Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஓவியப்பாவை 1

Advertisement

அத்தியாயம் 1:



ஸ்வேதா அந்த அதிகாலையிலேயே குளித்து முடித்து சுவாமி படங்களுக்குப் பூ வைத்துக்கொண்டிருந்தாள். வினாயகர், துர்கை என வரிசையாக வைத்துக்கொண்டே வந்தவள் ஒரு படம் வந்ததும் தயங்கினாள். அது சுவாமியின் படமோ தேவியின் படமோ இல்லை. யாரோ எப்போதோ வரைந்த ஓவியம் போலத் தோன்றியது அது. ஒரு அழகான இளம்பெண் சிரித்துக்கொண்டு இருப்பதைப் போல இருந்தது. அத கீழே செண்பகவல்லி என்ற பெயரும் மிகச் சிறிய எழுத்தில் காணப்பட்டது. எப்போதும் கடவுள் படங்களுக்குப் பூ வைக்கும் போது அந்தப் படத்துக்கும் தவறாமல் வைக்கச் சொல்வாள் அம்மா. ஆனால் ஏனோ ஸ்வேதாவுக்கு அந்தப் படத்துக்குப் பூ வைக்க மனதே வராது. உயிரோடு இருக்கும் ஒருவரின் படத்துக்குப் பூ வைப்பது போலத் தோன்றும். கையில் மலரை வைத்துக்கொண்டு அந்த ஓவியத்தையே பார்த்தாள் ஸ்வேதா. ஒரு கணம் தான் ஒரே ஒரு கணம் தான். அந்த ஓவியம் அவளைப் பார்த்து புன்னகைப்பது போலத் தோன்ற அதிர்ந்தாள். கையிலிருந்த பூ கீழே விழுந்தது. கண்ணை தேய்த்து விட்டு மறுபடியும் பார்த்தாள். ஓவியத்தில் ஒரு மாற்றமும் இல்லை. கீழே விழுந்த பூவை வைக்க மனமில்லாம அதனை ஸ்டாண்டில் வைத்து விட்டு வெளியேறினாள் ஸ்வேதா.



அம்மாவும் தம்பியும் வழக்கம் போல சண்டை போட்டுக்கொண்டிருந்தனர். வீட்டுக்கவலையில் தான் கண்ட காட்சியை மறந்தாள் ஸ்வேதா.



"பிரஷாந்த்! எதுக்கு எப்பப் பார்த்தாலும் அம்மாவோ சண்டை போடுற? அம்மாவுக்கு உடம்பு சரியில்லைன்னு உனக்குத் தெரியும் இல்ல?" என்றாள் தம்பியை நோக்கி.



சட்டென அமைதியானான் பிரஷாந்த். அவனுக்கு எப்போதும் ஸ்வேதாவிடம் ஒரு பயமும் மரியாதையும் உண்டு.



"என்னம்மா விஷயம்?" அம்மாவிடம் விசாரித்தாள் ஸ்வேதா.



"இவனுக்கு செலவுக்குக் காசு வேணுமாம். எங்கிட்ட கேட்டான். நான் உன்னைக் கேக்கச் சொன்னேன். உங்கிட்ட காசே இல்லியான்னு சண்டைக்கு வரான்" என்றாள் அம்மா குற்றப் பத்திரிகை படிக்கும் குரலில். தாயை முறைத்தான் பிரஷாந்த்.



"அப்படி என்னடா உனக்கு செலவு? +2 படிக்கும் போதே இத்தனை செலவா?"



"அது ஒண்ணுமில்லக்கா! என் ஃபிரெண்ட்ஸ் எல்லாரும் டிரீட் கேட்டாங்க. அதான் அம்மாட்ட பணம் கேட்டேன். இல்லேன்னா பரவாயில்லக்கா" என்றான் அவசரமாக.



"எதுக்கு டிரீட்டு?"



"நான் எக்சாம்ல எல்லாம் சப்ஜெக்டுலயும் 98% வாங்கியிருக்கேன் இல்லக்கா? அதான் டிரீட் கேட்டாங்க" என்றான் பணிவாக.



