Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கண்ணாமூச்சி ஏனடா!-29

Advertisement

பா.ரியா

New member
Member

அத்தியாயம் -29

மல்லிப்பூவை தலை நிறைய வைத்த சந்தோஷத்தில் இருந்தாள் சங்கமித்ரா. கடும் பச்சை நிற சேலையை மிக நேர்த்தியாக அணிந்திருந்த அவள் மேனியின் பளபளப்பு கூடி இருந்தது. பின்னே இருக்காதா? அன்று அவளுக்கும் நவிலனுக்கும் நிச்சயதார்த்தம் ஆயிற்றே. நிச்சயதார்த்ததை ரொம்பவும் சிம்பிளான முறையில் வீட்டிலேயே வைத்துக்கொள்ள வேண்டும் என்று முடிவாக சொல்லிவிட்டான் நவிலன். அதனால் நிச்சயதார்த்தம் முக்கியமான சொந்தங்களுடன் மட்டும் சங்கமித்ராவின் வீட்டிலேயே ஏற்பாடாகி இருந்தது.


"நம்ம வீட்ல அவ்வளவு இட வசதி இல்லையே.. வேணும்னா சின்னதா ஒரு ஹால் புக் பண்ணி வச்சிடுவமா?" பாமா கவலையோடு கேட்க, " அதெல்லாம் தேவையில்லைம்மா.. அவங்க வீட்ல இருந்து பத்து பேர். நம்ம சைட்ல இருந்து பத்து பேர். இதுக்கு எதுக்கு ஹால் புக் பண்ணிகிட்டு.. வீட்லயே வச்சிடலாம்.." மித்ரா உறுதியாக இருந்தாள்.


" நீ ரொம்ப ஈசியா சொல்லிட்ட.. நிச்சயதார்த்தம்னா சும்மாவா..." பாமா தாயாக கவலைப்பட ஆரம்பித்தார். மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் ஏதேனும் குறை கூறிவிடக்கூடாதே என்ற பயம் அவருக்கு.


" இப்ப எதுக்கு பாமா இவ்வளவு பதட்டம் . நிச்சயதார்த்தத்தை சிம்பிளா வச்சிகுவோமனு அவங்களே சொல்லிட்டாங்க... அப்புறம் ஏன் டென்ஷன் ஆகுற.." ஐராவதம் கேட்க, "அதுதாங்க என்னோட கவலையே.. நம்மளால முடியாதுனு தான் சிம்பிளா வச்சிக்கலாம்னு அவங்களே சொல்லியிருப்பாங்க.."


' யார்ரீ நீ..' என்ற பார்வை பார்த்தார் ஐராவதம்.


நிச்சயதார்த்தம் பற்றி கலந்துரையாடும் போதே கீர்த்திவாசன் தெளிவாக சொல்லியிருந்தார்.


' இதோப் பாருங்க ஐரா..! நிச்சயதார்த்ததை ரொம்ப சிம்பிளா வச்சிக்குவோம். எங்க சைட்ல இருந்து பத்து பேர் தான். "


" அப்படியா.. எங்க பக்கமும் ஒரு பத்து பேர் தான் வருவாங்க.."


" அப்ப உங்க வீட்லயே வச்சிடலாமே.."


ஐராவதம் தயங்கினார். இருபது இருபத்தைந்து பேருக்கு தன்னுடைய வீடு தாங்குமா என்று யோசித்தார். தாங்கும். இருந்தாலும் சம்பந்தி தன்னுடைய இயலாமையை சீண்டுகிறாரோ என்ற லேசான சந்தேகம் எழுந்தது அவருக்குள்.


" என்ன சம்பந்தி யோசனை..?" கீர்த்திவாசன் இலகுவாக அழைக்கத் தொடங்கினார்.


" வேணும்னா ஒரு ஹால் எடுத்து பண்ணிக்கலாமே.. எங்க வீடு கொஞ்சம் சின்னது..." அவரது தயக்கத்தை உணர்ந்தவராய் பேசத் துவங்கினார் கீர்த்திவாசன்.


" என்ன ஒரு ரெண்டு மணிநேர ஃபங்ஷன். மாலை போட போறோம். தட்டு மாற்ற போறோம். சாப்பிட போறோம். இதுக்கு எதுக்கு ஹால் புக் பண்ணிகிட்டு.. வேண்டாம். " தீர்மானமாக மறுத்தார். அவருடைய பதில் ஆச்சர்யமாக இருந்தது ஐராவதத்துக்கு.


