Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கண்ணாமூச்சி ஏனடா! -18

Advertisement

Banupriya "பா.ரியா"

Well-known member
Member
அத்தியாயம் -18

" உங்களை சந்திச்சது ரொம்ப சந்தோஷம்.. நான் பேசிட்டு சொல்றேன்.." என்று அந்த உயரமான மனிதரிடம் விடைப்பெற்று கிளம்பினார் ஐராவதம்.

நேரம் ஆறுமணிதான் ஆகியிருந்தது. ஒரு எட்டு தங்கையைப் பார்த்துவிட்டு வரலாம் என்று எண்ணினார். உடனே மித்ரா ஞாபகம் தான் வந்தது அவருக்கு. அவளுடைய பிடிவாதமும் நினைவுக்கு வந்தது. கிட்டத்தட்ட ஒருமாதம் ஆகிறது அவள் வீட்டை விட்டு வந்து. இதுவரை ஒருதரம் கூட அங்கு வரவில்லை. அப்படியென்ன பிடிவாதம் அவளுக்கு என்று அவரது மனது கோபப்பட்டது.

' நீ வேணாம்னா நான் விட்டுடுவேனா? இந்த தடவை நீ என் பேச்சை கேட்டுத்தான் நடப்ப மித்ரா. உனக்கு இவ்வளவு பிடிவாதம் இருந்தா எனக்கு உன்னை விட ஆயிரம் மடங்கு பிடிவாதம் இருக்கும்.. என்ன செய்யனும்னு எனக்கு தெரியும் மித்ரா. நான் உனக்கு அப்பன்.. ' என்று யோசித்தவாறே அந்த வீட்டிற்குள் நுழைந்தார்.

" வாங்கண்ணா.. என்ன ரொம்ப நாளா ஆளையே காணோம்.." தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சிக்கொண்டு இருந்த மங்களாதேவி பாசமலராய் வரவேற்றார்.

" எங்க.. வந்தா அவ முறைச்சிக்கிட்டு நிற்பா.. அதுதான் வரவேயில்ல..." உண்மையான காரணத்தையே அவர் சொல்ல மங்களாதேவி மனம் வருந்தினார்.

" நல்லா இருக்கு.. ஆளாளுக்கு ஒருபுறம் முறைச்சிக்கிட்டே இருங்க... அவகிட்ட உன் வீட்டுக்கு போம்மானு சொல்ல எனக்கு பயம். உங்ககிட்ட இறங்கி போங்கன்னு சொல்ல பயம். உங்க ரெண்டு பேருக்கும் நடுவில மாட்டிக்கிட்டு நான் தான் தடுமாறுறேன்.. சரி.. காபி போடட்டா..?"

" ம்.. போடு.. என்னமோ இன்னைக்கு ஒருமாதிரி படபடனு இருக்கு.."

" எப்ப பாரு ஓடிக்கிட்டு இருந்தா.. இந்தாங்க தண்ணியை குடிங்க.. காபி போட்டு எடுத்துட்டு வாரேன்.." என்று தண்ணீரை அவருக்கு கொடுக்கையில் அவர் அந்த கேள்வியைக் கேட்டார்.

" இன்னும் மித்ரா வரலையா..?"

" இல்ல.. அநேகமா நவிலன் வீட்டுக்கு போயிருப்பா.."

" என்னது..? என்ன பேர் சொன்ன?"

' ஐயையோ.. தெரியாத்தனமாக உளறிவிட்டோமோ.. ' என்று யோசித்த மங்களாதேவி வேறு வழியின்றி அந்த கதையை சொல்லத் தொடங்கினார்.

அங்கு கதைகேட்கும் படலம் நடந்துகொண்டிருக்க இங்கு , பறவைகள் தங்கள் ஜோடிகளை டாவடிக்க தத்தம் கூடு சென்றடையும் அந்த மாலை நேரத்தில், பீச் ரோட்டில் அடித்த காற்றுக்கு பட்டம் விட்டுக்கொண்டிருக்கும் ஒரு சிலரை காண கிடைத்தது. மாலை நேர வாக்கிங்கிற்கு உட்பட்டு தம் தொந்திகளை கரைக்க முயற்சித்த பானை வயிற்றுக்கு சொந்தக்காரர்களை மித்ராவின் ஸ்கூட்டி முந்திக்கொண்டு சென்றது. ஆபிஸில் தீபக் மெஹரா திடீரென தந்த வேலைகளை முடிக்க சற்று தாமதமாகிவிட்டது. முடித்துவிட்டு புறப்படும் போதே நேரம் ஆறு நாற்பது.

