Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கண்ணாமூச்சி ஏனடா!-20

Advertisement

Banupriya "பா.ரியா"

Well-known member
Member

அத்தியாயம் -20

அவளைக் கண்டதும் மிக வேகமாக திறக்கப்பட்டது கேட்.

" என்னம்மா .. ரொம்ப நாளா ஆளைக்காணோம்.." நவிலன் வீட்டு செக்யூரிட்டி தாத்தா கேட்டார். அவருக்கு புன்னகை ஒன்றை அளித்தாள்.

உள்ளே நுழைந்தாள். அப்போது தான் பூஜையை முடித்திருந்ததுக்கு அடையாளமாக ஊதுபத்தியின் மணம் கமகமத்தது. இரண்டு அடிகள் எடுத்து வைத்தாள்.

இந்த தடவை அவளிடம் ஒரு தயக்கம் தொற்றிக்கொண்டது. மேஜையில் சாப்பாடு தட்டுகளை வைக்க சமையலறையில் இருந்து வெளியே வந்த ரோகிணி அவளை கண்டுவிட்டார்.

" அடடே.. மித்ரா.. வாம்மா.. வந்து எத்தனை நாளாச்சு... அப்பா நல்லா இருக்காராம்மா..." என்றபடியே அவளது கையைப் பற்றினார் ரோகிணி.

"ஆமாம் ஆன்ட்டி. இப்ப பரவாயில்ல. நடக்கத்தான் முடியாது. பெட் ரெஸ்ட்ல தான் இருக்கார்.. மற்றபடி ஓக்கே.."

" நானும் வந்து பார்க்கனும்னு நினைச்சிக்கிட்டே இருந்தேன்.. ஒரு முக்கியமான கல்யாணத்துக்காக டில்லி போயிட்டு நேற்றுதான் வந்தேன். அதான் வரமுடியலம்மா . நீ எதுவும் தப்பா நினைச்சிக்காத.."

" ஐயோ.. என்ன ஆன்ட்டி.. நீங்க பெரிய வார்த்தை எல்லாம் பேசிக்கிட்டு.. அதான் உங்க பையன் அடிக்கடி வந்து பார்த்துட்டு போறாராமே.."

" என்னது.. நவிலன் வந்தானா..? நான் கேட்டதுக்கு பதிலே சொல்லாம போனான்..."

' ஓ.. அப்ப உங்களுக்கும் விஷயம் தெரியாதா? இவன் என்ன ரகசிய வேலை பார்க்கிறான் ?' என யோசிக்கலானாள் சங்கமித்ரா.

" இன்னைக்கு வேலைக்கு போகலையாம்மா..?" அவளுக்கு காபி போட்டுக்கொண்டே கேட்டார் ரோகிணி.

" இன்னைக்கு சனிக்கிழமைம்மா.. வேலை இல்ல.."

" ஓ.. அப்படியா... என்ன நாள் கிழமை.. எதுவுமே ஞாபகத்துல இருக்க மாட்டிக்குது.." என்றார் அவர்.

" நவிலன் வீட்லயா ஆன்ட்டி..?"

" ஆமாம்மா.. காலையில எங்கயோ போயிட்டு வந்தான்..மேல இருக்கான்.."

" நான் அவரைத்தான் முக்கியமா பார்க்க வந்தேன்.. சரியான டைம்ல வந்து எங்க மொத்த குடும்பத்துக்கும் ரொம்ப ஆறுதலா இருந்தார். அவரோட சரியா பேசவே நேரம் கிடைக்கல.. தினமும் ஆபிஸ்ல இருந்து வர நேரமாகிடுது.. அதான் நேர்ல பார்த்து தேங்க்யூ சொல்லிட்டுப் போகலாம்னு வந்தேன்..." என்று மாடியை நோக்கினாள்.

அவள் வந்த நோக்கம் அறிந்த தாய் அவர்கள் பேச வாய்ப்பு அளித்தார்.

