Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உனை தீண்டும் அலையாய் நானே - 21

Advertisement

இரண்டு பேருடைய நினைப்பும்
நடந்து விட்டது
அருமையான பதிவு
 
அலை – 21

நேத்ராவால் இன்னமும் நடப்பதை நம்பமுடியவில்லை. தன் கண்முன்னால் இருப்பவன் கனவல்ல நிஜம் என்று புரியவும் கண்களை கரித்துக்கொண்டு வந்தது.

தன்னவன் தன்னை தேடிவந்துவிட்டான் என்கிற நினைவே அவளை அனைத்தையும் மறக்கச்செய்து சந்தோஷத்தில் பேச்சின்றி திக்கி திணற வைத்தது.

“நீங்க எப்படி இங்கே?...” என கேட்பதற்கே சிரமப்பட்டு போனாள்.

“உன்னால இப்படி எல்லாம் இருக்க முடியுமா? நிமிஷத்துல எவ்வளோ பேசுவ, இப்போ வார்த்தையை தேடிட்டு இருக்க? கல்யாணம்னு வந்தாலே பொண்ணுங்களுக்கு இந்த தயக்கம் வந்து ஒட்டிடுது போலவே?...”

கேலி குரலில் அவளை வம்பிழுக்க தன்னை குனிந்து பார்த்தவளுக்கு வெட்கமும் வந்து ஒட்டிக்கொண்டது.

இன்னும் சில நாழிகைகளில் நிச்சயதார்த்தம் ஆரம்பிக்கவிருக்க மணமகள் கோலத்தில் ஆகாயவண்ண பட்டுபுடவையில் அப்சரஸாய் ஜொலித்தவளை வாரி விழிகளுக்குள் நிரப்பினான் ரிஷி.

அவளை அணைக்கத்துடித்த இரு கைகளையும் தன்னுடைய பேண்ட் பாக்கெட்டினுள் விட்டபடி மிக சாதாரணம் போல பேசியவனை கொஞ்சம் குழப்பமாகவே பார்த்தாள்.

“அவனை வேண்டாம் என விலக்கிவைத்தது நீ தானே? பின்பு எதற்கு அவனின் வருகையில் அகமகிழ்ந்து போகிறாய் பெண்ணே?...” அவளின் உள்மனம் சாடியது.

“இப்போது தான் என்ன செய்யவேண்டும்?...” என்று கூட அவளுக்கு யோசிக்கமுடியாத அளவிற்கு ரிஷியின் வருகை அவளின் மூளையை மழுங்கடித்திருந்தது.

“நான் கேட்டதுக்கு நீங்க இன்னும் பதில் சொல்லலையே?...” மீண்டும் அவனை பேச வைத்தாள்.

“உன் கல்யாணத்துக்கு தான் வந்திருக்கேன் நேத்ரா. நீ தான் ஒரு வார்த்தை கூட சொல்லலை. ஆனா உன் பேரன்ட்ஸ் என்னை இன்வைட் பண்ணிருந்தாங்க. இதுல இன்னொரு விஷயம் நீ எங்களுக்கு ரிலேஷனும் கூட...”

முகத்தில் வெந்நீரை வாரி கொட்டியதை போன்ற உணர்வு. துடித்து விட்டாள்.

“அவ்வளவு தானா? இதற்கு தான் இவன் வந்திருக்கிறானா?தன்னை தேடி வரவில்லையா? நொடியில் தன்னுடைய மனநிலையை மாற்றி என்னவெல்லாம் கற்பனை செய்ய வைத்துவிட்டான்...” அழுகை முட்டியது.

“ஹேய், என்னாச்சு சைலன்ட் ஆகிட்ட? உன்னை பார்த்து விஷ் பண்ணனும்னு சொன்னேன். உன் அப்பா தான் இங்க வந்து விட்டுட்டு போனார். எனிவே ஹாப்பி மேரீட் லைப்...” என்று கைகளை நீட்ட அவனையே வெறித்து பார்த்தாள் நேத்ரா.

அசையாமல் நின்றவளின் கைகளை எடுத்து தானே குலுக்கிக்கொண்டவன் அவளை விடுத்து தள்ளிநின்று பாதாதிகேசம் நோட்டம் விட்டு,

“ஓகே நான் கிளம்பறேன்...” என சொல்லி மீண்டும் அவளருகில் வந்தான்.

“தக்காளி இந்த சேரில நீ ரொம்ப அழகா இருக்க...”

அதே வசியக்குரல், மயக்கும் புன்னகை, கவர்ந்திழுக்கும் பார்வை என ஆண்மையின் மொத்த உருவமாய் அவன் அவளின் கண்களுக்கு மட்டும் உணர்வுகளை கொல்லும் ராட்சஷனாய்.

