Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உனக்காக நான் - அத்தியாயம் 6

Advertisement

Subhashri

Member
Member
உனக்காக நான் - அத்தியாயம் 6
2942

- சுபஸ்ரீ எம்.எஸ். " கோதை"


பிறந்த வீட்டில்
பாடித் திரிந்து
பல உறவுகள்
பாசமழைப் பொழிய
சிறகடித்துப் பறந்தவள் - இன்று
படி தாண்டி வந்த இடம்

புகுந்த வீடு!!

####################

புகுந்த வீடு!!

திவ்யா:

அத்தை அர்ஜுனிடம் கேட்ட கேள்விக்கு அவன் என்ன பதில் சொல்லப் போகிறான் என்று பார்த்துக்கொண்டிருந்தேன். முன்னாள் இரவு நடந்தது அனைத்தும் என் கண் முன்னே வந்து சென்றது.

அர்ஜுன் சிறிதும் யோசிக்காமல்," ஏன்? திவ்யா சொல்லலையா? நேத்து ராத்திரி திடீர்னு அவசரமாக ஒரு வேலை விஷயமா என்னோட மேனேஜர் ரவி ஃபோன் பண்ணினார். உடனே போக வேண்டி இருந்தது. திவ்யா நான் ஃபோன் பேசினதெல்லாம் கேட்டுக்கிட்டு தானே இருந்தா? அவ என் கிட்ட இத பத்தி ஒண்ணும் கேக்காததனாலே அவ இத ஒரு பெரிய விஷயமா நினைக்கலனு தோணிச்சு. அதான் கிளம்பி போயிட்டேன். என்ன திவ்யா? நான் கல்யாண நாள் அதுவுமா ராத்திரி உன்னை தனியா விட்டுட்டு ஆஃபீஸ் போயிட்டேன்னு உனக்கு வருத்தமா?," என்று என்னை ஊடுருவி பார்த்துக் கொண்டே அலட்சியமான புன்முறுவலுடன் கேட்டான்.

எனக்கு கோவம் தலைக்கேறியது. அவனை ஒருமுறை முறைத்து பார்த்தேன். அதற்குள் அத்தை அவனுக்கு பதிலளித்தார். "நானும் பாட்டியும் இப்பத்தான் எங்க ரூம்ல இருந்து வந்தோம். வாசல்ல கோலம் போடலாம் னு போனா திவ்யா அதுக்குள்ள கோலம் போட்டு பூஜை ரூமை அழகா அலங்காரம் பண்ணி பூஜையும் பண்ணிட்டிருந்தா. ஏன்டா நேத்து கூட உங்க ஆஃபீஸ் வேலையை விட்டுட்டு வீட்ல இருக்க முடியலயா உனக்கு?" என்று அங்கலாய்த்தாள்.

தொண்டையை லேசாக கனைத்த அர்ஜுன்," அம்மா !! என் வேலையை பத்தி உனக்குத் தெரியாதா? நிமிஷத்துக்கு நிமிஷம் என் கம்பெனி ப்ராஜக்ட்ஸ்ல டெட்லைன் ரீச் பண்ண உழைச்சுக்கிட்டே இருக்கணும். இப்ப ஏ.எஸ். இன்ஃபோடெக் கம்பெனியோட சாஃப்ட்வேர் மாடல்ஸ்க்கு மார்க்கெட்ல நல்ல டிமாண்ட் இருக்கு. நிறைய கம்பெனி இந்த மார்க்கெட்ட புடிக்கறதுக்கு போட்டி போட்டுட்டு இருக்காங்க. இந்த மார்க்கெட்ட தக்க வெச்சுக்கணும்னா கடுமையா ராத்திரி பகல் பார்க்காம உழைக்கணும். இப்ப கூட மூணு வாரத்தில எங்க ப்ராஜக்ட் ரிலீஸ் இருக்கு. டே அண்ட் நைட் ஒர்க் இருக்கும். திவ்யாவுக்கே இதுல எந்த பிரச்சனையும் இல்ல. நீ ஏன்மா இப்படி என்னை நிக்க வெச்சு கேள்வி கேக்கற? என்ன திவ்யா?" என்றபடி என்னை பார்த்தான்.

