Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஒற்றை கால் மண்டபம் EPISODE 26 FINAL ( PART 2)

Advertisement

niranjana subramani

Well-known member
Member
26.

(இறுதி அத்தியாயம் 2.)

“ மயிலரசி இறந்தவுடன் அடுத்து எப்படி பழிவாங்குறது ஒரே யோசனையா இருந்துச்சு. அப்போ ஒரு நாள் காய்ச்சல் வந்து நிலவரசனுக்கு ரொம்ப உடம்பு சரி இல்லாம போச்சு. மருத்துவமனைக்கு போகணும்ன்னு சொல்றப்போ இந்த மாரி தில்லைநாயகிட்ட பார்க்கலாம்ன்னு சொல்லி என்னைய போய் கூட்டிட்டு வரசொன்னாங்க திலைநாயகியை.

எனக்கு முதல்ல ஒன்னும் தோணல. சரின்னு என் அத்தை வீட்டுக்கு போனவுடன் ஒரு யோசனை வந்துச்சு” என வேல்ராசன் கூறிக்கொண்டிருக்கையில்

“ என்ன யோசனை???” என கிஷோர் இடையிட்டு வினவ

“ அது நிலவரசனுக்கு தில்லைநாயகி மூலமா விஷம் குடுத்து கொல்லலாம்ன்னு. ஆனா அதுக்கு தில்லைநாயகி ஒத்துக்கணுமேன்னு சிறு தயக்கம். அதனால என் அத்தைகிட்ட நான் தில்லைராஜன் பையன்னு சொல்லாம வேலுவா அறிமுகப்படுத்திகிட்டு பேச ஆரம்பிச்சேன்”

“ என்னன்னு??” என மீண்டும் கிஷோர் கேட்க

“ மயிலரசியை நிலவரசன் காதலிக்குறதா ஏமாத்திட்டதாவும் ஆதிலிங்க மூர்த்திக்கிட்ட நியாயம் கேட்ட மயிலரசியை ஊரைவிட்டு போக சொல்லி மிரட்டுனதுல மனசு ஒடைஞ்சு தற்கொலை பண்ணிகிட்டாள்ன்னு சொன்னே.”

“ அதை தில்லைநாயகி நம்பிட்டாங்களா??” என ஹர்ஷா வேலுவின் பேச்சில் இடைபுகுந்து வினவ

“ முதல்ல நம்பல சார். ஆனா நான் ஆதிலிங்க மூர்த்தி மயிலரசிகிட்ட பேசுவதை பார்த்ததா சொல்லி கொஞ்ச கொஞ்சமா பேசி நம்ப வச்சு என் திட்டத்துக்கு, அதான் நிலவரசனுக்கு விஷம் குடுக்க ஒத்துக்க வச்சு ஆதிலிங்க மூர்த்தி வீட்டுக்கு கூட்டிட்டுபோன்னேன்.

ஆனா நான் சொன்னதை செய்யாம அவனை கொஞ்சம் கொஞ்சமா பைத்தியமா ஆக்குற மருந்தை குடுத்துருக்காங்க” என வேலு கூற

“ ஏன்???” ஹர்ஷா கேட்க

“ நானும் இதே கேள்வியை கேட்டேன் சார், அதுக்கு அத்தை ‘ நான் என் மகளை பிரிஞ்சு அடையிற வேதனையை விட இது கொடுமையானதுன்னு சொன்னாங்க’ எனக்கு புரியலன்னு சொன்னேன்.

அதுக்கு நிலவரசன் இறந்துட்டா கொஞ்ச நாளுல வனிதாவுக்காக அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமா மீண்டுடுவான். ஆனா கண்ணுமுன்னாடியே இத்தனை வருசமா பெத்து வளர்த்த மகனோட வாழ்க்கை அழியுறதை பார்த்து அவனை குணப்படுத்த முடியாம துடிக்கனும்.

அப்போதான் எனக்கு நிம்மதி என கூறிவிட்டு போய்ட்டாங்க அத்தை. அப்புறம் அவுங்களே நிலவரசனை குணப்படுத்தாம இருக்க ஒரு மருந்தை குடுத்து அதுதான் இந்த குணப்படுத்துற மருந்துன்னு பொய் சொல்லி இத்தனை வருசமா அதை ஆதிலிங்க மூர்த்தி கையாலையே குடுத்து அவர் மகனை அவராலே பைத்தியம் ஆக்கி வச்சுருக்காங்க” என வேலு கூறி முடிக்க

அங்கு ஊசி விழுந்தால் கூட கேட்கும் அளவுக்கு அவ்வளவு அமைதியாக இருந்தது.

ஹர்ஷா தொடர்ந்து “ அப்போ வனிதாவையும் அப்போவே எதாவது செஞ்சுருக்க வேண்டியதுதானே??” என கேட்க

“ இல்ல சார் இல்ல அப்போவே அவளுக்கு எந்த தண்டனையும் குடுக்க கூடாது அவளுக்கு கல்யாணம் ஏற்பாடு பண்றப்போ தான் எதாவது செய்யணும்ன்னு முடிவு செஞ்சேன்”

“ ஏன் வேலு??”

“ சார் நான் மயிலரசியை கல்யாணம் பண்ணி அவகூட சந்தோசமா வாழணும்ன்னு எவ்வளவு கனவு கண்டேன் தெரியுமா. ஆனா அது எல்லாம் ஒன்னும் இல்லாம ஆகிடுச்சுல.

