Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

எவனோ என் அகம் தொட்டு விட்டான்...!!! - 8

Nila krishi

Tamil Novel Writer
The Writers Crew
அத்தியாயம் 8

அன்று மாலை.....ஹாஸ்டலுக்குத் திரும்பிய நித்திலாவை....அவளது தோழி காவியாவின் அழுகை ஒலியே வரவேற்றது.நந்தினியும்...வர்ஷினியும் அவளைச் சுற்றி நின்று சமாதானப்படுத்திக் கொண்டிருந்தனர்.

"காவ்யா...!என்னடி ஆச்சு...?எதுக்கு இப்படி அழுதுக்கிட்டு இருக்க...?",என்று கேட்டபடி அவளருகே வந்த நித்திலாவை நிமிர்ந்து பார்த்தவள்....மேலும் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தாள்.

நின்று கொண்டிருந்த தன் தோழிகளைப் பார்த்தவள்,"ஹே....நந்து!வர்ஷி...!நீங்களாவது சொல்லுங்க....எதுக்கு இவ அழுகறா...?",என்று விசாரிக்க,

"அவ லவ் மேட்டர் அவங்க வீட்டுக்குத் தெரிஞ்சிடுச்சாமாடி.....?",வர்ஷிதான் சோகமாக முகத்தை வைத்துக் கொண்டு கூறினாள்.

"ஓ....இதுக்குத்தான் இப்படி அழுதுக்கிட்டு இருக்கிறாயாடி காவ்யா....?எப்ப இருந்தாலும்...உங்க வீட்ல சொல்லித்தானே ஆகணும்....?அது இப்போவே தெரிஞ்சிடுச்சுன்னு நினைச்சுக்க....",என்று தோழியை சமாதானப் படுத்தினாள் நித்திலா.

"இல்ல டி....அவங்க வீட்ல பெரிய பிரச்சனையாகி....இப்போ இவளுக்கு வேற பக்கம் மாப்பிளைப் பார்த்துகிட்டு இருக்காங்க....",தயங்கித் தயங்கி நந்தினி கூற,

இதைக் கேட்டு காவ்யாவின் புறம் திரும்பியவள்,"இந்த விஷயம் ரமேஷ் அண்ணாவுக்குத் தெரியுமா காவ்யா...?",என விசாரிக்க,

"அவருக்குத் தெரியும் நித்தி....!அவரு...நீ வீட்டை விட்டு வந்திடு....நாம கல்யாணம் பண்ணிக்கிட்டு நம்ம வாழ்க்கையை வாழாலாம்ன்னு சொல்றாரு....",விசும்பல்களுக்கிடையே வந்து விழுந்தன காவ்யாவின் வார்த்தைகள்.

காவ்யா கூறியதைக் கேட்டு...கோபத்தில் முகம் சிவக்க நிமிர்ந்தவள்....அவளை வறுத்தெடுக்க ஆரம்பித்து விட்டாள்.

"என்னடி நினைச்சிட்டு இருக்கீங்க...?ஓடிப் போய் கல்யாணம் பண்ணிக்கப் போறீங்களா....?கஷ்டப்பட்டு உன்னைப் பெத்து...வளர்த்து....படிக்க வைச்சு ஆளாக்கின உங்க அம்மா அப்பாக்கு....நல்ல பரிசு கொடுக்கப் போற டி....அந்த ரமேஷ் அண்ணாவை உனக்கு ஒரு....ஒரு வருஷம் தெரியுமா...?மிஞ்சிப் போனா...ஒரு ஒன்றரை வருஷம்...?அவங்களுக்காக...22 வருஷம் உன்னைப் பெத்து வளர்த்தின...உன் அம்மா அப்பாவை விடப் போறியா...?".எனத் திட்ட ஆரம்பித்ததாள்.

நித்திலா திட்டியதைக் கேட்டு முகத்தை மூடிக் கொண்டு அழ ஆரம்பித்தாள் காவ்யா.

"எனக்கு வே...வேற வழி தெரியல டி....அவரு இல்லாத ஒரு வாழ்க்கையை....என்னால நினைச்சுக் கூ...கூட பார்க்க முடியல...",

பரிதாபமாக தன் முகத்தைப் பார்த்து அழுது கொண்டே கூறியத் தோழியைப் பார்த்தவளுக்குப் பாவமாக இருந்தது.அமைதியாக அவள் தலையை வருடிக் கொடுத்தவள்,"நல்லா யோசிங்க காவ்யா....!இதுக்கு வேற வழி இருக்கும்....ரமேஷ் அண்ணாவைக் குடும்பத்தோட வந்து பொண்ணுக் கேட்க சொல்லு....",எனப் பொறுமையாக எடுத்துக் கூறினாள்.

