Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என் கண்களில் காண்பது உன் முகமே அத்தியாயம் 1

Advertisement

என் கண்களில் காண்பது உன் முகமே! டெய்சி ஜோசப்ராஜ்

அத்தியாயம் 1 ரயில் பயணத்தோடு பயணித்த கௌதமின் நினைவுகள்

‘லப் டப்! லப் டப்!’ என்று நம் இதயங்கள் துடிக்கத் தனியாக ஒரு இசைக் கோர்வை இருப்பது போல, ‘கடக், சடக், டடக் டடக்!’ என்று தண்டவாளத்தில் உருளும் அந்த ரயிலின் சக்கரங்கள் ஒரே தாளகதியில் உருளத் தொடங்க, எந்தத் தாளமும், சுருதியும் சேராமல், ஒரு குழப்பமான மன நிலையில் கௌதமின், உணர்வுகளும் எண்ணங்களும் சுழலத் தொடங்கின!

நம் நினைவுகளில் பதியப்படும் ஆழமான உணர்வுகளின் நினைவுகளை அவை என்றும் அழிந்து விடாமல், மூளை என்னும் மிகப்பெரிய கணினிப்பெட்டி அடைகாத்து பத்திரமாய் பொதிந்து வைத்திருந்தாலும், சில சமயம் அந்த வழித்தடங்கள் அழிந்து போவது இயற்கைதான்! ஒருவருடத்திற்கு முன் நடந்த ரயில் விபத்தில் அவனுடைய நினைவுப் பேழையும் சேதமடைந்தது.

அன்று நடந்த மிகப் பெரிய ரயில் விபத்தில் தன் கடந்த காலத்தைத் தொலைத்துவிட்டு; இன்று இந்த நிகழ்காலத்தில் அவற்றைத் தேடிக் கொண்டிருக்கிறான்! கொண்டிருந்தான்! கொண்டிருப்பான்! அவனின்… இந்தத் தேடல்கள் அவன் நினைவுகள் அனைத்தும் திரும்பும் வரை, வாழ்க்கையின் எல்லாக் காலங்களிலும் நடக்கப் போகிறது! அவனுடைய தேடலானது காலங்களையே விஞ்சி நிற்கும் தேடல்களாகும்.

அவன் தொலைத்தது ஏறக்குறைய இருபத்தெட்டு வருட ஞாபகங்களை என்று சொன்னால் மிகையாகாது!!! எவ்வாறு களிமண்குட்டையில் தேங்கிய நீரிலிருந்து களிமண்ணையும், நீரையும் பிரித்தெடுக்க முடியாதோ அவ்வாறே அவனால் பல நினைவுகளைப் பிரித்தெடுக்க முடியவில்லை. மேலும் பல நினைவுகள் ஞாபகக்கிடங்கிலிருந்து எந்தத் தடையமும் இல்லாமல் தொலைந்தே போய்விட்டது! கலைத்துப் போடப்பட்ட அசுரத்தனமான புதிர் விளையாட்டுப் போல அக்கக்காய் குலைத்துப் போடப்பட்டு; ஆங்காங்கே இணைப்புகளின்றி அறுந்து தொங்கிக்கொண்டிருக்கும் நினைவுகளனைத்தையும் அவன் விரைவில் ஒன்று சேர்க்க வேண்டும்.

