Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உண்மையான உயர்ந்த நட்பு அமைவது மாபெரும் வரம்

Advertisement

Joyram

New member
Member
உண்மையான உயர்ந்த நட்பு அமைவது மாபெரும் வரம்

அனைவரிடம் நாம் பழகுவதை உறவு என்று சொல்கிறோம். நண்பர்களாக பழகுவதை நட்பு என்று சொல்கிறோம். உறவுகள் வரும். போகும். நட்புகளும் மலரும். வாடும். ஆனால் உண்மையான ஆத்மார்த்தமான நட்பு வாழ்நாள் வரை தொடரும். இந்த உண்மை நாம் அனைவரும் நன்கு அறிந்த உண்மையே. அன்னை காட்டும் அன்புக்கு எதுவும் ஈடாகாது. தந்தை காட்டும் பாசத்திற்கு இணை ஏதும் இல்லை. உண்மையான ஆசிரியரின் உயர்ந்த கல்வியும், போதனைகளும்,அறிவுரைகளும் ஒருவனின் வாழ்க்கைப் பாதையை சிறப்பாக அமைக்கவல்லது. வாழ்நாளில் எவ்வளவோ பேரிடம் நாம் நட்பு கொள்கிறோம். பொதுவாக இவை அனைத்தையும் நட்பு என்ற வட்டத்தில் தான் வைக்கிறோம் . ஏதாவது ஒன்றுக்காகவே பொதுவாக இத்தகைய நட்புகள் இருக்கும். சிறு வயதிலும், பள்ளியிலும், கல்லூரியிலும் எவ்வளவு நண்பர்கள் இருந்தனர் நமக்கு! தற்போது இதில் எவ்வளவு பேர்கள் இன்றும் நம்மிடம் நட்பாக இருக்கிறார்கள்! கைவிரல்களில் எண்ணக் கூடிய அளவுதான் இருக்கும்!

நம்முடன் அலுவலகத்திலும், வணிகத்திலும், அக்கம் பக்கம் உள்ளவர்கள் எவ்வளவு பேர்களிடம் நாம் நட்பு வைக்கிறோம். நம்முடன் பழகுபவர்கள் நிறைய பேர்கள் இருக்கலாம். இவை அனைத்தும் சந்தர்பம் சூழ்நிலைகள் காரணமாக அமையும் நட்பே. சந்தர்பம் வந்தால் ஒருவரை ஒருவர் உபயோகப் படுத்திக் கொள்ள அமையும் நட்பே. இன்பமாக பொழுதை கழிக்க உடன் ஒருவர் இருக்க வேண்டும் காரண நட்பே. தனிமையில் நமக்கு லயிக்கவில்லை என்றால் நமக்கு துணைதந்து, நேரத்தை கடத்த உணவும் காரிய நட்பே. உண்மையான நட்பு என்பது பல நேரங்களில் போலி நட்பாகத் தான் இருக்கிறது.

உயர்ந்த நட்புகள் மிக மிக, மிக மிகக் குறைந்த அளவில் எங்கேயாவது, பொதுவாக நமக்கு தெரியாமல் ஒளிந்து கொண்டு, இருந்து கொண்டுதான் வருகிறது. அபூர்வமாக இத்தகைய உயர்ந்த மேன்மையான நட்புகள் பற்றி எப்போதாவது தெரியவும் வருகிறது. இங்கு நான் ஒரு உண்மையைச் சொல்கிறேன். எனது அறுபது வருட வாழ்க்கையில் இது வரை எனக்கு உண்மையான நட்புகள் அமையவில்லை. உண்மை நட்பு என்று நினைத்து நெகிழ்ந்து போன நட்புகள் புண்படுத்தும் நட்புகளாகவே அமைந்தது. எனது நட்புகள் அனைத்தும் காரண. காரிய, அந்த நேரத்தில் ஒருவரின் தேவைய பூர்த்தி செய்யும் வணிகப் பூர்வமான நட்புகளாகத்தான் இருந்தது என்றால் அது மிகையாகாது.

என் வாழ்க்கையில் சிறுவயதில் (உயர் நிலை பள்ளியில் தொடங்கியது) எனக்கு இரண்டு நெருங்கிய நண்பர்கள். ஒருவன் எங்கு சென்றாலும் என்னை உடன் அழைத்துச் செல்வான். என் நகைச்சுவையை அவன் அவ்வளவு ரசிப்பான். இன்னொருவன் என் வீட்டிற்கு வந்து பலகாரங்கள்உண்டு, காப்பி குடித்து செல்வான், குறிப்பான சில பாடல்களை அவர்கள் வீட்டிற்கு சென்றால் பாடச் சொல்லி கேட்பான். ஆனால் நாளடைவில், குறிப்பாக இருவருக்கும் திருமணம் ஆன பிறகு, அவர்கள் நடைமுறையில் பழகுவதில் நிறைய மாற்றம் ஏற்பட்டது. ஒருவன் சொன்ன சொல்லை காப்பாற்ற முடியாமல், நட்பிற்கு உரிய மரியாதையை கொடுக்க தவறியதால் நான் அவனைப் பிரிந்தேன். அவன் என்னிடம் பழகிய விதம் வணிக ரீதியாகவும் செயற்கையாகவும் இருந்தது. சில வருடங்களுக்கு முன் அவன் காலமானதை அறிந்து அவன் மனைவியிடம் பேசினேன், என் அனுதாபங்களைத் தெரிவித்து...

