Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உன்னை நினைத்தேன் முப்பொழுதும் அத்தியாயம் -2

Advertisement

TNWContestWriter045

New member
Member
உன்னை நினைத்தேன் முப்பொழுதும் அத்தியாயம்-2



கரு மேகங்கள் மென்மையாய் ஒன்றோடு ஒன்று கலந்தும் ஆகாயம் கருத்து விடாமல் லேசாக கதிரவனுடைய செங்கீற்றை தன்னுள்ளே பரவ விட்டு மங்கும் வெளிச்சமாய் எங்கும் தென்றல் காற்று மெதுவாய் வீச… அதன் சில்லிட்ட குளிர்ச்சியை அனுபவித்தபடி… இயற்கையின் இந்த புதிய பரிணாமத்தில் தன்னை மெதுவாய் தொலைத்தபடி… இமைகள் இரண்டையையும் மூடி அப்படியே மூழ்கிப் போனாள் பெண்ணவள்.



மகிழுந்து செல்லும் வேகத்தில் கண்ணாடியின் இருக்கைப் பக்கத்தில் அமர்ந்திருப்பதால் மழைத் தூறல் வேகமாய் பெண்ணவளின் கன்னத்தில் பட்டுத் தெறித்தது.



அவளின் செயலை அருகில் அமர்ந்திருந்த பெரியவர் பெண்ணவளைப் பார்த்து மனதினுள்ளே ரசித்து சிரித்தாலும் சட்டென்று அவளின் தோளை உலுக்கியவர் "ஆதி மழை பெய்யுதுல்ல கார் கண்ணாடியை மூடு" என்று அன்பான கட்டளை இட்டார்.


இயற்கையின் அழகில் தன்னை தொலைத்து இருந்தவள் நிகழ்கால உலகத்திற்குள் வந்து சட்டென்று அதற்கு தடைப் போடும் பாட்டியை தன் விழிகளைத் திறந்து அருகில் இருந்தவரை ஒருமுறை உற்றுப் பார்த்து விட்டு திரும்பவும் இமைகளை மூடி தன் தனி உலகினில் சஞ்சரிக்கத் தொடங்கினாள் ஆதிமரை.


பேத்தியின் இந்த செயலைப் பார்த்தவருக்கு கோபம் வராமல் புன்னகை மாறா முகத்தோடு "பெரியவங்க சொன்னால் கேட்க மாட்டியோ?" என்று சற்றே குரலை கடுமையாகிக் கொண்டு கேட்டார்.



அதை பொருட்தாமல் தன் வேலையை தொடர்ந்தாள் ஆதிமரை.

அவளின் அலட்சியத்தைப் பொருட்படுத்தாத லட்சுமி பாட்டி "யார்கிட்ட சொன்னால் நீ ஒழுங்கா சொன்ன பேச்சு கேட்பியோ அவங்ககிட்ட சொல்லட்டுமா?" என்று ஒரு சிறு மிரட்டலாக கேட்கவும் சட்டென்று கண்களை திறந்தவள் சிணுங்கலாய் பாட்டியின் தோள்களில் சாய்ந்தவள் "பாட்டி ஏன் இப்படி என்னை மிரட்டுறீங்க? இந்த மாதிரி இயற்கையை ரசிக்கக் கத்துக் கொடுத்தவங்களே நீங்க தான் இப்போ என்னன்னா அதுக்கு தடை போடுறது நியாயமா சொல்லுங்க?" என்று செல்லம் கொஞ்சிக் கொண்டிருந்த தன் பேத்தியை முன்னால் அமர்ந்திருந்த கேசவன் தாத்தா திரும்பிப் பார்த்து சிரித்துக் கொண்டார்.



தாத்தாவின் செயலைக் கண்டவளோ "தாத்தா எப்போ பாரு நீங்க பாட்டி பக்கம் தான் என்னைக்காவது என் பக்கம் பேசுனாத் தானே" என்று பொய்யாய் கோபம் கொண்டாள் ஆதிரை.


அதற்கு தாத்தா சிரித்துக் கொண்டே

"உனக்கு பரிந்து பேச அப்பா, அம்மா,தங்கச்சி,தம்பி,தாத்தா,பாட்டினு எல்லோரும் இருக்காங்க ஆனால் என் பொண்டாட்டிக்கு என்னை விட்டால் வேற யாரு இருக்கா சொல்லு பார்ப்போம்" என்று கவலையாகக் கேட்டார் தாத்தா.