"அவன் ரூம்ல தான் இருப்பான். போய் பாரு... மேல ஏறி லெஃப்ட் ல போனா முதல் ரூம். "

"இல்ல பரவாயில்லமா.. அவர் கீழ வரட்டும்... நான் வெய்ட் பண்றேன் " என்று கொஞ்சம் அடக்க ஒழுக்கத்தை காட்டினாள்.

" கொடுங்க ஆன்ட்டி.. நான் சட்னி அரைக்கிறேன்.." என்று வேலையை பிடுங்கினாள். புதினா சட்னியை அரைக்கத்துவங்கினாள்.

" புதினா வாசம் ஆளை தூக்குது.." முகர்ந்து பார்த்து சொன்னாள்.

" உனக்கு பிடிக்குமாம்மா..?"

" பிடிக்கும்னு சொல்றதுக்கு இல்ல... என்னோட ஃபேவரைட் ஐட்டம் இட்லி தான். நல்லா நாலு இட்லியை போட்டு அதுக்கு மேல சாம்பார் ஊற்றி, தக்காளி சட்னியை தொட்டுக்கிட்டு சாப்பிட்டா சொர்க்கம்...." என்று அவள் சொல்லும் போதே நாக்கு ஊறியது ரோகிணிக்கும்.

" அதிசயமா இருக்கே.. நவிலனுக்கும் இட்லினா உசுரு.. இன்னும் ரெண்டு வைங்கம்மானு கேட்டு கேட்டு பத்து இட்லியாவது காலி பண்ணாம விட மாட்டான்.." என்று சொல்லி சிரித்தார்.

தனக்குப் பிடித்தது அவனுக்கும் பிடிக்கும் என்று தெரிந்த போது ஒரு புதுவிதமான உணர்வு பிறந்தது அவளுக்கு.

" வேறு என்னவெல்லாம் சாப்பிட பிடிக்கும் அவர்க்கு..?" அப்படியே விசாரிக்க ஆரம்பித்தாள்.

ரோகிணியும் அவளது உள்நோக்கம் அறிந்தோ அறியாமலோ சொல்ல ஆரம்பித்தார்.

தனக்கு பிடித்தவனுக்கு என்ன பிடிக்கும் என்று கேட்டு தெரிந்துக் கொள்வதில் பெண்களுக்கு ஒரு பேரின்பம். அவனுடைய ஆசைகள், விருப்பு வெறுப்புகளை அறிந்து கொண்டு அதற்கேற்ப நடந்து கொள்வதில் ஒரு புத்துணர்ச்சி பிறக்கும். அதுவும் அவனைப் பற்றி நன்கு அறியப்பட்ட ஒருவரால் இத்தனையையும் கேட்கும் போது இன்னும் சுவாரஸ்யம் பிறக்கும். தூண்டித்துருவி இன்னுமின்னும் கேள்விகள் கேட்க தூண்டும். அவனைப் பற்றி தெரிந்து கொள்வதில் மனம் நெகிழும். மித்ரா அதைத்தான் அனுபவித்தாள். கற்பனையில் அதே இடத்தில் அவள் அவனது மனைவியாக ரோகிணிக்கு மருமகளாக கரண்டி பிடித்துக் கொண்டு நிற்பது போல் கனா காண ஆரம்பித்தாள்.

" மித்ரா..! " ரோகிணி அவளது கையைப் பிடித்து உலுக்கவே நிஜ உலகிற்கு வந்தாள்.

" எந்த லோகத்துக்குப் போயிட்ட..?"

" ஆ.. அதெல்லாம் ஒன்னும் இல்ல.."

"அவன் இப்போதைக்கு கீழ வருவானானு தெரியல.. பசிக்குது சாப்பாடு எடுத்து வைங்கனு சொல்லிட்டு போனவன இன்னும் காணோம். நீ போய் அப்படியே அவனை வர சொல்லிட்டு வாம்மா.. நான் உங்க ரெண்டு பேருக்கும் தோசை ஊற்றுறேன்..."என்று தோசை வார்க்க ஆரம்பித்தார்.