அதே மாதிரி வனிதாவுக்கு கல்யாண ஏற்பாடு செஞ்சு அவளும் அவளோட எதிர்காலம் பத்தி கனவுகளோட இருக்கும் போது பழிவாங்கணும்ந்தான் இந்த மூணு வருசமா காத்துக்கிட்டு இருந்தேன்.”

“ ஆனா அவளையும் மனநிலை சரி இல்லாதவளா மாத்திருக்க வேண்டியது தானே. அவளை மட்டும் எதுக்கு கொல்ல பார்த்த??” என ஹர்ஷா கேட்க வேலு எதுவும் கூறாது அமைதியாக இருந்தான்.

இதுவரை வேலு மற்றும் ஹர்ஷாவின் சம்பாஷணையை அமைதியாக கவனித்துக்கொண்டிருந்த மற்றவர்கள் வேலுவின் அமைதியை கண்டு வேறு எதுவோ பெரிதாக வரப்போகிறது என்ற எண்ணத்துடன் கவனித்துக்கொண்டிருந்தனர்.

சிறுது நேரத்திற்கு பின்,

“ சொல்லு வேலு. ஏன் வனிதாவை கொல்ல பார்த்தீங்க??” என மீண்டும் ஹர்ஷா வினவ

“ அதுக்கு காரணம் நான் இல்ல சார். என் அத்தை தில்லைநாயகினாலதான் வனிதாவை கொல்ல முடிவு எடுத்தேன்.”

“ என்ன சொல்ற???”

“ ஆமா சார் வனிதாவுக்கு கல்யாணம் ஏற்பாடு செஞ்சவுடன் என் திட்டப்படி இவளையும் நிலவரசன் மாதிரி மனநிலை பாதிப்பு அடைய செய்து அவளோட நிச்சயத்துல குளறுபடி பண்ண முடிவு பண்ணுனேன்.

அதேமாதிரி அந்த மருந்தை வாங்க என் அத்தை வீட்டுக்கு போனேன் அன்றைக்கு” என தில்லைநாயகிக்கும் வேலரசனுக்குமான சம்பாஷணையை நினைவுகூர ஆரம்பித்தான்.

“ ஏய்!! வாப்பா… வேலு. என்ன வெளியில நிக்குற??... உள்ளாரா வாப்பா” என தில்லைநாயகி தன் வீட்டின் வாசலில் நின்றுகொண்டிருந்த வேலரசனை அழைக்க வீட்டினுள் நுழைந்தான் வேலு.

“ இப்படி உட்காருப்பா குடிக்க எதாவது கொண்டுவரேன்” என கூறி இரு டம்ளர்களில் காபி கொண்டுவந்த தில்லைநாயகி ஒன்றை வேலுவிடம் குடுத்துவிட்டு மற்றொன்றை தான் எடுத்துக்கொண்டு வேலுவின் எதிரில் அமர்ந்தார்.

“ சொல்லுப்பா என்ன விஷயமா வந்துருக்க???” என தில்லைநாயகி கேட்க

“ அது… அது… வந்துங்க வனிதாவுக்கு கல்யாண ஏற்பாடு பண்ணிருக்காங்க”

“ அப்படியா!!.... ரொம்ப சந்தோசம்பா. என் பொண்ணோட தோழி.
நல்ல பொண்ணு. அம்மா அம்மான்னு எப்பொழுதும் இங்க வந்துடும், சின்னதுல இருந்து ரெண்டு ரெட்டை பிள்ளைங்க மாதிரி இருந்துச்சுங்க.

ஹ்ம்ம் யாரு கண்ணு பட்டுச்சோ என் மக அரசி இப்படி வாழவேண்டிய வயசுல போய்சேந்துட்டா . அந்த வனிதா பொண்ணாவது நல்லா இருக்கட்டும்” என கூறி தன் கலங்கிய விழிகளை தன புடவையின் முந்தானையில் துடைக்க

அதனை கண்ட வேலு அதிர்ச்சியாகவும் கோபமாகவும்,

“ நீங்க என்ன சொல்றீங்க அரசியோட இறப்புக்கு வனிதாவும் ஒருவகையில் காரணம் இல்லையா???. அப்போ அவளையும் நாம எதாவது செய்யணும்ல”

“ நீ என்னப்பா சொல்ற வனித்தவா???.”

“ அவளும்தானே நிலவரசனை காதலிக்க மயிலரசிக்கு துணையா இருந்துருக்கா”

“ இல்லப்பா வேலு. ஒரு வேலை நிலவரசனை பத்தி ஆதிலிங்க மூர்த்தி பத்தி எல்லாம் அந்த பொண்ணு தெரியாம இருந்துருக்கும்.”

“ ஏது வனிதாவுக்கு தெரிஞ்சுருக்காது. ஹ்ம்ம்… ஆனா….” என வேலு நக்கல் குரலில் கூறிவிட்டு பின் வேறு எதோ கூற வருகையில் இடையிட்ட தில்லைநாயகி

“ நீ சொல்றமாதிரி வனிதாவும் என் பொண்ணு இறப்புக்கு காரணமா இருந்தாலும், என்னால அந்த பொண்ணுக்கு எந்த தீங்கும் செய்ய முடியாது.

அத்தோட நான் என்னோட சுயநலத்துக்காக என் மருத்துவ தொழிலை தப்பான வழில பயன்படுத்தி ஒருத்தனை மனநிலை சரி இல்லாதவனா மாத்திட்டேன். அதுவே என்னைய குற்ற உணர்ச்சில கொல்லுது.

