Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உன்னை நினைத்தேன் முப்பொழுதும் அத்தியாயம்-1

Advertisement

TNWContestWriter045

New member
Member
உன்னை நினைத்தேன் முப்பொழுதும் அத்தியாயம் -1



மாநிலத்தின் தலைநகரமான அடுக்குமாடி கட்டிடத்தில் உள்ளே பெரிய வளாகத்தில் அந்த நிறுவனத்தின் தலைமையகம் செயல்பட்டு வருகிறது.


அங்கே நிறுவனத்தின் ஊழியர்களுடன் சந்திப்பு நிகழ்ச்சி மேலாளருடன் நடைப்பெற்றுக் கொண்டிருந்தது.தனது நிறுவனத்தை இன்னும் ஒருபடி மேலே அதாவது மக்களிடம்

இன்னும் அதிகமாக கொண்டு செல்வதற்கான ஆலோசனைக் கூட்டம் நடந்துக் கொண்டிருந்தது.



நிறுவனத்தின் மேலாளர் இளம்பரிதி சுற்றி இருப்பவர்கள் அனைவரையும் பார்வையாலே ஒரு நோட்டம் விட்டப்படி… ஆட்காட்டி விரலை நாடியில் வைத்து தீவிர யோசனையில் மூழ்கி இருந்தான்.



அப்பொழுது அந்த நிறுவனத்தில் புதியதாக சேர்ந்திருந்த பணியாளர் ஒருவர் "சார் என்கிட்ட ஒரு ஐடியா இருக்கு அதன்படி செய்தால் நாம மக்கள்கிட்ட ஈஸியா கம்பெனியை ரீச் செய்யலாம்" என்றார்.



அதைக் கேட்ட இளம்பரிதி தன் யோசனையை சற்று தள்ளி விட்டு "ம்ம்… சொல்லுங்க நல்ல யோசனையாக இருந்தால் பார்க்கலாம்" என்றான்.



இளம்பரிதியின் பதிலைக் கேட்டதும் அந்த ஊழியர் மகிழ்ச்சியில் "சார் ஒரு ப்ராங் ஷோ மாதிரி எதாவது ஏற்பாடு செய்யலாம்" என்றதும் அதுவரை ஆழ்ந்த யோசனையோடு இருந்தவனின் முகமோ சட்டென்று புன்னகையை சூட்டிக் கொண்டது.



அன்று நடந்த நிகழ்வு அவன் மனதிலே மறுபடியும் தன்னாலே எண்ணிப் பார்க்கத் துவங்கியது.


*****


நகரத்தின் பிரபலமான வணிக வளாகத்தில் மக்களின் நடமாட்டம் வாரத்தின் கடைசி நாளென்பதால் அன்று கூட்டம் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது.



அந்த இடமே பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.வணிக வளாகத்தில் மூன்றாவது மாடியில் குழந்தைகள் விளையாடுவதற்கு என்றே ஒரு இடம் உண்டு. பணத்தை கட்டிக் கொண்டு அந்த இடத்தில் குழந்தைகளும் அவர்களை பெற்றவர்களும் உடனிருந்து விளையாடிக் கொண்டிருந்தனர்.



அங்கே ஒரு விளையாட்டில் நான்கைந்து பேர் ஒன்றாக இருக்கும் பொழுது முன்னால் இருந்த பெட்டியில் திறந்ததும் அதில் நிறைய பந்துகள் வெளிவரும் அதை நிற்பவர்கள் பிடிக்க வேண்டும் எத்தனை பந்தை பிடிக்கிறார்களோ அது அவர்களுக்கானது.அதில் பரிசுப் பொருட்கள் இருக்கலாம் அல்லது இல்லாமல் இனிப்புகள் மட்டும் இருக்கும்.



இந்த விளையாட்டில் கலந்துக் கொள்வதற்காக குழந்தைகள் எல்லோரும் தயாராக இருந்தனர்.பெட்டியிலிருந்து பந்துகள் வெளிவர ஆரம்பித்தது.அங்கிருந்த குழந்தைகள் ஒவ்வொருவரும் பந்தை எடுக்க ஆரம்பித்தனர்.



