அத்தியாயம் ஒன்று:
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா
என்று பாடல் ஒலித்துக் கொண்டிருக்க, கடவுளுக்கு முன்பாக தீபாரதனை காட்டிக் கொண்டிருந்தாள் நம் நாயகி தேன்மொழி.
அவள் சாமி கும்பிடும் வரை தொந்தரவு செய்யாமல் அமைதியாக இருந்த அவளது அன்னை சரஸ்வதி அவள் சாமி கும்பிடும் அழகை பார்த்து ரசிக்க, அவரோடு சேர்ந்து அங்கு வளரும் மழலைச் செல்வங்களும் அவளை ரசித்துப் பார்த்தனர்.
அவர்கள் தன்னை ரசித்துப் பார்ப்பதை கண்டு கொண்ட தேன்மொழி எப்போதும் போல் முறைத்து பார்க்க, அவள் பார்ப்பது தெரிந்ததும் மழலைக் கூட்டங்கள் பயந்தது போலவே நடித்துக் கொண்டு சிரிப்புடன் அங்கிருந்து ஓடினார்கள்.
குழந்தைகளின் சிரிப்பு சத்தத்தில் அவள் இதழ்களும் தன்னால் விரிந்து கொள்ள தீபாரதனை எடுத்துக்கொண்டு சரஸ்வதி முன்னால் நீட்ட, அதை கண்களில் ஒற்றிக்கொண்டவர் விபூதியை நெற்றியில் வைத்துக் கொண்டார்.
" அம்மாடி தேன்மொழி நான் வெளியில தோட்டத்தில் நிற்கிறேன் உன்கிட்ட ஒரு விஷயம் பேசணும் சீக்கிரமா வந்துடு.. " என்றவருக்கு ஒரு தலையசைப்பை பதிலாக கொடுத்தாள் தேன்மொழி.
சாமியை கும்பிட்டு முடித்தவள் அவசரமாக சரஸ்வதி காத்துக் கொண்டிருக்கும் தோட்டத்திற்கு செல்ல, வழியில் இருந்த மழலைச் செல்வங்களில் சில வளர்ந்த செல்வங்கள் பள்ளிக்கு கிளம்பி கொண்டிருக்க " சீக்கிரம் கிளம்புங்க நான் இன்னும் பத்து நிமிஷத்துல சாப்பாடு செஞ்சிடுவேன்.. " என்றவள் தோட்டத்திற்கு செல்ல, அங்கு தோட்டத்திலிருந்த காய்கறிகளை சமையலுக்காக பறித்துக் கொண்டிருந்தார் சரஸ்வதி.
அவரோடு சேர்த்து நேரத்தை வீணாக்க விரும்பாமல் பக்கத்தில் இருந்த காய்கறி கூடையை எடுத்து காய்கறிகளை பறித்த தேன்மொழி "சொல்லுங்கம்மா! ஏதோ முக்கியமான விஷயம் பேசணும்னு சொன்னீங்க.. என்ன விஷயம் பிள்ளைகளுக்கு வேற ஸ்கூலுக்கு டைம் ஆயிட்டு இருக்கு சாப்பாடு செய்யணும்.." என்றவள் கைகள் பரபரவென காய்கறிகளை ஒடித்துக் கொண்டிருக்க, அவளை சரஸ்வதி ஆச்சரியமாக பார்த்தார்.
தான் கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் வராமல் போக, செய்து கொண்டிருந்த வேலையை தேன்மொழி கைகள் ஒரு நிமிடம் நிறுத்தி வைக்க தலையை நிமிர்த்தி சரஸ்வதியை பார்த்தாள்..
" என்னைக்கும் போல இன்னைக்கும் என்ன ஆச்சரியமா பார்க்க வேண்டாம்.."