தேம்பிக் கொண்டே 'இல்லை' என தலையசைத்தவள்,"அவரு என் அப்பாட்ட பேசிட்டாரு டி....என் அப்பாதான் இரண்டு பேரும் வே...வேற ஜாதின்னு சொல்லி....அவர அவமானப்படுத்தி அனுப்பிட்டாரு....!அந்தக் கோபத்திலதான் அவரு...'உன் அப்பா அம்மாவை விட்டுட்டு வா...நாம கல்யாணம் பண்ணிக்கலாம்....உனக்கு நான் முக்கியமா...?இல்ல....உன் அப்பா முக்கியமான்னு கேட்கிறாரு....",என்றாள்.

"அதுக்காக....உங்க வீட்டை விட்டு வெளிய வந்து கல்யாணம் பண்ணிக்குவீங்களா....?இது தப்பு காவ்யா....!கொஞ்சம் யோசிச்சுப் பாரு....உன் மேல நம்பிக்கை வைச்சு இருக்கற...உங்க அம்மா அப்பாக்குத் துரோகம் பண்ற மாதிரி இல்ல...",அதற்கு மேல் நித்திலா என்ன சொல்லி இருப்பாளோ,அதற்குள் நந்தினி குறுக்கேப் புகுந்து பேச ஆரம்பித்தாள்.

"விடு நித்தி....!அவளே ஏற்கனவே குழப்பத்துல இருக்கா....இதுல...நீ வேற அவளை இன்னும் குழப்பற.....இது அவளுடைய வாழ்க்கை....!எதுவா இருந்தாலும்...அவளே முடிவு பண்ணட்டும்...!".

"அவ வாழ்க்கைதான் டி....நான் ஒத்துக்கிறேன்....!இந்த வாழ்க்கை அவளுக்குக் கிடைக்கக் காரணமா இருந்தது அவளைப் பெத்தவங்கதான....அப்போ...அவங்களுக்கு இல்லாத உரிமையா...?",

இவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த காவ்யா,தன் முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டு....ஒரு முடிவோடு நிமிர்ந்தாள்.

"ஐயோ...!ரெண்டு பேரும் கொஞ்சம் அமைதியா இருக்கறீங்களா....?நித்தி....!நீ சொல்றது எல்லாமே சரிதான்.....நான் ஒத்துக்கிறேன்....!இந்த வாழ்க்கை என் அம்மா அப்பா எனக்குப் போட்ட பிச்சைதான்....!நான் இல்லைன்னு சொல்லல....ஆனா....அதே சமயம் இது என்னோட வாழ்க்கையும் கூட.....என் சந்தோஷப்படி வாழ எனக்கு உரிமையில்லையா....?

நீ சொல்ற விஷயங்களை....நான் ரமேஷை லவ் பண்றதுக்கு முன்னாடி யோசிச்சிருக்கணும்....இப்ப யோசிச்சு எந்தப் பிரயோஜனமும் இல்ல....!நீ சொல்ற மாதிரி....பெத்தவங்களுக்குத் துரோகம் பண்ணாம....என் அம்மா அப்பா பேச்சைக் கேட்டு நான் அவங்க பின்னாடி போனா....அப்ப....நான் ரமேஷ்க்கு செய்யறதுக்குப் பேர் என்ன....?அவருடையக் காதலுக்கு நான் என்ன பதில் சொல்லட்டும்....?",தன்னைப் பார்த்துக் கேள்வி கேட்ட நந்தினிக்கு என்ன பதில் சொல்வது என்று நித்திலாவிற்குத் தெரியவில்லை.

இந்தக் கோணத்தில் அவள் யோசிக்கவேயில்லை.....இருந்தாலும்...நித்திலாவினால் அவள் கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை....


காவ்யாவே மேலும் பேச ஆரம்பித்தாள்."எங்க அப்பா எதுக்காக எங்க காதலை மறுக்கறார்ன்னு தெரியுமா டி.....!ஏன்னா....நாங்க ரெண்டு பேரும்....வேற....வேற ஜாதியாம்....!இந்த உப்பு சப்பில்லாத காரணத்துக்காக நான் என் காதலை விட்டுக் கொடுக்கணுமா.....?"

