Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இதயம் கேட்கும் காதல் 2

Advertisement

Riyaraj

Tamil Novel Writer
The Writers Crew
இதயம் கேட்கும் காதல்…

பகுதி 2

சென்னை புரசைவாக்கம், காலை நேர பரபரப்பில் இருக்க, ஆனந்த சயனித்தில் இருந்த செழியன் கனவிலேயே, தனது காதல் தேவதையோடு பேச்சு வார்த்தை நடத்திக்கொண்டிருந்தான் சுகமாய்….

வெக்கத்தால் சிவந்திருக்கும் தன்னவளின் முகம் பார்த்து,"லிப்ஸ்! எப்ப நம்ம கல்யாணத்த வச்சுக்கலாம்...?" என்ற கேள்வியை அவன் தன் கனவு தேவதையிடம் கேட்க, அவளின் மறுமொழிக்கு முன்..

"அறிவு கெட்ட தடிமாடு! இன்னும் கவுந்தடுச்சு தூங்கிட்டா இருக்க?! நேரத்த பாரூ.. அப்புறம் லேட்டாகிடுச்சுன்னு கத்த வேண்டியது... அடேய்! இப்ப மரியாதையா எழுந்திருக்கல, எதாவது எடுத்து மண்டையில போட போறேன்!" என்ற வழக்கமான அம்மாவின் வழக்கமான சுப்ரபாதம் அபஸ்வரமாய் கனவிலிருந்து மீட்டு வர, மேல் மாடி வரை கேட்ட தாயின் சத்தத்தில், சுகமான கனவு விலக, இதற்கு மேல் கனவில் சஞ்சரித்தால் தாயின் கையால் பூஜை நிச்சயம் என புரிய..

"க்கும்! நேருல தான் பேசினா வழிக்கு வரல. கனவுல கூட, "சரி"ங்கற வார்த்தைய கேட்க விட மாட்டாங்களே..! இப்படியே போனா, எப்ப கல்யாணம் பண்ணி, அடுத்த அடுத்த காரியத்த முடிச்சு, புள்ள குட்டின்னு குடும்பஸ்தன் ஆகறது, பேசாம சாமியாரா போயிடலாமா...?!" என்று யோசித்தவன்..

"செழியா வேணாம்டா.. அப்புறம் மீம்ஸ்ஸா போட்டு கொல்லுவாங்கடா..." என்று தனக்கு வந்த எண்ணத்திற்கு முழுக்கு போட்ட படி எழுந்தவன், தனது காலை கடன்களை முடித்துவிட்டு கீழே சென்றான், அடுத்த சுற்றுக்கு தன் தாய் சந்திரா தொடக்கம் போடும் முன்பு...

நேராக கிட்சன் சென்றவன், "ஹாய் மூன் .. ஏன் இப்படி காலைலயே சூடா இருக்க?! ஏதோ புள்ள அசந்து தூங்கறானே, அன்பா, பாசமா போயி காபிய கொடுத்து எழுப்புவோமின்னு இல்லாம.. ஒய் மூன் ஒய்?!" என்றவனை வெட்டவா, குத்தவா என்ற பார்வை பார்த்த சந்திரா....

"இனி ஒரு தடவ மூனு, நாலு ன்னு சொன்னா என்ன பண்ணுவன்னு தெரியாது. ஏன்டா, எட்டு மணிக்கு வேலை விசயமா போக வேண்டியவன், 7.30 வரை இழுத்துப்போட்டு தூங்கற, இதுல நாங்க பொறுமையா காபியோட வந்து எழுப்பனுமோ....! வர வர நீ ரொம்ப சோம்பேறி ஆகிட்ட.. வர்றவ வந்து நாலு போட்டா தான் சரியாவ..." என்ற வார்த்தையை முடிக்கும் முன்பு...

"தெய்வமே!! தெய்வமே!! நன்றி சொல்வேன் தெய்வமே....!! " என சம்மந்தமே இல்லாது பாடியவனை , ஒரு மார்க்கமாய் பார்த்தவர்...

"செழியா, உனக்கு ஒண்ணுமில்லையே, எதுக்கும் இன்னிக்கு வேலைக்கு போக வேணாம்டா... பக்கத்துல இருக்கற டாக்டர்கிட்ட போயிட்டு வந்திடலாம்" என்றதும்…

அவரின் எண்ணம் புரிந்ததும் தன் செயலுக்கு விளக்கம் சொல்லும் நோக்கோடு,"அய்யோ மூன்..!" என ஆரம்பித்தவன், தன் தாயின் முறைப்பில்... "அதில்ல சந்து... கால காலத்துல புள்ளைக்கு கல்யாணம் பண்ணனுமுன்னு தோனியிருக்கு பாரு உனக்கு, அதுக்கு தான் பாடினேன். எப்படி சரியா பாடினேனா?!" என்றதும்...


