Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஓவியப்பாவை....18

Advertisement

Srija Venkatesh

Well-known member
Member
அத்தியாயம் 18.



மங்கலான அந்த டார்ச் லைட் வெளிச்சத்தில் எங்கே இருக்கிறது என்றே தெரியாத ஒரு கிணற்றைத் தேடுவது மிகவும் கடினமான விஷயமாக இருந்தது அவர்களுக்கு. ஆளுக்கொரு திசையில் பிரிந்து தேடினார்கள். கூடம், பக்கவாட்டு அறைகள், சமையலறை என தேடினார்கள். அவர்கள் களைத்துப் போய் தேடலைக் கை விட ஆரம்பித்த நேரம் ஸ்வேதாவின் கையிலிருந்த பெட்டி நழுவி விழுந்தது. விழுந்த அந்தப் பெட்டி கரகரவென நகரத் தொடங்கியது. அதை அவர்கள் வியப்புடன் பார்த்திருக்க சமையலறைக்கும் கூடத்துக்கும் இடையே உள்ள ஒரு இடத்தில் போய் நின்றது. அங்கே வந்த மாலா பெட்டியைக் கையில் எடுத்துக்கொண்டாள். அப்போது தான் அனைவரும் அங்கே சற்றே புடைப்பாக இருந்த அந்த இடத்தைக் கவனித்தனர். மரப்பலகை கொண்டு அந்த இடம் மூடப்பட்டிருந்தது. அந்த பலகையில் சில துளைகள் இருந்தன.



"இதுக்குக் கீழே தான் கிணறு இருக்கணும். இந்தப் பலகையை தூக்குங்க" என்றான் அருண். அதனை தொடர்ந்து அந்த சிறு துளைகளில் கை கொடுத்து தூக்க முயன்றனர் அறுவரும். அசைந்து கூடக் கொடுக்கவில்லை அது. சற்று நேரம் முயற்சி செய்து விட்டு இளைப்பாற வேண்டி நிறுத்தினர்.



"ரொம்ப வருஷமா அப்படியே இருக்கு இல்ல! அதான் அசைய மாட்டேங்குது" என்றான் பிரஷாந்த். ஆனால் பதிலே பேசாமல் கிணற்று மேடையே உற்றுப் பார்த்தவாறு இருந்தாள் ஸ்வேதா. ஏதாவது நெம்புகோல் பொன்ற அமைப்பு இருக்கலாம் என அவள் மனம் சொல்லியது. வாசலில் ஏதோ அரவம் கேட்பது போல தோன்ற சட்டெனத் திரும்பினார்கள் அனைவரும். ஆனால் யாருமே இல்லை. மெலிதான ஒரு பயம் பரவியது அவர்களுக்குள்.



"ரணதீரன் வந்துட்டா நமக்குத்தான் ஆபத்து. முதல்ல காளி சிலையைக் கோயில்ல பிரதிஷ்டை செய்யணும்" என்றான் ராகுல் முணுமுணுப்பாக. மீண்டும் அந்தப் பலகையை இழுத்தனர். சற்றே நெகிழ்வது போலத் தோன்றியதே தவிர திறக்கவில்லை.

"கொஞ்சம் வெயிட் பண்ணுங்க" என்று சற்றே உரத்த குரலில் சொன்னாள் ஸ்வேதா.



"என்ன ஸ்வேதா?"