இதைக் கேட்ட பாட்டி உற்சாகத்தோடு "அப்படி சொல்லுங்க என் தங்கம்" என்றதும் தாத்தா சின்னதாய் வெட்கப்பட்டுச் சிரித்தார்.



அதைப் பார்த்த ஆதிரை "ஐயோ நான் இங்கே என்ன பேசிட்டு இருக்கேன்? நீங்க என்னன்னா ரொமான்ஸ் பண்ணிட்டு இருக்கீங்க" என்றதும் பாட்டி ஆதிரையின் கன்னத்தில் செல்லமாய் ஒரு இடி இடித்தார்.



"ஆஆ… வலிக்குது பாட்டி" என்றதும்…


"இந்த வயசுல பேச்சைப் பாரு ரொமான்ஸீ கிமான்ஸீன்னு உன் வயசுல எல்லாம் நாங்க வாயை திறந்து பேசுறதுக்கே பயப்படுவோம் இப்போ ரொம்ப தான் தைரியம்" என்றார் அப்பாவியாய்…



"பாட்டி நவீனயுக பொண்ணாக நீங்களும் இருந்திருந்தால் எங்களை மாதிரி தான் பேசிட்டு இருப்பீங்க நீங்க வாழ்ந்த காலம் அப்படி நான் வாழ்ற காலம் ஸ்மார்ட் உலகம் அவ்வளவு தான் அது சரி எப்போ பார்த்தாலும் நீங்க பேசும் போது நாங்க நாங்கன்னு சொல்லுறீங்களே உங்களோட வேறு யாரு இருக்கா உங்களோடு கூட்டணி சேர்த்துக்கிறீங்க?" என்று வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு கேட்டாள் ஆதிரை.



"இந்த கிண்டலுக்கு மட்டும் குறைவில்லை எப்போ பார்த்தாலும் நான் பேசும் போது எதாவது சொல்லி சிரிக்கிறது" என்று பாட்டி கோபமாக முகத்தை திருப்பிக் கொண்டார்.



முன்னால் அமர்ந்திருந்த தாத்தா இருவரின் உரையாடலையும் கேட்டுக் கொண்டு சிரித்துக் கொண்டிருந்தார்.


அவரின் சிரிப்பு சத்தத்தைக் கேட்ட லட்சுமி பாட்டி "என்ன அங்கே சத்தம்?" என்றதும் கேசவன் பதில் சொல்வதற்கு முன்னர் ஆதிரை முந்திக் கொண்டு பாட்டியின் காதருகே சென்று "சிரிச்சுட்டு இருந்தேன் மாமோய்" என்றாள்.



அவளின் பதிலைக் கேட்டு பாட்டியும் தாத்தாவும் சிரிக்க ஆதிரையும் சேர்ந்துக் கொண்டாள்.


லட்சுமி பாட்டி ஆதிரையை திருஷ்டி சுற்றி விட்டவராக "இதே மாதிரி எப்பவும் சந்தோஷமா இருக்கனும் ஆதி இன்னும் இரண்டு வாரத்துல கல்யாணம் முடிஞ்சதும் நாங்க ரெண்டுபேரும் ரொம்ப உன்னைத் தான் தேடுவோம்" என்றார் கவலையோடு…



அவரின் நாடிப்பிடித்து "ஏன் பாட்டி இதுக்கு போய் கவலைப்படுறீங்க? உங்க பேரனை அரட்டி மிரட்டி நீங்க நினைச்ச பார்க்க வந்துடுறேன் ஓகேவா அதனால பீல் பண்ணக்கூடாது" என்று தோள்மீது சாய்ந்துக் கொண்டாள்.



தாத்தா சிரித்துக் கொண்டே "ஆதி என் பேரன் பாவம் ஏற்கனவே உன்கிட்ட மாட்டிகிட்டு முழிக்கிறாங்க இப்போ அடிதடி மிரட்டல் வேறயா?"