“ஆனா போற இடத்துல மாப்பிள்ளைக்கு பிடிச்ச மாதிரி இரு. அதிகமா வாய் பேசாதே...” என வாய்க்குள் சிரிப்பை மென்று விழுங்கி அட்வைஸ் மழையை தூற ஆரம்பிக்க அதில் கொதித்துப்போனவள்,

“மிஸ்டர் ஹானரபிள் கட்டுமரம், உங்க அட்வைஸ்க்கு ரொம்ப தேங்க்ஸ். நீங்க கிளம்பலாம்...” பல்லிடுக்கில் வார்த்தைகளை கடித்து துப்பினாள்.

“நேத்ரா...”

“கெட் லாஸ்ட்...” அழுத்தமான குரலில் நேத்ரா கத்த,

“வாட்...” என்றபடி அவளருகில் நெருங்க அதற்கு மேலும் பொறுக்கமுடியாமல்,

“யோவ் வெளில போயா...” என அவனை பிடித்து தள்ளி கதவை அடைத்துக்கொண்டாள்.

உடல் மொத்தமும் பற்றிக்கொண்டு வந்தது. ஒரு நிமிஷம் என்னவெல்லா நினைச்சுட்டேன். தன்னை எண்ணியே குமைந்தாள்.

“தனக்குள்ளும் அவன் தன்னை அழைத்துசெல்லமாட்டானா என்கிற ஒரு ஆசை அமிழ்ந்து இருந்ததோ? அதனால் தான் அவன் வந்ததும் அப்படியே சந்தோஷப்பட்டு போய்ட்டேன் போல. என்னை சொல்லனும்...” தன்னையே நிந்தித்துகொண்டாள்.

அவன் மீதான நேசம் நீருபூத்த நெருப்பாய் இதயத்தில் கனன்றுகொண்டிருக்க அவன் நினைவுகளை இன்னும் உள் அமிழ்த்தினாள்.

“டாமிட். யாருக்கு வேண்டும் இவன் வாழ்த்து?. இவன் வந்திருக்கவே வேண்டாம்...” கோவம் ஆத்திரம் ஆவேசம் இவை மட்டுமே மனதில் பிரதானமாய்.

அனைத்தையும் தாண்டிய ஏமாற்றத்தினால் சோர்ந்துபோய் அமர்ந்தவளுக்கு சுற்றம் மறைந்து மூளை மரத்து போனது. அரைமணி நேர இடைவெளியில் இவளை மேடைக்கு அழைத்துசெல்லவென மாப்பிள்ளையின் உறவுமுறைகள் வந்து நிற்க இயந்திரமாய் அவர்களுக்கு உடன்பட்டாள்.

தன்னுடைய தோழிகள் கூட அருகில் இல்லை என்ற உண்மையை உணரமுடியாமல் அனைவரின் பேச்சுக்கும் கட்டுப்பட்டு பொம்மையென நடந்தாள்.

நிச்சயம் முடிந்து பெரியசாமியின் உறவுகள் என்று தன்னை சூழ்ந்து அறிமுகப்படலம் நடத்தியபோதும் அனைவருக்கும் இழுத்துப்பிடித்த புன்னகையோடு கைகூப்பிக்கொண்டவளின் பார்வைக்கு எவரின் பிம்பமும் பதியவே இல்லை. தன்னந்தனியாய் ஒரு உலகத்தில் சஞ்சரித்தாள்.

மீண்டும் அறைக்குள் வந்து ஒப்பனைகளை கலைத்து படுக்கையில் விழும் வரை எதுவுமே உரைக்கவில்லை.

“ரிஷியை பற்றி யோசியாதே யோசியாதே...” என தனக்கு தானே சொல்லிக்கொண்டே களைப்பிலும் மனஅழுத்தத்திலும் உறங்கியும் போனாள்.

ரிஷிக்குமே நேத்ராவை வருத்துவதில் பிடித்தமில்லை தான். ஆனாலும் அவனுக்கு நேத்ராவின் மனதை அவளின் வாய்வார்த்தையாக தெரியவேண்டும் என இருந்தது.

தன்னை ஆவேசத்துடன் நேத்ரா வெளியில் அனுப்பியதிலேயே தெரிந்தது அவனின் மேல் அவளுக்கு இருக்கும் நேசத்தின் அளவு.

பெரியசாமியாக இல்லாமல் ரிஷியாகவே அவளின் மனதில் நிறைந்திருக்க விரும்பினான். நிழலை விரும்பாமல் நிஜத்தை நாடும் அவளின் மனம் உணர்ந்தவன் எப்போதடா விடியும் என நேத்ராவிற்கு மாறாக உறக்கம் வராமல் புரண்டுகொண்டிருந்தான்.

