Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஒப்பிடுவதை விட்டு உன் திறமைக்கு உரமிடு

Advertisement

Joyram

New member
Member
ஒப்பிடுவது என்பது நேர்மறையான செயல் அல்ல என்று அறிகிறோம். ஒவ்வொரு தனி மனிதனுக்கும் எதோ சில சிறப்பு திறமை மற்றும் குணாதிசயங்கள் நிச்சயம் உண்டு. இதையும் நாம் ஒப்புக்கொள்கிறோம். எனவே ஒவ்வொருவரும் அவரது சொந்த ஆற்றல்களையும் திறமைகளையும் கொண்டு தான் என்ன சாதிக்க முடியும் என்று சிந்தித்து அதன்படி யுக்திகளை கையாண்டு காரியங்கள் புரிதல் வேண்டும் என்றும் அறிகிறோம். இவை அனைத்தும் கேட்க படிக்க மிகவும் உண்மையான கூற்றாகத்தான் தெரியும். ஆனால், இவ்வுலக வாழ்வு எப்படி பட்டது எனில், ஒப்பிட்டு பார்த்து வாழ்வது, அதன் அடிப்படையில் வாழ்க்கையை அமைப்பது என்கிற நெறிமுறை தான் நாம் கண்கூடாக காண்பது. மஹாத்மா காந்தி அரிச்சந்திரனை போல வாழ விருப்பம் கொண்டார். மன்னர் அசோகர் புத்தரை போல ஞானம் பெற நினைத்தார். பல விஞ்ஞானிகள் ஐன்ஸ்ட்டினை போல, நியூட்டனை போல, எடிசனை போல கண்டுபிடுப்புகள் செய்ய பாடுபடுகின்றனர். பலர் நடிகர் திலகம் சிவாஜி கணேசனை போல நடிக்க ஆசை படுகிறார்கள். பலர் எஸ் பி பாலசுப்ரமணியம் போல பாட துடிக்கின்றனர். இன்னும் சிலர் ரஜனியை போல ஸ்டைல்கள் செய்ய உயிரை விடுகிறார்கள். டெண்டுல்கர் போல கிரிக்கெட் ஆட வேண்டும், வேறு பலரை போல காரியங்களை செய்ய வேண்டும் என்று ஏங்குபவர்கள் எண்ணற்றவர்கள்.
மேற்கூறியதை நான் சொல்ல காரணம் என்னவென்றால் ஒப்பிடுதல் கூடாது என்கிறபோது ஒருவரை போல இன்னொருவர் வாழ நினைப்பது கூட ஒப்பிடுதல் தான். ஒருவரிடமிருந்து உற்சாகம் பெறுவது வேறு. காந்தி அடிகளைப்போன்று மற்றவர் கூற்றுக்கு கவலை படாமல் இருப்பது, மெல்லிசை மன்னர் MSV ( எம் எஸ் விஸ்வநாதன்) வியை போல கடமை உணர்வு இருப்பது, டாட்டா நிறுவன முன்னாள் சார்மன் ரதன் டாட்டாவை போல செருக்கு இல்லாமல் இருப்பது, பெருந்தலைவர் காமராஜை போல நாணயமாக இருப்பது இவை எல்லாம் ஒருவருக்கு inspiration( ஊக்குவிப்பு) ஆக இருக்கலாம். அது ஒருவருக்கு மிகவும் நன்மையை தரும். ஆனால் இன்னொருவரை போலவே சாதனை படைக்க வேண்டும், வாழ வேண்டும் என்று நினைப்பது கனவு காண்பது ஒருவரை தன்னுடன் ஒப்பிடுவதன் காரணமாகவே. இத்தகைய செயல் சிலருக்கு குறுகிய கால வெற்றிகளை கொடுத்திடலாம்.ஆனால் அவை எப்போதும் நிலைத்து நிற்காது.