" ம்ம்ம்ம்" திடீரென்று எதிர்பாராத நேரத்தில் அர்ஜுன் என்னை கேட்டதும் சிறிது தடுமாறி பின்னர் சமாளித்தேன். "அத்தை!! எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை. பாவம்!! அர்ஜுனே ரொம்ப பிஸியா இருக்காரு.. அவருக்கு அவ்வளவு வேலை இருக்கும். அது விஷயமா அவர் பல பே...ரை மீட் பண்ண வேண்டி இருக்கும்." என்று அர்ஜுன் பக்கம் ஒரு அர்த்தமுள்ள ஒரு பார்வையை வீசிவிட்டு தொடர்ந்தேன். " அவரோட வேலையில அவர் எவ்வளவு நாட்டமா இருக்கார்னு எனக்கு புரியுது. நான் எங்கே ஓடிப் போகப் போறேன்? இனிமே வா....ழ்க்கை முழுக்க அவரோட தான் இருக்கப் போறேன். அதனால எனக்காக அவரை திட்டாதீங்க. இப்போ அவரோட வேலைய கவனம் சிதறாம முழு ஈடுபாட்டோட செஞ்சா தான் அவரோட பிஸினஸ்க்கு நல்லதுனா அவர் அப்படியே செய்யட்டும். அவர் அதை முடிச்சிட்டு வர வரைக்கும் நான் காத்திட்டிருக்கேன் அத்தை!!" என்றேன்.

உடனே அத்தை," சரியான ஜாடிக்கேத்த மூடிதான் போ!! கல்யாணத்துக்கு முன்னாடி தான் எப்பப்பாரு ஆஃபீஸ் ஆஃபீஸ் னு ஆஃபீஸே கதியா கடந்தான். அங்கயே சாப்பிட்டு அங்கயே தூங்கி எப்பயாவது தான் வீட்டுக்கே வருவான். அப்படியே வந்தாலும் முக்கால் வாசி நாள் நாங்கள் லாம் தூங்கினப்பறம் நைட் லேட்டா வந்துட்டு காலையில நாங்க எந்திரிக்கறதுக்குள்ள கிளம்பி போயிடுவான். கல்யாணத்துக்கு அப்புறம் புதுப்பொண்டாட்டிய காரணமா வெச்சு வீட்டில நிறைய நேரம் செலவு பண்ணுவான்னு பார்த்தா, இப்ப இன்னும் நெலமை மோசமா இல்ல போயிட்டிருக்கு." என்று அங்கலாய்த்தாள்.

அதற்குள் பாட்டி," ஏன்டாப்பா!! ஏதோ ஊர்ல இல்லாத ரதிய கண்டாப்பல கல்யாணம் பண்ணா இவளதான் கல்யாணம் பண்ணுவேன்னு ஒத்த கால்ல நின்னு ஒரே வாரத்தில நீ அடிச்சு புடிச்சு கல்யாணம் பண்ணிட்டு வந்தத பார்த்து ஏதோ அவள விட்டு அந்தப்பக்கம் இந்தப்பக்கம் நகராம கட்டி போட்டா மாதிரி அவளோடயே இருப்பேனுல்ல நினைச்சேன். நீ என்னடான்னா வேலை வேலைன்னு இப்படி ஆஃபீஸே கதியா கடக்கறே" என்றாள் ஆச்சரியத்துடன்.

அர்ஜுன் எரிச்சலும் கோபமும் கலந்த குரலில்," திவ்யாவே என்னை புரிஞ்சுக்கிட்டு அட்ஜஸ்ட் பண்ணிக்க ரெடியா இருக்கா. நீங்கள்லாம் அனாவசியமா ஏன் இவ்வளோ கேள்வி கேக்கறீங்க? இன்னும் ரெண்டு வாரத்துக்கு இந்த ப்ராஜெக்ட் விஷயமா ராத்திரி பகல் பார்க்காம வேலை செய்ய வேண்டி இருக்கும். இப்படித்தான் ஆஃபீஸ் போயிட்டு வந்திட்டிருப்பேன்." என்றவன் என் பக்கம் திரும்பி," திவ்யா!! இதுல உனக்கு ஏதாவது ப்ராப்ளம் இருந்தா இப்பவே சொல்லிடு. " என்று கேட்டான்.

" எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை. எனக்கு புரியுது. நீங்க தாராளமா உங்க ஆஃபீஸ் வேலையை எவ்வளவு நாள் வேணும்னாலும் எடுத்துக்கிட்டு நிதானமா பொறுமையா பாருங்க. அத்தை!! அவர் இப்படி வேலையில இவ்வளவு ஈடுபாடோட உழைக்கிறத பார்த்தா எனக்கு பெருமையா இருக்கு. நீங்க அவரை எதுவும் சொல்லாதீங்க. எவ்வளவு நாள் வேலை இருந்தாலும் வேலை முடிஞ்சதும் வீட்டுக்கு தான வரப்போறாரு. அப்ப என்னை நல்...லா கவனிச்சிப்பாரு." என்றேன்.

உடனே அத்தை," அம்மா திவ்யா!! உன் வீட்டுக்காரனை ஒண்ணும் சொல்லலைம்மா. அத்தை!! பார்த்தீங்களா என் மருமகளை!! கல்யாணம் ஆன மறுநாளே புருஷனுக்காக எப்படி வரிஞ்சி கட்டிக்கிட்டு வரா? ம்ம்ம்ம்...." என்றாள்.

அதற்குள் அர்ஜுன் என்னிடம், " தேங்க்ஸ் திவ்யா!! நீ என்னை நல்லா புரிஞ்சுட்டிருக்க!! அப்பறம் என்னம்மா? நான் மேலே என் ரூமுக்கு போய் ப்ரஷ் பண்றேன். எப்பவும் போல என் காஃபிய நீ என் ரூமுக்கு கொண்டு வந்து குடு" என்றபடி படியேறினான்.

"அம்மா!! திவ்யா!! எல்லா வேலையும் நல்லா செய்யற. அப்படியே காஃபி போட்டு எல்லாருக்கும் குடும்மா." என்றாள் பாட்டி.

" ஐயோ பாட்டி!! சாரி!! சமையல் டிபார்ட்மெண்ட்ல எனக்கு "அ"னா "ஆ"வன்னா கூட தெரியாது. ஆனா சொல்லி குடுத்தா சீக்கிரம் கத்துக்குவேன். அத்தை!! இப்பவே எனக்கு காபி போட கத்து குடுக்கறீங்களா?" என்றேன்.

அத்தை புன்னகைத்தபடி எந்த பதிலும் சொல்லாமல் என் கையைப் பிடித்து சமையலறைக்குள் அழைத்துச் சென்றாள்.

பெரியவர்கள் எல்லோருக்கும் காஃபி கொடுத்தபின், அர்ஜுனுக்கும் நித்யாவிற்கும் காஃபி கொடுக்கலாம் என்று மாடிப்படி ஏறினேன். மேல் படியில் கால் வைக்கும் போது தடுமாறி விழப்போன என்னை எதிரே வந்த அர்ஜுன் என் கையைப் பிடித்து தாங்கிப் பிடித்தான். ஒரு கையில் காஃபி தட்டை பிடித்திருந்ததால் விழாமல் இருப்பதற்காக மற்றொரு கையால் அர்ஜுனின் சட்டையை என்னையும் அறியாமல் இறுக்கமாக பிடித்திருந்தேன். இதை உணர்ந்து சுதாரித்துக்கொள்வதற்கு முன் அர்ஜுன் தன் இரண்டு கைகளால் என் தோள்களை பிடித்து நிறுத்தி," நான் அம்மாவைத் தானே எனக்கு காஃபி கொண்டு வந்து தரச் சொன்னேன். உன்னை யார் எடுத்துட்டு வரச் சொன்னாங்க?" என்றான்.

" அத்தை பாவம்!! அவ்வளவு முட்டி வலியோட படியேறி வந்து உங்களுக்கு காஃபி தரணும். அதான் நான் கொண்டு வந்தேன். உங்களுக்கு என் கையால காஃபி குடுத்தா குடிக்க பிடிக்கலன்னா இனிமே கீழ வந்து குடிங்க!!" என்றேன்.

