Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கரிசல் கதை பகுதி- 6

Advertisement

Puthumairaj A

Member
Member
View attachment 1824

சொந்தங்கள்?‍?‍?‍??‍?‍??‍?‍?‍??‍?‍?‍?


இராமையாவுக்கும் செல்லம்மாவுக்கும் நிச்சயம் செய்து வைத்திருந்த நிலையில் ,
இன்னும் மூன்று நாட்களே விடுப்பு இருந்தன .

சுப்பிரமணி வீட்டில் திருமணப் பேச்சை எடுத்தார்கள் .

"மணி , தளவாய்புரத்திலிருந்து எனக்கு ஒன்றுவிட்ட அண்ணன் ஒருவன் வீட்டிலிருந்து உன்னை மாப்பிள்ளை கேட்கிறார்கள் . ஊரிலேயே வீடு , ஒரு சங்கிலி நிலம் ,
15 கழஞ்சு நகை போடுகிறார்கள் .
ஐந்தாவது வகுப்பு வரை படித்திருக்கிறாள் " என்றாள் அம்மா .

" இல்லை அம்மா . எனக்கு திருமணம் இப்போது வேண்டாம் . மெதுவாக பார்த்துக்கொள்ளலாம் " என்றான் சுப்பிரமணி .

" நம்ம வீட்டில் என்ன அக்கா ? தொக்கா ? . உன்னை வைத்து எதுவும் வரவும் செலவும் பார்க்க வேண்டி இருக்கா என்ன ? காலாகாலத்தில் கல்யாணம் பண்ணிட வேண்டியதுதானே . மிலிடரிக்காரன் வாழ்க்கை நாடாறு மாதம் . காடாறு மாதம் . அதனால முடிச்சிடலாம்பா "
என்றாள் அம்மா .

" எனக்கு விருப்பம் இல்லை என்றால் கேட்டுத் தொலைக்க வேண்டியதுதானே " என்று கத்தினான் சுப்பிரமணி.

" எதற்காக வேண்டாம் என்கிறாய் ? என்று சொல்லித் தொலைக்க வேண்டியதுதானே " என்று எதிர்த்து கத்தினாள் அம்மா .

" சொல்லி என்ன ஆகப் போகுது ?எனக்கு இப்போதைக்கு கல்யாணம் வேண்டாம் அவ்வளவுதான் . என்னிடம் கேட்காமல் எங்கேயாவது கல்யாணம் பண்ணி வச்சீங்க என்றால் மிலிட்டரி சண்டையில சாகிறேனோ இல்லையோ ! நானே சுட்டுக்கொண்டு செத்துருவேன் " என்றான் ஆவேசமாக சுப்பிரமணி .

அந்த நேரத்தில் உள்ளே நுழைந்தார் சுப்பிரமணியன் அப்பா பெருமாள்.
" என்ன நடக்குது இங்கே ? முளைச்சு மூணு இலை விடல. வேலைக்கு போயிட்டா நீ பெரிய ஆள் என்று அர்த்தமா ? பிள்ளைகள் வாழ்வை எப்படித் தீர்மானிப்பது என்று பெத்தவுளுக்குத் தெரியாதா ? " என்றார் .

" வாழப் போறது நான்தானே .நீங்க தேடி வைக்கிற பொண்ணு எனக்கு பிடிக்கனுமில்லா...." என்றான் சுப்பிரமணி .

" ஓ கதை அப்படிப் போகுதோ.....
மனசுக்குப் பிடிச்ச பொண்ணு ஐயா தீர்மானம் பண்ணி வைத்து விட்டீர்களா ? " என்றார் அப்பா .
" சொந்த சாதி சனமா ? இல்ல மலைசாதிப் பொண்ணா " என்றார்
கோபமாக .

" ஏன் இப்படிக் கேக்குறீக ? கண்ணு மண்ணு தெரியாமப் பேசாதீக . அதெல்லாம் நம்ம பேச்ச மீறமாட்டான் " என்றாள் அம்மா .

" அம்மா நீ என்ன சொன்னாலும் சரி . கண்களைக் குருடாக்கி சித்திரம் வாங்க முடியாது . சொத்து சொகத்துக்கு ஆசைப்பட்டு வேற எங்கேயும் நான் முடிக்க விரும்பல " என்றான் சுப்பிரமணி .

" அட பாழாப் போனவனே ! எங்கேயோ வெறும்பய புள்ளய கூட்டிட்டு வருவான் போல இருக்கே "
என்றார் அப்பா .

