Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என்று தணியும் இந்த சுதந்திர தாகம்………………

Advertisement

niranjana subramani

Well-known member
Member
hi freinds,


நான் பெரிய கதை எழுதுறதே பெருங்கதை. இதுல ஒரு ஆர்வத்துல ஒரு போட்டிக்கு சிறு கதை எழுதி அனுப்புனே. ஆனா அது வெற்றியின் முதல் படியான தோல்வியை தழுவிடுச்சு (இந்த வசனத்தை சொல்லி என்னையவே சமாளிச்சுக்குறேன் :love::love::D:D.)

அதை இங்க போஸ்ட் பண்ணுறேன் எப்பிடி இருக்குன்னு ஒரு ரெண்டு வார்த்தை சொல்லுங்க friends. நான் ஆவலுடன் காத்திருக்குறேன் :love: :love:

என்று தணியும் இந்த சுதந்திர தாகம்………………

பராசக்தி!!.... எனக்கு என்னோட தாய் திருநாட்டை பார்க்கணும்ன்னு கேட்டதற்கு இணங்கி இன்று ஒரு நாள் என் தாய் மண்ணின் மடியில் தவழ என் மண்ணின் சுவாசத்தை சுவாசிக்க வரம் கொடுத்ததற்கு நன்றி” என மனதில் எண்ணிக்கொண்டு தனது நெற்றியில் வீரத்திற்கு அடையாளமாக திலகமிட்டு, தலையில் வெண்ணிற முண்டாசுடன், கருப்பு நிற சட்டை அணிந்து ஒரு கையில் கோலோடும் மறு கையில் நூலோடும் தன் மீசை முறுக்கி இருக்க,

தீர்க்கமான பார்வையோடு தனக்கே உரித்தான வீர நடையுடன் வந்து நின்றார், தன்னுடைய கவிதைகள் மூலம் இந்த பாரதத்தையே யார் இவர் என திரும்பி பார்க்க வைத்த பாரதியார் மஹாகவி சுப்ரமணிய பாரதியார்.

“ ஹ்ம்ம் நாம அப்போ பார்த்ததற்கும் இப்போ இருக்குற தமிழகத்திற்கும் நிறைய வித்தியாசங்கள் தான். நல்லதொரு முன்னேற்றத்தை கண்டிருக்கிறது. மனிதர்களும் மாறி இருக்கிறாரகள் போலும். என்னவொரு சுதந்திர சுவாசம்.

ஆங்கிலயேர்களிடம் இருந்து மட்டும் சுதந்திரம் வாங்கியதோடு அல்லாமல் ஜாதிகளிடம் இருந்தும் ஆணாதிக்கத்தில் இருந்தும் பெண் அடிமை தனத்தில் இருந்தும் என் தாய் திருநாடு சுதந்திரம் அடைந்திருக்கிறதா என்று தெரியவில்லையே” என பாரதியார் எண்ணிக்கொண்டிருக்கையில் அவரின் பார்வையில் ஒரு சின்ன பூங்கா பட்டது.

“ ஏனோ!!... என் மனம் அங்கு செல்ல உந்துகிறதே. சரி அந்த பூங்காவிற்கு செல்வோம்” என எண்ணிக்கொண்டு பூங்காவிற்குள் நுழைந்தார் முண்டாசு கவிஞர்.

அவரின் பார்வையில் முதலில் பட்டது பூங்காவின் புல்வெளி தரையில் ஒரு இருபது வயது இளைஞன் கையில் காகிதத்தோடும் பேனாவோடும் எதோ ஒரு தீவர சிந்தனையில் அமர்ந்திருந்திருந்தான்.

“ என்ன இந்த இளைஞன் இந்த காலை வேளையில் எதோ ஒரு தீவிர சிந்தனையில் இருக்கிறான். இந்த வயதில் தெளிவாக சிந்திக்கிறவன் நாற்பது வயதில் சாதிப்பவன் ஐம்பது வயதில் சரித்திரம் படைப்பவன். இந்த இளைஞனின் சிந்தனை என்னவென்று கேட்கலாம்” என நினைத்து அந்த இளைஞனின் அருகில் சென்று அமர்ந்தார் பாரதியார்.

