Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கரிசல் கதை தொடர்ச்சி-7

Advertisement

Puthumairaj A

Member
Member
ஊர்கோலம்?????

அன்றில் பறவைகளாய் அன்பில் நிறைந்த இந்தப் புதுமண தம்பதிகள்
கருத்தொருமித்த காதல் வாழ்வில் ஒரு திசை நோக்கிப் பறந்தார்கள் . விட்டுக் கொடுப்பதில் ஒருவருக்கு ஒருவர் போட்டி போட்டார்கள் .

நாளும் இவர்களின் வாழ்வு பௌர்ணமி ஆனது . போர் மேகம் சூழ்ந்த இமயமலைச் செய்திகள் அப்போது இவர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தின .

" என்னய்யா.... விடுப்பு முடிந்து போகும்போது என்னையும் அழைச்சுட்டுப் போவீர்கள் தானே ? "
இராமையாவின் மடக்கிய கையில்
தலைவைத்தபடி , மல்லாந்து படுத்திருக்கும் அவனை நோக்கி ஒருக்களித்துப் படுத்தபடி , அவன்
சட்டை பட்டனைத் திருக்கியபடியே
கேட்டாள் செல்லம்மா .

" என்னம்மா , விவரம் தெரியாதா உனக்கு ? . அங்கே குடும்பம் வைக்க முடியாது . அது மலையின் மீது உள்ள
இடம் . பயிற்சி முடிந்த வீரர்கள் கண்டிப்பாக இரண்டு ஆண்டுகள் அங்கு பணியாற்ற வேண்டும் . இரண்டு ஆண்டுகள் முடிந்ததும்
ஸ்ரீநகர் , பஞ்சாப் , பர்னாலா , பதன்கோட் போன்ற பகுதிகளுக்கு வந்தால் குடும்பம் வைக்கலாம் .
அப்போது கண்டிப்பாக கூட்டிப் போவேன் " என்றான் இராமையா .

" எப்படி உங்களைப் பார்க்காமல்
வாழ்வது ? . என் நினைவெல்லாம் நிறைந்திருப்பது நீங்கள்தானே ? .
எப்படிப் இருப்பேன் என்று நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை " என்றாள் கண்களைக் கசக்கிக் கொண்டு .

" பிரிந்து இருக்க முடியாதுதான்.
ஆனால் வாழ்க்கை நடைமுறையை யோசித்துப்பார் செல்லம் . நமக்கான சில பொதுக் கடமைகளை நாம் விரும்பித் தான் இருக்கிறோம் . அதற்காக சில தியாகங்களை நாம் செய்து தானே ஆகவேண்டும் . நீ
படித்தவள் . உனக்கு நான் சொல்லிக் கொடுக்க வேண்டுமா ? " என்றான்
இராமையா .

அழுகையினூடே சிரிப்பையும் வரவழைத்துக்கொண்டு அவனைத்
தன் பக்கமாகத் திருப்பி இறுக அணைத்துக் கொண்டாள் செல்லம்மா .
தன் செவ்விதழால் அவன் கன்னத்தில்
முத்தமொன்றைப் பதித்து , " இராணுவ வீரனுக்கு மனைவி என்பதில் பெருமை கொள்கிறேன் நான் . ஆனாலும் சாதாரண பெண்களுக்கான உணர்வுகளில் நானும் விதிவிலக்கு அல்லவே ! அதுதான் சிறு கலக்கம். வேறொன்றுமில்லை " என்று
வேதாந்தம் பேசினாள் சில நிமிடங்களிலேயே....

" நமது கரிசல் நிலங்களைப் பார்த்து வெகு நாட்கள் ஆகிவிட்டது . வேலைக்குப் போகுமுன் பார்த்தது .
இந்த விடுமுறையிலும் இன்னும் பார்க்க முடியவில்லை . இன்னும் 10 நாட்கள் தான் விடுப்பு உள்ளது .
நாளையிலிருந்து தினமும் ஒரு காட்டிற்குச் சென்று வருவோமா ? "
என்றான் .

" நீங்கள் விடுப்பு முடிந்து பணிக்குச் சென்ற பிறகு எனக்கும் நேரம் போக வேண்டும் அல்லவா !
மாமா இறந்த பிறகு அத்தை வெளியேறவே இல்லை . அத்தையை துணைக்கு அழைத்துக் கொண்டு நான் விவசாயம் செய்கிறேன் " என்றாள்.