அவனுக்குப் பளிச்சென்று ஞாபகத்தில் இருப்பது அந்த ரயில் விபத்திற்குப் பின், தாராவுடனும், குழந்தைபவியுடனும் அவன் வாழ்ந்த இந்த ஒரு வருட கால வாழ்க்கை மட்டுமே! கடந்த ஒரு வார காலமாகத்தான் வற்றிப்போன நினவுக்கடலில் மறந்து போன நினைவுகள் சொட்டுச் சொட்டாகச் சேரத் துவங்கியுள்ளது.
அந்த இருபத்தெட்டு வருட வாழ்க்கையில் எத்தனை பெண்களின் மனதை உடைத்தானோ அவனுக்கு முழுமையாகத் தெரியவில்லை. ஆனால் ஒரே வருடத்தில் ஒரு பெண்ணின் மனதை உடைத்துவிட்டு; தன் வாழ்க்கையின் விடியலைத் தேடிக் கொடுத்தவளின் மனதை கொன்று புதைத்துவிட்டு; அறிந்தோ அறியாமலோ இன்னொரு பெண்ணின் மனதை உடைத்து விட்டோமோ என்ற பயத்தில் அந்தப் பெண்ணைத் தேடி ஓடிக் கொண்டிருக்கிறான்! அவன் நினைவுகளில் முழுமையாக நிறைந்து விட்ட தன் அன்பு அம்மாவை கூடத் தேடிச் செல்லாமல் தன் மனைவி சிந்துவைத் தேடி ஓடிக் கொண்டிருக்கின்றான்

பொய்மையும், வாய்மையும் நிறைந்த இந்த உலகத்தில், அவனுடைய அந்த ரயில் பயணத்தில் அவன் மடியில் கிடந்து சிரிக்கும் இரண்டு வருடமும் சில மாதங்களுமான அந்தக்குழந்தை மட்டுமே நிஜம். விடியலிலும், அஸ்தமனத்திலும் எட்டிப் பார்க்கும் சூரியனைப் போல ஞாபக விளிம்புகளில் உறைந்து போன சில நினைவுகள் மூடியிருக்கும் மேக போர்வயைக் கிழித்துக் கொண்டு இப்பொழுது தான் எட்டிப் பார்க்கத் துவங்கியுள்ளன. கடந்த ஒரு வாரத்தில் சில ஞாபகங்கள் உயிர்ப்பிக்கப்பட்டுள்ளன என்ற உண்மை அவனுக்கு மட்டுமின்றி அவனுடைய தோழியும், காதலியுமான டாக்டர் தாராவிற்கும் தெரியும். அவளிடமிருந்து அவனால் எதையும் மறைக்க முடியாது!

‘ஸ்டெத் வைத்துக் கேட்காமலேயே அவன் இதயத்தில் எத்தனை துடிப்புகள் என்று எண்ணிவிடுவாள். அவனையும், அவன் குழந்தையையும் உயிருக்குயிராய் நேசித்தவளை; தனக்கு மறு வாழ்வு கொடுக்க நினைப்பவளை; பாம்பு தன் சட்டையைக் கழட்டித் தூக்கி எறிவதுபோல், கழட்டி எறிந்துவிட்டு, தன் பெண் மகவைத் தூக்கிக் கொண்டு, ஒரு கோழைபோல் இந்த ரயில் பயணத்தில் வந்து சங்கமித்துவிட்டான்.

உடனே இல்லை என்றாலும் ஒருநாள் தாரா தன்னைத் தேடி வருவாள் என்று அவனுக்குத் தெரியும்! அதனால்தான் வேடன் வலையிலிருந்து தப்ப நினைக்கும் ஒரு மானைப்போல் தப்பியோட நினைக்கிறான். மருத்துவமனையில் இருந்து தாரா வருவதற்கு முன்னால் ரயிலேறிவிட வேண்டுமென்றுதான் இரவில் வெகு நேரம் கழித்துக் கிளம்பும் நியூடில்லி-தமிழ் நாடு விரைவு வண்டிக்குப் பதிலாக அதற்கு முன்னரே கிளம்பும் ஜீடி எஃஸ்ப்ரஸ் எனப்படும் இந்த க்ராண்ட்-ட்ரங்க் விரைவு வண்டியைத் தேர்ந்தெடுத்துள்ளான்.