ஆனாலும் அந்த இளைஞன் அவரை கவனிக்காது தனது சிந்தனையை தொடர பாரதியார் “ தம்பி” என அழைக்க

“ ம்ப்ச்… என்ன சார்???” என தன் சிந்தனை தடைப்பட்டதில் சலிப்புடன் திரும்பிப்பார்த்த அந்த இளைஞன் பாரதியாரின் முகத்தில் இருந்த தேஜஸில் எதோ மனதில் தோன்ற சலிப்பினை கைவிட்டு மரியாதையாக தனது உரையாடலை தொடர்ந்தான்.

“ என்ன சார்??”

“ இல்ல நீங்க எதோ சிந்தனையில் இருக்கீங்க அதான் என்னன்னு கேட்கலாம்ன்னு……”

“ ஏன் சார்??... தெரிஞ்சு என்ன செய்ய போறீங்க??”

“ இல்ல எதாவது உதவி செய்யலாமே அதான்”

“ அது ஒன்னும் இல்ல சார். நான் கவிதை எழுதிக்கிட்டு இருக்கேன்”

“ என்னது!!!... கவிதையா!!...” என ஆனந்தமானார் வீர கவி

“ ஹ்ம்ம் ஆமா சார்”

“ எது சம்மந்தமா??”

“ நான் ஒரு பொண்ணை காதலிக்குறேன் சார் அவளுக்கு குடுக்க”

“ என்ன இந்த வயசுல காதலியா??”

“ ஏன் சார்??. எனக்கு ஓட்டு போடுற வயசு வந்துடுச்சு”

“ அது சரி. இதுக்கா காலையில இங்க உட்கார்ந்திருக்க”

“ சார் கவிதை எழுதுறதுன்னா என்ன சும்மாவா??. எவ்வளவு கஷ்டம் தெரியுமா??. அதுக்கு மனசு ரொம்ப அமைதியா இருக்கனும். சிந்தனை தெளிவா இருக்கனும். நம்மளோட சுயசிந்தனையில வர கற்பனைய அப்படியே எழுத்துல அழகான கவிதையா கொண்டு வரனும் சார். அதான் இப்போ இங்க வந்தேன்”

“ ஓ!!... சரி அப்போ எழுதிட்டியா??”

“ ஹ்ம்ம் எழுதிட்டேன்”

“ அப்படியா உன்னோட கவிதை அருமையா வந்துருக்கா??”

“ நான் வேணும்னா ஒரு தடவை படிச்சு காட்டுறேன் எப்படி இருக்குன்னு சொல்லுங்க சார்”

“ ஹ்ம்ம் சரி படி” என கூறி பாரதியார் ஆவலுடன் அமர

சுட்டும்
விழிச் சுடர் தான் கண்ணம்மா சூரிய சந்திரரோ
வட்டக் கரிய விழி கண்ணம்மா வானக்கருமை கொலோ
பட்டுக் கருநீலப் புடவை பதித்த நல்வயிரம்
நட்ட நடுநிசியில் தெரியும் விண்மீன்களடீ”


என அந்த இளைஞன் படிச்சு காட்ட பாரதியார் அதிர்ந்து எழுந்துவிட்டார்.

“ என்ன சார் எப்படி இருக்கு??.”

“ இது என்னோட… ஹ்க்கும்” என செருமிக்கொண்டு

“ பாரதியாரோட கவிதை ஆச்சே”

“ சார் நீங்க முதல்ல பாரதியார் கவிதைகள் எல்லாம் படிச்சுருக்கீங்களா??”

“ ஏது நான்???....”

“ ஹ்ம்ம் நீங்க தான்”

“ படிச்சதே நான்தானே”

“ என்னது??”

“ இல்ல படிச்சுருக்கேன்”

“ ஹ்ம்ம் அப்போ நல்ல கவனிங்க சார் இந்த கவிதையில் கடைசியில என்ன
சொல்லிருக்கேன் விண்மீன்களடீன்னு”

“ ஆமா”

“ பாரதியார் நட்சத்திரங்களடீன்னு படிப்பார்”

“ ஹ்ம்ம் ஆமா.
இந்த கவிதையில அந்த ஒரு வார்த்தைதான் மாறி இருக்கு”

“ அப்போ இது எப்படி பாரதியார் கவிதை யாகும்”

“ ஏது???. ஒரு வார்த்தையை மாற்றினால் அது உன்னுடைய கவிதையா??”

