Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஓவியப்பாவை 12....

Advertisement

தீரன் ஜென்மஜென்மமா கெட்டவனா இருக்கானே. குருவால் அவனை தண்டிக்க முடியாதா
 
அத்தியாயம் 12.



இளவரசி மார்த்தாண்டத் தேவன் இருவரும் கிளம்புவதற்கான நாள் குறிக்கப்பட்டது. அவர்களது வருகை குறித்து மன்னர் பராக்கிரம பாண்டியருக்கும் ஓலை அனுப்பட்டது. பயணம் தொடங்க இன்னும் இரு தினங்களே இருந்த நிலையில் ரணதீரன் திடீரெனக் காணாமல் போனான். அவன் மட்டும் காணாமல் போகவில்லை சில ரகசிய மந்திரங்கள் அடங்கிய ஓலைகளையும் காணவில்லை. இது குறித்து பிரம்மதத்தர் மிகவும் கவலை கொண்டார். அவரது முகம் கலக்கத்தைப் பிரதிபலித்தது.



"குருவே! ரணதீரன் ஓடிப்போனது அத்தனை பெரிய நிகழ்வா? நீங்கள் ஏன் வாட்டமுறுகிறீர்கள்? அந்த ரகசிய மந்திரங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவையா?"



"ஆம் மகளே! அந்த மந்திரங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை தான். அவை குரு மூலமாக மட்டுமே உபதேசிக்கப்பட வேண்டியவை. அதோடு அந்த மந்திரங்களைச் சொல்லும் போது சில யோக முத்திரைகளும் இருக்கின்றன. அவற்றையும் செய்து தான் அந்த மந்திரங்களைச் சொல்ல வேண்டும். அது தெரியாமல் ஓலைகளைக் களவாடி விட்டானே!"



"போகட்டும் விடுங்கள் குருதேவா! அவனுக்கு அதனால் தீமையே ஏற்படும்"



"அவனுக்கு மட்டும் தீமை என்றால் நான் கவலைப்பட மாட்டேனே செண்பகவல்லி! நீயும் சில சித்துக்களைப் பயின்றவள் தானே? அதனால் உன்னிடம் சொல்கிறேன். அந்த மந்திரங்களைப் பயன்படுத்தி கண்ணுக்குத் தெரியாமல் மறைந்து விடலாம். இது ரணதீரன் கையில் கிடைத்தது தான் என் கவலை. அவன் மனதில் ஏற்கனவே சில பேராசைகள் இருந்தன. அவற்றை நிறைவேற்றிக்கொள்ள என்ன செய்வானோ?"



"புரியவில்லை குருதேவா"



"மகளே! நான் என்னிடம் இருக்கும் காளி சிலையைப் பற்றிக் கூறும் போதே அவன் மனதில் பேராசை உருவாகத் தொடங்கி விட்டது. காளி சிலையை முறைப்படி பூஜித்து அவன் இந்த உலகையே தன் கைக்குள் கொண்டு வர எண்ணுகிறான். அது தவறம்மா! நல்ல காரியங்களுக்குத்தான் காளியின் அருளைப் பயன் படுத்த வேண்டும். தவறாகப் பயன்படுத்தினால் பெரும் கேடே விளையும் அம்மா"



"இப்போது என்ன செய்யலாம் குருதேவா?"



"நீயும் மார்த்தாண்டத்தேவனும் பயணப்பட்டுத்தான் ஆக வேண்டுமா? என யோசிக்கிறேன் மகளே! காளி சிலை இங்கேயே இருக்கட்டுமே?"



"ஆனால் முகலாயர்கள் வந்தால் என்ன ஆவது குருதேவா? அவர்கள் அன்னை மாகா காளியை பூஜிக்காமல் அவமானப்படுத்தி விட்டால் கேடு அப்போதும் கூடத்தான் சூழும்"



"குழப்பமாக உள்ளது அம்மா!"



அது வரையில் வாயே திறவாமல் அனைத்தையும் கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்த மார்த்தாண்டதேவன் வாயைத் திறந்தான்.



"மிகப்பெரும் ஞானியான நீங்களே இப்படிப் பேசலாமா குருதேவா? உங்கள் கையில் அன்னை மகா காளி அளித்த சித்துகள் இருக்கும் போது நீங்கள் குழப்பமடையலாமா?"



