Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'என் கண்களில் காண்பது உன் முகமே' அத்தியாயம் 8

Advertisement

என் கண்களில் காண்பது உன் முகமே' அத்தியாயம் 8

அத்தியாயம் 8 ரயிலில் மலர்ந்த தாமரை

கௌதம், “நீங்க கூறிய கதையில் அதுக்கும் மேல உள்ள காலி இடத்தை நல்ல ஸ்வாரஸ்யமான கதையைப் போட்டு நீங்களே நிரப்பிக்கிட்டு உங்க காதலி தாராவோடும், குழந்தை பவியோடும் குடும்பம் நடத்த வேண்டியதுதானே! உங்க காதலியைத் துறந்து நீங்க ஏன் இப்படி தலை தெறிக்க டில்லிக்கு ஓடணும்?”

அந்தக் கேள்வியைத் தாமரையிடமிருந்து கேட்டவன், அவளைக் கோபமாக முறைத்துவிட்டு, பதில் கூறத் தொடங்கினான்.

“இதுதான் குழந்தைத்தனமான மெச்சூரிட்டி இல்லாத பேச்சுனு சொல்றது. உங்க அறிவு முதிர்ச்சியடையாம அது இன்னும் வளர்ச்சி அடையாத பட்டுப் பூச்சியின் கூட்டுப்புழு பருவத்திலேயே இருக்கு, அதனால தான் உணர்வுகளின் ஆழத்துக்குள்ள போகாம நுணிப்புல் மேஞ்சுக்கிட்டிருக்கீங்க!” தாமரை கூறியதைக் கேட்டு உணர்ச்சிவசப்பட்டுப் பேசிக் கொண்டிருந்தான் கௌதம்.

“ஆஃப்கோர்ஸ் நானும் தாராவும் காதலிச்சோம். அதை நான் இல்லைனு சொல்லலை! அவங்க இப்பச் சென்னை நகரத்தில், அழகான, அறிவுள்ள புகழின் உச்சியில் ஏறிக்கொண்டிருக்கும் நியூரோ சர்ஜன் டாக்டர் தாரா!”

“அம்மாடி! அவங்க ஒரு டாக்டரா, அதுவும் பழுதுபட்ட மூளையை சரிபண்ணக் கூடியவங்களா? அவங்களே உங்களுக்குக்காதலியா கிடைச்சது நீங்க செஞ்ச பாக்கியம் நண்பரே!!!”

“அவங்க ஒரு நல்ல மனநல மருத்துவர் மட்டுமில்லாம மிகச்சிறந்த ஹ்யூமன் பீயிங்க்! அவ்வளவு நல்ல இதயத்தை சுமந்திருக்கும் அவங்க நல்லாயிருக்கனும், அதனாலதான் அவங்களை விட்டுட்டு ஓடி வந்துவிட்டேன்!”

அவன் பேசிய ஞாயத்தைக் கேட்டு அவள் விழுந்து விழுந்து சிரித்தாள். பின் தன் சிரிப்பை அடக்கிய தாமரை,

“யூ ஆர் ராங்க் கௌதம்! உங்களைக் காதலிச்சதைத் தவிர வேறு ஒரு தப்பும் செய்யாதவங்களைத் துள்ளத்துடிக்க விட்டுட்டுச் சொல்லாமக் கொள்ளாம ஓடி வர்றது தப்பில்லையா? இட்ஸ் அ கிரிமினல் மிஸ்டேக்!” அவள் கேட்ட கேள்வியில் அதிர்ந்து அவளை யோசனையோடு பார்த்தவன்,

“எனக்குத்தான் என் ஞாபகத்தில் பிழை இருந்தது; அவங்க ஞாபகத்தில் எந்தப் பிழையும் இல்லையே? கையில் குழந்தையோடு இருந்த நான் திருமணம் ஆனவன்னு அவங்களுக்குத் தெரிஞ்சிருக்க வேணாமா? அப்ப ஏன் இவ்வளவு பெரிய தப்பை செய்யணும்! அவங்களோட தப்பில் என்னையும் ஒரு கூட்டுக் களவானி ஆக்கிட்டாங்க!”