“ இல்லையா பின்ன??”

“ வேற ஒருத்தரோட கவிதையில ஒரு வார்த்தையை மட்டும் மாற்றி எழுதிட்டு உன்னோட கவிதைன்னு சொல்றது ரொம்ப தப்பு தம்பி.
அப்படி மாற்றி எழுதுறதுக்கான உரிமையை யார் உனக்கு குடுத்தது”

“ சார் இது என்னோட எழுத்து சுதந்திரம் என்னோட சிந்தனையோட சுதந்திரம். எனக்கு எல்லா உரிமையும் இருக்கு அதுல நீங்க தலையிடாதீங்க”

“ ஹ்ம்ம் அடுத்தவரோட சிந்தனையில் ஒரு புள்ளியை வைத்துவிட்டு உன் சிந்தனை என்கிறாய். அது உன்னோட சுதந்திரம்” என கூறிவிட்டு அங்கு இருக்க பிடிக்காது அங்கிருந்து நகர்ந்து பக்கத்தில் இருந்த மூவர் அமரக்கூடிய ஒரு மர நாற்காலியில் அமர்ந்தார் மகாகவி.

அவரின் அருகில் ஒரு பத்து வயது சிறுமி அமர்ந்து கைபேசியில் விளையாடிக்கொண்டிருக்க, அதனை கண்டு

“ என்ன பாப்பா பண்ணுற??”

“ நான் விளையாடுறேன் அங்கிள்”

" விளையாட்டா!!....” என கூறி சுற்றி பார்த்துவிட்டு

“ இங்க யாருகூட விளையாடுற பாப்பா??” என பாரதியார் குழப்பத்துடன் கேட்க

“ இதோ இதுல தான் அங்கிள்” என தன் போனை காட்டிய சிறுமியை கண்டு

“ இதுலையா???. இதுல விளையாடுனா உடம்பும் மனசும் எப்படி ஆரோக்கியமா இருக்கும்??”

“. அது எல்லாம் தெரியாது அங்கிள். என் அப்பா அம்மா இங்க வாக்கிங் போயிருக்காங்க அதுவரைக்கும் எங்கயும் போகாம யாருக்கூடவும் பேசமா இருந்து விளையாட சொல்லி இந்த செல்லை குடுத்துட்டு போயிருக்காங்க”

“ ஏன் பாப்பா இந்த கவிதை எல்லா இருக்கே ஓடி விளையாடு பாப்பா கூடி விளையாட்டு பாப்பான்னு”

“ ஹ்ம்ம் ஆமா ஆமா பாரதியார் கவிதை எனக்கு தெரியுமே. நான் தான் என் கிளாஸ்ல அந்த கவிதைய தப்பு இல்லாம எழுதி நிறைய மார்க் வாங்குனே”

“ மதிப்பெண் வாங்குனா போதுமா??. அது மனப்பாடம் பண்ண எழுதல பாப்பா. வாழ்க்கை பாடத்துக்கு எழுதுனது”

“ நீங்க என்ன சொல்றிங்கன்னு புரியல அங்கிள்.”

“ உன்னைய மாதிரி சின்ன குழந்தைகள் ஓடி விளையாடணும்ன்னு அந்த பாட்டுல சொல்லிருக்குல. அது மாதிரி விளையாடவேண்டியதுதானே”

“ ஆனா அந்த பாட்டுல வர மாதிரி ஓடி விளையாடும்போது யாராவது கடத்திட்டாங்கன்னா???”

“ நீ ஏன் தெரியாத இடத்துல விளையாடுற. உன் வீடு முன்னாடி உன் பெத்தவங்க இல்ல உனக்கு தெரிஞ்சவங்கள துணைக்கு வைச்சுக்கிட்டு விளையாடலாம்ல”

“ ஐயோ!!.. அங்கிள் கடத்துறதே தெரிஞ்சவங்கதானே”

“ என்ன!!!...”