" ஐயோ ! மகாராணி அவ்ளோ பெரிய ஆளா ஆயிட்டீகளாக்கும் ? .
வேண்டாம் நீ கருத்துப் போயிடுவே.
இரண்டு வருடமாக அம்மா காடு ' கட்டுக் குத்தகைக்குத் ' தான் விட்டிருக்காங்க . அதிக லாபம் இருக்காது . ஆனாலும் உனக்கு சிரமமில்லாமல் இருக்குமே...."
என்றான் .

" இல்லய்யா.... ஆம்பள சோத்துக்கு உழைச்சா பொம்பள கறிக்கு உழைக்கணும் இல்லையா ?
வெயில் மழை பாக்காம காடோ செடியோன்னு நீங்க இமயமலையில் கிடக்கும்போது , நான் மட்டும் சவுகரியமாக இருப்பது சரி இல்லைங்க. விவசாயம் செய்தால் எனக்கு நிம்மதியா இருக்கும் "
என்றாள் தன் பதிக்கு ஏற்ப கடின வேலைகளைத் தேர்ந்தெடுத்துக்
கொண்டு .

" சரி. பூமித்தாயை தரிசாக போடக்கூடாது . நீ சொல்வதும் ஒருவகையில் சரிதான் . தன் பிள்ளைகளைத் தானே வளர்ப்பதே சரி . அம்மாவிடம் பேசுகிறேன் . நீயும் அம்மாவும் சேர்ந்து விவசாயம் கவனியுங்கள் " என்றான் .
இப்போது அவனின் முத்தம் யுத்தமானது .

" ஐயோ... என்ன பகலிலா ? " என்றாள் சிணுங்கிக் கொண்டே...

" ம்ம்..... விவசாய நிலத்தை தரிசாகப்
போடக்கூடாது ! " என்றான் சிரித்துக்
கொண்டே.

பகலிலும் ஒரு சிறு தூக்கம் .
ஆச்சி பாசிப்பயறு வறுத்துக் கொண்டிருந்தாள் .

செல்லம்மா , " ஆச்சி இப்போ ஏன் இவ்வளவு பாசிப்பயறும் வறுக்கிறாய் ?" என்றாள் .

" என் பேராண்டி விடுப்பு முடிந்து செல்ல இன்னும் பத்து நாள் தான் இருக்கு . வறுத்து திரித்து வைத்தால் போகும்போது முந்திரிக் கொத்து செய்து கொடுத்து விடலாமே " என்றாள் ஆச்சி .

கேட்டுக் கொண்டிருந்த இராமையா , " ஆச்சி உங்களுக்கு எதுக்கு வீண் சிரமம் . ரெண்டு நாள் முன்னாடி அக்காமார் வருவாங்க .
அவங்க ஏதாவது செய்வாங்க "
என்றான் .

" ஏனய்யா.... உங்களைச் சாட்டி நாங்களும் கொஞ்சம் தின்னுட்டு போறோம் . இருக்கட்டுமே . நம்ம வீட்டில் இருந்தும் வெறிச்சாக்ல விட முடியாது இல்லையா ! ஆச்சி சும்மாதானே இருக்கேன்.... ஏன்டதைச் செஞ்சிட்டுப் போறேன் " என்றாள்.

" சரி ஆச்சி . உங்கள் பிரியம் " என்றான் . மாலை நேரமானதால்
உலாச் செல்வது வழக்கம் தானே....

பொதுவாக திருமணத் தம்பதிகளுக்கு ஒரு கர்வம் இருக்கும் . தன்னை நன்றாக அலங்கரித்துக்கொண்டு வெளியே எங்கேயாவது சென்று வருவது . தன்னைப் போன்று அழகான , ஒற்றுமையான தம்பதிகள் உலகத்தில்
யாருக்கும் வாய்க்காது என்று கர்வத்தோடு நிமிர்ந்த ஒரு நடை .