அன்று நவிலனின் வீட்டு கேட் திறந்தே இருந்தது. ஸ்கூட்டியை ஒரு ஓரமாக பார்க் செய்தபோது அந்த கார் இருந்ததை கவனித்திருக்க வேண்டும். தவறிவிட்டாள்.

'லலலலலலலலலா ...' என்று ஹம் செய்தவாறே சொந்த வீட்டிற்குள் நுழைவது போல் நுழைந்தாள் மித்ரா. இந்த நான்கு நாட்களில் அவளுக்கு அது அவளைடைய வீடாகவே தோன்றும் அளவுக்கு ரோகிணி அவ்வளவு உரிமையோடு அன்போடு பழகினார்.

வீடு முழுவதும் ஏதோ சமையல் வாசனை பரவி மூக்கை துளைத்தது. இன்று ஏதோ விசேஷ சமையல் போலவே என்று உள்ளே நுழைந்தவளுக்கு ஆச்சர்யம் காத்திருந்தது.

"என்ன ஆன்ட்டி... சமையல் வாசம் ஆளையே தூக்குது... டின்னர் ஸ்பெஷல் போல..." என்றவளின் உதடுகள் ஒருகணம் தன்னையும் மறந்து 'நவிலன்....' என்றது.

கையில் கரண்டியோடு அடுப்பில் பாத்திரத்தோடு ஏதோ பண்ணிக்கொண்டிருந்தான். வேறு என்ன சமையல் தான். அவன் முகத்தில் அவளை கண்டதிற்கான அடையாளம் துளியும் இல்லை. துளியூண்டு சந்தோஷம் கூட இல்லை. முகத்தில் ஒருவித இறுக்கம் தெரிந்தது.

"அம்மா.. மாடியில் இருக்காங்க..." சுவாரஸ்சியமே இல்லாமல் பதில் சொன்னான். குரலில் ஒரு ஒட்டாத்தன்மை இருந்தது. அது அவளுக்கு வலித்திருக்க வேண்டும். இப்படித்தானே அவளும் நடந்துக் கொண்டாள். அவனை என்ன பாடு படுத்தி இருப்பாள். அவன் மனம் வேலை பாய்ச்சியது போல எவ்வளவு துன்பப்பட்டு இருக்கும். துயரப்பட்டு இருக்கும். அனுபவிக்கட்டும்.
அவளுக்கு கண்களில் கண்ணீர் ததும்பி நின்றது. அதை மறைத்துக்கொண்டு கேட்டாள்.

"எப்படியிருக்கிங்க நவிலன்...?"

" ம்..." என்று தலையாட்டினான். அதில் ஒரு ரோபோத்தன்மை தெரிந்தது.

"வாம்மா... எப்போ வந்த..? நவிலன் வந்துட்டான்ம்மா...." என்று குரலில் உற்சாகம் கூத்தாடப் பேசிக்கொண்டே வந்தார் ரோகிணி.

மித்ரா கண்ணீரை சட்டென மறைத்துக்கொண்டு புன்னகைத்தாள்.

"இன்னைக்கு என்னம்மா லேட்டா வந்துருக்க..?" என்று ரோகிணி கேட்டபோது நவிலன் ஒருதடவை அடுப்பிலிருந்து நிமிர்ந்து மித்ராவைப் பார்த்தான். அந்தப் பார்வையில் இவள் ஏற்கெனவே இங்கு வந்தாளா என்ற கேள்வி எழுந்து நின்றது.

" இன்னைக்கு வேலை கொஞ்சம் ஜாஸ்திம்மா.. முடிஞ்சதும் தான் கிளம்பி வந்தேன். இந்தாங்க நீங்க கேட்ட புக்ஸ். அதை கொடுத்துட்டுப் போகலாம்னு தான் வந்தேன்.."

" அப்ப என்னை பார்க்க வரலயா...? நாலு நாள் வந்து போரடிச்சிருச்சாம்மா..." என்று வம்பிழுத்தார் ரோகிணி. அவரது பார்வை மகனை சென்று ஆராய்ந்தது.

அவளால் வழக்கம் போல வேடிக்கையாக பேச முடியவில்லை. இல்லையென்றால் இன்னேரம் ரோகிணிக்கு பதில் சொல்லி முடித்திருப்பாள்.

"இல்லைம்மா... அது.. " வார்த்தைகள் தொண்டைக்குள் தடுமாறின.

"சரி..சரி நான் சும்மா கேட்டேன்.. ஏதாவது குடிக்கிறியா?"