தங்களுக்காகத்தான் இவ்வாறு கீர்த்திவாசன் சொல்கிறாரோ என மீண்டும் சந்தேகம் கொண்டார் ஐராவதம்.


" நான் எதுக்கு சொல்றேனா... கல்யாணத்தை எங்க ஊர் கோவில்ல வைக்கனும்னு ரோகிணி விருப்பபடுறா. அதுவும் ரொம்ப சிம்பிளா.. நிச்சயதார்த்தத்தையும் கல்யாணத்தையும் சிம்பிளா பண்ணிட்டு ரிசப்ஷன்னை நம்ம விருப்பப்படி பண்ணிடலாம்.. உங்களுக்கும் உங்க பொண்ணு கல்யாணத்தை எப்படி செய்யனும்னு ஒரு ஆசை இருக்கும். ரோகிணி அங்கதான் வைக்கனும்னு பிடிவாதமா இருக்கா.. வேண்டுதலாம். ஏன்னா இந்த பையன் கல்யாணமே வேண்டாம்னு பார்க்கிற பொண்ணை எல்லாம் தட்டி கழிச்சிக்கிட்டு இருந்தான். மித்ராவைப் பார்த்த பிறகு தான் கல்யாணம் பண்ணிக்கிறேனு வாய் விட்டு சொன்னான். அதான்.. உங்களுக்கு அதுல ஏதாவது ஆட்சேபனை இருந்தா சொல்லுங்க.." கீர்த்தி வாசன் மிக கனிவாக கேட்டார்.


" அதுக்கென்ன கடவுள் சன்னிதியில் வச்சு பண்ணினா நம்ம குழந்தைகள் இன்னும் சந்தோஷமா இருப்பாங்க. பண்ணிடலாங்க.. ரிசப்ஷன்னை கிராண்டா பண்ணிடலாம். என் பொண்ணுங்களுக்கு தடபுடலாக பண்ணாட்டியும் என் சக்திக்கு ஏற்றமாதிரி சிறப்பா கல்யாணம் பண்ணிடனும்னு அவங்க பொறந்ததுல இருந்தே காசு சேர்க்க தொடங்கிட்டேன் சம்பந்தி. என் விதி .. ஒரு மகளோட கல்யாணத்தை தான் நடத்தனும்னு இருக்கு... " நிறுத்தி கண் கலங்கினார் ஐராவதம். அவருடைய மனக்குமுறலை உணர்ந்தவராய் அவரது தோள் மீது கை வைத்து அழுத்தம் கொடுத்தார் கீர்த்திவாசன்.


அந்த நிகழ்வை நினைத்துப் பார்த்த ஐராவதம் மனைவியிடம் நடந்ததை எடுத்துச் சொல்லி புரியவைத்தார்.


" சரிங்க.. ரிசப்ஷன்னை கிராண்டா பண்ணிடனும்.." பாமா சொல்ல, " முதல்ல நிச்சயதார்த்ததை சிறப்பா பண்ணும்மா.. அக்கா ரெடியாகுறேனு உள்ள போய் ரெண்டு மணி நேரம். தூங்கிட்டாளானு தெரியல.. எதுக்கும் எட்டிப் பாருங்க..." என்று கலாய்த்தான் வருண்.


" ஆமாமா.. அவ ரெடியாகிட்டாளானு பாரு.. அவங்க வந்துடுவாங்க." ஐராவதம் சொல்ல, பாமா அறைக்கதவை தட்டினார்.


" மித்ரா.. இன்னுமா ரெடி ஆகுற...?"


அவள் திறக்காமலேயே பதில் சொன்னாள்.


" ரெடியாகிட்டே இருக்கேன். இன்னும் பத்து நிமிடம்..." ஜிமிக்கிகள் அழகாக ஆடுகின்றனவா என ஒருதரம் கழுத்தை ஆட்டிப்பார்த்தாள் சங்கமித்ரா. அவள் காத்திருந்த அழைப்பு வந்தது.


" ஹேய் மித்ரா... என்ன இது.. வீடியோ கால் பண்ணா கட் பண்ற..வீடியோ கால்ல வா.. முகத்தை காட்டு.. உன்னை நான் தான் முதல்ல பார்க்கனும்னு சொன்னேன் தானே.." நவிலன் படபடத்தான்.