அதனால நானே அந்த நிலவரசனை குணப்படுத்திட்டு எங்கையாவது கோயில் குளம்ன்னு போகலாம்ன்னு இருக்கேன்” என தில்லைநாயகி வேலுவின் எண்ணத்தை புரிந்துகொண்டு அவனை பேசவிடாது அவரின் முடிவை தெளிவாக கூறினார்.

தில்லைநாயகி பேசி முடித்தவுடன் வேலு எதுவும் கூற தோணாது வேகமாக டம்பளரை வைத்துவிட்டு வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டான். அவன் சென்றவுடன்,

‘ இவன் எதுக்காக ஆதிலிங்க மூர்த்தி குடும்பத்தை பழிவாங்க இவ்வளவு துடிக்குறான். உண்மையிலயே அரசி இறப்பு காரணமா இல்ல இவனோட சொந்த வெறுப்புக்கு என்னைய பயன்படுத்திக்குறானா??’ என மனதில் எண்ணிக்கொண்டு அவரும் வீட்டை பூட்டிவிட்டு எப்பொழுதும் மனது சரி இல்லை என்றால் செல்லு இடமான ஒற்றை கால் மண்டபத்திற்கு சென்றார்.

தில்லைநாயகி வீட்டை விட்டு வெளியே சென்ற வேலரசனுக்கு மனது உலைகளமாக கொதித்தது.

‘ எவ்வளவு கஷ்டப்பட்டு நிலவரசனை இந்த நிலைமைக்கு மாத்தினா இப்போ வந்து இந்த அத்தை அவனை குணப்படுத்தப்போகுதாம். இந்த அத்தைக்கு என்ன லூசா பிடிச்சுருக்கு. இப்போ என்ன செய்றது’ என யோசித்த வேலு

‘ எப்படியாவது அத்தைகிட்ட மயிலரசி இறப்பை பத்தி பேசி பேசி கோவத்தை தூண்டிவிட்டு நம்ம பக்கம் சாய்க்கனும்’ என்ற முடிவுடன் தில்லைநாயகி வீட்டை அடைய,

அங்கு பூட்டு போட்டிருந்த வீட்டை பார்த்து தில்லைநாயகியை தேடுகையில் ஒற்றை கால் மண்டபத்தில் யாருடனோ பேசும் குரல் கேட்டு அங்கு சென்ற வேலுவின் பார்ப்பவையில் தில்லைநாயகி யாரோ
ஒரு பெண்ணிடம் வெளியூர் கோவில் குளம்ன்னு போகபோறதாக கூறுவதை கவனித்து பல்லை கடித்தான் வேலு.

பின் தில்லைநாகியிடம் பேசிக்கொண்டிருந்த பெண் சென்றவுடன் அங்கு போன வேலு,

“ நீங்க பண்ணுறது கொஞ்சமும் சரி இல்லை” என கூற அவன் எதை கூறுகிறான் என ஊகித்த தில்லைநாயகி

“ இல்ல வேலு நான் சரியாதான் செய்றேன். எந்த ஜென்மத்துல என்ன பாவம் பண்ணினேனோ தெரியல. வாழ்க்கையில ஏமாந்து எல்லா சொந்தங்களும் இருந்தும் தனிமையில பிள்ளையை வளர்த்து. இன்னைக்கு அந்த பிள்ளையையும் இழந்து தனிச்சு நிக்குறேன்.

இதுல மேற்கொண்டு பாவம் பண்ண விரும்பல. அதோட மூணு வருசத்துக்கு முன்னாடி என் மகளை இழந்த வேதனை, பழிவாங்குற வெறின்னு தப்பான வழில போய்ட்டேன்.

அதையே எப்படி இப்போ சரிபண்ண போறேன்னு தெரியல.
கொஞ்ச நாளா அதுவே என்னோட சிந்தனையா இருக்கு இதுல மேற்கொண்டு பாவத்தை செய்ய விரும்பல நீயும் இனிமே என் மகளுக்காக எதுவும் செய்ய வேண்டாம்.

அவுங்க அவுங்க செயல்களுக்கான பலனை அவனுங்களே அனுபவிப்பாங்க” என் தில்லைநாயகி கூறி முடிக்கையில்

“ என்ன சொன்னிங்க!!!.... எந்த ஜென்மத்துல என்ன பாவமோவா???. இந்த ஜென்மத்துலையே நிறைய பாவம் பண்ணிருக்கீங்களே. அதை என்ன செய்ய போறிங்க” என வேலு கோவமாக கேட்க

தில்லைநாயகி “ என்ன!!!...” என அதிர்ந்தார்

“ என்ன மறந்துபோச்சா பெத்து வளர்த்தவங்களை ஊருக்கு முன்னாடி அவமானபடுத்திட்டு, மணமேடையில் என் மாமாவை அசிங்கப்படுத்தி, உங்க காதல் முக்கியம்ன்னு ஓடிப்போனிங்களே அது பாவம் இல்லையா??” என வேலு கூற

“ உன…. உனக்கு…. எப்படி தெரியும்???..... மாமாவா!!!.... அப்போ…. அப்போ நீ!!!!...” என அதிர்ச்சியாக தில்லைநாயகி திணற

“ நானா???. நான்தான் உங்க அண்ணன் பையன் நீங்க ஆசையா வளர்த்து பாதியில விட்டுட்டு போன வேலரசன்.”

