Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஓவியப்பாவை 13....

Advertisement

அத்தியாயம் 13.



இளவரசி செண்பக வல்லியும் அவளது உற்ற தோழி வசந்தமாலையும் அரண்மனை நந்தவனத்தில் வைத்து மனம் விட்டுப் பேசிக்கொண்டிருந்தார்கள். சிறு வயது முதலே தோழி வசந்தமாலை என்றால் செண்பகவல்லிக்குப் பிரியம் அதிகம். அதே போல அவளும் இளவரசியை தன கண்ணின் மணியாக நினைத்தாள். இருவருக்கும் எந்த ஒளிவு மறைவும் இருந்ததே இல்லை.



"செண்பகம்! எனக்கு என்னவோ மிகவும் அச்சமாக இருக்கிறது! குருநாதர் என்ன தான் சொன்னார் சொல்லேன்?"



"எத்தனை முறை கேட்பாய் நீ மாலை? நம் நாட்டுக்கு ஆபத்து எனவும் சில உயிர்கள் பலி கொள்ளப்படும் என்று சொன்னார்"



"அப்படியானால் நீ ஏன் பாண்டிய நாட்டுக்குப் போவேன் என பிடிவாதம் பிடிக்கிறாய்? பாதுக்காப்பாக இங்கேயே இருந்து விடேன்"



"அசட்டுத்தனமாக பேசாதே மாலை! என் உயிர் போவதானால் இந்த நாட்டில் மட்டும் போகாதா?"



"இப்படியெல்லாம் நீ பேசக்கூடாது செண்பகம்! அப்படி நீ பாண்டிய நாடு செல்வதில் உறுதியாக இருந்தால் நானும் உடன் வருவேன். இதற்கு நீ ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்"



கலகலவெனச் சிரித்தாள் செண்பகவல்லி.



"அடி கள்ளி! இதற்குத்தானா இத்தனை பீடிகை? உனக்கு உன் காதலன் மார்த்தாண்டத்தேவனோடு இருக்க வேண்டுமானால் சொல்வது தானே? அதற்கு ஏன் சுற்றி வளைக்கிறாய்? உன்னையும் அழைத்துக்கொண்டு தான் செல்வேன்"



"என்னை அப்படித் தவறாகவா நினைத்துக்கொண்டிருக்கிறாய் நீ செண்பகம்? உன்னை விட எனக்கு உயர்ந்தது எதுவும் இல்லை! அனாதையாக நின்ற எனக்கு ஆதரவும் அன்பும் காட்டியவள் நீ அல்லவா? அதை நான் மறப்பேனா?"



"ஒரு வேடிக்கைக்காகச் சொன்னேன் வசந்தமாலை! சரி சரி நான் வரட்டுமா?"



"குருநாதர் வரச் சொன்னார் அல்லவா? அவரைக் காணத்தானே செல்கிறாய்? நானும் வருகிறேனே! எனக்கென்னவோ அவர் என்னையும் அழைத்திருக்கிறார் என்று படுகிறது"



"உம்! தெரியவில்லையேடி மாலை! என்னை தனியே சந்திக்கச் சொல்லித்தான் அழைத்தார்"



"உடன் வருகிறேன். சற்று தொலைவில் நின்று விடுகிறேன் செண்பகம். நீ சொன்னதைக் கேட்டதிலிருந்து என் மனதே சரியாக இல்லை. " என்றாள்.



வசந்தமாலையின் பிடிவாதத்தை நன்கறிந்த செண்பகவல்லி அவளையும் உடன் அழைத்துக்கொண்டு குருதேவர் பிரம்மதத்தர் தங்கியிருக்கும் குடிலை நோக்கி விரைந்தாள். நடுவே பத்மாசனக் கோலத்தில் அமர்ந்திருந்த அவர் இரு பெண்களைக் கண்டதும் உள்ளே வருமாறு தலையசைத்தார். இருவரும் உள் நுழைந்து பவ்யமாக நின்று கொண்டனர்.



"செண்கவல்லி அமர்ந்து கொள்ளமா! வசந்த மாலை நீயும் தான். நிறையப் பேச வேண்டும். நின்று கொண்டே இருந்தால் உங்களால் சரியாகக் கவனிக்க முடியாது" என்றார்.



அருகில் இருந்த பாயில் இரு பெண்களும் அமர்ந்து கொண்டனர். சற்று நேரம் கண்களை மூடி தியானத்தில் ஆழ்ந்த அந்த மகாமனிதர் கண்களைத் திறந்து கருணையோடு நோக்கினார்.



"நானே உன் தோழியையும் அழைத்து வா என்று சொல்லலாம் என நினைத்தேன். நீயே அழைத்து வந்து விட்டாய். நல்லது. வசந்த மாலை! உனக்கும் சில பணிகள் இடப் போகிறேன். செவ்வனே செய்ய வேண்டும் தெரிந்ததா?"



"காத்திருக்கிறேன் குருதேவா" என்றாள் மிக்க மகிழ்ச்சியுடன்.