"இல்லம்மா.. நான் கிளம்பனும்...."

"என்ன அதுக்குள்ள கிளம்புற..? இருந்து சாப்பிட்டு போம்மா.. இன்னைக்கு நவிலன் தான் சமையல்.. அருமையா இருக்கும்.. நீ அவனோட சமையல் சாப்பிட்டது இல்ல தானே.. நீ இருந்து சாப்பிட்டு தான் போகனும்...."

" அதெல்லாம் வேணாம்மா.." மித்ரா மறுத்தாள். அவன் ஏதாவது பேசினால் அவன் குரலை கேட்டு கொஞ்சம் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ளலாம் என்று அவள் எண்ணினான். அவனோ ஏதோ வாயில் கொழுக்கட்டை வைத்திருந்தது போல வாயை மூடிக்கொண்டு இருந்தான்.

" ம்மா.. சோயா சாஸ் எங்க..?" அவன் அம்மாவைக் கேட்க, அவள் முந்திக்கொண்டு சொன்னாள்.

" அந்த மூணாவது ஷெல்ஃப்ல..." சட்டென குனிந்து கொண்டாள்.

" ஆ.. அங்க தான் இருக்கு. நான் எங்க சமைச்சேன்.. நாலு நாலா மித்ரா சமையல் தான்.. அதுவும் அன்னைக்கு மஷ்ரூம் பிரியாணி செஞ்சிருந்தா பாரு.. வேற மாதிரி இருந்திச்சு டா.. உன்னோட சிக்கன் பிரியாணி தோத்துடும்.." என்று மித்ராவை தாங்கவும் மகன் லேசாய் முறைத்தான்.

" சரி சரி.. உன்னை விட்டுக்கொடுக்க மாட்டேன்.. இருந்தாலும் அவ பிரியாணி நல்லா இருந்திச்சு டா..."

" மித்ரா.. இன்னைக்கு இவனோட சமையலை சாப்பிட்டு பாரு.. " என்று ரோகிணி கட்டளையிட, அங்கிருந்து கிளம்பினால் போதும் என்று தான் அவள் நினைத்தாள். காரணம் நவிலனது பாராமுகம் அவளை வதைத்தது.

' இப்படி வதைக்கிறதுக்கு தூரமாவே இருந்திருக்கலாம் நவிலன்..' என்று அவள் மனம் அழுதது.

அவள் தடுமாறிக்கொண்டு நிற்கும் போதே அவளது செல்போன் அலறியது. எடுத்து காதுக்கு கொடுத்தாள்.

"ஹலோ... என்ன...? எ..ப்போ...? இ..தோ... வந்துட்டேன்....." பதட்டமாகி செல்லை ஆப் செய்துவிட்டு "ஆன்ட்டி.. நா..நா 'லைஃப் கெயார்' ... ஹாஸ்பிட்ட.. அவசரமா கிளம்பனும்.... " என்று சொல்லிவிட்டு அவர் பதிலைக் கூட எதிர்பார்க்காமல் வேகமாக ஓட்டமெடுத்தாள்.

"மித்ரா.. மித்ரா.." என்று ரோகிணி கத்திக்கொண்டே பின்னால் வந்ததோ, நவிலனும் டென்சனாகி அவளை அழைத்ததோ அவள் காதுகளுக்கு எட்டவேயில்லை. அவள் வாசலை தாண்டியிருந்தாள்.

ஸ்கூட்டியை விரட்டிக்கொண்டு 'லைப் கெயார்' ஹாஸ்பிட்டல் நோக்கி விரைந்தாள். அந்த நேரம் பார்த்துதான் ட்ராஃபிக் அதிகமாக இருக்க வேண்டுமா என்று கோபம் எழுந்தது அவளுக்கு. கிடைத்த சந்து பொந்து பிளாட்பாரம் என்று எல்லாவற்றிலும் ஏற்றி புகுந்து சென்றாள்.

ரிசப்ஷனில் விசாரித்துக்கொண்டு முதல் மாடிக்கு விரைந்தாள்.

ஆபரேஷன் தியேட்டர்.


வாசலிலேயே சேலைத்தலைப்பால் வாயை பொத்திக்கொண்டு பாமா அழுதுகொண்டிருந்தார். அவரை சமாதானப்படுத்திக் கொண்டு அருகிலேயே மங்களாதேவி.

"அம்மா....."

"மித்ரா..." என்று ஒரே அழுகை. அவரை தேற்றுவதற்குள் அவளுக்கு அழுகை வந்துவிட்டது. என்ன நடந்தது என்று யாரிடம் கேட்பது என்று தெரியவில்லை.