இன்னொரு நண்பன், என்னிடமிருந்து பண உதவிகள் பெற்றான். நானும் திரும்ப எதிர்பாராமல் கொடுத்தேன். அவனுக்கு சில பழக்கங்கள் இருந்தது, மது, மாது மற்றும் சூது. இதையும் அதிகம் பொருட் படுத்தாமல் நான் அவ்வப்போது அவனை சந்தித்த வண்ணம் இருந்தேன், நான் வெளியூரில் வேலையாக இருந்த போது கூட. அவன் ஊதாரித்தனமான செலவு செய்வதை பல முறை நான் கண்டித்தேன். அவன் மனைவிகளும் இதை அறிவார்கள். முதல் மனைவி இறந்தவுடன் இரண்டாம் திருமணம் செய்து கொண்டான். அவனுடைய பழக்கங்களால் அதிகம் பாதிக்கப்பட்டது அவன் மனைவிதான். இப்போது அவன் தனக்கென்று பண சேமிப்பு இல்லாமல், பிறரின் கடன்களை திரும்ப தர முடியாமல், அவன் மகனின் ஆதரவில் வாழ்ந்து வருகிறான். அவனுடைய நடவடிக்கைகளும், அவன் மற்றவர்களை எப்போதும் ஏளனமாகப் பேசும் விதமும், எனக்கு பிடிக்காமல் நான் மெல்ல அவனிடமிருந்து விலக ஆரம்பித்தேன். தற்போது அவனிடம் தொடர்பு இல்லை. துஷ்டனைக் கண்டால் தூர விலகு என்பதற்கு பதில் நண்பனைக் கண்டால் தூர விலகு என்பது எனக்கு பொருத்தமாக இருக்கும்.

மேலே குறிப்பிட்ட இருவருமே, என் கல்லூரி படிப்பு வரை நேர்மையாக பழகினார்கள். ஆனால் இருவரும் அவரவர் வேலை மற்றும் தொழில் வந்தவுடன் மாறத் துவங்கி விட்டார்கள். இந்த இருவரும் எனது திருமணத்திற்கு வந்திருந்தார்கள். என் திருமண வாழ்கை அமோகமாக அமைந்தது. ஆனால் துரதிருஷ்டவசமாக நண்பர்கள் இருவரும் என் மனதிலிருந்து விலகி விட்டார்கள். நான் மேலே கூறியவை அனைத்தும் உண்மைச் சம்பவங்கள் என்பதை மட்டும் மீண்டும் குறிப்பிட விரும்புகிறேன்.
நட்பு அமையும் விதமும் ஒவ்வொருவருக்கும் ஒரு விதமாக இருக்கும். எல்லாவற்றையும் ஒரே தராசில் நிறுத்த முடியாது. நான் மேலே குறிப்பிட்டது என் மனநிலை என் குணங்கள் என் வாழ்க்கையின் நோக்கு முறை இவை அனைத்தும் இணைந்து என் நட்புகளில் நான் கண்ட குறை நிறைகளை. எனவே இதனை ஒரு அறிய உதாரணமாக நீங்கள் கொள்ள வேண்டாம். ஒரு தனி மனிதனின் வாழ்வில் நடந்தேறிய நிகழ்ச்சிகளாக பாருங்கள்.

சரித்திரத்திலும் கதைகளிலும் உயரிய நட்புகளைப் பற்றி படிக்கிறோம். அவை எவ்வளவு உன்னதமானவை என்பதை அறிந்து பிரமிப்பு அடைகிறோம். உங்களில் எவ்வளவு பேருக்கு உண்மையான, உயர்ந்த, சிறந்த, ஆத்மார்த்தமான, உண்மையிலேயே உயிரையும் தியாகம் செய்யும் மனமுள்ள அஞ்சாத நண்பர்கள் இருக்கிறார்கள்? நன்கு ஆழ்ந்து சிந்தித்து, நெஞ்சைத் தொட்டு சொல்லுங்கள். எவரேனும் ஒருவர் இருவர் ஆம் என்ற பதில் அளித்தால் கூட அந்த வாசகரை (வாசகர்களை) நான் நேரில் காண மிகவும் விழைவேன்.

Joyram
 
Top