Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இதயம் கேட்கும் காதல் 4

Advertisement

Riyaraj

Tamil Novel Writer
The Writers Crew
இதயம் கேட்கும் காதல்…

பகுதி 4

இதழினிடம் மாரியப்பன் சம்மதம் கேட்ட அதே நேரம், "ஏன்டா ஹரி, இந்த கல்யாணம் வேணாமுன்னு சொல்ற?" என்ற தாயின் கேள்விக்கு வழக்கமான சிடுசிடு மூஞ்சியுடன்,

"ஏன்னு தெரியாது உனக்கு? இப்ப நா என்ன நிலைமையில சுத்திட்டு இருக்கேன், இதுல கல்யாணம் ஒன்னு தான் குறைச்சல்!

போம்மா, போய் வேற வேலைய பாரு, நானே பேங்க்ல இந்த தடவையாவது எதாவது நல்லதா சொல்ல மாட்டாங்களான்னு பார்த்திட்டு இருக்கேன்!

இதுல அடுத்த செலவுக்கு வழி பண்ண பார்க்கறையேம்மா?! இப்ப என் கல்யாணத்துக்கு என்ன அவசரம், அவசியம்?!" என கடுகடுத்த ஹரிஹரன், தான் இதழினிக்காக மாரியப்பனால் தேர்ந்தெடுக்கப்பட்டவன்..

கவர்மெண்ட் வேலை தான், ஆனால் அவனின் சம்பளம் வாங்க ஆரம்பித்தது, முதல் அடுத்த அடுத்த செலவுகளாய், அக்கா கவிதா, தங்கை தீபாவின் கல்யாண செலவு, வளைகாப்பு, பிள்ளைபேறு, காதுகுத்து என தொடர்ந்து கொண்டே இருந்தால் அவனும் என்ன செய்ய?!

ஏற்கனவே கொஞ்சம் முசுடாய் இருந்தவன் தாய் பார்வதியின் ஓயாத பணத்தொல்லையால், முழுமையான சிடுமூஞ்சி சிங்காரமாகவே மாறி விட்டான்.. ஆபிஸில் அவனின் பட்ட பெயரும் அதே! அவன் சிரித்தே, பல வருடம் ஆகியிருக்கும்..

தந்தை மயில்சாமி வைத்திருக்கும் மளிகை கடை வருமானத்தில், வீட்டு செலவுக்கும், மேல் செலவுக்கும், வாடகைக்கும் போக மீதம் இருந்ததை சேமித்து, எப்படியோ ஒரு இடத்தை வாங்கிவிட்டான். அதில் ஒரு வீட்டை கட்டி குடியேறுவது ஒன்றே இப்போதைய அவனின் லட்சியம்

வாடகைக்கும், கரண்ட் பில்லுக்குமாய் கட்டும் வெட்டி பணத்தை, இன்ஸ்டால்மெண்டில் கட்டினாலே போதும். கொஞ்ச வருடத்தில், 'தனக்கு என்ற சொந்தமாய் ஒரு வீடு' என்ற கனவுடன் வாழும், நடுத்தர வர்க்கத்தின் சாதாரண குடிமகன் தான் ஹரி.

"ஹரி, நா இப்ப கல்யாணத்துக்கு அவசர பட காரணம் இருக்குப்பா" என்றதும், 'அப்படி என்னம்மா காரணம்?' எனும்படியான பார்வை பார்த்தவனை,

'க்கும்.. பார்க்கறத பாத்தா, நம்ம சொல்ல வர்றதே மறந்திடும் போலவே. பாரூ, கெட் ரெடி, அவனா, நீயா?! நீ, அவனுக்கே அம்மான்னு நிரூபிக்க ஒரு ச்சான்ஸ் எப்படியாவது ஓகே ன்னு சொல்ல வச்சிட்ட நீ கெட்டி தான்!' என மனதில் அவருக்கு அவரே தைரியத்தை கொடுத்து கொண்டவர்,

"நா சொல்றத முழுசா கேளு, அப்புறம் உன் முடிவ சொல்லு ஹரி. அதும் இந்த விசயத்துல உனக்கு எந்த செலவும் இல்லாம நல்லபடியா முடிக்க வேண்டியது என்னோட பொறுப்பு" என்ற பார்வதியின் பேச்சில் கடுப்புடன்,