தம்பியை நினைத்து உற்சாக ஊற்று ஒன்று புறப்பட்டது ஸ்வேதாவின் மனதில். பிரஷாந்த் அப்படி அநியாயமாக செலவழிப்பவன் அல்ல. மிகவும் பொறுப்பானவன். +2 முடித்ததும் எப்படியாவது மருத்துவப்படிப்பில் சேர வேண்டும் என வெறியோடு உழைப்பவன்.



"உன் ஃபிரெண்ட்சுங்களுக்கு டிரீட் தானே தரணும்? நாளைக்கே நான் பணம் தரேன். ஐநூறு ரூவா போதுமாப்பா?



"போதும்க்கா! ரொம்ப தேங்க்ஸ்கா" என்றான் பிரஷாந்த். அவன் போனதும் மகளை ஏறிட்டாள் அம்மா கமலா.



"என்னடி ஐநூறு ரூவாய் தரேன்னு சொல்லிட்ட? மாசக் கடைசி! அவ்வளவு பணம் இருக்கா உங்கிட்ட? வீட்டுக்கு வேற சில சாமான்கள் வாங்கணும்."



"உனக்கு எவ்வளவும்மா வேணும்?" என்றாள் சற்றே தளர்ந்த குரலில்.



"எரநூறு ரூவா போதும்டி கண்ணு! இன்னும் ஆறு நாள் தானே அதை வெச்சு ஓட்டிருவேன். என்ன செய்ய? குருவி தலையில் பனங்காயை வெச்சா மாதிரி எல்லாப் பொறுப்பையும் உங்கிட்ட சுமத்திட்டு நிம்மதியா கண்ணை மூடிட்டாரு உங்கப்பா. பாவம் நீ கல்யாணம் செஞ்சுக்க வேண்டிய வயசுல இப்படி உழைச்சுக் கொட்ட வேண்டியதா இருக்கு. பேரு தான் பெரிய அரச பரம்பரைன்னு பேரு. ஆனா கால்காசுக்கு பிரயோஜனமில்ல"



அம்மா புலம்ப ஆரம்பித்து விட்டாள். இன்னும் ஒரு மணி நேரமாவது புலம்புவாள்.



நன்றாக வாழ்ந்த குடும்பம் தான். ஆனால் அப்பா ஒரு செலவாளி. சம்பாதித்ததை எல்லாம் உறவினர், நண்பர்கள் என வாரி விட்டு விட்டு அவருக்கு உடல் நலமில்லாமப் போன போது பணம் கொடுக்க ஆளில்லை. அரசு மருத்துவமனையில் நடந்த சிகிச்சை பலனின்றி இறந்து போனார்,. அப்போது ஸ்வேதா டிகிரி முடித்திருந்தாள். பெரும் சோகத்தை தைரியமாகத் தாங்கிக்கொண்டாள். தம்பியையும் அன்னையையும் தேற்றும் பொருட்டு தன்னை இரும்பாக்கிக் கொண்டாள் ஸ்வேதா. அப்பா வேலை பார்த்த தனியார் கம்பெனி முதலாளி மிகவும் நல்லவர் என்பதால் அங்கேயே ஒரு வேலை போட்டுக் கொடுத்தார். அதனால் மூவரும் மானத்தோடு பிழைத்தனர். சொந்த வீடு என்பதால் வாடகை பிரச்சனை இல்லை. ஆனால் அவ்வப்போது வந்து போகும் ரிப்பேர் செலவுக்கும், வீட்டுச் செலவுகளுக்கும் ஸ்வேதாவின் சம்பளம் பத்தியும் பத்தாமல் தான் இருந்தது. அம்மாவும் சும்மா இல்லாமல் நாலு வீடுகளுக்குச் சென்று சமைத்துக் கொடுத்து வந்தாள். ஆனால் நெஞ்சு வலி வந்ததால் அதனையும் விட வேண்டியதானது. வீட்டின் நிலை இப்படி இருக்க அவள் எப்படி பிரஷாந்தை மருத்துவம் படிக்க வைக்கப் போகிறாள்? இதில் அம்மா என்னவென்றால் கல்யாணம் செய்து கொள் என்று நச்சரிக்கிறாள்.