"என்ன சொல்கிறாய் மார்த்தாண்டா நீ?"



"உங்களிடம் சோழிகள் இருக்கின்றன. அவைகளை உருட்டி பலனை துல்லியமாகக் கணிக்கும் திறனை நீங்கள் காளியின் அருளால் பெற்றிருக்கிறீர்கள். அதனை பிரயோக்கிகலாமே?"



அவன் தோளைத் தட்டிக்கொடுத்தார் பிரம்ம தத்தர்.



"இது தான் சமயோஜித அறிவு என்பது. நல்லது நாளை காலை சரியாக மூன்றாம் நாழிகையில் அரசரை அழைத்துக்கொண்டு நீ என் குடிலுக்கு வந்து விடம்மா! மார்த்தாண்டா நீயும் உன் தந்தையை மட்டுமே அழைத்து வந்து விடு. " என்றூ சொல்லி விட்டு கிளம்பினார்.



அங்கிருந்த மரத்தடி ஒன்றில் அமர்ந்து கொண்டாள் செண்பகவல்லி. அவளருகில் மரியாதையாக நின்று கொண்டான் மார்த்தாண்டத்தேவன்.



"இளவரசி! நம் குருநாதர் தேவையில்லாமல் கவலைப்படுகிறார் என நினைக்கிறேன். அந்த ரணதீரன் என் வீரத்துக்கு முன் தூசுக்கு சமமானவன். சரியாக வாள் வீசக் கூடத் தெரியாது அவனுக்கு"



"நீ நினைப்பது தவறு மார்த்தாண்டா! நம் குருநாதர் தேவையில்லாமல் கவலை கொள்ள மாட்டார். உன் வீரத்துக்கும் அவன் தூசு தான்., ஆனால் அவன் வஞ்சமே உருவானவன் என்பதை நீ அறிய மாட்டாய் சகோதரா! காளி சிலையை அவன் குறி வைக்கக் காரணமே அவனது பேராசையும் வஞ்சகமும் தான்"



"அப்படியானால் அவன் என்ன செய்வான் என நினைக்கிறீர்கள் இளவரசி?"



"எதற்கும் துணிவான் அவன் மார்த்தாண்டா! இப்போது மந்திர ஓலைகளைக் களவாடியது போல விக்கிரகத்தையும் களவாடினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை."



"நம் பயணம் தொடங்கிய பிறகு இரவு பகல் என நான் ஒரு நொடி கூட கண் மூடாமல் காவல் காத்தால் அவன் எப்படிக் களவாடுவான் இளவரசி?"



அழகாக நகைத்தாள் செண்பகவல்லி.



"என் அருமை சகோதரா! உன் கடமை உணர்வை நான் மெச்சுகிறேன். ஆனால் மார்த்தாண்டா அவன் மந்திரங்களில் வல்லவன். அதிலும் இப்போது மாயமாக மறையக் கூடிய மந்திரம் அடங்கிய ஓலையை களவாடிச் சென்றிருக்கிறான். அதனால் தான் எனக்கே கூட கொஞ்சம் தயக்கம் பிறக்கிறது"



"எது எப்படியாகிலும் இளவரசி அந்த முகலாயர்கள் படையெடுத்து வரும் போது நீங்கள் இங்கு இருக்கக் கூடாது. நீங்கள் பாண்டிய நாடு செல்வது காளி சிலையுடனா அல்லது வெறுமேவா? என்பதை நம் குருதேவர் முடிவு செய்யட்டும்" என்றான்.



இருவரும் அவரவர் திசையில் பிரிந்தனர். அன்றைய இரவு படுக்கும் போது பல பயங்கரக் கனவுகள் வந்தன. உருவமற்ற பல கோர வடிவங்கள் அவளை தூக்க முயன்றன. கையில் வாளோடு ரத்த வெள்ளத்தில் மார்த்தாண்டத்தேவன் தெரிந்தான். இளவரசி என அவன் ஏதோ சொல்ல முயல்வது போலத் தோன்றியது. மூச்சுக்கூட விட முடியாமல் யாரோ கழுத்தை அமுக்குவது போல இருந்தது. மிகவும் சிரமப்பட்டு கத்த முயன்றாள். அந்த நேரம் சட்டென விழிப்பு வரவே அப்போது தான் கண்டதெல்லாம் கனவு என தெரிந்தது. வியர்த்துக்கொட்டியது. சாதாரண கனவா நம்மை இந்தப்பாடு படுத்தியது என நினைத்து தன்னை சமாளித்துக்கொண்டாள்.