"அங்கே பாருங்க ஒரு சின்ன பொந்து மாதிரி இருக்கு. மரப்பலகை முடிஞ்சு தரை ஆரம்பிக்குற இடத்தைப் பாருங்க" என்று சுட்டிக்காட்டினாள். அவள் சொன்னது போல சிறு ஓட்டை இருந்தது. ஆனாலும் அதன் பெரும்பகுதி மரப்பலகையால் மறைக்கப்பட்டிருந்தது. அந்த துவாரத்துக்குள் தன் மெல்லிய விரல்களை நுழைத்தாள். ஏதோ ஒரு குமிழ் மாதிரி தென்பட அதனை பலம் கொண்ட மட்டும் அழுத்தினாள். பலகை நகர்ந்து அந்த துவாரம் முழுவதுமாகத் தெரிந்தது. அதில் நெம்புகோல் போல ஒரு கழி இருந்தது. குப்பெனற சந்தோஷம் முகத்தில் தெரிய அதனை பற்றி இழுத்தான் அருண். மெல்ல மெல்ல அந்த மரப்பலகை நகர்ந்து வழி விட்டது. அதன் கீழே சலனமே இல்லாமல் நீர் இருந்தது மெல்லிய வெளிச்சத்தில் தெரிந்தது. அந்தக் கிணறு திறந்ததுமே ஒரு தெய்வீக சக்தி அவர்களை ஆட்கொண்டது போல மனம் நிம்மதி அடைந்தது அவர்களுக்கு.



"கிணறு தெரிஞ்சு போச்சு. இப்ப காளி சிலையை எடுக்க வேண்டியது தான் பாக்கி" என்றான் ராகுல்.



டார்சை உள்ளே செலுத்திப் பார்த்ததில் அழகான கல் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டிருப்பது தெரிந்தது.



"அருணும் மாலாவும் தான் இதுல இறங்கணும். அவங்க கையால சிலையை எடுக்கணும்னு தான் நமக்கு உத்தரவு" என்றாள் ஸ்வேதா. அந்தக் கிணற்றைப் பார்க்கும் போது உடல் சிலிர்த்தது மாலாவுக்கு. ஏனோ அழுகையும் பூரிப்பும் பொங்கி வந்தன. மிகப்பெரிய கடமை ஒன்றைச் செய்யப் போகிறோம் என்ற எண்ணம் வேறு. முதலில் மாலா இறங்க அவளைத் தொடர்ந்து இறங்கினான் அருண். இருவருக்கும் பதட்டமாகவும் அதே நேரம் மிகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. தண்ணீரின் பரப்பைத் தோட்டதும் மின்சாரம் தாக்கியது போல உணர்ந்தனர் இருவரும். காரணம் நீர் சில்லென இல்லாமல் சற்றே சூடாக இருந்தது. கைகளை உயர்த்திக் கும்பிட்டு விட்டு தண்ணீரில் இறங்கினர் இருவரும். அவர்களது முழங்கால் அவளே இருந்தது தண்ணீர். கைகளால் சிலையைத் தேடினர்.



மேலே வேடிக்கைப் பார்த்தபடி நின்றிருந்த நால்வருக்கும் தங்களைச் சுற்றி ஏதோ ஒரு வகையான மணம் வருவது தெரிந்தது. முதலில் சுதாரித்துக்கொண்டவன் ராகுல் தான். மற்றவர்களைக் கலவரப்படுத்த வேண்டாம் என எண்ணி விலகிச் சென்று தேடினான். யாரோ இருவர் மெலிதாக மூச்சு விடும் சப்தம் கேட்க உஷாரானான். அவன் சுதாரிப்பதற்குள் ரணதீரன் வெளிப்பட்டு அவனை நோக்கி ஏதோ சொல்லி ஊத அறையின் ஒரு மூலையில் போய் விழுந்தான் ராகு. தட்டென கேட்ட சத்ததில் மற்ற மூவரும் நிமிருந்து பார்க்க ரணதீரன் கபால மாலை அணிந்து கைகளில் ஏதோ ஒரு மூட்டையோடு நின்றிருந்தான். அவனைக் கண்டதும் திகைத்தார்கள் நால்வரும்.