விடிந்து அந்த மண்டபமே ஆராவாரத்தில் திளைத்திருக்க தட்டு நிறைய பழங்களுடன் வேகமாக ரிஷியின் அறையை நோக்கி வந்துகொண்டிருந்தாள் காவேரி.

சரியாக அதே நேரம் கதவை திறந்த ரிஷி அவளின் கையிலிருந்த தட்டை பிடுங்கிக்கொண்டு,

“உன்னை யாரு இதையெல்லாம் செய்ய சொன்னா? அதுவும் இவ்வளோ வெய்ட்டை தூக்கிட்டு வேகமா வேற நடந்து வர? குழந்தைக்கு எதாவதுனா என்ன பண்ண?எங்க போனான் அந்த மாங்கா மனோஜ்?...” என கத்தினான் ரிஷி.

“மாமா அவங்க வெளில நிக்கிறாங்க. வரிசை தட்டுல வைக்க பழம் இன்னும் வேணும்னு திலகாத்தை கேட்ருந்தாங்க போல. அதான் அன்பு மாமா வாங்கிட்டு வந்திருந்தாங்க. குடுக்கத்தான் நான் கொண்டுவந்தேன்...”

பாவம் போல சொல்லியவள் தலையில் கொட்டியவன்,

“இதுக்கொண்ணும் குறைச்சல் இல்லை. வரட்டும் உன் புருஷன் அவனுக்கும் இருக்கு...” என சொல்லி அறைக்குள் அவளை அமரவைத்தான்.

உள்ளே ஏற்கனவே இருந்த சுமங்கலி பாத்ரூமிலிருந்து வெளியில் வந்தவர்,

“இங்க என்ன பன்ற காவேரி?. உன்னை ஹால்ல தானே உட்கார சொன்னேன்?...”

அவளை நெருங்கி அவளின் முகத்தில் வியர்த்திருந்த வியர்வையை கைக்குட்டையால் துடைத்தபடி கேட்க,

“ஹ்ம், பழம் வேணும்னு கேட்டதால இதை எடுத்துட்டு வந்திருக்கா. விட்டா இருக்கிற மொத்த வெய்ட்டையும் தூக்கிட்டு வந்துடுவா இந்த லூஸு. எப்பவும் எதிலையும் கேர்லஸ்...”

“சும்மா எதுக்குடா அவளை திட்டிட்டே இருக்க? விடேன்...” என்றவர் அங்கிருந்த பாட்டிலை எடுத்து,

“இந்தா இளநீர். இதை குடி. இன்னும் முஹூர்த்தமே ஆரம்பிக்கலை. ரொம்ப டயர்டா வேற தெரியற. நம்ம வீட்டாளுங்க சாப்பிட நேராகும். நீயாவது கொஞ்சம் சாப்பிடேன் காவேரி. புள்ளத்தாச்சிக்கெல்லாம் இந்த சம்பிரதாயம் இல்லைமா. ரெண்டே ரெண்டு இட்லி வச்சிட்டு வரட்டா?...”

மொத்த பாசத்தையும் தேக்கி கூறியவரை இடுப்போடு சேர்த்து அணைத்துக்கொண்டாள் காவேரி.

“ஸாரி அத்தை. நான் உங்களை எவ்வளோ ஹர்ட் பண்ணியிருக்கேன். ஆனாலும் நீங்களும் மாமாவும் என்னை எப்படி கேர் பண்ணிக்கறீங்க? மாமா சொல்றது போல நான் லூஸு தான் அத்தை...”

“இன்னும் எத்தனை முறை எத்தனை நாள் இதே போல ஸாரி கேட்டுட்டே இருப்ப நீ? அதையெல்லாம் மறந்துடுமா. நீ என் பொண்ணுடா. இந்த மாதிரி நேரத்துல அழலாமா?...” என அவளின் கண்ணீரை துடைக்க ரிஷியை பார்த்தாள் காவேரி.

“ஸாரி லூஸு. என்கிட்டே ஸாரி ஸ்டாக் இல்லை....” என தோளை குலுக்க கதவை திறந்துகொண்டு உள்ளே வந்தார் துரைச்சாமி.

வந்தவர் ரிஷியை பார்த்து, “நினைச்சதை சாதிச்சுட்ட பேராண்டி...” மீசையை முறுக்கினார்.

“சாதிக்கலைனா நான் உங்க பேரனே கிடையாதே...” என சிரிப்பு மாறாமல் கூற அவனை அணைத்துக்கொண்டார்.

தன் ஊரை விட்டு வரவே மாட்டேன் என்னும் நாயகியம்மாவின் பிடிவாதத்தை ரிஷியின் பிடிவாதம் அசைத்துப்பார்த்தது.

