Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஆதிரையின் கண்மணி நீ வரக் காத்திருந்தேன் - Episode 39

Advertisement

Aathirai

Well-known member
Member
Episode 39

மதுவின் திருமண நாள். மருதமலை முருகன் கோவில். மணப்பெண்ணுக்கு இருக்க வேண்டிய நாணமும், அழகும், கலந்த பதுமையாய் அடர்ந்த ஊதா நிறப் பட்டுப்புடவையில் மணப்பெண்ணாய் மிளிர்ந்தாள் மது.

பிரவீனும் அவளுக்கு நிகராய் பட்டு வேஷ்டி, சட்டை சகிதமாய் மணப்பையனுக்கு உண்டான லட்சணத்துடன் நின்றிருந்தான். அங்கிருந்த அனைவர் கண்களிலும் அவர்கள் இருவர் மட்டுமே இருந்தனர்.

அஞ்சலி, மதுவின் அன்பான அழைப்பால் அவள் திருமணத்தின் மூன்று நாட்களுக்கு முன்பே அவளது வீட்டுக்கு விருந்தாளியாய் வந்து தங்கியிருந்தாள். கோயம்புத்தூர் வருவது இதுவே அஞ்சலிக்கும் முதல் முறை.

இதுவரை எத்தனையோ முறை மது அழைத்தும் ஒரு முறை கூட அவளால் இங்கே வர முடியவே இல்லை. காரணம் அவளின் அப்பாவின் அனுமதி இல்லாததால். இப்பொழுது மட்டும் எப்படி என்றா கேட்கிறீர்கள்.? வழக்கம் போல் அவளின் மாமா மகேஷ் தான் அவளுக்கு அனுமதியைப் பெற்றுத் தந்தது.

கூடவே நிரஞ்சனின் அனுமதியையும் பெற வேண்டும் என்று அவர் சொல்ல, அவனோ, “நோ ப்ராப்ளம். யூ கேன் கோ. இதுக்கெல்லாம் போய் பெர்மிஷன் கேட்பியா.?” என்று கேவலமாய்ப் பேச, அதையும் கேட்டுக் கொண்டு எரிச்சலில் ஒரு வழியாய் கோயம்புத்தூர் வந்து சேர்ந்தாள் அஞ்சலி.

அவன் மேலும், அப்பாவின் மேலும் இருந்த எரிச்சல் எப்படி காணாமல் போனது என்றே தெரியாமல் இருந்தது அவளுக்கு. மதுவின் வீட்டில் ராஜ உபசரிப்பு அவளுக்கு. சில நெருங்கிய உறவினர்கள் அவ்வப்போது வந்த வண்ணம் இருக்க, அவர்களிடம் எல்லாம் மது அவளை அறிமுகப்படுத்தினாள்.

வீடே கல்யாணக் கலையில் மிதந்தது. கலகலப்புக்கு குறைவே இல்லை. அவளின் வீட்டு மொட்டை மாடியில் இருந்து பார்க்கும் போது தெரியும் மருதமலையை ஆச்சர்யமாய்ப் பார்த்துக்கொண்டிருந்தாள் அஞ்சலி. சில்லென்று காற்று வீச சிலிர்த்தது அவளின் உடம்பு. அந்த வாநிலையை ரசித்தவண்ணம் இருந்தாள் அஞ்சலி.

மேலே வந்தாள் மது. அப்போதுதான் பிரவீனிடம் போனில் பேசி முடித்தவாறே இவளைப் பார்த்துக்கொண்டு வந்தாள். அவள் ஏதோ யோசனையாய் இருப்பதைப் பார்த்தவள்,

“அஞ்சலி, என்ன மேல பார்த்துட்டு ரொம்ப யோசனைல இருக்க.?” என்றாள்.

“ஒண்ணும் இல்ல மது. சும்மா அந்த மருதமலையைப் பார்த்தேன். அதே மாதிரி கிளைமேட் இங்க ரொம்ப நல்லா இருக்கு. அதான் ரசிச்சுட்டு இருக்கேன்.” என்றாள்.

“ஹூம்ம்.. பெங்களூரை விடவா இங்க கிளைமேட் நல்லா இருக்கு உனக்கு.?” என்றாள் மது.

“இல்ல மது. பெங்களூருல எப்பவும் கோல்ட் அதிகம். ஈவினிங் மேல அதிகமா எங்கயும் போக மாட்டோம். மொட்டை மாடிக்குப் போனா கூட, சில சமயம் ரொம்ப குளிரும். ஆனா, இங்க அப்படி இல்ல, ரொம்ப நல்லா இருக்கு. ரொம்ப குளிராம இதமான காத்தா வீசுது. மலைக்குக் கீழ இருக்கறதால இன்னும் ரம்மியமா இருக்கு.” என்று தன் ரசனையை அவளிடம் பகிர்ந்து கொண்டாள்.

