Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உனக்காக நான்...!! - அத்தியாயம் 5

Advertisement

Subhashri

Member
Member
உனக்காக நான்...!! - அத்தியாயம் 5
2934

- சுபஸ்ரீ எம்.எஸ். " கோதை"

நான் யார் எனத்
தேடித் திரிகையில்
நீ கிடைத்தாய்
தித்திக்கும் தேனாக
உனை பருகினேன்
திகட்ட திகட்ட

நீ..என் காதல்...!!

#################

நீ.. என் காதல்...!!

ஸ்ரீதர்:

நான் படுக்கையில் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தேன். உறக்கம் வரவில்லை. மனக்கண்ணிலிருந்து அவள் முகம் அகல மறுத்தது. நித்யா.....வட்டமான அழகான வசீகரிக்கும் முகம். பூசினாற் போன்ற உடல். பார்த்த மாத்திரத்தில் பிடித்துப் போய் விட்டது அவளை. ஆனால் இவை எல்லாவற்றையும் தாண்டி ஒரு அமைதி குடி கொண்டிருந்தது அவளிடத்தில். அது ஆரவாரமில்லாத அமைதியாக மட்டும் இல்லை. ஒருவித விரக்தியுடன் கூடிய அமைதியாக இருந்தது. வாழ்க்கையையே வெறுத்தாற் போன்ற ஒரு உணர்வின் வெளிப்பாடாக இருந்தது.

தரகர் மாப்பிள்ளைக்கு ஒரு தங்கை இருக்கிறாள் என்று கூறியபோது நான் அவ்வளவாக கவனம் செலுத்தவில்லை. ஆனால் முகூர்த்தத்திற்கு சிறிது நேரத்திற்கு முன்னால் மண்டபத்திற்கு வந்திருந்த மாப்பிள்ளையின் நண்பர்கள் சிலர் அவர் அறையை தேடிக் கொண்டிருந்த போது நான் அவர்களை அழைத்து சென்று மாப்பிள்ளை அறையை காண்பித்தேன்.

அப்போதுதான் அந்த அறையில் அர்ஜுன் இல்லாததையும் அறையின் மூலையில் சோகமே உருவாக அவள் அமர்ந்திருப்பதைக் கண்டேன். கையில் ஏதோ ஒரு புகைப்படத்தை வைத்திருந்தாள். அதைப் பார்த்து பார்த்து அழுது கொண்டிருந்தாள். எனக்கு கொஞ்சம் எரிச்சலும் கோபமும் வந்தது. " என்ன இந்தப் பெண்? இப்படி முகூர்த்த நேரம் நெருங்கும்போது அழுதுக் கொண்டு இருக்கிறாளே!! இந்த கல்யாணம் நடப்பதில் இவளுக்கு ஏதாவது பிரச்சினையா?

அதைப் பற்றி அவளைக் கேட்கவேண்டும் என்று வாயெடுக்கும் முன் அர்ஜுனின் அம்மா அங்கே வந்தார். "வாங்க தம்பி!! சொல்லுங்க" என்றார். அதற்குள் அந்தப் பெண் அவசர அவசரமாக கண்களைத் துடைத்துக் கொண்டாள். " ஒண்ணும் இல்லை ஆன்ட்டி!! அர்ஜுன் எங்கே? அவரோட ஃப்ரெண்ட்ஸ்லாம் வந்திருக்காங்க. அவரைப் பார்க்கணும்னு சொன்னாங்க. அவர் எங்கே போயிருக்கார் னு தெரியுமா?" என்று கேட்டேன்.

" ஏய்!! நித்யா!! எங்கடி உங்க அண்ணன்?" என்று கேட்டார் அர்ஜுனின் அம்மா.

அந்தப் பெண் " ஏதோ ஃபோன் வந்தது. இங்கே சிக்னல் கிடைக்கலனு வெளியே போனான் பேசறதுக்கு. வெளியே போய் பாருங்க" என்றாள் எரிச்சலுடன்.

அதற்கு மேல் அங்கு இருக்க முடியாமல், " சரிங்க ஆன்ட்டி!! நான் வெளியே போய் பார்க்கறேன்" என்று சொல்லி விட்டு நகர்ந்தேன்.

பிறகு சிறிது நேரம் கழித்து, திவ்யாவின் அறையின் வழியாக செல்லும் போது அர்ஜுனின் அம்மா திவ்யாவிடம் பேசிக்கொண்டு இருந்தார்கள். குரல் கேட்டு அறையின் வாசலில் நின்று அவர்களின் உரையாடலை கவனித்து கேட்டேன். நித்யா திவ்யாவிடம் கூறியதைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் அவள் அப்படி பேசியதற்கு அவளுடைய அம்மா கூறிய காரணத்தை கேட்டபோது நித்யாவிற்கு நடந்த கொடுமையை நினைத்து எனக்கு கோபமும் ஆத்திரமும் ஒருசேர வந்தது.