“ ஹ்ம்ம். அப்புறம் என்ன சொன்னிங்க கூடி விளையாடவா. நல்லா சொன்னிங்க கூடி விளையாண்ட கொரோனா கூண்டோட அனுப்பிடும்” என கூறிவிட்டு அந்த சிறுமி தனது விளையாட்டை செல்லில் தொடர அங்கு இருக்க பிடிக்காது பாரதி பூங்காவை விட்டு வெளியேறி சாலையில் நடக்க ஆரம்பித்தார்.

“ சுதந்திரம் அடைந்த இந்த நாட்டில் குழந்தைகள் சுதந்திரமாக விளையாட முடியாத நிலையா!!!.....
அப்பொழுது என் நாட்டின் வீரர்கள் தியாகிகள் ரத்தம் சிந்தி பெற்ற சுதந்திரத்திற்கு என்ன அர்த்தம்…….” என அவரின் எண்ணத்தை தடை செய்யும் விதமாக சாலையின் ஓரத்தில் மேடை போட்டு கட்சி கூட்டம் நடந்து கொண்டிருக்க; அங்கு ஒலிபெருக்கியில்,

“ காவலர்களே உங்கள் கடமை தவறாதீர்கள். உங்கள் அக்கிரமத்தை அநியாயத்தை நிறுத்துங்கள்” என காவல்துறையினரை குறை சொல்லிக்கொண்டிருந்தனர்.

“ என்ன இவர்கள் சொந்த நாட்டில் இருந்துகொண்டு தங்கள் நாட்டு காவல்துறையினரையே குறைசொல்லுகிறார்கள்” என எண்ணி பாரதியார் அங்கு மேடையை சுற்றிலும் பார்வையை செலுத்த அங்கு காவலர்கள் சீருடை அணிந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அதனை கண்டு குழப்பத்துடன் ஒரு காவலரின் அருகில் சென்றார் பாரதியார். அவரை கண்டு மேலும் கீழும் நோக்கிய அந்த காவலர்,

“ சார் இங்க எல்லாம் யாரு வர கூடாது. உள்ள உட்காருங்க இல்ல கிளம்புங்க” என கூற

“ இல்ல எனக்கு ஒரு சந்தேகம் அதை கேட்டு தெரிஞ்சுக்கிட்டு போயிடுவேன்”

“ என்னது??”

“ இல்ல இதோ இப்போ பேசிகிட்டு இருகாருல அவரு காவல்துறையைத்தான் திட்டுறார். ஆனா நீங்க பாதுகாப்பு பணியிலே இருக்கீங்க”

“ அதான் சார் இங்க ஜனநாயகம்”

“ புரியல”

“ அதாவது அவுங்க காவல்துறையை திட்டுறது பேச்சு சுதந்திரம். பாதுகாப்புகுடுக்குறது எங்க கடமை” என அந்த காவலர் கூற

“ இது என்னவிதமான சுதந்திரம். அன்றைக்கு மாற்றான் நம்மள ஆளும்போது அவனை எதிர்த்து பேசுனா ஏன் கையை உயர்த்தினாகூட தண்டனை குடுத்தான். ஆனா இன்னைக்கு நம்மள நாமளே ஆண்டும் நம்மள நாமளே அசிங்கப்படுத்திக்கிறோம். இது என்ன எனக்கு புரியல”

“ இதுதான் சார் சுதந்திரம்.
அடுத்தவன் மற்றவனை குறை சொல்றதும் அவன் இவனை குறை சொல்றதும் நாட்டுக்கு யாராவது நல்லது பண்ணிட்டா அதுல இருக்குற குறையை தேடி கண்டுபிடிச்சு மக்களை குழப்புறது இது எல்லாம் இங்க பேச்சு சுதந்திரம் சார்” என அந்த காவலர் கூற அதற்கு வேற எதுவும் கூற தோணாது அவ்விடத்தைவிட்டு நடக்க ஆர்மபித்தார் பாரதியார்.