எல்லாவற்றையும் யோசித்தபடியே அம்மா கொடுத்த டிஃபனை உண்டு விட்டு கையிலும் அதையே எடுத்துக்கொண்டு ஹாலுக்கு வந்தாள். அங்கிருந்த மேஜையின் மேல் கைப்பை, டிஃபன் பாக்ஸ் பை எல்லாவற்றையும் வைத்து விட்டு மீண்டும் பூஜையறைக்குள் போனாள். அவள் அப்பா சொல்லிக்கொடுத்த பழக்கம் இது. எப்போது எங்கே வெளியே சென்றாலும் பூஜையறைக்குச் சென்று படங்களை வணங்கி விட்டு விபூதியும் பூசிய பிறகே வெளியில் கிளம்ப அவர் அனுமதிப்பார். அந்தப் பழக்கம் இப்போது வரை ஒட்டிக்கொண்டுள்ளது அவளிடம்.



மெல்லிய ஊதுபத்தி வாசனை வந்த்து பூஜையறையில். திடுக்கிட்டது அவள் மனம். காரணம் அவள் காலையில் ஊதுபத்தி ஏற்றவே இல்லை. விளக்கை மட்டும் ஏற்றி விட்டு பூ வைத்தாள் அவ்வளவு தான். இப்போது இந்த ஊது பத்தி வாசனை எப்படி வந்தது? அதிலும் அவளுக்கு மிகவும் பிடித்த சந்தன வாசனை பத்தி. அம்மா ஏற்றி வைத்திருப்பாள் என்று மனதை சமாதானப்படுத்திக்கொண்டு வரிசையாக இருந்த கடவுளர் படங்களை வணங்கினாள். அந்த ஓவியத்தருகே வந்ததும் கரங்கள் தயங்கின. அதில் அழகாக பூ வைக்கப்பட்டிருந்தது. தான் வைக்கவில்லையே? கீழே விழுந்ததால் அதனை இந்த ஸ்டேண்டில் தானே வைத்தோம் என்று கண்களை ஸ்டேண்ட் பக்கம் ஓட்டினாள். அங்கே பூ இல்லை.



விலுக்கென அதிர்ந்த மனதை சமாதானப்படுத்தினாள். "அம்மா தான் ஊதுபத்தி ஏற்றும் போது இந்தப் பூவையும் வைத்திருக்க வேண்டும்" என்று மனதை திடப்படுத்திக்கொண்டு விபூதியை பூசிக் கொண்டு வெளியேறினாள். அந்த ஓவியத்தில் ஏதோ ஒன்று அசைவது போலத் தோன்ற பார்த்தாள். ஒன்றும் இல்லை. ஆனால் அந்த ஓவியப்பெண்ணின் கண்கள் இவளையே பார்ப்பது போல இருக்க பயந்து போய் வெளியேறினாள். அம்மாவிடம் இதைப் பற்றி மாலை கேட்க வேண்டும் என நினைத்துக்கொண்டு அலுவலகத்துக்கு விரைந்தாள். நல்ல வேளை வீட்டருகே இருந்து ஆபீஸ் வரை பேருந்து வசதி இருந்தது.



சரியாக ஒன்பது மணிக்கு ஆபீசுக்குள் நுழைந்து விட்டாள். அட்டெண்டன்சில் கையெழுத்துப் போட்டு விட்டு தனது இருக்கையில் வந்து அமர்ந்த பின்னரும் கூட அவள் மனம் அந்த ஓவியப்பெண்ணையே நினைத்துக்கொண்டிருந்தது.



"ஹாய்! ஸ்வேதா" என்ற உற்சாகக் குரல் அவளை உசுப்ப எதிரில் நின்றவனை நோக்கிப் புன்னகைத்தாள்.



"ஹலோ! ராகுல்! என்ன இன்னைக்கு அதிசயமா ஆபீஸ்ல இருக்கீங்க? எப்பவும் சுத்திக்கிட்டே இருப்பீங்களே?" என்றாள் சிரித்தபடியே.



"உங்களுக்கென்ன? ஃபினான்ஸ் செக்ஷன்ல வேலை. நிம்மதியா ஏசியில உக்காந்து வேலை செய்யலாம். நான் அப்படியா? மார்கெட்டிங்க் ஆச்சே! ஊர் சுத்தி தான் ஆகணும்."



