Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உனை தீண்டும் அலையாய் நானே - 12

Advertisement

அலை – 12

வகுப்பறைக்குள் நுழைந்த நேத்ராவால் ஏனோ தனக்குள் உண்டான படபடப்பை தாளமுடியவில்லை. முகமெல்லாம் வியர்வை துளி பூத்திருக்க அமைதியாக வந்து அமர்ந்துகொண்டாள்.

அவளின் இந்த மௌனம் அவளின் தோழிகளை மட்டுமல்லாது அந்த வகுப்பில் அனைவரையும் புருவம் உயர்த்த வைத்தது.

தன்னுடைய இருக்கையில் அமர்ந்த பின்னும் ஒரு நிலையில் உட்காரமுடியாமல் ஏதோ அவஸ்தையில் நெளிந்துகொண்டே இருந்தாள்.

வகுப்பாசிரியை அன்னலட்சுமியும் இதை கவனித்துக்கொண்டே தான் இருந்தார். ஐந்து நிமிடத்திற்கு மேல் பொறுத்து பார்த்து பின்,

“நேத்ரா ஆர் யூ ஆல்ரைட்...” என கேட்க,

“மேம்...” என தயங்கியபடி எழுந்து நின்றவளிடம் ஒருவித தள்ளாட்டம் தென்பட,

“உனக்கு உடம்புக்கு முடியலையோ? நீ வேணும்னா உன் ரூம் போய் ரெஸ்ட் எடு நேத்ரா...” தானாகவே அவளின் தயக்கத்தை கணித்து கூற விடுதலை உணர்வோடு,

“தேங்க் யூ மேம்...” என்றுவிட்டு யாரையும் நிமிர்ந்து பாராமல் வேகமாக அங்கிருந்து வெளியேறிவிட்டாள் நேத்ரா.

ரோஷிணியிடம் திரும்பிய மலர் என்னவாக இருக்கும் என பார்வையிலையே வினவ ரோஷிணி தோளை குலுக்கி உதட்டை பிதுக்கினாள். அவளருகில் இருந்த ராகினியோ,

“எல்லாம் கரெஸ் வேலையா தான் இருக்கும். இப்போ இந்த ஸீன் பார்ட்டி கிளாஸ் முடியாம நாம ஹாஸ்டல் போக முடியாதே...”

அன்னலட்சுமியை பார்த்தபடி ராகினி முணுமுணுப்பாய் கூற அதை கவனித்துவிட்ட அன்னலட்சுமி,

“ராகினி, டோன்ட் ஷவுட். க்ளாஸ் கவனிங்க...” என சப்தமிட,

“ஸீனுக்கு வேற வேலை இல்லை...” மீண்டும் முணுமுணுத்து அன்னலட்சுமியின் அனல் பார்வையை வாங்கிக்கொண்டு வாயை மூடினாள் ராகினி.

ஹாஸ்டல் அறைக்குள் நுழைந்த நேத்ராவால் ஒரு நிலையில் இருக்கமுடியவில்லை. தன்னை இந்நிலைக்கு கொண்டுவந்த ரிஷியின் மீது ஆத்திரம் ஆத்திரமாக வந்தது.

ஒரு மனம் அவனை அந்நேரம் எதுவும் செய்யமுடியாத கோபமும், ஆற்றாமையும் சேர்ந்து அவளை அலைகழிக்க, மறு மனம் மறவாமல் அவனின் அருகாமையை ஞாபகத்தில் நிறுத்தி அவளை புரட்டிப்போட்டது.

அதை மறக்க நினைத்தாலும் மீண்டும் மீண்டும் விழிகளுக்குள் வலம் வர நேத்ராவிற்கு அழுகை வரும் போல ஆனது.

வேகமாக அங்கிருந்த தண்ணீர் பாட்டிலை மொத்தமாக தனக்குள் சரித்தவள் முகத்தை கூட துடைக்காமல் வேகமாக சென்று கட்டிலில் விழுந்தாள்.

தன் முகத்திற்கு நெருக்கமாக இருந்த அவனின் முகம் இந்த நொடியும் இம்சிக்க தன் விழிகளை முடிந்தளவிற்கு இறுக்க மூடிக்கொண்டாள்.

