Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஓவியப்பாவை 11...

Advertisement

Srija Venkatesh

Well-known member
Member
அத்தியாயம் 11.



கிபி 16ஆம் நூற்றாண்டு. கேரள மாநிலம் திருவிதாங்கூர் சமஸ்தானம். அதன் அரசர் கஜகேசரி வர்மர். இது நாள் வரை இல்லாத பிரச்சனையை இப்போது அவரும் அவரது மக்களும் சந்தித்து வருகிறார்கள். அது தான் முகலாயர்களின் படையெடுப்பு. எந்த ஒரு அறத்துக்கும் கட்டுப்படாமல் அவர்கள் கோயில்களைத் தகர்த்தும் பெண்களைக் கவர்ந்தும் வன்முறையில் இறங்கியும் வருகிறார்கள். வடக்கில் பெரும்பகுதியை கைப்பற்றி விட்ட அவர்கள் இப்போது தெற்கு திசை நோக்கி வருவதாக செய்தி வந்துள்ளது. அதிலும் மாலிக்காஃபூர் என்பவனின் படை தளபதி அப்துல்லா என்பவன் தான் தமிழகத்தையும் கேரளத்தையும் கைப்பற்ற நினைத்திருக்கிறான் என்ற செய்தியும் கூடுதலாகக் கிடைத்திருந்தது. அது பற்றி யோசிக்கத்தான் இந்த ஆலோசனைக் கூட்டம்.



ஆண் யானைகளின் தந்தங்களால் அலங்கரிக்கப்பட்ட ரத்தின சிம்மாசத்தில் அமர்ந்திருந்தார் அரசர் கஜகேசரி வர்மர். சுற்றிலும் மந்திரி பிரதானிகள். அரசருக்கு இணையான ஆசனத்தில் அமர்ந்திருந்தார் குலகுருவும் அஷ்டமா சித்துகள் கைவரப் பெற்றவருமான பிரம்ம தத்தர். பக்கத்தில் ஓலைச் சுவடிகளைச் சுமந்தபடி அவரது மாணவன் ரணதீரன். அனைவர் முகங்களிலும் கலக்கமும் குழப்பமும் போட்டி போட்டன.



"அமைச்சரே! வந்திருக்கும் செய்தியை அறிவீர்கள் என நினைக்கிறேன்"



"ஆம் மன்னா! முகலாயர்கள் படையெடுத்து வருகிறார்கள். அதன் விளைவுகள் குறித்துத்தான் என் கவலை"



தளபதி உக்கிரசேனன் எழுந்தார்.



"மன்னா! நம்மால் படையெடுப்பை முறியடிக்க முடியும். ஆனால் முகலாயர்களின் போர் முறை மிகவும் வித்தியாசமாக ருக்கிறது. அவர்கள் இரவில் கூடத் தாக்குகிறார்கள். அதிலும் பெண்களை சொல்ல முடியாத துன்பங்களுக்கு ஆளாக்குகிறார்கள். இந்த நிலையில் இனி நம் நாடு என்ன ஆகும்? என்பதை நினைக்கும் போது நெஞ்சு கலங்குகிறது" என்றார்.



"இப்படி நாட்டின் தளபதியும், அமைச்சரும் பேசினால் சாதாரண மக்களின் நிலை என்ன?"



மந்திரி உக்கிரசேனரின் மகன் மார்த்தண்டத்தேவன் எழுந்தான்.



"மன்னா! என் போன்ற இளைஞர்கள் இருக்கும் போது நீங்க ஏன் இந்த நாட்டைப் பற்றியும் அதன் எதிர்காலத்தைப் பற்றியும் கவலைப்படுகிறீர்கள்? எங்கள் வாள் வீச்சில் உங்களுக்கு நம்பிக்கை இல்லையா?"



"அப்படி இல்லை மார்த்தாண்டா! இது வரையிலும் யாராலுமே அந்த முகலாயர்களை வெற்றி கொள்ள முடியவில்லையே? அது தான் யோசிக்கிறேன்."



அப்போது குருவான பிரம்மதத்தர் எழவே அனைவரும் எழுந்து நின்றனர்.



"அனைவரும் அமருங்கள் என் மக்களே! நான் இப்போது மிக முக்கியமான சில விஷயங்களைப் பற்றிப் பேசப் போகிறேன். நான் பூஜிக்கும் அன்னை காளி எனக்கு சில சித்துகளை அருளியிருக்கிறாள். அதோடு எனக்கு ஜோதிடமும் தெரியும். நம் நாட்டின் நிலை இன்னும் மோசமாகத்தான் வாய்ப்பிருக்கிறதே தவிர நாம் வாழும் வகை இப்போது காணவில்லை"



"என்ன சொல்கிறீர்கள் குருவே? அப்படியானால் நம் நாடு அந்தக் கயவர்களுக்கு அடிமையாக வேண்டியது தானா?"