மறு நாள் வழக்கம் போல விடிந்தது. அரசர் இளவரசி செண்பகவல்லி மற்றும் சில மிக மிக முக்கியப் பிரமுகர்கள் மாத்திரமே குருதேவரின் எளிய குடிலில் கூடியிருந்தனர். விக்கிரமாதித்தனும் பட்டியும் பூஜித்த காளி விக்கிரகம் இரண்டடி உயரம் கொண்டது ஒரு பெரிய மேடையின் மேல் பிரதானமாக அமைக்கப்பட்டிருந்தது. பல வகையான மலர்கள் இருந்தாலும் செவ்வரளி மலர் அதிகமாகக் காணப்பட்டது. இன்னும் ஏதேதோ பொருட்கள் காணப்பட்டன. அன்னையை வணங்கி விட்டு வந்தவர்களை வரவேற்றார் பிரம்மதத்தர். அனைவரும் அமர்ந்து கொண்டனர். ஒரு மான் தோலில் அமர்ந்து கண்களை மூடிக்கொண்டார் குரு தேவர். சில நிமிடங்களுக்குப் பிறகு கண்களைத் திறந்தார். அப்போது அவர் கண்கள் சிவந்திருந்தன.



"மன்னா! நாம் இப்போது ஒரு முக்கியமான கால கட்டத்தில் நின்று கொண்டிருக்கிறோம். நாளைய வரலாற்றில் இந்த கணங்கள் எழுதப்படும். நீங்களும் நானும் சில முக்கியம் முடிவுகளை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்படுவோம் எனத் தோன்றுகிறது" என்றார்.



"குருதேவா! அன்னை காளியின் அருளாலும் உங்கள் ஆசியாலும் நம்மால் எல்லாவற்றையும் சமாளிக்க முடியும் எனத் தோன்றுகிறது. நீங்கள் சொழிகளை உருட்டுங்கள்" என்றார்.



கண்களை மூடி சோழிகளை நெஞ்சோடு சேர்த்து பிரார்த்தித்து ஜெய் மகா காளி என்று உணர்ச்சியோடு சொல்லி உருட்டினார் பிரம்மதத்தர். சில நிமிர்ந்தும் சில கவிழ்ந்தும் விழுந்தன. அவற்றை என்ணி விட்டு நெஞ்சைக் கையால் பிடித்துக்கொண்டு "அம்மா தாயே! உன் திருமனதில் உள்ளது என்ன என்று தெரியவில்லையே அம்மா" என்று கண்களை மூடிக்கொண்டார்.



"குருதேவா! என்ன பலன் எனச் சொல்லக் கூடாதா? உங்கள் முகம் கலக்கமாக இருப்பதை பார்த்தால் எனக்கே கவலையாக உள்ளது" என்றார் மன்னர்.



குடிலில் அமர்ந்திருந்த செண்பகவல்லி மார்த்தாண்டத்தேவன் இவர்களை அவரது பார்வை வருடியது.

"சொல்லவும் நா கூசுகிறது மன்னா! நம் நாட்டுக்கு இப்போது நல்ல நிலை இல்லை. சில உயிர்கள் காவு வாங்கப்படலாம் என்பதே நிலை. காளி சிலையை இங்கிருந்து அப்புறப்படுத்தினாலும் சில முக்கியமான உயிர்கள் போகப்போகின்றன இல்லையென்றாலும் அது தான் நிலை"



அமைதியாக இருந்தது அந்த இடம். காற்றில் காய்ந்த இலைகள் சலசலக்கும் சத்தம் மட்டுமே கேட்டது.



அது வரை அமைதியாக இருந்த செண்பக வல்லி வாய் திறந்தாள்.



"எப்படியும் உயிர்த்தியாகத்தை தடுக்க முடியாது என்றால் நாம் காளி சிலையைக் காப்பதே நல்லது அல்லவா? குறைந்த பட்சம் பகைவர்கள் கையில் அந்தச் சிலை போகாமல் பார்த்துக்கொள்ளலாமே?"



பதிலே சொல்லாமல் வெறித்தார் குருநாதர்.