" வெறும்பய புள்ளய கூட்டிட்டு வந்த உன் ஆத்தாள நீ உயிரோட பார்க்க முடியாது பார்த்துக்கோ " என்றாள் அம்மா .

" இல்ல . நான் கூட்டிட்டு வர மாட்டேன். ஆனால் நீங்களாக எனக்குத் திருமணம் பேசக்கூடாது . என் விருப்பப்படி நான் நினைத்த பொண்ண எப்போது கட்டிவைக்க சம்மதிக்கிறீர்களோ அன்று கல்யாணம் முடித்தால் போதும் .
அப்படி இல்லாவிட்டால் நான் நாட்டுக்கான பிள்ளையாக இருந்துவிட்டுப் போகிறேன் " என்றான் உறுதியாக சுப்பிரமணி.

" சரி. அப்படியெல்லாம் பேசாதே .
குடும்பம் வாரிசு அத்துப்போகக் கூடாது . யாருன்னு சொல்லு . நம்ம குடும்பத்துக்கு ஒத்து வருதான்னு பார்ப்போம் " என்றார் அப்பா .

" சொந்தபந்தம் பார்த்தால் ஒத்துவரும் . சொத்துபத்து பார்த்தால் ஒத்துவராது " என்றான் சுப்பிரமணி .

" அப்படி யாருலே.... நம்ம சொந்த பந்தத்தில இருக்கா ? . என் தங்கச்சி சங்கரம்மா மகள் சொக்கி மட்டும் தான் இருக்கா . ஆனா அவா வீட்டில் சம்பந்தம் பண்ண முடியாது . நாங்க சத்தியம் பண்ணி சண்டை போட்டு குடும்பம் பிரிஞ்சிருச்சி . இனிமேல் சேருகிற கதை இந்த ஜென்மத்துல நடக்காது " என்றார் அப்பா .

" அப்போ இந்த ஜென்மத்தில எனக்கு கலியாணமும் நடக்காது " என்றான் சுப்பிரமணி .

" அட்ரா சக்க . தொர அங்கதான் கணக்குப்பண்ணி வைத்திருக்கிறீகளா ? . உன் அப்பனை விட அந்த வீடு பெருசாப் போச்சா?. என் ஆத்தா செத்தப்போ கால்சங்கிலி நிலத்துக்குக்கும் , ஒரு சுத்துமணி , பாம்படத்துக்கும் சண்டை போட்டு சத்தியம் பண்ணி வாங்கிட்டுப் போனவ . அண்ணனாச்சேன்னு கொஞ்சமும் நெனைக்கல . அங்கேயால....உனக்குப்
பொண்ணு வேணும் ? என்றார் ஆவேசமாக அப்பா .

" தெரியாமத்தான் கேட்கிறேன் . அத்தைக்கு கொஞ்ச வயசுலயே மாமா செத்துட்டாரே . பிள்ளையோட கஷ்டபடத்தானே செஞ்சாக ....
அத்த கேட்காமலேயே நீங்க ஆச்சி சொத்தை கொடுத்திருக்கலாமே .
தங்கச்சியை விட உங்களுக்கு சொத்து பெருசா தெரிஞ்சுதா . வாழ வழியில்லாமல் இருக்கும்போது சண்டை போட்டுத்தான் கேட்டிருப்பாக . உங்களுக்குத் தங்கச்சி தானே . உங்ககுணம் தான் அவுக கிட்டேயும் இருக்கும் " என்றான் சுப்பிரமணி .

சாட்டையால் அடித்தது போலிருந்தது அப்பாவுக்கு . உடனே சம்மதித்து விடவும் கௌரவம் இடம்கொடுக்கவில்லை . ‌ துண்டை உதறி தோளில் போட்டுக்கொண்டு வெளியே போய்விட்டார் .

அம்மாதான் முதலில் இந்த பிரச்சனையைக் கிளப்பியது என்பதால் அம்மாவிடம் பேசவும் விருப்பமின்றி சுப்பிரமணி இராமையா வீட்டுக்குக் கிளம்பி விட்டான் .

சுப்பிரமணியின் முகத்தை பார்த்த முத்தம்மா , " வாய்யா மருமகனே . என்னய்யா முகம் சடவா வந்திருக்க...
ஒரு வாரம் தானய்யா விடுப்புல வந்திருக்க . சந்தோசமா இருந்துட்டுப் போக வேண்டியது தானே " என்றாள் .