அந்த ரயில்நிலையம் நூற்றுக்கணக்கான சப்தங்களுடன் உலகின் மிகப் பெரிய மீன்சந்தை போல் சலசலத்துக் கொண்டிருந்தது.
இந்தியாவில் பேசப்படும் அத்தனை மொழிகளின் கதம்பமாலையிலான உரையாடல்களை அங்கே கேட்கலாம்! ‘ஆனால் சிரிப்பிற்கும், அழுகைக்கும் மட்டும் எந்த மொழியும் தேவையில்லை?’ அவன் தன் கடந்த கால ஞாபகங்கள் பலவற்றைத் தொலைத்திருந்தாலும் தன் மூளை இது போன்று அடிக்கடி கொடுக்கும் டிப்ஸின் ஊற்றுக்கண்மட்டும் எங்கிருந்து வருகின்றதென்று அவனுக்குத் புரியவில்லை!

அந்த ரயில்நிலையம் முழுவதிலும் விதவிதமான கூச்சல்கள், குழப்பங்கள், விற்பனையாளர்களின் ஆர்ப்பாட்டமான சப்தங்கள்; குழந்தைகள், ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், வாலிப வயதினர், பெரியவர்கள் என பலரிடமிருந்தும் பிரிவுபசாரக் கண்ணீர், அழுகை, சிரிப்பு, ‘நாம் மீண்டும் சந்திப்போம்,’ ‘உடம்பை பத்திரமா பார்த்துக்க,’ ‘டேக் கேர்,’ ‘எதுக்குடா அழற!? சிரிடா’ இப்படி அங்கே எடிட் செய்யப்பட்ட விதவிதமான ஒலியும் ஒளியும் காட்சிகளின் அணிவகுப்பு!

அதுமட்டுமா? ‘மனிதரில் இத்தனை நிறங்களா?’ என்பது போல நிறம், உடை, கலாச்சாரம், பேச்சுமொழி அனைத்திலும் வேறுபட்டு நின்றாலும் ‘வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்தியர்களை’ அந்த ரயில் நிலையத்தில் காண முடிந்தது!

பல சந்தைக்கடைகளையும், மீன்கடைகளையும், சாப்பிட்டுவிடும் அளவிற்கு நடந்த அந்தக் கூட்டு முயற்சியில் தனக்கு எந்தவித சம்பந்தமும் இல்லை என்பது போல அவைகளிலிருந்தெல்லாம் தன்னை விடுவித்துக் கொண்டு ஓர் ஏகாந்த மனநிலையில் அமர்ந்திருந்தான் கௌதம்!!!

பலர் மாம்பழத்திற்குப் பதிலாக மாப்பிள்ளைகளையும்; போண்டா, டீக்குப் பதிலாக பொண்டாட்டிகளையும்; சாயா, பன்னிற்குப் பதிலாக ஜெயா பெண்களையும் விற்றுக் கொண்டிருந்தாலும், இவன் மனதை யாராலும் அசைக்க முடியவில்லை. குறவர் கூட்டம் விற்றுக் கொண்டிருந்த பாசிமணி, ஊசிமணிக்கு பதிலாக காமடி நடிகர் உசிலைமணியையே அவன் கழுத்தில் பாசிமணி மாலையாக அணிவித்திருந்தாலும் அவனுடைய உறைந்து போயிருந்த நினைவுகளை யாராலும் உருக்கியிருக்க முடியுமாவென்று தெரியவில்லை!
‘கூ,,,கூ,,,!’ என்று கூவிக் கொண்டே அந்த சிக்கு,,,புக்கு ரயில் அந்த ரயில் நிலையத்திலிருந்து கிளம்புவதற்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டிருக்க!! ஸ்டேஷன் அதிபதியின் கையில் பச்சைக் கொடி ஆடத் துவங்கிவிட்டது! பதிவு செய்யப்படாத பெட்டிகளில் கடைசிநேர தள்ளு முள்ளுகள், விஸில் சப்தம் கேட்ட பின்பும் பிரியாவிடை கொடுக்க மனமின்றி ஓடிவந்து படிக்கட்டுகளில் தாவி ஏறி நின்று கையாட்டும் இளம் இரத்தங்கள், என எதையும் கண்டு கொள்ளாமல் சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்தின் இரண்டாம்நம்பர் நடைமேடையிலிருந்து இப்பொழுது அந்த ரயில் கிளம்புவதற்கான அறிவிப்புகளோடு அந்த ஒலி பெருக்கியின் ஓசையும் மெல்ல மெல்ல தேய்ந்து கொண்டிருந்தது!
“உன்னோட பொஞ்சாதிக்கு ஒரு முழம் மல்லிப்பூ வாங்கிட்டுப் போ மஹராசா! உம் பொஞ்சாதி உன்னோட எவ்வளவு நெருக்கமா இருக்காளோ அந்தளவு நெருக்கமா கட்டிய பூ சார் இது!”