" ம்ம்ம்ம்... இனிமே நான் கீழே வந்தே குடிக்கிறேன். நீ எடுத்துட்டு வந்து கைய கால உடைச்சுக்காத" என்று கிண்டலாக கூறிவிட்டு காஃபியை எடுத்து கொண்டு படியிறங்கினான்.

நித்யாவின் அறையின் வாசலில் காபியுடன் சென்று கதவை தட்டினேன். இரண்டு முறை கதவைத் தட்டியதும், கதவைத் திறந்தாள். அவள் உருவத்தை பார்த்து எனக்கு பரிதாபமாக இருந்தது. கண்களுக்கு கீழே கருவளையம். வாடி வதங்கிய தேகம். சோகமே உருவான முகம். இந்த வயதிற்கே உரிய துறுதுறுப்பும் உற்சாகமும் இன்றி சோர்வாக இருந்தாள்.

கீழே வரவேற்பறையில் இருந்த குடும்ப படத்தில் இருக்கும் நித்யா வா இது? ஒருவருடைய துரோகம் இன்னொருவருடைய வாழ்வில் இவ்வளவு மாற்றத்தை தாக்கத்தை ஏற்படுத்துமா?

உள்ளே சென்ற நான் " நித்யா!! எனக்கு சமையலறை பக்கமே போய் பழக்கம் இல்லை!! அத்தை சொல்லி கொடுத்து காஃபி போட்டிருக்கேன். எப்படி இருக்குனு குடிச்சி பார்த்துட்டு சொல்லு. மத்த எல்லாருக்கும் குடுத்துட்டேன். எல்லாரும் என் காஃபிய குடிச்சிட்டு நல்லாத்தான் இருக்காங்க. நீ தைரியமா குடிக்கலாம்." என்று சொன்னபடி மேஜையில் காஃபியை வைத்து விட்டு அவள் அறையை சுற்றி நோட்டமிட்டேன். அப்போது அந்த அறையின் ஒரு சுவற்றில் ஒரு பலகையில் பலவிதமான ஆடை வடிவங்கள் வரைந்திருந்த தாள்கள் இருந்தது. அவற்றின் மேல் தூசி படிந்து இருந்ததை பார்த்தால் அவற்றை வரைந்து பல மாதங்கள் இருக்கும் என்று தோன்றியது. அவை மிகவும் வித்தியாசமான அழகான வடிவமைப்புகளாக இருந்தன.

" நித்யா!! இந்த டிசைனெல்லாம் நீ வரைஞ்சதா? ரொம்ப அழகா இருக்கு." என்றேன் நித்யாவிடம்.

" ஆமாம் அண்ணி!! நான் காஃபி குடிச்சிட்டு கப்ப கீழே எடுத்துட்டு வந்து வெக்கறேன். நீங்க போங்க" என்று பிடி கொடுக்காமல் பேசினாள்.

" காஃபி சூடா குடிச்சாதான் நல்லா இருக்கும். " என்றபடி காஃபியை எடுத்து அவளிடம் நீட்டினேன். அவள் சட்டென்று வேண்டாம் என்று கையை தடுக்க அந்த காஃபி முழுவதும் அப்படியே என் புடவையில் கொட்டியது.

நித்யா பதட்டத்துடன்," ஐயோ அண்ணி!! உங்க மேலே ஏதாவது சுட்டுடுச்சா? சாரி அண்ணி!!" என்றாள்.

"எனக்கு ஒண்ணும் ஆகல. புடவையில தான் காஃபி கரை பட்டிருச்சு. என் அண்ணன் அவரோட முதல் சம்பளத்தில ஆசையா வாங்கி குடுத்த புடவை. அதான் ஒரு மாதிரி இருக்கு" என்றேன்.

" நீங்க புடவையை தோய்ச்சு பாருங்க. கரை அப்படியும் போகலன்னா என்கிட்ட கொண்டு வந்து குடுங்க. நான் சரி பண்ணித் தர்றேன்." என்றாள் நித்யா.