நீங்கள் இல்லாமல் எனக்கு திருமணமே இல்லை என்று முடிவாக கூறிவிட அவனின் பேச்சுக்கு மசிந்து சென்னையை அடைந்த நாயகியம்மாவை அலேக்காக தூக்கிகொண்டு பெரிய ஹாஸ்பிட்டலில் சேர்த்தவன் அவருக்கு தேவையான அனைத்து சிகிச்சை முறைகளையும் செயல்படுத்த கூறினான்.

அவரை பரிசோதித்த டாக்டர் தங்களால் முடிந்தளவிற்கு அவரை குணமாக்குவதாக கூறி அவனுள் நம்பிக்கை விதையை விதைக்க அப்போதுதான் ரிஷியால் நிம்மதியாக இருக்க முடிந்தது.

அத்தனை வருடங்களாக அழுத்தி வந்த மனபாரம் சற்று இறங்கியதை போல உணர்ந்தான்.

அவனை அழைத்துக்கொண்டு செல்ல அனய் வர அவனோடு அனைவரும் மேடையை நோக்கி சென்றனர்.

ரிஷியின் இதயமோ நொடிக்கொருதரம் வானத்திற்கும் பூமிக்குமாக எகிறி குதித்தது.

அவள் வந்ததும் தன் முகம் பார்த்து விழி விரித்து பார்க்கும் அந்த நொடிக்காக காத்திருக்க ஆரம்பித்தான்.

நேத்ராவிற்கு ஒரு நிலையில்லாமல் அல்லாடியது மனது. விடியும் வரை கூட இந்த அலைப்புறுதல் இல்லை.

“என்னை வேண்டாமென்றால் எனக்கும் அவன் வேண்டாம்...” ரிஷியின் மீதான காதலை பின்னுக்கு தள்ளி கோபம் முன்னெழுந்து அப்படி எண்ணவைத்தது.

அலங்காரம் முடிந்து மணமேடை செல்லும் வரை இதே குழப்பம் நீண்டிருக்க மேளவாத்தியங்கள் முழக்கத்தில் அறிவும் மனமும் நன்றாகவே விழித்துக்கொண்டது.

மேடையை நெருங்க முடியாமல் கால்கள் பிண்ணிக்கொள்ள நடக்கவே தள்ளாடினாள். பாதத்தை அழுந்த தரையில் ஊன்றினாள். நெஞ்சமோ பந்தையக்குதிரையின் வேகத்தையே விஞ்சி பறந்தது. மாப்பிள்ளையின் அருகில் அமர்த்தப்பட்டாள் நேத்ரா.

“ஹைய்யோ இன்னும் கொஞ்ச நேரத்துல பெருசு தாலியை கட்டிடுவானே? அதுக்கப்பறம் அதுக்கப்பறம்...” யோசிக்கவே அவளுக்கு பிடித்தமில்லை.

“இந்த மேரேஜ் நடந்தா பெருசு, அவங்க பேமிலி. அரேஞ்ச்ட் லைப். நின்னுட்டா லவ், கட்டுமரம். நான் விரும்பின லைப். என்ன செய்ய? என்ன செய்ய? நேத்ரா நேரம் கடத்தாம யோசி. இப்போவாச்சும் யோசி...”

தன்னையே விரட்டிக்கொண்டிருந்தாள்.

“என்னதான் பெத்தவங்க விருப்பத்துக்காக கல்யாணம் பண்ணினாலும் அதுல நிச்சயம் ஒரு கடமைதான் முன்ன இருக்குமே தவிர காதல் வரது கஷ்டம். அதுவும் அம்பி மாதிரி பெருசு. அம்மாடியோ. வேண்டவே வேண்டாம்...”

பெரியசாமியை கணவனாக நினைக்கவே மறுத்தது மனம்.

“ப்ரெண்ட் ப்ரெண்ட் தான். ஹஸ்பன்ட் ஹஸ்பன்ட் தான். லவ் லவ் தான்...” முடிவெடுத்தேவிட்டாள்.

எவரையும் பார்க்கவில்லை. யாரையும் நிமிர்ந்து நோக்கவில்லை. யார் யார் இருக்கிறார்கள் என்றும் நினைக்கவில்லை. யாரையாவது பார்த்து மனம் மாறிவிட்டால். ம்ஹூம் பார்த்தாலும் மாறாது.

எந்த சூழ்நிலையிலும் எதற்காகவும் தன் காதலை விட்டுத்தர இயலாத ஸ்திரமான முடிவு அவளுடையது. அது ரிஷிக்காகவே ஆனாலும்.

அவனின் பக்கம் மெல்ல சரிந்து குரலை மட்டும் அனுப்பினாள்.