"குருவே! என் மகள் சொல்வது சரியென்றே எனக்குப் படுகிறது. யார் உயிர் துறக்க நேரிடலாம் என ஏதாவது தெரிகிறதா?" என்றார் மன்னர். அவரைக் கூர்ந்து பார்த்தார் குருதேவர். அவரது விழிகளில் ஏராளமான கனிவு தென்பட்டது.



"அது தெளிவாகத் தெரியவில்லை மன்னா! அப்படியே தெரிந்தாலும் சொல்லும் அதிகாரம் எனக்குக் கிடையாது. நம் நாட்டைச் சேர்ந்தவன் ஒருவனே துரோகியாக மாறலாம். அவனாலேயே சில உயிர்கள் போகலாம் என கணிக்கிறேன். என்ன இருந்தாலும் இப்போது பயணம் செய்வது ஆபத்தானது தான்" என்றார்.



"அப்படியானால் இளவரசி இங்கேயே இருக்கட்டுமா?"



"அப்படியும் சொல்வதற்கில்லை அரசே! படை எடுத்து வருபவர்களால் அவரது பெண்மைக்கே களங்கம் வருமோ என அஞ்சுகிறேன்." என்றார்.



சட்டென எழுந்தாள் சென்பகவல்லி.



"தந்தையே! இனியும் யோசிப்பதில் எந்தப் பயனும் இல்லை. மானத்தை இழப்பதை விடக் கேவலமான விஷயம் எதுவும் இல்லை. ஆகையால் நான் பாண்டிய நாடு செல்லத் துணிந்து விட்டேன். அன்னை காளியின் சிலையை என் உயிரைக் கொடுத்தாவது காப்பேன்."



மகளைக் கலக்கமாகப் பார்த்தார் அரசர்.



"அம்மா! நீ சிறு பெண்! உனக்கு ஆதேனும் ஆபத்து நேர்ந்தால் நானும் உன் அன்னையும் உயிர் பிழைத்திருக்க மாட்டோம். ஆகையால் நானும் உன் உடன் வருகிறேன். உனக்கு எப்போது பாதுகாப்பாக இருப்பேன்" என்றார்.



செண்பகவல்லி வாய் திறக்கு முன் குருதேவர் பிரம்ம தத்தர் முந்திக்கொண்டார்.



"இல்லை மன்னா! ஆபத்தான சூழலில் மன்னர் தலை நகரத்தில் தான் இருக்க வேண்டும். இப்போது நீங்கள் பாண்டிய நாடு நோக்கிச் சென்றால் உயிருக்குப் பயந்து ஓடி விட்டதாக அபவாதம் ஏற்படும். செண்பகவல்லியோடு காவலுக்கு சில படை வீரர்களை அனுப்பு."



"நீங்கள் சொல்வதும் சரிதான் குருதேவா! என் மகளுடன் சில படை வீரர்கள் என்ன? சிறு படையையே அனுப்பி வைக்கிறேன். மகளே! நீ அன்னை காளியின் விக்கிரகத்தை குரு விந்தையனிடம் ஒப்படைத்து விட்டு உடனே நம் நாடு திரும்பி விடு. " என்றார். அர்த்தமுள்ள ஒரு பார்வையை வீசினார் அவளை நோக்கி வீசினார் குருநாதர். அரசர் மற்றும் அனைவரும் ஏற்பாடுகளை கவனிப்பதற்காக விடை பெற்றுப் புறப்பட்டனர். செண்பக வல்லியை மாத்திரம் நிறுத்தி வைத்தார் பிரம்மதத்தர்.



"மகளே! சென்பகவல்லி! இன்று மாலை நீ என் குடிலுக்கு தனியாக வா! உன்னிடம் பல விஷயங்களைப் பேச வேண்டும்." என்றார். அவளும் பணிந்து அப்படியே செய்வதாகக் கூறிச் சென்றாள்.



அங்கே ரணதீரன் சில படைவீரர்களுக்கு வசிய மை தடவி அவர்களைத் தன் வசமாக்கிக் கொண்டிருந்தான். அதோடு நிறையப் பொன்னும் தருவதாகவும் தான் சொல்வதை அப்படியே செய்ய வேண்டும் எனவும் உத்தரவு கொடுத்தான்.
Nice ep
 
Top