"அம்மா! செண்பகவல்லி! இங்கிருந்து புறப்படு முன் நீ சில ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். அவற்றைப் பற்றி சொல்கிறேன் கவனமாகக் கேளம்மா"



"உத்தரவிடுங்கள் குருதேவா"



"எக்காரணம் கொண்டும் நீ காளி சிலையை வழியில் மறைத்து வைக்கக் கூடாது. பாண்டிய நாட்டுக்குள் அது சென்று விட வேண்டும். எப்படிப்பட்ட தடைகள் வந்தாலும் காளி சிலையை மாத்திரம் நீ விட்டு விடக் கூடாது"



"அப்படியே செய்கிறேன் குருதேவா"



"நீயே என்னிடம் சில மந்திரங்கள் பயின்றவள் என்பதால் உனக்கு இதைச் சொல்கிறேன். நீ உன்னை ஒரு ஓவியமாகத் தீட்டு! அதில் தான் உன் ஆன்மா நிலைபெறும். பிற்கால சந்ததிகளுக்கு உன் ஓவியம் வழி காட்ட வேண்டும் "



மௌனமாக அமர்ந்திருந்தாள் சென்பகக் குழலி.



"புரியவில்லை அல்லவா? சொல்கிறேன் அம்மா! இன்னும் இரண்டே நாட்களில் நீங்கள் பயணப்பட வேண்டும். நீ வரையும் அந்தச் சித்திரத்தை இப்போதே நிறைவு செய்! "



"ஆனால் குருதேவா! நீங்கள் அம்மன் விக்கிரகத்தை குருநாதர் விந்தையனிடம் தானே ஒப்படைக்கச் சொன்னீர்கள்? அதை நான் ஏன் பத்திரப்படுத்த வேண்டும்?" என்றாள் இளவரசி.



பிரம்மத்ததரின் முகம் மாறியது.



"சில கேள்விகளுக்கு என்னிடம் விடை இல்லை அம்மா இப்போது! வசந்த மாலை நீயும் கேட்டுக்கொள்! உனக்கு செண்பக வல்லி என்ன உத்தரவு கொடுக்கிறாளோ அதனை நீ அப்படியே நிறைவேற்ற வேண்டும். மறுக்கவோ வாதிடவோ உனக்கு உரிமை இல்லை புரிந்ததா?"



"அப்படியே செய்கிறேன் குருவே"



"அது மட்டுமல்ல! பயணத்தின் போது இளவரசியை கவனமாகப் பாதுக்காக்க வேண்டும். தேவைப்பட்டால் வாளெடுத்தும் போரிட வேண்டும். எல்லாவற்றையும் விட மிக மிக முக்கியமானது இளவரசி காளி சிலைக்கு பூஜை செய்யும் போது யாரும் அதனைப் பார்க்காமல் நீ கவனித்துக்கொள்ள வேண்டும். இளவரசியின் ஓவியத்தை நீயும் மார்த்தாண்டத் தேவனும் சந்தனப் பெட்டியில் வைத்து சில ஓலைகள் எழுத வேண்டும்"



"எதைப் பற்றி குருவே?"



"அது வேளை வரும் போது உனக்கே தெரியும்"



"உத்தரவு குருவே"



"அம்மா செண்பகவல்லி! விக்கிரகங்கள் பூஜை செய்யப்பட முடியாத நிலையை அடையுமானால் அவற்றை ஜலப்பிரதிஷ்டை செய்ய வேண்டும் என நம் ஆகமங்கள் கூறுகின்றன. அதிலும் இந்தக்காளி உக்கிர ரூபிணி. ஆகையால் ஜலப்பிரதிஷ்டையை நினைவு வைத்துக்கொள்"



புரியாமல் அப்படியே செய்வதாக உறுதி அளித்தாள் செண்பகவல்லி.



இன்னும் பலப்பல விஷயங்களைப் பற்றி சொன்னார் குருநாதர். அவற்றையெல்லாம் அப்படியே இம்மியும் பிசகாமல் செய்வதாக வாக்களித்தனர் இருவரும். அவர்கள் வெளியில் வரும் போது இருட்டி விட்டது. அரண்மனையில் விளக்குகள் ஏற்றி வைத்திருந்தனர். இருந்தாலும் எங்கும் இருள் சூழ்ந்து காணப்பட்டது போலத் தோன்றியது வசந்தமாலைக்கு.



"எனக்கென்னவோ குருநாதர் சொன்னதைக் கேட்டதிலிருந்து பயமே அதிகமாக உள்ளது! உனக்கு ஏதேனும் ஆபத்து வருமோ என அஞ்சுகிறேன். அவர் கணித்து விட்டார், ஆனால் நம்மிடம் சொல்ல மறுக்கிறார். நீயும் தான் மந்திரங்களில் வல்லவள் ஆயிற்றே! நம் வருங்காலத்தைப் பற்றி சொல்லேன்"



"வசந்தமாலை! நமக்கு பிரமாதமான வருங்காலம் இல்லை என்று மட்டுமே என்னால் சொல்ல முடியும். ஆனால் பல ஆண்டுகள் கழித்தும் நீயும் நானும் மார்த்தாண்டனும் காளி சிலையை பிரதிஷ்டை செய்வோம். நடுவில் காலம் என்ற பெருவெள்ளம் நம்மை அடித்துச் சென்றாலும் உன்னையும் என்னையும் பிரிக்க முடியாதடி" என்றாள்.



