Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கண்ணாமூச்சி ஏனடா..! -16

Advertisement

Banupriya "பா.ரியா"

Well-known member
Member

அத்தியாயம் -16

வெலண்டினா அன்று ஆரஞ்சு நிறத்தில் வெள்ளைப் பூ போட்ட லோ ஹிப் சாரி கட்டியிருந்தாள். அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்த மதனின் முதுகில் லேசாய் ஒரு போடு போட்டாள் மித்ரா.

' யார்ரா.. நம்மளை அடிக்கிறது..' என்று திரும்பிப் பார்த்த மதனுக்கு ஆச்சர்யம் தான். மித்ராவா? மித்ராவா தன்னை அடித்தது என்று அவன் ஒரு கணம் தடுமாறிப் போனான். அவள் இப்படியெல்லாம் இலகுவாக நடந்து கொள்பவள் இல்லையே. கைகொடுத்து ஹலோ சொன்னால் கூட வணக்கம் சொல்லி மூக்கை உடைப்பவள் ஆயிற்றே... என்னவாச்சு இவளுக்கு என்று அதிசயமாய் பார்த்தான்.

" மதன்.. பார்த்தது போதும். நேற்று சொன்ன வேலையை முடிச்சாச்சா..?" அந்த ஃபைல்களை புரட்டிக் கொண்டே கேட்டாள்.

" ஆ.. ஆ.."

" அந்த ' செந்தூர் டெக்ஸ்' விளம்பரம்?"

" முடிச்சாச்சு.."

" ராகவ் கேட்ட ஐடியா?"

" கொடுத்தாச்சு.."

" அப்ப நான் கிளம்புறேன்.. வேற ஏதாவது வேலை இருந்தா நீ பார்த்துக்கோ.."

" மித்ரா..! ஆர் யூ ஓக்கே?"

" ஐ ஆம் ஓக்கே.." புன்னகையை தாராளமாக தந்தாள்.

" ரியலி ஆர் யூ ஓக்கே.. உடம்புக்கு எதுவும் இல்லையே.."

" நோ.. ஐ ஆம் ஓக்கே.. "

" அதில்லை. இன்னைக்கு வித்தியாசமா நடந்துக்கிறியேம்மா.."

மித்ரா இந்த இடத்தில் அசடுவழிந்தாள்.

" சம் திங் ராங்.." என்று மேவாயைத் தேய்த்தான் அவன்.

" நான் கிளம்புறேன். நம்ம தீபக் மெஹராக்கிட்ட சொல்லிட்டேன். வேற எதுவும்னா சமாளிச்சிக்கோ.." என்று கிளம்பினாள்.

அன்று பதினொரு மணிக்கே ஆபிஸிலிருந்து கிளம்பிய அவளை மொத்த ஆபிஸும் அதிசயமாய் பார்த்ததை அவள் அவதானிக்கவில்லை. அவ்வளவு குஷியில் இருந்தாள் நாயகி.

ஸ்கூட்டியை ஸ்டாட் செய்து சந்தோஷமாக பறக்கத்துவங்கினாள். மொக்கானிக் ஷாப் மணியிடம் திட்டு வாங்கி அதே வண்டியில் தான் இன்னமும் சுற்றுகிறாள். அந்த ஸ்கூட்டி அவளிடம் இருந்து எப்போது விடுதலை கிடைக்கும் என்று தெரியாமல் உயிரை கையில் பிடித்துக் கொண்டு இருந்தது. இடையில் ஒரு பழக்கடையை கண்டாள். நிறுத்தினாள். நல்ல ஆரஞ்சுப்பழங்களாக பத்து பழங்களை பார்த்து பார்த்து எடுத்து வாங்கிக்கொண்டாள். சில மாதுளம்பழங்களை எடுத்தாள். கூடவே சில ஆப்பிள்கள். மீண்டும் பறந்து அந்த வீட்டு வாசலை அடைந்தாள். கேட்டை கண்டதும் பிரேக் அடித்தாள்.