சிறிது யோசித்தவர்..."ஏன்டா ... செழியா, நா எப்ப உனக்கு கல்யாணம் பண்ண போறேன்னு சொன்னேன்?!" என்றதும், தன் நெஞ்சில் கை வைத்தவன்,

"என்னம்மா, இப்ப தானே வர்றவ வந்து நாலு கொடுத்தா ன்னு சொன்னையேம்மா?!" என அதிர்வோடு கேட்டதும்...

"ஹா… ஹா… அதுவா செழியா, அது உன்னோட அக்காவும், குட்டிம்மாவும் வர்றாங்க. குட்டிம்மா வந்தா, உன்ன எங்க தூங்க விடுவா?! நாலு போடுவல்ல, நீ தூங்கிட்டே இருந்தா, அத சொன்னேன்டா! நீ தப்பா புரிஞ்சிட்டையா..?!" என சிரித்தவரை முறைத்த செழியன்.....

"நீயெல்லாம் தாயா பேய்... பேய் மாதிரி சிரிக்கற.. வேணாம் கன்னி பையன் சாபம் பொல்லாதது" என சினுங்கலாக சொன்னவனின் எண்ணம் புரியாதவரில்லை சந்திரா... எதற்கும் தக்க நேரம் வர வேண்டும் என காத்திருப்பவர். அவரின் திட்டம் சரியாக நடந்தால், எல்லாமே சரியாகி விடும் அது எப்போது என்பது தான் பெரிய கேள்வி…?!

செழியன், தனது அன்றைய வேலை நியாபகம் வர, தாய் தந்த காபியை குடித்தவன் அவசரமாக குளியல் அறைக்குள் புகுந்தான்.

செழியன் எப்போதும் இப்படி தான், தனக்கு தோன்றும் விசயத்தை உடனே அப்படியே பேசிவிடுவான். சில சமயம், அது நன்மையாக முடிந்தாலும் சில நேரம் சங்கடத்தையும் கொடுத்துவிடும். அப்படி சங்கடத்தை கொடுத்தது அவனின் லவ் ப்ரப்போஷல்...

இதழினி படித்த அதே கல்லூரியில் படித்தவன் தான் செழியன். அவளை கண்ட நாள் முதலாய், காதல் பயிரை ஊட்டி வளர்க்க, அவளோ அதை கண்டும் காணாதது போல கடந்து சென்றுவிட்டாள்.
 
கல்லூரியில் அவளின் சீனியராக இருந்தவன், அவனின் கல்வி முடியும் சமயம், சிறிதும் தாமதிக்காது அவளின் சூழலை பற்றிய சிந்தனை எதுமில்லாமல், நேரடியாக அவளிடம் காதலை கூறிவிட்டான்.

அந்த நேரத்தில் தான் தம்பி படிப்பு விசயத்திலும், தாய் இறந்த தவிப்பிலும், வீட்டு நிர்வாகத்தை இனி தாம் தான், மூத்த மகளாய் தாங்க வேண்டும் என்ற நிலையிலும் இருந்த இதழினிக்கு, அவனின் காதல் பிதற்றலாக தோன்றியது.

"இங்க பாருங்க செழியன், நீங்க சொல்றது விளையாட்டு பிள்ளை சொல்ற மாதிரி இருக்கு. உங்க பணக்கார திமிருக்கு, நா பலியாக முடியாது.

என்னோட வீட்டுல, இப்ப தான் பல பிரச்சனைய தாண்டி, ஓரளவு சமாளிச்சு வந்திருக்கோம். அதனால நீங்க வேற யாராவது போய் பாருங்க. நா அதுக்கு ஆள் இல்ல!" என்றவள் திரும்பி பார்க்காமல் சென்றுவிட, அத்தோடு விட்டால் அது செழியன் இல்லையே!!!

இதோ தொடர்ந்து மூன்று வருடங்களாக, அவளுக்கே தெரியாது அவளை மறைமுகமாக, தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறான் என்பதை அவளே அறியாத போது.. மற்றவருக்கு தெரிந்திடுமா?!