அப்பொழுது அவர்களுடன் ஒரு பெண் ஒருவர் வந்து கடைசியாக வந்த பந்தை எடுத்து தன் கையில் வைத்துக் கொண்டார்.அங்கு நடப்பதை பார்த்து யாரும் எதுவும் சொல்லவில்லை.சட்டென்று அங்கே வந்த ஒருவன் பந்தை கையில் வைத்திருந்த பெண்ணிடம் "குழந்தைங்க விளையாடுற இதுல நீங்களும் வந்து சின்னப்பிள்ளைத் தனமாக விளையாடுறீங்க என்ன மேடம் இது?" என்று கொஞ்சம் கடுமையாக கேட்டான்.



அந்த நபர் அப்படிக் கேட்டதும் அந்தப் பெண்மணிக்கு முகமே வாடிப்போய் மெதுவாக… "சார் என் பையனால நடக்க முடியாது அவனும் இந்த விளையாட்டு விளையாடனும்னு ஆசைப்பட்டான் அவனுக்காகத் தான் எடுக்க வந்தேன்" என்று தயங்கியபடியே சொன்னார்.


அந்தப் பெண்மணிக்கு கொஞ்சம் தள்ளி மூன்று வயது ஆண்குழந்தை ஒன்று மூளைவளர்ச்சி இல்லாத நிலையில் தள்ளுவண்டியில் இருந்தது.



பெண்மணி சொன்னதை எல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாத அவனோ "என்ன மேடம் ரீசன்ஸ் சொல்லிட்டு இருக்கீங்க?விளையாட முடியலைன்னா ஏன் கலந்துக்கிறீங்க?" என்று சத்தமாக சொல்லி விட்டு அவர் கையில் வைத்திருந்த பந்தை பிடுங்கிக் கொண்டான்.


அங்கிருந்த அவனின் மிரட்டலில் அந்தப் பெண்ணிற்கு என்னசெய்வதென்றே தெரியவில்லை.கண்களில் கண்ணீர் திரண்டு வந்து நின்று மேற்கொண்டு பேசத் தெரியாமல் திணறிப் போய் நிற்கும் பொழுது அந்தக் கூட்டத்தில் இருந்து இளம்பெண் ஒருத்தி வேகமாக அந்த நபருக்கு அருகில் வந்து "என்ன சார் இது கொஞ்சம் கூட யோசிச்சு பேச மாட்டீங்க?" என்று கோபமாக கேட்டாள்.



"என்ன பேசனும்னு சொல்லுறீங்க? ரூல்ஸ் என்னவோ அதைத் தானே நான் சொல்ல முடியும்?" என்றான் எகத்தாளமாக…



அவனின் பதிலில் அதிருப்தி அடைந்தவளாக "என்ன சார் பெரிய ரூல்ஸ்? ஒரு சின்ன கேம்க்காக இப்படி தான் எல்லோர் முன்னாடியும் பேசுவீங்களா? உடனே இவங்ககிட்ட மன்னிப்பு கேளுங்க" என்றாள் கோபமாக…



அவனோ அதை கண்டுக் கொள்வதாக இல்லை.பக்கத்தில் நின்ற அந்தப் பெண்ணோ "விடுங்க எனக்காக எதுக்கு இவங்ககிட்ட தேவையில்லாம சண்டைப் போட்டுட்டு இருக்கீங்க?" என்றதும்…



"மேம் உங்களுக்காக மட்டும் நான் பேசுறேன்னு நினைக்காதீங்க எனக்காகவும், மற்றவங்களுக்காகவும் தான் பேசுறேன் நாளைக்கு யாருடைய சூழ்நிலை எப்படி இருக்கும்னு தெரியாது அப்படி இருக்கும் போது சுற்றி இருக்கிற நாம மனிதர்கள் கொஞ்சமாவது மனிதநேயத்தோடு நடந்துக்கனும் அதுக்கூட இல்லைன்னா நமக்கும் மிருகங்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்கப் போகுது?" என்று அந்தப் பெண்மணியிடம் சொல்லி விட்டு அந்த நபரிடம் "உங்க மேனஜரை பார்க்கனும்" என்றாள்.