“ நீ வேலரசனா!!!!... வேலா……” என வேகமாக கூறி வேலுவின் அருகில் தில்லைநாயகி நெருங்க வருகையில்

“ அங்கேயே நில்லுங்க அத்தை. என்ன பாசமாக்கும். இந்த பாசம் எப்படி திடீர்ன்னு வந்துச்சு. இத்தனை வருஷம் எங்க நினைப்பு இல்லாமதானே இருந்திருக்கீங்க”

“ இல்ல வேலா. அன்றைக்கு நான் ரொம்ப மனசு ஒடைஞ்சு போய் என்ன பண்றதுன்னு தெரியாம அம்மா அப்பா முகத்துல முழிக்க தைரியம் இல்லாமதான் ஊரைவிட்டு வந்தேன்” என தில்லைநாயகி கூற

“ நீங்க மட்டும் அன்றைக்கு ஊரைவிட்டு வராம இருந்திருந்தா தாத்தா அப்பத்தா இன்னைக்கு நல்லபடியா உயிரோட இருந்துருப்பாங்க. நாங்களும் சொந்த ஊரைவிட்டு இத்தனை வருஷம் பிழைப்புக்காக அலைஞ்சுருக்க வேண்டியது இல்ல.

இன்றைக்கு மயிலரசியும் உயிரோட இருந்துருப்பா. எங்க கல்யாணமும் நான் ஆசைப்பட்ட மாதிரி நடந்துருக்கும்” என வேலு கூறிக்கொண்டிருக்கையில்,

அதுவரை வேலுவின் பேச்சை அழுகையுடன் கேட்டு கொண்டிருந்த தில்லைநாயகி கடைசியில் மயிலரசி கல்யாணம் பற்றி கூறியதை கவனித்து,

“ நீ என்ன சொல்ற வேலா???. நீ மயிலரசியை கல்யாணம் பண்ண ஆசைப்பட்டியா??”

“ ஆசைப்பட்டியாவா???. அரசியை நான் எவ்வளவு விரும்புனேன் தெரியுமா அத்தை. ஏன் அப்பத்தாகூட நான் மயிலரசியை தான் கட்டிகணும்ன்னு சொல்லி சத்தியம் வாங்கி செத்து போச்சு.

ஆனா நான் எவ்வளவு சொல்லியும் கடைசிவரை அரசி என் காதலை ஒத்துக்கவேயில்ல புருஞ்சுக்கவும் இல்ல” என வேதனையுடன் வேலரசன் கூற

“ நீ என்ன சொல்ற வேலா அரசிகிட்ட பேசுனியா???. எப்போ??” என அதிர்ச்சியாக தில்லைநாயகி வினவ

“ பேசுனியவா!!.... நான் காலுல விழாத குறையா உங்க மககிட்ட கெஞ்சுனேன். ஆனா அவ கடைசிவரை ஒத்துக்கவே இல்ல தெரியுமா. இதுல நான் கத்தியை வச்சு என்னைய காயப்படுத்திக்குவேன்னு மிரட்டுறேன் கண்டுக்காம போக பார்த்தா.

அதான் நானும் அரசிக்கு காயப்பட்டா எனக்கு எப்படி துடிக்கும்ன்னு காட்ட கத்தியை வச்சு கீறினேன். அதுல நான் துடிச்சதை பார்த்து நிலவரசனை மறக்க முடியாம என்னைய ஏத்துக்க முடியாமலும் இறந்துட்டா” என வேலரசன் கூறுவதை கேட்ட தில்லைநாயகி கோவமாக

“ டேய்!!... அப்போ….. அப்போ…. நீ…. நீ… தான் என் மகளை கொன்னியா” என வேலரசனின் சட்டையை பிடித்து கதற

“ நான் கொன்னேனா!!!... நீ என்ன லூசா அத்தை??. என் அரசியை நானே கொல்லுவேனா??. அவள் என் தேவதை அத்தை தேவதை.

அவ இறப்புக்கு ஆதிலிங்க மூர்த்தி குடும்பம்தான் காரணம் அதான் பழிவாங்கலாம்ன்னு சொல்றேன்” என
வேலு கத்தி கூறிக்கொண்டிருக்கையில்,

தன்னால் மயிலரசி இறந்ததை ஒத்துக்கொள்ளாது ஆதிலிங்க மூர்த்தி மேல் பழிபோட்டுக்கொண்டிருந்த வேலுவின் பேச்சில் அவன் என்ன பேசுகிறோம் என புரியாது கோவத்தில் உண்மையை உளறிக்கிட்டு இருப்பதை உணர்ந்த தில்லைநாயகி,

“ அடப்பாவி!!... ஏன்டா என் பொண்ணை கொன்ன ஏன் கொன்ன????. அவள் உனக்கு என்ன பாவம் செஞ்சா சொல்லுடா சொல்லு. நீ பண்ணுன தப்புக்கு தேவை இல்லாம அந்த குடும்பத்தை கஷ்டப்படுத்திட்டோமே!!!... இப்போவே போய் நான் பண்ணையார் ஐயாகிட்ட சொல்லப்போறேன்” என தில்லைநாயகி கூறி செல்ல எத்தனிக்க

“ அதானே பார்த்தேன் என்னடா அத்தை மகள் ஆதிலிங்க மூர்த்தி குடும்பத்துக்கு உருகுனாளேன்னு. ஆனா பாரேன் அத்தை உன்னோட ரெத்த சொந்தமான எங்களைவிட நேத்து வந்தவங்க உங்களுக்கு ரொம்ப முக்கியமானவங்களா ஆகிட்டாங்க” என வேலரசன் நக்கலாக கூற

தில்லைநாயகி பதில் கூறாது அமைதியாக வேலுவை வெறித்து நோக்க,

“ என்ன அத்தை அமைதியா இருக்க??. ஹ்ம்ம்… எனக்கு அரசி கிடைக்காம போனதுக்கு முக்கிய காரணமே நீதான். நீ மட்டும் ஊரைவிட்டு வராம இருந்துருந்தா இன்னைக்கு என்னோட காதல் நிறைவேறி இருக்கும்”

“ ச்சீய்….. நிறுத்துடா. எதுடா???....உன்னோட காதல். நீ என் மகள் மேல வச்சுருந்தது பேரு காதலா சொல்லுடா காதலா. உண்மையான காதல் தாயன்புக்கு நிகரானதுடா. எந்த ஒரு தாயும் தன்னோட பிள்ளைங்க வெறுத்தாலும் அவுங்க நல்லா இருக்கனும்ன்னு நினைப்பா.