ஒரு பெண்ணுக்கு இப்படி ஒரு கொடுமையை செய்ய எப்படி ஒருவனுக்கு மனம் வந்தது. அவளை இந்த நிலைக்கு ஆளாக்கியவன் மிகவும் கல் நெஞ்சம் கொண்டவனாகத்தான் இருக்க வேண்டும். அந்த அறையை விட்டு கண்களில் கண்ணீரோடு அவள் பாட்டியுடன் வெளியேறிய போது அவள் கண்ணீரைத் துடைத்து ஆறுதலாய் அரவணைத்து அவளுடைய துன்பத்தை போக்க வேண்டும் என்று என் கைகள் துடித்தன.

ஏனோ தெரியவில்லை.. அவளுடைய கண்ணீரும் சோகமும் எனக்குள் மிகுந்த துன்பத்தை கொடுத்தது. ஏன்...ஏன் அவளை என்னால் மறக்க முடியவில்லை? அவளுடைய சோகம் நிறைந்த முகம் என் கண்ணை விட்டு மறையாமல் துன்புறுத்துகிறதே. எனக்கும் அவளுக்கும் என்ன சம்பந்தம்? இப்படி எண்ணியவாறு தூக்கம் பிடிக்காமல் விடியலுக்காக காத்திருந்தேன்.

நித்யா:

கண்களை மூடமுடியவில்லை எனக்கு. ஒரு பட்டாம்பூச்சி போல எவ்வளவு மகிழ்ச்சியாக சுற்றிக் கொண்டு இருந்தேன் நான். என்னை பெண் பார்த்து பிடித்திருக்கிறது என்று சொன்ன பிறகு தானே ஆனந்தைச் சுற்றி ஆசையை வளர்த்துக் கொண்டேன். என்னைத் திருமணம் செய்ய விருப்பமில்லையென்றால் பெண் பார்க்க வரும்போதே சொல்லி இருக்கலாமே.. மணவறைக்கு பல்வேறு ஆசைகளோடும் கனவுகளோடும் வந்த என்னை மணக்கோலத்தில் நிறுத்தி விட்டு வேறு ஒரு பெண்ணை ஆனந்த் திருமணம் செய்து கொண்டான் என்ற செய்தி என் இருதயத்தையே இரண்டாக பிளந்தது போன்று தாக்கியது.

நான் மணக்கோலத்தில் புன்னகைத்தபடி இருந்த அந்த புகைப்படத்தை பார்த்த போது மேலும் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அதை மறக்க நான் பெருமுயற்சி எடுத்து கொண்டு இருக்கும் போது அர்ஜுனின் திருமண ஏற்பாடு, அங்கு நடந்த நிகழ்வுகள் அந்த நினைவுகளைக் கிளறி மேலும் என்னை துன்பக்கடலில் மூழ்கடித்து விட்டது. கண்களில் கவலையும் கண்ணீரும் இருந்தால் தூக்கம் எங்கிருந்து வரும்? அப்படியே என் உடைந்த மனதுடன் படுத்திருந்தேன்.

திவ்யா:

அர்ஜுன் சென்றபின் எவ்வளவு நேரம் அப்படியே அதிர்ச்சியில் உறைந்து சிலையாக நின்று கொண்டு இருந்தேன் என்று தெரியவில்லை. சுய உணர்வு வந்தபோது அப்படியே கீழே அமர்ந்து விட்டேன். என்னையும் அறியாமல் கண்களில் தாரை தாரையாக கண்ணீர் பொங்கி வழிந்து கொண்டிருந்தது.

இது ஏதேனும் கெட்ட கனவா? இப்போதுதான் விழித்தேனா? இல்லை. நிதர்சனம் என்னை சுட்டது. நான் அர்ஜுனின் அறையில் தனியாக அலங்காரத்துடன் தரையில் அமர்ந்து கொண்டு இருந்தேன். அர்ஜுன் ஏன் இப்படி செய்தான்? எனக்கு ஏன் இப்படி ஒரு கொடுமையை செய்தான்? அப்படியே தரையில் அழுதபடி படுத்திருந்தேன் விடியலை எதிர்ப்பார்த்து. வருமா விடியல் என் வாழ்வில்?