ஆதி கோபமாய் "தாத்தா நான் ஒன்னும் அவரை செய்யலை என்னைத் தான் எப்போ பார்த்தாலும் தொல்லை செய்துட்டு இருக்கான் என்று சொல்ல வந்தவள் இருக்காங்க" என்று மாத்தி சொன்னாள்.



பாட்டி "எல்லாம் எங்களுக்கு தெரியும் ஆதி ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணுறதுக்கு என்னன்னா நாடகமெல்லாம் போட்டீங்க மறந்துடுமா என்ன? எது எப்படியோ என் மகனை சம்மதிக்க வைச்சு எல்லோருடைய விருப்பத்தோடு நீங்க சேர்வதில் எனக்கு முழு திருப்தியே ஆதி" என்று மகிழ்ச்சியோடு ஆதிரையின் தலையை வருடிக் கொடுத்துக் கொண்டேச் சொன்னார்.



மகிழுந்து தன் பயணத்தை இன்னும் கொஞ்சம் வேகத்தை அதிகப்படுத்திக் கொண்டிருந்தது.


தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான தஞ்சாவூரில் உள்ள ஒரத்தநாட்டிற்குள் நுழைந்தது.


தாத்தா ஊர்ப் பெயர்பலகையைக் கண்டதும் "லட்சு ஊருக்கு எல்லையில் வந்துட்டோம்" என்றதும் லட்சுமி பாட்டியின் முகத்தில் புன்னகை நிரப்பிக் கொண்டது.



ஆதிரையிடம் "என் மகனும் மருமகளும் எல்லா வேலையையும் முடிச்சு இருப்பாங்கல்ல"



"ம்ம்… கண்டிப்பா பாட்டி அம்மாவைப் பற்றி சொல்லவா வேண்டும்? வேலையில் ரொம்ப பர்பெக்ட் ஆச்சே" என்று தன் தாயை அவளே புகழ்ந்துக் கொண்டாள்.



பாட்டி "ஆதி நீயும் இதேமாதிரி இருந்தால் உன் மாமியாரை கைக்குள்ளே வைச்சுக்கலாம்" என்று பாட்டி யோசனை கொடுத்துக் கொண்டிருந்தார்.



அதற்கு ஆதிரையோ "பாட்டி நீங்க சொல்றது பழைய வழக்கம் நான் இப்போ புதுவழி கண்டுபிடிச்சு இருக்கேன்" என்று கையில் இருந்த கைப்பேசியை எடுத்துக் காட்டியவள் "பாட்டி இதுல என் அத்தைக்கு புடிச்ச எல்லாத்தையும் இருந்த இடத்துல இருந்தே ஆர்டர் செய்து கொடுத்தால் அவங்க கைல போய் சேர்ந்திடும் இப்போக் கூட பாருங்க அத்தைக்கு அவங்களுக்கு பிடிச்ச மயில் கலர்ல புடவை ஒன்னு ஆர்டர் போட்டேன்" என்று பாட்டியிடம் தன் பெருமையைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தாள்.



"என்னமோ ஆதிரை நீ சந்தோஷமா இருந்தால் அதுவே எனக்கு போதும்" என்றார்.



மகிழுந்து தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான தஞ்சாவூரில் உள்ள ஒரத்தநாடு பேரூராட்சியில் உள்ளே மகிழுந்து சென்றுக் கொண்டிருந்தது.


ஒரத்தநாடு எனும் பெயர் உறைந்தைநாடு என்பதிலிருந்து வந்ததாகும்.உறைந்தை என்பது பண்டைச் சோழநாட்டுத் தலைநகரமான உறையூரைக் குறிக்கும்.சோழனை உறந்தையர்கோன் என்று அழைத்தனர்.உறைந்தநாடு என்பதே உறத்தநாடு என்றாகிப் பின்னர் உரத்தநாடாகிப் பின்னும் மருவி ஒரத்தநாடு ஆகியது.