சிந்தனையிலையே உழன்று நடந்துகொண்டிருந்த மஹாகவி சாலையோரம் இருந்த பேருந்து நிறுத்தத்தில் அமர்ந்தார். அப்போது அங்கு குடிபோதையில் தள்ளாடியபடி வந்த ஒரு நாற்பது வயது மதிப்புடைய ஒருவர் பாரதியாரை கண்டு,

“ தலைவா!!!.... புது கட்சி ஆரம்பிச்சிருக்கியா. இதுதான் கட்சி உடையா தலைவா??.
பார்க்கறதுக்கு மெய்யாலுமே பாரதியார் மாதிரி இருக்க தலைவா இந்த உடைல” என பாரதியாரின் உடையை பார்த்து கேட்க

“ கட்சியா??.... நீ என்ன சொல்ற” என புரியாது நோக்கிய பாரதியாரின் கண்களில் நலுங்கிய கருப்பு சட்டையும் ஊதா நிறம் மழுங்கி இருந்த கையிலியை கணுக்கால் தெரியுமளவிற்கு இடுப்புக்கு மேலே முடிச்சு போட்டு கட்டி ஒருவாறு சாய்ந்து, கண்கள் சிவப்பேறி இருந்ததை வைத்தே வந்தவன் குடிகாரன் என்பதை புரிந்துகொண்ட பாரதி அவனிடம் பேச விரும்பாது அங்கிருந்து செல்ல எண்ணுகையில்,

“ கட்சிதான்….. கட்சிதான்… நம்ம நாட்டுலதான் மக்களுக்கு நல்லது பண்ணனும்ன்னு நினைச்சாலே கட்சி ஆரம்பிச்சுடுவாங்களே. அதான் கேட்டேன். சரி இப்போ எங்க கிளம்பிட்ட தலைவா??. வூட்டுக்கா??. ஹ்ம்ம் உன் பொஞ்சாதி உனக்கு சோறு போட காத்திருக்கும். அதான் நீ இப்படி உடனே வூட்டுக்கு போற.

நானுந்தான் ஒன்னை கட்டிருக்கேன் பேருதான் செல்லம்மாஆ. ஒருநாளும் செல்லமா பேசுனதே இல்ல தலைவா. எப்போ பார்த்தாலும் நம்மல கண்டுக்கிட்ட உடன சண்டைதான். இத்தனைக்கு நா காலையில வேலைக்கு போனா ராவுக்கு தான் வூட்டுக்கு போவேன் மனுசனுக்கு நிம்மதியே இல்ல” என தள்ளாடியபடி கூறிக்கொண்டு அங்கு மண் தரையிலையே அமர்ந்தான்.

அதனை கண்டு “ ஏன் கீழ இப்படி வழில உட்காருகிறாய்??. இதோ இப்படி உட்கார்” என பேருந்து நிறுத்தத்தில் இருந்த திண்டை காட்டிய பாரதியிடம்

“ இருகட்டும் தலைவா. எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல நான் இப்படிக்கா உட்கார்ந்து பழக்கம்தான்”

“ உனக்கு பிரச்சனை இல்லதான். ஆனா இப்படி வழில ரோட்டுல உட்கார்ந்தா மற்றவர்களுக்குத்தான் சிரமம்”

“ அது அவுங்க பிரச்சனை தலைவா. நாம அடுத்தவங்க விசயத்துல தலையிடக்கூடாது. சரி நான் சொல்றதை கேளுங்க” என கூறியவனிடம் எதுவும் கூறாது கைகளை கட்டிக்கொண்டு அவனை கூர்ந்து நோக்கினார் பாரதியார்.

“ தலைவா காலைல வெள்ளன எழுந்து கஞ்சிய எடுத்துக்கிட்டு கொத்தனார் வேலைக்கு போறேன். அங்க வேகாத வெயிலுல வேலை பார்க்குறேன். சிமெண்டை எடுக்குறது கலவை போடுறது செங்கலை அடுக்குறதுன்னு கஷ்டப்பட்டு வேலை பார்த்து ஒரு நாள் சம்பளத்தை வாங்கிட்டு கடைக்கு போனா கூட்டம் அள்ளும் .

அங்கேயும் சிரமம் பார்க்காம கஷ்டப்பட்டு வரிசையில கால்கடுக்க நின்னு பாட்ல வாங்கிட்டு வந்து மறுபடியும் அதுக்கு சைடு டிஷ் அதான் தொட்டுக்க கறியோ கோழியோ வாங்கிட்டு வந்து பாட்லையும் முழுசா கொஞ்சம் கூட வீணாக்காம குடிச்சுடு
வேன். ஏன்னா உழைச்ச காசு வீணாக்க கூடாதுல. அந்த கறியையும் சாப்பிட்டு ராவுக்குத்தான் போறேன் வீட்டுக்கு.