அன்றைய விடியல் வந்தது. எழுந்தேன். போதும் அழுதது. அர்ஜுன் வந்ததும் நான் எதையும் கேட்கப் போவதில்லை. அவன் எதிரே அழப் போவதும் இல்லை. நான் அவ்வளவு பலவீனமானவள் அல்ல. அவன் என்னை காதலிக்கிறானோ இல்லையோ நான் அவனை உண்மையாக விரும்பினேன். இந்த ஜென்மத்தில் அவன் மட்டும் தான் என் கணவன். அவன் எப்படி இருந்தாலும் நான் அவனை மனதார நேசிப்பது மாறாது. அவனுடைய குறை நிறைகளையும் சேர்த்தே நேசிக்கிறேன்.

அதுமட்டுமின்றி நான் வருத்தப்பட்டால் என் பிறந்த வீட்டினர் புகுந்த வீட்டினர் அனைவரும் கவலைப்படுவார்கள். அனாவசியமாக அவர்களுக்குள் சச்சரவு உண்டாக நான் காரணமாக இருக்க வேண்டாம். அதே சமயம் அர்ஜுனிடம் என்னை ஏற்றுக் கொள்ளச் சொல்லி கெஞ்சவோ சண்டையிட்டு அழவோ மாட்டேன். ஒருவர் மீது நேசம் என்பது இயல்பாக வரவேண்டும். நிர்பந்தத்தினால் வரக்கூடாது.

ஃபோனில் பேசிய அந்த பெண் அர்ஜுனை உண்மையாக விரும்புகிறாள் என்றால் அவள்தான் அர்ஜுனுக்கு மனைவியாக தகுந்தவள். அதைப் பற்றி போகப் போக என்ன செய்யலாம் என்று யோசிக்கலாம். கல்யாணத்திற்கு முன் என் பிறந்த வீட்டில் இயல்பாக எப்படி மகிழ்ச்சியாக இருந்தேனோ அதே போல் இங்கும் நான் மகிழ்ச்சியாக இருந்து அனைவரையும் நன்கு கவனித்து பார்த்துக் கொள்வேன் என்று எண்ணிக்கொண்டு தெளிந்த மனதுடன் எழுந்து குளியலறைக்குள் சென்றேன்.

அர்ஜுன்:

காலை மணி ஏழு. நான் காரை நிறுத்தி விட்டு வீட்டுக்குள் நுழைய முற்பட்டேன். வீட்டு வாசலில் வண்ண மயமாக பெரிய அழகான கோலம் போட்டிருந்தது. அதை பிரமிப்புடன் பார்த்துக் கொண்டே உள்ளே சென்றேன். இதமான இனிய பாடல் என் செவிகளை நனைத்தது.

" கண்ட நாள் முதலாய்
காதல் பெருகுதடி
கையினில் வேல் பிடித்த
கருணை சிவபாலனை.."

பூஜையறையில் திவ்யா தெய்வீகமான குரலில் பாடிக்கொண்டிருந்ததை கேட்டு மெய் மறந்து சிலிர்த்து நின்றேன்.

பாடல் முடிந்ததும் என்னையே மறந்து உற்சாகத்துடன் கைதட்டி," ஆஹா!! அருமை!! அருமை!! சூப்பர் திவ்யா!!" என்றேன்.

அப்போது தான் கவனித்தேன். அங்கே என் அம்மா, பாட்டி இருவரும் நின்றிருந்தார்கள்.

பாட்டி, " ஆமாம்!! ரொம்ப நல்லா பாடறா!! காலையில குளிச்சிட்டு வாசல்ல மங்களகரமா எவ்வளவு பெரிய கோலம் போட்டிருக்கா பாத்தியா?" என்றாள்.

அதை தொடர்ந்து அம்மா " ஆமாம்.. என் மருமக மேல என் கண்ணே பட்டுடும் போல இருக்கு. அவங்க வீட்டில அவளை நல்லா வளர்த்திருக்காங்க" என்று பெருமையாக பேசினாள்.

ஆமாம்.. இவளிடம் எவ்வளவு திறமை இருந்தால் என்ன? குணம் இல்லையே!! இவள் உண்மை சுயரூபம் எனக்கல்லவா தெரியும் என்று எனக்குள் எண்ணிக் கொண்டேன்.

அம்மா என்னைப் பார்த்து, " அது இருக்கட்டும். டேய் அர்ஜுன்!! வெளியே இருந்து வர? எப்ப வெளியே போன? நைட் திவ்யாவோட உன் ரூம்ல இல்லையா நீ?" என்று போலீஸ் போல் விசாரித்தாள்.

நான் என்ன பதில் சொல்லப் போகிறேன் என்று திவ்யா என்னை நோக்கி பார்த்து கொண்டு இருந்தாள்.

தொடரும்....
 
Top