“வேண்டாம், வேண்டாம். நினைக்காதே. அதை நினைக்காதே...” என உள்ளம் உந்த அது முடியாமல் போக தன்னிரக்கத்தில் ஆழ்ந்து போக இருந்தவள் சட்டென விழி திறந்து,

“இல்லை நான் இப்படி ஆகிவிட கூடாது. என்னிடமே அவன் சேட்டையை காட்டுகிறானா? நான் நேத்ரா...” என சிலிர்த்துக்கொள்ள மீண்டும் அவன் முகம்.

“அது என்ன அவனின் கண்களில் தெரிந்த ஒருவித பாவனை?...”

அதை தெரிந்துகொள்ள தானாகவே மீண்டும் அவன் முகத்தை விழிகளுக்குள் கொண்டுவர அதன் தாக்கம் ஏதோ சுழலுக்குள் சிக்குவதை போல மூச்சடைத்தது.

சட்டென சுதாரித்து, “அவன் கண்ணுக்குள்ள என்னவும் இருக்கட்டும். இனி எனக்கது தேவையில்லை. யோசிக்காதே நேத்ரா. அவனை பற்றி யோசிக்கவே செய்யாதே...” தனக்குத்தானே கூறிக்கொண்டாள்.

“இவன் செஞ்சது மட்டும் என் அப்பாவுக்கோ அம்மாவுக்கோ தெரிந்தது தம்பி தங்கதுரையை ஆளுக்கொரு பக்கமா பிச்செரிஞ்சிட்டு போய்டுவாங்க...”

அப்படி நினைக்கும் பொழுதுதான் சட்டென ஒரு விஷயம் மூளைக்கு எடுத்துக்கொடுக்க, “இதை எப்படி யோசிக்காமல் விட்டேன்?...”

“அதை பற்றி ஒரு வார்த்தை கூட என்னிடம் சொல்லாமலே கிளம்பிட்டாங்களே?...” தாய் தந்தையரின் மீது கோபம் கோபமாக வந்தது நேத்ராவிற்கு.

தன் அறைக்கதவை அடைத்து தாழிட்டவள் வேகமாக மொபைலை எடுத்து பாகங்களை பொருத்தி உயிர்பிக்க மொபைல் உயிர்த்தெழும் நேரம் வரை பொறுக்கமுடியாமல் அலைபாய்ந்தாள்.

கொஞ்சமும் நிதானமில்லாத தன்னிலையை அறவே வெறுத்தவள் மொபைலையே வெறித்து பார்க்க அது உயிர்பெற்ற மகிழ்ச்சியில் அவளை பார்த்து கண் அழகாய் சிமிட்டியது.

வேகமாக காண்டேக்ட் லிஸ்ட்டில் தான் தேடிய பெயர் கிடைக்க அதை டயல் செய்தவள் அழைப்பு செல்லும் ஓசை கேட்டு மறுபுறம் கேட்கும் குரலுக்காக காத்திருந்தாள்.

“நேத்ரா...”மறுபுறம் கேட்ட அவனின் ஆழ்ந்த குரல் அவளை கட்டிப்போட,

“அனய்...” மேலும் பேசமுடியாமல் தவிப்போடு குரல் தளுதளுத்தது நேத்ராவிற்கு.

------------------------------------------------------​

ரிஷியின் பிடிவாதம் ஏனோ சுமங்கலிக்கு கலக்கத்தையே கொடுத்தது. இந்தளவுக்கு தன் முடிவில் உறுதியாக நிற்பவனை பார்க்க கொஞ்சம் பயமும் தோன்றியது.

பின்னே தன் வீட்டாரிடமும் பெரியவர் துரைச்சாமியிடமும் யார் பேச்சு வாங்குவது?

“ரிஷி நீ அவங்களை எங்க பார்த்த? காலையில கூட நீ இதை பத்தி பேசலையே. இப்போ காலேஜ் டைம். உன் பொறுப்பை மறந்து இப்படி தான் அன் டைம்ல வந்து நிக்கிறதா?...”

கேள்விகளை அடுக்கிய தன் தாயை பார்த்தவன்,

“மாம், ப்ளீஸ் அன்டர்ஸ்டாண்ட் மீ. எனக்கு அவ வேணும். நேத்ரா வேணும். அவ்வளோ தான். நீங்க தான் எப்படியாச்சும் அப்பா தாத்தாக்கிட்ட பேசனும்...”