'இவ்வளவு தூரம் வந்தாச்சு. இனி என்ன தயக்கம்..?' என்று உள்ளுக்குள் ஒரு குரல் கேட்டது. கூடவே வாட்ச்மேனின் தலையும் தெரிந்தது. அவருக்கு முடி முளைத்ததுக்கு அடையாளமாக காதோரங்களில் மட்டும் மிச்சம் இருந்தது.

"யாரை பார்க்கனுங்க...?" கொஞ்சம் கூர்ந்து பார்த்தார்.

"அது.. ஆன்ட்டி இருக்காங்களா... நான் நவிலனோட ஃப்ரெண்ட்..."

'நவிலன்' என்றதுமே வாட்ச்மேன் தாத்தா யோசிக்காமல் கேட்டை திறந்துவிட்டார்.

" நீங்க அன்னைக்கு தம்பி கூட வந்திங்கல.. ஞாபகம் இருக்கு.. உள்ள போங்கம்மா.. அம்மா உள்ளத் தான் இருக்காங்க..."

வாசல் கதவு திறந்தே இருந்தது. அவள் தயங்கி நிற்கும் போதே உள்ளே இருந்து ஒரு பெண் எட்டிப்பார்த்தாள். வயது இருபது தான் இருக்கும். ஒல்லியாய் இருந்த அவள் சேலையை வெகு சிரமப்பட்டு கட்டியிருக்க வேண்டும். அது அவளது இடுப்பில் நிற்க மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தது.

" யாருங்க...?"

"நான் மித்ரா. ஆன்டியைப் பார்க்க வந்தேன். அவங்க இருக்காங்களா?"

"உள்ள வாங்க.. அம்மா அந்த ரூம்ல இருக்காங்க.." என்று அந்த படியை ஒட்டி இருந்த அறையைக் காட்டினாள்.

மித்ரா உள்ளே நுழைந்த போது ரோகிணி அயர்வாக கட்டிலில் படுத்திருந்தார். கதவு திறக்கும் ஓசை கேட்டு கண்களைத் திறந்தவர் மித்ராவைக் கண்டதும் முகம் மலர்ந்தார்.

"மி..த்ரா.. வாம்மா....."

"என்னாச்சு ஆன்ட்டி..." என்று மித்ரா பதறிப்போனாள்.

"ஒன்னுமில்லைம்மா.. லேசா காய்ச்சல்... அவ்வளவுத் தான். எப்படியிருக்கம்மா....?"

அவரை தொட்டுப்பார்த்தவள் "காய்ச்சல் இருக்கு ஆண்ட்டி. மெடிசின் எடுத்திங்களா...?"

"இல்லம்மா.... அது ரெண்டு நாள் போனா சரியா போயிடும்.."

" என்ன ஆன்ட்டி.. இவ்வளவு அலட்சியமா இருக்கிங்க.. "

" என்னமோ தெரியல.. மாத்திரை போட்டேன். குறையவே மாட்டிக்குது... எனக்கு எழும்பவே முடியலம்மா.." என்ற அவர் குரல் சோர்ந்திருந்தது.

" உங்க ஃபேமிலி டாக்டர் யாராவது இருக்காங்களா ஆன்ட்டி.. கூப்பிட்டா வீட்டுக்கு வருவாங்களா..?"

" பக்கத்துல ஒரு டாக்டர் இருக்கார். அவசரத்துக்கு அவரை தான் கூப்பிடுவது வழக்கம். இருக்காரோ தெரியல.. "

அந்த டாக்டருக்கு போன் செய்து பார்த்தாள் மித்ரா. அந்தப்பக்கம் போன் அடித்துக்கொண்டு இருந்ததே தவிர யாரும் ஆன்சர் செய்யக்காணோம்.