அப்படிதான் ஒருத்தவங்க மேல உண்மையான நேசம் இருந்தா அவுங்க எந்த சூழ்நிலையிலும் நல்லா இருக்கணும்ன்னு நினைக்கணும். ஆனா நீ என் மகமேல வச்சுருந்த ஆசையில, உன்னோட உரிமை வெறியில இன்னைக்கு அவளை என் கிட்ட இருந்து பிரிச்சு இல்லாம ஆக்கிட்டியேடா. நீ எல்லாம் நல்லா இருப்பியா????. படுபாவி” என கூறி வேலுவை தில்லைநாயகி அறைய

உடனே திகைத்த வேலு,

“ நா…. நான்…. நல்லா இருக்கமாட்டேன். நல்லாவே இருக்கமாட்டேன். எப்படி நல்லா இருப்பேன்???. அதான் என் அரசிமாவே இல்லையே. அவள் இல்லாம நான் மட்டும் எப்படி நல்லா இருப்பேன்” என தன் போக்கில் புலம்ப ஆரம்பித்த வேலு,

“ ஆனா நான் நல்லா இல்லாம போறதுக்கு முன்னாடி என் அரசி இல்லாம போக காரணமா இருந்தவர்களை பழிவாங்கணும்ல. அப்போ முதல்ல உன்னைய கொல்லனும். என்ன அத்தை நான் சொல்றது சரிதானே??” என கூறி

அதிர்ந்து வேலுவை பார்த்துக்கொண்டிருந்த தில்லைநாயகியை திடீரென வேகமாக ஒற்றை கால் மண்டபத்தில் இருந்த பெரிய தூணில் தள்ளிவிட, அதில் தில்லைநாயகியின் பின் தலையில் அடிபட்டது அதில் மயங்கி சரிந்தவரை கழுத்தை நெரித்து கொன்றான்.

அதற்கு பின் தில்லைநாயகியின் உடலை அவரின் வீட்டிற்கு எடுத்துச்சென்று தோட்டத்தில் புதைத்து விட்டு வீட்டில் நிலவரசனுக்கு கொடுத்த மருந்து கிடைக்குறதா என தேடி பார்த்தான் வேலு.

“ ச்ச…. அந்த மருந்து என்ன ஏதுன்னு தெரியலையே. இப்போ என்ன செய்றது???.” என யோசித்துக்கொண்டே பார்வையை சுழல விட அங்கே விஷம் என எழுதிய ஒரு குப்பி கிடைத்தது.

‘ பேசாமா வனிதாவை கொன்னுறலாம்’ என எண்ணி அதை ஆதிலிங்க மூர்த்தி வீட்டிற்கு எடுத்து சென்று வள்ளி வனிதாவுக்கு எடுத்து சென்ற பாலில் தக்க தருணத்தில் கலந்துவிட்டு நிம்மதியாக உறங்க சென்றான்.

என கூறி முடித்த வேலு தொடர்ந்து,

“ அப்புறம் மறுநாள் காலையில பார்த்தப்போ வீட்டுல ஆதிலிங்க மூர்த்தியும் இல்ல வனிதாவும் இல்ல. அதனால நிச்சயம் மருத்துவமனைக்கு அழைத்து போயிருப்பாங்க அவள் சீக்கிரம் செத்துரணும்ன்னு நினைச்சேன்.

ஆனா தீடீர்ன்னு பொழைச்சு வந்து நிக்குறா. பத்தாததுக்கு நிச்சயமா…. கல்யாணமா….. அதான் எப்படியாவது என் கையால கொல்லணும்ன்னு முடிவு பண்ணி இன்னைக்கு முயற்சி பண்ணுனேன். ஆனா அதுக்குள்ள நீங்க
தடுத்துட்டீங்க” என கூறி பழிவெறியில் விசித்ராவை நோக்கினான்.
 
Last edited:
அனைவரும் வேலுவை கோவத்துடனும் அதிர்ச்சியுடனும் நோக்கினர். ஆனால் ஹர்ஷா ஆரம்பத்தில் வேலு பேச ஆரம்பிக்கும் போதே இதை ஓரளவுக்கு எதிர் பார்த்தான். அதனால் தொடர்ந்து,

“ ஆனா வேலு நீ சொல்றமாதிரி தில்லைநாயகியை கொன்னிருந்தா அந்த ஒற்றை கால் மண்டபத்துல ரத்த கறை கிடைக்கலையே” என கேட்க

“ முதல்ல நான் அத்தையோட உடலை புதைச்சுட்டு விஷத்தை எடுத்துட்டு வந்துட்டேன் சார். ஆனா அதுக்கு அப்புறம் தான் நினைவு வந்துச்சு ரத்த கறை அங்க இருந்தது. அதனால் காலையில சீக்கிரமே போய் அதை துடைச்சுட்டேன்” என கூற

“ அப்போ அந்த இடைப்பட்ட நேரத்துல தான் கதிர் சட்டையில் அந்த ரத்த கறை ஒட்டிருக்கும். வேலு எல்லாத்தையும் துடைச்சப்புறம் மறுபடியும் கதிர் வந்து பார்த்தப்போ அங்க எந்தவொரு ரத்த கறையும் இல்லாமா இருந்துருக்கும் இல்ல மச்சி” என கிஷோர் மெல்லிய குரலில் ஹர்ஷாவிடம் கூற

“ ஹ்ம்ம் ஆமா கிச்சா” என கூறிக்கொண்டிருக்கும் போதே அங்கே காவல் துறையினர் உள்ளே நுழைந்தனர்.