“மிஸ்டர் பெருசு. ஒரு சின்ன ஹெல்ப்...” என கிசுகிசுப்பான குரலில் கேட்க,

“ஆஹா இவ நம்மளை உசுப்பேத்துறாளே? இவ்வளோ அழகா பக்கத்துல உக்கார்ந்துட்டு இத்தனை பேருக்கு முன்னால உரசிட்டே பேசறா...”

அவனுக்குமே வேறு யாரையும் பார்க்கும் எண்ணமில்லை. நேத்ரா வந்ததிலிருந்து அவளைத்தான் பார்த்தபடி இருந்தான்.

“சொல்லு...” கைகள் ஐயர் சொன்னதை செய்துகொண்டிருக்க.

“பெருசு நீங்க எழுந்து இந்த கல்யாணத்துல இஷ்டமில்லைன்னு சொல்லிடுங்க. என்னை பிடிக்கலைன்னு எழுந்து போய்டுங்க...” மிகஇலகுவாக சொல்லிவிட்டாள்.

அதிர்ந்தே போனான். அவனை பெருசு என்று அழைப்பதிலிருந்தே இன்னமும் தன்னை அவள் கண்டுகொள்ளவில்லை என்பதை புரிந்துகொண்டான்.

“நேத்ரா ப்ளீஸ் என்னாச்சு உனக்கு? என்னை பாரு...”

“அன்னைக்கு சொன்னதைத்தான் இன்னைக்கும் சொல்வேன். என்னைக்கும் சொல்வேன். எனக்கு உங்களை பார்க்க தோணலை. எழுந்து போய்டுங்க. உங்க நல்லதுக்குத்தான் சொல்லுவேன்...”

டென்ஷனோடு சிரிப்பு வந்தது ரிஷிக்கு. கொஞ்சம் விளையாடித்தான் பார்ப்போமே என்று நினைத்தவன்,

“நேத்ரா உனக்கு ஒரு நல்ல ஹஸ்பண்டா நான் இருப்பேன்...”

“எனக்கு நீங்க வேண்டாம்...”

“உன் மனசு எனக்கு புரியுது. நீ விரும்பறவரை விட உன்னை விரும்பறவரை...”

“ஜஸ்ட் ஸ்டாப்பிட். இந்த பிலாசபி எனக்கு வேண்டாம். நான் விரும்பறவரை கட்டிக்கிட்டா தான் எனக்கு சந்தோஷம்...”

“அவர் தான் உன்னை விரும்பறதாவே சொல்லலையே...” கடுப்பாவிட்டாள் நேத்ரா.

“யோவ் அவனுக்கென்ன என்னை பிடிக்கிறது. எனக்கு கட்டுமரத்தை பிடிக்குது. காதல், கல்யாணம்னா அது கட்டுமரத்தோடதான். காலரை பிடிச்சு இழுத்துட்டு வந்திடமாட்டேன்...”

இருவரின் சம்பாஷணையை கவனித்தாரோ இல்லையோ ஐயர் இடையிட்டு,

“இன்னும் செத்த நாழில கல்யாணம் முடிஞ்சிடும். கொஞ்சம் மந்திரத்தை சரியா சொல்லுங்கோ. அப்போதான் உங்க தாம்பத்திய வாழ்க்கைல ஷேமமா இருப்பேள்...” என்று சொல்ல அவரை கொலைவெறியோடு பார்த்தவள்,

“யூ ஷட்டப் அய்யரே. இல்லை கொலைவிழும். பேசாம வாயை மூட்டிட்டு மந்திரத்தை சொல்லுங்கோ. இங்க என்னை இடையில பஞ்சாயத்து...” என அவரிடம் பாய ஐயர் கப் சிப். ரிஷியை வேறு பரிதாபமாய் பார்த்துவைத்தார்.

“நேத்ரா எல்லோரும் நம்மளைத்தான் பார்த்துட்டு இருப்பாங்க. கொஞ்சம் அமைதியா இரு...”

“யோவ் நான் சொல்லிட்டே இருக்கேன். திரும்ப திரும்ப அதையே பேசற. பேசாம எழுந்து ஓடிடு. எனக்கு பைத்தியம்னு கூட சொல்லிக்கோ. ஆனா எனக்கு நீ வேண்டாம்னா வேண்டாம் தான்...”

“இதென்ன பிடிவாதமான பிடிவாதம் நேத்ரா. என்னை கொஞ்சம் பாரேன்...”

“மாட்டேன் மாட்டேன். இப்போ நீ எழுந்து ஓடறையா இல்லை நான் எழுந்து ஓடவா? நா ஓடி நீ பாத்ததில்லையில. சும்மா காத்தே பிச்சுக்கும். அந்தளவுக்கு வேகமா ஓடுவேனாக்கும்...”