“உங்களோட கடந்த காலங்கள் மறந்து போனது தெரிஞ்சும், உங்களுக்கும் ஒரு கடந்த காலம் இருந்திருக்கும்னு நீங்களும் யோசிச்சிருக்கணும்! தப்பில் இருவருக்குமே சம பங்கு உண்டு! நடந்த பிழையைப் பற்றி இப்பப் பேச முடியாது, ஆனால் அந்த தவுறுக்கான தீர்ப்பை நாம் திருத்தி எழுதலாம்!” அவன் அவளுடைய புத்திசாலித்தனமான பேச்சை மனதிற்குள் மெச்சிக் கொண்டே தன் பேச்சைத் தொடர்ந்தான்.

“ஸ்,,,ஸ்,,,சரி! சரி!” என்ற கௌதம், “நாங்க ரெண்டு பேருமே என் மனைவி அந்த ரயில் விபத்தில் இறந்திருக்கலாம்னு எங்களையே ஏமாத்திக்கிட்டோம்னு நினைக்கிறேன்! எனக்கு நீங்க ஒரு தோழினும்; ஒரு ரயில் ஸ்நேகிதினும் சொன்னீங்க இல்லையா? நீங்களே ஒரு நல்ல முடிவு சொல்லுங்க பார்ப்போம்!

எனக்கு சிந்து என்றொரு மனைவி இருந்திருக்கா! அவளோடு நான் கண்டிப்பா சந்தோஷமா குடும்பம் நடத்தி அதுக்குக் கிடைச்ச பரிசா பவி என்னும் இந்தக் குழந்தை பிறந்திருக்கணும். இது என் ஞாபகங்களைத் தொலைப்பதற்கு முன் நான் நடத்திய வாழ்க்கையா எனக்குத் தோணுது! இப்ப நான் என் மனைவியைத் தேடிப் போகணுமா இல்லையா? தாலிகட்டிய மனைவியை நான் ஏமாத்தலாமா?!”

“அப்ப உங்க மனைவி உங்ககூட அந்த ரயில் பயணத்தில் வரலியா?”

“இல்லை!” அவனிடமிருந்து வந்த பதிலில் அவளுக்குத் தூக்கிவாரிப் போட்டது. “இன்னொரு நம்ப முடியாத உண்மையையும் என் மூளை சொல்லுது! அது,,,வந்து,,, என் மனைவியும் என் பெற்றோரும் இதுவரை சந்தித்ததே இல்லை என்ற உண்மை! அந்த சாத்தியமற்ற பொய்யை என்னால் நம்ப முடியவில்லை!

நான் என் ஞாபகங்களைத் தொலைச்சப்புறமும், என்னையும் என் குழந்தையையும் தெய்வமா நின்னு காப்பாத்தி, எனக்கு மறுவாழ்வு கொடுத்தது மட்டுமில்லாம என்னை உயிருக்குயிராய் நேசிக்கவும் செஞ்சிருக்காங்க தாரா!

அவங்க அன்புக்கு முன்னாடி நான் தோற்று; என் மனைவிக்குத் துரோகம் செஞ்சிருவேனோன்னு பயந்துதான் தாராக்கிட்டயிருந்து இப்ப தப்பிச்சு ஒடிக்கிட்டிருக்கேன். ஓவரா யோசிச்சு யோசிச்சு சோர்ந்து போகும் மூளை எனக்குக் கொடுக்கும் தண்டனைதான் இந்தத் தலைவலி! இப்ப நீங்களே எனக்கு ஒரு வழி சொல்லுங்க!” என்று அவன் கேட்கவும்,

“அப்ப நாம ரெண்டு பேரும் ஓடிப் போயிரலாமா! எல்லாப் பிரச்சனைக்கும் ஒரு முற்றுப்புள்ளி விழுந்திரும்!” சீரியசான முகத்துடன் தாமரை சொன்ன பதிலில்,

‘Oooooo’ என்று அவன் அதிர்ந்ததில் அவள் மடியில் உறங்கிக்கொண்டிருந்த குழந்தை கண்விழித்தது. அவனுடைய விழிகள் அதிர்ந்து அது புருவத்திற்குள் ஏறி அடைக்கலம் தேடியதை பார்த்தவள், கலகலவென்று ஒரு கல்லூரி மாணவி போல் ஏழு ஸ்வரங்களில் சிரிக்கத் தொடங்கினாள்.