காவல் துறையை கண்டு அனைவரும் சற்று திகைக்க;

கிஷோர் ஹர்ஷாவிடம் “ யாரு மச்சி போலீஸ்க்கு சொன்னது??” என கேட்டான்.

“ நான்தாண்டா. இவன்தான் வனிதாவை கொல்ல பார்த்தான்ன்னு எனக்கு தெரிஞ்சவுடன் நான் போலீஸ்க்கு சொல்லிட்டேன். ஆனா அதுக்குள்ள இவன்தான் எல்லாரோட இறப்புக்கு காரணம்ன்னு அவனே ஒத்துக்கிட்டான்” என கிஷோரிடம் கூறிவிட்டு அங்கு நின்று கொண்டிருந்த ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளரை நோக்கி சென்றான்.

பின் அடுத்தடுத்த காரியங்கள் துரிதமாக நடைபெற்று வேலரசனை கைது செய்தனர்.

அதன் பின் வேலைக்காரர்கள் தங்களுக்குள் முணுமுணுத்துக்கொண்டு தங்கள் வேலையை காண செல்ல. அங்கு ஹர்ஷா, கிஷோர், ஆதிலிங்க மூர்த்தி, விசித்ரா, சதாசிவம் மற்றும் சரத் மட்டுமே அமைதியாக நின்று கொண்டிருந்தனர்.

அனைவரும் ஆளுக்கொரு சிந்தனையில் இருக்க கிஷோர், திடீரென,

“ ஏன் மச்சி இந்த வேலு எப்படி எல்லா உண்மையையும் ஒத்துக்கிட்டான்??” என ஹர்ஷாவிடம் கேட்க

அனைவரும் ஹர்ஷாவை நோக்கினர் பதிலுக்காக. அதனை கண்ட ஹர்ஷா,

“ கிச்சா இயற்கையிலேயே வேலு ரொம்ப நல்லவன் அவன் பண்ணுன ஒரே தப்பு மயிலரசி மேல இருக்குற பாசத்தை, உரிமையை காதலன்னு ஒரு தப்பான பிம்பத்தை கொடுத்து, அந்த பொய்யான பிம்பத்துக்கு உயிர் கொடுக்க உயிரோட இருக்குற மயிலரசியை கொன்னுட்டான்.

ஆனா இதை அவன் அறிஞ்சு செய்யல. ஒருவிதமான பாதிக்க பட்ட மனநிலையில் தான் பண்ணிருக்கான். அதே மாதிரி தில்லைநாயகியையும் சின்ன வயசுல இருந்த கோவம்தான் இப்போ அவனை கொல்ல வச்சுருக்கு. ஆனா ரெண்டு பேரையும் கொன்னுட்டாலும் அவனோட மனசுல கொஞ்சம் குற்ற உணர்ச்சியும் இருக்கு அதே மாதிரி பண்ணையார் குடும்பத்தை பழிவாங்கற உணர்ச்சியும் அதிகம் இருக்கு.

விசித்ராவை கொல்ல முடியாமா போன எரிச்சல் கோவம்ன்னு இருக்குறப்போ நான் வேலரசன்னு சொன்னவுடன் அவன் மனசுல எந்த ஒரு யோசனையும் இல்லாம மனசுல இருந்ததை கோவமா கொட்டிட்டான் போல” என ஹர்ஷா தன் யூகத்தை கூற

“ அவனை முதல்ல மனநிலை காப்பகத்துல சேர்க்கணும்டா”

“ நிச்சயம் அங்கதான் போவான்” என ஹர்ஷா கூறிவிட்டு ஆதிலிங்க மூர்த்தியிடம் சென்று,

“ சார் நாங்க வந்த வேலை முடிஞ்சு இன்னைக்கு சாயங்காலம் கிளம்புறோம்” என கூற

ஆதிலிங்க மூர்த்தி “ என்ன தம்பி உடனடியா கிளம்புறேன்னு சொல்றிங்க. இன்னும் கொஞ்ச நாள் இருந்துட்டு போகலாம்ல”

“ இல்ல சார் வேலை இருக்கு இதுவே தாமதம். “

“ அப்போ விசித்ரா கல்யாணத்துக்கு சொல்றேன் தம்பி கண்டிப்பா ரெண்டு பேரும் வந்துடனும்” என ஹர்ஷா கிஷோர் இருவரையும் அழைக்க

“ கண்டிப்பா சார். அப்படியே வனிதா கதிர் கல்யாணத்தையும் சேர்த்து வச்சுடுங்க” என கிஷோர் கூறினான்

“ நிச்சயமா தம்பி. அப்புறம் நான் கேட்ட உதவிக்காக இங்க தங்கி இருந்து உண்மையை ரொம்ப சிரமப்பட்டு கண்டுபிடிச்சு என் மகளோட உயிரையும் காப்பாத்திருக்கிங்க ரொம்ப நன்றிப்பா ரெண்டு பேருக்கும்” என ஆதிலிங்க மூர்த்தி தன் கைகளை கூப்பி நன்றி தெரிவிக்க

“ என்ன சார் நன்றின்னு சொல்லிக்கிட்டு. எங்களால ஒரு உயிரை காப்பாத்த முடிஞ்சுச்சேன்னு சந்தோசப்படுறோம் சார். சரி அப்போ நாங்க கிளம்ப தயாராக்குறோம் சார்” என கூறி அங்கிருந்தவர்களிடம் விடைபெற்று கிளம்பினர் ஹர்சாவும் கிஷோரும்.