"எனக்குப் புரியுது....!நான் எடுக்கப் போற முடிவால...என்னைப் பெத்தவங்க என்ன பாடுபடப்
போறாங்கன்னு எ...எனக்குப் புரியுது...பட்....எனக்கு வேற வழி தெரியல நித்தி.....!எங்க குடும்பத்தை
மதிச்சு நாங்க அவங்களுக்கு....எங்க காதல பத்தி சொன்னோம்....!ஆனா....அவங்க....",சிறிது
இடைவெளி விட்டுத் தன் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்தவள்,

"அவங்களுடைய வறட்டு கவுரவுத்துக்காக....என்னால என் காதலை விட முடியாது....!",தீர்மானமாகச் சொன்னவள் எழுந்து சென்று விட்டாள்.

நீளமாகப் பேசி முடித்த காவ்யாவின் உரையாடலில் மற்ற மூவரும் அதிர்ந்து போய் நின்றிருந்தனர்.முதலில் சுதாரித்து....நித்திலாதான் பேச ஆரம்பித்தாள்.

"என்னடி.....!இப்படி சொல்லிட்டுப் போறா.....?காதலுக்காகப் பெத்தவங்களை விடப் போறேன்னு சொல்றா....?",எனப் பல்லைக் கடித்தவளிடம்,

"சும்மா கோபப்படாத நித்தி....!காதலிக்கறவங்களுக்குத்தான் அதனோட அருமை தெரியும்....!காவ்யா ஒன்னும் சந்தோஷமா இந்த முடிவை எடுத்திருக்க மாட்டா.....!அவளுக்கும் அவளைப் பெத்தவங்க மேல பாசம் இருக்கும்ல....அதையும் மீறி இந்த முடிவு எடுத்திருக்கான்னா....அவளோட நிலைமையை நாம புரிஞ்சுக்கணும்.....அவளோட நிலைமையில் இருந்தும் நாம யோசிக்கணும்....!",என்று விட்டு சென்று விட்டாள் நந்தினி.

'அப்படி என்னதான் காதலோ....?அம்மா அப்பாக்குத் தலை குனிவு ஏற்படுத்தற அளவுக்கா.....காதல் இருக்கும்.....!இந்த லட்சணத்துல...காதலிச்சுப் பார்த்தாதான் அதனோட அருமை தெரியுமாம்.....இந்தக் கருமத்துக்காகவே காதல்ங்கிற வார்தையைக் கூட மனசுல நெருங்க விடக் கூடாது....!இப்படிப்பட்ட அவஸ்தையைத் தர காதல் தேவைதானா....?' என்று கசப்பாக எண்ணியவள் மனதில்.....காதலின் மேல் ஒரு வெறுப்பு தோன்றியிருந்தது.

அவளுக்குத் தெரியவில்லை.....!காதல் அவஸ்தைதான்.....!ஆனால்.....அது சுகமான அவஸ்தை என்று....!!

பெற்றவர்களை எதிர்த்து திருமணம் செய்வது என்பது தவறுதான்.....!ஆனால்....அங்கு உண்மையான....ஆழமான காதல் இருக்கும் பட்சத்தில்....தேவையில்லாத வறட்டுப் பிடிவாதத்திற்க்காக காதலை விட்டுத் தர வேண்டிய அவசியமில்லையே....?

அதைத்தான் காவ்யாவும் செய்தாள்.....!கேவலம் இருவரும் வேறு வேறு ஜாதி என்று அப்பா சொல்லும் காரணத்திற்காக....அவர் பேச்சைக் கேட்டு அவர் பின்னால் சென்றால்....ரமேஷ் என் மேல் வைத்திருக்கும் உண்மையான காதலுக்கு நான் என்ன பதில் சொல்லட்டும் என்று கேட்டாள்.....?என்னை நம்பி....அவர் மனதை என்னிடம் கொடுத்திருக்கும் போது....எப்படி அவர் மனதுக்கு நான் துரோகம் செய்யட்டும்....?என்று கேட்டாள்.....!!

அவள் எடுத்த முடிவு ஒருவகையில் சரியானதுதான்....!தேவையில்லாத காரணத்திற்காக உண்மையான காதலை விட்டுத் தர வேண்டிய அவசியமில்லையே.....?ஆனால்.....நித்திலாவினால்தான் இதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.....!!!