“பயந்துட்டீங்களா? இப்படி உங்களை மாதிரி எல்லாம் யாராவது கேள்வி கேட்டா என் மனசு உடனே வேற மாதிரி, மாத்தி யோசிக்க ஆரம்பிச்சிரும்! நான் சும்மாதான் சொன்னேன்! இதுக்கு எதுக்கு நீங்க இவ்வளவு அதிர்ச்சியாகணும்!?”

“இன்னொரு தரம் சொல்லு தாமரை! ‘நாம ஓடிப் போயிரலாம்னா சொன்ன?” ‘ஓடிப்,ப்,,ப்,,,போ,,,யி,,,ர,,லாம்!’ இதைத்தான் அன்னைக்கு சிந்துவும் சொன்னா,,,, அவன் தன் தலையைப் பிடித்துக்கொண்டு குலுக்க, அவனுடைய சிந்து, ஒரு நதியைப் போல் அவன் சிந்தையில் ஓடினாள், அழுதாள், சிரித்தாள், அப்படியே பூமிக்குள் மறைந்து காணாமல் போனாள்!

அவளை நான் பார்த்துவிட்டேன், நான் மாட்டிவிட்ட கொலுசுப் பாதத்தை வைத்தே என்னைக்கொஞ்சி மிதித்து சிரிக்கவும் செய்தாள், அதே கொலுசுப் பாதங்களால் என் நெஞ்சில் ஏறி மிதித்துவிட்டு என்னை அழ வைக்கவும் செய்தாள். அவள் முட்கள் நிறைந்த ரோஜா புஷ்பம்! அவள் ஒரு காதல் ராட்சசி,,,

“உன் வீட்டு சம்மதமும் வேண்டாம் என் வீட்டு சம்மதமும் வேண்டாம்! வாடா இந்த ஊரைவிட்டு, இந்த உலகத்தைவிட்டு, ஏன் இந்த பிரபஞ்சத்தை விட்டே எங்காவது ஓடிப் போயிரலாம், வாடா இப்பவே ஒடிப் போயிரலாம்!” இது சாட்சாத் சிந்துவே பேசிய வசனங்கள்தான். அவன் கண்கள் சிவந்து, உடம்பு முறுக்கிக் கொள்ள, நெற்றி விண்விண்னென்று தெறிக்க, அந்த ராட்ச்சசி, அத்துடன் அவன் நினைவுகளை விட்டு மறைந்து போக ஒருவித மயக்கம் அவனை ஆட்கொண்டது.

“என்ன கௌதம் என்ன ஆச்சு!? மறுபடியும் தலை வலிக்குதா? அப்படியே அந்தக் குழந்தையை என் கையில் கொடுத்துவிட்டுப் படுங்க, இன்னும் நாம் கதை பேச நிறைய நேரமிருக்கு!” அவள் கூறியது போல் செய்துவிட்டு அந்த சீட்டில் படுத்துக் கண்களை மூடிக்கொண்டான். இப்பொழுது அவனுடைய ரயில் ஸ்நேகிதி அவன் நெற்றியைத் தேய்த்து நீவிவிட்டாள். சிறிது நேரம் கழித்து படக்கென்று கண் விழித்தவன், தன் நேற்றியை அமுக்கிவிட்டுக் கொண்டிருந்த தாமரையின் கரங்களை இறுக்கிப் பிடித்துக் கொண்டு,

“எனக்கு ரொம்பப் பயமா இருக்கு தாமரை, நான் தாராவைத் தவிக்கவிட்டுட்டு வந்து ஒரு பெரிய தப்புப் பண்ணிட்டேனோனு தோணுது! எனக்கு இந்த ரயில் பயணத்தில் ஏதாவது ஆயிருச்சுனா அப்புறம் என் குழந்தை ஒரு அனாதை ஆயிரும், பிளீஸ் எனக்குக் ஹெல்ப் பண்ணுவீங்களா?” என்றவன்,

“என் ட்ராலி பேக்கில் ஒரு மொபைல் இருக்கு! அதுல தாராவோட நம்பர் மட்டும்தான் இருக்கு, எனக்கு ஏதாவது ஒண்ணுனா அவங்களுக்குத் தெரியப்படுத்திருங்க ப்ளீஸ்! ஐ ஓவ் ஹெர் மை லைஃப், இந்த மறு ஜென்மத்தில் எனக்குக் கிடைத்த இந்த உயிர் அவளுக்கு மட்டும்தான் சொந்தம்!” என்றவனின் கண்களின் ஓரத்தில் கண்ணீர் வடியத் தொடங்கியது!