அவள் தயங்கித் தயங்கி படியேறினாள். படியேறும் போது தயக்கம் அவளைத் தின்றது. அவனிடம் என்ன பேச வேண்டும் என்று வந்தாளோ அந்த வார்த்தைகள் மறந்து போயின. அவள் தான் கனவில் அவன் மனைவியாகி இருந்தாளே. அந்த நினைப்பிலிருந்து வெளியே வந்தாள். தயக்கத்தை தள்ளிவிட்டு மெதுவாக அறைக்கதவை தட்டினாள். இரண்டாவது தட்டலில் கதவு திறந்தது.

அவளது கண்கள் விரிந்தன. அதற்குள் இருந்த கருமணிகள் நீரூக்குள் குதிக்கும் மீன்களை ஞாபகப்படுத்தின.

அவன் அப்போது தான் குளித்துவிட்டு வந்திருக்க வேண்டும். இடுப்பில் டவலோடு, ஈரத்தலையை சிலுப்பிக்கொண்டே வந்து நின்றான். அவள் விக்கித்துப் போனாள். முதல் தடவையாக ஒரு ஆணை, அதுவும் இத்தனை நெருக்கத்தில், இந்த கோலத்தில் கண்டதும் அவள் கன்னங்கள் சிவந்து போயின. காதுகள் சூடாயின. படக்கென மறுபுறம் திரும்பி நின்றுக்கொண்டாள்.

"மித்ரா...." அவனுக்கும் அவளை அங்கு பார்த்ததில் அதிர்ச்சியாயிருக்க வேண்டும். என்ன பேசுவதென்று தெரியாமல் விழித்தான். பதட்டத்தில் டவல் இடுப்பில் தான் இருக்கிறதா என்று எச்சரிக்கைக்காக தொட்டுப்பார்த்தான்.

"அ..து.. ஆன்ட்டி.. தோசை.. சீக்கிரம் வர சொன்னாங்க..." என்று சொல்லிவிட்டு ஓட்டமெடுத்தாள். புள்ளி மான் துள்ளி ஓடுவது போல இருந்தது அவனுக்கு. அவளது ஓட்டத்தைப் பார்த்து சிரிப்பு சிரிப்பாய் வந்தது நவிலனுக்கு.

நவிலன் உடுத்திக்கொண்டு கீழே வந்த போது அவனோடு சேர்ந்து அவன் வாசனையும் ஆளைத் தூக்கியது. அவளோ அவனை நிமிர்ந்து பார்க்கவும் தயங்கினாள். சிவந்திருந்த கன்னங்களை தொட்டும் பார்க்க வேண்டும் என்ற ஆவல் எழுந்தது அவனுக்குள். சிரமப்பட்டு அடக்கிக் கொண்டான். அவள் மீதிருந்த கோபம் எப்போதோ காணாமல் போனாலும் அவளை அலைக்கழிப்பு செய்து கண்ணாமூச்சி ஆட்டம் ஆட தீர்மானித்தே கண்டும் காணாமல் இருந்தான்.

"தோசை ஊற்றியாச்சுப்பா... வா... மித்ரா நீயும் உட்காரம்மா..." என்று இருவருக்கும் ரோகிணி பறிமாறினார். எதிரெதிரே அமர்ந்திருந்த இருவரும் தோசையை பிய்த்து சட்னியிலும் சாம்பாரிலும் தேய்த்து உண்பதிலேயே கவனமாயிருந்தார்கள். அவளோ நிமிர்ந்து அவனைப் பார்க்க கூச்சப்பட்டாள். வெட்கம் திரையாய் வந்து குறுக்கே தடுத்தது.


" இந்தாம்மா.. வெங்காய தோசை.." மித்ராவுக்கு கவனிப்பு பலமாக இருந்தது.

" போதும்மா.. இப்பவே மூணு தோசை ஆச்சு.."

