Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஆதிரையின் கண்மணி நீ வரக் காத்திருந்தேன் - Episode 42

Advertisement

Aathirai

Well-known member
Member
Episode 42

அவர்களிடம் மகேஷ் பேசிக்கொண்டிருக்கும் போதே அழைத்த அஞ்சலியிடம் சென்றார்.

“நான் அவங்க கூட பேசிட்டிருக்கும் போதே எதுக்குக் கூப்பிடற அஞ்சலி.?” என்றார் அவர்.

“மாமா, எதுக்கு இப்போ அவங்ககிட்ட என்னைக் கூட்டிட்டுப் போகச் சொல்றீங்க.? நான் ஒண்ணும் குழந்தை இல்ல. எனக்குத் தனியா போகத் தெரியும். இதுக்கு முன்னாடி காலேஜ் படிக்கும் போது கூட சென்னையிலிருந்து நான் தனியாதான வந்திருக்கேன். அப்பறம் என்ன மாமா பிரச்சினை.?” என்றாள் அஞ்சலி.

“அஞ்சலி மா.. எனக்குத் தெரியும், உன்னால தனியா போக முடியும்னு. ஆனா, இப்போ உன்னைத் தனியா அனுப்ப கொஞ்சம் பயமா இருக்குடா. லாஸ்ட் டைம் உன்ன அனுப்பினதே மது கூட இருக்கறாங்கற தைரியத்துலதான். ஆனா, வரும் போது நீ மட்டும் தனியா வந்து சேர்றதுக்குள்ள எங்களுக்கு எவ்வளவு டென்ஷன் தெரியுமா.? இதுல நீ டிக்கட்ட மிஸ் பண்ணி, அந்த நேரம் பார்த்து எனக்கு முக்கியமான கிளையண்ட் மீட்டிங் வந்துடுச்சு. எப்படியோ நீ வந்து சேர்ந்துட்ட. இருந்தாலும், நீ நிச்சயம் ஆன பொண்ணு. இந்த மாதிரி யாரும் இல்லாம தனியாப் போகக் கூடாது. அவங்க ரெண்டு பேரும் உன்னோட ஃப்ரெண்ட்ஸ் தான.? அதனால தான் அவங்க ரெண்டு பேர்கூட போறதுக்கு கேட்டுட்டு இருக்கேன். இதுல உனக்கு என்ன பிரச்சினை.?” என்றார் மகேஷ்.

“பிரச்சினையெல்லாம் ஒண்ணும் இல்ல மாமா. எனக்குப் போக இஷ்டம் இல்ல. நான் தனியாவே போய்க்கிறேன்.” என்றாள்.

அவள் அப்படிச் சொல்லும் போதே, ஏதோ ஒரு பிரச்சினை இருக்கிறது என்று மகேஷால் உணர முடிந்தது. இருந்தாலும் அவளுக்காக,

“சரி, விடு. நீ தனியாவே போய்க்கோ. இதுக்கு மேல நான் அவங்க்கிட்ட இதைப் பத்தி பேசல. சரியா.? நீ ரிலாக்ஸா இரு.” என்று சொல்லிவிட்டு அவர்களிடம் வந்தார்.

அவள் என்ன சொன்னாளோ.? என்ற எதிர்பார்ப்பு அர்ஜூனிடம் அதிகமாகவே இருந்தது. அவர் வந்ததும், “உங்களுக்குள்ள என்ன பிரச்சினைன்னு எனக்குத் தெரியல. ஆனா, அவ தனியாவே போறேன்னு சொல்றா.” என்றார்.

அப்போதே அர்ஜூனின் முகம் வாடிவிட்டது. அதை மகேஷூம் கவனித்துவிட்டார். இருந்தாலும், அதைக் காட்டிக் கொள்ளாமல் அவர்களைப் பார்த்தார்.