“உங்களுக்கு உடம்பளவில் ஒரு பிரச்சனையும் இல்லை கௌதம், நீங்க உங்களுடைய மறந்து போன நினைவுகளைத் தேடி உங்க மூளையை ரொம்ப டார்ச்சர் பண்றீங்க, முதலில் அதுக்குக் கொஞ்சம் ரெஸ்ட் கொடுங்க, உங்க மூளை ரெக்கவர் பண்ணிய ஃபைல்ஸை மட்டும் உங்களுக்கு நம்பிக்கை இருந்தா என்கிட்டப் பகிர்ந்துக்குங்க, ஷ்யூர் நான் உங்களுக்கு ஹெல்ப் பண்றேன்!”

அவள் கொடுத்த நம்பிக்கையில் அவன் கண்களை மூடிவிட்டு பரபரவென்றிருந்த தன் மனத்தையும் சிந்தனைகளையும் மூட முன்றான். உயர் அழுத்தத்தில் பரபரத்துக் கொண்டிருந்த அவன் மூளை ஷட்டவுனாக மறுத்தது! என் சிந்து எங்கே சென்றிருப்பாள்? அந்தக் கடைசிப் பயணத்திலும் அவனோடு இணைந்து அம்மாவைப் பார்க்க அவள் வரவில்லையே? அவளுக்கு அவர்கள் மேல் அவ்வளவு கோபமா? அதே நேரம் குழந்தை பவி அப்பாவிடம் கேட்டது!

“எப்பப்பா வீடு வரும்? வாப்பா வீட்டுக்குப் போலாம், தாராம்மா பாவும்!” என்றது

‘இந்தக் குழந்தைக்குப் புரிவது கூட நமக்குப் புரியவில்லையா? தாரா பாவமில்லையா? அப்படி என்றால் சிந்து அவளும் பாவம்தானே! குழந்தைக்கு என்ன பதில் சொல்வது?’ என தவித்தவன் உதவிக்குத் தாமரையின் முகத்தைத் தேடினான். அதே நேரம் அவன் தாய் அடிக்கடி பாடும் பாடல் காற்றில் கலந்து அவன் செவிகளில் மோதுவது போலிருந்தது அவனுக்கு. உடனே மெய்மறந்த நிலையில் தன் காந்தக்குரலில் பாடத் தொடங்கினான்

நெஞ்சம் மறப்பதில்லை! அது தன் நினைவை இழக்கவில்லை!
நான் காத்திருந்தேன், உன்னைப் பார்த்திருந்தேன்!
கண்களும் மூடவில்லை; என் கண்களும் மூடவில்லை!
காலங்கள் தோறும் உன் மடி தேடி கலங்கும் என் மனமே!
வரும் காற்றினிலும், பெரும் கனவினிலும், நான் காண்பது உன் முகமே‘!


அந்தப் பாடலை கண்மூடி ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்த தாமரை! அந்தப் பாடல் முடிந்தும், கண் திறவாமல் அந்தப் பாடலின் இனிமையில் அவள் கிறங்கிக் கிடக்க, “தாமரை மலரே,

கண்விழிச்சுப்பாரு, இன்னும் சூரியன்மறைந்து சந்திரன் வரலை, இருந்தாலும் இந்த ரயில் வண்டிக்குள் இருட்டிவிட்டது போன்றதொரு தோற்றப்பிழை இருக்கு!
சந்திரனைப் பார்த்தால் தாமரை மலரனும் அதுதான் இயற்கையின் நியதி!” என்று கூறியவன், என் வாழ்க்கையும் அப்படித்தான், முற்றிலும் பிழைகள் நிறைந்தது!” என்று பிதற்றத் தொடங்கினான்.