" நல்லா சாப்பிடு.. அப்பதானே தெம்பு வரும்.. பாரு நீ எப்படி மெலிஞ்சு போயிட்டனு..." ரோகிணி பரிவாக சொல்ல அவளுக்கு கண்கள் கலங்கின. உண்மைதான் ஐராவதம் காலை உடைத்துக்கொண்ட நாள் தொட்டு மித்ராவுக்கு தான் அலைச்சல் அதிகம். ஓடிக்கொண்டே இருந்ததில் நான்கு கிலோ குறைந்திருந்தாள். அவன் நினைவுகளால் உறக்கமில்லா இரவுகளை கடந்தும் வருவதால் கண்களுக்கு கீழே கருவளையம் வேறு.

கொஞ்ச நேரம் பொதுவாக பேசிக்கொண்டு இருந்ததில் மித்ரா இயல்புக்கு வந்தாள்.

" நவிலா..! சட்னி போட்டுக்கடா.. மித்ரா தான் அரைச்சா.." தாய் அவன் புறம் தள்ளி வைக்க அவன் நிமிர்ந்து அவளைப் பார்த்தான்.

"என்ன மித்ரா.. காலையிலயே இந்தப்பக்கம்...?" என்றான். அவள் எதற்கு வந்தாள் என்று அவனுக்கு தெரியாதாம். இதை நாங்கள் நம்ப வேண்டுமாம்.

"அது....." அவள் இழுத்தாள். ரோகிணி உதவிக்கு வந்தார்.

"அதுவா.. உனக்கு நன்றி சொல்ல வந்தாளாம்.."

அவன் அவளைப் பார்த்தான். அவள் இன்னும் மேல கொடுக்கப்பட்ட ஷாக்கிலிருந்து வெளியே வந்திருக்கவில்லை என்பது தெரிந்தது. அவனை நிமிர்ந்து பார்க்க கூச்சப்பட்டாள்.

" நன்றியா..? எதுக்கு..?"

" நல்லா கேளுடா.. எழும்பிடாத.. இரு உனக்கு நெய் தோசை ஊற்றினேன்.. கொண்டு வாரேன்.." என்று சமையலறைக்குள் அவசரமாய் நுழைந்தார் ரோகிணி.

" எல்லாத்துக்கும்..." என்று சத்தமே வராமல் சொன்னாள்.

" ம்..அப்புறம்.."

" ஸாரி..." அவளுக்கு குரல் கம்மியது.

" இது எதுக்காம்..?"

" எல்லாத்துக்கும்....." என்று இழுத்தாள்.

" ம்.. அப்புறம்...." அவன் வேடிக்கையாய் கேட்டான்.

அவள் சமையலறையை ஒருதரம் நோட்டம் விட்டு விட்டு சட்டென தன் பைக்குள் இருந்த அவனது வாட்சை எடுத்து அவன் புறம் நகர்த்தி வைத்தாள். அவள் வைத்த அந்த நிமிடம் ரோகிணி நெய் தோசையுடன் வெளியே வர அவன் அதை அவசரமாய் எடுத்து தன் பாக்கெட்டுக்குள் போட்டான்.

" என்னப்பா எழும்பிட்ட.. இரு தோசையோட வாரேனு சொன்னேன் தானே.." ரோகிணி கடிந்து கொண்டார்.

" எனக்கு போதும்மா.. மித்ராக்கு கொடுங்க.. உங்க தோசையால மித்ரா இன்னும் ரெண்டு கிலோ ஜாஸ்தி ஆக வாய்ப்புண்டு.." சொல்லிவிட்டு அமைதியாக எழுந்தான்.

அவன் கிளம்பப்போகிறானோ என்று தெரிந்ததும் சிரமப்பட்டு வாயைத் திறந்தாள்.

"நவிலன்... தேங்க்யூ சோ மச். அன்னைக்கு நீங்க வந்து ரொம்ப ஹெல்ப்பா இருந்திங்க.. உங்க துணை ரொம்ப ஆதரவா இருந்திச்சு... சரியா பேசிக்க நேரம் கிடைக்கல.. அதான்.. ஒருநாள் கண்டிப்பா நீங்க வீட்டுக்கு வரனும்.. ஆன்ட்டியையும் கூட்டிக்கிட்டு வாங்க.... ப்ளீஸ்.."