"ஆம் அப்படித்தான் நான் கணித்திருக்கிறேன். ஆனால் அதிலிருந்து சீக்கிரமே நான் வெளி வந்து விடுவோம். என் வேண்டுகோள் என்னவென்றால் கூடுமானவரையில் பெண்களை நாம் பாதுக்காக்க வேண்டும். அப்போது தான் நம் நாட்டுக் கலாசாரம் காக்கப்படும்."



"அப்படியானால் இளம் பெண்கள் மற்றும் குழந்தைகளை நாம் முகலாயர் படையெடுக்கும் பகுதிகளில் இருந்து அப்புறப்படுத்தி விடுவோம். அவர்கள் சென்றதும் பெண்களை வரவழைத்துக் கொள்ளலாம்" என்றார் அமைச்சர். அதை மன்னரும் ஒப்புக்கொள்ள பேச்சு வேறு பக்கம் திரும்பியது.



முகலாயர்களை எப்படி எதிர்கொள்வது? போர்த்தந்திரங்கள் என்னென்ன? பெண்களை எங்கே பாதுகாப்பாக வைப்பது போன்றவற்றைப் பற்றி பேசி விட்டு அவை கலைந்தது. தர்பாரில் இப்போது அரசரும் அவரது நெருக்கமானவர்களும் தான் இருந்தனர். மன்னர் குருவை வணங்கினார்.



"குருவே! நீங்க என்னிடம் ஏதோ சொல்ல ஆசைப்படுவது போல இருக்கிறதே? அதை நான் தெரிந்து கொள்ளலாமா?"



"உன் அறிவே அறிவு. நான் சொல்கிறேன் ஆனால் அதற்கு முன் இளவரசி சென்பகவல்லியையும் வரச் சொல். இது அவளும் சம்பந்தப்பட்ட விஷயம்"



மகளின் திருப்பெயரைக் கேட்டதும் மன்னரின் முகம் மலர்ந்தது. காரணம் இளவரசி செண்பகவல்லி அறிவிலும் வீரத்திலும் மட்டுமல்ல பக்தியிலும் சிறந்தவள். குருவான பிரம்மதத்தரிடம் மந்திர வித்தைகளிலும் பயிற்சி பெற்றவள். சிறு வயதிலேயே மந்திர உபதேசம் பெற்றவள். வீரனை அனுப்பி மகளை வரவழைத்தார் மன்னர். சற்று நேரத்தில் அவளது உற்ற தோழியான வசந்தமாலையோடு வந்து சேர்ந்தாள் செண்பக வல்லி.



பொன்னிறமான அவள் உடல் மின்னல் கொடி போல இருந்தது. தலையில் சூடியிருந்த பூக்கள் அவளது மனதைப் போல மணம் வீசின. அவளால் அந்த இடத்துக்கே வெளிச்சம் வந்தது என்று தான் சொல்ல வேண்டும். குருவையும் தந்தையையும் வணங்கினாள் இளவரசி.



"அழைத்தீர்களா குருவே?" என்றாள் மிகுந்த பணிவுடன்.



"ஆம் செண்பகவல்லி! உனக்கு மிக முக்கியமான பொறுப்பு ஒன்றைக் கொடுக்கப் போகிறேன். இன்னமும் உன் தந்தையிடம் கூட இதைப் பற்றிப் பேசவில்லை. நீ வந்த உடன் தான் பேச வண்டும் என்றிருந்தன். இப்படி அமர்வோம்" என இருக்கைகளைக் காட்டினார் பிரம்மதத்தர். அனைவரும் அமர்ந்தனர்.



"மகளே! நம் நாட்டின் மீது பகைவர்கள் படையெடுத்து வருகிறார்கள் என்பது உனக்குத் தெரியும். அதற்கு முன் நான் செய்ய வேண்டிய சில கடமைகள் இருக்கின்றன. அதைப் பற்றிக் கூறத்தான் உங்களை வரவழைத்தேன்"



"கட்டளையிடுங்கள் குருவே"


"கஜகேசரி! இப்போது நான் சொல்லப்போகும் விஷயம் இங்கே இருப்பவர்களைத் தவிர வேறு யாருக்கும் தெரியக்கூடாது. அன்னை காளியின் மீது ஆணையிட்டு சொல்வீர்களா?"



அமைச்சர் தளபதி அவரது மகன் மார்தாண்ட தேவன், ரணதீரன் என அனைவரும் அவ்வாறே செய்தனர். கண்களை மூடிக்கொண்டு பிரம்மதத்தர் பேசத் தொடங்கினார்.