இப்பொழுது இப்படி யோசிப்பவள்....காதல் தேவன் தன் பூ வலையை அவள் மீது வீசிய பிறகும்....இதே நிலையில் இருப்பாளா....?பாப்போம்....!!!
.................................................................................................

இறுதியாக ரமேஷ் மற்றும் காவ்யாவின் திருமணம் இன்னும் பத்து நாட்களில் என்று முடிவு செய்யப்பட்டது.ரமேஷ் வீட்டில் இவர்களது காதலை ஏற்றுக் கொண்டதால்....திருமண வேலைகள் ஜரூராக நடந்து கொண்டிருந்தது.

அன்று ஞாயிற்றுக்கிழமை.......

அலுவலகத்திற்கு விடுமுறை என்பதால்....தோழிகள் அனைவரும் நேரங்கழித்து எழுந்து....சோம்பலுடன் தங்கள் வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.நித்திலா,எண்ணெய் தேய்த்துத் தலைக்குக் குளித்து....முடியை உலர வைத்துக் கொண்டிருந்தாள்.

அவளருகில் வந்து அமர்ந்த காவ்யா,"என் மேல கோபமா நித்தி....?",என்று மெதுவாகக் கேட்க,

"சேச்சே....கோபமெல்லாம் இல்ல டி.....!",என்றவள் தன் செல்போனை எடுத்து விளையாட ஆரம்பித்தாள்.அவளது செய்கையே கூறியது....அவளுக்குக் கோபம்தான் என்று...!

அவளது செல்போனைப் பிடுங்கிக் கீழே வைத்தவள்,நித்திலாவின் கைகளைப் பிடித்துக் கொண்டு,"எனக்குத் தெரியும் நித்தி....!உனக்கு என்மேல கோபம்ன்னு.....கொஞ்சம் என் நிலைமையையும் யோசிச்சுப் பாருடி....வேற ஜாதிங்கிறதைத் தவிர...வேற என்ன காரணத்தை சொல்லி இருந்தாலும்....கடைசி வரைக்கும் எங்க அப்பா கூட...அவர் மகளாகவே கூட இருந்து அவருக்கு என் காதலைப் புரிய வைச்சிருப்பேன்.....ஆனா....அவரு....ஏண்டி நீ கூட என்னைப் புரிஞ்சுக்க மாட்டேங்கிற....?இந்த முடிவை நான் சந்தோஷமாவா எடுத்திருப்பேன்னு நினைக்கிற....?",என்றவள் கைகளால் தன் முகத்தை மூடிக் கொண்டு அழ ஆரம்பித்தாள்.

அவளது அழுகையில் தனது கோபத்தை உதறியவள்,எழுந்து காவ்யாவை அணைத்துக் கொண்டாள்.

"இல்ல காவ்யா....!அழுகாத.....எனக்கு உன் நிலைமை புரியுது டி....!எனக்கு எந்த கோபமும் இல்ல...ப்ளீஸ்.....அழாத டி....!",என்று அவள் தலையை வருடிக் கொடுத்தாள்.

இவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டு அங்கு நின்றிருந்த நந்தினியும்....வர்ஷாவும்,நிலைமையை மாற்றும் பொருட்டு,"ஹே.....கல்யாணப் பொண்ணு இப்படி அழலாமா.....?இப்படி அழுதுட்டே இருந்தா....முகம் வீங்கிடும்....!அப்புறம் ரமேஷ் அண்ணா,'என் டார்லிங்கை என்ன பண்ணுனீங்கன்னு' கேட்டா நாங்க என்ன பதில் சொல்றது....?",என்று கேலியில் இறங்கினர்.

அவர்களது கேலி கொஞ்சம் வேலை செய்தது.காவ்யாவின் அழுகைக் கொஞ்சம் மட்டுப்பட்டது.

அவளை சகஜ நிலைக்குக் கொண்டு வர எண்ணி,"கேர்ள்ஸ்.....!நாம ஷாப்பிங் போலாமா....?காவ்யா மேரேஜ்க்காக நிறைய பர்ச்சேஸ் பண்ணனும்....அவ கல்யாணத்தப்ப நாம எல்லாரும் பட்டுப் புடவைக் கட்டிக்கலாம்.....போலாமா...?",என நித்திலா கேட்க,

"ஓ....போலாமே.....!வாங்க....வாங்க....!எல்லாரும் ரெடி ஆகுங்க....!காவ்யா.....!கெட்டப்.....எழுந்திருச்சு கிளம்பு.....",என அவளை எழுப்பி குளிக்க அனுப்பிய வர்ஷா,மற்ற இருவரையும் பார்த்து,"நீங்களும் ரெடியாகுங்க....!",என விரட்டினாள்.