"எத்தனையோ ஜென்மமாக் காத்திருந்த நேரம் வந்தாச்சு எனக்கு. அது உங்களால நாசமாக விட மாட்டேன். உம் அப்படிப் போய் உக்காருங்க. இல்லைன்னா என் மந்திர சக்திக்கு நீங்களும் பலியாக வேண்டியது தான்" என்றான். அறையின் மூலையில் எழ முடியாமல் கிடந்தான் ராகுல். அவனால் தன் கால்களை அசைக்கக் கூட முடியவில்லை. எல்லாம் அந்த மந்திரவாதியின் வேலை எனப் புரிந்து கொண்டான். இருந்தும் குரல் உயர்த்திக் கத்தினான்.



"உன்னால என்ன செய்ய முடியும்? இப்ப அருணும் மாலாவும் சிலையை எடுத்துருவாங்க. அதை கோயில்ல பிரதிஷ்டையும் செய்திருவாங்க. அப்புறம் உனக்கு என்ன ஆகுமோ யார் கண்டது?" என்றான்.



ஹாஹா என உரத்த குரலில் சிரித்தான் ரணதீரன்.



"என்னை மீறி காளி சிலை கோயிலுக்குப் போயிருமா? அந்த சிலைக்காகத்தானே காத்திருந்தேன். அவர்கள் அதை வெளியில் கொண்டு வந்ததும் நான் செய்யப்போகும் பலி பூஜையில் காளி மனமிரங்கி என்னை அவள் பக்தனாக ஏற்றுக்கொள்வாள். பிறகு எனக்கு ராஜ யோகம் தான். இந்த உலகமே என் காலடியில் கிடக்கும்." என்று சொல்லி மேலும் சிரித்தான். அந்த இருள் சூழ்ந்த இரவு, பூச்சிகளின் ரீங்காரம் நிறைந்த நடு இரவில் அவனது சிரிப்பு படு பயங்கரமானதாக இருந்தது.



"அவர்கள் இருவரும் வந்ததும் நீ சென்று அந்த கிணற்று நீரில் நீராடி விட்டு வா!" என்று ஸ்வேதாவிடம் சொல்லி விட்டு பூஜைக்கான ஏற்பாடுகளில் முனைந்தான் அந்த மந்திரவாதி. சிறு குழந்தை ஒன்றின் கபாலம், ரத்தத்தில் தோய்ந்த கோழி இறகுகள், இரும்பு விளக்கு சிவப்பான ஒரு எலுமிச்சம் பழம் என அவன் எடுத்த பொருட்களைப் பார்த்ததும் பயத்தில் நாக்கு உலர்ந்து போயிற்று அவர்களுக்கு. ரணதீரன் இருப்பது தெரியாமல் அருணும் மாலாவும் மேலே வந்து விட்டால் ஆபத்துக்கு ஆளாவார்களே அவர்களை எப்படி எச்சரிக்கலாம் என யோசித்தபடி இருந்தான் ராகுல். கத்துவது ஒன்று தான் வழி என உணர்ந்து ஸ்வேதாவுக்கும் பிரஷாந்துக்கும் ஜாடை காட்டினான். அதனைப் புரிந்து கொண்ட அவர்கள் அவனது கை அசைவுக்குக் காத்திருந்தார்கள்.



எதற்காகவோ ரணதீரன் வேறு புறம் பார்த்த போது ராகுல் கை அசைக்க மூவரும் ஒரே குரலில் "ஆபத்து ரணதீரன்" என்று கத்தினார்கள். அந்த சத்தம் கீழே வரை எட்டியிருக்க வேண்டும் எனவும் நம்பினார்கள். அதைக் கேட்டு பரமனுக்கு தூக்கி வாரிப் போட்டது. ரணதீரன் கோபத்துடன் அவர்களை முறைத்தான்.



"முட்டாள்களே! அவர்களை எச்சரித்ததால் என்ன பலன்? எப்படியும் அவர்கள் மேலே தானே வந்தாக வேண்டும்? அது கூடவா தெரியவில்லை?" என்றான். பெரிதாக பளபளத்த மிகவும் கூர்மையான வெள்ளி வாளை எடுத்து அதன் நுனியில் எலுமிச்சம் பழம் சொருகிய போது தன் வயிற்றில் அந்த வாள் பாய்வது போல உணர்ந்தாள் ஸ்வேதா. வியர்க்க ஆரம்பித்தது அவளுக்கு.