" சரி .. கிளம்புங்க ஆன்ட்டி.. ஹாஸ்பிட்டல் போயிட்டு மருந்து எடுத்துட்டு வந்திடலாம்.."

" வேணாம்மா.. அது சரியா போயிடும்.."

மித்ரா அவரை நிஜமாகவே முறைத்தாள். அந்த முறைப்புக்கு உட்பட்டு அவர் கிளம்பினார். அடுத்த தெருவில் ரோகிணி சொன்ன டாக்டர் வீட்டு கேட்டில் பூட்டு தொங்கிக்கொண்டு இருந்தது. அதனால் அருகில் இருந்த மருத்துவமனைக்கு கூட்டிச் சென்றாள். டாக்டர் ஊசி போடுகையில் முனகிய ரோகிணியின் கையைப் பிடித்துக் கொண்டாள். மருந்து வாங்கிக்கொண்டு அவரை வீட்டுக்கு கூட்டி வந்தாள்.

அந்த ஒல்லிப் பெண் தயாராக வைத்திருந்த சூடான கஞ்சியை சாப்பிட கொடுத்து மாத்திரைகளை விழுங்க வைத்தாள்.

அப்போது தான் அந்த கேள்வியை கேட்டார் ரோகிணி.

" நவிலனைப் பார்க்க வந்தியாம்மா....?"

"இல்ல... ஆன்ட்டி... நான் உங்களைப் பார்க்கத் தான் வந்தேன்." இந்த சாக்கில் நவிலனைப் பார்த்துவிட வேண்டும் என்றுதான் அவள் வந்ததே. குறைந்தபட்சம் அவன் எப்படியிருக்கிறான் என்று தெரிந்துக்கொள்ளவாவது வேண்டும் என்று எண்ணி தான் வந்தாள்.

"என்னைப் பார்க்கவா...?" ரோகிணியின் கண்களில் ஆச்சர்யத்தின் ரேகைகள்.

"ஏன்ம்மா.. .உங்களைப் பார்க்க வரக்கூடாதா...? அன்னைக்கு நவிலன் இங்க தான் கூட்டிகிட்டு வாறார்னு எனக்கு தெரியாது. வெறுங்கையோட வந்துட்டமேனு ஒரு மாதிரி ஆச்சு.. அதை நவிலன்கிட்ட சொன்னப்போ ஃப்ரீயா இருக்கப்ப அம்மாவை வந்து பார்த்தா அம்மா ரொம்ப சந்தோஷப்படுவாங்கனு சொன்னார். அதான் சரி பார்த்துட்டு போகலாம்னு வந்தேன்.."

"ஓ..அப்படியா.... நீ வந்தது பெரிய ஆறுதல்ம்மா... ரொம்ப சந்தோஷம்... ஆமா இன்னைக்கு நீ வேலைக்குப் போகலயா..?"

"போனேன்ம்மா... மைண்டுக்கு ஒருமாதிரி இருந்திச்சு. அதான் அரைநாள் லீவ் போட்டுட்டேன்... அப்படியே உங்களையும் பார்த்துட்டு போகலாம்னு யோசிச்சேன். அதான் வந்தேன்.." என்றவள் கண்கள் வீட்டிற்குள் யாரையோ தேடியது.

'நவிலன் ஆபிஸ் போயிருப்பார் இல்ல....' அவளாக யோசித்தாள்.

"சரி.. நீ வந்ததும் எனக்கு தெம்பா தான் இருக்கு. தனியா இருக்க ரொம்ப கஷ்டமா இருக்கும்...."

"ஏன் ஆண்ட்டி.. ஈவ்னிங் தான் ரெண்டு பேரும் வந்திடுவாங்களே..."

"உனக்கு விஷயமே தெரியாதா..?"

என்ன என்பது போல பார்த்தாள்.

"நவிலன் யூ எஸ் போயிட்டானே... அங்கிளும் பிசினஸ் விஷயமா மலேஷியா போயிட்டார். நாலு நாள் கழிச்சு தான் வருவார்... " நவிலன் இல்லாதது அவளது தலையில் இடியாய் விழுந்தது.