"என்னம்மா.. மேடம் நன்றிலாம் சொல்றாங்க... போதாததற்கு வீட்டுக்கு கூப்பிடுறாங்க. போகலாமா...?"

"அதுக்கென்ன தாராளமா போகலாம்..." என்று தாயாரும் சம்மதம் தந்தார்.

அவள் முகம் மலர்ந்தாள்.

" ஆனா. உன்னோட நன்றியை எல்லாம் ஏற்றுக்க முடியாது. நாங்க உனக்கு மூணாவது மனுஷங்களா.." என்று கொஞ்சம் கோபம் காட்டினார் ரோகிணி.

" அச்சச்சோ அப்படிலாம் இல்லம்மா.. இப்ப யாரு இப்படி எதுவுமே எதிர்பார்க்காம உதவி செய்வாங்க.. அதான் சொன்னேன்.." என்று சமாளித்தாள் மித்ரா.

அவன் அவளைப் பார்த்தான். அந்த பார்வையில் ஆயிரம் அர்த்தங்கள் இருந்தன.

" அப்போ.. நாளைக்கு சண்டே தானே.. நாளைக்கு வாரோம்... என்ன நவிலா..? போகலாமா..? அப்பாவும் வீட்ல தானே இருப்பார்.. மூணு பேரும் போகலாம்.." ரோகிணி நொடியில் திட்டம் தீட்டினார்.

அவள் முகம் பூவாய் மலர்ந்தது. அதை அவனும் கவனித்தான்.

ஞாயிற்றுக்கிழமையை அறிவிக்கும் முகமாக தெருமுனையில் இருந்த கறி கடையில் பையோடு வீட்டு ஆண்கள் நின்றுக்கொண்டு இருந்தார்கள்.

வருண் இப்போது தங்குதடையின்றி கிரிக்கெட் விளையாட போய்க்கொண்டு இருந்தான். ஆனால் அன்று அவனை வீட்டில் பிடித்து வைத்தாள் நாயகி.

வீட்டை ஒருவழி பண்ணிக்கொண்டிருந்தாள் மித்ரா. அது ப்ளாட் வீடு என்பதால் அதிக அறைகள் இல்லை. மூன்று படுக்கையறைகளும், கிச்சன், ஹால், இரண்டு பாத்ரூம்கள், பால்கனி சகிதமாய் கச்சிதமாய் இருந்தது. அதை உருட்டோ பிரட்டோ என்று பிரட்டிக்கொண்டிருந்தாள். பாமா சமையலறையை உருட்டிக்கொண்டிருந்தார். பாமாவின் சமையல் வாசம் மேல் மாடியில் தங்கியிருந்த பாச்சுலர் பையனை பாடாய் படுத்தியது. வருண் வீட்டுக்கும் கடைக்கும் பாமாவின் அடியாளாக உலாத்திக்கொண்டிருந்தான். காலிங் பெல் அடிகிறதா அடிக்கிறதா என தன் காதுகளை கூர்மைப்படுத்திக் கொண்டே இருந்தாள் மித்ரா. அதோ அடித்துவிட்டது. சிட்டாய் பறந்து கதவைத் திறந்தாள்.

ரோகிணியும் நவிலனும் நின்று கொண்டிருந்தனர்.

" வாங்க ஆன்ட்டி... வாங்க நவிலன்.. அம்மா அவங்க வந்தாச்சு...." என்று உள்ளேயும் குரல் கொடுத்தாள்.

" அங்கிள் எங்க ஆன்ட்டி..?"

" ஏதோ அவசர மீட்டிங்கனு போயிட்டார்ம்மா.. முடிஞ்சா வாரேனு சொன்னார்.."

" ஓ.. அப்படியா.. அவரும் இருந்தா நல்லா இருக்கும்.." அவள் முகம் வாடினாள்.

" வாங்க.. வாங்கம்மா..." என்று கையை சேலை தலைப்பில் துடைத்துக் கொண்டே வந்து முகம் மலர வரவேற்றார் பாமா. சப்பிரதாய விசாரிப்புகள் முடிந்ததும் பாமாவே பேச்சை தொடங்கினார்.

