Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கண்ணாமூச்சி ஏனடா!-19

Advertisement

Banupriya "பா.ரியா"

Well-known member
Member
அத்தியாயம் -19

மித்ராவுக்கு விழிப்பு தட்டியபோது முதலில் அவளது கண்கள் தேடியது என்னவோ அவளது செல்போனைத் தான். நவிலனது மிஸ்ட் காலை கண்டதும் பதட்டமானாள். திரும்ப அழைத்தபோது அவன் எடுக்கவேயில்லை. நேரம் பார்த்தாள்.

ஆறுமணி.

' எப்படி அசந்து உறங்கினோம்..' என்று நொந்துக்கொண்டு எழுந்தபோது பாமா குளியலறையில் இருக்கும் சத்தம் கேட்டது. எழுந்து ஹாஸ்பிடல் செல்ல தயாரானாள்.

உண்மையில் இரவு உறக்கமேயில்லை அவளுக்கு. அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்தாள். கடிகாரத்தை பார்த்தாள். எப்போது விடியும் என ஜன்னல் வழியே வானத்தைப் பார்த்தாள். தலைவலிக்கு தைலம் பூசினாள். பின்பே கண் அயர்ந்தாள்.

( ஓ.. ஹலோ.. ரைட்டரே.. நம்ம ஐராவதம் கண் விழிச்சாரே.. நவிலனை பார்த்தாரா? ) என்று கேள்வி கேட்போருக்கு, கதையின் சுவாரஸ்யம் கருதி சில விடயங்களை சொல்லாமல் கடந்து போகலாம். காத்திருங்கள்.

பாமாவும் மித்ராவும் ஆட்டோ பிடித்து ஹாஸ்பிடல் வந்தபோது அங்கு நவிலன் இருக்கவில்லை. வருண் தூக்கி வழிந்த முகத்தோடு இருந்தான்.

" வருண். அப்பா கண் முழிச்சு பார்த்தாரா டா?" மித்ரா அவனைப் பார்த்து கேட்டாள்.

" ஆமாக்கா.. நைட் ஒருதரம் கண் முழிச்சு பார்த்தார். டாக்டர் வந்து கூட பார்த்தார். பயப்பட எதுவும் இல்லனு.."

" நவிலன் எங்கடா..?" அவனை மேற்கொண்டு பேசவிடாமல் கேட்டாள்.

" இப்பதான் எனக்கு காபி வாங்கிட்டு வாரேன்னு கான்டீன் போனார்.. பாவம் நைட் முழுக்க முழிச்சு இருந்தார்.."

அவனைப் பார்த்து நன்றி சொல்ல கடமைப்பட்டிருந்தாள் மித்ரா. அவனுக்காக வாசலை பார்த்தவாறு இருந்தாள். அதே சமயம் ஐராவதம் கண் விழிக்க பாமா கண் கலங்க, அந்த இடமே மௌனம் சூழ்ந்து காணப்பட்டது. மித்ரா அப்பாவை ஒருதரம் பார்த்துவிட்டு அறையை விட்டு வெளியேறினாள். அந்த பார்வையில் ஆயிரம் அர்த்தங்கள் கடந்தன தந்தைக்கும் மகளுக்கும். மனம் துடிக்கவே வந்து வராந்தாவில் நின்றுக் கொண்டாள். அப்போது அவன் வந்தான். கையில் சூடாக ஒரு காபி. அவளைக் கடந்து போய்விடலாமோ என்று அவனது புத்தி யோசித்தது. இருந்தாலும் நின்றான்.

" இந்த காபியை வருணுக்கு கொடு.." அவன் கொடுக்க கைகளில் வாங்கிக்கொண்டு போய் வருணுக்கு கொடுத்துவிட்டு வந்து மீண்டும் அவனருகில் நின்றுக்கொண்டாள். அவனோ அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தான். அவளும் விடாமல் அவன் அருகில் சென்று அமர்ந்தாள். எழுந்து சென்றால் என்ன என்று அவன் மனம் யோசித்தாலும் காயம் பட்ட புண்ணை மேலும் கிண்டுவது போல அவளை காயப்படுத்தக்கூடாது என்று மௌனமாய் இருந்தான்.

" தேங்க்ஸ் நவிலன். "

' எதற்கு? காபிக்கா? என்பது போல அவளைப் பார்த்தான் அவன். அவனது கோபம் தீர்ந்தபாடில்லை போலும். அதை உணர்ந்த நாயகி தொடர்ந்தாள்.