அதற்குத்தான் இந்த பொன்னந்தி மாலைப் பொழுது . செல்லம்மா தன் வீட்டிலிருந்து இருவருமாக புறப்பட்டு
குறுக்குச் சந்தில் புகாமல் , தெருவில் உள்ளோர் பார்க்க வேண்டும் என்பதற்காக நெடுந்தெரு சுற்றி
இராமையா வீட்டிற்குச் சென்றார்கள் .

இராமையா வீட்டுப் பசுமாடு ,
தலையீத்துக்கு இவர்கள் வீட்டிற்கு வந்தது . மூன்று முறை கன்று போட்டு பால் கொடுத்து விட்டது . நான்காவது
முறையாக அடிவயிற்றிலிருந்து
' சினைப் பட ' கத்துகிறது .

" அம்மா , பசு கத்துகிறது புளியங்குளத்திற்கு கொண்டு போகணும் போலிருக்கு " என்றான் .

" ‌ ஆமாம்பா மாசானம் மாமா நாளைக்கு கொண்டு போறேன்னு சொல்லி இருக்கான் " என்றாள்
முத்தம்மா .

" இரண்டு கன்றுக் குட்டிகள் எங்கே அம்மா ? . கொடுத்தாச்சா ? " என்றான் .

" ஆமா காளங்கண்ணு தானே....
நீயும் ஊரில் இல்லை . விவசாயம் பார்த்தாலாவது காட்டுக்கு போயிட்டு வரும்போது புல்லுக்கட்டு வந்துசேரும்.
நான்தான் அப்பா இறந்ததில் இருந்து வெளியேறலையே.... கூளம் வாங்கிப்போட்டுக் கட்டுப்படி ஆகலே.
அதனால ரெண்டு மாசத்துக்கு முன்னாடி மாசானம் மாமா சீவலப்பேரி சந்தையில கொண்டு போய் கொடுத்து விட்டான் " என்றாள் .

" ஆமாம்மா வீட்டில் யாரும் இல்லாம நீ மட்டும் இருக்கும் போது இத்தனை உருப்படிகளை கவனிப்பது கஷ்டம் .
செல்லம்மா இனிமே வேலைக்கு போகலையாம் . நிலங்களை பார்த்துக்கிட்டு விவசாயம் பண்றேன்னு சொல்றாம்மா "
என்றான் ‌.

" அய்யோ வேணாம்மா . படிச்சபுள்ள வாத்திச்சி வேலைக்கே போ " என்றாள் .

" இல்ல அத்தை..... உங்க மகன் ரெண்டு வருஷத்தில வந்து என்னக் கூட்டிட்டுப் போறாகளாம். ஒரு பள்ளிக்கூடத்துல போய் வேலைக்கு சேர்ந்துட்டு , ரெண்டு வருஷம் கழிச்சு வரலைன்னு சொன்னா நல்லா இல்ல . அதனால உங்க மகன் வேலையிலிருந்து ஓய்வுபெற்ற அப்புறமா நான் வேலைக்கு போயிடுவேன் . அதுவரை உங்க கூட சேர்ந்து விவசாயம் கத்துக்கிறேன் " என்றாள் செல்லம்மா .

" அப்போ சரி தாயி . உங்க மனசுக்கு எது சரின்னு படுதோ அதைச் செய்யுங்க " என்றாள் முத்தம்மா.

" ஐயா..‌.. இப்போ விடுப்பு முடிஞ்சு போயிட்டு , குலதெய்வம் கும்பிட பங்குனி உத்திரத்துக்கு வர முடியாது இல்லையா ? . அதனால நாளைக்கு தாய்க்கு வசதியிருந்தால் ரெண்டு பேருமா சிவகளை ஊரில் இருக்கும் நம்ம குலதெய்வ கோயிலுக்கு போயிட்டு வந்துடுங்க...." என்றாள் .

செல்லம்மா மனதுக்குள் ஏதோ கணக்குப் பார்த்துக் கொண்டு , "
இல்ல அத்தை . நாளைக்குப் போக சரிப்படாது . அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை போயிட்டு வாறோம் " என்றாள் .

" கோயிலுக்குப் போயிட்டு வந்ததற்கு அப்புறம் ஞாயிற்றுக்கிழமை விடுப்பு முடிந்து போக வேண்டியிருக்கும் " என்றான் இராமையா.

" அதுக்குள்ளயுமாய்யா...." என்றாள்
அம்மா....