"அன்னைக்கு உங்க பையன் வந்து ரொம்ப உதவியா இருந்தார்ம்மா.. என்ன பண்றதுனு தெரியாம தவிச்சுக்கிட்டு இருந்தப்ப பெரிய ஆறுதலா வந்து நின்றார். என்ன இருந்தாலும் உதவிக்கு ஒரு ஆண்துணை இருக்க மாதிரி வராது..."

"உண்மைதான். ஆனா மித்ரா தைரியமான பொண்ணு. அதனால நீங்க டென்சன் ஆகாதிங்க.. நான் உடம்புக்கு முடியாம இருந்தப்ப மித்ராதான் தினமும் வந்து என் பொண்ணாவே இருந்து பார்த்துக்கிட்டா.. இப்ப உங்களுக்கு ஒரு உதவி தேவைப்படுறப்ப முதல் ஆளா வந்து செய்றது எங்க கடமை இல்லயா...?" ரோகிணியும் உண்மைகளை சொல்ல, பாமா ஒருநிமிடம் அமைதியானார்.

'இந்தப்பொண்ணு எப்போ இவர்க்கு உதவ போனாள்? எதுவுமே சொல்லலயே.... அதுசரி அப்பா மாதிரியே அழுத்தக்காரி இல்லையா.. அப்புறம் எப்படி சொல்லுவா...' என்று யோசித்து அதிலிருந்து விடுபட்டு "வாங்க.. அவர் அந்த ரூம்ல இருக்கார்...." என்று ஐராவதத்திடம் கூட்டிக்கொண்டு சென்றார் பாமா. நவிலனை ரகசியமாய் மோதிவிட்டு வந்தது அவளது பார்வை. அவன் அவளை கண்டுகொண்டதாகவே தெரியவில்லை.

ஐராவதம் ஒரு புத்தகத்தை விரித்துக்கொண்டு ஏதோ கணா கண்டு கொண்டிருந்தார்.

"என்னங்க... இதுதான் நவிலனோட அம்மா..." பாமா கணவருக்கு அறிமுகம் செய்யவே அவரும் "வா..ங்க..." என்று பதில் கூறினார்.

அவர்கள் அருகில் இருந்த கதிரைகளில் அமர்ந்தனர். பொதுவாக நலம் விசாரித்துக்கொண்டிருந்தனர். அங்கு இருந்து என்ன செய்வது என்று தெரியாமல் மித்ரா வெளியே வந்தாள். அவளுக்கு நவிலனோடு பேச வேண்டும் போல தோன்றியது. அவன் கைகளைப் பிடித்து மன்னிப்பு கோர வேண்டும் என்று தோன்றியது. ஆனால் அதற்கோ வாய்ப்பே இல்லாமல் இருந்தது.

பகல் உணவை பாமா அருமையாகவே தயாரித்திருந்தார். நவிலன் அவரது நண்டுவறுவலை மிகவும் விரும்பி உண்டான். அதை அவனவள் ரசித்தாள். உணவுவேளை முடிந்ததும் அவன் வருணோடு பேசிக்கொண்டிருந்தானே தவிர மறந்தும் மித்ராவின் பக்கம் திரும்பவில்லை. அவளுக்கு அது என்னமோ செய்தது. அவன் கோபம் குறையவில்லையோ என்ற அச்சம் அவளுக்குள் கேள்வியாய் எழுந்தது.

அவர்கள் விடைபெற்று கிளம்பும் போது வழியனுப்பும் சாக்கில் பார்க்கிங் வரை மித்ராவும் கூட வந்தாள்.

அப்போது நவிலனது செல்போன் துடித்தது. அவன் தனக்கு வந்த செல்போன் அழைப்புக்கு பதில் பேசிக்கொண்டே சற்று விலகிச் சென்றான். அவள் ரோகிணியுடன் பேசிவிட்டு அவர் காரில் அமர்ந்ததும் நவிலனை நோக்கினாள். அவனோ யாரோடோ போன் பேசுவதிலேயே ஆர்வமாய் இருந்தான்.

