ சொல்லிடறேன்.” என்றான் ரமேஷ்.

“பரவால்ல, நான் அதை அஞ்சலிகிட்ட சொல்லி, சொல்ல சொல்றேன்.” என்றான் அர்ஜூன்.

“ஓஓஓ.. நீ அப்படி வறியா மாப்ள. நல்லது. அப்பறம் எப்படிப் போகுது உங்க ரெண்டு பேரோட லவ் ஸ்டோரி.?” என்று ஆரம்பித்தான் ரமேஷ்.

“எங்கடா மாப்ள.? இப்போ சொல்லலாம், அப்போ சொல்ல லாம்னு அப்படியே இழுத்துட்டு போயிட்டிருக்கு. எப்போதான் சொல்வோம்னு தெரியல.” என்றான் அர்ஜூன்.

“ஏண்டா சொல்றதுல என்ன பிரச்சனை.?” என்றான் ரமேஷ்.

“அதையேன்டா மாப்ள கேட்கற.? சொல்றது பிரச்சினைனா, தேவையில்லாத சில இடைஞ்சல்களும் வருது. என்ன பண்றது. ஒரு ஃப்ளோல போகும் போது யாராவது குறுக்க வந்தா எப்படி இருக்கும்.? அது மாதிரி போகுது. நான் மட்டும் என்ன பண்ண.?” என்றான்.

“ஏண்டா. அப்படி யாரு உங்களுக்கு இடைஞ்சல் பண்றா.?” என்று ரமேஷ் கேட்க, அன்று மதுவின் நிச்சயத்தில் நடந்தவற்றைச் சொன்னான் அர்ஜூன்.

“ஹூம்ம். இப்படியும் சில தொல்லைகள் கூடவே இருந்து கெடுக்கத்தான் செய்யுது.” என்று சொன்னான்.

“பாரு, தேர்ட் செமஸ்டர் எக்ஸாம் ஸ்டடி லீவ் விட்டிருக்காங்க. ஆனா, புக்க எடுத்து வைச்சா படிக்கவே முடியல மாப்ள. எப்போ பாரு அவ நினைப்பாவே இருக்கு. இப்போ கூட, படிக்கத்தான் உட்கார்ந்தேன்.” என்று அர்ஜூன் சொன்னதும், ரமேஷ் எதிர்முனையில் அமைதியானான்.

“ஏண்டா மாப்ள சைலண்ட்டாயிட்ட.?” என்று அர்ஜூன் சொல்ல,

“இங்க பாரு மாப்ள, ஒரு விஷயத்த புரிஞ்சுக்கோ. இது உனக்கான லைஃப் மட்டுமில்ல. உனக்கான சான்ஸ். இதுல அஞ்சலிய லவ் பண்றது மட்டும் உன் வேலை இல்ல. அதுக்கும் மேல நீ படிச்சு ஒரு நல்ல வேலைக்குப் போகணும். இல்லைன்னா என்னை மாதிரி ரெண்டு வருஷமா நாயா, பேயா வேலைக்காக அலையணும். அம்மாவ யோசிச்சுப் பாரு. சொந்த ஊர விட்டு உனக்காக ஏன் சென்னை வந்து யாருமில்லாம கஷ்டப்படனும்.? எல்லா வலியும் உனக்காகத்தான். அதை நீ புரிஞ்சுக்கிட்டு கவனமா படி, விளையாட்டுத்தனமா இருக்காத. லவ்வ எப்போ வேணும்னாலும் உன்னால சொல்ல முடியும். ஆனா, இந்தப் படிப்பு உனக்கு எவ்ளோ முக்கியம்னு மனசில நினச்சிட்டுப் படி.” என்று சொல்லி முடித்தான் ரமேஷ்.

இத்தனை நேரம் அவன் நகைச்சுவையாகப் பேசிக்கொண்டிருந்தாலும், அவன் சொன்ன விஷயங்கள் அனைத்தும் நூற்றுக்கு நூறு உண்மை.

“சரிடா மாப்ள. நான் கண்டிப்பா படிக்கிறேன். நீ எதுவும் ஃபீல் பண்ணாத.” என்றான்.

“சரி. நான் இன்னொரு நாள் உனக்கு கூப்பிடறேன். அம்மாவ ரொம்ப கேட்டதா சொல்லு.” என்றபடி போனை வைத்தான் ரமேஷ்.

கடைசியாக அவன் அம்மவைத்தான் ஞாபகப்படுத்துகிறான். அம்மா, அம்மா அவருக்காக தான் படித்தே ஆக வேண்டும். எப்படியாவது இந்த ஒரு செமஸ்டர் தேர்வை எதிர்கொள்ள வேண்டும். அடுத்த செமஸ்டர் ப்ராஜக்ட் வந்து விடும். அது அவனுக்கு எளிது என்பதால், அது அவனுக்குப் பெரிதாகத் தெரியவில்லை. அம்மாவை நினைவில் வைத்து படிக்க ஆரம்பித்தான்.