“சரி, சரி பேசினதெல்லாம் போதும். கை கழுவிட்டு வாங்க சாப்பிடலாம்.” என்று பானுமதி அவர்களை அழைக்க,

“இல்ல, ஆண்ட்டி நாங்க கிளம்பறோம். சும்மாதான் உங்களைப் பார்த்துட்டுப் போகலாம்னு வந்தோம்.” என்று அர்ஜூன் சொல்ல,

பானுமதியோ, “என்னது, கிளம்பறீங்களா.? உங்களுக்காக ஸ்பெஷல்லா எல்லாம் பண்ணிருக்கேன். அன்னைக்கு வீட்டுக்கு வந்தப்போ, என்னால எதுவும் பண்ண முடியல. அதனால, இன்னைக்கு எல்லாத்துக்கும் சேர்த்து பண்ணிருக்கேன். கண்டிப்பா எல்லாத்தையும் சாப்பிட்டுட்டு தான் போகணும். வாங்க.” என்று வற்புறுத்தி அழைத்தார்.

அவர் அவ்வாறு சொன்னதும் வேறு வழியில்லாமல், அர்ஜூனும், ரவியும் சாப்பிடச் சென்றனர்.

“டேய்.. மகேஷ். நீயும் எழுந்து வா. அவங்க ரெண்டு பேரும் கூச்சப்படறாங்க இல்ல. வந்து நீயும் அவங்க கூட உட்கார்ந்து சாப்பிடு.” என்று தன் தம்பியையும் அழைக்க, தன் அக்காவின் பரபரப்பான கவனிப்பை யோசித்தவாறே அவர்களுடன் வந்து சாப்பிட அமர்ந்தார் மகேஷ்.

அமர்ந்துகொண்டே பார்த்தவர், “அக்கா, நம்ம வீட்டுல இன்னைக்கு என்ன விஷேசம்.? இவ்ளோ ஐயிட்டங்கள் பண்ணிருக்க.? ஒரே அமர்க்களமா இருக்கு.” என்று பானுமதியைப் பார்க்க, அவரோ முறைத்தார்.

“அதெல்லாம் ஒண்ணும் இல்ல. எப்பவும் போல தான் பண்ணிருக்கேன். நீ பேசாம சாப்பிடு.” என்று அவரை சற்று அதட்டியபடி, “அஞ்சலி... இங்க வா.. என்ன பண்ற.?” என்று அவளை அழைத்தார் பானுமதி.

அவர் கூப்பிட்ட்தும் அங்கே வந்த அஞ்சலி, “என்னம்மா.?” என்றாள் சலித்துக்கொண்டே.

“ஏண்டி, உன்னோட ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் வந்திருக்காங்க. நீ என்னமோ வேற யாரோ வந்த மாதிரி ரூம்லயே உட்கார்ந்துட்டு இருக்க. வா, வந்து பரிமாறு. இந்தா அத தம்பிக்கு வை.” என்று அவள் கையில் ஒரு பதார்த்த குண்டாவைத் திணித்தார்.

அவளுக்கு மட்டுமல்ல, மகேஷ், மீனா ஏன் அர்ஜூனே கூட திகைத்துத்தான் போனான். அவளை இந்த மாதிரி யாருக்காகவும் பரிமாற பானுமதி அழைத்ததே இல்லை. ஆனால், இன்றோ அவளை உரிமையாய் அதுவும் அர்ஜூனுக்கு பரிமாறுவதற்க்காகவே அழைத்தார்.

“இந்தா, இதை வை.. அதை வை..” என்று அஞ்சலிக்கு ஒருபுறம் கட்டளையிட, மறுபுறம் அர்ஜூனுக்கு ஏகபோக கவனிப்பு, “நல்லா சாப்பிடுங்க தம்பி. உடம்பு பாருங்க எப்படி இருக்கு. இப்போதான் நல்லா சாப்பிட்டு தெம்பா இருக்கணும். அப்போதான் பார்க்க நல்லா இருக்கும்.” என்று அவனை அதிகமாகவே கவனித்தார்.

