Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கண்ணில் தெரிபவை இயற்கையின் விதிகளுக்கு உட்பட்டதே

Joyram

New member
Member
இன்று நான் கண்ட ஒரு விஷயத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இன்று காலை நானும் என் மனைவியும் ஹைராபாதில் என் வீட்டிலிருந்து 20 கிமீ தூரத்தில் திண்டிகல் என்ற ஊரில் உள்ள கணபதி சச்சிதானந்தா ஆஸ்ரம் என்ற ஒரு இடத்திற்கு சென்றிருந்தோம். இது மிகவும் பெரிய விஸ்தாரமான இடம். அதில் பெரிய கோவில் ஒன்றும், மிகவும் பெரிய மண்டபமும், அமைதியான தோட்டம், அன்னதான கூடம் எல்லாம் அமைந்துள்ளது. இங்கு நிலவும் அமைதியான சூழலுக்காக நாங்கள் எப்போவாவது இந்த ஆஸ்ரமம் சென்று வருவோம். திரு கணபதி சச்சிதானந்தா என்பவர் தலைமையில் தான் இந்த ஆஸ்ரமும் இவருடைய ஏனைய ஆஸ்ரமங்களும் இயங்குகின்றன. ஆஸ்ரம் சென்று அடைந்த எங்களுக்கு கொஞ்சமும் எதிர்பார்க்காத அதிர்ச்சி காத்திருந்தது. எப்போதும் நாங்கள் கோவிலுக்கு உள்ளே செல்லும் வாயில் இழுத்து மூடப்பட்டிருந்தது. உள்ளே எட்டி பார்த்தால் கோவிலையே காணவில்லை. உள்ளே கோவில் கட்டடம் முழுவதும் மிகவும் கருகி சேதமாகி இருந்தது. எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. பின்பு அங்கிருந்த காவலாளி ஒருவரை கேட்டபோது கோவிலின் வாயில் வேறு புறம் உள்ளது என்று சொல்ல நாங்கள் பின்புறமாக சென்று வேறு வாயில் வழியாக உள்ளே நுழைந்தோம். அங்கே ஒரு பெரிய ஹால் தென்பட்டது. அதன் உள்ளே நுழைந்தோம். கோவிலின் ஐந்து சன்னதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள், பெயர்க்கப்பட்டு அந்த ஹாலில் வைக்கப்பட்டிருந்தது. ஆஞ்சநேயர் சன்னதியில் பூஜை நடந்து கொண்டிருந்தது. அங்கே உள்ள ஒருவரிடம் " ஏன் திடீரென்று கோவில் சிலைகள் இங்கு மாற்றப்பட்டு விட்டன?" என்று விசாரித்தபோது " சில மாதங்களுக்கு முன்பு மின்சார பழுதினால் ( short circuit ) கோவில் உள்ளே ஒரு பெரிய தீ விபத்து ஏற்பட்டு கோவில் மற்றும் அதை சுற்றியுள்ள இடங்கள் சேதமாகி விட்டது. ஆனால் கோவிலில் வைக்கப்பட்டிருந்த விக்கிரஹங்கள் எதுவும் சேதமடையவில்லை. புனர் கட்டுமான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இன்னும் ஒரு வருடத்திற்குள் கோவில் மீண்டும் புதுப்பிக்கப்பட்டுவிடும்" என்று தெரிவித்தார்.