ஐராவதம் ஆப்பரேஷன் தியேட்டருக்கு கொண்டு செல்லப்பட்டிருந்தார். மங்களாதேவி நடந்ததை சொன்னார். மித்ராவுக்கு அப்பாவை நினைத்து அழுகையாக வந்தது.

ரிசப்ஷனில் பணத்தை கட்டிவிட்டு மற்ற பார்மாலிட்டிகளை முடிக்கும் போது நவிலன் வந்துவிட்டான். அவளை கண்டும் விட்டான்.

"மித்ரா! யாருக்கு என்னாச்சு..?" அவனிடத்திலும் பதட்டம் தெரிந்தது.

"நீங்க எப்படி இங்க...?"

"நீ ஏதோ 'லைஃப் கெயார்..' ஹாஸ்பிட்டல்னு முழுசா ஒன்னும் சொல்லாம ஓடி வந்துட்ட.. யாருக்கோ ஏதோ அவசரம்னு தான் வந்திருப்பனு நானும் பின்னாடியே வந்தேன். நல்லவேளை உன்ன இங்கயே கண்டாச்சு.. என்னாச்சு...?"

அவன் முகம் பார்த்து அழுதுவைத்து தொலைக்ககூடாது என்று அந்தப்பக்கம் திரும்பிக்கொண்டு சொன்னாள்.

"அப்பாக்கு ஆக்சிடன்ட் ஆகிடுச்சு. சர்ஜரி போய்க்கிட்டு இருக்கு.."

"என்ன.. எப்படி..? "

"ஆபிஸ்ல இருந்து கிளம்பி அத்தை வீட்டுக்கு வந்துருக்கார். அங்க இருந்து கிளம்பும் போது,வாசல்ல.. ஒரு லாரி வந்து இவர் மேல இடிச்சு... தலையில அடி.. கால் ப்ராக்சர்... டாக்டர்ஸ் முழுசா ஒன்னும் சொல்ல மாட்டிக்குறாங்க..." என்று அழுகத்தொடங்கியவளை எப்படி தேற்றுவது என்று தெரியாமல் அவளை நெருங்கினான் நவிலன்.
அதற்குமேலும் பொறுக்கமாட்டாமல் அவன் தோள் சாய்ந்து அழுகத்தொடங்கினாள் மித்ரா. அவளுக்கு யாருடைய ஆறுதலாவது தேவை என்று தோன்றியது. அவனுக்கும் திடீரென என்ன செய்வது என்று தெரியவில்லை. ஆனால் அவளது வலியை அவன் உணர்ந்தான். அவளை தோளோடு அணைத்து தட்டிக்கொடுத்து சமாதானம் செய்து மேல் மாடிக்கு அழைத்துச்சென்றான். அந்த ஆறுதல் அவளுக்கு நிச்சயமாக தேவையாகத்தான் இருந்தது.

அங்கு பாமா அவளை விடவும் அழுதுக்கொண்டிருந்தார். வருண் அவரை தேற்றும் வழி தெரியாமல் தடுமாறிக்கொண்டிருந்தான். இவர்களில் யாரை தேற்றுவது என்று தெரியாமல் மங்களாதேவியும் தவித்துக்கொண்டு இருந்தார்.

நவிலன் எதுவும் பேசாமல் வருணை அழைத்து அருகில் இருத்தி தட்டிக் கொடுத்தான்.

நேரம் கடந்து கொண்டேதான் இருந்தது.

அவசரமாக கிளம்பி வந்த இருவரையும் நினைத்து கவலையோடு காத்திருந்த ரோகிணி மகனுக்கு அழைப்பெடுத்தார். நவிலன் சுருக்கமாக சொன்னான். அவனுடைய தேவை அவர்களுக்கு இருப்பதை உணர்ந்த தாயும் அவனை கவனித்துக்கொள்ளுமாறு கூறினார்.

நவிலன் அங்கேயே தான் இருந்தான். பாமா இருந்த மனநிலையில் அவன் யாரென்று கேட்டுக்கொள்ளும் ஆர்வத்தில் அவர் இருக்கவில்லை. ஆனால் மித்ராவின் நம்பிக்கைக்குரிய நண்பனாக இருக்கக்கூடும் என்று மட்டும் எண்ணினார். இல்லையெனில் அங்கு அவன் கால் தடுக்க நின்று கொண்டு இருக்கத்தேவையில்லையே.