"நவிலன்.... எப்ப போனார்...?" என தடுமாறினாள்.

"காலையில தான்ம்மா..... ஏன் அவன் உன்கிட்ட சொல்லலயா...?"

"இ..இல்ல ஆண்ட்டி. நான் புது புராஜெக்ட் ஒன்னுல பிசியா இருந்தேன். அதான் பேசிக்கவே நேரம் கிடைக்கல..." பொய் சொன்னாள்.

' நேற்று தான் அவரை இடித்தேன். அவர் என்னைத் தொட்டதும் வெடுக்கென என் கையை எடுத்தேன். அதில் ஹீரோவுக்கு கோபம் வந்து விட்டது. இனி உன் கண்லயே பட மாட்டேன்னு சொல்லிட்டு கிளம்பிட்டார். நான் நைட் எல்லாம் யோசிச்சேன். அவரு மேல லவ் எனக்கும் இருக்குனு கண்டு பிடிச்சேன். அதை சொல்லலாம்னு வந்தேன். பார்த்தா ஆளு மிஸ்ஸிங்..' என்று அவளால் சொல்ல முடியவில்லை.

"ஓ அப்படியா...?" என்று சொன்ன ரோகிணியால் ஒன்றை உணர்ந்து கொள்ள முடிந்தது. அவள் நிச்சயம் நவிலனைப் பார்க்கத்தான் வந்திருக்கிறாள். அவன் யூ எஸ் பறந்ததிற்கும் இவளுக்கும் நிச்சயம் தொடர்பு உண்டு.

"என்ன திடீர்னு போயிட்டார். பிசினஸ் விஷயமாவா..?" அறிந்துகொள்ளும் ஆவல் அவளுக்குள் முண்டியடித்தது.

"இல்லம்மா.. எந்த வேலையும் இல்ல.. ஆனா ஏன் போறானு அவனும் சொல்ல.. நாங்களும் கேட்கல.. ராத்திரி லேட்டா வந்தான்... போய் ரூம்ல படுத்தான்.. காலையில வந்து போறேனு சொன்னான்.. என்னனு தெரியல.. "

மித்ரா யோசனையில் ஆழ்ந்தாள்.

"என்னம்மா யோசிக்கிற....?"

" அடிக்கடி யூ எஸ் போயிடுவாரா ஆன்ட்டி..?"

" இல்லம்மா. அங்க இருந்து வந்த பிறகு போற எண்ணம் இல்லனு சொன்னான். அவன் படிச்சது வளர்ந்தது எல்லாம் அங்கதான். ஆனா அவனுக்கு நம்ம ஊரு தான் பிடிக்கும். அதுனால அங்க கிடைச்ச ஆஃபர் எல்லாம் வேண்டாம்னு சொல்லிட்டு வந்து அவங்க அப்பா கூட பிசினஸ்ல சேர்ந்துகிட்டான்.."

" திரும்ப வந்துடுவார்ல ஆன்ட்டி.." அவள் இடைமறித்து கேட்டதை கேட்டதும் ரோகிணிக்கு சிரிப்பு வந்தது.

" வந்துடுவான்ம்மா.. எதாவது சின்ன விஷயமாக போயிருப்பான்.. ஒரு சின்ன ஹாலிடே வேணும்னா கூட அங்கதான் போவான். அப்படி போயிருக்கானோ என்னமோ.. என்னம்மா யோசனை?"

"ஒன்னுமில்ல ஆன்ட்டி. உங்களுக்கு சுகமில்லனு தெரியுமா.. அவர்க்கு...?"