" ஹலோ மிஸ்டர் நவிலன்.. உங்க ஆசையை நிறைவேற்றுறதுக்காக ரெண்டு மணி நேரமா ரூமுக்குள்ளயே கிடக்கேன்.."


" அப்போ என் தேவதையை நான் ரசிக்கலாமா?" கண்களாலேயே கெஞ்சினான்.


" அதுக்கு அனுமதிக்கனும்னா நீங்க ஒரு பாட்டு பாடியாகனுமே..."


" காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்.. " அவன் பாட அவள் சிரித்துவிட்டு வீடியோ காலில் வந்தாள்.


அவள் பேரழகை விழுங்கியவன் உதடுகள் திறந்தன.


'அவள் உலக அழகியே... நெஞ்சில் விழுந்த அருவியே
அவள் உலக அழகியே... நெஞ்சில் விழுந்த அருவியே
அந்த நீள வெளியிலே... நெஞ்சம் நீந்த துடித்ததே
ஓர் வேரில்லாமல் நீரில்லாமல் கண்ணிரண்டில் காதல் பூத்ததே
ஓர் ஏடில்லாம்ல் எழுத்தில்லாமல் பாடல் ஒன்று பார்வை வார்த்ததே....'



அவன் பாட அவனது குரலின் இனிமையில் தன்னைத்தொலைத்து கண்களில் நீர் வழிய விட ஆரம்பித்தாள் சங்கமித்ரா.


" என்ன மித்ரா.. அப்படி பார்க்கிற...?"


" நவி.. உங்க தோள்ல சாஞ்சு தினமும் நீங்க பாடுறதை கேட்கனும்.."


" கேட்கலாம் தேவதையே.. அப்ப நாளைக்கே கல்யாணம் பண்ணிக்கலாமா..?" குறும்பு மின்ன கேட்டான்.


" அதுக்கு முதல்ல நிச்சயதார்த்தம் பண்ணனும்.." நவிலனுக்கு பின்னால் ஒரு குரல் கேட்க அவன் திரும்ப, அங்கு நின்ற ஆளைக் கண்டதும் மித்ராவுக்கு பேரதிர்ச்சி.


" ஹேய்.. சந்தியா...." இந்தப்பக்கத்தில் மித்ரா கூவினாள்.


நவிலனிடம் இருந்து செல்போனை பிடுங்கி " அங்க மாப்பிள்ளையை காணோம்னு தேடிக்கிட்டு இருக்காங்க.. நீ இங்க கடலை போட்டுக்கிட்டு இருக்கியாண்ணா.. போ போ.. போய் வண்டில ஏறு.." என்று அவனை விரட்டிவிட்டு பேசத் துவங்கினாள் சந்தியா.


" எப்ப சந்தியா வந்த.. நேரா என்னைப் பார்க்க வராமல் அங்க போயிட்ட.. இது நியாயமா..?" உயிர்த்தோழியிடம் கோவப்பட்டாள் சங்கமித்ரா.


" ஓ.. நீங்க லவ் பணணுவிங்களாம். அதை என்கிட்ட லேட்டா சொல்விங்களாம். ஆனா நான் மட்டும் டைம்க்கு வந்து நிற்கனுமாம்.. இது எந்த ஊரு தியரி?" சங்கமித்ராவிடம் பதிலுக்கு கோவப்பட்டாள் சந்தியா.


" அது.. அது வந்து..." மித்ரா கண்களை உருட்டினாள்.


" நீ லவ் பண்ணினதை என்கிட்ட லேட்டா சொன்னதுக்கு பழிவாங்க இன்னைக்கு நான் மாப்பிள்ளை சைட்.." என்று கையை விரித்தாள் சந்தியா.


அந்தப்பக்கம் தோழியின் முகமாறுதலை உணர்ந்தவள் " சரி சரி மூஞ்சை அப்படி வச்சிக்காத.. இன்னைக்கு மட்டும் தான் நான் மாப்பிள்ளை பக்கம். அப்பறம் பொண்ணு வீட்டுகாரிதான் நான்.."


" தேங்க்யூடீ சந்தியா..." அவளுக்கு செல்போனுக்குள் முத்தமொன்றை திணித்தாள் மித்ரா.


