Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உருமாற்றம் 6

Advertisement

Jeyalakshmimohan

Member
Member
நாட்கள் செல்லச் செல்ல ஊரடங்கில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆயினும் பெரிதாக முன்பு இருந்தது போல் வேலை எதுவும் கிடைக்காமல் பூங்குளம் மக்கள் பலர் பாதிக்கப்பட்டனர். கண்ணனுக்கு அனிதாவின் முகம் கண்ணுக்குள்ளே இருந்தது எங்கு பார்த்தாலும் அவள் முகமாகவே தெரிந்தது. சாந்தி அக்கா.... சாந்தி அக்கா.... என வாசலில் இருந்து குரல் கேட்க கண்ணன் வெளியே சென்று பார்த்தான்.

சாந்தி அக்கா இல்லையா என அனிதா கேட்டாள்.எங்கு பார்த்தாலும் அவளே தெரிகிறாள் இது கனவா நிஜமா என அவன் கையையே கிள்ளி பார்த்து ஆ..... என கத்தினான். "ஹலோ.... என்னாச்சு சாந்தி அக்கா வீட்டில இல்லையா ?" என கேட்டாள். "அக்கா பக்கத்துல கடைக்கு போய் இருக்கு என்ன விஷயம் சொல்லுங்க, நான் சொல்லிடுறேன்" என்றான்.

"நாளையில இருந்து மல்லிகை பூ எடுக்க வரணுமாம், அக்காகிட்ட சொல்லிடு அப்புறம் பூ எடுக்கிற மத்தவங்ககிட்டயும் தகவல் சொல்லிடுன்னு, அப்பா சொல்ல சொன்னாங்க என்றாள். "நான் சொல்லிடுறேன் நீங்களும் பூ எடுக்க வருவீங்களா ?" என தயங்கிய படி கேட்டான். "அது உங்களுக்கு தேவையில்லாத விஷயம், சரி மறக்காம அக்கா கிட்ட சொல்லிடுங்க நான் கிளம்புறேன்" என சொல்லிக்கொண்டே கிளம்பினாள்.

சாந்தி கடைக்கு போய் பொருட்களை வாங்கிக்கொண்டு அப்படியே அவள் அக்கம்பக்கத்தினர் உடன் கொஞ்ச நேரம் கதை பேசி விட்டு வீட்டிற்கு வந்தாள். "அக்கா மாணிக்கம் ஐயாவின் பொண்ணு வந்து இருந்துச்சு, நாளைக்கு காலையில இருந்து பூ எடுக்க வரணுமாம். அப்புறம் பூ எடுக்கற மத்த ஆட்கள் கிட்டயும் தகவல் சொல்லிட சொன்னாங்க" என்றான்.

ஓ...அனிதா வந்தாளா என சாந்தி சொல்ல, அவளை பற்றி எதுவும் தெரியாதது போல, "அவ பேரு அனிதாவா, அவளும் அவன் மூஞ்சியும் ரொம்ப திமிரு புடிச்சவ போல. பெரிய ஆபிஸர் மாதிரி ஆர்டர் போட்டுட்டு போறா"என்றான்." அப்படி எல்லாம் சொல்லாத டா, அந்தப் பொண்ணுக்கு என்ன குறைச்சல் அழகா லட்சணமா அப்படியே மகாலட்சுமி மாதிரி இருக்கா. அவ மனசுல பட்டத்தை அப்படியே சொல்லிடுவா. ரொம்ப நல்ல பொண்ணுடா அவ" என பரிந்து பேசினாள் சாந்தி. "ஓ அப்படியா, சரி அவதான் நம்ம அம்மாவோட மருமகனு முடிவு பண்ணிட வேண்டியது தான்" என முணுமுணுத்தான். என்ன முடிவு என சாந்தி கேட்க "அதுவா அக்கா, நாளைக்கு நானும் உன்கூட பூவெடுக்க வரேன் எனக்கு இன்னும் வேலை தொடங்கவில்லை.போரடிக்குது நானும் வரேன்" என கெஞ்சினான். சரி சரி வா என்றாள் சாந்தி. நாளைக்கு பூ எடுக்கிற சாக்கில் அவளை எப்படியாவது பார்க்கணும் என மனதுக்குள் நினைத்துக் கொண்டு சந்தோஷப்பட்டான்.