உணர்ச்சிக்குவியலாக மாறியவன் அதற்கு மேலும் அங்கிருக்கமுடியாமல் தன்னறைக்கு சென்று மறைந்தான். சுமங்கலி தான் அவ்விடம் விட்டு நகரமுடியாமல் அப்படியே அமர்ந்திருந்தார்.

ரிஷியின் இந்த பரிமாணம் இதுவரை அவர் கண்டிராதது. முதலில் அதிர்ச்சி மேலோங்கி பின் ஆச்சர்ய அலையடித்து பின் கொஞ்சம் கொஞ்சமாக கோபமாக உருவெடுத்தது.

“இவன் என்ன நினைச்சுட்டு இருக்கான்?. எல்லாம் இவனா முடிவு எடுக்கிறதா? இவனை...” என நினைத்தபடி வேகமாக எழுந்தவர் மகனை தேடி சென்றார்.

சிவராமன் வந்துவிட்டால் ரிஷியிடம் தெளிவாக பேசமுடியாதே? அதற்குள் அனைத்தையும் கேட்டு தான் தெரிந்து தெளிந்துகொண்டால் கணவரிடமும், மாமனாரிடமும் பேச ஏதுவாக இருக்குமே?

ஆம், சுமங்கலி ரிஷியின் விருப்பத்தை நிறைவேற்ற முடிவெடுத்துவிட்டார். மகனின் சந்தோஷத்திற்கு முன்பு அவருக்கு வேறெதுவும் பெரிதாக தோன்றவில்லை.

ரிஷியின் அறைக்கதவை மெலிதாக இரண்டுமுறை தட்டிவிட்டு உள்ளே வர,

“உங்களுக்கு எத்தனை முறை சொல்லியிருக்கேன். இப்படி பர்மிஷன் கேட்டு வரதை போல கதவை தட்டிட்டு வராதீங்கன்னு. இது ஒண்ணும் அடுத்தவங்க ரூம் கிடையாது மாம். உங்க மகனோடது...” செல்லமாக சுமங்கலியை கடிந்துகொண்டான்.

“யாரோட ரூமா இருந்தாலும் உள்ளே வரப்போ டோர் நாக் பண்ணிட்டு வரதுதான் கட்டர்சி. நான் எப்பவும் அப்படித்தான். இதுல மகனென்ன?. யாரென்ன?...”

ரிஷிக்கு தாய் என்பதை தன் அமர்த்தலான பேச்சில் நிரூபித்தவர் அங்கிருந்த சோபாவில் அமர்ந்து அவனையும் அமருமாறு கை காண்பிக்க,

“இதுக்கொண்ணும் குறைச்சல் இல்லை...” அவரிடம் முணுமுணுத்துக்கொண்டே கழுத்தில் இருந்த டையை தளர்த்தியபடி எதிரே அமர்ந்தான்.

“நீ உன் மாமனாரை எங்க வச்சு பார்த்த?...”தாயின் மாமனார் என்ற விளிப்பில் ஆயிரம் வாட்ஸ் பல்பாக மாறியது ரிஷியின் முகம்.

“மாம் நீங்க நிஜமாவா சொல்றீங்க? ஐ கான்ட் பிலீவ்...” அவனின் சந்தோஷ ஆர்ப்பரிப்பை சன்னமான முறுவலோடு பார்த்திருந்தார்.

“இப்போ சொல்லு. ஏன் இந்த முடிவு...” தனக்கு தெரிந்தே ஆகவேண்டும் என்பதை போன்ற தீர்க்கமான பார்வையோடு பார்த்தார்.

பதில் சொல்ல யோசித்தபடி ரிஷி இருக்க,

“பிடிக்கலைன்னு சொன்ன பொண்ணை திரும்ப எங்களுக்கு பிடிச்சிருக்கு, குடுங்கன்னு எப்படி சொல்றது ரிஷி?. இப்படி நினைச்சு நினைச்சு நேரத்துக்கு ஒரு முடிவை மாத்திக்கிற உன்னை எப்படி அவங்க வீட்ல ஏத்துப்பாங்க?...”