" எப்படி என்னால பாக்காம இருக்க முடியும் தேன்மொழி.. கொஞ்ச நேரம் கூட ஓய்வு என்கிறதே இல்லாமல் எல்லா வேலையும் எப்படி இப்படி சீக்கிரமா பார்த்து முடிக்கிற..? "
" நான் பார்க்கிறது எல்லாம் ஒரு வேலையாமா.. உலகத்துல எத்தனையோ பேர் அசால்டா பல வேலைகளை நிமிஷத்துக்குள்ள செஞ்சுகிட்டு இருக்காங்க இதெல்லாம் ஒரு வேலையே இல்லை சரி அதை விடுங்க என்கிட்ட பேசணும்னு சொன்னீங்களே.. "
" இன்னைக்கு உனக்கு மறந்து போச்சா தேன்மொழி? இன்னைக்கு நம்ம பிள்ளைகளுக்கு காலை சாப்பாடு ஒருத்தரோட பையனுக்கு பிறந்தநாள்னு சொல்லிட்டு எல்லாருக்கும் சாப்பாடு இலவசமாக தரேன்னு சொன்னாங்கல்ல.. அதனால நமக்கு காலையில சமைக்க வேண்டிய அவசியம் இல்லை.. "
"ஓ.. அட ஆமால்ல.." என்று தலையில் தட்டிக் கொண்ட தேன்மொழி " இப்ப வரவர நிறைய விஷயங்களை மறந்து போயிடுறேன் சரஸ்வதி அம்மா.. சரி அப்ப மத்தியான சாப்பாடுக்கு தேவையான ஏற்பாடு எல்லாத்தையும் பண்ணட்டுமா?"
" இல்ல சரஸ்வதி.. இன்னைக்கு விட்டா உனக்கு வெளியில போக நேரம் இருக்காது உன்கிட்ட இந்த விஷயம் பத்தி நேத்தே பேசணும்னு நினைச்சுகிட்டு இருந்தேன்.. ஆனா நீ தான் நாள் முழுக்க குழந்தைகளோட இருக்கிறியே! அப்புறம் எப்படி உன் கிட்ட பேச எனக்கு நேரம் கிடைக்கும்.. " என்றவர் குரலில் ஆதங்கம் மிகுந்திருந்தது.
அவரை சின்ன சிரிப்புடன் பார்த்த தேன்மொழி தலையை இரு பக்கமும் அசைத்துக் கொண்டாள்.
" கழுதை வர வர உனக்கு என்னை பார்த்தா சிரிப்பா இருக்கு.. அது சரி விட்டால் நான் சொல்ல வந்த விஷயத்தை மறந்துவிடுவேன் சொல்றேன் கேட்டுக்க.. " என்றவர் ஒரு பீடிகையுடன் விஷயத்தை ஆரம்பித்தார்.
என்ன சொல்ல போகிறார்? என்று வேலையை நிறுத்திவிட்டு அவரைப் பார்த்தாள்.
" உனக்கு ரிஷி சக்கரவர்த்தி சார தெரியும் தானே? " என்று அவர் கேட்டது தான் தாமதம் அவள் கைகளில் இருந்த காய்கறி கூடை தவறி விழுக அவரை அதிர்ச்சியுடன் பார்த்தாள்.
அவளது அதிர்ச்சி எதற்காக? என்பது தெரியாமல் சரஸ்வதி அவளை ஆராய்ச்சியாக ஒரு பார்வை பார்க்க, நிமிடங்களுக்குள் தேன்மொழி நினைவுகளில் சில விஷயங்கள் வந்து போக, அவசரமாக அவை அனைத்தையும் ஒதுக்கி தள்ளிவிட்டு சற்று நிதானமாக இயல்பு போல் சரஸ்வதியை பார்த்தாள்.
" சொல்ல வந்த விஷயத்தை சொல்லுங்கம்மா எதுக்காக என்ன பாக்குறீங்க? "
" இப்போ நான் உன்கிட்ட என்ன கேட்டுட்டேன் இப்படி அதிர்ச்சியாகி நீ நிக்கிற அளவுக்கு? " என்றதும் அவரிடம் உண்மையை சொல்ல முடியாமல் எச்சிலை விழுங்கிக் கொண்டவள் "ஒன்னும் இல்லம்மா அவர் எவ்வளவு பெரிய நடிகர் அவரை தெரியாமல் இருக்குமா? அவரைப் பத்தி நீங்க கேட்கவும் ஒரு நிமிஷம் அதிர்ச்சி ஆகிட்டேன் அவ்வளவுதான்.." எனவும் சரஸ்வதி அவளை நம்பி நம்பாமல் ஒரு பார்வை பார்த்தவர் அதை அத்தோடு விட்டுவிட்டு மேலும் தொடர்ந்தார்.