வண்டியோடு ஓடி வந்த பெண்ணை உணரும் நிலையில் கௌதம் இல்லை என்பதுதான் உண்மை! இல்லையென்றால் தாராவிற்குப் பிடித்த மல்லிப்பூவை அவன் நிச்சயம் வாங்கி இருப்பான்! அவள் மல்லிப்பூவைத் தன் கூந்தலில் சூடி ஒரு நாளும் பார்த்ததில்லை என்றாலும் அந்தப் பூக்களின் வாசனை அவளுக்கு மிகவும் பிடிக்கும்!

‘என்ன தாராவா???!’ அப்ப உன்னோட அன்பு மனைவி சிந்து என்னவானாள்! அவனுடைய இன்னர் வாய்ஸ் அவனைப் பலமாய் இடிக்க, ‘அவளுக்கு ஒற்றை ரோஜாபூக்கள் அதுவும் சிவப்பு ரோஜாக்கள் மட்டும் தான் பிடிக்கும்! என்று ரோஜாப் பூக்களாய் இன்னொரு மனம் விரிய, ‘இந்த உண்மை உனக்கெப்படித் தெரியும்?’ என்ற லாஜிக்கலான கேள்வி அவனிடமிருந்து எழும்பியது!

‘அவன் இறுக்கிக் கட்டி வைத்துள்ள இதயத்தில்தான் நான்கு சேம்பர்கள் உண்டே! அதில் தன் வாழ்க்கையில் வரும் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு சேம்பர் என்று பிரித்துக் கொடுத்தவிடலாமோ!’
அவனுடைய இதயம் செய்த பாகப் பிரிவினையைக் கேட்டு அவன் மூளை கிளுகிளுவென்று சிரிக்க; எதிர் சீட்டில் அமர்ந்திருந்த பெண் தானே சிரித்துக் கொள்ளும் அவனைப் பார்த்து, ‘ஒருவேளை பைத்தியமாயிருக்குமோ’ என்று, பயந்து கொண்டே அவனை நேராய்ப் பார்க்கப் பயந்து ஓரப்பார்வை பார்த்தாள்.

அவன் மடியிலிருந்த குழந்தையோ, “தாராம்மா காணும், வரல!” என்று மழலையில் அனத்திக் கொண்டிருக்க, அதை அவன் தன்னிலை மறந்து தட்டிக் கொடுத்துக் கோண்டே, தன் ஞாபக ஊஞ்சலை ஆட்ட, அது முன்னும் பின்னுமாய் நினைவெனும் உஞ்சலில் அமர்ந்து ஆடத் தொடங்கியது!

கௌதம் ஒரு வருடத்திற்கு முன் நடந்த ரயில் விபத்தில் சிக்கி, அது நடந்து முடிந்து, ஒரு மாதம் கழித்து, உடல்நிலை தேறி, ஒரு சாந்தமான மனநிலையில் கண்விழித்த பொழுது அவன் கண்முன்னால் தோன்றியது டாக்டர் தாராவின் அழகிய விழிகள்தான்.