அவர்கள் சென்ற பின் ஆதிலிங்க மூர்த்தியின் முன் நின்ற சரத் தன் கைகளை கூப்பி,

“ மாமா என்னைய மன்னுச்சுடுங்க” என மன்னிப்பு வேண்டினான்.

“ என்ன சரத்???.. என்ன ஆச்சு???.. எதுக்கு மன்னிப்பு கேட்குற?????. என ஆதிலிங்க மூர்த்தி பதற

“ இல்ல மாமா உங்க பொண்ணை நான் கல்யாணம் பண்ண சம்மதிச்சதுக்கு காரணமே என தங்கச்சி மஞ்சரிக்கு நிலவரசனை கல்யாணம் பண்ணி வைக்கத்தான். ஆனா இப்போ வேலரசனை பார்க்கும் போது ஒரு வேளை நிலவன் மஞ்சரியை கல்யாணம் பண்ணமாட்டேன்னு சொல்லிட்டா நிச்சயம் அவளை அழிச்சுக்குவா இல்ல அவளை சார்ந்தவர்களை அழிச்சுருவா .

ஏன்னா மஞ்சரியும் கிட்டத்தட்ட வேலரசன் மனநிலையில் தான் இருக்கா. அதனால அவளுக்கு புத்தி சொல்லுறதை விட்டுட்டு அவளோட ஆசை நிறைவேற நாங்க என்ன பண்ணுறதுன்னு யோசிச்சோம்மே தவிர மத்தவங்களுக்கு மனசு இருக்குன்னு யோசிக்கல.

இப்போ சொல்றேன் மாமா நான் விசித்ராவை மனப்பூர்வமா கல்யாணம் பண்ணிக்குறேன். நாளைக்கு நிலவன் மஞ்சரி கல்யாணம் ஆனாலும் சரி ஆகலைனாலும் சரி. இப்போ முதல் வேலை மஞ்சரியை கவுன்சிலிங் கூட்டிட்டு போறதுதான்” என சரத் கூறி முடித்து விசித்ராவை காண,

அவளின் முகம் பூவாய் மலர்ந்திருந்தது. சரத்தை விசித்ராவுக்கு பிடித்திருந்தாலும் சதாசிவம் கூறிய கடந்த காலம் மூலம் சிறு வருத்தம் ஏற்பட்டது. அது இப்பொழுத்து சரத் பேசியது மூலம் அந்த வருத்தம் அகல சந்தோசமாக தனது அறைக்கு சென்றுவிட்டாள் சிரிப்புடன்.

சரத் பேசிமுடித்த பின் ஆதிலிங்க மூர்த்தி அருகில் வந்த சதாசிவமும் “ என்னையையும் மன்னிச்சுடுடா” என கூற

“ என்னடா நீ மன்னிப்புன்னு பெரிய வார்த்தை எல்லாம் கேட்டுட்டு. சீக்கிரம் வீட்டுக்கு போய் தயாராகி வாடா. நாம போய் ஜோசியரை பார்த்து நல்ல முகுர்த்த நாளா பார்த்துட்டு வருவோம். என் ரெண்டு பொண்ணுங்க கல்யாணத்தையும் ஜாம் ஜாம்ன்னு நடத்தணும்” என சந்தோசமாக கூறினார்

பின் சதாசிவமும் சரத்தும் விடைபெற்ற பின் , “ அடுத்து அரசனை நல்ல மருத்துவமனைக்கு கூட்டிட்டு போய் குணப்படுத்தனும்” என எண்ணிக்கொண்ண்டு ஆதிலிங்க மூர்த்தி சந்தோசமாக தன் அறைக்கு சென்றார்.

ஹர்ஷாவும் கிஷோரும் அனைவரிடமும் விடைபெற்று மாலை அரங்கநாதபுரத்தில் இருந்து கிளம்ப பேருந்திற்கு காத்துக்கொண்டிருந்தனர்.

“ ஏன் மச்சி வனிதாவுக்கு இந்நேரம் யாரு கொலைகாரன்னு தெரிஞ்சிருக்கும்ல” என கிஷோர் ஹர்ஷாவிடம் கேட்க

“ ஹ்ம்ம் தெரிஞ்சிருக்கும்டா. ஆதிலிங்க மூர்த்தி இந்நேரம் வனிதாவை நேரடியா பார்த்து சொல்லிருப்பார்”

“ அப்போ இனிமே என் அப்பாதான் எல்லாம் பண்ணுனார்ன்னு சொல்லிக்கிட்டு இருக்காது”

“ ஆமாடா”

“ மச்சி இந்த வேலரசன் மாதிரி ஆளுங்க நிறைய பேரு இருக்காங்கள்ல. ஒரு தலையா காதலிச்சுட்டு மத்தவங்க ஒத்துக்கலைன்னு எதாவது ஒரு வகையில அவுங்களை காயப்படுத்துறதுன்னு”