அதுவரை கூட்டத்தில் நின்றிருந்த அவளுடைய தோழிகள் வேகமாக அந்த இளம்பெண் அருகில் வந்து "ப்ச்…. இதோட நிறுத்து எல்லோரும் வேடிக்கை பார்த்துட்டு இருக்கும் போது உனக்கு மட்டும் என்ன பெரிய அக்கறை வா போகலாம்" என்று அந்தப் பெண்ணின் கையைப் பிடித்து அழைத்துச் செல்ல முற்படும் பொழுது…


தோழியின் கையை உதறிவிட்டு நேராக அலுவலகம் என்று பெயர்ப்பலகையில் எழுதி இருந்ததைக் கண்டு அந்த அறையினுள் நுழைய முற்படும் பொழுது அதுவரை திமிராக பேசிக் கொண்டிருந்த அந்த நபரும் பெண்மணியும் அவள் பின்னாலேயே சென்றனர்.



அந்த நபரோ "மேடம் விடுங்க மேம் இதைப் போய் எதுக்கு ஆபிஸ் ரூம்ல போய் பேசனும்?" என்று தடுத்துப் பேசினான்.



உடனே அந்த இளம்பெண்ணோ "உங்க இன்ஜார்ஜை பார்த்து பேசனும்னு சொன்னவுடன் வேலை போய்டும் தானே பார்க்க விட மாட்டேங்கிறீங்க அதெல்லாம் முடியாது நான் உள்ளே போகனும்" என்றாள்.



அதற்கு அந்த நபரோ மெதுவாக "மேம் எங்க கம்பெனியோட புது பொருளை அறிமுகப்படுத்த முன்னாடி ஒரு ஷோ செய்றோம் இது ஒரு ப்ராங் ஷோ மேம் அங்கே பாருங்க" என்று தன் கையை எதிர்புறமாக இருப்பவனிடம் நீட்டிக் காட்ட… அங்கே ஒரு ஓரமாக ஒருவன் கேமராவை தூக்கிக் கொண்டு இவர்களை படம் பிடித்துக் கொண்டிருந்தான்.அதைப் பார்த்ததும் இந்த இளம்பெண்ணுக்கோ இன்னும் கோபம் தலைக்கு ஏறிப்போனது.அருகில் இருந்த இளம்பெண்ணின் தோழிகளும் நடப்பதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.



அந்த கோபத்துடன் பக்கத்தில் நின்றிருந்த அந்தப் பெண்மணியைப் பார்க்க அவரோ ஆமாம் என்பது போல் தலையசைத்தார்.அந்த நபரோ "மேடம் உங்ககிட்ட உண்மையைச் சொல்லிட்டோம் ப்ளீஸ் எங்களோடு ஒத்துழைப்பு செய்ங்க எல்லோர் முன்னாடியும் வைச்சு சொன்னோம்னா இது ஒரு ஷோன்னு மக்கள் உஷார் ஆகிடுவாங்க அப்புறம் உண்மைனு யாரும் நம்ப மாட்டாங்க எங்களுக்கு கண்டன்ட் கிடைக்காது ஷோவும் ஜாலியா இருக்காது" என்று கெஞ்சினான்.



அவளோ கோபத்தை அடக்கியவாறே "உங்க கம்பெனிக்கு இந்த ஐடியா கொடுத்த உங்க டீம்மை நான் பார்க்கலாமா?" என்றாள் பொறுமையாக….


"ஓ… கண்டிப்பா மேம் அவங்களை பாராட்டப் போறீங்களா?" என்றான் சிரித்துக் கொண்டே….