கூடவே அவர்களுடன் அமர்ந்து சாப்பிட்ட மகேஷூக்கும், ரவிக்கும் பறிமாறியது குறைவே. மீனாதான் மகேஷை கவனித்தாள். பாவம், ரவிக்கு அதுவும் இல்லை. இருந்தாலும் எப்படியோ சாப்பிட்டு எழுந்தனர்.

மகேஷ் தன் அக்காவை ஒரு பார்வை பார்த்தவாறே தான் இருந்தார். அவர் எப்பொழுதும் இல்லாத புது உற்சாகத்தோடு இருப்பதைக் கண்டார். அது அவருக்குப் புதிதாக இருந்தது. இருந்தாலும், அவர்கள் முன்னிலையில் அவர் அதைக் கேட்க வேண்டாம் என்று அமைதியாக எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு நின்றார்.

சிறிது நேரத்திற்கெல்லாம் அவர்கள் இருவரும் பேசிவிட்டுக் கிளம்பிவிட்டனர். கடைசி வரை அஞ்சலி ஏனோ அவர்களிடம் முகம் கொடுத்துப் பேசாமலேயே இருந்ததையும் மகேஷ் கவனிக்காமல் இல்லை.

அவர்கள் கிளம்பியதும், தனது அக்காவிடம் வந்தார் மகேஷ். அவரும், மீனாவும் அப்பொழுதுதான் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். அவர்கள் சாப்பிடும் போதே, கூடவே அஞ்சலியும் வந்து சாப்பிட அமர்ந்தாள். இப்போது பேசினால் சரியாகத்தான் இருக்கும் என்று ஆரம்பித்தார் மகேஷ்.

“ம்ம்.. என்னக்கா, இன்னைக்கு ஒரே விருந்து அமர்க்களமா இருந்துச்சு.? நீ இந்த மாதிரி யாருக்கும் மெனக்கெட்டு பார்த்து, பார்த்து செய்யமாட்டியே, மாமாவைத் தவிர அதையும் நானே சொல்லிட்டேன்.” என்று மகேஷ் அவரை ஓரக்கண்ணால் சந்தேகத்தோடு பார்த்தபடியே கேட்டார்.

“டேய்.. நீ எதுக்கு இப்போ சந்தேகமாக் கேட்கற.? நம்ம வீட்டுக்கு வந்த விருந்தாளிய கவனிக்கறது ஒரு குத்தமா.? என்னமோ பெரிசா கேள்வி கேட்கற.?” என்றார் பானுமதி.

“இல்ல, அண்ணி நீங்க இதுவரைக்கும் இவ்ளோ பரபரப்பா சமைச்சு நானே பார்த்தது இல்ல. அதனால தான் எனக்கும் ஒரு பக்கம் டவுட்டா இருக்கு.” என்று மீனாவும் சாப்பிட்டுக்கொண்டே கேட்க,

“ம்ம்.. நீயும், உன் புருஷனோட சேர்ந்துட்டு என்னைக் கேட்கறியா.? இப்போ என்ன உங்களுக்குத் தெரியணும்.? என் உயிரைக் காப்பாத்துன பையன் அவன். அவனுக்கு இது மட்டுமில்ல, இதுக்கும் மேலயே செய்யலாம். ஏதோ, அவன் வந்தப்போ என்னால முடிஞ்சதப் பண்ணேன். இதுக்குப் போய் ஆளாளுக்கு என்னைக் கேள்வி கேட்டுட்டே இருக்கீங்க.?” என்று சற்று கோபப்பட்டார் பானுமதி.

“சரி கா.. நீ உடனே கோவிச்சுக்காத. எனக்கு என்னமோ புதுசா இருந்துச்சுன்னு தான் கேட்டேன். சரி, நீ என்ன அஞ்சலி, உன் ஃப்ரெண்ட்ஸ் வந்திருக்காங்க. யாரோ வந்த மாதிரி அவங்ககூட முகம் கொடுத்து கூட பேசல. என்னாச்சு உனக்கு.? ஏதாவது சண்டையா.?” என்றார் மகேஷ்.