"ஐயா! எனக்கு என்ன உத்தரவுங்க?" என்றான் பரமன் மிகப்பணிவாக.



"அவர்கள் வெளி வந்ததும் காளி சிலையை நான் வாங்கிக்கொண்டு விடுவேன். அதனை இந்த பலி பீடத்துக்குப் பக்கத்திலேயே தான் பிரதிஷ்டை செய்ய வேண்டும். நான் பூஜையை ஆரம்பித்த பிறகு அதோ அந்தப் பெண் நீராடி வருவள். அவளை காளிக்குப் பலி கொடுப்பேன். மற்றவர்கள் மீது நீ இந்த வசியப்பொடியைத் தூவு. பிறகு அனைத்தும் என் வசம் தான்" என்றான் வெற்றி முழக்கமாக.



கேட்டவர்களுக்கு பயத்தில் மயிர்க்கால்கள் குத்திட்டு நின்றன.



"சாமி! இவங்க போய் போலீஸ்ல சொல்லிட்டா நாம மாட்டிப்போமே?"



"மடையா! இவர்கள் யாரும் உயிருடன் திரும்பப் போவதில்லை. இதோ இந்தக் கிணற்றில் இவர்களை இறக்கி மூடி விட்டால் தீர்ந்தது நம் வேலை" என்றான் பயங்கரமாக.



அதைக்கேட்டதும் அந்த மந்திரவாதியை அப்படியே மண்டையில் அடிக்க விரும்பி எழு முயற்சி செய்தான் ராகுல். ஆனால் அவனால் நிலையாக நிற்கக் கூட முடியவில்லை. கால்கள் காற்றில் செய்தது போல இருக்க விழித்தான் ராகுல்.



"ராகுலா! இப்போது நீ என் மந்திரக்கட்டுக்குள் இருக்கிறாய். உன்னால உன் கால்களை பயன்படுத்த முடியாது. பேசாம நடக்குறதே வேடிக்கை பாரு. உன் தளபதி வேலையை என்னிடம் காட்டாதே" என்றான் ரணதீரன். மனதில் ஆத்திரம் பொங்கியது ஆனால் எதுவும் செய்ய முடியாத நிலையில் தவித்தான் ராகுல்.



கிணற்றுக்குள் இருந்த மாலாவுக்கும் அருணுக்கும் மற்றவர்கள் கத்தியது நன்றாகக் காதில் விழுந்தது. அந்த நேரம் தான் அவர்கள் கரங்களில் காளி சிலை தென்பட்டது. சத்தமே போடாமல் சிலையை வணங்கி இரு கரங்களாலும் மிக்க பணிவோடு தூக்கினர். அந்தக் காளி சிலை தண்ணீரை விட்டு வெளியே வந்ததும் அந்த இடத்திலே ஏதோ ஒரு வகையான மாற்றம் ஏற்பட்டதைப் போல இருந்தது. காற்றில் சந்தன மணம் வீசியது. எங்கிருந்தோ கற்பூர மணமும் சேர அந்த சூழ்நிலையே தெய்வீகமானது. மெல்லிய குரலில் பேசினான் அருண்.



"மேலே ரணதீரன் இருக்கான்னு நினைக்கறேன். அதான் அவங்க நம்மை எச்சரிக்கை செஞ்சிருக்காங்க. இந்தச் சிலை எக்காரணம் கொண்டும் அவன் கைக்கு போகக் கூடாது. அதுக்காக நம்ம உயிரே போனாலும் நாம கவலைப்படக் கூடாது புரிஞ்சதா?" என்றான். மாலாவுக்கு இதே வார்த்தைகளை எங்கோ எப்போதோ கேட்ட நினைவு உந்தித்தள்ள சரியெனத் தலையசைந்தாள். அவன் தொடர்ந்து பேசினான்.