சுமங்கலியின் கேள்விகளில் ரிஷிதான் பதில் சொல்ல தள்ளாடி இருக்கவேண்டும். ஆனால் அவன் கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல்,

“மாம் நேத்ரா தான் அவங்க பொண்ணுன்னு எனக்கு அப்போ தெரியாதே?...”என்க,

“என்ன, நீ பொண்ணை பார்க்காமலே பிடிக்கலைன்னு சொன்னியா?...” கோபமாக சுமங்கலி கேட்க,

“மாம் பொண்ணு வந்தா தானே பார்க்க? அதுவும் இல்லாம நான் அவங்க வீட்டுக்கே போகலை. ஒரு ரெஸ்டாரண்ட்க்கு வர சொல்லித்தான் பார்த்தேன். அப்போ நேத்ரா வரலை...” சலிப்பாக சொல்ல,

“நீயாவது விசாரிக்க வேண்டாமா? என்ன பண்ணி வச்சிருக்க ரிஷி?...” என்றார் தலையில் கை வைக்காத குறையாக.
Nice
 
“என்ன விசாரிக்கனும்? நான் விருப்பமே இல்லாம தானே அங்க போனேன். எனக்கு பிடிக்காத விஷயத்தை பத்தி நான் ஏன் தெரிஞ்சுக்கனும்னு எதுவுமே கேட்டுக்கலை...”

“அவங்க கூடவா எதுவும் சொல்லலை?...” சுமங்கலி கவலையுடன் கேட்க,

“அவங்க நான் போனதும் தாத்தா பத்தி தான் முதல்ல பேசினாங்க. அதுக்கப்பறம் நான் இந்த ப்ரபோஸல் சரிவராதுன்னு சொல்லவும் அவங்க ஒன்னும் சொல்லலை. இட்ஸ் ஓகேன்னு சொல்லி கிளம்பிட்டாங்க...” என்றுவிட்டு,

“மாம் என் மேல எந்த மிஸ்டேக்கும் இல்லை. உங்களுக்கொன்னு தெரியுமா? நான் சென்னை போய்ருந்தப்போ அவங்க வீட்டுக்கு போறதா இருந்த அன்னைக்கு முதல் நாள் நேத்ராக்கிட்ட இருந்து போன் வந்திருந்தது...”

“கால் அட்டன் பண்ணினதும் என்னை பேசவே விடாம எனக்கு கல்யாணத்துல விருப்பம் இல்லை. நாளைக்கு நான் உங்களை பாக்க வரமாட்டேன்னு சொல்லிட்டு வச்சிட்டா...” எனவும் இன்னும் அதிர்ந்த சுமங்கலி,

“அப்போ அவ விருப்பம் இல்லாமலா நீ விரும்பற?...” என,

“ஹைய்யோ மாம், எனக்கு அன்னைக்கு போன் பண்ணினது நேத்ராவே இல்லை. எனக்குதான் அவ வாய்ஸ் தெரியுமே. அப்டி பேசிருந்தா நான் கண்டுபிடிச்சிருப்பேன்ல...” வேகமாக கூற,

“அதை விடு. அவ சொல்லாமலா உனக்கு யாரோ ஒரு பொண்ணு போன் பண்ணிருப்பா? நிச்சயம் அவளுக்கு இந்த மேரேஜ் ப்ரபோஸல்ல விருப்பம் இருக்காது போல...” யோசனை தாங்கிய முகத்தோடு ரிஷியை ஏறிட,

“அவளுக்கு விருப்பம் இல்லைனாலும் என்னோட தான் அவளுக்கு மேரேஜ் நடக்கனும். என்னை எப்படியாச்சும் அவளுக்கு பிடிக்க வச்சிடுவேன் மாம்...” ஒருவித பிடிவாதத்துடன் தவிப்பாய் வந்தது ரிஷியின் குரல்.

“நீ அந்த பொண்ணை எங்க பார்த்த?...” என நேரடியாக கேட்க ரிஷி தங்களுடைய முதல் சந்திப்பை தவிர மற்ற விஷயங்களை ஓரளவிற்கு வடிகட்டி கூற,

“என்ன ரிஷி, பொண்ணு ரொம்ப சுட்டியா இருப்பாளோ? உனக்கு சரிவருமா?...” சுமங்கலியின் கேள்வியில் மீண்டும் கோப ஏணியில் பயணத்தை ஆரம்பித்தவன்,

“திரும்பவும் இதையே சொல்லாதீங்க மாம். சரி வரலைனாலும் எனக்கு அவ தான் வேணும். நான் சரிபண்ணிப்பேன். நீங்க சம்மதிக்கிற வரை வெய்ட் செய்வேன்னு நினைக்காதீங்க...” என்றவனை,

“என்ன செஞ்சிடுவ?...” தாயவரின் குரலில் அவனின் மனதை அறிந்துகொள்ளும் ஆவல் அதிகமாகியது.