" ஆமாம்மா . போக்குவரத்தில் 15 நாள் விடுப்பு முடிந்து விடுகிறது .
கல்யாணத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடியே வந்துட்டேன். கல்யாணம் முடிந்து ஒரு மாதம் ஆகிவிட்டதே .
அந்தா இந்தான்னு இன்னும் ஒரு பத்து நாள் தான் . கிளம்ப வேண்டியது தான் " என்றான் இராமையா.

முத்தம்மாளின் கைப்பக்குவத்தில் இரவு உணவை முடித்துக் கொண்டு இருவரும் வீட்டிற்குக் கிளம்பினார்கள் .

போகும்போது மெதுவாக அவள் காதுகளில் கிசுகிசுத்தான் இராமையா
" ஏன் நாளைக்கு கோவிலுக்கு வேண்டாமென்றாய் ? "

" நான் ஓரமா உட்கார்ந்திருவேன். வசதியில்லாத நாட்களில் கோவிலுக்குப் போகக்கூடாது " என்றாள் .

" அப்படியெல்லாம் நடக்காது .
இப்படியே நீ அம்மாதான்...." என்றவாறு தெருவில் அக்கம் பக்கம் பார்த்துக்கொண்டு அவள் இடுப்பைக் கிள்ளினான் .

" ஐயோ..... தெருவில் வரும் போது சும்மா வர மாட்டீங்களா ? " என்று
பொய்க் கோபம் கொண்டாள் செல்லம்மா .

1828

? ♥ ? இதயம் #போகுதே...?❤♥?

??❤


பச்சரிசியும் அச்சு வெல்லமும்
தன் திட நிலையிலிருந்து நெகிழ்ந்து
ஒன்றை ஒன்று தழுவிக் கொள்ளும் போது , தளுவை என்ற அந்த அமிர்த நிலையை அடைகிறது .

அதுபோலவே இளம் தம்பதியரின் இரவுப் பொழுதுகளும் .அன்பின்
நெகிழ்தலில் , நடு சாம ரசவாதங்கள்...

நடு சாமத்தின் பின்தூங்கி விடியலில் எழும் எதார்த்தங்கள் .
செல்லம்மா தன் விளையாட்டுத்தனங்களைத் துறந்து பொறுப்பான பெண்ணாக மாறி இருந்தாள் .

அவர்களின் இல்வாழ்வில் அறமும் ஆன்மீகமும் இருகண்கள் ஆயிற்று .
இரவும் பகலும் மாறி மாறி வர அவை நாட்காட்டியில் ஆறு காகிதங்களை விழுங்கி இருந்தன .

குலதெய்வ வழிபாடு என்பது இவர்களின் வாழ்வில் இரண்டறக் கலந்த ஒன்று . குலதெய்வத்தை கொண்டாடும் பங்குனி உத்திரத்திற்கு இராமையா இராணுவத்தில் இருந்து விடுமுறையில் வர முடியாது என்பதால் திருமணத் தம்பதியர் குலதெய்வ தரிசனத்திற்கு கிளம்பினர் .

இறைவழிபாடு என்பதால் சுப்பிரமணியம் சொக்கியும் இவர்களோடேயே வந்தனர் .

" குலதெய்வக் கோவிலுக்கு எந்த ஊர் வழியாகச் செல்லவேண்டும் ? " என்றாள் சொக்கி . வெளியூர் சென்று காண்பதில் கொள்ளைப் பிரியம் அவளுக்கு .

" 'எட்டாளஞ் சோத்த... முட்டாப்பய தான் சுமப்பான் 'ன்னு ஒரு பழமொழி சொல்லுவாங்க . அந்த மாதிரி உங்க அம்மா கட்டிக் கொடுத்தாங்கன்னு இவ்வளவு பெரிய சோத்து மூட்டையைத் தூக்கிக்கிட்டு வாறீயே " என்றான் சுப்பிரமணி .

" அங்க வந்து வயிறு பசிக்குமில்ல அப்ப நான் சொல்றேன் . குளத்து தண்ணீர் கோதிக் குடிச்சிட்டு வயித்த நிறைச்சுக்கோங்க .... வாழை இலையில கமகமன்னு புளியோதரை
கட்டி , மல்லி வறுத்து துவையல் அரைத்துத் தந்து இருக்கா எங்க அம்மா . உங்களுக்கு வேண்டாட்டி நீங்க பார்த்துக்கிட்டே இருக்கலாம் " என்றாள் சொக்கி .