" சரி.. கொஞ்சத்துல நேர்ல சந்திக்கும் போது இந்த முத்ததை வாங்கிக்கிறேன்.. அதுசரி.. இனி நீ எனக்கா முத்தம் கொடுப்ப.. எங்க அண்ணனுக்கு தானே கொடுப்ப... " சந்தியா காலை வாற சங்கமித்ரா நெளிந்தவாறே " பாய்.. பாய்..." என்று கட் செய்தாள்.


நவிலனை நேரில் பார்க்கப்போகிறோம் என்று நினைக்கும் போதே அவளுக்குள் ஒருவித இன்பம் பரவுவதை உணர்ந்தாள்.


அரை மணி நேரத்திற்கு பின் வருண் கத்திக்கொண்டே வந்தான்.


" அவங்க எல்லாரும் வந்துட்டாங்க..."


மித்ரா பதட்டமாய் அறைக்குள் அமர்ந்திருந்தாள். அவளை ரோகிணியின் குரல் கலைத்தது.


" அடடே.. இந்த வெட்கப்படுற பொண்ணு நம்ம மித்ராவா?"


" போங்க ஆன்ட்டி.." அவள் சிணுங்கினாள்.


" இன்னும் ஆன்ட்டி தானா...? உனக்கு நான் மாமியாராகப் போறேன்.. ஞாபகம் இருக்கட்டும்.." ஒரு விரலை காட்டி மிரட்டினார்.


" ரொம்ப ஸ்டிக்ட்டான மாமியாரா இருப்பிங்களோ...?" மித்ரா கேட்டாள்.


" ஆமாமா.. என் பையனை சந்தோஷமா பார்த்துக்காட்டி வில்லியா மாறிடுவேன்.." என்று சொல்லும் போதே ரோகிணி சிரித்து விட, மித்ராவும் சிரித்து விட்டாள்.


" சரி அத்தே.. உங்க பையன் என்னை சந்தோஷமா பார்த்துக்காட்டி அவரை என்ன செய்விங்க? " அவள் இயல்பாக அத்தை என்று ஏற்றுக்கொண்டது ரோகிணிக்கு பிடித்திருந்தது.


" ம்.. அவன் உன்னை ஒழுங்கா பார்த்துக்காட்டி அவனை வீட்டை விட்டு துரத்திடுவேன்... "


" ஐயையோ..." மித்ரா பதறினாள்.


" என்ன... அவனை துரத்திடுவேனு சொன்னதும் பதறுறம்மா.. "


" அது.. வந்து.." அவள் சங்கடமாய் வளைந்தாள்.


" சரி சரி அவனை எதுவும் சொல்ல மாட்டேன்.. இனி அவன் உன் பொறுப்பு.."


" ஆ.. அதெல்லாம் முடியாது. உங்க பையனை அவ்வளவு ஈசியா என்கிட்ட தள்ளிடலாம்னு நினைக்காதிங்க..." ரோகிணியின் கையை ஆதரவாய் பற்றி "எப்பவும் முதல் உரிமை உங்களுக்கு தான்... உங்களுக்கு அப்புறம் தான் அவர் எனக்கு.." என்று வாக்கு கொடுத்தாள்.


மருமகளை மெய்ச்சிய ரோகிணி அவளது உச்சந்தலையில் முத்தமிட்டு அன்பை பொழிந்து விட்டு கொண்டு வந்த மல்லிகைப்பூவை இடமேயில்லாத அவள் தலையில் ஆசைக்கு சூடி விட்டு திரும்பினார். அந்த சமயம் சந்தியா அங்கு வந்து "பொண்ணை அழைச்சிட்டு வரட்டுமாம்.." என்று சொல்ல தோழியை பாய்ந்து அணைத்துக்கொண்டாள் மித்ரா.


" அடியேய்.. என் அண்ணாவையும் இப்படித்தான் கட்டிப்பிடிக்கிறியா...? " சந்தியா காதுக்குள் கிசுகிசுக்க " ச்சீ.. போடி .." என்று செல்லமாய் சிணுங்கினாள் மித்ரா.


" சரி அவளை அழைச்சிட்டு வா சந்தியா.. நான் முன்னாடி போறேன்..." என்று ரோகிணி நகர்ந்து விட "உன்னை ரொம்ப மிஸ் பண்ணினேன் சந்தியா.." என்று கண் கலங்கினாள் சங்கமித்ரா.