"ம்ம்ம்…" என்று தலையசைத்தாள்.அந்த இளம்பெண்ணின் தோழிகளோ மனதினுள் 'இன்னைக்கு ஒரு பெரிய சம்பவமே இருக்கு' என்று கலக்கத்தோடு அந்த நபரை பார்த்தனர்.



அவனோ "எங்க பேரவமன்ஸ்ஸை பார்த்து பாராட்ட போறீங்களா? உள்ளே வாங்க மேம்" என்று கதவை திறந்து அழைத்துச் சென்றான்.



உள்ளே ஒரு நாலைந்து பேர்கள் இருந்தார்கள்.அதில் இரண்டு பெண்களும் அடக்கம்.அந்த நபர் நேராக ஒருவனிடம் சென்று "சார் மேம் உங்களை பார்க்கனும்னு சொன்னாங்க" என்றதும் அவனும் உட்கார்ந்து இருந்தவன் எழுந்து "சொல்லுங்க என்ன விஷயம்?"என்று கேட்டான்.



அந்த இளம்பெண் அவனிடம் "நீங்க தான் இந்த ப்ராங் ஷோ நடத்துறீங்களா?" என்று பொறுமையாக கேட்டாள்.



அவனோ தன்னை சுற்றி இருப்பவர்களை ஒருமுறை பார்த்து விட்டு ஆமாம் என்று தலையசைத்ததும் தான் தாமதம் அந்த இளம்பெண்ணோ கோபமாக "யோவ் மனுசனாயா நீங்க ? எப்படி இப்படி மற்றவங்களோட உணர்ச்சிகளோடு விளையாட முடியுது? அடுத்தவங்களை கஷ்டப்படுத்தி பார்த்து அதை வீடியோவாக்கி என்ன செய்யப் போறீங்க சொல்லுங்க" என்று அந்த இளம்பெண் சத்தமாக பேசிக் கொண்டிருக்கும் பொழுது உள்ளே நுழைந்தான் இளம்பரிதி.



அவன் ஒன்றும் புரியாமல் நிற்பதைப் போலவே அங்குள்ள மற்ற அனைவரும் அதே நிலைமையில் நின்றுக் கொண்டிருந்தனர்.அவர்களை பதில் பேச விடாமல் அந்த இளம்பெண்ணோ தொடர்ச்சியாக…. "நீங்க இந்த மாதிரி ப்ராங் ஷோ மண்ணாங்கட்டி ஷோன்னு எடுப்பீங்க நாளைக்கு உண்மையிலேயே யாராவது கஷ்டத்துல இருந்தாலும் நம்ம மக்கள் இது ப்ராங்கா தான் இருக்கும்னு பேசாமல் அமைதியா போய்டுவாங்க அப்போ உண்மையில் ஆபத்தில் இருக்கிறவங்களுக்கு உதவின்னு ஒன்னு கிடைக்காமலேயே போய்டுது என்ன மனுசங்க நீங்க?"


அருகில் நின்ற பெண்ணிடம் போய் "நீங்களும் ஒரு பொண்ணு தானே ஏன் இவங்ககிட்ட இந்த மாதிரி செய்யாதீங்கன்னு சொல்ல மாட்டீங்களா? உங்க கம்பெனி ரீச் ஆகனும் அப்படினா அதுக்கு நிறைய வழிமுறைகள் இருக்கே அதை விட்டுட்டு ப்ராங் ஷோ எதாவது செய்து உண்மையா இருக்கிற கொஞ்ச பேரையும் மாத்திடாதீங்க" என்று மேற்கொண்டு அவள் பேசுவதற்குள் அந்த இளம்பெண்ணின் தோழியில் ஒருத்தி அவளுடைய கையை பலமாக பிடித்து "வா இங்கிருந்து போகலாம்" என்றாள்.