" இத்தனை தூரம் உதவியா இருந்ததுக்கு.." தலையை குனிந்துக் கொண்டாள். இன்னும் ஓரிரு நொடிகளில் அவளது கண்கள் கசியும் என அறிந்தவன் மனம் சட்டென இளகியது. அவளது கைகளின் மேல் தன் கையை ஆதரவாய் வைத்தான். ஒரு சிறிய அழுத்தம் கொடுத்தான். அந்த ஒரு அழுத்தம் அவளது அத்தனை சுமைகளையும் ஏற்றுக்கொண்டது போல இருந்தது.

அந்த நொடி அவளுக்கு தொண்டை அடைத்து அழுகை பொத்துக்கொண்டு வந்தது.

" பயப்படாதே மித்ரா.. அப்பாக்கு எதுவும் இல்லை. கால் ஃப்ராக்சர் ஆகிருக்கு. கொஞ்ச நாள் பெட் ரெஸ்ட்ல தான் இருந்தாகனும். அதுக்கு பிறகு ஃபிசியோதெரபி செய்ய செய்ய அதுவும் சரியாகிடும். இப்ப உங்க ஃபேமிலிக்கு நீதான் தைரியம் சொல்லனும். நீயே இப்படி இடிஞ்சி போய் உட்கார்ந்துட்டா எப்படி? உன் கூட நாங்களாம் இருக்கோம்.. நான் எப்பவும் இருப்பேன்.. " ஒவ்வொரு வார்த்தையும் நின்று நிதானமாய் அவன் பேச பேச அவளுக்கு கொஞ்சம் தெம்பு வந்தது. ஒருவர் கஷ்டத்தில் இருக்கும் போது அன்பாய் ஆதரவாய் அவர் கைபற்றி ' நான் இருக்கிறேன்..' என்று ஒரு வார்த்தை சொன்னால் போதும். அதைவிட தைரியம் தரும் டானிக் வேறு எதுவும் இருந்துவிடப் போவதில்லை. அந்த வார்த்தைகள் உடைந்து போயிருக்கும் மனசுக்கு அசுர பலம் கொடுக்கும். அதேதான் இப்போது மித்ராவுக்கும் தேவைப்படடது. அதுவும் 'டானிக் நவிலன்' தேவையாயிருந்தது.

வராண்டாவில் அவர்களைத் தவிர யாரும் இருக்கவில்லை. ஒரு நர்ஸ் டியூட்டி டைம் முடிந்து தன் பையோடு கிளம்பிக்கொண்டு இருந்தாள். ஒருவரை ஸ்டெச்சரில் வைத்து எக்ஸ்ட்ரே எடுக்க தள்ளிக்கொண்டு போனார்கள். அதைத்தவிர வேறு எந்த சத்தமும் இன்றி அமைதி சூழ்ந்து இருந்தது. அப்போது லிஃப்ட் திறக்கப்பட்டு அங்கு ரோகிணியும் வாசனும் வந்துக்கொண்டு இருந்தார்கள். அவர்களைக் கண்டதும் அவளைப் பற்றியிருந்த கையை விடுவித்துக்கொண்டு எழுந்தான் நவிலன். அவனைத் தொடர்ந்து பார்வையை ஓடவிட்டவள் அவர்களை கண்டு எழுந்தாள்.

" அப்பாக்கு எப்படி இருக்கும்மா..?" ரோகிணி ஆதரவாய் கேட்க, வேண்டிய தகவல்களை நவிலன் தான் அளித்தான்.

" தைரியமா இரும்மா.. எல்லாம் சரியாகிவிடும்.. நாங்கலாம் இருக்கோம் தானே.." ரோகிணியும் அதே வார்த்தைகளை சொல்ல, மித்ரா அதிசயத்தாள்.

' என்ன இது.. தாயும் சேயும் சொல்லி வைத்தாற்போல ஒரே வார்த்தைகளை சொல்கிறார்கள்..? வார்த்தைகளில் கூட அவர்களுக்கிடையில் எத்தனை ஒற்றுமை என்று அவள் அதிசயத்தாள். அப்போது பாமா வெளியே வர, மித்ரா தடுமாற ஆரம்பித்தாள். இதுவரை பாமா நவிலனைப் பற்றி எதுவும் கேட்கவில்லை. திடீரென அவனையும் அவன் குடும்பத்தையும் என்னவென்று அறிமுகம் செய்வது? அதற்கு அவசியமே இருக்கவில்லை.