“மனம் தளறாதீங்க நண்பரே! உங்களோட குரல் ஒருவிதமான தெவீக அழகுனா; உங்க பேச்சு அதைவிட இனிமையா இருக்கு கௌதம்! நேத்து இதே கௌதமா அப்படி ஒரு தலைவலியில் கிடந்து தவிச்சீங்கனு என்னால நம்பவே முடியலை! உங்களுக்குப் பழைய ஞாபகங்கள் இல்லைனு சொன்னா யாராவது நம்புவாங்களா? உங்கக் கதையை சொல்லுங்க நண்பரே அதுக்கப்புறம் நாம் ஒரு வழி கண்டுபிடிக்கலாம் என்று அவனிடம் கதை கேட்க அவள் தயாரானவள்,

“பவிகுட்டி வாங்க, அப்பா கதை சொல்லப் போறாரு!” என்று அவளைத் தூக்கி, தாமரை தன் மடியில் இறுத்திக் கொள்ள” “ஐ! ஐ!” என்று உள்ளங் கைகளை சேர்த்துத் தட்டியது குழந்தை,

“அப்பா காணாமல் போன பப்பி நாய் கதை சொல்லுப்பா என்று குதிக்க, அவனும் ஒரு கதை கூறத் தொடங்கினான்.

த்தனை காலைகள் விடிந்தாலும், கௌதமின் அம்மா கற்பகத்திற்கு மட்டும் கடந்த ஒரு வருடமாக விடியவே இல்லை!

கற்பகம் தன்னுடைய வீட்டின் ஹாலில், மலர்களாலும் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டத் தன் கணவரின் புகைப்படத்தைப் பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்தாள். பக்கத்துவீட்டுப் பெரியம்மா வந்து தட்டி எழுப்பியும் கற்பகம் அப்படியே அந்த ஈசிச்சேரில் ஒரு உயிரில்லாத பலகை போல் சாய்ந்திருந்தாள். ‘கணவனையும் இழந்து, மகன் எங்கிருக்கிறான்?’ என்ற எந்தத் தடயமும் இல்லாமல் ஒரு வருடமாக தனிமையிலிருந்து பதறி தவித்துத் தன் காலத்தை ஓட்டிக் கொண்டிருந்தாள்! அவளுக்கு அந்தப் பெரியம்மாதான் துணை!

அவள் வேலைக்குச் செல்வதால், சமையல் வேலை, வீட்டு வேலை அனைத்திலும் உதவுவது மட்டுமில்லாமல், அவளுக்குப் பேச்சுத் துணைக்கு என்றிருந்த ஒரே ஜீவன் அவர்கள் மட்டுமே. கௌதம் யூகேயில், லண்டன் அருகில் லீட்ஸில் இருந்தவரை, தவறாமல் ஃபோனில் பேசிக் கொண்டிருந்தான்.

அவன் லீட்சைவிட்டுக் குழந்தையோடும் மனைவியோடும் டில்லி திரும்பிய பின் விரைவில் தன்னை வந்து சந்திப்பதாகக் கூறியிருந்தான்.

“விரைவில் ட்ரான்ஸ்ஃபர் வாங்கிட்டு வந்திருவேன் மம்மி! நான் உன் பேத்தியோடு உன் பக்கத்தில் வந்து உட்கார்ந்து, நீ சமைச்சுக் குடுக்கிறதை சாப்பிடப் போறேன். வெளி நாட்டிலும் டில்லியிலும் காஞ்ச ரொட்டியையும், சப்பாத்தியையும் திண்ணு திண்ணு எனக்கு நாக்கு செத்துப் போச்சு!” அவன் தன் அம்மாவை சந்திக்கப் போகும் ஆனந்தத்தில் பேசினாலும், அவன் குரல் ஒரு சோகமிருப்பதை அவளால் உணர முடிந்தது.

‘வாடா கண்ணா, அம்மா உனக்காக கடந்த முண்ணூத்தி அறுபத்தஞ்சு நாளும் காத்துக்கிட்டிருக்கேன்?! நீ எங்கடா போன? காத்துல கற்பூரம் கரையிற மாதிரி எங்கடா கரைஞ்சு போன? கற்பகம் கௌதமின் புகைப்பட ஆல்பத்தை வைத்துக் கொண்டு குலுங்கிக் குலுங்கி அழத் தொடங்கினாள்!

அவன் அவள் வயிற்றிற்குள் ஜனித்த நாளிலிருந்து எத்தனை வகையானப் புகைப்படங்கள்? அவள் அவனை வயிற்றில் சுமந்திருந்த மாதங்களை, அவன் வளர்ச்சியை ஒவ்வொரு மாதமும் புகைப்படமாய் சேமித்திருந்தார் கௌதமின் அப்பா விசு. அவன் பிறப்பதற்கு முதல்நாள் அவளின் உருண்டு திரண்ட வயிறைப் பார்த்து அவளுக்கே வெட்கம் வர, அவள் தன் கரங்களால் முகத்தை மூடிக் கொண்டிருந்த காட்சியைக் கூட வெட்கமில்லாமல் அந்தக் கேமரா படம் பிடித்திருந்தது!