அடுத்த நாள் காலையில் நேரமாக எழுந்து சாந்தியுடன் பூ எடுக்க வந்தான் கண்ணன். அனிதா எங்கேயாவது தென்படுகிறாளா என சுற்றிலும் அடிக்கடி பார்த்துக்கொண்டே பூ எடுத்தான் கண்ணன். அக்கா குடிக்கக் கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா என கண்ணன் கேட்டான்.
"அனிதா....அனிதா... எல்லாத்துக்கும் குடிக்க கொஞ்சம் தண்ணி கொண்டு வாடி" என அவள் அம்மா பூ எடுத்துக்கொண்டே சத்தம் போட்டாள். அப்பொழுது தான் தூங்கி எழுந்த அனிதா வரேன் ஏன் கத்துற என சொன்னபடியே தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள். மொதல்ல அந்த தம்பிக்கு கொடு என்றாள் அம்மா. எந்த தம்பி என தண்ணீர் சொம்பை நீட்டியவாறு பார்த்தாள். ஐயோ இவன் எப்படி இங்க என மனதுக்குள் நினைத்துக்கொண்டு தலையை சரி செய்து கொண்டாள்.

"பாரு இந்த தம்பியும் உன்ன மாதிரி படிச்ச புள்ள தான், காலைல நேரமா எந்திரிச்சு எப்படி பொறுப்பா வந்து பூ எடுக்குது பாரு, நீயும் இருக்கியே... மணி எட்டு ஆகுது இப்பதான் எழுந்து வர" என குறை கூறினாள் அனிதா அம்மா. அனிதா ஏதும் பேசாமல் கோபமாக சென்று விட்டாள்.

"என்னக்கா போன வருஷத்தை விட இந்த வருஷம் கொஞ்சம் பூ சேர்ந்து வருது போல" என்றாள் அலமேலு. "அதிகமா வந்து என்ன செய்யறது அதான் விலையை குறைத்து விட்டார்களே" என வருத்தத்துடன் சொன்னாள் அனிதாவின் அம்மா. .
"கல்யாணம் காட்சி, ஆடி அமாவாசை, பூஜை, விசேஷம் ,கோவில் திருவிழா நடந்தா தான எல்லோரும் பூ வாங்குவாங்க விலையும் அதிகமாகும். அதான் எதுவும் நடத்தக் கூடாதுன்னு சொல்லிட்டாங்க பூ விலையும் குறைஞ்சிடுச்சு" என்றாள் சாந்தி.

"கொரோனா வந்து பாழாய் போச்சு போ... பூ எடுக்கற கூலிக்கு கூட விலை போகாது போல, உங்களுக்கு பூ எடுக்கற கூலி காசு நாங்க கைக்காசு போட்டு தான் கொடுக்கணும் போல” என கவலையுடன் சொன்னார் மாணிக்கம்.கண்ணன் கண்கள் அனிதாவை தேடின. மீண்டும் அவளை பார்க்க முடியவில்லையே என்ற ஏமாற்றத்துடன் வீட்டுக்கு கிளம்பினான்.

ரவியும் அவன் தம்பி கிட்டுவும் படுத்துக்கொண்டு கார்ட்டூன் பார்த்துக்கொண்டிருந்தனர். மணி இன்னும் தூங்கி கொண்டு இருந்தான். அம்மா பசிக்குது என்ன சாப்பாடு இன்னைக்கு செஞ்ச என படுத்தபடி கேட்டான் ரவி. இரு அரை மணி நேரத்துல செஞ்சி தரேன். என்னடா பல்லு விளக்குனீங்களா என கேட்டால் சாந்தி. இல்லம்மா என படுத்துக்கொண்டு காலை ஆட்டியபடி சொன்னான் கிட்டு. “முதல்ல எழுந்து பாயை மடித்து வைத்துவிட்டு பல்லு தேயுங்க” என சொன்னாள். அம்மா தம்பி பாயிலே ஒண்ணுக்கு போய்ட்டான் என்றான் ரவி. "டேய் குட்டி எத்தனை தடவ சொல்லுறது ராத்திரியில ஒண்ணுக்கு வந்தா எழுப்புனு, பாயிலே ஒண்ணுக்கு அடிச்சிட்டு அந்த ஈரத்திலேயே ரெண்டு பேரும் படுத்துட்டு சோம்பேறித்தனமா டிவி பார்த்துட்டு இருக்கீங்க, இந்நேரம் பள்ளிக்கூடம் இருந்தா குளிச்சு சாப்பிடுட்டு ரெடியாகி இருப்பீங்க, இப்ப நல்லா சோம்பேறி ஆகிட்டீங்க. உங்களை சொல்லி என்ன பண்றது உங்க அப்பனே கொறட்டை விட்டு தூங்கிட்டு இருக்கான் பாரு. போங்கடா போய் முதல்ல பல்லை விளக்கிட்டு சுத்தமா குளிச்சிட்டு வாங்க" என கத்தினாள். வேகவேகமாக சமையல் வேலைகளை முடித்து விட்டு தயாராகி வேலைக்கு கிளம்பினாள் சாந்தி. ரவியும் அவன் தம்பியும் எப்பொழுதும் போல சாப்பிட்டுவிட்டு விளையாட கிளம்பினர்.மணியும் மெதுவாக எழுந்து தயாராகி வேலைக்கு சென்றான். கண்ணன், போரடிக்குது சரி நண்பர்களையாவது போய் சந்திக்கலாம் என கிளம்பினான்.