‘யம்மாடி எவ்வளவு பெரிய அகன்ற விழிகள்! வெள்ளைக் கேன்வாஸில் பதியன் போடப்பட்ட கறுப்பு ரோஜாக்கள்' இந்த உவமானம் எங்கிருந்து வந்ததென்று அவனுக்குத் தெரியவில்லை, ஏனென்றால் கடந்த கால ஞாபகச் சுவடுகள் எதுவுமே அவன் மூளையில் இல்லை என்று அவனுக்குத் தெரியும். அப்பொழுது அவன் டாக்டர்தாரா வேலை பார்க்கும் அதே மருத்துவ மனையில ஒரு நினைவிழந்த நோயாளியாய் அட்மிட் செய்யப்பட்டிருந்தான். அன்று டாக்டர் தாரா கேட்ட எந்தக் கேள்விக்களுக்குமே அவனுக்குப் பதில் தெரியவில்லை! அவனுடைய பெயர் கூட அவனுக்கு நினைவில் இல்லை! ஆனால் அவனுடைய மூளைமட்டும் ஏதாவது கவித்துவமாய் சிந்தித்துக் கொண்டே இருந்தது!
“அப்ப சாருக்கு பேர் சூட்டுவிழா நடத்திரலாமா? என்ன பேர் வைக்கலாம்?” என்று கேள்வி கேட்டுக் கொண்டே டாக்டர் அவனை நெருங்கி வர, அந்தப் பெண்ணுக்கும் அவனுக்கும் ஒரே வயதுதானிருக்க வேண்டுமென்று தோன்றியது.

‘ஐயோடா! அவள் கருவிழிகளில் ஏற்றியுள்ள தீபஒளியை கலங்கரை விளக்காய் எண்ணி அந்த விழிக்கடலுக்குள் கவிழ்ந்து விடாதே!’ என்று அவன் மூளை எச்சரிக்கை மணி அடித்தாலும்,

“கௌதம்னு பேர் வைங்க! ஏன்னா என் காதுக்குள் இருக்கும் பல இரைச்சல்களோட அந்தப் பேர் மட்டும்தான் எனக்குக் கேட்டுக்கிட்டே இருக்கு!” என்றான் அவன். உடனே அவன் எதையோ தொலைத்து விட்டது போல் தன்னருகில் பரபரவென்று தேட,

“புத்தம், சரணம் கச்சாமி!” என்று சிரித்துக்கொண்டே கூறியவள்,
“உங்க பொண்ணு பவியைத் தேடுறீங்களா? அவளுக்கு நாங்க முதலிலேயே ‘பவி’ன்னு பேர் வச்சுட்டோம் என் வீட்லதான் இருக்கா?” அவள் சொல்வது சரிதான் என்று கௌதமிற்குத் தோன்ற,

‘எப்படி?’ என்பது போல் அவன் தன் இமைகளை வில்லாய் வளைத்துப் பார்க்க,

“நீங்க நினைவின்றி மயங்கி கிடந்தப்போ உங்க வாயிலிருந்து வந்த முதல் வார்த்தை ‘பவி’ மட்டும்தான். மயக்கத்திலிருந்து கண் விழித்து அப்பப்போ நீங்க போட்ட ஆட்டம் இருக்கே?
அப்பப்பா!!! வார்த்தையில் சொல்ல முடியாது! எம்ஜிஆர், சிவாஜி, ரஜனி, கமல் எல்லாம் நீங்க கொடுத்த நடிப்புக்கு உங்கக்கிட்ட பிச்சை எடுத்திருக்கணும்” என்று அந்த டாக்டர் கூற, அவளைப் புன்னகையோடு ஒரு தினுசாகப் பார்த்தவன்,

‘நயமான பேச்சு’ என்று மனதிற்குள் பாராட்டிக் கொண்டே,
“நான் அந்த ரயில் வண்டியிலிருந்து என் குழந்தையை நெஞ்சில் இறுக்கி அணைச்சுக்கிட்டே உருண்ட காட்சியோடு; என் கண் முன்னால் எரிந்த அந்த ரயில்வே கோச்சும், என்னைச் சுற்றிக் கேட்ட கடமுடா சப்தங்களும், அழுகையும், கூக்குரல்களும் மட்டும்தான் என் ஞாபகத்தில் இருக்கு, மத்தபடி என் மூளை ரொம்ப ப்ளாங்கா இருக்கு ஸிஸ்டர்!” என்றான் கௌதம்!