" இல்லத்த.... என்கிட்ட கேட்காம கல்யாணம் பேசுறாங்க . அதுதான் எனக்குப் பிடிக்கல " என்றான் சுப்பிரமணி.

" ஒளிக்க மறைக்க என்ன இருக்கு ?.
எங்க அம்மா கிட்ட சொல்லிடுவோம் .
அம்மா கூட அத்தை மாமா கிட்ட எடுத்து சொல்லுவாக " என்றான் இராமையா .

மௌனம் காத்த சுப்பிரமணியின் மௌனத்தையே சம்மதமாக எடுத்துக்கொண்டு இராமையா அம்மாவிடம் , " அம்மா செல்லம்மாள் எனக்கு எவ்வளவு பிடிக்குமோ அவ்வளவு சொக்கியை சுப்பிரமணிக்குப் பிடிக்கும் . ஆனால் அவங்க வீட்டில எட்டு வருடம் பேச மாட்டார்களாமே . அதுதான் பிரச்சனை என்றான் .

" ஒன்னுக்குள்ள ஒன்னு . பிள்ளை தொடையில பேண்டா தொடையை அறுத்தா போட்டுருவோம் ? . அண்ணன் தங்கச்சிக்குள்ள என்ன இருக்கு . சத்தியம் பண்ணினா என்ன ? கோயில்ல போய் பூசைக்கு கொடுத்து தேங்காய் உடைச்சி மாற்றி ,சத்திய நிவர்த்தி பண்ணிட வேண்டியதுதான் . நான் பேசுறேன் எங்க அண்ணன் கிட்ட " என்றாள்
முத்தம்மா .

" அப்பாகிட்ட பேசிப் பாருங்க அத்தை . சம்மதிச்சா பார்ப்பேன் . இல்லைன்னா என் வழியை நான் தேடிக்கிடுவேன் " என்றான் சுப்பிரமணி .

" அப்படியெல்லாம் சொல்லப்பிடாது பா . வீட்டுக்கு ஒத்த பிள்ளை . சம்மதிக்காம எங்க போவாக... நானும் இராமையாவும் இருக்கும்போது நீ கவலைப்படாதப்பா " என்றாள்
முத்தம்மா .

" அம்மா , மணி மூன்று ஆச்சே . பண்டாரக்குடியில் பூ கட்டி இருப்பாங்களே . போய் வாங்கிட்டு வரட்டுமா " என்றான் இராமையா .

" ஆமாப்பா. நாலு மணிக்கு பூ வைக்கப்போவாக . அதுக்குள்ள வாங்கிட்டு வந்துரு . இரண்டாயிரம் பூ சொல்லியிருந்தேன் . இன்றோடு மூன்று நாள் பூ வச்சாச்சு . போதும் .
அப்புறம் கல்யாணத்தோடு அடுத்த தடவை நீ விடுமுறையில் வரும்போது பாத்துக்கலாம் " என்றாள் முத்தம்மா .

இராமையாவுக்கு அக்கா தங்கை உறவு முறை உள்ள பெண்கள் சென்று , செல்லம்மாவுக்கு மஞ்சள் பூசி பூவைத்து மூன்றாம் நாள் நிகழ்ச்சியை நிறைவு செய்தார்கள் .

இந்த மூன்று நாட்களாக செல்லம்மாவும் இராமையாவும் ஒருவரை ஒருவர் சந்திக்க முடியாமல்
திணறிக் கொண்டிருந்தார்கள் .
நாளை முதல் வெளியே வருவாள் செல்லம்மா....


View attachment 1825

பூபாளம்

காற்றும் மேகமும் ஒட்டி உறவாடி
கார்மழை பெய்தல் போல , காதலாகிக் கசிந்துருகி பெற்றோரும் நிச்சயம் செய்திட , இராமையா வாங்கித்தந்த மலர்ச்சரங்களை , சீவி சினுக்கெடுத்து கூந்தலில் சூடிக்கொண்டாள் இதமாக...

சொக்கி இடுப்பில் குடத்தோடு செல்லம்மாளுக்காய் காத்திருந்தாள் .
அதிக சிரத்தை எடுத்துத் தன்னை அலங்கரித்துக் கொண்டாள் செல்லம்மா .

சொக்கி காத்திருக்கும் பொழுதே அவள் மனதில் ஏக்கமும் குடிகொண்டது . குழந்தைக்கு பால்சோறு தாயூட்டக் காத்திருக்கும் தெருநாய் பார்த்திருப்பது போல
மனம் பேதலித்தது சொக்கிக்கு.