“ம்ம்ம்... இப்போவெல்லாம் ரொம்ப ரசனையா பேசற. கவிதையா படிக்கற. உனக்குள்ள ரொம்ப மாற்றங்கள் வரத நீ கவனிக்கிறியா அஞ்சலி. அதோட காரணங்கள் என்னன்னு உனக்குத் தெரியுதா.?” என்றாள் மது.

“ஹூம்ம்ம்...” என்று உதட்டைச் சுழித்து சலித்தாள் அஞ்சலி.

“எனக்குத் தெரியும். அது அர்ஜூன் தான.?” என்றாள் மது.

மது அஞ்சலியின் மனதில் மறைத்து வைத்திருக்கும் உண்மையை சரியாகக் கூறினாலும், அவளால் மௌனத்தை மட்டுமே பதிலாகக் கூற முடிந்தது. மது அதைப் புரிந்து கொண்டவளாக,

“சரி, விடு அஞ்சலி. உனக்குத் தெரியுமா.? பிரவீன் வீட்டுல அவங்க ரிலேஷன் எல்லாரையும் நாளைக்கு பஸ் அரேஞ்ச் பண்ணி கூட்டிட்டு வராங்க. பிரவீன், அங்கிள், ஆண்ட்டி, அப்பறம் ஆன்ட்டியோட அம்மா, அப்பா இவங்க அஞ்சு பேர் மட்டும் கார்ல வராங்க. எப்படியும் ஈவினிங் வந்துடுவாங்க. பஸ்ல அவங்க கூடவே அர்ஜூனும், ரவியும் வரதா சொன்னாங்க.” என்றாள் மது.

“ஓஓ..” என்று தலையை மட்டும் ஆட்டினாள் அஞ்சலி.

“முதல்ல ட்ரெயின் புக் பண்ணி வரதா சொன்னாங்க. நான் தான் பிரவீன் கிட்ட சொல்லி, அவங்களையும் பஸ்ல கூட்டிட்டு வரச் சொன்னேன். சோ, நாளைக்கு ஈவினிங் எல்லாரும் தங்க ஒரு ஹால் புக் பண்ணிருக்கோம். எல்லாரும் அங்கயே சாப்பிடறதுக்கும், அரேஞ்ச் பண்ணியாச்சு. ரெடியாயிட்டு நேரா கோவிலுக்கு வந்திடுவாங்க.” என்று அவள் சொல்லிக்கொண்டிருந்த அனைத்தையும் ஆர்வமே இல்லாமல் கேட்டுக் கொண்டிருந்தாள்.

அவளின் எண்ணம் முழுக்க இப்போது அர்ஜூன் மட்டுமே. கடைசியாக கல்லூரியை விட்டு வரும் போது கூட, அவன் அவளின் தோழிகளிடம் பேசினானே தவிர ஏனோ அஞ்சலியிடம் பேசவே இல்லை. அதுவே அவளை இன்னும் சாகடித்துக் கொண்டிருந்தது. இப்போது திருமணத்திற்க்கு வருகிறான். ஆனால், பேசுவானா, இல்லையா.? என்றுதான் தெரியவில்லை.

அவள் சொன்னதைப் போல் அடுத்த இரு நாட்களை எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள் அஞ்சலி. மாலை 5 மணிக்கெல்லாம் கோயம்புத்தூர் வந்து சேர்ந்தனர் பிரவீன் குடும்பமும், அவர்களது உறவினர்களும்.

வந்து சேர்ந்த கலைப்பு ஒரு பக்கம் இருந்தாலும், மதுவைப் பார்க்கும் சந்தோஷத்தில் இருந்த அவர்களுக்கு அவர்கள் வீட்டுக்கு வந்ததும் அந்தக் கலைப்பே நீங்கிப் போனது. முதலில் இவர்கள் மட்டும் காரில் வந்து வீட்டில் அனைவரையும் பார்த்து விட்டுச் சென்றனர்.

உறவினர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட ஹாலில் அனைவருக்கும் விருந்து உபசரிப்புகளுக்குக் குறைவில்லாமல் விநாயகம் குடும்பத்தினர் ஏற்பாடுகள் செய்திருந்தனர். அனைவருக்கும் திருப்தியான உணவு, படுக்கை வசதிகள் என அனைத்தையும் பார்த்துப் பார்த்து செய்திருந்தனர்.