" ம்மா.. இவரு தான் நவிண்ணா.. " என்று வருண் அறிமுகம் செய்யவே( மற்ற நேரமாக இருந்தால் டேய் அண்ணானு சொல்லாத டா.. என்று நவிலன் வருணிடம் கிசுகிசுத்திருப்பான். இப்போது இருந்த இறுக்கமான சூழ்நிலையில் அது பொருந்தாதே.. அதனால் கப்சிப்) உள்ளே வருண் தாயிடம் நவிலனைப் பற்றி ஏதோ அறிமுகமாய் சொல்லி வைத்திருக்கிறான் என்று ஊகித்த மித்ரா, " ம்மா.. இது நவிலனோட அப்பாவும் அம்மாவும்.." என்று அறிமுகம் செய்தாள்.

" வணக்கம்ம்மா.. எப்படி இருக்காரு.. ?" என்று ரோகிணி பாமாவிடம் கேட்கும் போது, நவிலன் அப்பாவோடு ஐராவதத்தை பார்க்க உள்ளே போனான். மித்ரா அங்கேயே நின்றுக்கொண்டு இருந்தாள். யாருடைய பேச்சில் கலந்து கொள்வது ? எங்கே போவது ?என்று அவளுக்கு தெரியவில்லை.

உள்ளே ஐராவதமும் நவிலனும் அவனுடைய அப்பாவும் என்ன பேசியிருப்பார்கள் என்று யோசித்தவாறே அன்றைய பொழுதை ஓட்டினாள் மித்ரா.

ஆம். நவிலன் அங்கிருந்து அவனுடைய பெற்றோருடன் கிளம்பியிருந்தான். இரவு முழுவதும் காவலாய் இருந்தவனுக்கு ஓய்வும் உறக்கமும் தேவைப்பட்டது. அதனால் கிளம்பினான். மித்ராவும் பாமாவும் துணையாய் இருந்தார்கள். அவளுக்கு தெரியும் நவிலன் எப்படியும் திரும்பி வருவான் என்று. அப்போது அவனோடு மனம் விட்டு பேச வேண்டும் என்று அவள் எண்ணியிருந்தாள். அவள் எதிர்பார்த்தபடியே அவன் மாலையில் வந்தான். ஆனால் அவன் ஒருவிதமான தூரத்தை அவளிடம் இருந்து கடைப்பிடித்தான். அது அவளுக்கு வலித்தது. அவனிடம் சென்று பேச தயக்கமாகவும் இருந்தது.

இது இப்படியே அடுத்து வந்த நாட்களிலும் தொடர்ந்தது.

அன்றோடு ஐராவதம் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டு ஒரு வாரம். இந்த ஒரு வாரமும் நவிலன் தவறாமல் தினமும் வந்தான். ஐராவதத்தோடு பேசுகிறான். அவரிடம் என்ன பேசுகிறான் என்பது அவளுக்கு இதுவரை புரியாத புதிராகவே இருந்தது. ஏனெனில் அவள் அறைக்குள் இருந்தால் அவர்கள் இருவரும் பேசிக்கொள்வதில்லை. மற்ற நேரம் பேசிக்கொள்கிறார்கள் என்று அவர்களுடைய பேச்சு சத்தத்தில் இருந்து மித்ரா அறிந்து கொண்டாள். இந்த வருணைப் பிடித்து ஏதாவது கேட்டால் தெரிய வாய்ப்புண்டு என்று அவனை உலுக்கி கேட்டால் அவன் உதட்டை பிதுக்கினான்.

இந்த ஒருவாரத்தில் மித்ராவோடு நவிலன் பேசிய வார்த்தைகள் மிக சொற்பம். அவளாக போய் பேசினாலும் அவன் பதில் சொல்ல மட்டுமே வாயைத் திறந்தான். அது அவளுக்கு வலித்தது. அவளது நெஞ்சம் பாரமாகியது. இடையிடையே ஆபிஸுக்கு சென்று வந்த மித்ரா வீட்டுக்கும் ஹாஸ்பிடலுக்குமாய் அலைந்ததில் சோர்ந்து போயிருந்தாள். அதற்கு ஒரு முடிவு வந்தது. ஐராவதத்தை டிஸ்சார்ஜ் செய்யலாம் என்று டாக்டர் சொன்னபோது வீடு சந்தோஷப்பட்டது. ஆனாலும் அவர் எழுந்து நடக்க குறைந்தது ஆறுமாதம் ஆகலாம் என்றது மிகவும் வருத்தமாகத்தான் இருந்தது.