"டேய் சதீஷ் யாரோ காலையில் நேரமா எழுந்து புதுசா பூ எல்லாம் எடுக்க போறாங்கடா" என கண்ணனை பார்த்து சிரித்தபடி சொன்னான் அவன் நண்பன்.அது வந்து அக்காவுக்கு ஒத்தாசையாக இருக்குமேன்னு கூட போனேன் என சமாளித்தான் கண்ணன். ஓகே ஓகே நம்பிட்டோம் என அவன் நண்பர்கள் கண்ணனைப் பார்த்து சிரித்தனர். "சரி ஓவரா ஓட்டாதீங்க நான் அனிதாவை பார்க்க தான் போனேன் அதுக்கு இப்ப என்ன?" என தைரியமாக சொன்னான்.

அனிதா அவளது வீட்டில் ஸ்கூட்டர் சாவியை எடுத்துக்கொண்டு "அம்மா மெடிக்கல் ஷாப்புக்கு போயிட்டு வரேன் அப்பாவுக்கு சுகர் மாத்திரை எல்லாம் வாங்கனும் அப்புறம் எனக்கு கொஞ்சம் பர்சேஸ் பண்ண வேண்டி இருக்கு" என்றாள். ஒரு நிமிடம் இரு என அவளை தடுத்து அவள் தலையில் வேப்பந்தழையை சொருகி விட்டு இப்போ போ.... என அம்மா கூறினாள். "அம்மா என்னது இது வேப்பந்தழையை சொருகி வச்சிருக்க" என கடுப்பானாள். "அதை எடுக்காத, புதுசு புதுசா நோய் பரவி கிடக்கு இதை தலையில வச்சுக்கிட்டா நோய் நொடி அண்டாது" என்றாள். அம்மா லூசா நீ நிலவேம்பு கசாயம் குடிக்க சொல்லு குடிக்கிறேன். ஆனா இப்படி தலையில வேப்பந்தழை சொருகி வச்சிட்டு போனா, ரோட்ல போற எல்லாரும் என்ன பாத்து சிரிக்க மாட்டார்களா போமா" என கோபமாக கூறிவிட்டு கிளம்பினாள்.

அவள் சிறிது தூரம் தான் சென்றிருப்பாள் வண்டி நின்று விட்டது.வண்டியை கஷ்டப்பட்டு தள்ளிக் கொண்டே வந்தாள். "அங்க பாருடா கண்ணா... உன் ஆளு தனியா வண்டியை தள்ளிக்கிட்டு வாரா"என்றான் சதிஷ். சரி என்ன ஆச்சுன்னு நான் போய் பார்க்கிறேன் என சென்ற கண்ணனை தடுத்து சதீஷ் "டேய் வேணாம் அப்புறம் ஏதாவது திமிரா திட்டிட போற" என்றான், கண்ணன் எதையும் கேட்காமல் அவள் அருகே சென்று "அனிதா என்ன ஆச்சு, ஸ்கூட்டியை ஏன் தள்ளி விட்டு வர" என கேட்டான். "பெட்ரோல் தீர்ந்துடுச்சு போல மெடிக்கல்ஸ் வேற போகணும்" என்றாள்." என் வண்டியில் பெட்ரோல் கம்மியா தான் இருக்கு. நானும் பெட்ரோல் அடிக்க தான் போறேன். காசு கொடுங்க மெடிக்கல் ஷாப்ல என்ன வாங்கணும்னு சொல்லுங்க அதை வாங்கிட்டு அப்படியே உங்களுக்கும் பெட்ரோல் சேர்த்து போட்டுட்டு வந்துடுறேன்" என்றான். அவள் ஏதும் பேசாமல் அவனையே சந்தேகமாக பார்த்தாள். "இப்படி எல்லாம் சந்தேகப்படக் கூடாது, உங்க பணத்தை எடுத்துட்டு பாரின் எல்லாம் போக முடியாது, வேணும்னா நீங்களும் கூட வாங்க" என கண்ணன் சொல்ல யோசித்தபடியே மெதுவாக தலையை ஆட்டினாள். இந்த காட்சியைப் பார்த்த கண்ணனது நண்பர்கள் ஆச்சரியமாக வாயடைத்து நின்றனர்.