ஒரு வழியாக அனைவரும் கிளம்பி கடைவீதிக்குச் சென்றனர்.தோழிகள் அனைவரும் ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கி....தங்களுக்குத் தேவையானப் பொருட்களை வாங்கி முடிக்க மதியம் ஆகியிருந்தது.

ஒரு பிரபல மாலில் சுற்றிக் கொண்டிருந்தனர்.அங்கிருக்கும் ஒரு கடையில் தொங்க விடப் பட்டிருக்கும் சல்வார் அழகாக இருக்கவும்....அதைப் பார்த்த நித்திலா,"ஏய்.....!அந்த சல்வார் அழகா இருக்கல்ல.....?வாங்கப்பா.....போய் அது என்ன விலைன்னு கேட்போம்....?",என்றபடி முன்னால் செல்ல,

அவளை இழுத்துப் பிடித்து நிறுத்திய நந்தினி,"ஏய்....!எரும மாடே...!இன்னும் எத்தனை கடைடி ஏறி இறங்குவீங்க....?முதல்ல என் வயித்துக்கு எதாவது வாங்கிக் கொடுத்துட்டு....எங்கேயோ போய்த் தொலைங்க....",என்று கத்தினாள்.

"அடிப்பாவி....!அதுதான் அப்பப்ப பாப்கார்ன்...ஜூஸ்...மில்க்ஷேக்....ஐஸ்கிரீம்ன்னு உள்ள தள்ளிக்கிட்டே இருந்தயேடி.....இருந்தும் பசிக்குதுன்னா....இது என்ன வயிறா...?இல்ல...வண்ணாந்தாழியா.....?",என்று காவ்யா கிண்டலடிக்க,

"ஹ.....அதெல்லாம் சைடு டிஷ்....நான் கேட்கறது மெயின் டிஷ்....!இப்போ வாங்கித் தர முடியுமா....முடியாதா....?",

"சரி....சரி...!வாங்க....!ஃபுட் கோர்ட் போய் சாப்பிட்டுட்டுக் கிளம்பலாம்....",என்றபடி நித்திலா அழைத்துச் சென்றாள்.

தங்களுக்குத் தேவையானதை ஆர்டர் செய்து,வயிறு முட்ட உண்டவர்கள்....ஹாஸ்டலுக்குத் திரும்பத் தயாரானார்கள்.நித்திலாவின் சித்தி வீடு அருகில் இருப்பதால்....அவள் மட்டும் அங்கு சென்று விட்டு மாலையில் ஹாஸ்டலுக்கு வருவதாக சொல்லி விட்டுக் கிளம்பினாள்.

அங்கு சென்று சித்தியிடம் கதையளந்து விட்டு.....அவரது குழந்தைகளிடம் விளையாடி விட்டு...அங்கிருந்து நித்திலா கிளம்பும் போது மாலையாகியிருந்தது.

நகத்தைக் கடித்துத் துப்பியபடி....பதட்டத்துடன் அந்த பஸ் ஸ்டாப்பில் ஒற்றை ஆளாக நின்று கொண்டிருந்தாள் நித்திலா.'பஸ் ஸ்டாப் வரை வந்து பஸ் ஏற்றி விடுகிறேன்...' என்று கூறிய சித்தியையும் மறுத்து விட்டு....இவள் மட்டும் தனியாகக் கிளம்பி விட்டாள்.

ஊருக்கு வெளியே இருந்த புறநகர் பகுதியில் அவளது சித்தி வீடு இருந்தது.இப்பொழுதுதான்....அங்கங்கே புது வீடுகள் முளைத்துக் கொண்டிருந்தன.அதனால்,அவ்வளவாக ஆள் நடமாட்டம் இல்லை.

'ச்சே....!பேசாம சித்தியைத் துணைக்கு கூட்டிட்டு வந்திருக்கலாம்.சித்திக்கு போன் பண்ணலாம்னா இந்த போன்ல சார்ஜே இல்ல....மழை வேற வர மாதிரி இருக்கு....ஒதுங்கி நிக்கறதுக்குக் கூட ஒரு இடம் இல்ல....'என்று அவள் எண்ணிக் கொண்டிருக்கும் போதே மழை கொட்ட ஆரம்பித்து விட்டது.