ஆம் இராமையா வீட்டிலும் , செல்லம்மா வீட்டிலும் ஒத்துழைத்து நிச்சயதார்த்தம் நடத்தி இருப்பதால் , மூன்று நாள் பூவைக்கும் ஊர்ச் சம்பிரதாயம் முடிந்தாலும் , இதோ
இராமையா தனிப்பட்ட முறையிலும்
செல்லம்மாவுக்கு தினசரி பூ வாங்கித் தருவதால் , எட்டு வரிசையாக எட்டு முழம் பூவை பின் தலையின் உச்சியில் இருந்து நீளவாக்கில் தொங்கவிட்டிருந்தாள் செல்லம்மா .
தனக்கு அந்தக் கொடுப்பினை இல்லை எனும்போது சொக்கியின் மனம் ஏங்குவதில் ஒன்றும் வியப்பில்லை .

காலக் கண்ணாடியை மேகம் எப்படிக் கணிக்கிறது எனத் தெரியவில்லை .
நேற்று மழை பெய்த அதே நேரத்தில்
இன்றும் மேகம் சூல் கொள்கிறது .

காத்திருக்கும் காதலர்களை விட
மழையில் நனைவது ஒன்றும் பெரிதல்லவே ! . கரிசல் மண் வாசம் சுமந்த கடும் மழையை எதிர்பார்த்தே இடுப்பில் சுமந்த குடத்தோடு ஏகினார்கள் சொக்கியும் , செல்லம்மாவும்.

"சொக்கி , நான் இவ்வளவு பூ வைத்துக்கொண்டு வரும்போது நீ வெறும் தலையோடு வருவது எனக்கு வருத்தமாகத்தான் உள்ளது . ஆனால் நான் கொடுத்தாலும் நீ வைக்க மாட்டாயே . நம்ம ஊர் பழக்கத்தில் மூழ்கிக் கிடப்பாயே . சுப்பிரமணி வீட்டிலாவது இப்பொழுதே நிச்சயதார்த்தம் செய்திருக்கலாம் "
என்றாள் செல்லம்மா.

சுப்பிரமணி வீட்டில் நடந்த பிரச்சனை எதுவுமே செல்லம்மாளுக்கும் ,சொக்கிக்கும் தெரியாது . அதே நேரத்தில் ஆலமரக் கிளைகளில் உட்கார்ந்துகொண்டு சுப்பிரமணி தன் வீட்டில் நடந்தவற்றை ஒன்று விடாமல் இராமையாவிடம் சொல்லி வருத்தப் பட்டுக் கொண்டிருந்தான் .

இராமையா , " ஏல... மாப்பிள கவலையே படாதேல.... . அடுத்த விடுமுறையில ரெண்டு பேரும் ஒண்ணா வருவோம் . எனக்கும் செல்லம்மாளுக்கும் திருமணம் முடிஞ்சிடும் . உங்க வீட்டில சம்மதிச்சு
சொக்கிக்கும் உனக்கும் நிச்சயதார்த்தமோ கல்யாணமோ நடத்தினால் பார்ப்போம் .
இல்லாட்டி ஊரும் வேண்டாம் . உறவும் வேண்டாம் . சொக்கி அம்மா சம்மதத்தோட சொக்கிய அழைச்சிட்டு வர வேண்டியது என் பொறுப்பு .

விடுப்பு முடிந்து போகும்போது நம்மோடு சொக்கியும் வருவாள்.
இதுதான் முடிவு . பேரன் , பேத்தி பிறந்தால் உங்கள் வீட்டில் தன்னாலே ஏத்துக்கிடுவாங்க.... தைரியமா இருல.... இதுதாம்ல... வழி " என்றான் இராமையா .

" சரி....அத்தான். மச்சினன் துணை இருந்தால் மலையேறிப் பிழைக்கலாம் என்று சொல்லுவாங்களே. நீங்க சொன்னா சரி தான் " என்றான் சுப்பிரமணி.

இருவரும் வருவதைக் கண்டார்கள் . " அத்தான் எங்க வீட்ல நடந்த பிரச்சனை எதுவும் சொக்கிக்குத் தெரிய வேண்டாம் . மனசு வருத்தப்படுவா " என்றான் சுப்பிரமணி.