" செல்லம்மாளும், சொக்கியும் செருப்பு இல்லாம வராதீங்க . காட்டு வழியாக கொஞ்சம் தூரம் நடக்க வேண்டியிருக்கும் " என்றான் இராமையா .

" ஞாபகமா செருப்பு போட்டுக்க
செல்லம்மா.... அப்புறம் உன் காலுல முள்ளு தைக்க , எங்க அண்ணன் கண்ணுல கண்ணீர் வர.... கண்கொள்ளாக்காட்சியாக இருக்கும் " என்று கேலி செய்தாள் சொக்கி .

பேசிக்கொண்டே பக்கத்து கிராமம் வரை நடந்து வந்தவர்கள் பேருந்து ஏறி புதுக்கோட்டையில் வந்து இறங்கினார்கள் . அங்கிருந்து ஸ்ரீவைகுண்டம் செல்லும் பேருந்தில் ஏறி , கூட்டாம்புளி , நட்டாத்தி ,சாயர்புரம் , பெருங்குளம் வழியாக சிவகளை வரவேண்டும் .

புதுக்கோட்டையில் இருந்து ஆறு மைல் தூரம் கடந்ததுமே இருபுறமும் சாலையோரம் அடர்ந்த , குளிர்ந்த காற்று வீசும் மரங்கள் . ஒருபுறம் அடுத்தடுத்த தொடர்ந்த நீர்நிலைகள் .

பேருந்து பெருங்குளத்தை நெருங்கியபோது மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட அழகிய கோவில்கள் . கோவில்களை கடந்ததும் ஆரம்பமான பெரிய ஏரி
சிவகளை வரை இரண்டு மைல் நீண்டது . ஒருபுறம் ஏரி . மறுபுறம் பசுமை சூழ் வயல்கள் . அந்த ஏரிக்குள் தான் குடியிருந்தது இவர்களின் குலதெய்வம் .

பேருந்து நிறுத்தத்தில் இறங்கிக் கொண்டவர்கள் அங்கிருந்த கடையில்
சாமி கும்பிடுவதற்குத் தேவையான அத்தனை பொருட்களையும் வாங்கிக் கொண்டார்கள் . அங்கிருந்த மரங்களின் இடையே அமைந்திருந்தது இவர்களின் குலதெய்வம் .

அருகில் குதிரையில் வாள் ஏந்திய வீரன் ஒருவனின் சிலையும் இருந்தது . அது வெட்டுமாற பாண்டிய மன்னனின் உருவம் என்று முன்னோர்கள் சொல்லியதாக இராமையா கூறினார் .

அங்கிருந்த ஏரி நீரில் குளித்துவிட்டு , கொண்டுவந்திருந்த பொருட்களை சாமிக்குப் படைத்து விட்டுத் தீபாராதனை காட்டி , வணங்கிவிட்டு
மரத்தடியில் உட்கார்ந்து , கொண்டு போன கட்டுச் சோத்தைப் பிரித்தார்கள் .

சொக்கி கணவனிடம் " முட்டாள் தானே சோறு சுமப்பாங்க....இப்போ நீங்க சாப்பிடாதீங்க...." என்றாள் .

" ம்ஹூம்.... எங்க அத்தை செஞ்ச சாப்பாடு வீணாகி விடக்கூடாது . வாசம் கமகமக்குது . வை தாயே.... பெருங்குடல் சிறுகுடலைத் திங்குது "
என்றான் .

நீர்நிலையோரம் , மரத்தடி நிழல் ,
அருமையான காற்று , வாழையிலையில் கட்டிய சோறு ,
புளி சேர்த்த வறுத்த முழுமல்லித் துவையல் அமிர்தமாய்ப் பட்டது அந்த நேரத்தில்....

மீண்டும் வந்த வழியே பயணம் மேற்கொண்டு , அந்திமாலை மயங்கும் ஆறு மணிக்கு வீடுவந்து சேர்ந்தார்கள் . பயண அலுப்பில் பொழுது அடைந்து விடிந்தது .