“அதெல்லாம் ஒண்ணும் இல்ல மாமா. இப்போவெல்லாம் யார் கூடயும் நான் அதிகமா பேசறதில்ல. இனி பேசி மட்டும் என்னாகப் போகுது.? என்னோட லைஃப்ல இனிமேல் நான் யார்கூடயும் பழகாம இருக்கறதுதான் நல்லதுன்னு நினைக்கிறேன்.” என்று ஏதேதோ சம்பந்தமில்லாமல் பேசினாள் அஞ்சலி.

“ஏய்.. அஞ்சலி மா. நீ என்ன தேவையில்லாம பேசிட்டிருக்க.? அப்படி நீ பழகக்கூடாது, பேசக்கூடாதுன்னு உன்னை யார் சொன்னா.? நாங்க யாரும் உன்னை ரெஸ்ட்ரிக்ட் பண்ணலையே.? அப்பறம் ஏன் நீயா ஒண்ண நினைச்சு ஃபீல் பண்ணி பேசிட்டிருக்க.? நீ பேசாம இருந்ததைப் பார்த்து எனக்கே ரொம்ப சங்கடமாயிடுச்சு தெரியுமா.? அப்படியெல்லாம் வீட்டுக்கு வந்திருக்கும் போது, என்னாதான் கோபம் இருந்தாலும், யார்கிட்டயும் அப்படி நடந்துக்கக் கூடாது அஞ்சலி மா. அட்லீஸ்ட் நீ கொஞ்சமாவது பேசியிருக்கணும்.” என்று மகேஷ் மிகவும் வருத்தப்பட்டு சொல்ல,

“என்ன டா சொல்ற.? அப்படியா பண்ணா இவ.? அஞ்சலி, எதுக்கு அப்படிப் பண்ண.? அவங்களுக்கு எவ்வளவு சங்கடமா இருந்திருக்கும்.? நீ பண்ணது ரொம்பத் தப்பு அஞ்சலி.” என்று பானுமதி சொல்ல,

“ம்மா.. எனக்கு பேசறதுக்கு தோணல மா. நான் என்ன பண்றது.?” என்றாள் சாதாரணமாக.

“சரி, போனது போகட்டும் விடு. நீ இவங்க ரெண்டு பேர் கூடயே கேரளா மேரேஜ்க்கு போயிட்டு வந்துடு அஞ்சலி மா. அப்பறம் உங்கப்பா ஏதாவது கேட்டா, எங்களால பதில் சொல்ல முடியாது.” என்றார் மகேஷ்.

“ஓ.. இந்தப் பசங்களும் அங்க போறாங்களா.? அப்போ ரொம்ப நல்லதாப் போச்சு. அருமையான பசங்க. அவளைத் தனியா அனுப்பற டென்ஷன் நமக்கு வேண்டாம். பேசாம இவங்க கூடவே போகட்டும்.” என்றார் பானுமதி.

“அம்மா, நான் தனியாவே போறேன். யார் கூடயும் போகல.” என்றாள்.

“இங்க பாரு, உன் பிரச்சினை, பஞ்சாயத்தெல்லாம் அப்பறம் வைச்சுக்கோ. ஆனா, நீ அவங்க கூட்த்தான் போகணும். இல்லன்னா கல்யாணத்துக்கு போகவே வேண்டாம்.” என்றார் பானுமதி.

“ம்மா..” என்றாள் அஞ்சலி.

“டேய், தம்பி.. இங்க பாரு, இவங்க போறதுக்கு பஸ் டிக்கட் புக் பண்ணிடு. இவ அடம்புடிச்சா, அங்க போகவே வேண்டாம்.” என்று ஒரேயடியாக சொல்லிவிட்டு எழுந்து சென்றார் பானுமதி.

மகேஷோ அஞ்சலியைப் பார்த்து, “நான் இதுக்கு பொறுப்பு கிடையாது அஞ்சலி மா. நீ அவங்க கூடத்தான் போயாகணும். வேற வழி கிடையாது.” என்று சொன்னபடி எழுந்தார் அவரும்.

