Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இதயம் கேட்கும் காதல் 5

Advertisement

Riyaraj

Tamil Novel Writer
The Writers Crew
இதயம் கேட்கும் காதல்...

பகுதி 5

காலை கதிரவன் யாரின் உத்தரவிற்கும் காத்திருக்காமல் தனது வேலையை செவ்வனே செய்ய,

தனது தலையெழுத்தின் படி, சந்திக்க வேண்டிய நபரை சந்திக்கும் நேரத்திற்காகவும், இது சரி வருமா என்ற குழப்பத்தோடும் நடப்பதை எதிர்கொள்ள தயாராகி கொண்டிருந்தாள் இதழினி.

அக்காவிற்கு மாப்பிள்ளை பார்த்திருப்பதை அறிந்து முதல் அபியும், வினியும் சேர்ந்து இதழினியை ஒருவழியாக்கி கொண்டிருந்தனர், தங்களின் கிண்டலாலும், கேலியாலும்...

பள்ளி, கல்லூரி வாழ்க்கையில் கிண்டலும், கேலியும் ஒரு அங்கம் போல… அவர்களிடம் சிக்கும் நபரின் நிலை தான் பரிதாபமாய் ஆகும். இங்கோ இதழினியும் அப்படியான நிலையில் தான் தவித்து கொண்டிருந்தாள்.

தீடீரென செய்யப்பட்ட ஏற்பாடு என்பதால், அவர்களின் சிறு வீடு எப்போதும் சுத்தமாய் பராமரிக்கப்பட்டு வந்தாலும், இன்னும் அதை சீர் செய்வதோடு, அக்காவை கிண்டலால் முகம் சிவக்க வைப்பதையும்.. காலையிலேயே தொடங்கி விட்ட தங்கைகளிடமிருந்து தப்பும் மார்க்கமாய், கோபமாய் இருப்பது போன்ற முகத்துடன்..

"அபி, வினி நிறுத்துங்க, ரெண்டு பேரும். நானும் பார்த்துட்டே இருக்கேன். இதெல்லாம் கத்துக்க தான் ரெண்டு பேரும் போறீங்களா?! படிக்கறதுக்காக இல்லையா?!" என கேட்க..

பிறந்தது முதல் பார்க்கும் அக்காவின் வார்த்தைக்கு பின் இருக்கும் அவளின் மனநிலை நன்கு தெரிந்திருக்கும் அவ்விருவரும், அவளின் கோபத்திற்கு பயம் கொள்ளாமல், மேலும் சிரிக்க, நிஜமாகவே முறைக்கும் நிலைக்கு போனாள் இதழினி…

"அக்கா! அக்கா! நீ கோபமா பேசற மாதிரி நடுச்சா, விட்டுடுவோமா நாங்க! நீ, எப்ப எங்ககிட்ட கோவமா நடந்திருக்க.?? ஏதோ புதுசா ட்ரை பண்ற?ஹா..ஹா.." என வினி சிரிக்க,

அபியோ, "ஏய் வினி, இதெல்லாம் எதுக்குன்னு தெரியுமா, மாமாகிட்ட கோபத்த காட்ட இப்பவே ஒத்திகை. அப்ப தானே மாமா சமாதான படுத்தறேன்னு வந்து கொஞ்சவாறு… அப்படி தானே க்கா" என, சிரித்தபடியே அதற்கும் தன்னை கலாய்க்கும் தங்கைகளிடம், 'இனி பேசி முடியாது' என்ற நிலையில் ..

அவர்களின் வார்த்தையால், 'அப்படி நடந்தால்..!' என்ற சிந்தனை கொடுத்த வெக்கத்தில், முகம் சிவக்க சமையலறைக்குள் ஓடி ஒழியும், தன் மூத்த மகளின் முகத்தை பார்த்தபடியே வந்த மாரியப்பன், 'எப்பாடு பட்டாவது இந்த கல்யாணத்தை நடத்தி விடுவது' என்ற முடிவுக்கு வந்திருந்தார். அவரின் எண்ணம் ஈடேறுமா?!

ஹரிஹரனின் சித்தப்பா, முன்தினம் இரவே வந்து மாரியப்பனிடம் பெண் பார்க்க, மாலையில் வருவதாய் சொல்லி சென்றிருந்தார்.