"இப்படி சூசகமாகப் பேச குருவிடம் கற்றுக்கொண்டாயோ? மட்டைக்கு இரண்டு கீற்று என தெளிவாகச் சொல்லேன்"



"என்னால் இயலாது மாலை. என்னால் மட்டுமல்ல! என்னைப் போன்று மந்திர ஞானத்தை ஆக்க பூர்வமாக பயன்படுத்துபவர்கள் யாராலும் எல்லாவற்றையும் விளக்கமாகச் சொல்ல முடியாது. எங்கள் நிலை அப்படி"



"எப்படியோ நீயும் நானும் பிரியாமல் இருப்போம் என்றாயே அதுவே எனக்குப் போதும்."



"பிரிவது என்பதே இல்லை வசந்த மாலை இருவரும் ஒன்றாக ஆகி விடுவோம். நீ வருங்கால சந்ததிகளிடம் கூடப் பேசுவாய்"



"அடேயப்பா! அத்தனை ஆண்டுகளா நாம் உயிரோடு இருப்போம்?"



"ஆன்மாவுக்கு ஏது அழிவு வசந்தமாலை? என் ஆன்மா உனக்கு வழி காட்டும்"



"புரிந்தது போலவும் இருக்கிறது புரியாதது போலவும் இருக்கிறது. சரி நீ குருநாதர் சொன்னபடி உன் ஓவியத்தைத் தீட்டத் தொடங்கு. தேவையான வர்ணங்கள் தூரிகை இவற்றை எடுத்து வைக்கிறேன். "



"உம் அப்படியே செய். அதோடு முக்கியமாக நீயும் உனது வாள் பயிற்சியை மேற்கொள் மாலை. உன் அத்தான் மார்த்தாண்டத்தேவனிடமே பயிற்சி எடுத்துக்கொள். நமக்குத் தேவைப்படும்" என்றாள்.



"சரி செண்பகம். நாளை காலையிலிருந்து எனக்கு களரியும் வாளும் சுற்றுவதே வேலை. உன்னைப் பாதுக்காப்பது என் கடமை ஆயிற்றே"



"உன்னைப் போலத் தோழி கிடைக்க நான் கொடுத்து வைத்தவள் வசந்த மாலை"



"நான் தான் அதிகம் கொடுத்து வைத்தவள் செண்பகம். ஒரு சகோதரியைப் போல நீ காட்டிய அன்பை என்னால் மறக்க முடியுமா? "



"சரி சரி! உபசார வார்த்தைகள் நமக்குள் எதற்கு? நீ சென்று ஓவியம் தீட்ட நல்ல பதப்படுத்தப்பட்ட தோலைக் கொண்டு வா"



"தோலா? தோலிலா வரையப்போகிறாய்? எப்போதும் ஓலைகளில் அல்லது துணிகளில் தானே வரைவாய்?"



"இப்போது நான் வரையப்போகும் ஓவியம் பல காலம் நீடித்து புதுப்பொலிவு மாறாமல் இருக்க வேண்டும் வசந்தமாலை! அதனால் தான் தோல் கேட்கிறேன். அதிலும் எந்த அழிவும் வராமல் பாதுக்காப்பாக இருக்கும் தோல் அதாவது பல மூலிகைகள் தடவப்பட்டு பதப்படுத்தப்பட்டிருக்கும் தோல் தான் வேண்டும் எனக்கு"



"உன் இஷ்டம்! அமைச்சர் தான் அப்படிப்பட்ட தோல்களைத் தயாரித்து வைத்திருக்கிறார். கேட்டு வாங்கி வருகிறேன். நீ வர்ணங்களைக் குழைத்துக்கொண்டிரு." என்று சொல்லி விட்டு மான் மாதிரி துள்ளி ஓடினாள் வசந்த மாலை. சற்று நேரத்துக்கெலாம் பெரிய தோலுடன் வந்து விட்டாள்.



அதனை வாங்கி தனது தூரிகையால் சில கொடுகளை வரைந்து தன் ஓவியத்தை வரையத்துவங்கினாள் செண்பகவல்லி. முகத்தை வரைந்து கொண்டிருக்கும் போது அப்படியே விட்டு விட்டு ஒரு கத்தியால் தன் கட்டை விரலைக் கீறி சிறிது ரத்தம் வரவழைத்து அதையே நெற்றித் திலகமாக இட்டாள். அதோடு சில இடங்களில் அந்த ரத்தத்தை வர்ணங்களோடு கலந்தாள். இவற்றை திகிலோடு பார்த்துக் கொண்டிருந்தாள் வசந்தமாலை.
Nice ep
 
Top