கேசவன்- லட்சுமி தம்பதியுடைய சொந்த ஊர் ஒரத்தநாடு.அவர்களின் பூர்வீக சொந்த வீடும்,நிலங்களும் இங்கு உள்ளன.வருடத்திற்கு இருமுறையாவது வந்துச் செல்வார்கள்.இந்த தம்பதியினருக்கு மூன்று பிள்ளைகள்.இரண்டு ஆண்பிள்ளைகள் ஒரு பெண்பிள்ளை.இதில் ஆதிரையின் தந்தை துரைவேலன் மூத்தவர்.அவர்களின் குடும்ப வழக்கப்படி குடும்பத்தில் மூத்தபிள்ளையின் திருமணம் அவர்களின் சொந்த ஊரில் நிகழ்த்துவது வழக்கம்.அதில் துரைவேலனின் மூத்தப்பெண் ஆதிரைக்கு ஒரத்தநாட்டில் திருமணத்தை நடத்துவதற்கான ஏற்பாட்டினை செய்வதற்காக அவரும் மனைவவியும் தாமரையும் பத்து நாட்கள் முன்னரே வந்து வீட்டைப் புதுப்பிக்கும் வேலைக்காக வந்து விட்டனர்.



இப்பொழுது கேசவனும் லட்சுமியும் தங்களது பேத்தி ஆதிரையை உடன் அழைத்து வந்துக் கொண்டிருந்தனர்.ஆதிரையுடன் உடன்பிறந்த சகோதரி,சகோதரன் இருவருக்கும் தேர்வு இருப்பதால் நான்கு நாட்கள் கழித்து தந்தையுடன் பிறந்த அத்தையுடன் வருவதாக முடிவு செய்யப்பட்டது.


இவர்கள் மூவரும் வீட்டின் வாயிலை அடைந்ததும் தாமரை இவர்களை வரவேற்பதற்காக காத்திருந்தார்.மகிழுந்தில் இருந்து இறங்கியதும் தன் மகளுக்கு ஆரத்தி தட்டு எடுத்து வந்து திருஷ்டி சுற்றி விட்டார்.



அம்மாவை அணைத்துக் கட்டிக் கொண்டவள் "அம்மா உங்களை ரொம்ப மிஸ் செய்தேன் தெரியுமா?"


தாமரையோ சிரித்துக் கொண்டே "அப்படியா! இன்னும் கொஞ்ச நாள்ல இங்கிருந்து போய்டுவியே அப்போ என்ன செய்வே?"



ஆதி சிறிதுக் கூட யோசிக்காமல் "உங்களை மிஸ் செய்தவுடன் நேர்ல பார்க்க வந்திடுவேன் அம்மா இதைப் பத்தி நான் ஏற்கனவே பேசிட்டேன் தெரியுமா?" என்று சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது…



லட்சுமி பாட்டி "வீட்டுக்குள்ளே போய் பேசலாம் எல்லோரும் உள்ளே வாங்க வேலனை எங்கே" என்று சொல்லி விட்டு பேத்தியையும் கையோடு உடன் அழைத்துச் சென்றார்.



அப்பொழுது ஆதிரையின் கைப்பேசி அழைத்தது.அதை எடுத்துப் பார்த்தவள் திரையில் எம்.டி என வரவும் "பாட்டி நீங்க உள்ளே போங்க நான் போன் பேசிட்டு வரேன்" என்றாள்.



உடனே தாமரை "யாரும்மா போன் போட்டது?"



"கம்பெனி எம்.டி அம்மா"


உடனே பாட்டி சிரித்துக் கொண்டு "கட்டிக்கப் போறவனை இன்னும் உன் முதலாளியாகத் தான் பார்க்கிறியோ?" என்று கிண்டலாகக் கேட்டார்.



முகத்தை உம்மென்று வைத்துக் கொண்ட ஆதி "பாட்டி இது எம்.டி நம்பர்ல இருந்து வந்து இருக்கு அப்போ கம்பெனி விஷயமாகத் தான் இருக்கும், இதுவே பரிதினு பேர்ல வந்தால் என் ஆளுன்னு அர்த்தம் புரியுதுங்களா? எல்லாத்தையும் போட்டு குழப்பிட்டு இருக்காதீங்க சரியா?" என்று அவள் கேட்கவும் பாட்டிக்கு ஆதிரையின் பதிலில் தலையில் அடித்துக் கொள்ளலாம் போல் இருந்தது.



தாத்தா சிரித்துக்கொண்டே "இந்த காலத்து பசங்களோட பேச்சையும் எண்ணங்களையும் நம்மாள புரிஞ்சுக்கவே முடியலை லட்சுமி நீ தேவையில்லாததை போட்டு யோசிக்காத அவங்க ரெண்டுபேருக்குள்ளே புரிந்துணர்வு இருந்தால் அதுவே போதும்" என்றார்.