" இன்னைக்கு அவர் நேர்ல பாக்குறதுக்கு எனக்கு அப்பாயின்மென்ட் கொடுத்திருக்கிறார்.. நம்ம ஆசிரமம் பத்தி எப்படியோ அவருக்கு தெரிந்திருக்கிறது அதனால என்ன காண்டாக்ட் பண்ணாரு.. இன்னைக்கு அவர் பக்கத்துல இருக்க காபி ஷாப்புக்கு வராராம்.. அதுவும் அவர் போட்டிருக்க அடையாளம் எல்லாத்தையும் மறைச்சிட்டு.. நம்ம ஆசிரமத்திற்கு ஒரு மிகப்பெரிய நன்கொடை தரதா சொல்லிருக்காரு.. என்னால அங்க வர முடியாது அதுக்கு பதிலா உன்ன அனுப்பி வைக்கிறேன்னு அவர்கிட்ட சொல்லி இருக்கேன்.. அதனால நான் பிள்ளைகளை இன்னைக்கு பார்த்துகிறேன் இத விட்டா உனக்கு நேரம் கிடைக்காது தேன்மொழி..சீக்கிரம் கிளம்பு அப்புறம் அந்த சார் சொன்ன நேரத்துக்கு வரலன்னு கிளம்பி போயிடப் போறாரு.. அந்த பணம் இப்ப நமக்கு ரொம்ப முக்கியம்.. அந்த பணம் கிடைச்சா பிள்ளைகளுக்கு இன்னும் சில நல்ல விஷயங்கள் பண்ணலாம்.." என்றதும்
மறுத்து பேசுவதற்காக தேன்மொழி வாயை திறக்க, அதற்குள்ளாக அங்கு ஒரு குழந்தை ஓடி வந்தது.
" பாட்டி ஒருத்தவங்க நம் ஆசிரமத்துக்கு வந்துருக்காங்க உங்களை கேட்டாங்க.. சாப்பாடு பாக்ஸ் வாங்கிட்டு வந்திருக்காங்க உங்களையும் வர சொன்னாங்க.. " என்று சொன்ன அந்த நான்கு வயது குழந்தையின் குரலில் எவ்வளவு மகிழ்ச்சி.
என்னதான் குழந்தைகளுக்கு நன்றாக சமைத்துக் கொடுத்தாலும் இது போல் பிறந்த நாள் திருமண நாள் என்று ஒரு சில விசேஷங்களுக்கு மட்டும் கிடைக்கும் விதவிதமான உணவுகளை சாப்பிடுவதில் தான் எத்தனை அலாதி பிரியம்.
" இதோ வரேன் பட்டு.. " என்று குழந்தையை அனுப்பி வைத்த சரஸ்வதி " இங்க பாரு தேன்மொழி ரொம்ப நேரம் ஆக்கிடாத.. நான் சொன்ன வேலையை சீக்கிரம் முடிச்சுடு நான் போய் வந்திருக்கவங்களை பார்க்கிறேன்.." என்றவர் அவள் பதிலுக்காக காத்திருக்காமல் அங்கிருந்து அகன்றுவிட்டார்.
அந்த இடத்திலேயே நின்று கொண்டிருந்த தேன்மொழிக்கு தன் சொந்த விஷயத்தால் ஆசிரமத்திற்கு வர இருக்கும் நன்கொடையை தடுத்து நிறுத்த விரும்பாமல் எப்போதும் போல் தன் மனதை கல்லாக்கி கொண்டு யாரை தன் வாழ்க்கையில் சந்திக்கவே கூடாது என்று இத்தனை நாட்களாக கடவுளிடம் பிரார்த்தித்துக் கொண்டிருந்தாளோ இன்று அவனைப் பார்ப்பதற்காகவே கிளம்ப ஆயத்தமானாள்.
ரிஷி சக்கரவர்த்தி. இன்றைய சினிமாவில் முன்னணி நாயகன்.
பல பெண்களின் கனவு ரசிகன் என்று கூட சொல்லலாம்.
பல படங்களின் மூலம் உச்சம் தொட்டவன். இன்றைய சினிமாவில் முன்னணி நடிகனாக இருந்தாலும் கூட சிறிதும் அவனிடம் அதை நினைத்து கர்வம் இருந்ததில்லை.
ஆரம்பத்தில் அவனும் கர்வம் பிடித்தவனாக தான் இருந்தான்.
அது எல்லாம் அவளை சந்திக்கும் வரை தான்.
தன் அறையில் அமர்ந்து எதையெதையோ சிந்தித்துக் கொண்டிருந்தவனை கலைத்தது கதவு திறக்கும் சத்தம்.
யார் என்று நிமிர்ந்து பார்க்க உள்ளே வந்து கொண்டிருந்தாள் அவன் மனைவி என்று சொல்வதை காட்டிலும் ஆருயிர் மனையாள்.