"இல்லம்மா.. நான் சொல்லல.. அவனுக்கு தெரிஞ்சிருந்தா போயிருக்கவே மாட்டான் . இது சாதாரண காய்ச்சல் தானே.. சரியாகிடும். அவன் ஏதோ குழப்பத்தில் இருக்கான் போல.. உனக்கு ஏதாச்சும் தெரியுமாம்மா.. அட நான் ஒருத்தி.. நீ தான் பேசியே நாளச்சுனு சொன்னியே...." போட்டு வாங்க பார்த்தார் ரோகிணி.

நம்ம நாயகி சிக்குவாளா?

" எனக்கு எதுவும் தெரியாது ஆன்ட்டி.."

மித்ரா மௌனமாகவே இருந்தாள். என்ன பேசுவதென்றே அவளுக்கு தெரியவில்லை. அவளது மனம் திடீரென குழப்பத்துக்கு ஆளாகியது. சிறிது நேரம் அவரோடு பொதுவாக பேசிக்கொண்டிருந்து விட்டு கிளம்பினாள்.

" இரும்மா.. இருந்து சாப்பிட்டு போ..."

"இல்ல ஆன்ட்டி... வெளிய கொஞ்சம் வேலை இருக்கு... நான் நாளைக்கு வாரேன்..." என்று விடைப்பெற்றுக்கொண்டு கிளம்பினாள்.

எப்படி வீடு வந்து சேர்ந்தாள் என்றே அவளுக்கு தெரியவில்லை.

மங்களாதேவி வேலைக்கு சென்றிருந்தார். தன்னிடம் இருந்த சாவியை போட்டு திறந்து உள்ளே போனாள் . காலையில் செய்த உப்புமா மீதம் இருந்தது. எடுத்து இரண்டு வாய் சாப்பிட்டாள். புரைக்கு ஏறியது. தலையில் தட்டும் போது அவன் ஞாபகம் வந்தது.

' திட்டுறாரோ ..' என்று யோசித்தாள். இருக்கும். வாய்ப்புண்டு.

நவிலனைப் பற்றிய யோசனை அவளை பிடுங்கித் தின்றது.

'திடீர்னு ஏன் போயிருப்பார்.. பிசினஸ் விஷயம் இல்லனு ஆண்ட்டி சொல்றாங்க.. ஒருவேளை.. நான் தான் காரணமா...? ஐயையோ.. நான் தான் காரணமா இருப்பேனோ..? நேற்று அப்படி நடந்துக்கிட்டது அவரை ரொம்ப காயப்படுத்திடுச்சோ.. என் கண்ல பட மாட்டேனு சொன்னாரே.. அதுதான் தூரமா போயிட்டாரோ... ' மித்ராவுக்கு நெஞ்செல்லாம் அடைத்து அழுகை முட்டிக்கொண்டு வந்தது.

' நீ செய்த காரியம் அப்படி மித்ரா.. கொஞ்சம் ஓவராத்தான் போயிட்ட.. பாவம் அந்த நவிலன்.. உன்கிட்ட எவ்வளவு கண்ணியமா நடந்துக்கிட்டான்..? தப்பி தவறி அவன் கை எப்பவாவது உன் மேல பட்டிருக்குமா? அவன் கண் தான் உன் மேல தாறுமாறா அலை பாய்ஞ்சி இருக்குமா..? தங்கமான பையனைப் போய் இப்படி பண்ணிட்டியே.. உனக்கு இதுவும் தேவை. இதுக்கு மேலயும் தேவை...' என்று தோட்டத்தில் பூத்து ஆடிக்கொண்டு இருந்த அந்த வெள்ளை ரோஜா சொன்னது.

பஸ்ஸிலிருந்து இறங்கி காய்கறிகள் சிலதை வாங்கிக்கொண்டு தூக்கிக்கொண்டு வந்த மங்களாதேவி வாசலில் சோகமே உருவாக மித்ரா உட்கார்ந்து இருப்பதை கண்டார். அவரைக் கண்டு அவசரமாய் எழுந்தாள் மித்ரா.