பூங்குளம் கிராமத்தில் மளிகை கடை டீ கடை தவிர வேறு கடைகள் கிடையாது. இரண்டு மூன்று கிலோ மீட்டர் தாண்டி மெயின் ரோட்டுக்கு வந்தால் தான் மெடிக்கல், பெட்ரோல் பேங்க் மற்ற கடைகள் எல்லாம் இருக்கும். இவ்வளவு சீக்கிரத்தில் அனிதாவோடு ஜோடியாக செல்வான் என கண்ணன் எதிர்பார்க்கவில்லை. அவளுடன் செல்லும் ஒவ்வொரு நொடியும் மனதிற்குள் சந்தோசமாக அனுபவித்தான். இந்த காட்சியைப் பார்த்த கண்ணனது நண்பர்கள் அந்த அடங்கா பிடாரி அனிதாவை கண்ணன் உஷார் பண்ணிட்டான் என பொறாமையா பேசிக்கொண்டனர்.

"ஏங்க ஏன் அமைதியா வரீங்க.... நீங்க என்ன படிச்சு இருக்கீங்க, உங்களுக்கு என்ன பிடிக்கும் ஏதாவது சொல்லுங்க" என்றான். "வண்டியை நிறுத்துங்க மெடிக்கல் வந்துடுச்சு, நான் டேப்லெட் வாங்கிட்டு அப்படியே கொஞ்சம் பொருட்கள் வாங்க வேண்டியிருக்கு வாங்கிட்டு வந்துடுறேன், அதுக்குள்ள நீங்க போய் பெட்ரோல் அடிச்சிட்டு வாங்க" என்றாள். "ச்சே அதுக்குள்ள கடை வந்திருச்சா சரி நீங்க போயிட்டு வாங்க' என்றான் கண்ணன். பெட்ரோல் அடித்து விட்டு அவள் வருகைக்காக காத்துக் கொண்டிருந்தான். அவன் பின்னிருந்து போலாமா என்றாள். "நீங்க இங்க இருக்கீங்களா சரி காபி ஜூஸ் ஏதாவது குடிக்கறீங்களா" என கேட்டான். அதெல்லாம் ஒன்னும் வேணாம் கிளம்பலாமா என அவசர படுத்தினாள். சரி வாங்க என சோகமாக வண்டியை எடுத்தான். "ஏங்க நான் பிகாம் செகண்ட் இயர் படிக்கும் போது அம்மா இறந்துட்டாங்க, அப்புறம் படிப்பை விட்டுட்டேன். இப்போ எலக்ட்ரீசியன் வேலை பாக்குறேன். எனக்கு யாரும் இல்ல அக்கா மட்டும் தான் இருக்காங்க" என்றான் அதுக்கு இப்ப என்ன என்றாள். "என்னங்க நீங்களும் எதுவும் பேச மாட்டேங்கிறீங்க, நான் பேசினாலும் கேட்க மாட்டேங்கிறீங்க" என்றான். "சரி ஊர் வந்துடுச்சி இங்கயே நான் இறங்குகிறேன்" என சொல்லிவிட்டு கிளம்பினாள். "ஏங்க பெட்ரோல் வேணாமா ?" என வாங்கிய என பெட்ரோல் வாங்கி வந்த பாட்டிலை நீட்டினான். சரி கொடுங்க என வாங்கி கொண்டு கிளம்பினாள். அவ்வளவுதானா என்றான். "வேற என்ன காசு தான் கொடுத்துட்டேன் இல்லை" என்றாள். "ஒரு தேங்க்ஸ் கூட சொல்ல மாட்டீங்களா?" என்று கேட்டான். "பிரெண்ட் கிட்ட தேங்க்ஸ் சொல்லணும்னு எல்லாம் அவசியம் கிடையாது" என சிறு புன்னகையுடன் சொல்லிவிட்டு வேகமாக கிளம்பி விட்டாள். "நாம இப்ப பிரண்ட்ஸ் ஆகிட்டோமா, கூடிய சீக்கிரம் லவ்வரா ப்ரமோஷன் வாங்குறன்" என சந்தோசமாக கூறினான்.
 

Advertisement

Top