அந்த நிலையிலும் பெருமை பீற்றும் பெண்ணவளை பார்த்து வாய்விட்டு சிரிக்கமுடியாமல் அடக்கி வாசித்தான்.

“என்னனு தான் தக்காளியை சமாளிக்க போறேனோ?...” கொஞ்சம் கிலியாகவும் தான் இருந்தது ரிஷிக்கு.

இவர்களின் வாக்குவாதம் இப்படியாக யாரின் காதிலும் விழாமல் இருக்க அதற்குள் திருமாங்கல்யம் அனைவரின் ஆசிர்வாதத்தையும் தாங்கியபடி ரிஷியின் கைகளுக்கு வந்தது.

“நீ கேட்க மாட்ட...” என்றபடி எழப்போனவளை இழுத்து அமர்த்தியவன்,

“தக்காளி அடங்குடி. முடியலை என்னால...” காதை வார்த்தைகளோடு உரசிய உதடுகளின் ஸ்பரிசத்தில் சில்லிட்டு போனவள் இன்பமாய் திரும்பி பார்த்தாள்.

“மாங்கல்யதானம் பண்ணுங்கோ. கெட்டிமேளம் கெட்டிமேளம்...” என்று ஐயர் கூற,

“இப்போ சொல்லு தாலி கட்டிட்டு ஓடிப்போவோமா? இல்லை ஓடிப்போய் தாலிக்கட்டிப்போமா?...” கண் சிமிட்டி கேட்க வார்த்தைகளின்றிய மௌனம் நேத்ராவை ஆக்கிரமித்து சந்தோஷம் அலையென வந்து அள்ளிசென்றது பெண்ணவளை.

அவளின் கண்களை பார்த்துக்கொண்டே மங்கலநாணை பூட்டி தன்னுடைய சரிபாதியென ஆக்கிகொண்டான்.

உணர்ச்சிகளின் மொத்தகுவியலாக பனியாய் உறைந்திருந்தவளின் நெற்றி வகிட்டில் குங்குமத்தை வைத்தவன்,

“கொஞ்சம் சிரியேன். இப்படி ஒரு ரியாக்ஷன் குடுக்காத தக்காளி. லைப் லாங் வச்சு பார்க்க வேண்டிய போட்டோஸ், வீடியோஸ்...” என கேலிக்குரலில் அவளை அசைத்துப்பார்க்க அவனை விட்டு தன் பார்வையை அகற்றிக்கொண்டாள்.

அவன் புறம் திரும்பவே இல்லை. மனம் முழுவதும் மகிழ்ச்சி ஆர்ப்பரிக்க அதன் ஆராவாரமும் சந்தோஷ ஆவேசமும் தாங்கமுடியாமல் சடங்குகள் மொத்தமும் முடிய காத்திருந்தாள்.

ஒருவழியாக அனைத்து சாங்கியங்களும் நிறைவடைய விருந்தினர் அனைவரும் உணவறைக்கு செல்ல அப்போதுதான் நிமிர்ந்து பார்த்தாள் தன் தோழிகளை.

ரோஷிணியை கண்டதும் கண்களின் நீர் நிறைந்தது. கூடாது என்பதை போல அவள் தலையசைக்க ஆமோதித்து இவளும் ஏற்றுக்கொண்டாள்.

சொந்தபந்தங்கள் அனைவரின் கால்களில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கவே அடுத்த ஒருமணி நேரம் கழிய தாயை அழைத்தவள் ரெஸ்ட் ரூம் செல்லவேண்டும் என கூறவும் அவளறைக்கு அனுப்பிவைத்தார் ஆண்டாள்.

தோழிகளோடு உள்ளே சென்றதும் கதவடைத்துக்கொண்டு கதறி அழ ஆரம்பித்தாள் நேத்ரா.

வனமலரும், ராகினியும் புரியாமல் அதிர்ந்து பார்க்க ரோஷிணிக்கு மட்டுமே தெரியும் நேத்ராவின் இந்த அழுகைக்கான காரணம்.

“என்னடி இது கரெஸ் தான் மாப்பிள்ளைன்றது ஷாக்னா இவ இப்படி அழறது பெரிய ஷாக்கா இருக்கே? ஒருவேளை அவர் இவளை மிரட்டியிருப்பாறோ?...”

“மலர் போதும் உன்னோட இமாஜினேஷன். போய் சாரை கூட்டிட்டு வா...” ரோஷிணி சொல்ல வனமலரும் சென்றாள்.

ரிஷி அறைக்குள் நுழைந்ததும் மற்ற மூவருமே அங்கிருந்து கிளம்பிவிட்டனர். இவனின் வருகை அறியாத நேத்ரா இன்னும் அழுகையை நிறுத்தியபாடில்லை.