" சரி!! ரொம்ப தேங்க்ஸ்!! நான் போய் உனக்கு இன்னொரு காஃபி கொண்டு வர்றேன்" என்று அவளிடம் சொல்லிவிட்டு வெளியே வந்தேன். மீண்டும் நித்யாவிற்கு காஃபியை எடுத்து கொண்டு போய் கொடுத்தேன். திரும்பி வருகையில், நித்யாவை முதலில் அவள் சோகத்திலிருந்து வெளியே கொண்டு வர என்ன செய்வது என்று எண்ணிக்கொண்டே அர்ஜுன் அறையை, அதாவது தற்போது நான் இருக்கும் என் அறையை , கடக்கும்போது என் செல்ஃபோன் ஒலிப்பது கேட்டது. இவ்வளவு காலையில் யார் எனக்கு ஃபோன் செய்வது என்று எண்ணிக்கொண்டே போய் என் ஃபோனை எடுத்து பார்த்தேன். திரையில் அனுவின் பேரை பார்த்ததும் எனக்குள் உற்சாகமும் சந்தோஷமும் தொற்றிக் கொண்டது.
அனு, என் உயிர் தோழி. தாயில்லா பெண். ஆனால் அந்தக் குறை தெரியாமல் அவள் மேல் அன்பு மழை பொழிய அவளுக்கு ஐந்து சகோதரர்கள் இருந்தனர். நான்கு அண்ணன்கள். ஐந்தாவது சகோதரனும் இவளும் இரட்டையர்கள். அவர்கள் பிறந்த மூன்று மணி நேரத்தில் அவளுடைய அம்மா இறந்து விட்டார். அவளுடைய அப்பா இன்னொரு திருமணம் கூட செய்து கொள்ளாமல் அவர்கள் அனைவரையும் தாயில்லா குறை தெரியாமல் வளர்த்தார்.

அவளுக்கும் எனக்கும் ஒரு மாதம் தான் வித்தியாசம் என்பதால் பக்கத்து வீட்டில் இருந்த அவளுடைய அம்மாவின் உயிர் தோழியான என் அம்மா அவளுக்கு தாயாக இருந்து வளர்த்தாள். அவளுடைய சகோதரர்கள் என்னோடும் என் அண்ணனோடும் சகோதரர்களாகவே பழகினர். அதனால் அனு வேலைக்கு செல்லும் நேரம் தவிர மற்ற நேரமெல்லாம் என் வீட்டிலேயே இருப்பாள். சில நாட்கள் நாங்கள் இருவரும் அரட்டை அடித்து கொண்டே என் அறையிலேயே தூங்கி விடுவோம். எங்கள் இருவருக்கும் இடையே எந்த ஒளிவு மறைவும் இன்று வரை இருந்ததில்லை. அவள் தோழி என்பதைவிட என் கூடப் பிறக்காத சகோதரியாகவே இருந்து வந்தாள்.

என் ஃபோனை எடுத்து," ஹாய்!! அனு!!" என்றேன். அனு அவள் குரலில் எப்போதும் இருக்கும் இயல்பான உற்சாகத்துடன் ," ஹாய்!! புதுப்பொண்ணு!! எப்டி இருக்க!! மச்சான் என்ன சொல்றார்? என்னல்லாம் ஞாபகமாவது இருக்கா? இல்ல, இன்னும் நேத்து அவர் செஞ்ச லீலைகளயே நினைச்சு கனவுலகத்திலயே மிதந்துகிட்டு இருக்கியா? ," என்று படபடவென கேட்டாள்.

நான் விரக்தியுடன் சிரித்தேன். என் சிரிப்பை கேட்டு அவள் குரலில் ஒரு பதட்டத்துடன்," ஹேய்!! என்னடி.. உன் ரியாக்ஷனே சரியில்ல. உன் கல்யாணத்துக்கு முன்னாடி அர்ஜுன் பத்தி பேசினாலே உன் குரல்ல ஒரு வெக்கம், சந்தோஷம் எல்லாம் கலந்திருக்கும். இப்ப நீ சிரிக்கறத கேட்டா பயமா இருக்கு. ஒழுங்கா உண்மையை சொல்லு. என்ன நடந்தது அங்கே? என்கிட்ட மறைக்கணும்னு நினைக்காதே. இப்ப நீ உண்மையை சொல்லலைனா நான் இப்பவே கிளம்பி வந்து அர்ஜுன்கிட்டயே கேட்டுக்கிறேன்" என்றாள்.