முன்னாள் திரைப்பட பாடகர் TMS என்று அழைக்கப்படும் டி எம் சௌந்தர்ராஜன் திரைப்படத்திற்கு பாட வாய்ப்பு தேடி அலைந்தபோது அப்போது பிரபலமாக இருந்த தியாகராஜ பாகவதர் போலவே பாடுவாராம். இதனால் அவருக்கு மேடைகளில் பாட வாய்ப்பு கிடைத்தது. அதன் மூலம் திரைப்பட பாடல்கள் பாட வாய்ப்பும் கிடைத்தது. ஆனால் அவர் திரையிசை பாடல்களை பாட தொடங்கியவுடன் அவர் தனது பாடும் முறைகளை மெல்ல மாற்றி கொள்ள தொடங்கினார். தனக்கேயுள்ள சொந்த குரலில் பாட துவங்கினார். பின்னர் சிவாஜி மற்றும் எம் ஜி ஆர் இவர்களுக்கு பாடுகையில் தன் குரலை ஓரளவுக்கு மாற்றி இந்த நடிகர்களின் குரலுக்கு உகந்தது போல பாட ஆரம்பித்தார். அதன் மூலம் பல ஆண்டுகள் தமிழ் திரை உலகின் மிகவும் புகழ் வாய்ந்த பாடகராக இருந்து விளங்கினார். மற்றவர்களும் இந்த நுணுக்கமான திறமையை கையாளலாம். ஆரம்பத்தில் ஒருவருடைய பாணியை கையாண்டு பின்னர் தனக்கென உள்ள பாணியையும் திறமையையும் பயன் படுத்தினால் அது அவருக்கு மிகுந்த திருப்தியை கொடுக்கும். நல்ல வெற்றிகளையும் பெற்று தரலாம்.

கவியரசு கண்ணதாசன் ஒரு பாடலில் " உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்து பார்த்து நிம்மதி நாடு" என்பார். நம்மைவிட எவ்வளவு மக்கள் எவ்வளவோ வறுமையில் இருக்கிறார்கள் என நினைக்கவேண்டும் என்பது இதன் பொருள். அப்படி என்றால் நாம் நம்மை நம் கீழே உள்ளவர்களுடன் ஒப்பிடுவதை போலத்தானே?

நம் பிள்ளைகளை அவர்கள் குறைவாக மதிப்பெண்கள் பெற்றால்" பின் எப்படி உன் வகுப்பு மாணவன் இன்னொருவன் உன்னை விட அதிகமாக மதிப்பெண்கள் பெற்றான்?" என்று கேட்கும் போது நாமே நம் பிள்ளைகளை மற்றவர்களுடன் ஒப்பிட்டு பார்க்கிறோம். இந்த ஒப்பிடுவது அனேகமாக எல்லா வீடுகளிலும் எதோ ஒரு விதத்தில் நடந்த வண்ணம் தான் இருக்கிறது. நாம் அலுவலங்களில் வேலை புரிகையில் பதவி உயர்வு நாம் எண்ணியபடி கிடைக்காவிட்டால் "அதெப்படி நானும் அவரை போலத்தான் வேலை செய்கிறேன். ஆனால் அவருக்கு மட்டும் எப்படி பதவி உயர்வு கிடைத்தது?" என்று தான் எண்ணுகிறோம். அவர் மேலதிகாரிக்கு நல்ல வெண்ணை தடவுபவராக இருக்கலாம். எனவே ஒப்பிட்டு பார்ப்பது நிச்சயம் சரியில்லை தான். தன் திறமை மற்றும் உழைப்பில் நம்பிக்கை கொண்டவர்கள் அந்த அளவுக்கு ஒப்பிட மாட்டார்கள். மறுபிறவிகளில் நம்பிக்கை கொண்டவர்கள் " நான் அவனுடன் என்னை ஒப்பிடமாட்டேன். ஏனெனில் அவனின் பூர்வ ஜென்ம பலன்களும் என்னுடையதும் வேறு வேறு" என்று சொல்லி ஓய்ந்துவிடுவார்கள். ஆனால் சராசரியான ஒவ்வொரு மனிதனும் மற்றவருடன் ஒப்பிட்டு தான் வாழ்க்கையே நடத்துகிறார்கள். பொதுவாக மனித மனம் ஒப்பிட்டு பார்த்து தான் வாழ்கிறது. வாழும் கூட.

Joyram
 
Top