இந்த நிகழ்வை நான் ஏன் குறிப்பிட விரும்புகிறேன் என்றால் தீ விபத்து வேறு எங்கு நடந்தாலும் நாம் அதை ஒரு சாமான்யமான செய்தியாகத்தான் எடுத்துக்கொள்வோம். ஆனால் ஒரு கோவிலில், அதுவும் பிரசித்தி பெற்ற கோவில் ஒன்றில் தீ விபத்து என்பதை நம்மால் உடனடியாக ஜீரணிக்க முடியவில்லை. கோவிலில் விபத்து மற்றும் வேறு விதமான சம்பவங்களும் நிகழ்வது புதிது ஒன்றும் இல்லை. ஆனால் அப்படிப்பட்ட சம்பவங்கள் நடப்பது மிகவும் குறைவாகவே இருக்கும். அதற்கு மிகவும் முக்கிய காரணம் பொதுவாக பொதுமக்கள் கோவிலை ஒரு புனித இடமாகவே நினைத்து வருவதால், அஜாக்கிரதை மற்றும் வன்முறை இவற்றில் மக்கள் ஈடுபடுவதில்லை. திருப்பதி மலையில் சபரி மலையில் விபத்துகள் கேள்விப்படுகிறோம். நம் மதம் என்று இல்லை, எல்லா மதத்தை சார்ந்த பொதுமக்கள் தொழும் இடங்களில் கூட இப்படிப்பட்ட அசம்பாவித நிகழ்வுகள் எப்போதோ ஒரு முறை நடந்துகொண்டு தான் இருக்கிறது. மேற்கூறியதை போன்ற நிகழ்ச்சிகள் நமக்கு ஒரு முக்கிய விஷயத்தை தெளிவு படுத்துகிறது. கோவிலும் கோவிலில் உள்ள விக்கிரஹங்களும் மனிதர்களால் உருவாக்கப்பட்டது. எனவே மற்ற இடத்தில ஏற்படும் விபத்துகள் அசம்பாவிதங்கள் கோவிலில் நடந்தால் அதனால் நாம் அதிர்ச்சியும், பீதியும், பயமும் கொள்ள தேவையில்லை. கடவுள் என்கிற மாபெரும் சக்தி மனித வடிவங்களுக்கும் மனித உணர்வுகளுக்கும் அப்பாற்பட்டதாகத்தான் இருக்க வேண்டும். அப்போது மட்டுமே அந்த கடவுளுக்கு ஒரு புனிதமும் அத்தகைய காணமுடியாத சக்தியிடம் ஒரு ஆன்மீக ஈடுபாடும் மக்களுக்கு இருக்கும் என்பது என் நம்பிக்கை. இந்த கோணத்திலிருந்து பார்க்கையில் நம் மனது கூட கடவுளின் அரூப தன்மையை ஒத்ததாக இருக்கிறது. நாம் மனதினால் எண்ணுகிறோம், சிந்திக்கிறோம், அதன் அடிப்படையில் காரியங்கள் செய்கிறோம். ஆனால் அந்த மனதை நாம் கண்ணால் காண முடிவதில்லை. உடலை கிழித்து பார்த்தாலும் உடலின் அங்கங்கள் தான் தெரியுமே தவிர மனது எப்படி இருக்கும் என்பது எவராலும் காண முடியாத ஒன்று. இந்த மனதின் சக்தியால் தான் பெரும் தவம் செய்து முனிவர்கள் பலர் கடவுள் யார் என்ன என்ற உண்மையை அறிந்ததாக அவர்கள் சிலரிடம் சொல்லி, அந்த சிலர் பலரிடம் சொல்லி, அந்த பலரும் மிகப்பலரிடம் சொல்லி அத்தகைய செய்திகளை நாம் நம்பிக்கையுடனோ அல்லது இல்லாமலோ புத்தகத்தின் வாயிலோ அல்லது மற்றவர்கள் மூலமாகவோ அறிகிறோம். இந்த கண்ணுக்கு தெரியாத மனதையும் விட மிக சூக்ஷ்மமாக உள்ளது நம் ஆத்மா, மனசாட்சி என்றும் அறியப்படுகிறது. அப்படி இருக்கையில் நம்மையும் இந்த உலகையும் மற்றும் கணக்கிடமுடியாத பிரபஞ்சத்தையும் உருவாக்கிய மாபெரும் சக்தி எப்படி கண்ணுக்கு தெரியக்கூடியதாக இருக்க முடியும். எனவே தான் சில சிறந்த உயர்ந்த எளிமையான உத்தமமான சாதுக்கள் " உன்னை நீ பரிபூரணமாக அறிந்தால் அதுதான் பேருண்மை எனப்படும் பரம்பொருள்" என்று சொல்லி சென்றனர். ஆகவே தான் எவ்வளவு மனிதர்கள், மேதைகள், சாதுக்கள், சந்நியாசிகள், வேறு அவதார புருஷர்கள் என்று சொல்லப்படும் மனிதர்கள் இவ்வுலகில் பிறந்து வாழ்ந்து சென்றாலும், அவர்களை நாம் ஒரு போதும் எல்லாம் கடந்த பரம்பொருளாக கருதவே முடியாது. கல்லையே கடவுளாக மதித்து வணங்கும் நமக்கு ஒரு சிறப்பு குணங்கள், திறமைகள், மாய சக்திகள் கொண்ட மனிதன் கடவுள் என்பதை ஏற்க எவ்வளவு நேரம் ஆகும்? இதுவும் என் ஆழ்ந்த மனதினில் பலவருடங்கள் அனுபவத்திற்கு பின் தெளிவு அடைந்த திண்மையான கருத்தாகும்.

கண்ணுக்கு தெரிபவை அனைத்தும் இயற்கையின் விதிகளுக்கு கட்டுப்பட்டவை தான், நம்மையும் சேர்த்து. பிறந்தால் இறப்பு, தோன்றினால் முடிவு. பிறப்பில்லாத அதனால் இறப்பில்லாத ஒரு உன்னதமான கருப்பொருள் கண்ணுக்கு தெரியாதவரை, புரியாதவரை மாயை தான்.

Joyram
 
Top