“எதுவும் செய்வேன். அவளை தூக்கிட்டு வந்து உங்க எல்லோர் கண்ணு முன்னாடி கூட தாலி கட்டுவேன்...”

அத்தனை தீவிரம் நிரம்பி ஓடியது அவனின் வார்த்தைகளில். சொன்னதை செய்தே தீருவேன் என்னும் உறுதி நிலைகொண்டிருந்தது அவனின் பார்வையில்.

“அந்த பொண்ணுக்கு பிடிக்காட்டிலுமா?...”

“அவளுக்கு நிச்சயம் என்னை பிடிக்கும். பிடிக்க வைப்பேன். அவளுக்கு என் மீதான விருப்பத்தை தெரிஞ்ச பிறகுதான் அவளை நான் என்னில் பாதியாக்குவேன்...”

மகனின் மனதை மொத்தமாய் கொள்ளைகொண்ட அவளை அப்போதே பார்த்தாக வேண்டும் என்னும் உந்துதல் பொங்க,

“எனக்கு பார்க்கனும் போல இருக்கு ரிஷி. நாளைக்கு நான் காலேஜ் வரட்டுமா?...” சுமங்கலி கேட்க,

“ஒன்னும் தேவையில்லை. முதல்ல சம்பந்தம் பேசி தட்டு மாத்திட்டு வாங்க. அதுக்கப்பறம் தான் நான் அவளை காண்பிப்பேன்...”

ரிஷி கறாராக கூறிவிட இவனிடம் சொல்லாமலே பார்த்திருந்திருக்கலாமோ என எண்ணியவரின் எண்ணப்போக்கை கண்டுகொண்ட ரிஷி அவரை பத்திரம் என்பதை போல கண்களை உருட்டி ஒற்றைவிரலில் மிரட்டினான்.

“இவன் ஒருத்தன், ஆவுனா கண்டிஷன் போடறது. வேற வேலையில்லை...” என முணுமுணுத்து ஞாபக அறையில் திடீரென விளக்கொன்று பளிச்சிட,

“என்கிட்டே அன்னைக்கு பொண்ணு காஞ்சிபுரமானு கேட்டியே. இவதானா அவ?...” சந்தேகத்துடன் தான் கேட்டார்.

ஆனால் அவருக்கு இன்னும் தெரிந்திருக்கவில்லை நேத்ரா தான் ரிஷியுடன் திருச்சி கோவில் பிரச்சனையில் சம்பந்தப்பட்ட பெண் என்பது.

தாயின் கேள்வியில் அழகாக அசடுவழிந்தவன், “எஸ் மாம். அப்போவே எனக்குள்ள தோணிச்சு தான். ஆனா நான்தான் கவனிக்காம விட்டுட்டேன்...” என்றுவிட்டு,

“ஆனா பாருங்க நீங்க பொண்ணு பாக்க போன்னு சொல்லும் போது செம காண்டுல தான் போனேன். போன்ல பொண்ணு என்னை வேண்டாம்னு சொல்லிடுங்கன்னு சொல்லும்போது அப்படி ஒரு ரிலீப் எனக்குள்ள...”

“நல்ல வேலை மாமா இன்னைக்கு காலேஜ் வந்திருந்தாங்க. அதனால தான் அவங்க பொண்ணு நேத்ரான்னு எனக்கு தெரிஞ்சது. இல்லைனா மிஸ் பண்ணிருப்பேன்ல...” என்றவன்,

“இல்லையே அதெப்படி மிஸ் ஆகிருக்கும்? அவ மேல எனக்கு லவ் வந்த பின்னால அவ கிருஷ்ணன் மாமாவோட பொண்ணா இல்லாம இருந்தாலும் விட்டுடுவேனா? நோ வே. மாம் அவளுக்கு என்ன வாய் தெரியுமா?...”

கண்களை மூடி ஒருவித லயிப்போடு கூறியவனை அதிசயமாக தான் பார்த்திருந்தார் சுமங்கலி.

