Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இராவணத்தீவு - 5

Advertisement

துமி

Well-known member
Member
அத்தியாயம் 5

"கண்டவன் கூடவும் ஊர் சுத்தறீயாமே?" என்று கட்டை குரலில், நடு ஹாலில் வைத்து சுந்தரேஷ்வரி கேட்க, உடலெல்லாம் கூசியது சக்திக்கு.

வந்து போகும் விருந்தினர்கள் மட்டுமல்லாது, வேலையாட்களின் பரிதாபப் பார்வையும் சேர்ந்து, அவளை கூறு போட்டுக் கொண்டிருந்தது

"அந்த மாதிரி எண்ணமெல்லாம் உனக்கு இருந்தா, இப்பவே அதை மூட்டை கட்டி வச்சிக்கோ… ஏதோ நீ என் அண்ணனுக்கு பொறந்து தொலைஞ்சிட்டதால நீ பண்ணுற கூத்தை எல்லாம் கண்டும் காணாம இருக்கோம். இதுக்கு மேலையும்…" என்று வாய்க்கு வந்தபடி பேசிக் கொண்டே போன சுந்தரேஷ்வரி, அப்படியே உறைந்து போனார்.

நல்லவர்களுக்கு வரும் கோபமானது, தீயை காட்டிலும் பன்மடங்கு ஆபத்தானது. அப்படியொரு கொதி நிலையில் தான் இருந்தாள் சக்தி. இதுநாள் வரை அவளை மட்டம் தட்டி பேசிய அத்தனை பேச்சுகளையும் சகித்து கொண்டவளாள், இன்று தன் ஒழுக்கத்தை சந்தைபடுத்தியதை தாங்கிக் கொள்ள முடியவில்லை.

உக்கிரத்தின் முழு வடிவமாய், செவ்வரியோடிய கண்களோடு நின்றவளை கண்ட சுந்தரேஷ்வரிக்கு, அதற்கு மேல் பேச நா எழவே இல்லை.

"அது வந்து… நான்… நான்… என்ன சொல்ல… வந்தேன்னா…" பேச்சு திணறியது சுந்தரேஷ்வரிக்கு.

"மகாராணி… நீங்க பேசி முடிச்சிட்டீங்கனா அப்ப நான் கிளம்பலாமா?" என்று கோபத்தை உள்ளடக்கிய குரலில் கேட்டாள் சக்தி.

"நீ… நீ போலாம்…" என்றார் சுந்தரேஷ்வரி.

"என்ன மா நீ அவளை சத்தம் போடுவன்னு பாத்தா… அவ உன்னை முறைச்சதும் போக சொல்லிட்ட…" என்று சக்தியின் தலை மறைந்ததும், பொற்செல்வி தன் அன்னையிடம் கேட்க,

"அப்படியே அவ அப்பனை உரிச்சிக்கிட்டு பொறந்திருக்கா டி… அவளோட கண்ணுல தெரிஞ்சுதே அந்த கோபம்… அது அப்படியே என் தம்பியோட கோபம் தான்! அதான் ஒரு நிமிசம் ஆடி போய்ட்டேன்!" என்று, இன்னமும் உள்ளூர நடுங்கியவாறே சொன்னார் சுந்தரேஷ்வரி.

"என்னமோ போம்மா.‌‌.. எனக்கு அவளை பாத்தாலே சுத்தமா பிடிக்கலை. என்னமோ தப்பா படுது அவளை பாத்தாலே…" என்றாள் பொற்செல்வி.

"உன் அண்ணனுக்கு நல்ல ஒரு ராஜ குடும்பத்துல இருந்து பொண்ணு கிடைக்கட்டும். அப்பறம் கவனிச்சுக்கறேன் இவளை…" என்று மனதில் பல திட்டங்களை வகுத்தவாறே சொன்னார் சுந்தரேஷ்வரி.

உடலில் தான் வலு இல்லையே தவிர, தகிக்கும் உள்ளத்தில் வலு இல்லாமல் இல்லை; வெறுப்பும் அசூயையும் தந்த வேகத்தில், எப்படி நடந்தாள் என்றே தெரியாமல், பிரதான சாலையை எட்டியிருந்தாள். அதன் பிறகு ஆட்டோ பிடித்து விடுதிக்கு வந்து தன்னைறையில் படுத்த பின்னும், கோபம் குறைய மறுத்தது.

கண்களை இறுக மூடி, தந்தை தாயோடு வாழ்ந்த நாட்களை நினைத்து, தன்னை தானே தேற்றிக் கொண்டாள் சக்தி. அவள் உயிர் வாழ்வதே அவர்களின் நினைவில் தானே!

நாள்காட்டியின் பக்கங்கள் வேகமாய் குறைந்து, சக்தி, பூர்ணா, துவாரகேஷ் மூவரும் தங்கள் கல்வியினை முடிக்க, இன்னும் ஒரு மாதமே இருந்தது. அதுவும் தேர்வுகள் இருக்கும் மாதமாக இருந்ததால், தங்கள் தொழில்சார்ந்த வேலைகளை சற்றே ஒதுக்கி வைத்திருந்தனர். படிப்பும் புராஜெக்டுமே மட்டுமே சக்தியின் முழு மூச்சாக இருந்தது.