நித்திலாவிற்கு கழிவிரக்கத்தில் கண்ணீரே வந்துவிட்டது.நேரமாக ஆக மழை வழுத்துக் கொண்டிருந்ததே தவிர குறையவில்லை.மழையில் சொட்ட சொட்ட நனைந்தபடி அழுது கொண்டிருந்தவளின் அருகே சீறிக் கொண்டு வந்து நின்றது அந்த வெளிநாட்டுக் கார்....!

பயத்தில் முகம் வெளிறி ஓட நினைத்தவளை....காரின் உள்ளிருந்து நீண்ட....வலிய கரம் ஒன்று அவளை இழுத்து உள்ளே தள்ளி...கார்க்கதவை அறைந்து சாத்தியது.

பயத்தில் கத்தவும் மறந்தவளாய்....உடல் நடுங்க நிமிர்ந்து பார்த்தவள் சந்தித்தது ஆதித்யனின் அனல் கக்கும் விழிகளைத்தான்.....இனம் புரியா நிம்மதியில்...விழிகளை மூடி பெருமூச்சு விட்டவள்,"ஓ....காட் .....!சார்....!நீ....நீங்கதானா.....?",எனத் தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டாள்.

அவளது முகத்தில் படர்ந்த நிம்மதியைப் பார்த்தும் பார்க்காமல் விட்டவன்,"உனக்கு கொஞ்சமாச்சும் அறிவு இருக்கா...?இப்போ மணி என்னன்னு தெரியுமா...?இந்த நேரத்துல இங்க வந்து நின்னுக்கிட்டு இருக்க....?",எனக் கோபத்தில் கத்த ஆரம்பித்தான்.

"இ...இல்ல....!என் சித்தி வீட்டுக்கு வந்தேன்....",என அவள் தடுமாற,

"மண்ணாங்கட்டி.....!இது சிட்டிக்கு அவுட்சைட்ல இருக்கிற ஏரியா.....இங்க ஆள் நடமாட்டம் அவ்வளவா இருக்காது....இந்த மாதிரி இடத்துக்கு வர்றதுன்னா....ஒண்ணு டாக்ஸி புக் பண்ணி அதுலேயே போய்ட்டு வர்ற மாதிரி ஏற்பாடு பண்ணனும்....அதுவும் இல்லையா....துணைக்கு யாரையாவதை கூட்டிட்டு வரணும்...இப்படி தனியா வந்து மாட்டிக்கிட்டு....பேந்த பேந்த முழிச்சிட்டு இருக்கக் கூடாது....",என சரமாரியாக திட்ட ஆரம்பித்தான்.

ஆதித்யனின் நண்பன் வீடு அந்த ஏரியாவில்தான் இருந்தது.அவனைச் சென்று பார்த்து விட்டுக் காரில் திரும்பி வரும் போது மழை பிடித்துக் கொண்டது.சாலையோரத்தில் ஒரு பெண் நிற்பது போல் தோன்றவும்....'யார்...?இந்த நேரத்தில்...?' என்று எண்ணியபடி உற்றுப் பார்த்த போதுதான் தெரிந்தது அது நித்திலா என்று....!

மழையில் நனைந்தபடி பயந்து கொண்டு நின்றிருந்தவளைப் பார்த்தவனுக்கு நெஞ்சு பதறியது....'இவளை யார் இந்த நேரத்தில இங்கு வரச் சொன்னா....?' என்று எண்ணிக் கோபம் கட்டுக்கடங்காமல் பெருக....அந்த கோபத்துடனேயே...அவளைக் காரில் இழுத்துத் தள்ளியவன் அவளிடம் கத்த ஆரம்பித்தான்.

"சாரி....!இப்படி பஸ் கிடைக்காதுன்னு எனக்குத் தெரியாது....ரொ...ரொம்ப தேங்க்ஸ்....!நீங்க மட்டும் வரலைன்னா....",என்றவளுக்கு அதற்கு மேல் பேச முடியாமல் வார்த்தைகள் தொண்டைக்குள் உருண்டன.