“ ஹ்ம்ம் ஆமா கிச்சா குழந்தைகளை வளர்க்கும் போது மன கட்டுப்பாடோடு மத்தவங்க உணர்வுக்கு மதிப்பளிக்குறதை பத்தியும் சொல்லி வளர்த்தா வளர்ற சமுதாயம் நல்லா இருக்கும்”

“ நீ சொல்றதும் சரிதான் ஒரு வேளை வேலரசன் மயிலரசியோட உணர்வுக்கு மதிப்பு குடுத்திருந்தா இவ்வளவு இழப்புகள் தேவை இல்ல. ஆனா மச்சி வேலரசன் தில்லைநாயகியை கூட்டு சேர்த்ததுக்கு பதிலா சொர்ணம் பாட்டியை சேர்த்திருக்கலாம்” என கிஷோர் சலிக்க

“ ஏன்டா??...” என ஹர்ஷா சிரிப்புடன் கேட்க

“ இல்ல அந்த பாட்டிதான் இன்னமும் ஆதிலிங்க மூர்த்தி தான் காரணம்ன்னு சொல்லிக்கிட்டு இருக்கு பண்ணையார் மேல அம்புட்டு பகை. ஆனா மச்சி ஒருநாள் நம்ம குடும்பத்தோட இந்த ஒற்றை கால் மண்டபத்தை பார்க்க வரணும்ண்டா” என கிஷோர்

“ ஆமா கிச்சா உண்மையிலயே இந்த அரங்கநாதபுரத்தில் இருக்குற கோவிலும் அந்த ஒற்றை கால் மண்டபமும் சுற்றி பார்க்க வேண்டிய ஸ்தலங்களில ஒன்னுடா. இந்த தடவை நம்மளால ஒழுங்கா சுத்தி பார்க்க முடியல. நீ சொன்ன மாதிரி ஒரு நாள் வரணும்” என ஹர்ஷா கூறிக்கொண்டிருக்கையில் பேருந்து வர அதில் ஏறி அமர்ந்தனர்.

பேருந்தில் அமைதியாக அவர்கள் பயணம் தொடர திடீரென,

“ மச்சி ஊருக்கு போனவுடன் உங்க அப்பா சொன்ன மாதிரி தனியா பிரைவேட் டிடெக்ட்டிவ் ஆரம்பிக்க போறியா”
என கிஷோர் கேட்க

“ இல்ல கிச்சா ஊருக்கு போய் இன்னும் கொஞ்ச நாள் வேலை பார்த்துகிட்டே கத்துக்கலாம்ன்னு இருக்கேன்”

“ ஆனா மச்சி யாரோ யாரையோ காணோம்ன்னு சொன்னாங்கன்னு, யாரையுமே தெரியாத ஊருக்கு வந்து வேற யாரோ இறந்ததுக்கு காரணம் யாருன்னு
யார் யார் மேலையோ சந்தேகப்பட்டு கண்டுபிடிக்குறதுக்குள்ள….” என கிஷோர் கூறிக்கொண்டே அருகில் இருந்த ஹர்ஷாவை காண

அவன் கண்களை மூடி இருக்க, “ மச்சி நான் பேசிகிட்டு இருக்கேன் நீவாட்டு பேசாம கண்ணை மூடிக்கிட்டு இருந்தா என்ன அர்த்தம்” என கிஷோர் ஹர்ஷாவை எழுப்பி கேட்க

“ ஏன்டா பேசுறேன்னு என்னைய போட்டு குழப்பிக்கிட்டு இருக்க” என ஹர்ஷா கடிய

“ என்ன மச்சி சொல்ற நான் குழப்புறேனா??.. இத்தனை நாளு இந்த ஒற்றை கால் மண்டபம் கதையை…”

“ என்னது???.... கதையா!!!..... “

“ இல்ல இந்த ஒற்றை கால் மண்டபம் கேஸை என்ன குழப்பு குழப்புன்னு குழப்பி அதை படிச்சவங்களுக்கு இல்ல இல்ல கூட இருந்து பார்த்த எனக்கு எப்படி இருந்துருக்கும். அதான் சும்மா அப்படி பேசுனே. ஆனா மச்சி இந்த கேஸை முடிக்க இம்மூட்டு நாள் எடுத்திருக்க கூடாதுடா” என கிஷோர் கூறிவிட்டு கொட்டாவி விட ஹர்ஷா உறங்க ஆரம்பித்தான்.

அவர்கள் பயணம் தொடர நம் பயணம் இத்துடன் முடிவடைகிறது.





நன்றி… நன்றி….. Thanks…. Thanks….. for the supporting friends

உங்க supports இல்லைனா நிச்சயம் இந்த கதையை முடிச்சுருக்க முடியாது friends. என்னோட twin babies ரெண்டு பேருக்கும் five months இருக்கும் போது இந்த story contest la கலந்துக்கிட்டு எழுத ஆரம்பிச்சேன். இடையில இடையில நிறுத்திடலாம்ன்னு நினைக்கும் போது உங்களோட கருத்துக்கள் மட்டும் தான் என்னைய எழுதவச்சது.
இப்போ என்னோட முதல் கதையை வெற்றிகரமா முடிச்சுட்டேன்,(but sorry for the delay updates friends)

Once again thanks for ur comments and likes and silent readers. thank u so much……

:love: :love: :love:

BY

R. நிரஞ்சனாதேவி சுப்ரமணி
 
Last edited:
Very Nice... Till the last part, we could not able to guess the culprit... It is a very nice "who done it" style story...
First story ah... Nambavey mudiyala.... very nice and Congratulation sis...
 
Last edited:
Top