ஆதிரை கைப்பேசியில் பேசுவதற்காக இவர்களை விட்டு கொஞ்சம் தள்ளி வந்திருந்தாள்.தாமரை நடப்பதையும் தன் மகளையும் ஒரு கலக்கத்தோடு பார்த்திருந்தார்.



ஆதிரையும் இளம்பரிதியும் ஒருவரையொருவர் காதலித்து பெற்றோர்கள் சம்மதத்தோடு திருமணம் செய்துக் கொள்ள முடிவெடுத்து இருந்தாலும் அவருக்கு மனதிற்குள் ஒரு கலக்கமாகவே இருந்தது.



அதிலும் இரண்டு நாட்கள் முன்னர் நடந்த விஷயத்திலிருந்து தாமரைக்கு ஒருவித பதற்றமாகவே இருக்கிறது.நடந்ததை எப்படி தன் மாமியாரிடம் சொல்வது? என்ற யோசனை ஒருபுறமும் இதனால் நடக்கவிருக்கும் திருமணத்திற்கு எதாவது தடை ஏற்படுமோ?என்று ஒருவித குழப்பத்தோடு செல்லும் மகளையே பார்த்துக் கொண்டிருந்தார் தாமரை.




தாமரையின் முகமாற்றதைக் கண்ட லட்சுமி பாட்டி வீட்டினுள் வந்ததும் "தாமரை என்னாச்சு? ஏன் முகமே சரியில்லை உடம்புக்கு எதாவது முடியலையா?"


தாமரை எதுவும் சொல்லாமல் அமைதியாக நின்றார்.அப்பொழுது அங்கே வந்த துரைவேலன் "அம்மா… அப்பா எப்போ வந்தீங்க? பயணம் எல்லாம் நல்லா படியா முடிந்ததா?" என்று தற்சமயம் பேச்சை மாற்றுவதற்காக தன் பக்கம் திசை திருப்பினார் வேலன்.



மகனைக் கண்டதும் பெற்றவர்கள் இருவரும் நலம் விசாரித்து விட்டு வீட்டில் நடைபெறும் வேலைகளைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தனர்.தாமரை இருவருக்கும் குடிப்பதற்காக தேநீர் எடுத்து வர சமையலறைக்குள் சென்றார்.



இங்கே ஆதிரை கைப்பேசியில் வந்த அழைப்பினை உடனே எடுக்காமல் இன்னொரு முறை பரிதி அழைத்ததும் அழைப்பினை எடுத்தவள்



"ஹலோ"



மறுமுனையில் சிறிது அமைதிக்குப் பின்னர் "ஹலோ ஆதி… ஆதிரை"


"ம்ம்… சொல்லுங்க சார்"அவள் எப்பொழுதும் போல் சாதாரணமாக பேசினாள்.



"ஆதிரை ஒரு சின்ன உதவி வேணும்"


"சார் இப்போ நான் லீவ்ல இருக்கேன் உங்களுக்கு தெரியாதா?" என்று சிரிப்பை அடக்கிக் கொண்டு கேட்டாள்.



அவள் பேச்சிலேயே அதை உணர்ந்துக் கொண்டவன் தொண்டையை செறுமிக் கொண்டு "மிஸ். ஆதிரை எனக்கும் அது தெரியும் ஆனால் கம்பெனில அவசரமான நிலை வரும் பொழுது எம்ப்ளாயிஸ் லீவுல வொர்க் செய்யலாம்"



"சரி அதனால"



"அ…அதனால நம்ம புது ப்ராஜெக்ட்டுக்கான வேலையை சீக்கிரமான முடிக்கச் சொல்லி மெயில் வந்திருக்கு எல்லாம் கிட்டத்தட்ட முடிஞ்சிடுச்சு"


"அதான் எல்லாம் முடிஞ்சிடுச்சே சார் அப்புறம் எதுக்கு போன் செய்தீங்க?இதெல்லாம் சொல்லத் தான் போன் போட்டீங்களா?" என்று அவள் கிண்டலாய் கேட்கவும் பரிதி நண்பனை பார்த்து முறைத்துக் கொண்டிருந்தான்.
 
Top