இப்படி இருவரும் சேர்ந்து தன்னை தர்மசங்கடத்தில் ஆழ்த்துகிறார்களே!! என்று அஞ்சலிக்கு கோபம், கோபமாக வந்தது. ஒருவேளை அவர்களோடு செல்ல விருப்பம் இல்லை என்றால், அங்கே போக விடமாட்டார்கள்.

போகவில்லை என்றால், ஷாலினி கோபித்துக் கொள்வாள். இத்தனை வருட நட்பும் பாழாகி விடும். என்னதான் செய்வது.? என்று யோசித்துக்கொண்டே இருந்தாள்.

அதற்க்குள் மகேஷ், அவள் அவர்களுடன் செல்ல பெங்களூரு-பாலக்காடு பஸ் டிக்கட் புக் செய்து அந்த மெசேஜை அர்ஜூனுக்கும், அஞ்சலிக்கும் அனுப்பிவிட்டார். அதைப் பார்த்த அர்ஜூன் உடனே அவருக்கு போன் செய்து விட்டான்.

“ஹலோ, நான் அர்ஜூன் பேசறேன்.” என்று சொன்னதும், மகேஷ் சிரித்துக்கொண்டே பேசினார்.

“சொல்லுங்க அர்ஜூன். மெசேஜ் பார்த்துட்டு கூப்பிடறீங்களா.?” என்று கேட்க,

“ஆமா, சடர்னா உங்க வாட்ஸாப் நம்பர்ல இருந்து பஸ் டிக்கட் மெசேஜ் பார்த்ததும் எனக்கு ஒண்ணுமே புரியல. அதனால தான் கூப்பிட்டேன்.” என்றான்.

“நீங்க மேரேஜ்க்கு போகும்போது அஞ்சலியையும் கூட்டிட்டுப் போறதப் பத்தி பேசினேன் இல்லையா. அது கன்ஃபார்ம். அதனால தான், உங்க மூணு பேருக்கும் டிக்கட் புக் பண்ணிட்டேன். அதுவும், சீட் கிடைக்க்றதுல கொஞ்சம் சிரமமா இருந்துச்சு. வெறும் மூணே சீட் தான் இருந்துச்சு. எல்லமே ஃபுல் ஆயிடுச்சு. லேடீஸ் சீட்டும் ஃபுல் ஆயிடுச்சு. நீங்க பஸ்ல இருக்கறவங்ககிட்ட அட்ஜஸ்ட் பண்ணிக் கேட்டு வேணும்னா மாத்திக்கோங்க. சரியா.?” என்று சொல்லி முடித்தார்.

“எதுக்குங்க உங்களுக்கு சிரமம்.? நானே கூட டிக்கட் பாத்திருப்பேனே.” என்றான்.

“ம்ஹூம்ம். இதுல என்ன சிரமம்.? அதெல்லாம் ஒண்ணும் இல்ல. நீங்க அவள சேஃபா கூட்டிட்டுப் போனா ஓகே. வேற ஒண்ணும் இல்ல.” என்றார்.

“சரிங்க. நான் பாத்துக்கறேன். நீங்க வொர்ரி பண்ணிக்க வேண்டாம்.” என்றான் அர்ஜூன்.

“ரொம்ப தேங்க்ஸ் பா. நீங்க கிளம்பறப்போ நான் ஹால்ஃப் ஏன் அவர்க்கு முன்னாடியே அவள பஸ் ஸ்டேண்ட்க்கு கூட்டிட்டு வந்திடறேன்.” என்றார் மகேஷ்.

“ம்ம்ம். சரிங்க.” என்று போனை வைத்தவனுக்கு உள்ளுக்குள் ஒருவித சந்தோஷம். இப்பொழுதாவது அவளிடம் பேச வாய்ப்பு கிடைத்ததே என்று. ஆனால், அங்கே அஞ்சலியோ அவனை எப்படி தவிர்க்கலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தாள்...


(தொடரும்...)
 
Top