அவளை நெருங்கி சமாதானம் செய்யவும் இல்லை. அழுகையை நிறுத்த முயற்சிக்கவும் இல்லை. ஓரமாக சென்று கட்டிலில் அமர்ந்தவன் அவளையே பார்த்தபடி இருந்தான்.

அழுகை கடந்து விசும்பலில் நிற்க எழுந்து பாத்ரூம் சென்றவள் முகத்தை கழுவி வரும் பொழுதுதான் அங்கிருந்தவனை பார்த்தாள்.

டவல் ஒன்றை எடுத்து கொடுத்தவன், “ முகத்தை துடைச்சிட்டு டச்சப் செஞ்சிட்டு வா. எல்லோரும் வெளில இருக்காங்க...” என்று நகர,

“நான் வரமாட்டேன்...” மீண்டும் பிடிவாதத்தை பிடித்தாள் நேத்ரா.

எப்படியெல்லாம் தன்னை அலைகழித்தான்? எத்தனை நாள் தூக்கமிழக்க செய்தான்? எத்தனை நடிப்பு? என்ன ஒரு வேஷம்? இன்றைக்கு உண்டு இல்லை என செய்யாமல் விடப்போவதில்லை என நினைத்தாள்.

“சரி, நான் போய் ப்யூடீஷியனை வர சொல்றேன்...” கதவை திறக்க போக அதை அடைத்து அதன் மீது சாய்ந்து நின்றாள் அவனை முறைத்தபடி. பதறித்தான் போனான் இதில்.

“ஹேய்,..... நாம வந்து எவ்வளோ நேரம் ஆகிடுச்சு. வெளில எல்லோரும் என்ன நினைப்பாங்க? உன் சண்டை கோபம் அடிதடி எல்லாத்தையும் வீட்ல போய் வச்சுக்கலாம். வழிவிடு நேத்ரா...” கிட்டத்தட்ட கெஞ்சவே செய்தான்.

அதற்கெல்லாம் மசியவே இல்லை. முகத்தில் வேறு எந்த வேறுபாடும் இல்லை. அவனை முறைத்துக்கொண்டே இருந்தாள்.

“ஒன்றரை வருஷம். எத்தனை கனவு? எவ்வளவு ஏமாற்றம்? எதிர்பார்ப்பு. அனைத்தையும் பொசுக்கிவிட்டு செய்த செயலுக்கு சிறு மன்னிப்பு இல்லை. இவன் சொல்லி தான் கேட்பதா?...” மீண்டும் பிடிவாத்தில் நேத்ரா.

அவள் சொல்பேச்சு கேட்கமாட்டாள் என்பதை அறிந்த ரிஷிக்கு என்ன செய்வதனே புரியவில்லை. நேத்ராவை தன் மனைவியாக ஆக்கிக்கொண்ட நிமிடத்திலிருந்து அவளிடம் தறிகெட்டு பாயும் தன் எண்ணங்களை, உணர்வுகளை அடக்கமுடியாமல் விலகி இருந்தவனால் அதற்கு மேலும் முடியும் என்று தோன்றவில்லை.

இடதுகையால் தலையை அழுந்த கோதியவன் அவள் அசந்த நேரத்தில் ஒரு கையால் இழுத்து அணைத்தான்.

“நேத்துல இருந்தே என்னோட கண்ட்ரோல்ல நான் இல்லைடி தக்காளி. அதை உன்னால புரிஞ்சுக்க முடியாம உன் பிடிவாதத்தை கட்டிக்கிட்டா அழற? இப்போ அனுபவி...” திமிறியவளை தன் அணைப்பிற்குள் முழுவதுமாக கொண்டுவந்தவன் அவளின் இதழ்களை தன் விரல் கொண்டு மென்மையாக வருடினான்.

“விடுடா நான் போறேன். என்னை விடு. இத்தனை நாளா என்னை படுத்திட்டு இன்னைக்கு வந்து என்னவாம் இப்படி?...”

ரிஷியை இவ்வளவு நெருக்கத்தில் பார்த்ததும் பெண்ணவள் மனம் தடதடத்தது. நடக்கவிருக்கும் நிகழ்வை நினைத்து அச்சம் கொண்டவள் அவனை தடுத்துவிட முயன்ற அனைத்து பிரயத்தனங்களையும் இலகுவாக முறியடித்தான் ரிஷி.

“உன்னை மிஸ் பண்ணிடகூடாதுன்னு இவ்வளோ பார்த்த நான் இப்போ மிஸ் பண்ணிடுவேனா?...” காதல் ரசம் சொட்ட அவளிடம் இழைந்து கொண்டு பேசியவனை விழிவிரித்து பார்த்தாள்.

“லவ் யூ தக்காளி. யூ ஆர் மை லைஃப். யூ ஒன்லி மை லவ் தக்காளி...”