"இப்படியே படிச்சிட்டே இருந்தின்னா மண்டை சூடாகி மூளை ஒரு நாள் வெடிச்சிடும்!" என்று பூர்ணா புலம்பியதை கேட்டு, சக்தியும் துவாரகேஷும் வாய்விட்டு சிரித்தனர்.

"அதெல்லாம் மண்டை மேல மூளை இருக்கவங்களுக்கு தான் நடக்கும். உனக்கு இல்லை…" என்று நக்கல் செய்தான் துவாரகேஷ்.

"பாரு சக்தி இவனை?" என்று சக்தியிடம் கம்ப்ளெயின்ட் செய்தாள் பூர்ணா.

"உனக்கு எப்படி இராவணத்தீவுல படிக்க சீட் குடுத்தாங்களோ தெரியல?" என சீரியசாக முகத்தை வைத்துக் கொண்டு சக்தி கேட்க,

"ஏன் எனக்கென்ன?" என்று கேட்டாள் பூர்ணா.

"உன் தலை புல்லா களிமண்ணு தானே இருக்கு. அப்பறம் எப்படி உனக்கு சீட் குடுத்தாங்க?" என்று தன் பங்குக்கு பூர்ணாவை வாறினாள் சக்தி.

"ஏய் உன்னை‌…" என்று பூர்ணா, சக்தியை அடிக்க வர, சக்தி அவளுக்கு போக்கு காட்டி ஓட, அவர்கள் இருவரையும் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான் துவாரகேஷ்.

துள்ளி குதித்து தன் கவலைகளை மறந்து புள்ளி மானாய் அந்த நிமிடம் திரிந்துக் கொண்டிருந்தாள் சக்தி. அவளையே ஆசையாய் பார்த்துக் கொண்டிருந்தார் ஆதிரையன்.

மனம் முழுக்க அவளே நிரம்பி கிடந்தாள்; அதை வாய்விட்டு சொல்ல முடியா நிலையில் அவன். சிறு வயதில் இருந்தே எதிரிகள் என அவனுக்கு அவனே கட்டி வைத்த பிம்பத்தை, அவனே எங்கணம் உடைக்க? ஒரு வேளை அவள் உடைத்தால்? யார் உடைத்தாலும் அன்பே அங்கு பிரதானம்!

இன்னும் நாட்கள் பறந்தடித்துக் கொண்டு ஓட, அவள் செய்து கொண்டிருந்த புராஜெக்டும் முடிந்தது. அன்று தான் கடைசி பரிட்சை அவளுக்கு. தேர்வு முடிந்த பின், கடைசியாய் ஒரு முறை நூலகத்திற்கு வந்தாள் சக்தி. தன் பொருட்கள் அனைத்தையும் ஏற்கனவே மூட்டை கட்டி வைத்துவிட்டாள். பரீட்சை முடிந்ததும் அரண்மனைக்கு வந்துவிட வேண்டுமென்பது இராஜாதித்யனின் உத்தரவு. அவன் ஆட்கள் வருவதற்குள், தாய்மடியாய் தன்னை ஏந்திக் கொண்ட இடத்தை கடைசியாய் ஒரு முறை பார்த்துவிட்டு செல்ல வந்தாள் சக்தி.

ஒவ்வொரு புத்தக அடுக்களாய் தடவி விட்டுக் கொண்டே வந்தவளின் கால்கள் சட்டென்று நின்றன. அவளுக்கு எதிரே கையில் ஏதோ புத்தகத்தை வைத்துக் கொண்டு, அதை புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தான் ஆதிரையன். சக்தியை அவன் கவனிக்கவில்லை. அவள் தான் ஆதிரையனே வைத்த கண் வாங்கமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

எத்தனை முறை இவனோடு போட்டி போட்டாலும், ஏனோ அவளுக்கு உள்ளம் சலிப்பதே இல்லை; இன்னும் இன்னும் என்று உற்சாகமே பீறிடும்! இன்றோடு இனி அவனை பார்ப்பது கடினம் என்று அவள் புத்தி சொன்னதும் தான் தாமதம்; மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டாள்.

புத்தகத்தினுள்ளே மூழ்கி கிடந்தவன், ஏதோ உந்த நிமிர்ந்து பார்த்தான். மூச்சை பிடித்தபடி சக்தி நின்றுக் கொண்டிருந்தாள். அவளைப் பார்த்து அழகாய் ஒரு புன்னகை சிந்தினான். இதுநாள் வரையில் அவள் பார்த்திராத புன்னகை! கண்கள் அவளது அனுமதியே இன்றி விரிந்து கொண்டன.