உல்லாசப் பயணங்கள் செல்வதென்றால் அந்த வீடே ஆனந்தப் பெரு வெள்ளத்தில் மூழ்கிவிடும். கௌதம் சிறுவனாக இருந்தவரை அவர்கள் டூர் ப்ரோக்ராம் தென்னிந்தியாவைச் சுற்றிச் சுருங்கி இருந்தது! மதுரை, திருச்சி, குற்றாலம், கன்னியாகுமரி, திருவனந்தபுரம், கொச்சி, பெங்களூர், மைசூர், என்று அவை சிறிய சுற்றுலாக்கள்தான். பிருந்தாவன் கார்டனில், விசு ஒரு கரத்தில் கௌதமைத் தூக்கிக் கொண்டு மறுகரத்தில் இவளைப் பிடித்துக் கொண்டு படிகளில் வழிந்தோடும் நீர் வழியாக நடந்துகொண்டே,

“பிருந்தாவனத்தில் பூவெடுத்து இளம் பெண்ணே உனக்குச் சூடட்டுமா!
சல சல நீரை அள்ளி எடுத்துச் சந்தனம் குழைத்துப் பூசட்டுமா!”


என்று ஜெய்ஷங்கர் போல் குதித்துக் குதித்துக் குழந்தையோடு அவர் பாட,

“கண்ணம்பாடியில் படகுவிட்டு என் கைகளுக்குள் உன்னை வைக்கட்டுமா
கட்டிய அழகைவிட்டுவிடாமல் கைவளை நொறுங்க அணைக்கட்டுமா?”


என்று கற்பகம் பாட, அந்தப் புகைப்படக் காட்சிகளின் அணிவகுப்பில்,
அவளின் நினைவுப் படகு கவிழ்ந்து போனது! ‘ஏம்பா என்னை இப்படித் தனியா தவிக்கவிட்டுப் போவதில் உங்களுக்கு இவ்வளவு அவசரம்?’ என்று விசுவை நினைத்துக் குலுங்கியவள், இந்த ஒரு வருசமா என் குழந்தையையும் காணலியே?!’ என்று உரத்த குரலில் அழுதாள்.

“டேய் விசு நீதான் என்னைத் தனியா தவிக்கவிட்டுப் போயிட்ட, என் பிள்ளையையாவது தேடிக்குடுடா!” கற்பகம் என்ற தாய் கதறத் தொடங்கினாள்.

கௌதம் பெரியவனான பின் அவனோடு சேர்ந்து இந்தியா முழுவதும் எத்தனை இன்பச் சுற்றுலாக்கள். விசுவிற்குக் கிடைத்த ஆல் இந்தியா ரயில்வே பாஸ் அவர்களை நாடு முழுவதும் மும்பை, கோவா, டில்லி, ஷிம்லா, ஆக்ரா, ஜம்மு, ஸ்ரீநகர், என்று பல இடங்களுக்கு அழைத்துச் சென்றது! இப்பொழுது அனைத்தும் புகைப்படங்களாய் காலத்தின் பதிவுகளாய் அவள் கைகளில் இருந்தது. ஆனால் கௌதம் என்று டில்லியில் வேலையென்று சொல்லி அவர்களைப் பிரிந்து சென்றானோ அன்றே கற்பகமும் விசுவும் மூட்டை முடிச்சுகளைக் கட்டுவதை நிறுத்திவிட்டார்கள்.

இன்னும் சொல்லப் போனால் கௌதம் டில்லி செல்வதற்கு முன் அவர்கள் கல்கத்தாவில், டார்ஜலிங்கில் வரை சென்றதுதான் அவர்களின் கடைசி ரயில் பயணமாயிருந்தது! இதோ அவன் டில்லியில் வேலை என்று பிரிந்து சென்று முழுசா ஆறு வருடங்கள் முடிந்துவிட்டன. காலம்தான் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் அழிக்க முடியாத எத்தனை கோலங்களை வரைகிறது, பின்னர் அவைகள் அழிக்கப்படும் பொழுது அவை அலங்கோலங்கள் ஆகிவிடுகிறது!