" இத.. நான் நம்பனுமாக்கும்... " அவள் வம்பிழுக்க மித்ரா முறைக்க, " சரி சரி அப்படி பார்க்காதே.. நானும் உன்னை ரொம்ப மிஸ் பண்ணினேன் மித்ரா.." தோழிகள் அன்பை பரிமாறிக் கொண்டார்கள்.


ஓரிரு நிமிடங்கள் கழிய " சரி சரி வா.. அப்புறம் உன்னை காணோம்னு அண்ணனே தேடிக்கிட்டு வந்தாலும் வந்துடுவான்.." என்று அவளை முன்புறம் அழைத்து வந்தாள்.


நிச்சயதார்த்த சடங்குகள் ஆரம்பமாகின. அவளோ அவனை நிமிர்ந்தும் பார்க்காமல் தலை குனிந்தபடியே இருந்தாள். நவிலனோ அவள் தன்னைப் எப்போது விழி உயர்த்தி பார்ப்பாள் என்று ஏக்கத்தோடு அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டு இருந்தான்.


" எங்க மித்ராவை இப்படி பார்க்காத.. கல்யாணத்துக்கு அப்புறம் பார்க்கவும் கொஞ்சம் மிச்சம் வை அண்ணா.." என்று அருகில் இருந்த சந்தியா அவன் இடுப்பில் இடித்தாள்.


" அவ கீழயே குனிஞ்சிக்கிட்டு இருக்கனும்னு ஏதாவது வேண்டுதல் வச்சிருக்காளா...?" தங்கையிடம் கேட்டான் நவிலன்.


" மேடத்துக்கு வெட்கமாம்..." சந்தியா சொல்ல ' அவள் வெட்கப்படுவது பேரழகு..' என்று அவன் மனதுக்குள் கூறினான்.


' கொஞ்சம் நிமிர்ந்து பாரேன்டீ...' அவன் மனசுக்குள் சொல்ல அது உணர்ந்து அவள் அவனை தலை உயர்த்திப் பார்த்தாள்.


'ப்பா... தேவதைடீ... ' அவன் கண்களாலேயே சொல்ல, ' அப்படியா?' என்று அவள் பதிலுக்கு கண்களாலேயே பேச அவனுக்கு கவிதை வந்தது.


'உன் ஒரு கண் கதைபேசி முடிய
மறுகண் கதை பேச ஆரம்பித்துவிடுகிறதே..
உன் கண்கள் இரண்டும் காவியம்தான்.
அதுவும் இரட்டைக் காவியங்கள் தான்..!'



" தட்டை மாற்றிக்கோங்க..." வழக்கமான வார்த்தை ஒலிக்க, சிம்பிளாக தட்டு மாற்றி நிச்சயதார்த்தம் நடக்க, இரு குடும்பங்களும் காலத்துக்கும் இணைவது ஊர்ஜிதமானது.


அதன் பின் மோதிரம் மாற்றிக்கொள்ள இருவரும் நேரெதிர் நிற்கையில் தான் மித்ரா அவனை நிமிர்ந்து பார்த்தாள்.


அவளது சேலைக்கு பொருத்தமாய் அவனும் பச்சை நிற சட்டையில் பட்டு வேஷ்டியில் ராஜகுமாரன் போல இருந்தான். அப்படியே அவனை அள்ளியணைக்க வேண்டும் போல எழுந்த ஆவலை அடக்கிக் கொண்டாள்.


' மித்ரா.. இப்ப நீ அடக்க ஒழுக்கமா இருக்கனும்.. கன்ட்ரோல் யுவர் செல்ஃப்..' அவன் மீது எழுந்த ஆசையை அடங்கினாள்.


அவனுக்கும் அப்படித்தான் தோன்றியது. அவளை அப்படியே தூக்கிக்கொண்டு இந்திரலோகம் போய்விட்டால் என்னவென்று கனா கண்டுக்கொண்டு இருந்தான்.


" அண்ணா.. என்ன யோசனை.. மோதிரத்தை போடு.." சந்தியா இடிக்கையில் அவன் இந்திரலோக வாசலில் இருந்தான்.


சங்கமித்ரா வெட்கப்பட்டுக்கொண்டே கையை நீட்ட அவள் வெண்டிக்காய் விரலை மென்மையாக பற்றி மோதிரத்தை அணிவித்தான் நவிலன். பதிலுக்கு அவன் நீட்டிய கையை அழகாய் பிடித்து மோதிரத்தை மாட்டினாள் மித்ரா. இருவரும் அந்த சந்தர்ப்பத்தில் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர். அந்த பார்வையில் ஆயிரம் காதல் பரிமாற்றம்.