"உங்க அப்பாவுக்கு உடம்பு இப்ப எப்படி இருக்கு?"



சென்ற வாரம் ராகுலின் தந்தை ரோடில் நடந்து செல்லும் போது ஆட்டோ இடித்ததில் கீழே விழுந்து தலையில் நல்ல அடிபட்டு விட்டது. தகவல் வர பதறிப் போனான் ராகுல் ஸ்வேதாவும் கூடவே வந்தாள். பெரியவருக்கு உடனே ரத்தம் செலுத்த வேண்டும் என்றும் ஏபி பாசிடிவ் வகை ரத்தம் ஸ்டாக்கில் இல்லை என்பதும் தெரிந்தது. கொஞ்சமும் யோசிக்காமல் ஸ்வேதா தன் ரத்தத்தைக் கொடுக்க முன் வந்தாள். அவளது பிளட் குரூப்பும் அது தான். உடனடியாக ரத்தம் செலுத்தப்பட்டது. அரை மணியில் அபாய கட்டத்தைத் தாண்டி விட்டார் பெரியவர், ராகுலின் தாய் முத்து லட்சுமி ஸ்வேதாவின் கரங்களைப் பற்றிக்கொண்டு அழுது விட்டார். ராகுலும் மிகவும் உணர்ச்சி வசப்பட்டான். அதிலிருந்து ராகுல் ஸ்வேதா நட்பு நன்றாகவே வளர்ந்தது.



"இப்ப பரவாயில்ல! எங்கம்மா கூடவே இருந்து கவனிச்சுக்கறாங்க! அதான் நான் ஆபீஸ் வந்தேன். நல்லவேளை நீங்க மட்டும் அவருக்கு ரத்தம் குடுத்திருக்காட்டி என்ன ஆயிருக்கும்?"



"அதையே சொல்லாதீங்க ராகுல்! என்னால முடிஞ்ச சின்ன உதவி தான் அது. என் பிளட் குரூப்பும், உங்க அப்பாவுதும் ஒண்ணா இருந்தது தான் கடவுள் செயல். அதனால எப்பவும் அவருக்கு நன்றி சொல்லுங்க" என்றாள் சிரித்தபடி.



"சிரிக்கும் போது நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க ஸ்வேதா" என்று சொல்லி விட்டு பதிலுக்குக் கூடக் காத்திராமல் போய் விட்டால் ராகுல். மனதில் நீரூற்று ஒன்று புறப்பட்டது ஸ்வேதாவுக்கு,.



"இதற்கு என்ன அர்த்தம் இருக்க முடியும்? அவர் கண்களுக்கு நான் அழகாகத் தெரிகிறேன் என்றால் அவர் என்னை விரும்புகிறாரா?" மனம் இனித்தது. ராகுல் மிகவும் நல்ல மனிதன். உயர் நடுத்தரக் குடும்பம். ஒரே மகன். அப்பா அரசு வேலையிலிருந்து ஓய்வு பெற்று விட்டார். பென்ஷன் வருகிறது. போதாததற்கு ராகுலும் கை நிறைய சம்பாதிக்கிறார். மனம் யோசித்தது. ஆனால் அறிவு உடனே கடிவாளம் போட்டது.



"என்ன யோசிக்கிறாய் ஸ்வேதா? உனக்கு இன்னமும் எத்தனை கடமைகள் இருக்கின்றன? பிரஷாந்தை மெடிக்கல் படிக்க வைக்க வேண்டாமா? அம்மாவுக்கு இதய ஆப்பரேஷன் செய்ய வேண்டாமா? இதன் நடுவில் உன் மனதில் காதல் நுழையலாமா?"



தலையை உலுக்கிக்கொண்டு கடமைகளில் ஆழ்ந்தாள் ஸ்வேதா. ஆனால் மனதின் ஓரத்தில் காலையில் அவள் கண்ட காட்சி ஓடியது. மனம் அதையே சுற்றி சுற்றி வந்தது. திடீரன் மேனேஜரிடமிருந்து அழைப்பு வர விரைந்தாள்.