வழக்கமான நாளாக இருந்திருந்தால் "வாசல்ல உட்காராதேனு எத்தனை தடவை சொல்றது.." என்ற வசையை கேட்க நேரிடும். ஆனால் இன்று அவள் தனக்கு முன் வீட்டில் இருப்பதைப் பார்த்து அதிசயத்ததில் அதை மறந்து போனார் அத்தை.

" என்னடீ.. இவ்வளவு சீக்கிரமா வந்துட்ட..? உடம்புக்கு ஏதாவதா?" அத்தை பதறிப்போய் அருகில் வந்து அவளது நெற்றியில் கை வைத்து பார்த்தார். உடம்பு சூடு சாதாரணமாகத்தான் இருந்தது.

" அதெல்லாம் ஒன்னும் இல்ல.. லேசா தலைவலி. அதான் வந்துட்டேன்.." இன்றைக்கு இரண்டாவது பொய்.

" அப்புறம் ஏன் வெயில் பட உட்கார்ந்து இருக்க? உள்ள வா.. சுக்கு காபி போட்டு தாரேன்.."

அத்தை இழுத்துக்கொண்டு போக அப்போதைக்கு அதை தள்ளி வைத்தாள். ஆனால் அவனுடைய நினைவுகளில் இருந்து அவளால் தள்ளி நிற்க முடியவில்லை. அவன் ஏன் போனான்? எப்போது வருவான் என தவித்தாள். அவனை தொடர்பு கொள்ள முடியாமல் இருந்தது. அதை அறிந்து கொள்ள அவளுக்கு இருக்கும் ஒரே வழி அவனுடைய வீட்டுக்கு செல்வது மட்டும் தான்.

' உங்களை காயப்படுத்தியது உண்மைத்தான். ஆனா அவ்வளவு ஈசியா உங்களை விட்டுட மாட்டேன் நவி.. ' என்று உள்ளுக்குள் சொல்லிக் கொண்டாள்.

புதிதாக கட்டிலில் கிடந்து காதல் பாடல்களை ரசிக்கத்துவங்கினாள். அவளுடைய மாற்றம் அவளுக்கே புதிதாய் இருந்தது.

நேற்று நான் உன்னை பார்த்த
பார்வை வேறு
நீங்காத எண்ணமாக

ஆனாய் இன்று

உன்னோடு நானும் போனா
தூரம் யாவும் நெஞ்சிலே
ரீங்கார நினைவுகளாக
அலையாய் இங்கே மிஞ்சுதே..
நூலறுந்த பட்டம் போல
உன்னை சுற்றி நானும் ஆட
கைகள் நீட்டி நீயும் பிடிக்க
காத்திருக்கிறேன்


இதற்கெல்லாம் அர்த்தங்கள் என்ன
கேட்க வேண்டும் உன்னை
காலம் கை கூடினால்

கதைப்போமா
கதைப்போமா
கதைப்போமா
ஒன்றாக நீயும் நானும் தான்...



அவளுக்கு திடீரென நவிலனின் கையை பிடிக்கவேண்டும் போல தோன்றியது. அவன் விழிகளை ஏறெடுத்துப் பார்க்க வேண்டும். அந்த விழிகளில் தொலைந்த தன்னை தேட வேண்டும். அவனிடம் கூச்சம் கொண்டு தன் காதலை சொல்ல வேண்டும் என்று தோன்றியது.

" ஸாரி நவிலன்...!" என்ற வார்த்தையை முணுமுணுத்தவாறு இரவு உறக்கத்தை தழுவினாள் நாயகி. அங்கு அவனோ ஆழ்ந்த சோகத்தால் மூழ்கியிருந்தான்.




ஆட்டம் தொடரும் ❤️?
 
Nice epi dear.
Super ,super she started to feel her love.
What a change Sangi.
Rohini sharp.
Athaiyamma, I agree thanimai kodumai,athuvum older age la romba kodumaiya irrukum.
Authore, katha nalla kondu poringa, interesting.
 
Top