மறுபக்கம் அஞ்சலியின் நிலைமையும் இதே போல் தான் இருந்தது. படிக்க முடியாமல் திணறிக்கொண்டிருந்தாள். அர்ஜூனிடம் அன்றே தன் மனதில் உள்ளவற்றைச் சொல்லியிருந்தால் இத்தனை அவஸ்தை இருந்திருக்காது. இந்த ரூபா இடையில் வந்து அவனும் சொல்ல முடியாமல், தானும் சொல்ல முடியாமல் ஏன் இந்த சோதனை.? என்றே தோன்றியது.

அவள் இடை நினைத்துக்கொண்டிருந்த நிமிடம் அவளுக்கு செல்போனில் அழைப்பு வந்தது. யாரென்று பார்த்தவளுக்கு திக்கென்றது. அழைத்தது அவளின் அப்பா ரகுராம்.

“அப்பா எதற்க்காக இப்போது அழைக்கிறார்.? என்னவாக இருக்குமோ.?” என்ற பயத்திலேயே போனை அட்டண்ட் செய்தாள்.

“ஹலோ.. அப்பா. சொல்லுங்க..” என்று தயக்கத்தோடும், பயத்தோடும் பேசினாள்.

“ம்ம்.. அஞ்சலி.. எப்படி இருக்க.? என்ன பண்ணிட்டிருக்க.?” என்றார் அவர் கேஷூவலாக.

“ஆங்.. நல்லா இருக்கேன் பா. எனக்கு நெக்ஸ்ட் வீக்ல இருந்து தேர்ட் செமஸ்டர் எக்ஸாம் ஸ்டார்ட் ஆகுது பா. அதனால, இப்போ ஸ்டடி லீவ் விட்டிருக்காங்க. அதான், படிச்சிட்டிருக்கேன்.” என்றாள் பவ்யமாக.

“ஓ.. ஓ.. ஓகே. நீ தான் படிப்புல ரொம்ப சின்சியர் ஆச்சே. நல்லா படி. பை த பை உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும். சொன்னா நீ சந்தோஷப்படுவ.” என்று புதிர் போட்டார்.

அப்பாவிடம் இருந்து தனக்கென்று சந்தோஷமான விஷயம் என்று என்ன இருக்கிறது.? தெரியவில்லையே.

“சொல்லுங்கப்பா..” என்றாள் குழப்பத்துடன்.

“இன்னும் டூ வீக்ஸ்ல நிரஞ்சன் ஆஸ்ட்ரேலியால இருந்து வந்துடுவான். சோ, உன்னப் பார்க்கணும்னு அவங்க ஃபேமிலில எல்லாரும் விருப்பப்படறாங்க. உனக்கு எக்ஸாம் முடிஞ்சதும் உடனே கிளம்பி வந்துடு. நான் அரேஞ்ச் பண்ணிடறேன்.” என்று அவள் தலையில் ஒரு குண்டைப் போட்டார் ரகுராம்.

அவளுக்கு ஒரு நிமிடம் உள்ளுக்குள் சப்த நாடியும் அடங்கிப் போனது. “இவருக்கு என்னதான் ஆனது.? ஏன், இப்படி என் விருப்பம் இல்லாமல் யாரோ ஒருவனிடன் என்னை ஒப்படைக்க இத்தனை அவசரப்படுகிறார்.? நான் ஏதேனும் தவறு செய்து விடுவேனோ என்று பயப்பட்டு இப்படி அவசரப்படுகிறார் போலும்.” என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டிருக்க,

அவரோ எதிர் முனையில், “ஹலோ.. அஞ்சலி. என்னாச்சு.? லைன்ல தான் இருக்கியா.? ஹலோ..” என்று சொல்லிக்கொண்டிருந்தார்.

“ஆங் இருக்கேன் பா. சொல்லுங்க.” என்று அனைத்து உணர்வுகளையும் அடக்கிக் கொண்டு பேசினாள்.

“எக்ஸாம் முடிஞ்சதும் உடனே கிளம்பிடுன்னு சொன்னேன். கேட்டுச்சா இல்லையா.?” என்று சற்று அதட்டலாகக் கேட்டார்.

“சரி பா. நான் உடனே வந்திடறேன்.” என்றபடி போனை வைத்துவிட்டாள்.

ஏன் இப்படி ஒரு சோதனையை கடவுள் தனக்குக் கொடுக்க வேண்டும்.? மனதில் ஒருவன் ஆழமாய் ஆக்கிரமித்திருக்கும் போது, இங்கே இன்னொருவன் என்னைக் கல்யாணம் செய்ய வரப் போகிறானாம். யாருடன் என் வாழ்க்கை என்று கடவுள் முடிவு செய்துள்ளார்.? விடை தெரியா பதுமையாய் விழியில் இருந்து கரகரவென்று வழிந்த நீரை துடைக்கக் கூட மனமில்லாமல், கையில் இருந்த புத்தகத்துடன் சிலை போல் அமர்ந்திருந்தாள் அஞ்சலி...

(தொடரும்...)
 
Top