இந்த சம்பவத்துக்குப் பிறகு சங்கமித்ரா தன்னுடைய வீம்பை கைவிட்டுவிட்டு மறுபடியும் வீட்டுக்கே வந்துவிட்டாள். போதாக்குறைக்கு ஐராவதத்தோடு 'ஆமாம்...' 'இல்லை..' என்ற அளவிற்காவது பேச ஆரம்பித்திருந்தாள். இது யாருவருக்குமே ஆச்சர்யம் தான். ஐராவதமுமே அதிசயித்துதான் போனார். தனக்கு இப்படி ஆனது கூட நல்லதுக்கே என்று பழனி முருகனை நினைத்து கண்ணீர் மல்கினார்.

இப்போதெல்லாம் மித்ராவிடம் பெரும் மாற்றம். பழையபடி முறைத்துக்கொண்டு இருப்பதில்லை. ரொம்பவும் அமைதியாகிப் போனாள். வேலைக்கு போகும் நேரம் தவிர வீட்டிலேயே இருந்தாள். வீட்டு நிர்வாகம் முழுக்க அவளது கைக்கு மாறியது. படுக்கையில் விழுந்த அப்பாவை சண்டைக்கு இழுக்காமல் இருந்தாள். இப்படியே நாட்கள் கழிந்து வாரங்கள் கடந்து போனதே தவிர நவிலன் அவளோடு முகம் கொடுத்து பேசுவதற்கு காணோம். அவள் இல்லாத நேரங்களில் அவன் வந்து ஐராவதத்தை பார்த்துவிட்டு பேசிவிட்டு போகும் தகவல் மட்டும் அவளுக்கு தெரியாமல் மறைக்கப்பட்டு கொண்டே வந்தது. ஆனால் ரொம்ப நாட்களுக்கு அது நீடிக்கவில்லை. அன்று வசமாக மாட்டிக்கொண்டான்.

அன்று நம் நாயகிக்கு பயங்கர தலைவலி. ஆபிஸிலிருந்து மதிய நேரத்தோடு கிளம்பிவிட்டாள். வெயிலில் தலை வலிக்க வலிக்க வந்தவள் , ஸ்கூட்டியை ஓரமாய் நிறுத்தி வைத்து விட்டு திரும்பும் போது தான் கவனித்தாள். நவிலனுடைய கார் நின்று கொண்டு இருந்தது. அதையே இமைகாகாமல் பார்த்து கொண்டு இருந்தாள்.

" என்ன பாப்பா.. அப்படி பார்க்கிற.. அந்த தம்பிதான் வந்திருக்கு.. உங்க வீட்டுக்கு தான் வந்துருக்கு.."

" எந்த தம்பி..?"

" என்ன பாப்பா.. தெரியாத மாதிரி கேக்குற.. அதான் அடிக்கடி வருமே.. அந்த உசரமான தம்பி.." செக்யூரிட்டி தாத்தா உபரி தகவல் தர, மித்ராவுக்கு ஆச்சர்யம் தான். நவிலன் அடிக்கடி வந்து போகிறானா? இது எப்படி?தனக்குத் தெரியாமல் என்ன நடக்கிறது என்று யோசித்தாள்.

அவன் வாரத்தில் மூன்று நாட்களாவது மதிய நேரங்களில் இங்கு வந்து ஐராவதத்தை பார்த்து பேசிவிட்டு போவது அவளுக்கு மட்டும் அந்த வீட்டில் தெரியாமல் இருந்தது. அதற்கு காரணமும் இருந்தது. அந்த தகவல் அவளுடைய காதுகளுக்கு எட்டாத படி இருக்குமாறு கட்டளை பிறப்பிக்கப்பட்டிருந்தது. அது யாருடைய கட்டளை என்று இப்போது தெரிய வேண்டாம்.

மித்ரா அவசர அவசரமாக படியேறி சென்றாள். வாசலில் கிடந்த ஷூக்களை பார்த்ததும் அவளுக்கு புரிந்தது. அது அவனுடைய ஷூக்கள். அதன் அருகில் நெருக்கமாய் தன்னுடைய ஹீல்ஸ்ஸை கழற்றி வைத்தாள். செருப்பாவது ஜோடி சேரட்டும் என்ற எண்ணம் அவளுக்குள்.