இராமையா வீட்டிற்கு ஊரிலிருந்து அண்ணன்கள் வந்திருந்தனர் . தம்பியை வழியனுப்பி வைக்க . ஒவ்வொரு முறையும் விடுப்பு முடிந்து செல்பவர்கள் மறுமுறை
ஊர் வந்தால் தானே உறுதி .

நெருங்கியிருக்கின்ற போதும்
பிரிவுத்துயர் தம்பதிகளைத் தாக்க ஆரம்பித்தது . ஆம் ! நாளை மதியப்
பேருந்திற்கு சுப்பிரமணியும் இராமையாவும் கிளம்ப வேண்டும் .

இருசோடிக் கிளிகளும் இரவெல்லாம் தூங்கவில்லை . பிரிவுத் துயர் அனலிடை மெழுகாய் உருக வைத்தது . தனிமையில் உருகினார்கள் . உறவுகளோடு
காட்டிக் கொள்ளாது பேசினார்கள் .

இன்னும் இரண்டு ம ணி நேரமே . இராமையா மனதில் வலிகளை மறைத்துக் கொண்டு , செல்லம்மாவிடம் சிரிக்கச் சிரிக்க பேசினான் . ஆனால் செல்லம்மா முகத்தில் சிரிப்பையே காணவில்லை . வாய் மலர்ந்தாள் . ஆனால் அங்கே புன்னகை இல்லை .

கிளம்பியாயிற்று . ஊர் காவல் தெய்வங்களுக்கு , தலைசுற்றி தேங்காய் விடலை போட்டு வந்தார்கள் .

இராமையா , " ஆச்சி , என் செல்லத்தை நல்லா பாத்துக்கோ "
என்றான் ஆச்சியிடம் கண்கலங்க....

" பத்திரமா போயிட்டு வாய்யா....
நாங்கெல்லாம் இருக்கோம் . தூராதேசம் போறீக . அந்தப் பதினெட்டாம்படி கருப்பன் உங்க கூட காவலா வரணும் " என்று திருநீறு
பூசினாள் ஆச்சி .

அம்மாவிடம் சென்று , " அம்மா செல்லம்மா சின்னப் புள்ள , ஏதாவது தெரிஞ்சு தெரியாம பேசினா , படக்குனு சொல்லிடாதம்மா...." என்றான் .

" கவலைப்படாதப்பா . அம்மா நல்லாவே பார்த்துக்கிறேன் .
அவ என்ன சின்னக் குழந்தையா ?.
நீ நிம்மதியாக இரு . வாரம் தவறாமல் கடுதாசி போடு " என்றாள் முத்தம்மா .

" பேருந்துக்கு நேரமாயிற்று வாங்க பேருந்து நிறுத்தம் வரை..." என்று
சிரிப்பது போல் நடித்தான் இராமையா.

பேருந்து நிறுத்தத்தில் , " ஒரே
புழுக்கமாக இருக்கிறது . உன் கைக்குட்டை கொடு செல்லம் " என்று செல்லம்மா கையில் இருந்த கைக்குட்டையை வாங்கினான் இராமைய்யா .

வழிகின்ற கண்ணீரைத் துடைத்து துடைத்து அவள் கன்னத்தில் ஒட்டி இருந்த மஞ்சள் முழுவதும் கைக்குட்டையில் ஒட்டியிருந்தது .

கைக்குட்டையை வாங்கிய இராமையா திருப்பித் தரவே இல்லை . அவன் அதை வாங்கியது செல்லம்மாளின் வாசனையை முகர்ந்து பார்க்க அல்லவா...
அது அவனோடு தானே பயணம் செய்யும் .

பேருந்து வந்தது . இரு குடும்பக் கூட்டங்களிடமும் , கையசைத்துவிட்டு
கலங்கிய விழிகளோடு பேருந்தில் ஏறினார்கள் .

செல்லம்மா , சொக்கியின்
முகங்கள் சிரித்தது . கைகள் அசைந்தன . ஆனால் கண்கள் மட்டும் கண்ணீரைச் சிந்தின .

இதோ.....ஒர் பயணம் . இரு இளைஞர்களை தென் கோடியில் இருந்து , வடகோடிப் போர் முனைக்கு அழைத்துச் செல்கிறது .

( கரிசல் கதை தொடரும் )?♥
 
Top