அப்போ ஆரம்பிக்குறதுதான் சண்டை தலைவா. மறுநாள் வரைக்கும் தொடரும்.
குடிக்காத குடிக்காதான்னு தொணதொணன்னு.
நீங்களே சொல்லுங்க இந்த நாட்டுல ஒருத்தன் குடிக்க கூட சுதந்திரம் இல்லையா??” என அவன் சலிக்க

“ நீ சம்பாரிச்ச பணம் முழுசுக்கும் குடிச்சுடுவியா??” என கேட்ட மஹாகவியிடம்

“ அதுவே பத்தாது. இருந்தாலும் ஒரேடியா குடிக்கக்கூடாதேன்னு ரெண்டு நாளைக்கு ஒருக்கா தான் கடன் வாங்குவேன். இல்லைனா என் செல்லம்மா நூறுநாள் வேலை தின கூலி வேலைக்கு போறா. அவளை அடிச்சாவது காசை வாங்கிடுவேன்.

நீங்களே சொல்லுங்க தலைவா அடிக்கடி கடன் வாங்கலாமா. அதான் குடுடி காசன்ன தரமாட்டா. இதுல இந்த கொரோனான்னு ஒன்னு வந்துச்சு பாருங்க. சரக்கை மொத்தமா வாங்க காசு இல்லாம நான் பட்ட பாடு இருக்கே முடியல. அதனாலயே தினமும் இந்த கொரோனா மாதிரி நோய் எல்லாம் வரக்கூடாதுன்னு வேண்டிக்கிட்டு இருக்கேன்.

ஹ்ம்ம் இந்த சுதந்திர நாட்டுல குடிக்க இவ்வளவு கஷ்டப்பட வேண்டியதா இருக்கு”
என்று கூறி சலித்துக்கொண்டிருந்தவனி பார்த்து,

“ சுதந்திரம் ஒரு காலத்தில் என் தாய் நாட்டின் லட்சியம். என் மக்களின் உயிர் மூச்சு.
அத்தகைய சுதந்திரத்திற்காக,
‘ என்று தணியும் இந்த சுதந்திர தாகம்ன்னு’ அந்நியர்களிடம் இருந்து விடுதலை பெற நான் பாடிய கவி.

இன்று விடுதலை அடைந்தும் ஒவ்வொருத்தரும் அவரவர் சுயநலத்திற்கு தேவைக்கும் சுதந்திரம் என பெயர் வைத்து என்றும் அதனை தணியாத தாகமாக வைத்திருக்கிறீர்கள்” என விரக்தியுடன் கூறிவிட்டு அங்கிருந்து கோவமாக மறைந்தார்

பாக்களின் ரதம் கொண்ட சாரதி………..


அவனேதான் பாரதம் கண்ட பாரதி……….

BY

R.NIRANJANA SUBRAMANI
 
Last edited:
அருமை.....
நமக்கு சுதந்திரம் வாங்கிக்கொடுத்த தலைவர்கள் எல்லாம் இப்போ வந்து நம்ம நாட்டையும் அது இருக்கற லச்சனத்தையும் பார்த்தால் ஏன்டா இவங்களுக்கு நாம சுதந்திரம் வாங்கிக்கொடுத்தோம்னு ரொம்ப பீல் பண்ணுவாங்க :( :( :(

அப்புடியே அந்த பூங்காற்றையும் கொஞ்சம் அனுப்பினா நல்லா இருக்கும் ?
 
அருமை.....
நமக்கு சுதந்திரம் வாங்கிக்கொடுத்த தலைவர்கள் எல்லாம் இப்போ வந்து நம்ம நாட்டையும் அது இருக்கற லச்சனத்தையும் பார்த்தால் ஏன்டா இவங்களுக்கு நாம சுதந்திரம் வாங்கிக்கொடுத்தோம்னு ரொம்ப பீல் பண்ணுவாங்க :( :( :(

அப்புடியே அந்த பூங்காற்றையும் கொஞ்சம் அனுப்பினா நல்லா இருக்கும் ?
Thanks sis?? (type pannikitte iruken sis nalaiku pottuturen)
 
Top