" என்னாச்சு ரிஷி? இன்னைக்கி ஒரு ஆசிரமத்துக்கு டொனேஷன் கொடுக்கணும்னு சொல்லிக்கிட்டு இருந்தீங்க அந்த இடத்துக்கு போகலையா!" என்றவள் அவன் கைகளை பிடித்தபடி பக்கத்தில் அமர, மனைவியின் ஸ்பரிசத்தில் சின்ன புன்னகை சிந்திய ரிஷி அவளை நன்றாக ஒரு நிமிடம் பார்த்தான்.
" ஏன் ரிஷி? நமக்கு கல்யாணம் ஆன இந்த ரெண்டு வருஷத்துல தினமும் இந்த மாதிரி என்னை புதுசா பாக்குறது மாதிரி ஒரு தடவையாவது பாக்குறீங்க என்னதான் காரணம்? " என்றவள் குரலில் கொஞ்சல் நிறைந்திருக்க, அவளுக்கு இல்லை என்று ஒரு தலையசைப்பை பதிலாக கொடுக்க, அவனிடம் அடுத்த கேள்வி கேட்பதற்காக அவனது மனைவி சிந்தியா வாயை திறக்க அதற்குள்ளாக கதவை திறந்து கொண்டு உள்ளே ஓடி வந்தது இரண்டு வயது குழந்தை.
" மாமா வா விளையாடுவோம்.." என்று ஓடி வந்த வேகத்தில் ரிஷியின் கைகளைப் பிடித்த குழந்தையை தன் கைகளில் அள்ளிக்கொண்ட ரிஷி தற்காலிகமாக சிந்தியா கேட்கும் கேள்விகளில் இருந்து தப்பிக்கும் பொருட்டு அந்த இடத்தை விட்டு குழந்தையை தூக்கிக் கொண்டு வெளியேற, சிந்துவுக்கு அவன் செயலில் சின்ன புன்னகை ஒன்று தோன்ற அது அவள் இதழ்களை மட்டும் தொட்டது இதயத்தை தொடாமல்.
ரிசி சக்கரவர்த்திக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது என்றால் நம் நாயகியின் நிலைமை??
கைகளில் அள்ளிக் கொண்டு வந்த குழந்தையோடு சிறிது நேரம் விளையாண்ட ரிஷி பின் குழந்தையை மனைவியிடம் ஒப்படைத்து விட்டு செல்ல வேண்டிய இடத்துக்கு ஆயத்தமானான்.
" நான் இன்னிக்கி ஹோட்டலுக்கு போறேன்னு சிந்து.. அவர்களை டொனேஷன் வாங்குறதுக்கு அங்க தான் வர சொல்லி இருக்கேன்.. அதனால எனக்கு இன்னைக்கு சாப்பாடு ஒன்னு செய்ய வேண்டாம் கொடுத்து அனுப்ப வேண்டாம்.. " என்றவன் மனதில் உள்ள குற்ற உணர்வு தலை தூக்க, எப்போதும் போல் அவளை நேரே பார்க்காமல் கண்ணாடி வழியாக தெரிந்த அவள் பிம்பத்திடம் சொல்லிவிட்டு கிளம்பினான்.
அவன் மனதில் உள்ள வேதனை அவளையும் தாக்கியது.
' கடவுளே சீக்கிரம் எல்லாம் சரியாகும்..' என்று நினைத்துக் கொண்டு கையிலிருந்த தனது நாத்தனார் மகனுடன் எப்போதும் போல் அனைத்தையும் மறந்து விளையாட ஆரம்பித்தாள்.
சரஸ்வதி சொன்ன நேரத்திற்கு முன்பாகவே தேன்மொழி கிளம்பி வந்தவள் அவர் சொன்ன காபி ஷாப்பில் காத்துக் கொண்டிருக்க, எப்பொழுதும் சொன்னால் சொன்ன நேரத்திற்கு சரியாக வந்து விடும் ரிஷியும் தான் யார்? என்று அடையாளம் தெரியாமல் தன்னை முழுதாக மறைத்தபடி கதவை திறந்து கொண்டு உள்ளே வர, அவன் தன்னை முழுமையாக அடையாளம் மறைத்து கொண்ட போதும் அவனை சரியாக அடையாளம் கண்டு கொண்டாள் தேன்மொழி.
நீண்ட நெடிய நாட்களுக்கு பிறகு அவனை கண்டதும் அவளுக்குள் பல அதிர்ச்சிகள்.
அந்த அதிர்ச்சிகள் அனைத்தும் ஒன்று சேர அமர்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்து அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்க, அவளையே தன் பார்வையால் வருடியபடி பக்கத்தில் வந்த அமர்ந்தான் இன்றைய சினிமா உலகத்தில் இளம் நாயகன் ரிஷி சக்கரவர்த்தி.