“அவ காஞ்சிபுரம்னு சொன்னாம்மா. ஆனா மாமா எப்படி சென்னையில?...” என,

“நாலு வருஷம் முன்ன வரைக்கும் காஞ்சிபுரம் தான். கிருஷ்ணன் அண்ணாக்கு கவர்மென்ட் ஜாப். அவங்க வொய்ப் ஸ்கூல் டீச்சர். அண்ணாவுக்கு சென்னையில ட்ரான்ஸ்பர் கிடைச்சதும் அவங்க பேமிலியோட சென்னைக்கு ஷிப்ட் ஆகிட்டாங்க...”

சுமங்கலி கூறி முடிக்க தலையசைப்புடன் அதை உள்வாங்கிக்கொண்டான்.

“மாம், நான் அவங்களை சென்னைல மீட் பண்ணினப்போவும் காலேஜ்ல மீட் பண்ணினப்போவும் ரொம்ப ரஃப்பா ஹேண்டில் பண்ணிட்டேன். அவங்க என் மேல ரொம்ப கோவமா கூட இருக்கலாம்...”

“என்ன செய்வது?...” என சிறுபிள்ளை கேட்பதை போல தாயின் முகத்தையே பார்த்திருந்தான் ரிஷி.

“ஹ்ம் சமாளிக்கனும். அதையும் நீதான் சமாளிக்கனும்...” தனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்பதை போல.

“மாம். நீங்களே இப்படி சொன்னா எப்படி மாம்?...” சிணுங்கலாக ரிஷி சொல்ல,

“வேண்டாம்னு வீம்பா சொன்னது நீ தானே? வேணும்னா தூக்கிட்டு வந்து தாலிகட்டுவேன்னு ஜம்பமா சொல்ல தெரியுது. உன் தாத்தாக்கிட்ட பேச உனக்கென்ன கஷ்டம்?...” சுமங்கலி சொல்ல கடுப்புடன் பார்த்தவன்,

“தாத்தாக்கிட்டையா?...” ரிஷியின் முகம் போன போக்கை பார்க்கவே சுமங்கலிக்கு சிரிப்பாக இருந்தது.

“ஆமா, அவர்க்கிட்டதான் நீ பேசனும். நீ பொண்ணு பிடிக்கலைன்னு வந்து நின்னப்போ அவரோட முகமே வாடிடுச்சு...”

“கிருஷ்ணன் அண்ணாக்கிட்ட போன்ல பேசினப்போ கூட அந்த அண்ணா உன்னை விட்டுக்குடுக்கலை. இது சரிவரலைனா எங்களுக்கு தான் அதிர்ஷ்டம் இல்லை, நீங்க வருத்தப்படாதீங்க ஐயான்னு பெருந்தன்மையா பேசினாங்க தெரியுமா?...”

அப்போதும் எதையோ எண்ணி சிந்தனைவயப்பட்டிருந்தவனை மெல்ல கிள்ளிவைக்க,

“விடுங்க மாம். முக்கியமா யோசிச்சுட்டு இருக்கேன்...” என,

“சொந்த தாத்தாக்கிட்ட பேச உனக்கென்ன யோசனை? ஆனா காதல்ன்ற வார்த்தையை யூஸ் பண்ணிடாதடா மகனே...” என அறிவுறுத்த,

“ஹைய்யோடா...” என்றானது ரிஷிக்கு.

இதை எப்படி கடக்கப்போகிறோம் என்கின்ற மலைப்பை தாண்டிய ஒரு உற்சாகம் புதுவெள்ளமென ஊற்றெடுக்க,

“எவ்வளவோ பார்த்துட்ட ரிஷி. இதை உன்னால பார்க்கமுடியாதா?...” அசால்ட்டாக கூறிக்கொள்ள,

“அதானே நீ யாரு?...” சுமங்கலியும் கேலியாக கூற ரிஷியின் முகத்தில் அழகான வெட்க புன்னகை பூத்தது.

கொஞ்சமும் வெட்கமின்றி தாயிடம் முகம் சிவந்து வெட்கப்பட்டான்.

யாரும் ரசிக்கும் வண்ணம் அத்தனை ரசனையாக இருந்தது அந்த வெட்கம். மகனை இத்தனை வருடத்தில் இப்படி ஒரு கோலத்தில் கண்டிராத சுமங்கலியின் மனம் பூரிப்பில் நிறைந்துபோனது.

அலை தீண்டும்...
Nice
 
Top