அதற்குள் இருவரும் அருகில் வந்துவிட செல்லம்மாளையும் சொக்கியையும் ஒப்பிட்டுப் பார்த்து சுப்பிரமணிக்கு சொக்கியைப் பார்த்தால் பாவமாகத்தான் இருந்தது .

சொக்கியிடம் கேட்டே விட்டான்.
" நாளை பூ வாங்கித் தரட்டுமா ? சும்மா வச்சிக்கோ " என்றான் .

" வேண்டாம் அய்யா . உங்க அத்தக் காரி கொண்டை விளக்கமாறு பிய்யப் பிய்ய சாத்திறுவா... . அம்புட்டு ஆச இருக்கிறவுக இந்த விடுமுறையில் நிச்சயதார்த்தம் வச்சா என்னவாம் ? "
என்றாள் சொக்கி .

" அட...போக்கி.... மனுசன் பட்டபாடு எனக்குத்தானே தெரியும் . எப்படியோ உன்ன சந்தோசமா வச்சுக்கணும் . ஒன்னோட வாழணும். அதுக்காக நான் என்ன வேணும்னாலும் செய்வேன் புள்ள . கொஞ்ச நாளைக்கு பொறுமையாய் இரு . அடுத்த விடுமுறையில் நமக்கும் கல்யாணம் தான் " என்றான் சுப்பிரமணி .

இராமையா , " சரி...சரி... நாளைக்கு காலையில தெற்கு ஓடைக்கு வாங்க .
நாடாரு பதினி இறக்க வருவாரு .
பனையடி பதனி நல்லா இருக்கும் .
நுங்கு சீவிப் போட்டு பட்டையில பதினி குடிக்கலாம் . வாங்கித்தாரேன் " என்றான் .

" வேண்டாம் வேண்டாம் . ஊரெல்லாம் ஒரு மாதிரி பேசுவாங்க . நாங்க வர மாட்டோம் " என்றார்கள் இரண்டு பேரும் ஒன்று போல .

" சரி . காலையில பார்க்கிறேன். வர முடிஞ்சா வாங்க . வர முடியலைன்னா செம்புல வாங்கிட்டு வாரேன் . ஆனா அது பனையடியில குடிச்சது போல இருக்காது " என்றான் இராமையா .

" செம்புல வாங்கிட்டு ரெண்டு பட்டையும் புடிச்சிட்டு வாங்க " என்றாள் செல்லம்மா .

" அப்படிங்களா...! மகாராணி உத்தரவு . இதிலிருந்தே நீங்க காலையில வரப் போறது இல்லைன்னு தெரிஞ்சு போச்சு "
என்று கீழே குனிந்து செல்லம்மாள் மீது எறிய கல்லை எடுத்தான் இராமையா .

குறிபார்த்து துப்பாக்கிச்சூடத் தெரிந்த இராமையாவுக்கு செல்லம்மா மீது அந்தக் கல்லை எறியத் தெரியவில்லையா ? அல்லது
மேலே பட்டுவிட்டால் பூமேனி நோகும் என்று குறிதவறினானா ?

இரவுப் பொழுதுகளின் இனிமையில் , வண்ண வண்ணக் கனவுகளில் இரண்டு காதல் சோடிக் கிளிகள் .
கல்யாணி ராகம் பாடி கனவுகளில் சங்கமித்தனர் . முன்னிரவு பொழுதுகள் தூக்கம் இன்றியே கழிந்தன . சுருக்கமில்லாது கிடந்த படுக்கை விரிப்புகளும் , இவர்கள் புரண்டு புரண்டு படுத்ததில் கசங்கிப்
போயின .

அதிகாலைப் பொழுதில் இமைகள் பிரிய மறுத்தன . தூக்க நேரத்தை இன்னும் யாசித்தன . யாருடைய வீட்டில் இருந்தோ வானொலிப் பெட்டியில் எங்கிருந்தோ... மங்கல இசை காதைத் துளைத்தன . மத வேறுபாடு இன்றி
இந்து , முஸ்லிம் , கிறிஸ்தவம் என மூன்று பாடல்களும் ஒன்றன்பின் ஒன்றாக ஒளிபரப்பாகின . படுக்கையில் படுத்தவாறே மௌனமாகக் கேட்டுக் கொண்டிருந்தாள் செல்லம்மா .

ஆறு நாற்பத்தைந்துக்கு செய்திகள் ஒலிபரப்பாயின . இவற்றை யெல்லாம் செல்லம்மா கவனிப்பதை ஆச்சி பார்த்துக்கொண்டிருந்தாள் .