"அவன் எப்பவும் இப்படித்தான். ஏதாச்சும் போன் வந்தா உலகத்தையே மறந்திடுவான்... நீ மேல போம்மா..அவன் பேசிட்டு வந்ததும் நாங்க கிளம்புறோம்..."

"இல்லம்மா.. அவர் வரட்டும். வீட்டுக்கு வந்தவங்களை வாசல் வரை போய் வழியனுப்பனும்னு அம்மா அடிக்கடி சொல்வாங்க. அது வந்தவங்களுக்கு நாம தரும் மரியாதை...."

அவளுக்குள் இருக்கும் நல்ல குணங்கள் கண்டு ரோகிணியும் சந்தோஷம் கொண்டார்.

நவிலன் பேசிவிட்டு வந்துவிட்டான். அவள் இன்னும் அங்கேயே நின்று கொண்டு என்ன செய்கிறாள் எனும் அர்த்தத்தில் அவளைப் பார்த்தான்.

"போன் பேச தொடங்கினா எல்லாத்தையும் மறந்திடுவியே... மித்ரா ரொம்ப நேரமா நிற்கிறா.. "

"எதுக்கு...?" என்றான் ஒன்றும் புரியாமல்.

'ஹூம்.. உங்களுக்கு டாடா காட்டத்தான்...' என்று உள்ளுக்குள் நினைத்தாள் அவள்.

"நம்மளை வழியனுப்படா.." என்றார் அவன் தாய்.

"ஓ....." என்றான்.

அவனுக்கு ஏதோ புரிந்தது. அவள் ஏதோ பேச வருகிறாள் என்று. ஆனால் அவளை வெறுப்பேற்றிவிட்டு "பாய் மித்ரா.. தேங்க்ஸ் போ த லன்ச்.... சூப்பரா இருந்தது. "என்று சுரத்தே இல்லாமல் சொல்லிவிட்டு காரை கிளப்பினான்.

கார் கேட்டை தாண்டும் வரை அவள் அங்கேயே நின்றாள். ஏனோ அவள் கண்களை கண்ணீர் நிறைத்தது. அவனோடு பேசமுடியாமல் போனதாலா? அல்லது அவன் கண்டுகொள்ளவில்லை என்ற கோபமா? எதுவென்று புரியாமல் அங்கேயே நெடுநேரம் நின்றாள்.

நவிலன் தன்னை இத்தனை தூரம் பாதிப்பான் என்று அவள் கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை. ஆண்களையே வெறுத்த அவள் மனதுக்குள்ளும், அவள் சிந்தனைக்குள்ளும் அவன் எப்படி புகுந்தான் என்ற கேள்விக்கு பதில் தெரியாமல் தவித்தாள். அவன் தன்னை ஒதுக்குவதை அவளால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. அதேநேரம் அவளே முந்திக்கொண்டு தன் உணர்ச்சிகளை வெளிப்படுத்தவும் அவள் பிடிவாதம் அவளை தடை செய்தது. என்ன செய்வதென்று தெரியாமலே தன் உறக்கத்தை அவனிடத்தில் தொலைத்துக் கொண்டிருந்தாள்.


ஆட்டம் தொடரும் ❤️?
 
Nice epi dear.
Unga kannamboochi aattam innum mudivukku vara laya??
Hmmm.... nalla than irruku.
Yedi, nijama sollu avan nandu varuval ellam kaali seythu, athu kondu alle unn kannu kalangiyathu. Vidu,vidu avanda appa varala allo, avar share unakku than,karachal venda penne.
 
Nice epi dear.
Unga kannamboochi aattam innum mudivukku vara laya??
Hmmm.... nalla than irruku.
Yedi, nijama sollu avan nandu varuval ellam kaali seythu, athu kondu alle unn kannu kalangiyathu. Vidu,vidu avanda appa varala allo, avar share unakku than,karachal venda penne.
Ha ha ha .. thank you for your lovely review Leenu ❤️
 
Top