"சாலிகிராமத்துல நமக்கு ஒரு குடோன் இருக்குன்னு தெரியும் இல்ல?"



"தெரியும் சார்! அதோட ஸ்டாக் நிலைமையைத்தான் பார்க்கச் சொல்லியிருக்கீங்க நீங்க?"



"உம்! உங்க கணக்குப்ப்படி ரா மெட்டிரியல் எவ்வளவு இருக்கணும்?"



"குறைஞ்சது பத்து டன் இருக்கணும் சார்! இருப்புல அவ்வளவு இல்லைன்னு ஸ்டோர் கீப்பர் சொல்றாரு."



"நீங்க இப்பவே கிளம்பி சாலிகிராமம் போங்க! ஸ்டாக்கை வெரிஃபை பண்ணுங்க! அப்படிக் குறைஞ்சதுன்னா அங்க எல்லார் கிட்டயும் விசாரிங்க"



"சார்! நான் சாதாரண அக்கவுண்டண்ட். நான் கேட்டா அவங்க சொல்வாங்களா?"



"எல்லாம் சொல்வாங்க! மேனேஜர் கேட்டாருன்னு சொல்லுங்க! ஸ்டாக் குறைஞ்சதுக்கு சொல்ற காரணம் சரியானதா இல்லேன்னா அவங்க மேல ஆக்ஷன் எடுப்போம்னு சொல்லுங்க" என்றார்.



"சார் இங்க இருந்து சாலிகிராமம் ரொம்ப தூரமாச்சே?"



உச்சுக்கொட்டினார் மேனேஜர்.



"என்னம்மா நீ? ஆபீஸ் கார்ல போயேன். இது கூடவா சொல்லித்தரணும்?" என்று சொல்லி விட்டு கணினியில் மூழ்கி விட்டார் அவர். தனது இருப்பிடத்துக்கு வந்து தேவையான பேப்பர்களை எடுத்துக்கொண்டு படியிறங்கினாள். அவளது இருக்கை முதல் மாடி. ஒரு மாடி தானே என்பதால் ஸ்வேதா ஒரு போதும் லிஃப்டைப் பயன்படுத்துவதில்லை. அனைவரும் லிஃப்டிலேயே செல்வதால் படிகளில் ஆள் நடமாட்டமே இருக்காது.



படியிறங்கும் போது திரும்பவும் ஓவியப்பெண்ணின் புன்னகை நினைவுக்கு வந்தது. இதற்கு என்ன அர்த்தம் இருக்க முடியும்? அவள் யார்? எதற்காக கடவுள் படங்கள் மத்தியில் அவள் படம் இருக்கிறது? அவளுக்கும் நம் குடும்பத்துக்கும் என்ன சம்பந்தம்? என யோசித்துக்கொண்டே வந்தாள். எங்கிருந்தோ கம்மென மீண்டும் சந்தன வாசனை வீச அப்படியே நின்று விட்டாள் ஸ்வேதா. இந்தப்பகுதிகளில் யார் சந்தனம் பயன் படுத்தியிருப்பார்கள்? யோசிக்க யோசிக்க ஏதோ மெல்லிய புகைப்படலம் சூழ்ந்தது போல இருந்தது. கண்கள் தெரியாமல் திகைத்தாள். என்ன நடக்கிறது இங்கு? பட்டப்பகலில் அதுவும் ஒரு அலுவலகத்துக்குள்ளே எப்படி பனி வர முடியும்? குழம்பினாள். எதோ ஒரு உருவம் பக்கத்தில் நிற்பது மிக மிக மெலிதாகத் தெரிந்தது. அடுத்த கணம் படிகளில் உருண்டு கீழே விழுந்து விட்டாள் ஸ்வேதா.



காலில் சரியான அடி. எழுந்து நிற்கக் கூட முடியவில்லை. சரியாக அந்த நேரத்தில் வந்த ராகுல் இவளது நிலையைப் பார்த்து விட்டு ஓடி வந்தான். அவளைத் தூக்கி நிறுத்த முயலும் போதே மயங்கி விழுந்தாள் ஸ்வேதா.
Nice ep
 
Top