அத்தனை தொலைவிலிருந்து வருபவர்களுக்கு எந்த ஒரு சங்கடமும் நேர்ந்து விடக் கூடாது என்பதில் இரு வீட்டாரும் மிகக் கவனமாக இருந்தனர். அர்ஜூனை மது வீட்டுக்கு வருமாறு அழைத்திருந்தாள். அஞ்சலியும் அவன் எப்பொழுது வருவான் என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்தாள்.

அர்ஜூனும், ரவியும் மதுவின் மனது சங்கடப்படக் கூடாது என்பதற்க்காக வீட்டிற்க்கு வந்தனர். அஞ்சலி அவர்கள் வந்துவிட்டார்கள் என்று அறையை விட்டு வெளியே வந்து அவனைப் பார்த்து சிரித்தாள்.

அர்ஜூனுக்கு அவளின் எதிர்பார்ப்பைத் தெரிந்துகொள்ள முடிந்தது. ஆனாலும், அதை அவன் பொருட்படுத்தவில்லை. மதுவிடம் வந்து பேசினான். மது அவர்களை அவளது குடும்பத்துக்கு அறிமுகம் செய்து வைத்தாள்.

இருவரும் கேட்டனர். “அப்பறம் மது. எப்படி இருக்க.?” என்றான் அர்ஜூன்.

“ம்ம். மது கல்யாணப் பொண்ணு டா அர்ஜூன். இப்போ போய் எப்படி இருக்கன்னு கேக்கற.? அவ ரொம்ப ஹேப்பியா இருக்கான்னு அவளோட முகத்தைப் பார்த்தாலே தெரியல.?” என்றான் ரவி.

“ஏய்.. போதும் பா. ஓவரா ஓட்டாதீங்க.” என்று வெட்கப்பட்டாள் மது.

“அஞ்சலி நீ எப்போ வந்த.?” என்றான் ரவி.

“நான் ரெண்டு நாளைக்கு முன்னாடி வந்தேன். ட்ராவலிங்கெல்லாம் எப்படி இருந்தது.?” என்றாள் அஞ்சலி.

“ம்ம்.. நல்லா இருந்துச்சு அஞ்சலி. முதல்ல நான் நல்லா தூங்கிட்டேன். எங்க ஊரு சேலம் பக்கம் வந்ததும், எங்க ஊரு காத்து என்னை ஆட்டோமேட்டிக்கா எழுப்பிடுச்சு. அப்பறம் இறங்கி சாப்டுட்டு, அப்படியே பேசிட்டு வந்தோம். அதுக்கப்பறம் பஸ்ல எல்லாரும் செம்ம என்ஜாய்மெண்ட். ஒரே பாட்டு, டான்ஸ்ன்னு நல்லா ஜாலியா போச்சு.” என்று ரவி உற்சாகமாய் பதில் சொல்லிக்கொண்டிருக்க,

அர்ஜூனோ எதுவும் பேசாமல் அமைதியாய் நின்றான். அவளும் எப்படிப் பேசுவது என்று தெரியாமல் நின்றாள். திரும்பவும் இவர்களின் அமைதியை நினைத்து மதுவும், ரவியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

பிறகு, ரவி அவர்கள் இருவரும் இல்லாத சமயம், ஒரு நிமிடம் மதுவை அழைத்து ஒரு விஷயத்தை சொன்னான். மதுவும் அதற்க்கு ஒப்புக்கொண்டாள்.

அடுத்த நாள் விடியற்காலை 6.30 மணிக்கு முகூர்த்த நேரம் என்பதால் அனைவரும் 5 மணிக்கெல்லாம் அங்கே இருக்க வேண்டும் என்று கிளம்பிவிட்டனர்.

மதுவின் வற்புறுத்தலால் அஞ்சலியும் பட்டுப் புடவைக்கு நிகராக ஒரு ஃபேன்ஸி சேலையை அணிந்தாள். அந்த நீல நிறப் புடவையும், கழுத்தில் அணிந்திருந்த ஒற்றை மயில் டாலர் வைத்த வெள்ளைக்கல் ஆரமும், சடையைப் பின்னாமல் ஒரே ஒரு கிளிப்பை மட்டுமே குத்தி லாவகமாக முடியை அவள் படர விட்ட அழகு, அவளை யாரென்று வந்தவர் அனைவரையும் கேட்கத் தூண்டியது.

தூரத்திலேயே அஞ்சலியின் அழகை ரசித்த அர்ஜூன், அருகே நிற்கும் போது அவளைக் கண்டு கொள்ளாததைப் போல் தன் போனைப் பார்த்துக்கொண்டிருந்தான். அதே போல் தூரத்திலேயே அவளை, அவள் அறியாமல் தன் போனில் உள்ள கேமராவில் படமெடுத்தான். அவன் பார்க்கவே இல்லை என்ற ஏக்கம் அவளுக்குள் இருந்தாலும், அவளால் அதை வெளிக்காட்டிக் கொள்ள முடியவில்லை.