இன்னொருத்தி "எல்லோரும் அவளை மன்னிச்சிடுங்க சாரி" என்று சொல்லி முடிக்கும் முன் அவளை இழுத்துக் கொண்டுச் செல்லும் போதே அந்த இளம்பெண் "உங்க யாரையாவது இனிமேல் எங்கேயாவது ப்ராங் ஷோ பண்ணுறோம்னு பார்த்தேன் அவ்வளவுதான் இந்த மாதிரி பேசிட்டு இருக்க மாட்டேன் எல்லோரையும் அடி பின்னி எடுத்து விடுவேன்" என்று சத்தமாய் சொல்லிக் கொண்டே சென்றாள்.அவளுடைய தோழிகளில் ஒருத்தி அந்த இளம்பெண்ணை இழுத்துக் கொண்டும் மற்றவர்கள் அவர்களில் தலையில் அடித்துக் கொண்டு "ஐயோ" என்று புலம்பிக் கொண்டுச் சென்றனர்.



அவளின் இந்தச் செய்கையில் ஒரு நொடி இளம்பரிதியே ஆடிப்போய் நின்றான்.எவ்வளவு துணிச்சலாக தைரியமாக தன் எதிர்ப்பை தெரிவித்துச் செல்கிறாள் என்று அந்த இளம்பெண்ணை கண்ட முதல் சந்திப்பே அவனின் மனதில் இடம் பிடித்தாள் பெண்ணவள்.சிறிது நேரத்தில் படபடவென பட்டாசு போல் வெடித்துச் சென்றாள்.



இவ்வளவு நேரம் அந்தப் பெண்ணிடம் திட்டி வாங்கிக் கொண்டிருந்த அந்த அப்பாவியோ "பரிதி வாடா நீ வாங்க வேண்டிய எல்லாத்தையும் நானே வாங்கிட்டேன் நல்லவேளை நீ தப்பபிச்சே என்ன பொண்ணுடா இவ? ஷ்ப்பா… மிடில " என்று தன் நண்பனிடம் சொன்னான் திவாகர்.


பரிதியின் அருகில் நின்ற உதவியாளரோ "ப்பா… நம்மளை பேசவே விடலை அவங்களே தான் பேசுறாங்க. எவ்வளவு பேர் இப்போ ப்ராங் ஷோ பண்ணுறாங்க நாம ஏதோ பெரிய தப்பு செஞ்ச மாதிரி பேசுறாங்க" என்று பக்கத்தில் நின்ற இன்னொரு பெண்ணிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.



இளம்பரிதி எதற்கும் அவன் ஒன்றுமே சொல்லவில்லை.அந்த இளம்பெண் சொன்ன காரணங்கள் அனைத்தும் அவனுக்கு சரியாகவே பட்டது.தனது நிறுவனத்திற்காக ப்ராங் ஷோ ஏற்பாடு செய்ததே அவன் தான். இப்பொழுது அதை தான் செய்திருக்கக் கூடாதோ? என்று நினைத்தவன் அதோடு அந்த நிகழ்ச்சியை நிறுத்தி விட்டான்.



அவனது யோசனையை கலைக்கும் விதமாக தற்போது நடைப்பெற்றுக் கொண்டிருந்த கூட்டத்தில் திவாகர் "இந்த ஐடியா எல்லாம் நாங்க ஏற்கனவே முயற்சி செய்து பார்த்து நிறைய அனுபவம் பட்டுட்டோம்" என்று தன் நண்பன் பரிதியைப் பார்த்து சிரித்துக் கொண்டே "வேற நல்ல யோசனை சொல்லுங்க கண்டிப்பாக நல்லா இருந்தால் செய்து பார்க்கலாம் ஆனால் வித்தியாசமான ஐடியாவாக இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்" என்று தன் பக்க கருத்தினை சொன்னான்.



இன்னும் அரைமணி நேரம் தொடர்ந்த அந்த சந்திப்பு நிகழ்ச்சியில் கடைசியில் இன்னும் பன்னிரெண்டு மணிநேரங்களுக்குள் நல்ல ஒரு ஆலோசனை தர வேண்டும் என்ற கட்டாயத்தோடு முடிக்கப்பட்டது.



இளம்பரிதியும் திவாகரும் மட்டும் அந்த அறையில் இருந்தனர்.