கண்களில் கண்ணீருடன் அமர்ந்திருந்தவளைப் பார்த்தவனுக்குக் கோபம் கொஞ்சம் குறைந்தது."சரி...அழுகாத....!மழை வர்ற மாதிரி இருக்கும் போதே உங்க சித்திக்கு போன் பண்ணி இன்பார்ம் பண்ணிருக்கலாம்ல.....",அவளை அந்த நிலைமையில் பார்த்தவனுக்கு முழுவதுமாக கோபம் குறைய மறுத்தது.

"இல்ல....என் மொபைல்ல சார்ஜ் தீர்ந்து போய்டுச்சு....",தயங்கித் தயங்கி கூறியவளைப் பார்த்தவனுக்குப் போன கோபம் திரும்பி வந்து சேர்ந்தது.

"உன்னையெல்லாம் என்ன செஞ்சா தகும்....?எங்கேயாவது வெளியில போகும் போது மொபைல்ல பேட்டரி ஃபுல் பண்ணிக்கணும்ங்கிற பேசிக் சென்ஸ் கூடவா இல்ல....?",என மீண்டும் பொரிய ஆரம்பித்தவனை கையமர்த்தித் தடுத்தவள்,

"போதும்...போதும் சார்....!நான் செஞ்சது தப்புன்னு எனக்குப் புரியுது.....அதுதான் போதும்ங்கிற அளவுக்குத் திட்டிட்டீங்களே.....நான் கண்டேனா....?உங்க ஊர்ல வெயில் அடிச்சாலும் மண்டை காயற அளவுக்கு அடிக்குது.....மழை பெய்தாலும் 'சோ'ன்னு கொட்டுது....",என்று முணுமுணுத்தவளைக் கண்டவனுக்கு சிரிப்புதான் வந்தது.

'எங்க ஊரா.....?இனி....உன் ஊரும் இதுதான் டி.....!',என்று மனதிற்குள் நினைத்தவன் வெளியே,"இனி இப்படி எதைப் பத்தியும் யோசிக்காம வெளில கிளம்பாத.....",என்றபடி காரைக் கிளப்பினான்.

வெளியே மழை பெரும் சத்தத்துடன் கொட்டிக் கொண்டிருக்க....காருக்குள் அதற்கு எதிமாறாக பெரும் அமைதி நிலவியது.

எதேச்சையாக அவள் புறம் திரும்பியவனின் பார்வை....பார்த்தது பார்த்தபடி அவள் மீதே நிலைத்தது.


மழையில் நனைந்திருந்ததால்....உடலுடன் ஒட்டிய ஆடை அவளது மேனியழகை அப்பட்டமாக படம் பிடித்துக் காட்ட....ஈரக் கூந்தலுடன்....நெற்றியிலும்....கன்னங்களிலும் துளித் துளியாய் மழைத்துளி ஒட்டியிருக்க.....ஒரு தேவதை போல் அமர்ந்திருந்தாள்....!

இவை அனைத்திற்கும் முத்தாரம் வைப்பது போல்....ஒரு ஒற்றை மழைத்துளி ஒன்று....அவள் இதழின் மேல் ஒய்யாரமாய் வீற்றிருந்தது...!

அவள் முகத்திலிருக்கும் மழைத்துளிகளை தன் முகம் கொண்டு துடைத்து....அவள் இதழின் மேல்
ஒய்யாரமாய் சயனித்திருக்கும் அந்த ஒற்றை மழைத்துளியை தன் இதழ் கொண்டு சுவைக்க வேண்டும் போலொரு தாபம் எழுந்தது ஆதித்யனுக்குள்....!

அப்பொழுது....அவள் நெற்றியிலிருந்து வழிந்த மழைத்துளி அவள் கன்னத்தில் உருண்டோடி.....அவள் சங்கு கழுத்தில் பயணித்து....அதற்கும் கீழே இறங்க....அவ்வளவுதான்....!அவன் காரை நிறுத்தி விட்டான்.....

"கிறீச்....!" என்ற சத்தத்துடன் கார் நிற்கவும் அவனைத் திரும்பிப் பார்த்தவள்,"என்னாச்சு சார்...?",என்று கேட்க,

அவள் விழிகளைப் பார்ப்பதை தவிர்த்தவன்,"தெ...தெரியல....!நான் போய் பார்க்கிறேன்....!",என்றபடி கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது கார்கதவைத் திறந்து இறங்கினான்.