“நான் சிஸ்டர் இல்லை, ஒரு டாக்டர், என் பேர் தாரா! கவலைப்படாதீங்க, அது க்ளீன் ஸ்லேட்டா இப்ப இருப்பது ரொம்ப நல்லது! இரத்தக் கசிவாகி, இரத்தம் உரைஞ்சு போயிருந்த உங்க மூளையில ஒரு ஆப்பரேஷன் செஞ்சிருக்கோம். உங்க மூளை ரொம்பப் பலமா அடிவாங்கியிருக்கு, இன்னும் கூட பிறந்த குழந்தையின் மூளை மாதிரி அது ரொம்ப டென்டரா இருக்கு! அதோட உங்க உடம்புல நிறைய ரிப்பேர் ஒர்க் பார்த்திருக்கோம்! அங்கங்கே ரிப்பேர் ஆகியிருந்த பார்ட்ஸை எல்லாம் ஃபெவிக்கால் வச்சு ஒட்டுற மாதிரி ஒட்ட வச்சிருக்கோம்.

“இதயத்தைக் கூடவா?” என்று அவன் கேட்க,

“பரவாயில்லையே ரொம்பக் குசும்பான ஆளாத்தான் தெரியிறீங்க, சீக்கிரமே உங்க ஞாபகங்கள் முழுவதும் கிடைக்க என் வாழ்த்துக்கள்!” என்றவள், “பிஸிக்கலா உங்க உடம்பு தேறிட்டதால உங்களை இங்கயிருந்து டிஸ்சார்ஜ் பண்ணறலாம்கிற முடிவுக்கு எங்க ஆஸ்பத்திரி நிர்வாகம் வந்திருக்கு. உங்களைப் பத்திய ஃபுல் டீடெயில்ஸ் கிடைக்கிற வரைக்கும், உங்களை என்ன செய்யலாம்??? ம்,,,???” என்று கேட்டுக் கொண்டே ஒரு விரலால் தலையில் தட்டி பலத்த யோசனையில் ஆழ்ந்து போனவள், பின்னர்

“சார் உங்களை என் வீட்டுக்குக் கூட்டிக்கிட்டுப் போலாம்னு நினைக்கிறேன்! நீங்க என்ன நினைக்கிறீங்க?” என்றாள்.

“ஐயையோ வேணாங்க, உங்களுக்கு ஏன் வீண் சிரமம், என் குழந்தையை மட்டும் கொடுங்க நானே என்னைத் தேடிக் கண்டு பிடிச்சுக்கிறேன்!”

“எப்படி? ஒரு அனாதையா ரோட்டுல, ‘நான் யார்? நீ யார்? நாலுந் தெரிந்தவன் யார் யார்னு?’ பாட்டுப் பாடிக்கிட்டுத் திரியப் போறீங்களா? இல்லை ஏதாவது குடும்பப் பாட்டு வச்சிருக்கீங்களா?” அதைக் கேட்டு அவனோடு சேர்ந்து நர்சும் சிரிக்கத் தொடங்க, அவன் சிரிப்பு அவள் மனதை கொள்ளை கொண்டதில் ஒன்றும் ஆச்சரியமில்லை! அதில் அப்படி ஓர் தெய்வீக அழகு குடிகொண்டிருந்தது!

கௌதமோடு சேர்ந்து சிரித்த அந்த நர்சின் மேல் தாராவுக்குக் காரணமில்லாமல் கோபம் வர, தாரா தன் கோபத்தைக் காட்டும் முன்பாக, அவன் வாய்விட்டுச் சிரித்ததில் எங்கோ ஒரு நரம்பு இழுத்துக் கொள்ள, அதன் பலனாய் அவனுக்குத் தாங்க முடியாத தலைவலி வந்ததில் அவன் முகம்மாறிப் போனது!