அதனால் இதழினியோ, "அப்பா அவங்க எப்படியும் வர்றதுக்கு 5 க்கு மேல ஆகிடும். இதுக்காக நா லீவ் போடனுமா?! நா போய் வேலைய முடுச்சிட்டு 3.½ க்கு வந்திடுறேன் ப்பா" என்று கேட்டிட,

மாரியப்பனும், அபிக்கும், வினிக்கும் படிப்பதற்காய், விடுமுறை விட்டிருப்பதால், 'சரி' என சம்மதித்தார். மாரியப்பனை பொறுத்த வரையில் அவர் வேலைக்கு செல்ல அனுமதிக்க இரு காரணம், ஒன்று தன் மற்ற மகள்கள் இதழினியை காலை முதல் படுத்தும் பாட்டை பார்த்தாரே...

மற்றொன்று, அவள் இங்கு இருந்தால், ஓயாமல் எதையாவது வேலை பார்த்து கொண்டு தான் இருப்பாள். அதனால் அவள் ஓய்ந்து தெரியக்கூடும். அதற்கு அங்கு வேலைக்கு போனால், ஏசி அறையில் இருந்துவிட்டு வரும் போது மகள், இன்னும் அழகாய் தெரியக்கூடும் என்பது அவரின் எண்ணம்.

ஆனால் அதை கொண்டே அவரை சிக்கலில் சிக்க வைக்க விதி தீர்மானித்திருப்பது அவருக்கு தெரியாமல் போனதே!!!
 
வீட்டில் நடக்க போகும் நிகழ்வுக்கும், தனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பது போல இருந்த ஆனந்தை பார்க்கும் போது மனதால் வருத்தமடைந்தாலும், அவனிடம் உள்ள அபரிமிதமான பாசத்தாலும், சிறுவன் என்ற நினைப்பாலும் மாரியப்பன் எதையும் சொல்லாது இருக்க,

அதுவரை அக்காவை வைத்து வாயாடித்துக் கொண்டிருந்த இருவரும், அவனை ஒரு பொருட்டாக பார்க்காமல், தங்களுக்குள் கிசுகிசுத்துக்கொள்ள, தன்னிடம் எதையும் சொல்லாமல் கேட்காமல் செய்வதாய் முடிவு செய்தவன், அதன் விளைவால் எழுந்த கோபத்தில் காலை உணவையும் உண்ணாது வெளியேறியிருந்தான் ஆனந்த்.

அவன் சாப்பிடாமல் சென்றது தெரிந்ததும் மனதில் எழுந்த வேதனையோடு, அவனுக்கான காலை உணவையும் எடுத்துக்கொண்டு, தந்தையிடம் விடை பெற்று சென்றாள் இதழினி.

தங்கள் பணியிடம் வந்ததும், தனது தம்பி வேலை பார்க்கும் பகுதிக்கு சென்று, அவனிடம் உணவை கொடுக்க, அவனின் உதாசினமான பதிலில் மனம் நொந்தாலும், முயன்று அவனை சமாதானம் செய்து சாப்பிட வைத்தே, தனது வேலையை கவனிக்க வந்தாள் இதழினி.

எப்போதும் போல, தனது வேலையில் ஆழ்ந்திருந்த இதழினிக்கு, மாலையில் நடக்க போகும் நிகழ்வும், ஆனந்தின் நடவடிக்கையும் மனதில் சிறு சஞ்சலத்தை கொடுத்தாலும், முயன்று தன்னை சீர்படுத்தி வேலையில் ஈடுபட்டிருந்தவள் எண்ணத்தில், அன்றைய நாளுக்கான முக்கியத்துவம் மறந்து, அலுவலே நிறைய ஆரம்பித்தது.

அவளின் கணக்கு வழக்குகளை எப்போதும் சந்துருவிடம் ஒப்படைப்பது தான் வழக்கம். அதே போல அன்றைய கணக்குகளை முடித்து கொடுத்துவிட்டு செல்லும் நோக்கத்தில் செயல்பட்டு கொண்டிருந்தவள், வேலை செய்யும் மும்முரத்தில் விடுப்பு குறித்து கேட்க தவறியிருந்தாள்.

மதியம் நேரம் தாண்டி கொண்டிருக்க, அக்காவின் வரவை எதிர் பார்த்து காத்திருந்த தங்கைகள் இருவரும், அவளுக்கு போன் செய்ய, அதுவோ அவர்கள் வீட்டிலேயே ஒலித்தது. அப்போது தான் காலையில் நடந்த கலவரத்தில், இதழினி போன் எடுக்காமலேயே சென்றது தெரிய வந்தது.

இதழினியின் அலுவலக எண்ணிற்கு அழைத்து .. அக்கவுண்ட்ஸ் டிப்பர்ட்மெண்ட் என்று சொன்னதும், அவர்கள் நேரடியாக சந்துருக்கு கனெக்ட் செய்ய, அபியோ, அவர்கள் யாருக்கு தொடர்பை கொடுத்திருக்கிறார்கள் என்பதை அறியாது, அந்த புறம் போன் எடுக்கப்பட்ட உடன் படபடவென வெடிக்கும் பட்டாசாய் பொறிய துவங்கினாள்.