இங்கு செழியன் வீட்டில் சுப்ரபாதம் நடந்து கொண்டிருக்கும் அதே நேரம், அங்கு ஆனந்துடன் போராடிக்கொண்டிருந்தாள் இதழினி.

"ஆனந்த் இப்படி இருந்தா எப்படி டா?! கொஞ்சமாச்சும் புருஞ்சுக்கோ. நீ பேசறது விளையாட்டுன்னு எனக்கு தெரியும் டா. ஏன்னா, நீ என்னோட தம்பி. ஆனா அங்க இருக்கறவங்களுக்கு, அது புரியனுமே?! நீ அங்க வந்து பேச்ச குறச்சிட்டு வேலைய கத்துக்க பாரு...

இன்னும் எத்தன நாளுக்கு இப்படியே இருந்திட முடியும் நீ..? அங்க வந்து, அவங்க எல்லாம் தப்பா உன்ன பத்தி பேசும் போது கஷ்டமா இருக்குடா. நீயே இப்படி பண்ணா அபி, வினிவ எப்படி பார்த்துக்கறது, சொல்லு..?!

நாளைக்கு எப்படியும் அவங்களுக்கு நல்லது கெட்டது செய்ய போறது நீ தானேடா. நீயே சரியில்லன்னா, அவங்க எப்படி வெளிய நடமாட முடியும், தைரியமா?! நீயே யோசிச்சு பாரு...

உன்ன விட சின்னவ தானே வினி, ஆனா அவளோட பொறுப்பான செயல், ஒன்னாவது உன்கிட்ட இருக்கா சொல்லு!" என சொன்ன நொடி...

இதுவரை, தன் அக்காவின் பேச்சை கேட்டு, எந்த மாற்றமும் இல்லாது வெறித்துக் கொண்டு இருந்தவன், அவனை வினியோடு ஒப்பிட்ட உடன், கோபத்தில் பொங்கி விட்டான்.

"நிறுத்துக்கா. எப்ப பாரு, அவ அப்படி... இவ இப்படின்னு.... அவளுங்க மாதிரி நா ஏன் இருக்கணும்...?

நா பேசறது நிச்சயமா தப்பான நோக்கத்தில இல்ல, அத மட்டும் தான் சொல்ல முடியும். அதே நேரம், இப்படி வந்து அட்வைஸ் பண்றத இதோட விட்டுடு.

உனக்கு எப்பவும் அவளுங்க ரெண்டு பேரும் தான் பெட்.. அண்ட் பெஸ்ட்... போ, போய் அவங்கள பாரு. எனக்கு வேலைக்கு நேரமாச்சு..." என கத்தியவன், அடுத்த நிமிடம் அந்த இடத்திலிருந்து வெளியேறி இருந்தான்.

இதழினிக்கு இது புதிது அல்ல. ஆனந்த் இப்படி தான். அவனுக்கு அம்மா மீது பாசம் அதிகம். அவருக்கு உடல்நிலையில் பாதிப்பு இருந்த போதிலும், அவன் மீது கொட்டும் பாசத்தில் என்றுமே குறை வைத்ததில்லை. ஆரம்பத்தில் நன்றாக படித்தவன், திடீரென்று சரியாக படிக்காமல் போக, அந்த நேரம், அவனின் அம்மாவும் இறந்து விட, எல்லாமே தலைகீழாய் மாறி போயிற்று.

அன்று முதல் சரியாக படிக்காமல் சுற்றிக்கொண்டிருந்தவன், பள்ளி தேர்வில் கோட்டை விட இதுவே சாக்கென கல்விக்கு முழுக்கு போட்டுவிட்டான்.

ஆறு மாதம் இதே போல் போராடி, அவள் வேலைக்கு செல்லும் இடத்தில், வேலைக்கு ஏற்பாடு செய்து அங்கு அவனை சேர்ப்பதற்குள் இதழினி பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல.

இப்போதோ வேறு சில சிக்கல்கள். அங்கே இருக்கும் பெண்களிடம், அவன் வலிந்து கொண்டு பேசுவதாக புகார் வர, 'சின்ன வயதில் இது என்ன மாதிரியான பழக்கம்!' என்பதால் பேச வந்தவளுக்கு கிடைத்ததோ, இப்படியான அவமானமே....

தம்பியின் தவறை மாற்றி சரியான பாதைக்கு கொண்டு செல்வாளா.. இதழினி..
 
Top