உடனே தாரா ஒரு ஊசி மருந்தின் பேரைச் சொல்லி நர்சை எடுத்து வரும்படி விரட்டியவள்,

“இதுதான் சார் உங்க உடல் சுகத்தின் நிதர்சணமான உண்மை! உங்க உடம்புல இன்னும் நிறைய ரிப்பேர் ஒர்க், பேச்சப் ஒர்க் பார்க்க வேண்டியிருக்கு! அதோட உங்களுக்கு மனதளவிலும் நிறைய கவுன்ஸ்லிங்க் கொடுக்க வேண்டியிருக்கும்! நீங்க உங்க நினைவுகளைத் தேடத் துவங்கியவுடன் அந்த அதிர்ச்சியிலேயே உங்களுக்குத் தலைவலி வந்திருது! உங்களால ஒரு உறவினர் பேர், அவங்க முகவரி கொடுக்க முடியும்னா சொல்லுங்க, சந்தோஷமா அங்க கொண்டு போய் விட நான் ஏற்பாடு செய்றேன்!” என்றவள்,

பின்னர் நிறுத்தி நிதானமாக, “உங்களை எனக்குத் தெரிந்த நண்பர்னு என்னோட சொந்தப் பொறுப்பில்தான் இந்த மருத்துவமனையில் சேர்த்திருக்கேன். இல்லைனா அந்த அத்வானக் காட்டிலிருந்த பள்ளத்தில் விழுந்த நீங்க இந்நேரம் ஊண் உருகி அழுகிப் போயிருப்பீங்க, உங்களை இந்த ஆஸ்பத்திரியிலேயே நிரந்தரமா வச்சுக்க மாட்டாங்க சார்! ஆபத்துக்குப் பாவம் இல்லை! ஸோ சத்தம் போடாம ஒரு ஆட்டுக்குட்டி மாதிரி என் கூட வாங்க, அதுதான் உங்களுக்கும் உங்க குழந்தைக்கும் பாதுகாப்பு!”

“எனக்காக ஏன் டாக்டர் இவ்வளவு தூரம் ரிஸ்க் எடுக்கணும்? என்னை யாரோ எவரோனு தூக்கிப் போட்டுட்டுப் போய்கிட்டே இருக்க வேண்டியதுதானே? ஒரு மருத்துவர் தன்னோட நோயாளிகள்கிட்ட இவ்வளவு கருணை காட்டியதா நான் கேள்விப்பட்டதே இல்லை டாக்டர்”

“நான் ஒரு டாக்டர் மட்டும் இல்லை கௌதம், ஒரு மனிதாபிமானமுள்ள பெண்!” ‘அதனால்தான் என் வாழ்க்கை இப்படி ஆனது’ என்று அவளால் அவனிடம் கூற முடியாது! அவள் காட்டிய மனித நேயத்தால் ஒரு முறை தோற்றுவிட்டாள்! இன்னொரு முறை தோற்க மாட்டாள்! அப்படியே ஒரு உயிரைக் காப்பாற்றும் வேள்வியில் தோற்றாலும் பரவாயில்லை! அந்த உயிர் காப்பாற்றப்பட வேண்டும்’ அவள் மனதில் தோன்றிய நினைவுகளைப் போலியான புன்னகை என்னும் முகத்திரையால் மூடியவள், அவனிடம் தன் பேச்சைத் தொடர்ந்தாள்!

“நீங்க இந்த மருத்துவமனைக்கு வந்த முதல் வாரம் எவ்வளவு கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணினீங்கன்னு தெரியுமா சார்? ஆனால் நீங்க ஒவ்வொரு முறை கத்தும் பொழுதும் எப்பவும் உங்க குழந்தையின் பேரைச் சொல்லித்தான் கத்துவீங்க, ‘அவளைக் காப்பாத்துங்க காப்பாத்துங்கன்னு’ சொல்லி அழுது, அரட்டி இங்க இருந்தவங்களை எல்லாம் உங்களை அறியாம உங்க பாசத்தில அழ வச்சிருக்கீங்க! அந்த அதீதமான பாசம்தான் என்னை உங்களோடக் கட்டிப் போட்டிருக்கு! அந்தக் குழந்தையை உங்க பக்கத்தில் கிடத்தினப்புறம்தான் காளை மாடாத் துள்ளிக்கிட்டிருந்த நீங்க ஒரு சாதுவான பசுவா மாறினீங்க!”