" தாயே... . அந்தப் பொட்டி நம்ம வீட்டுலயும் இருந்தா நம்ம வீட்டுலயும் வந்து பாடுவாக இல்ல...." என்றாள் ஆச்சி .

" ஆமா...ஆச்சி . என்னைய கைலாசபுரத்துப் பள்ளிக்கூடத்துக்கு வேலைக்கு கூப்பிட்டிருருக்காங்க ... . அடுத்த மாசத்துல இருந்து போறேன் ஆச்சி. மொதமாச சம்பளத்துல நம்ம வீட்டுக்கும் வானொலிப்பெட்டி வந்துரும் . அப்போ நாமளும் பாட்டு கேட்போம் ஆச்சி " என்று ஆச்சியின்
பொக்கைவாய்க் கன்னத்தைக் கிள்ளினாள் செல்லம்மா .

விரிந்து கிடந்த தலையை அள்ளி முடித்தாள் செல்லம்மா .
ஆச்சி , " கல்யாணப் பொண்ணு ஏன் தாயி.... தலையை அள்ளி முடிக்க...?
தலையில எண்ணெய் வச்சி ,
வழுவழுன்னு சீவி முடிச்சி ரிப்பன் வச்சுக்கெட்டு . முகத்துல கல்யாண களை வரவேண்டாமா ! " சொல்லி
ரசித்தாள் கிழவி .

" அப்போ... நீயே எண்ணெய் வச்சு விடு ஆச்சி " என்று எண்ணெய் சீசாவை ஆச்சியிடம் நீட்டினாள் செல்லம்மா .

எண்ணெய் வைத்த தலையை ,
நுனிவரை பின்னி சிவப்பு ரிப்பன் கொண்டு முடிந்து , வெயில் பட்டு நுனிமுடி வெடித்துவிடும் என்பதால் பாதி மடித்துக் கட்டினாள் செல்லம்மா.

சொன்னபடியே அரைப்படி செம்பு நிறைய பதனியோடும் , கையில் இரண்டு பட்டையோடும் வந்தார்கள் இராமையாவும் , சுப்பிரமணியும் .

செல்லம்மா அடுக்களைக்குள் நுழைந்து ஒரு சின்ன செம்பை எடுத்து வந்தாள் . பாதி பதனீரை அதில் ஊற்றி , " உங்க அத்தை வீடு தானே ....
தைரியமாய்ப் போய்க் கொடுத்துட்டு வாங்க " என்றாள் செல்லம்மா .

சுப்பிரமணி தயங்கித் தயங்கி கையில் வாங்கிக் கொண்டாள் . , " அத்தைக்கு கூட பயமில்லை . எங்க அப்பனுக்கு தெரிஞ்சா ' பூடமே இல்லாமல் சாமியாடுவாரு ' " என்றான் .

" அட....வா...மாப்ள . நானும் துணைக்கு வாரேன் " என்றான் இராமையா .

" வேண்டாம் வேண்டாம் . நீங்க கொஞ்ச நேரம் தங்கச்சி கூட பேசிக்கிட்டு இருங்க . ரெண்டு வீடுதானே தாண்டி . எட்டி நான் கொடுத்துட்டு வந்தர்றேன் " என்றான்
சுப்பிரமணி .

" ஆச்சி , நீயும் பட்டையில் பதினி குடிக்கிறியா ?" என்றாள் செல்லம்மா.

"ஆச்சி கையெல்லாம் நடுங்கும். பட்டையைப் பிடிக்க முடியாது . ஒரு தம்ளர் மட்டும் கொஞ்சமா ஊத்தித் தா " என்றாள் ஆச்சி .

ஆச்சிக்கு ஊற்றிக் கொடுத்த இராமையா , " பட்டையை செல்லம்மா கையில் கொடுத்தான் . செல்லம்மா
வாயருகே பட்டை பிடிக்க இராமையா பதநீர் ஊற்ற , இரு சோடி விழிகள்
இதமாக பண்ணமைத்தன .

குழந்தைக்கு சோறூட்டும் தாயும் வாயைத் திறப்பதைப் போல , செல்லம்மா வாய் பதனி குடிக்க ,
இராமையா வாய் சப்புக் கொட்டியது ...
விடியலில் ஒரு பூபாளம் இசைத்தது .


( கரிசல் கதை தொடரும் )♥??
 
என்னப்பா ராஜ் தம்பி ஒரே அப்டேட்டே திரும்பவும் வந்துருக்கே?
 
Top