திவாகர் கொஞ்சம் யோசனை கலந்த சிரிப்போடு "பரிதி நாம இப்படி என்ன செய்யறதுன்னு மூளையை யூஸ் பண்ணுறதுக்கு பதிலா நம்ம கம்பெனி எக்ஸ்ஸிகியூடிவ் டிரெக்டருக்கு போன் போட்டு விஷயத்தைச் சொல்லு அவங்க நமக்கு ஒரு நல்ல ஆலோசனை தருவாங்கன்னு நினைக்கிறேன்" என்றான்.



அதற்கு இளம்பரிதி கவலையாக "அவங்களுக்கு கல்யாணம் அதனால பர்ஸ்னல் லீவுல போயி இருக்காங்க இதுல நாம போன் போட்டால் தொந்தரவாக இருக்காதா?" என்று ஆழ்ந்த யோசனையோடு கேட்டான்.



அவனின் யோசனையை பாவமாக பார்த்த திவாகர் "நாம இல்லை சார் நீங்க போன் செய்தால் கண்டிப்பா ரெஸ்பான்ஸ் வரும் அதனால போன் போட்டு விஷயத்தை டப்புன்னு உடைச்சிடு" என்று நண்பனுக்கு கட்டளையிட்டான் திவாகர்.



இளம்பரிதியோ தன் தன்மானத்தை விட்டுக் கொடுத்து விடுமுறையில் சென்று இருக்கும் தன் நிர்வாக இயக்குனரை கைப்பேசியில் தொடர்புக் கொள்ள யோசித்துக் கொண்டிருந்தான்.



இளம்பரிதி வளர்ந்து வரும் ஒரு விளையாட்டு நிறுவனத்தை தன் நண்பர்களுடன் நடத்தி வருகின்றான். கலாச்சாரம், பொழுதுபோக்கு மற்றும் தொழில்நுட்பம் காரணமாக விளையாட்டு நிறுவனம் தற்போது பெருமளவில் வளர்ச்சி பெற்று வருகிறது.இதில் கணினி,கைப்பேசி,மடிக்கணினி வழியாகவும் சில வணிக வளாகங்களில் விளையாட்டு பிரிவுகளில் புதிய விளையாட்டுக்களை அறிமுகப்படுத்துவதில் இளம்பரிதியின் நிறுவனம் தற்போது தனது வெற்றியைப் பதிவு செய்யத் துவங்கியுள்ளது.



இதில் புதியதாக அவர்கள் நிறுவனம் உருவாக்கியுள்ள விளையாட்டினை விளம்படுத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் தான் தற்போது நடந்து முடிந்துள்ளது.இதில் அவனுடைய நிறுவனத்தின் இயக்குனர் விடுமுறையில் செல்வதற்கு முன்பாகவே இதற்கான வேலைகளை செய்கிறேன் என்றதற்கு பரிதியோ தானே எல்லாவற்றையும் கவனித்துக்

கொள்வதாக சொல்லி விட்டான்.



இப்பொழுது ஒரு வேலையும் சரியாகப் போகவில்லை என்றும் தன்னால் முடியவில்லை என்று இயக்குனரிடம் சொல்ல அவன் தன்மானம் விட்டுக் கொடுக்க தயாராக இல்லை.



ஆனால் இப்பொழுது வேலை முடிய வேண்டும் என்ற கட்டாயத்திற்குள் இருப்பதால் திவாகர் தன் நண்பனை தொந்தரவு செய்துக் கொண்டிருக்கிறான்.திவாகர் அலைபேசியில் அழைத்துச் சொன்னாலே நிர்வாக இயக்குனர் தன் உதவியை செய்வார். ஆனால் அதற்கு முன்பாக பரிதி பேசிய வார்த்தைகளால் நிச்சயமாக அவள் செய்ய மாட்டாள் அதனால் பரிதி பேசினால் தான் சரியாக வரும் என்று திவாகர் உறுதியாக நம்பினான்.



(தொடரும்)
 
Top