அனுவிடம் நான் இதுவரை எதையும் மறைத்ததில்லை.மறைக்கவும் முடியாது. அவளைத் தவிர இப்போது வேறு யாரிடமும் இந்த விஷயத்தை சொல்லவும் முடியாது. அவளிடம் பகிரும் எந்த விஷயமும் எங்கள் இருவரைத்தாண்டி வெளியே சென்றதில்லை. அவள் என்னை நன்றாகப் புரிந்து கொண்டவள்.
அவளுக்கு என் நிலை புரியும். அவளிடம் பேசினால் சிறிது தெளிவும் கிடைக்கும்.

அவளிடம் நடந்த அனைத்தையும் மறைக்காமல் கூறினேன்.

அவள்," இவ்வளவு நடந்திருக்கு!! இன்னும் நீ அந்த வீட்ல கோலம் போட்டுட்டு, பூஜை பண்ணிட்டு, காஃபி கலந்து எல்லாருக்கும் குடுத்துட்டிருக்கியா? உனக்கு ஏதாவது அறிவு இருக்கா இல்லையா? எனக்கு இப்ப அர்ஜுனை நினைச்சா பத்திக் கிட்டு வருது. அங்கே நான் இருந்தேன்னா அவங்க எல்லாரையும் கூப்பிட்டு நடந்த எல்லாத்தையும் சொல்லி ,பாருங்க... உங்க பிள்ளையோட லட்சணத்தைனு நாக்கை பிடுங்கிக்கறா மாதிரி நல்லா நாலு வார்த்தை கேட்டிருப்பேன்."

அவள் வார்த்தைகளின் சூட்டைப் பொறுக்க முடியாமல் ," அனு!! " என்று கத்தினேன். " என் அத்தை, மாமா, பாட்டி, தாத்தா எல்லாரும் நல்ல மாதிரியாக இருக்கிறார்கள். அவங்களை பத்தி பேசும்போது கொஞ்சம் மரியாதையோட பேசு. நான் நினைச்சிருந்தா நேத்து ராத்திரி அர்ஜுன் ரூமை விட்டு வெளியே வந்ததுமே எல்லாரையும் கூப்பிட்டு சொல்லி ரகளை பண்ணியிருப்பேன். ஆனா அத கேட்டு அவங்க உடஞ்சி போயிடுவாங்க. அவங்க பிள்ளைக்கு கல்யாணம் பண்ணி அவரும் நானும் சந்தோஷமா இருக்கோம், இனிமேலும் இருக்கப் போறோம்னு நினைச்சுக்கிட்டு இருக்கிறவங்க கனவை படாருன்னு உடைக்க முடியாது."

ஒரு பெருமூச்சை விட்டு தொடர்ந்தேன். "அதுமட்டுமில்லாம, அர்ஜுன் விரும்பற பொண்ண பத்தி வீட்ல சொல்லி ஏன் கல்யாணம் பண்ணிக்கல? அந்த பொண்ணு கிட்ட இவங்க ஏத்துக்க முடியாதபடி ஏதாவது பிரச்சினை இருக்கா? அப்படி இருந்தா அது என்ன? இவங்க மனச மாத்தி இவங்க சம்மதத்தோடு அந்த பொண்ணுக்கும் அர்ஜுனுக்கும் கல்யாணம் பண்ணி வெக்கமுடியுமா? இந்த கேள்விக்கெல்லாம் பதில் தெரியாம அவசரப்பட்டு நான் எதுவும் வாயைத் திறக்க போறதில்லை."