"முதல்ல சொல்லூ, நீ எப்ப பேச ஆரம்பிச்சாலும், அது எனக்கு செலவ இழுத்து விடறதா தான் இருந்திருக்கு. இப்ப மட்டும் மாறிட போகுதா?! பரவாயில்ல, சொல்ல வந்தத முழுசா சொல்லி முடி" என்றதும்,

'இவனுக்கு போய் நல்லது நினச்சோமே!' என்ற சில நொடி யோசித்தாலும், அவனின் பணத்திற்கான அலைச்சலையும், அவனின் நியாயமான ஆசைக்கான அவனின் கனவையும் கலைத்தது தங்கள் தானே என்ற எண்ணத்தால், தனது முந்தைய யோசனையை புறந்தள்ளி,

"அந்த பொண்ணு வீட்டுல அவங்க அப்பா சென்ட்ரல் கவர்மெண்ட் வேலையில இருந்து ரிட்டையர் ஆக போகுதாம்ப்பா.. வர்ற பணத்த அந்த பொண்ணு கல்யாணத்துக்குன்னு செய்ய போறதா, உன்னோட சித்தி சொன்னாடா..

சித்தி வீட்டுக்கு அடுத்த தெரு தான் அந்த பொண்ணு வீடு. சொந்த வீடு வேற.. பொண்ணும் நல்ல அழகா இருப்பாளாம். அதோட அவ வேலைக்கும் போறா..

இப்போ அந்த பொண்ணு கல்யாணம் முடிஞ்சு வந்தா, அது கொண்டு வர்ற நகை, சீர் எல்லாமே நமக்கும் சொந்தம் தானே ஹரி. அப்ப அத, நீ வீடு கட்ட யூஸ் பண்ணிக்கோ..

மேற்படி பத்தாம போறதுக்கு மட்டும், வெளிய கூட கடன் வாங்கலாமில்ல. ரெண்டு பேரும் சம்பாதிக்கும் போது கடன கட்றதும், ரொம்ப சுலபம் கண்ணா…

யோசிச்சு பாரு, நா உன்னோட நல்லதுக்கு தான் சொல்றேன். இனி முடிவு உன்கிட்ட! எதுவானாலும் சீக்கிரம் சொல்லு, நா நாளைக்கே வர்றதா சொல்லிட்டேன்!" என்றதும், தன்னை முறைத்தவனை பார்த்தவர்,


'அச்சோ முறைக்கறானே!' என மனதில் ஜர்க் ஆனாலும், கெத்தாய், "நீ வேணாமின்னு சொன்னா, நா சித்தி கிட்ட சொல்லி அங்க சொல்லிடுறேன். நாங்க வரலைன்னு, எனக்கென்ன நீ நல்ல இருந்தா சரின்னு நினைச்சு சொல்லிட்டேன்..." என்றுவிட்டு, மகனின் பதிலுக்கு காத்திருக்க தயாரானார்.
 
சிறிது நேரம் அமைதியாய் சிந்தித்தவன், பார்வதி சொல்வதில் இருக்கும் சாதகத்தை பார்த்தவன்.. 'சரி பெண் போய் பார்க்கலாம். பிடிக்கும் பட்சத்தில் அடுத்ததை முடிவு செய்யலாம்' என நினைத்து,

"ஓகே ம்மா. நாளைக்கு போலாம். ஆனா லீவ் போட முடியாது. ஈவினிங் போற மாதிரி பார்த்துக்கோ" என்றதும்,

'அப்பாடா!' என பெருமூச்சை பார்வதி வெளியிட, தன் வேலை முடிந்தது எனும் விதமாய், தனதறைக்கு சென்று கதவடைத்துக்கொண்டான் ஹரிஹரன்.

தந்தை கேட்டதற்காக, 'ஓகே!' என்று சொன்னாலும், வரும் மாப்பிள்ளை தன்னை மட்டுமில்லாது, தனது குடும்பத்திற்கும், உரிமையாய்... உறவாய்.. நிற்க வேண்டும் என்ற இதழினியின் எதிர்பார்ப்பிற்கு நேர் எதிராய், சுயநலத்தோட அவளை காண வரும் ஹரிஹரன் அவளோட இணையும் பட்சத்தில், அவளின் ஆசைகள்?! அந்த குடும்பத்தின் நிலை?!
 
Top