"அக்கா என்ன தான் நினச்சிட்டு இருக்க. இன்னும் அங்க என்ன செய்யற. நேரத்த பாத்தியா இல்லையா?! மாமா உன்ன பார்க்க வர்ற நேரத்துக்கு, நீ வந்து ரெடியாக வேணாமா? சீக்கிரமா, அந்த தடியனையும் கூட்டிட்டு வந்து சேரு!" என சொன்னவள், மறுபக்கத்தின் பதிலையும், எதிர்பார்க்காமல் தொடர்பை துண்டித்திருந்தாள்.

காதில் ஒலித்த பெண்ணின் படபட பேச்சில், 'யார்டா இந்த சரவெடி?' என்ற குழப்பத்துடன் இருந்தவன் .. அவளின் அக்கா, தடியன் ரெண்டையும் வைத்து, அது இதழினிக்கான அழைப்பு என்பதை புரிந்தது. அபியின் பேச்சை சிறு புன்னகையோடு திரும்ப திரும்ப மனதில் ஓட்டி பார்த்தவனுக்கு, அந்த சரவெடியை நேரில் பார்க்கும் ஆவல் மலர்ந்தது.

மாறா புன்னகையோடு அவளின் பேச்சை அசை போட்டவனின் மனதில், திடீரென வந்த அந்த கேள்விக்கு விடை கண்டவனோ, அடுத்த நொடி, "மை காட்!" என்ற படி தனது போனை எடுத்து, வேறு ஒருவருக்கு கால் செய்திருந்தான்.

அந்த பக்கம் அழைப்பு எடுக்கப்பட்டவுடன், "இதழினிக்கு மாப்பிள்ளை பார்த்திருக்காங்க!"

"...."

"இதழினி இன்னும் எதுவும் சொல்லல ஆனா அவங்க வீ்ட்டுல இருந்து போன் வந்துச்சு.."

"..."

"அது எனக்கு எப்படி தெரியும்?"

"...."

"சரி போய் கேட்கறேன்"

"...."

"என்னதூ . இது வேணாம். பெண் பாவம் பொல்லாது.. இது அவளுக்கு தெரிஞ்சா போச்சு "

"..."

"அப்ப நீ முடிவே பண்ணிட்ட?!"

"..."

"சரி நா எதுவும் செய்யல.. ஆனா இதழினி வந்து கேட்டா"

".."

"ரிப்போர்ட் கொடுத்துட்டா அதுக்கு அப்புறம், வேலையே இல்லையே!"

"... "

"புதுசா உருவாக்கி கொடுக்கறதா?! நீ சொல்றத நா செஞ்சா, என்ன ஆகும் தெரியுமா?!"

"..."

"என்னது நல்லா தெரியுமா. நீ ஒரு முடிவோட இருக்க சரி விடு. விதி வலியது..." என்றதுடன் தன் கைபேசியை அனைத்தவன்...

'இப்ப என்ன பண்ண? நா செய்யறது மட்டும் மேடத்துக்கு தெரிஞ்சா, என்னன்னு சொல்லி சமாளிக்கறது. முதல்ல இதழினிய மேடம் கிட்ட போகவிடாம மடக்கிடனும்' என தனக்கு தானே பேசி முடிவெடுத்தவன், இதழினியின் நடவடிக்கையை கவனிக்க ஆரம்பித்தான்.

இதழினியோ அவனுக்கு அந்த சிரமத்தையே கொடுக்காது, அவள் அன்றைய நாளுக்கான முக்கியத்துவத்தையே மறந்தவளாய் மாறிப்போயிருந்தாள். அவளுக்கு பெண் பார்க்கும் படலைத்தை விட, ஆனந்த் அன்று கூட தன்னிடம் நடந்து கொண்ட விதத்தில், அவனை பற்றிய கவலை மற்ற விசயத்தை மனதிலிருந்து மறைய வைத்தது எனலாம்.
 
மாலை நேரம் நெருங்கியும் வீட்டுக்கு வராத இதழினியால், வீட்டில் இருந்தவர்கள் தான் பதட்டத்துடன் காத்திருந்தனர்.. சொன்ன நேரத்திற்கு சரியாக வந்திறங்கிய, ஹரிஹரன் வீட்டினரை, இன்முகமாய் வரவேற்க கூட முடியாது, மிரட்சியில் நின்றிருந்தனர் இதழினியின் இல்லத்தார்…..



****


சென்ற பதிவுக்கு கருத்துக்களையும் விருப்பத்தையும் பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.
 

Advertisement

Top