அனு கோவமாக," ஏய்.. திவ்யா.. உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு? உன்னைப் பத்தியும் உன் மனசைப் பத்தியும் சுத்தமா கவலைப்படாம உனக்கு இவ்வளவு பெரிய துரோகத்தை பண்ணிட்டு கொஞ்சம் கூட அதுக்கான வருத்தமும் இல்லாம குற்ற உணர்ச்சியும் இல்லாம திரிஞ்சிக்கிட்டிருக்கிறவனுக்காக அவன் குடும்பத்துக்காக நீ எதுக்கு இவ்ளோ யோசிக்கிற? அவன் சந்தோஷமா வாழறதுக்காக நீ எதுக்கு ஒரு பொய்யான வாழ்க்கையை அந்த வீட்ல வாழணும்?"

" அப்டி இல்ல அனு... இந்த குடும்பத்தில வளர்ந்த பிள்ளை ஒரு பொண்ணுக்கு காரணம் இல்லாம மனசால துரோகம் பண்ணுவார்னு எனக்கு தோணல. அதுமட்டுமில்லாம என் அம்மா அப்பா எனக்கு நல்லபடியா கல்யாணம் பண்ணி வச்சிட்டோம்னு நிம்மதியா இருக்காங்க. அவங்ககிட்ட இந்த கேள்விக்கெல்லாம் பதில் கிடைக்கற வரைக்கும் நேரம் எடுத்துக்கிட்டு நிதானமா மெதுவா கொஞ்சம் கொஞ்சமா சொல்லி புரிய வெக்கலாம்னு நினைக்கிறேன். அது வரைக்கும் அவசரப்பட்டு ஆத்திரத்திலயும் கோவத்திலயும் எந்த பெரிய முடிவும் நான் எடுக்கிறதா இல்ல. அர்ஜுன் மத்தவங்க கிட்டயும், என்கிட்டயும் நடந்துக்கிறத பார்த்தா அவர் என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டதுக்கு ஏதாவதொரு காரணம் இருக்கும்னு நான் நினைக்கிறேன். அது என்ன? என்னை ஏன் அவர் ஏமாத்தினார்னு அவர்கிட்ட கேக்கற வரைக்கும் நான் இந்த மாதிரி தான் வாழ்ந்தாகணும். நீயும் என் வீட்டில் எதுவும் இத பத்தி சொல்ல வேண்டாம்." என்று கூறினேன்.

" நீ சொல்றது கேட்டா எனக்கும் சரின்னு நான் தோணுது. தெளிவா குழப்பம் இல்லாம பேசற. இது உன்னோட வாழ்க்கை. விளையாட்டு இல்ல. அதனால நீ பொறுப்பில்லாம எந்த முடிவும் எடுக்கமாட்டேனு நான் நம்பறேன். ஆனா ஏடாகூடமா ஏதாவது நடந்தா ஒரு ஃபோன் பண்ற தூரத்தில தான் நான் இருக்கேன்கிறதை ஞாபகம் வெச்சுக்க," என்று அவள் சமாதானமாக பேசினாள்.

" சரி!! நான் கீழே போகணும். வேலை இருக்கு. உன்னோட அப்பறம் பேசறேன்," என்றேன்.

" ஓகே!! ஆனா நான் தெனமும் ஃபோன் பண்ணுவேன்.. சரியா"என்றாள் அனு.

" சரிடி.. அதனால்தான் நான் உன்கிட்ட மட்டும் இந்த விஷயத்தை சொன்னேன். என் மனநிலை, யோசனை, முடிவுக்கெல்லாம் மதிப்பு கொடுத்து என் இடத்திலேர்ந்து அதைப் பார்த்து வேற யாரும் பொறுமையா எனக்கு பக்கபலமா இருக்கமாட்டாங்கனு எனக்கு தெரியும். விஷயத்தை பெரிசாக்கி பெரிய கலாட்டாவே பண்ணிடுவாங்க. அதனால நீ தெனமும் ஃபோன் பண்ணு. எனக்கும் தெம்பாக இருக்கும்" என்றேன்.

" ம்ம்ம்ம்.. அது... சரி.. பைடி.. அப்புறம் பேசலாம்" என்றாள்.

" பை பை" என்று கூறி ஃபோனை வைத்து விட்டு திரும்பினேன். அங்கே அர்ஜுன் மலை போல் என்னை முறைத்து பார்த்து கொண்டு நின்றிருந்தான்.

தொடரும்...
 
Top