உள்ளே நுழைந்த அவள் கண்கள் அலைபாய்ந்தன. சத்தம் ஐராவதத்துடைய அறையில் இருந்து கேட்டது.

" நான் கிளம்புறேன் ஆன்ட்டி.. "

" இருந்து சாப்பிட்டு போகலாமே ப்பா.." பாமாவின் உபசரிப்பு குரல் கேட்டது.

" இல்ல ஆன்ட்டி.. அம்மா வெயிட் பண்ணுவாங்க.." என்று அவன் வெளியே வரவும் மித்ரா அறை வாசலை அடையவும் சரியாக இருந்தது.

அவளை அந்த நேரத்தில் அங்கு கண்டதும் ஐராவதம், பாமா, நவிலன் மூவரும் திகைத்திருக்க வேண்டும். ஏனெனில் அது அவர்கள் முகத்தில் தெரிந்தது. மித்ரா எதுவுமே பேசிவில்லை. அவனைப் பார்த்தாள். அவன் முகம் எதையோ பேச வந்தாலும் அவனது உதடுகள் இறுகிக்கிடந்தன. பிடிவாதம் பிடித்தன.

அவளைத் தாண்டி விலகிச் சென்றான்.

' ஒரு வார்த்தை பேசினா என்னவாம் நவிலன்.. அப்படி என்ன தப்பு செஞ்சிட்டேன் நான்.. ' அவளது மனம் பாடாய் படுத்தியது. கண்கள் குளமாக அறைக்குள் போனாள். அவன் வாசலை தாண்டி சென்றிருந்தான். அந்த காட்சியை காணதது போல பாமாவும் நடந்து கொண்டது தான் ஆச்சர்யம்.

அரை மணி நேரமாக அறையை விட்டு வெளியே வராத மகளைத் தேடி போன பாமா " என்னடீ சீக்கிரம் வந்துட்ட?"

" தலைவலி.."

" சரி.. சாப்பிட்டு படு.."

" எனக்கு வேணாம்.."

" ரெண்டு வாய் சாப்பிட்டு படு.." சொல்லிக்கொண்டு இருக்கும் போதே ஐராவதம் கூப்பிடும் சத்தம் கேட்க பாமா அங்கிருந்து நகர்ந்தார். உண்மையில் அவளுக்கு பசித்தது . நவிலன் மீது உள்ள கோபத்தை சாப்பாட்டில் காட்ட வேண்டாம் என்று முடிவெடுத்த மித்ரா வெளியே வந்த போதுதான் அதைக் கவனித்தாள். மேஜை மீது அவனுடைய வாட்ச் மணி மூன்று என்று சொன்னது. எடுத்தாள். பார்த்தாள். கொண்டு போய் தன் அறைக்குள் வைத்தாள். திரும்பி வந்தாள். சாப்பாட்டோடு டீவி முன் அமர்ந்தாள்.

அவளுக்கு பாமாவிடம் எந்த கேள்வியும் கேட்கவேண்டிய அவசியம் இருக்கவில்லை. அவன் அடிக்கடி வந்து போகிறான் என்று செக்யூரிட்டி தாத்தா சொன்னதை வைத்து அறிந்து கொண்டாள். ஆனால் இவன் எப்படி இந்த ஹீட்லர் ஐராவதத்தோடு ஐக்கியமானான் என்று மட்டும் அவளுக்கு புரியவேயில்லை. அதற்கு விடை தேட ஆயத்தமானாள்.

அடுத்த நாள் காலை அவள் நவிலனது வீட்டு வாசலில் நின்றாள். மன்னிக்கவும். அவளது ஸ்கூட்டி நின்றது.


ஆட்டம் தொடரும் ❤️?
 
Nice epi dear. Ore suspense than pongo. Authore kalakureenga.
Navilan ah Ayra sir,Bhama vum accept panniyachu pola ??? pinnae, yen intha Navi payan ellavarukum ippadi oru restriction koduthu irrukan???
Yedi, chapel ku jodi serthu,kalyanam katti honey moon anupu, unga atrocity thaangala di.
 
Nice epi dear. Ore suspense than pongo. Authore kalakureenga.
Navilan ah Ayra sir,Bhama vum accept panniyachu pola ??? pinnae, yen intha Navi payan ellavarukum ippadi oru restriction koduthu irrukan???
Yedi, chapel ku jodi serthu,kalyanam katti honey moon anupu, unga atrocity thaangala di.
Thank you so much Leenu❤️
 
Top