அவள் பேச்சில் அவனுடைய ஆச்சரியங்கள் இன்னும் பல மடங்காய் உயர்ந்தன. கௌதம் ஆச்சரியத்தோடு டாக்டர் தாராவிடம் வினா எழுப்பினான். “உண்மையாவா சொல்றீங்க!” அவனுடைய இமைகள் கேள்விக்குறிகளாய் உயர, அவனுடைய கருவிழிகள், ஆச்சரியக் குறிகளாய் நீண்டது!

“உன் முகத்தின் உணர்ச்சி வெளிப்பாடுகள் ச்சோ,,,ஓ ஓ ஸ்வீட்!” என்று அவன் முகத்திற்கெதிராக அவள் தன் கூர் விழிகளைப் பதித்துக் கூற,

“நீங்க டாக்டரா, இல்லை என்னோட வம்பிழுக்க வந்த சுட்டிப் பொண்ணானு எனக்கு இன்னும் புரியலை டாக்டர்!” என்று இன்னும் அதிகமான ஆச்சரியங்களை கொட்டி வினா எழுப்பினான் கௌதம். கௌதமின் வினாவிற்கு அவன் சற்றும் எதிர்பாராத வேறொரு பதிலைக் கூறினாள் டாக்டர் தாரா.

“ரெண்டும் இல்லை நான் ஒரு மனுஷி!” என்றவள், “ஆனால் உங்களோட ரெண்டாவது உவமானம் ரொம்ப நல்லா இருந்தது! ஏன்னா என்னில் தொலைந்து போன அந்தச் சுட்டிப் பெண்ணை நான் இன்னும் தேடிக் கொண்டுதானிருக்கேன்!” என்று கூற,

“ஆமா இது என்ன இடம்? எந்த ஊர் ஏதாவது சொல்ல முடியுமா?”

“நீங்க எந்த ஊருக்குப் போனீங்க, உங்க சொந்த ஊர் எது? என்று எனக்கு எதுவுமே தெரியாது! ஆனல் இப்ப நீங்க இருப்பது சிங்காரச் சென்னையில், விபத்திலிருந்து காப்பாற்றிய உடன் முதலில் உங்களை கோவை ஆஸ்பத்திரியில்தான் சேர்த்தேன், ஆனால் நீங்க நினைவிழந்திருந்த நிலையியிலேயே நாம் சென்னை வந்து நான் மிகவும் பழகிய ஆஸ்பத்திரியில் உங்களை சேர்த்துவிட்டு இங்கேயே என் டாக்டர் தொழிலையும் இப்பொழுது தொடர்கிறேன்.

“கோவை,,,ம் கூம்,,,அந்த ஊர்??? தெரியலை!” என்று உதட்டைப் பிதுக்கியவன், “அப்பயிருந்து நீங்களும் என் கூடவே பயணம் செஞ்சுக்கிட்டு இருக்கீங்களா??? உங்களோட சொந்த ஊர் கோவையா? சென்னையா?” என்ற அவனின் கேள்விக்கு,
வெறும் “ஹூம்,,,” என்று வெறும் ஒலிகளில் மட்டுமே அவனுக்குப் பதில் கூறி கௌதமை அதிர்ச்சி கலந்த சங்கடத்தில் ஆழ்த்தினாள் தாரா.
தொடரும்

 
உங்களுடைய "என் கண்களில்
காண்பது உன் முகமே"-ங்கிற
அழகான அருமையான புதிய
லவ்லி நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
டெய்சி ஜோசப்ராஜ் டியர்
 
Last edited:
ஆரம்பமே அருமையாக இருக்கு டெய்சி மேம், ஒரு டாக்டர் ரிப்பேர் பண்ணி பெவிகால் வைத்து ஒட்ட வைப்பதை இங்குதான் மேம் பார்த்தேன்...........:D:censored::censored:??:p
 

Advertisement

Top