வந்தவர்கள் உணவருந்த ஆயத்தமாக நவிலனுக்கும் மித்ராவுக்கும் தனிமை கிடைத்தது.


" அழகா இருக்க மித்ரா..."


அவள் பதில் பேசாது மௌனமாக இருந்தாள்.


" என்ன... வெட்கப்படுறியா.. ஓ.. அதெல்லாம் தெரியுமா உனக்கு..?"


" நவி...." செல்லமாய் அவன் இடுப்பில் யாரும் பார்க்காத போது இடித்தாள்.


" அம்மா... இப்பவே இந்த இடி இடிக்கிற.. கல்யாணத்துக்கு அப்புறம் என்னலாம் பண்ணுவியோ.."


" என்ன பண்ணுமாம்.."


" ஏன் உனக்குத் தெரியாதோ..." அவன் சீண்ட ஆரம்பித்தான்.


" ம்ஹூம்.. தெரியாது.."


" அதுக்கென்ன.. அதான் நான் இருக்கேனே சொல்லித்தர... நீ விருப்பப்பட்டா நாளையில் இருந்து தினமும் கொஞ்சம் கொஞ்சமாக சொல்லி தரலாம்.."


அவள் அவனைப் பார்த்து பொய்யாய் முறைத்தாள்.


" அப்படிப் பார்க்காத... என்னமோ பண்ணது..." அவன் தன் தலையை கோதி விட்டுக்கொண்டே சொன்னான். அந்த செய்கையில் அவள் அவனை ரசித்தாள்.


" மித்ரா.."


" ம்..."


" உங்க அப்பாகிட்ட சொல்லி கல்யாணத்தை சீக்கிரம் வைக்க சொல்லேன்.. "


" எதுக்கு..?"


" தாங்காதுடீ என் உடம்பும் மனசும்..." அவன் கிறக்கமாய் சொல்ல அவள் தலைகுனிந்தாள்.


" நவி!"


" என்ன மித்து..."


" ஐ லவ் யூ நவி..."


" நானும்... லவ் யூ மித்ரா..."


" ஆ..ஆ .. நீங்க ரெண்டு பேரும் ரொமான்ஸ் பண்ணினது போதும். வாங்க சாப்பிடலாம்.."


' இவ தான் நமக்கு வில்லி போல..' என்று பார்வையில் சந்தியாவை இருவரும் பார்க்க " அப்படிலாம் முறைக்ககூடாது. உங்களுக்கு சீக்கிரம் கல்யாணத்தை பண்ணி வச்சிடலாம்னு பெரியப்பாகிட்ட சொல்ல நினைச்சேன்.. நீங்க என்னடானா முறைக்கிறிங்க..." என்று சந்தியா சொல்ல நவிலன் ஆர்வமானான்.


" அப்படியா தங்கச்சி.. ரொம்ப சந்தோஷம்.. ஏதாவது பார்த்து பண்ணு.."


" ம்ம்.. அந்த மரியாதை இருக்கட்டும்... என்ன மேடம் நீங்க என்ன சொல்றீங்க?" உயிர்த்தோழியை சீண்டினாள்.


" நீங்களே ஏதாவது பார்த்து பண்ணுங்க சந்தியா மேடம்.."


" ம்ம்.. இந்த மரியாதை எப்பவும் இருக்கனும்..." என்று சொல்ல நவிலன் அவளை பொய்யாய் அடிக்க ஓங்கினான்.


" என்னங்க.. கூப்பிட்டிங்களா... " என்று தன்னை அழைக்காத கணவனை தேடிக்கொண்டு அவள் செல்ல அங்கு சிரிப்பலை பரவியது.


ஒருவழியாக நல்லபடியாக நிச்சயதார்த்தம் நடந்தது முடிந்தது. கல்யாணத்துக்கு திகதியும் குறிக்கப்பட்டது. அடுத்து வரும் மூன்றாவது மாதத்தின் முதலாம் திகதியில் அவர்களுக்கு திருமணம். அந்த நாளுக்காக இருவரும் ஆயத்தமாகினார்.



ஆட்டம் தொடரும் ❤️?
 
Top