"என் மக்களே, பழம்பெருமை வாய்ந்த பாரத நாட்டுக்கு அடுத்து வரும் 700 ஆண்டுகள் மிகவும் கொடுமையான காலம். பல பகைவர்கள் வெளி நாட்டவர்கள் வந்து நமது செல்வங்களைக் கொள்ளை அடித்துச் செல்வார்கள். பொருட்செல்வத்தோடு ஆன்மீகச் செல்வங்களும் மறையும் அவல நிலை இருக்கிறது. அதனால் சிலவற்றையாவது காப்பாற்ற வேண்டும் என நான் நினைக்கிறேன். அதற்குத்தான் உங்களை இங்கே அழைத்தேன்"



"ஆணையிடுங்கள் குருதேவா!"



"நான் பூஜிக்கும் காளி விக்கிரத்தின் பூர்வீகம் தெரியுமா உங்களுக்கு? ஒரு சிலருக்குத் தெரிந்திருக்கலாம். அதனை வெளிப்படையாகச் சொல்ல வேண்டிய காலம் வந்து விட்டது. விக்கிரமாதித்திய மகாராஜாவைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். காளி அவருக்கு நேரிலே காட்சி கொடுத்து அவளே வடிவமைத்துக்கொடுத்த காளி சிலையைத்தான் மகாராஜாவும் அவரது சகோதரர் பட்டியும் பூஜித்து வந்தனர். அவர்களது மறைவுக்குப் பின்னர் பல மாந்திரீகர்களிடம் கை மாறி இறுதியாக என் குருநாதர் காணிநாத தத்தரிடம் வந்து சேர்ந்தது. அவர் அதனை எனக்கு அளித்தார். இது நாள் வரை ஆகமங்களில் எந்தக் குறைவும் வராமல் நான் அதை பூஜித்து வந்துள்ளேன். அதனை உரிய முறையில் பூஜித்தால் இந்த உலகயையே ஆட்டிப்படைக்கும் சக்தி கிடைக்கும். அதற்கு சான்று விக்கிரமாத்தியனே தான். அதனால் காளி சிலை கயவர்கள் கையில் கிடைக்கக் கூடாது."



"என்ன செய்யலாம் குருவே?"



"அதற்குத்தான் செண்பகவல்லியை அழைத்தேன். மகளே! செண்பகவல்லி நீ அந்தக் காளி சிலையின் பூஜை முறைகளை அறிந்தவள். அதனால் நீ அதனை பாணடிய நாட்டுக்கு எடுத்துச் சென்று விடு. அங்கே தென்காசியில் மன்னர் பராக்கிரம பாண்டியர் இருக்கிறார். அவரது குரு விந்தையனும் ஒரு சித்தர் தான். அவரிடம் இந்தக் காளி சிலையை சேர்ப்பித்து விடு. மற்றதை அவர் பார்த்துக்கொள்வார்" என்றார்.



ரணதீரன் முன் வந்தான்.



"குருதேவரே! உங்களை நான் மறுத்துப் பேசுகிறேன் என எண்ணலாகாது. ஒரு பெண்ணிடம் ஏன் அதனைக் கொடுக்க வேண்டும். அந்தச் சிலையை நானே எடுத்துச் சென்று விந்தையனிடம் ஒப்படைத்து விடுகிறேனே?"



அவனைக் கூர்ந்து பார்த்தார் பிரம்மதத்தர். அவனது முகத்தில் என்ன கண்டாரோ? சட்டென அவரது முகம் மாறியது.



"உன் மனத்தை உன் முகம் பிரதிபலிக்கிறது ரணதீரா! உன் மனம் பேராசை என்னும் புதை சேற்றுக்குள் சிக்கியுள்ளது. அதனை நீ மாற்றிக்கொள்ளாவிட்டால் பெரும் அழிவுக்கு ஆளாவாய். உனது திறமைகளும் சக்திகளும் உனக்குப் பயன்படாமல் போய் விடும்" என்றார்.



எதுவும் சொல்லாமல் அங்கிருந்து அகன்றான் ரணதீரன்.



"உம்! நான் சொல்லியபடி நடக்கட்டும். அதோடு நான் ஒரு மை தருகிறேன். அதனை நம் நாட்டுப் பெண்கள் இட்டுக்கொள்ளும் சாதாரண மையோடு கலந்து விடுங்கள். அதனால் அவர்களுக்கு மிகவும் பாதுகாப்பு. நான் செல்கிறேன். எனக்கு நிறைய ஏற்பாடுகள் செய்ய வேண்டும். இளவரசி செண்பகவல்லி, மார்தாண்டத்தேவா நீங்கள் இருவரும் இன்னும் இரு தினங்களுக்குள் புறப்படத் தயாராக இருங்கள்" என்று சொல்லிவிட்டுச் சென்றார். அவர் சென்ற திசையையே வெறித்தபடி இருந்தான் ரணதீரன்.
 
Top