அய்யரின் அனைத்து சம்பிரதாயங்கள் முடிந்ததும், முகூர்த்த நேரம் நெருங்க முக்கியமான உறவினர்கள் புடைசூழ, ஆதி முருகன் வள்ளி, தெய்வானை சகிதமாய் வீற்றிருக்கும் சந்நதியில் மேளம் கொட்ட, நாதஸ்வரம் சத்தம் முழங்க, அய்யரின் மந்திரம் ஓத மதுவின் கழுத்தில் பிரவீன் தாலி கட்டினான்.

விநாயகம் குடும்பத்தினரும், வெங்கடேசன் குடும்பத்தினரும் ஆனந்தக் கண்ணீரே விட்டனர். நண்பர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் அணைத்துக்கொண்டனர். அதே போல், வயதான பெரியவர்களுக்கும் ஏக சந்தோஷம். தங்களது பேத்தியின் திருமணத்தை எப்படியோ பார்த்துவிட்டோம் என்ற நெகிழ்ச்சி.

நல்லபடியாக திருமணம் நடந்தது. அங்கிருந்து மருதமலை ஆண்டவனை அனைவரும் தரிசித்தபடி பிரகாரத்தின் வெளியே வந்து சிவனையும், அந்தப்பக்கமாக இருக்கும் அம்பாளையும் தரிசித்துவிட்டு சிறிது நேரம் அங்கே இருந்துவிட்டு, பிறகு அனைவரும் கிளம்பினர்.

போட்டோகிராஃபர் அவர்களை விதவித போஸ்கள் கொடுக்குமாறு சொல்லி வளைத்து, வளைத்து தன் கேமராவில் அவர்களை படமெடுத்துக்கொண்டிருந்தார். அவர்களும் சலிக்காமல் அவருக்கு போஸ் கொடுத்துக் கொண்டிருந்தனர்.

இவற்றையெல்லாம் ஒரு கூட்டம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது. சிலர் நீண்ட நாள் கழித்துப் பார்க்கும் சொந்த, பந்தங்களோடு பேசிக் கொண்டிருந்தனர். சின்னப் பிள்ளைகள் அனைவரும் விளையாடிக் கொண்டிருந்தனர்.

இவையனைத்தையும் பார்த்தபடி அமர்ந்திருந்தாள் அஞ்சலி. அப்போது தான் ரவியும், அர்ஜூனும் அவளிடம் வந்தனர். அர்ஜூன் வரும் போதே ரவியை ஏதோ சொல்லிக்கொண்டே வந்தான். அதைப் பொருட்படுத்தாத ரவி அவளிடம் பேசினான்.

“ஏன் அஞ்சலி, நீ மட்டும் இங்க தனியா உட்கார்ந்திருக்க.?” என்றான் ரவி.

“என்ன பண்றது ரவி. இங்க எனக்கு யாரைத் தெரியும்.? மது போட்டோ எடுக்கறதுல பிஸியா இருக்கா. அவங்கள டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னு இங்க வந்து உட்கார்ந்திருக்கேன். எனக்கு இங்க கம்பெனி குடுக்கற மாதிரி வேற யாரும் இல்ல. வேற வழியில்லாம வேடிக்கை பார்த்துட்டு உட்கார்ந்திட்டிருக்கேன்.” என்றாள் சலித்துக்கொண்டே.

“அதென்ன அஞ்சலி அப்படி சொல்லிட்ட.? ஏன் நாங்கள்லாம் இல்லையா.?” என்றான் ரவி.

“அதெல்லாம் மொதல்ல ரவி. இப்போ அப்படிக் கிடையாது. எல்லாரும் ஒரே மாதிரி எப்பவும் இருக்கறதில்ல. சிச்சுவேஷன்க்கு தகுந்த மாதிரி மாறிடுவாங்க. அதுவும் என்னோட விஷயத்துல அது ரொம்ப சரியா இருக்கு.” என்று பேசியவள் மிகத் தெளிவாகவும், அதே சமயம் அர்ஜூனை ஒரு பார்வை பார்த்தவாறு மது இருக்கும் இடத்திற்க்குச் சென்றாள்.

“அவ உன்னைத்தான் சொல்லாம சொல்லிட்டுப் போறா. புரியுதா.?” என்றான் ரவி அர்ஜூனிடம்.

அர்ஜூனோ மௌனமாக அவளையே பார்த்துக்கொண்டு நின்றான்.

(தொடரும்...)

 
Nice epi dear. Oru kalyanam success. Innum randy irruke mukkiyam Anjali yoda kalyanam. Enna twist irruku?waiting for that.
 
Top