"முதல்ல அங்க என்ன நிலவரம்னு பார்த்துக்கிட்டு அதுக்குத் தகுந்த படி தான் செயல்பட முடியும். ஆனால் தைரியத்தை மட்டும் கை விட்டுராதே" என்றான். கண்களில் நீர் பளபளக்க மீண்டும் தலையசைத்தாள் மாலா. இருவருமாக சிலையை சுமந்து கொண்டு மேலே வந்தனர். அவர்கள் தலை தெரிந்தததும் அவசரமாக அருகே வந்தான் ரணதீரன். அவனது முகம் பேராசையால் விகாரமாகத் தோன்றியது. அவனது பார்வை காளி சிலை மீதே நிலைத்திருந்தது. மேலே வந்து நின்ற இருவரையும் முறைத்துப் பார்த்தான்.



"உம் காளிசிலையைக் குடுங்க" என்றான்.



"அவன் கிட்ட காளி சிலையைக் குடுக்காதே அருண். அவன் ஸ்வேதாவை பலி குடுக்க திட்டம் போட்டிருக்கான்" என்று கத்தினான் ராகுல். ஆத்திரத்தோடு அவனை நோக்கித் திரும்பி மந்திரத்தை முணுமுணுத்து தண்ணீரை விசிறி அடித்தான். க்ரீச்சிட்டாள் ஸ்வேதா. ஆனால் ராகுலுக்கு எதுவும் ஆகவில்லை. அதை உணர்ந்த ராகுல் ஏதோ தோன்ற கால்களை அசைத்துப் பார்த்தான். கால்களும் நன்றாக இயங்கின. எழுந்து ஓடோடி வந்து ஸ்வேதாவின் அருகில் நின்றான்



நடந்ததை நம்ப முடியாமல் பார்த்தான் ரணதீரன். அப்போது யாரோ கலகலவென சிரிக்கும் சத்தம் கேட்டது. பயத்தோடு சுற்றுமுற்றும் பார்த்தார்கள். அந்த கிணற்றின் மேல் மெல்லிய ஓவியம் போல இளவரசி செண்பகவல்லி நின்றிருந்தாள். ஓவியத்தை விட நேரில் அவளது அழகு பிரமிக்க வைத்தது. அவளைக் கை கூப்பி வணங்கினார்கள் அனைவரும். கூப்பத்துடித்த கரங்களை அடக்கிக்கொண்டான் ரணதீரன்.



"ரணதீரா! என் தோழியும் அவளது காதலனும் இந்த சிலைக்காக உயிரையே கொடுத்தனர். இப்போதும் கூடக் கொடுக்க சித்தமாக இருந்தனர். இத்தனை ஆண்டுகள் ஜல பிரதிஷ்டையில் இருந்த காளி சிலையின் சக்திக்கு முன்னே நீ ஒரு தூசி. காளியின் சான்னித்தியத்தின் முன் உன் மந்திரங்கள் எதுவும் எடுபாடது. என் கடமை இதோடு முடிந்தது. இனி எனக்குக் கவலை இல்லை. நிம்மதியாக இறைவன் திருவடியை சென்று சேர்வேன். என் குழந்தைகளே உங்களுக்கு என் ஆசிகள். இவனைக் கண்டு இனி நீங்கள் அஞ்சத் தேவையில்லை. இவன் ஒரு கொடூரமான மனிதன். தன் சுயநலத்துக்காக காளியையே அடக்க நினைத்தவன். இவனை விட்டு விடாதீர்கள். போன ஜென்மத்தில் இணைய முடியாமல் போன நீங்கள் இந்த ஜென்மத்தில் திருமணம் என்ற பந்தத்தில் இணைந்து மகிழ்வோடு வாழுங்கள். ராகுலா நீ போன ஜென்மத்தில் சேர தளபதி. இந்த ஜென்மத்தில் என் வழி வந்த ஸ்வேதாவை மணம் செய்து கொண்டு நலமாக வாழ்!" என்று சொல்லி விட்டு மறைந்தாள்.