தன் போக்கில் அவன் பிதற்ற அவனின் வார்த்தைகளில் தெறித்த தேன்மழை சாரலில் காதல் கொண்ட மனம் மயங்கித்தான் போனது. அலையென அள்ளிச்சென்ற அவனின் காதல் பிரவாகத்தில் சுகமாய் நனைந்தாள்.

சத்தமில்லாமல் முத்த யுத்தமொன்று அங்கே அமைதியாய் அரங்கேற நொடிகள் நிமிடங்களாகி மணித்துளிகள் கரைந்துகொண்டிருந்தன.

அவனின் காதலில் கரைந்துகொண்டிருந்த நேத்ரா கதவை தட்டும் ஓசையில் முதலில் திகைத்து அவனிடமிருந்து விலக அவனோ விடாப்பிடியாய் இன்னுமின்னும் அவளுள் மூழ்க மொத்தமாய் பலம் திரட்டி தள்ளினாள்.

“ரிஷி உன்னை தாத்தா கூப்பிடறாங்க. சீக்கிரம் வா...” என்று சொல்லி சென்றது ஒரு குரல். அவனின் அன்னையின் குரல்.

வெட்கத்தில் முகம் சிவக்க கதவை திறக்க போனவளை இழுத்து நிறுத்தியவன் ரசனையான பார்வையை அவள் மீது படர விட்டுக்கொண்டே,

“நான் முதல்ல போறேன். நீ கொஞ்சம் உன்னை சரிபண்ணிட்டு வெளில வா. பார்லர் பொண்ணை அனுப்பிவைக்கிறேன்...”

சொல்லியவன் மீண்டும் ஒரு இதழ் தீண்டலை நடத்திவிலக அவனை முடிந்தமட்டும் முறைத்தாள் அவள்.

“உன்கிட்ட ஷேர் பண்ணிக்கறதுக்கு எனக்குள்ள ஆயிரம் விஷயங்கள் இருக்கு நேத்ரா. உனக்கே உனக்கான உன்னிடம் பகிரப்படாத என்னுடைய காதலும் உணர்வுகளும் உன்னோட வருகைக்காக காத்திட்டு இருக்கு...” அவளின் கன்னம் தாங்கி ஹஸ்கி வாய்ஸில் கிசுகிசுத்து,

“ப்ளீஸ்டா தக்காளி. நீ முறுக்கிட்டு இருக்கிறதுக்கோ நான் எக்ஸ்ப்ளைன் பன்றதுக்கோ இது நேரமில்லை. நமக்குன்னு அதுக்கு டைம் கிடைக்கும் போது என்னை வச்சு செஞ்சுக்கோ நீ. நான் கோச்சுக்கமாட்டேன்ப்பா...”

குறுஞ்சிரிப்போடு கூற அவனை மீண்டுமாய் முறைக்க முயன்று முடியாமல் பார்வையை வேறுபுறம் திருப்பினாள்.

அவளின் அவஸ்தையில் புன்னகை பெரிதாக வாய்விட்டே நகைத்தவனின் முதுகில் கை வைத்து,

“போயா வெளில போ...” என்று வெளியில் தள்ளினாள்.

“இப்படி தள்ளுற? நான்லாம் என் ரூம்ல இருந்து உன்னை வெளில தள்ளவே மாட்டேன். ஐ ஆம் வெய்ட்டிங் பேபி. சீக்கிரம் வந்திடு...” என சொல்லி செல்ல குங்குமம் பூத்தது இவள் வதனத்தில்.

வெட்கத்தையும் தாண்டிய கோபம்.

“முத்தம் குடுத்தா மொத்தமா எல்லாத்தையும் மறந்துடுவேன்னு நினைப்போ கட்டுமரத்துக்கு?. நெவர். நான் நேத்ரா. என்கிட்டையேவா உன் திருகுதாளத்தை காட்டற?...” சிலிர்த்துகொண்டவள் கண்ணாடியில் தன் பிம்பம் காண தன் இதழ்களில் அவன் நடத்திய ஊர்வலம் வலம் வர,

“அசந்த நேரத்துல என்ன பண்ணிட்டு போய்ட்டான். ரொமான்ஸா பன்ற ரொமான்ஸ். கட்டுமரம் இன்னைக்கு நீ காலி....”

தன் இத்தனை நாள் தூக்கத்தின் பாதி வாழ்நாளை சத்தமின்றி கொள்ளையடித்த கள்வனை கலங்கடிக்க காத்திருந்தாள் பாவையவள்.

கலங்கடிக்க அவளும். களவாட அவனும்.

காதலில் களவாடலும் களவு போவதும் சுகம் தானோ!!!



அலை தீண்டும்...
நேத்ரா அவனை வெச்சு செய் விட்டுடாத
 
Top