ஆர்பரித்துக் கொண்டு மண்ணில் வந்து விழுந்த மழைத்துளிகளைப் போலவே....அவன் மனதிற்குள் உணர்வுகள் ஆர்பரித்துக் கொண்டிருந்தன....!இதுவரை அவன் அறியாத உணர்வுகள்....எந்தப் பெண்ணைப் பார்த்தும்....கிளர்ந்து எழாத உணர்வுகள்....இன்று நித்திலாவினால் அவனுக்கு அறிமுகப்படுத்தப்பட்டன...!

கைகளால் தன் முகத்தில் வழிந்த நீரைத் துடைத்தவன்,"ப்பா....என்ன உணர்வுடா இது....!இன்னும் கொஞ்ச நேரம் காருக்குள் இருந்திருந்தாலும்....அவளை முத்தமிட்டிருப்போம்.....!கூடிய சீக்கிரம்....என் காதலை அவகிட்ட சொல்லி....அவளை என்னவளாக்கிக் கொள்ள வேண்டும்...!",என்று நினைத்தவன் ஒருவாறாகத் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு காரில் ஏறினான்.

காரில் ஏறி அமர்ந்து வண்டியைக் கிளப்பியவனிடம்,"என்னாச்சு சார்...?",என்று நித்திலா மீண்டும் கேள்வி எழுப்ப,

அவளை ரசிக்கச் சொன்ன மனதை அதன் தலையில் கொட்டி அடக்கியவன்....முயன்று அவள் விழிகளைப் பார்த்து புன்னகைத்து,"ஒரு சின்ன ப்ராப்லம்....!சரி பண்ணிட்டேன்....",என்றவன்,

பின்னாடி சீட்டிலிருந்து ஒரு டவலை எடுத்து அவளிடம் நீட்டியபடி,"ரொம்ப நனைஞ்சிருக்க.....துவட்டிக்கோ....!",என்றான்.

அதை வாங்கி தன் தலையையும்....முகத்தையும் துடைத்தவள்,"நீங்களும்தான் நல்லா நனைஞ்சிட்டீங்க...!",என்றபடி டவலை அவனிடமே திருப்பிக் கொடுத்தாள்.

ஒரு கையால் அந்த டவலை வாங்கித் தன் முகத்தில் வைத்து....ஆழ்ந்து சுவாசித்தான்....!டவல் முழுவதும் அவள் வாசனைகள்...!பின் அதைக் கொண்டு தன் முகத்தை அழுந்தத் துடைத்தவன்....அதைப் பத்திரப்படுத்தவும் மறக்கவில்லை....!

கார் சீரான வேகத்தில் சாலையில் சென்று கொண்டிருந்தது.பரபரவென்று தன் இரு கைகளையும் தேய்த்து....தன் கன்னத்தில் வைத்தவள்....,"ரொம்ப குளிரா இருக்கல்ல....?",என்று ஆதித்யனைப் பார்த்துக் கேட்க,

அவளை ஒரு மார்க்கமாக திரும்பிப் பார்த்தவன்,"ஹ்ம்ம்....!எனக்கு ரொம்ப சூடா இருக்கு....!",என முணுமுணுக்க,

"என்ன சார் சொன்னீங்க....?எனக்கு சரியா கேட்கல....?",என்றவளிடம்,

"ம்ம்....சூடா ஹீட்டரை ஆன் பண்ணறேன்னு சொன்னேன்....",என்று பெருமூச்சு விட்டபடி காரின் ஏ.ஸி யை நிறுத்திவிட்டு ஹீட்டரை ஆன் செய்தான்.

அதன் பிறகு காரில் அழகான மௌனமே ஆட்சி செய்தது.

ஹாஸ்டலின் வாசலில் அவளை இறக்கிவிட்டவன்,"எங்கேயும் தனியாப் போகாதே....!பிரெண்ட்ஸ் யாரையாவது கூட்டிட்டுப் போ....",என்று எச்சரிக்கவும் தவறவில்லை.

'சரி' என்பதாய் தலையாட்டியவள்.....கண்களில் நன்றி பெருக்குடன் அவனைப் பார்த்து,"தேங்க் யூ சார்....!",என்க,

அவனோ....கண்களில் காதல் பெருக்குடன் அவளைப் பார்த்து தலையசைத்தான்.

இவர்கள் இருவரையும் சந்திக்க வைத்த காதலோ....மயக்கும் புன்னகையுடன் இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தது....!!!



அகம் தொட வருவான்...!!!
 








Top