ஆப்பரேஷன் நல்லவிதமாக முடிந்து அவரை நான்கு மணித்தியாலங்களின் பின் அறைக்கு மாற்றினர்.

" மித்ரா, பயப்படும்படியா ஒன்னும் இல்ல.. தலையில் அடிப்படவும் தான் இந்த சர்ஜரி.. காலும் ப்ராக்சர் ஆகிருக்கு. கொஞ்சநாள் பெட் ரெஸ்ட்ல இருக்க வேண்டி இருக்கும். பயப்பட எதுவுமில்ல.. நான் டாக்டர்கிட்ட பேசிட்டேன். அம்மாவையும் தைரியமா இருக்க சொல்லு... நீயும் அம்மாவும் ஆன்ட்டியும் வீட்டுக்குப் போய் காலையில வாங்க. லேடிஸ் நைட்ல இங்க இருக்க வேண்டாம். வருணும் நானும் இங்க இருக்கோம்..."

"இல்ல.. நவிலன்.. நான் இருக்கேன்..." மித்ரா பிடிவாதம் பிடித்தாள்.

"சொன்னா கேளு மித்ரா.. நான் தான் இருக்கேன் இல்ல.. பயப்படாம போயிட்டு வா. உங்க அப்பாக்கு ஒன்னும் இல்ல.. தேவையான திங்ஸ் எல்லாம் எடுத்துக்கிட்டு காலையில வா. சரியா.. "

அவன் வற்புறுத்தலால் பாமாவும், மங்களாவும் மித்ராவும் வீட்டிற்கு கிளம்பினர். நவிலன் இருக்கும் தைரியத்தில் மித்ரா சற்று ஆறுதலடைந்தாள். என்னதான் அப்பாவுடன் கோபம் என்றாலும் அவருக்கு ஒன்று என்றவுடன் அவளது மனம் துடித்தது. தான் ஆடா விட்டாலும் தன் தசை ஆடும் என்று சும்மாவா சொன்னார்கள். ரத்த உறவின் மகிமை அல்லாவா அது.

நவிலன் இரவிரவாக கண் விழித்து இருந்தான். அவர் எப்போது வேண்டும் என்றாலும் கண் விழிக்கலாம் என்று டாக்டர் சொல்லி இருந்தார். அந்த நேரத்துக்காக அவன் காத்திருந்தான். அவர் கண் விழிக்கும் போது தான் மட்டும் இருந்தால் வருத்தத்தில் இருக்கும் அந்த மனுஷன் தன்னைப் பார்த்து கோமாவுக்கு போனாலும் போயிவிடக்கூடும் என்று எண்ணியே வருணை கூட இருத்திக் கொண்டான். அந்த வருணோ அழுது ஓய்ந்து ஒரு ஓரமாக தூங்கியிருந்தான். அப்போது ஐராவதத்தின் விழிகள் லேசாக திறக்கத்தொடங்கின. நவிலன் பதட்டமானான்.

இங்கு வீட்டில் யாருமே உறங்கவில்லை. மித்ராவோ அம்மாவின் அருகிலேயே படுத்துக்கொண்டு விசும்பிக்கொண்டு இருந்தாள். அடிக்கடி எழுந்து செல்போனை பார்த்து கொண்டு இருந்தாள். ஐராவதம் கண் விழித்ததும் போன் செய்வதாக அவன் சொல்லியிருந்தான். அதற்காக காத்துக்கொண்டு இருந்தவள் அசதியில் கொஞ்சம் கண் அயர்ந்த போது செல்போன் ஒருதரம் கூவிவிட்டு தூங்கத்தொடங்கியது. அதை கவனிக்காத மித்ரா உறங்கியிருந்தாள்.


ஆட்டம் தொடரும் ❤️?

 
Nice epi dear.
Emergency situations la than manushan da unnmaiyana subavam ellam porathu varum.
Yedo,nee aval mela kovathula irruku rathu maranthu poocha??? Vidu, vidu namada Sangi thane.
Appo Navi samyala saapidalaya??
Enna Mangala aunty ippadi pottu koduthuteengale. Seri eppadi yum poocha kutty porathu vanthu thane aavanum.
 
Nice epi dear.
Emergency situations la than manushan da unnmaiyana subavam ellam porathu varum.
Yedo,nee aval mela kovathula irruku rathu maranthu poocha??? Vidu, vidu namada Sangi thane.
Appo Navi samyala saapidalaya??
Enna Mangala aunty ippadi pottu koduthuteengale. Seri eppadi yum poocha kutty porathu vanthu thane aavanum.
Thank you Leenu ❤️
 
Top