நடந்தது கனவா இல்லை நனவா இதுவும் ரணதீரனின் மந்திரமா எனத் தெரியாமல் குழம்பினர். இவ்வளவுக்கும் பிறகும் ரணதீரன் தனது ஆசையை விட்டு விடவில்லை. காளி சிலையை நோக்கித் தாவினான். அங்கிருந்த அனைவரும் பரமன் உடபட வாழ்நாளில் காணவே முடியாத அதிசயத்தைக் கண்டார்கள். தாவிய ரணதீரன் அப்படியே காற்றில் உறைந்து போனான். அவனது உடல் பறவை பறப்பது போல மெல்லப் பறந்து சென்று கிணற்றுக்குள் போனது. அந்தக் கிணற்றை மூடியிருந்த பலகை தானாகவே இழுபட்டு கிணற்றை முற்றிலுமாக மூடிக்கொண்டது. கொஞ்ச நேரம் ரணதீரனின் அலறல் கேட்டது. சில வினாடிகளுக்குப் பின் அதுவும் அடங்கியது. இவற்றையெல்லாம் பார்த்திருந்த பரமன் பித்துப் பிடித்தவனைப் போல ஓடிப் போனான். அதன் பிறகு அவனை யாருமே புலிப்பட்டியில் பார்க்கவே இல்லை.



அதிகாலை அழகாகப் புலர்ந்தது. சிவன் கோயில் மணிகள் ஓம் ஓம் என முழங்கின. காளி சிலையைச் சுமந்து கொண்டு அருண் மாலா முன்னால் செல்ல அவர்கள் பின்னால் ராகுல், ஸ்வேதா பிரஷாந்த் அவன் தாயார் என வரிசையாகச் சென்றனர். அவர்கள் முகங்களில் நிம்மதியும் மகிழ்ச்சியும் களைப்பையும் மீறித் தெரிந்தது. அவர்கள் கோயிலுக்கு நுழையும் முன்னரே இரு குருக்கள் ஓடி வந்தனர்.



"வாங்கோ வாங்கோ! இன்னைக்கு அம்பாள் இங்க பிரதிஷ்டை ஆகப் போறாள்னு எங்களுக்குக் கனவுல உத்தரவு வந்தது. அதனால நாங்க எல்லா ஏற்பாடும் செஞ்சுட்டோம். நீங்களே உங்க கையால அதைச் செய்யணும்கறது தான் அவ உத்தரவு. உள்ளே வாங்கோ" என்று கூறி அழைத்துச் சென்றனர். வேத மந்திரங்கள் முழங்க கிராம மக்கள் அனைவரும் பார்த்திருக்க அருணும் மாலாவும் அந்தக் காளி சிலையை பிரதிஷ்டை செய்தார்கள். பாலாலும் பன்னீராலும் இளநீராலும் அபிஷேகம் செய்து அன்னையைக் குளிர வைத்தார்கள். தகவல் கிடைத்து அருணின் தாயும் தந்தையும் வந்து விட அங்கேயே காளி சந்நதியின் முன்னால் அருண் மாலா திருமணமும் ராகுல் ஸ்வேதா திருமணமும் சிறப்பாக நடந்தன.



விக்கிரமாதித்தன் பூஜித்த காளி புன்னகையோடு அருளையும் வாரி வழங்கியபடி புலிப்பட்டியையும் அங்கு வாழும் மக்களையும் காத்தருளுகிறாள். அவளது மலர்ந்த முகத்தில் புன்னகை இருக்கும் வரை இனி யாருக்கும் எந்தக் குறையும் இல்லை.
 
Top