கௌதம் டில்லி சென்று, திருமணம் முடித்து, அங்கிருந்து லண்டன், லீட்ஸ் என்று சென்று, அவனுக்குக் குழந்தை பிறந்து குடும்பமாய் அவன் இந்தியா திரும்புவதற்குள் ஆறு வருடங்களைக் காலம் முழுங்கிவிட்டது! அதற்குள் அவளுடைய அன்புக் கணவர்; தன் பையனுக்காகவும் கற்பகத்திற்காகவுமே தன் வாழ்நாள் முழுவதையும் அற்பணித்தவர்; டாட்டா பை பை சொல்லிவிட்டு நிரந்திரமாய்க் கண்களை மூடி அவளைப் பிரிந்து சென்றுவிட்டார்.

கௌதம் ஒரு வருடத்திற்கு முன்னால் இந்தியா திரும்பிய அன்று கௌதமிடமிருந்து அவளுக்குப் ஃபோன் வந்தது!

“அம்மா நாங்க டில்லி வந்துவிட்டோம்! ட்ரான்ஸ்ஃபர் வாங்குவதில் கொஞ்சம் பிரச்சனையா இருக்கு, நீ கவலைப்படாம இரு, சூன் வீ வில் கம்,,,,!” அதுதான் அவன் கடைசியாக அம்மாவிடம் பேசியது! ஆனால் எப்பொழுது அவன் பேசினாலும் அவளுடைய மருமகள் சிந்து அவர்களிடம் பேசியதில்லை! ஏன் அவளை ஒரு முறைகூட அவளுடைய வீட்டார் யாருமே நேரில் பார்த்ததில்லை. முக லக்ஷ்ணங்கள் பொருந்திய வாட்டசாட்டமான அழகியாய்ப் புகைப் படத்தில் மட்டுமே அந்த அழகியை அவள் பார்த்திருக்கிறாள்.

அவளும் வார இறுதியில் தன்மகனோடு விலாவாரியாகப் பேசிக் கொள்ளலாம் என்று சற்றே அசால்ட்டாக இருந்துவிட்டாள்.

‘பாவம் குழந்தை என்ன கஷ்டப்படுகிறானோ, நாமும் பேசி, ஏதாவது குண்டக்க மண்டக்க கேள்விகள் கேட்டு ஏன் அவனுடைய இரத்த அழுத்தத்தை அதிகப் படுத்தணும்?’ என்று அமைதி காத்து, வார இறுதியில் ஃபோன் போட்டவளுக்கு, வீட்டிற்குக் கிளம்பிவிட்டேன், விமானப்பயணத்திலிருகிறேன் என்று கடைசியாகப் பதில் கூறினான்
அதன்பின் அவள் அழைத்த போதெல்லாம்

‘நீங்கள் அழைப்பவர் உங்கள் தொடர்பு எல்லைக்கு அப்பாலிருக்கிறார்’ என்று ஆங்கிலத்திலும் வேறு மொழிகளிலுமாக பதில் வந்தது, அதன் பின்னர் இந்த ஒரு வருடமாக ஸ்விட்ச் ஆஃப் என்றே வருகிறது! அப்படி என்றால் கௌதமும் அவன் குடும்பமும் எங்கே? காற்றில் கரைந்து காணாமல் போய்விட்டார்களா?

கற்பகத்திற்கு எப்படித் தெரியும் ஃபிளைட் மோடில் போடப்பட்டிருந்த ஃபோன் அந்த ரயில் விபத்தில் சுக்கு நூறாக நொறுங்கிப் போனதென்று. தன் மகனும், பேத்தியும் சென்னையிலிருந்து கோவைக்கு ரயிலில் வருவதே கௌதமின் தாய்க்குத் தெரியாது!

கௌதம் டெல்லி டூ சென்னை, சென்னை டூ கோவை என்று விமான டிக்கெட்தான் போட்டிருந்தான். தன் பயண அட்டவணை எதையும் தாயிடம் கூறாமல் அவர்களுக்கு ஒரு இனிமையான இன்ப அதிர்ச்சியைக் கொடுக்க நினைத்தவன் உண்மையாகவே எந்தத் தடயமுமின்றி அவளுடைய வாழ்க்கையைவிட்டு காற்றில் கரைந்துதான் போனான் என்பது கற்பகத்திற்கு எப்படித் தெரியும். தொடரும்EKKUM 0001.jpg
 
Top