மெதுவாய் அவள் விரிந்த கண்களையே பார்த்துக் கொண்டு அவளின் அருகில் வந்தவன், "இதான் கடைசி நாளா?" என்று கேட்டான். செம்மையேறுவேன் என்ற கன்னங்களை கடிந்துக் கொண்டே, அவள் ஆம் என்பது போல் தலையசைத்தாள்.

"பெஸ்ட் ஆஃப் லக்…" என தன் கையை நீட்டினான் ஆதிரையன். அவளும் பதிலுக்கு கை கொடுத்தாள்.

அவன் கையோடு அவள் கையை ஒப்பிட்டு பார்த்தாள். குச்சி குச்சியாய் இருந்த அவள் கைகள், அவன் மொத்த கைக்குள் குட்டியாய் இருந்தது. அவன் கையின் சொரசொரப்பும் கதகதப்பும் மூளைக்குள் மெதுவாய் தடம் பதித்தது.

"அப்பறம்?" என்று அவன் கேட்க,

"அப்பறம்…" என, என்ன சொல்லுவதென்றே தெரியாமல் அவளும், அவன் சொன்னதையே சொன்னாள்.

அதை கேட்டதும் விஷமமாய் சிரிப்பு வந்தது அவனுக்கு; அதை கண்டதும் தலை குனிந்து நின்றாள் அவள். அங்கே நாணம் மேலோங்க, மோனம் கொஞ்சம் வேலை செய்தது.

"உன் கான்டெக்ட் நம்பர் குடு… என் அப்பாவோட கம்பெனிக்கு ஹெல்ப் தேவைப்பட்டா கூப்பிடறேன்." காரியமாய் கேட்டான் அவன்.

சட்டென்று தன்நிலை உணர்ந்தாள் அவள். உள்ளே ஊறிய மொத்த உற்சாகமும், துளி மிச்சமின்றி வறண்டு போனது.

ஒரு துண்டு சீட்டில், அவளது கம்பெனியின் மின்னஞ்சல் முகவரியை எழுதிக் கொடுத்தவள், "எதாவது ஆபர் இருந்தா, இந்த மெயிலுக்கு கூப்பிடுங்க…" என்றவள், புன்னகைக்க முயன்றாள்.

ஆதிரையன் புருவம் உயர்த்தி அவளை பார்க்க, பாவையின் விழியோ வேறு செய்தி படித்துக் கொண்டிருந்தது. என்னமோ தடாலடியாய் கேட்டுவிட்டான். அவனுக்கு கேட்க, பேச நிறைய இருக்கிறதே! ஆனால் அவளுக்கு?

சொந்த வீட்டினுள்ளே, அழையா விருந்தாளியை காட்டிலும் மிகச் சிறப்பாய் வாழ்கிறாள்! இவளின் நிலைக்கு காதலெல்லாம் புளியங்கொம்பு… இல்லை இல்லை கனவில் கைக்கு கிட்டிய வானவில் என்றே சொல்லலாம்!

பெருஞ் சினத்தோடு கையில் இருந்த காகிதத்தை பார்த்தவன், பின்பு என்ன நினைத்தானோ அதை கசக்கினான். அவளே கசங்குவது போல் உணர்ந்தாள் சக்தி.

என்ன இருந்தாலும் பல்கலைகழகத்தின் கடைசி நாள் இப்படி முடிந்த இருக்க வேண்டாம்! நினைக்க நினைக்க தலை வின்வின்னென்று வலிக்கிறது. நினைக்காமல் இருக்கவும் முடியவில்லை. தாயையும் தந்தையும் அந்த நொடி மிகவும் தேடினாள். தாய் மடியில் கிடந்து சிறிது கண்ணீர் விட்டாலாவது மனது சமன் படும்; கண்ணீருக்கா அவளிடம் பஞ்சம்; ஆனால் தாயின் மடிக்கு எங்கு செல்லுவாள்?

எண்ணங்கள் உலா போக, அவள் வந்த ஆட்டோ, அரண்மனையின் அருகாமையில் வந்து நின்றது.

"அம்மா அரண்மனைக்கு பக்கத்துக்கு வந்தாச்சு… இதுக்கு மேல உள்ள போக முடியாது. நீங்க நடந்து தான் போகணும்." என்று ஓட்டுநர் சொல்லி விட, அவருக்கு தேவையான பணத்தை எடுத்து கொடுத்துவிட்டு, முதுகில் ஒரு பெரிய ட்ராவல் பேக்கும், வலது கையில் ஒரு சின்ன ட்ராலியும், இடது கையில் பெரிய அளவிலான கைப்பையும் தூக்கிக் கொண்டு, நடந்து சென்றாள் அந்த அரண்மனையின் வாரிசு.

கால்கள் முன்னேறி செல்ல செல்ல, மனம் பின்னோக்கி ஓடியது சக்திக்கு. எப்பொழுதாவது கிடைத்துக் கொண்டிருந்த ஏச்சு பேச்சுகளும், வசவு வார்த்தைகளும் இனி நிரந்தரமாய் கிடைக்கப் போகிறது என்று நினைத்த மாத்திரம் மனம் எட்டிக் காயாய் கசந்தது.
 
Top